11-06-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்று ஒரு கதை சொல்லப் போகிறேன்..
அந்த புத்தம் புதிய உதவி இயக்குனன் முதன் முதலில் பணியாற்றிய திரைப்படம் அது. அத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீவித்யா, அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். கதையின்படி நாளைய ஷூட்டிங்கிற்கு ஒரு பெரிய வீடு தேவை. ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த வீட்டை, திடீரென்று ‘தர முடியாது' என்று அதன் சொந்தக்காரர்கள் சொல்லிவிட்டதால், ஒரு நாள் இடைவெளியில் வேறு வீட்டை தேடிப் பிடித்து புக் செய்ய வேண்டிய கட்டாயம் தயாரிப்பு மேனேஜருக்கு.
மேனேஜர் பழம் தின்று கொட்டை போட்டது தொழிலில் மட்டும்தான் என்பதால், வெளியுலகம் அறியாதவர். தினசரி பேப்பர்களை மேயாதவர். அவ்வப்போது காதில் வரும் செய்திகளை வைத்துத்தான் நாட்டு நடப்பையே அறிந்து கொள்வார்.
அவர் ஒரு வீட்டை பிடித்தார். வீட்டைக் காட்டியவருக்கு கமிஷனை வெட்டிவிட்டார். வீட்டின் ஓனராகத் தன்னைச் சொல்லிக் கொண்டவர், இணை இயக்குநருக்கும், மேனேஜருக்கும் வீட்டைச் சுற்றிக் காட்டிவிட்டு அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டார்.
மறுநாள் அனைத்து ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை மேனேஜருக்கு. வர வேண்டியவர்களுக்கெல்லாம் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏவி.எம்.மில் வேறு ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்த நடிகை ஸ்ரீவித்யாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய உதவியாளினியாகவும், மேக்கப் வுமனாகவும் இருந்தவருக்கு நாளை ஷீட்டிங் நடைபெறப் போகும் வீட்டின் முகவரியை பேஜரில் மெஸேஜாக அடித்தார்கள்.
ஸ்ரீவித்யாவின் உதவியாளினி ஐந்து நிமிடத்தில் தொலைபேசியில் மேனேஜரைத் தொடர்பு கொண்டார். “நாளைக்கு அந்த வீடுதானா..?” என்று உறுதியாகக் கேட்டார். “ஆமாம்..” என்றார் மேனேஜர். “அம்மா வர மாட்டாங்க..” என்று சொல்லி போனை வைத்துவிட்டார். “என்னடா இது புதுக்கதையா இருக்கு..? என்ன காரணம்..?” என்று கேட்டு மீண்டும் பேஜர் அடித்தார் மேனேஜர்.
பதில் வரவில்லை. தயாரிப்பாளருக்குத் தகவல் தந்தார். தயாரிப்பாளரோ மேனேஜர் ஏதோ உள்ளடி வேலை செய்துவிட்டதாகச் சொல்லி அவரைக் காய்ச்சி எடுத்துவிட்டார். இந்த முறை ஸ்ரீவித்யாவே போனில் லைனுக்கு வந்தார். மேனேஜர் பயந்துபோய், நம்முடைய உதவி இயக்குனனை பேச வைத்தார்.
மிகப் பெரிய நடிகையுடன் தான் போனிலேயே பேசுகிறோம் என்கிற மப்பில் அந்த உதவி இயக்குனனும் மிக, மிக பந்தாவாக அந்த வீட்டின் முகவரியையும், அந்த வீட்டுக்கு வரும் வழியையும் கச்சிதமாக மேப் போட்டுக் காட்டாத குறையாகச் சொன்னான். அனைத்தையும் கேட்ட ஸ்ரீவித்யா, “அந்த வீட்ல ஷூட்டிங் வைக்க என்ன அவசியம்னு தயாரிப்பாளர்கிட்ட கேட்டுச் சொல்லுங்க..?” என்றார்.
உதவி இயக்குனன் இதை மேனேஜரிடம் பாஸ் செய்ய.. அவரோ, “நடந்த கதையை முழுதாகச் சொல்லித் தொலை..” என்று எரிந்து விழுந்தார். உதவி இயக்குனனும் பொறுமையாக அப்படியொரு வீட்டைக் கண்டுபிடிக்க அன்றைய வேகாத வெயிலில் அவனும், மேனேஜரும் நாயாக அலைந்த கதையை அழகான நெல்லைத் தமிழில் சொல்லி முடித்திருக்கிறான். “சரி.. காலைல எட்டு மணிக்கு நான் ஸ்பாட்ல இருப்பேன்..” என்று சொல்லி போனை வைத்துவிட்டார் ஸ்ரீவித்யா.
உதவி இயக்குனனுக்கு தாங்க முடியாத சந்தோஷம்.. இத்தனை வருஷமா கோடம்பாக்கத்துல குப்பை கொட்டுன மேனேஜராலயே முடியாத ஒரு விஷயத்தை “நேத்திக்கு வந்த நான், முடிச்சிட்டனே..”ன்னு கண்ணுல தண்ணி வராத குறையா மேற்கு மாம்பலம் மேன்ஷன்ல ராத்திரி தூங்கிட்டிருந்தவனையெல்லாம் எழுப்பி, எழுப்பி கடிச்சான்யா.. தாங்க முடியாம ஒரு மணி நேரம் காதுல இருந்து ரத்தம் வர்றவரைக்கும் பொறுமை காத்து, அதுக்கு மேல ஆளாளுக்கு அவனை நாலு சாத்தி சாத்திதான் படுக்க வைச்சோம்.
ஆனால் அடுத்த நாள் ஷூட்டிங்கின்போது நடந்த கதையை அன்றைய இரவில் முதல் நாள் சந்தோஷத்துக்கு நேர் எதிரான முறையில் கலங்கிப் போன கண்களுடன் மறுநாள் இரவில் சொன்னான் அந்த உதவி இயக்குனன்.
காலை எட்டு மணிக்கெல்லாம் ஸ்ரீவித்யா வந்துவிட்டார். வீட்டுக்குள் வந்தவர் வீட்டு ஹாலில் யாருடனும் பேசாமல் தனியாக போய் அமர்ந்துவிட்டார். அவருக்குப் பின்னே பதட்டத்துடன் வந்த அவருடைய ஜோடி நடிகர், ஸ்ரீவித்யாவைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து ஸ்தம்பித்துவிட்டாராம்.
“யாருய்யா அந்த புரொடெக்ஷன் மேனேஜர்..?” என்று அந்த சாந்தசொரூபியான நடிகர் கத்திய கத்தில் வீடே ரெண்டானது.. மேனேஜர் எதிரில் போய் நின்றிருக்கிறார். “உங்களுக்கு ஷூட்டிங்குக்கு வேற வீடே கிடைக்கலையா..? இல்லைன்னா என்கிட்ட கேட்டிருக்கலாமே.. நான் அரேஞ்ச் பண்ணிருப்பனே..?” என்று கத்தியிருக்கிறார். இவருக்கு எதுக்கு இந்தக் கோபம்னு மேனேஜருக்குப் புரியவில்லை. ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார். அந்த நடிகரும் உண்மையைச் சொல்லவில்லை.
அடுத்து வந்து இறங்கிய இயக்குநர், வீட்டுக்குள் வராமல் வாசலில் நின்றபடியே, “எங்கடா அந்த தாயோளி புரொடெக்ஷன்..?” என்று பொங்கியிருக்கிறார். என்னமோ ஏதோவென்று அரக்கப் பரக்க ஓடி வந்த மேனேஜருக்கு பள்ளி நாட்களுக்குப் பின் அன்றைக்குத்தான், “பளார்.. பளார்..” என்று அறை விழுந்ததாம்.
அதற்குள்ளாக சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த ஸ்ரீவித்யா இயக்குநரை சமாதானப்படுத்தி, “விட்ருங்கண்ணே.. வேண்டாண்ணே.. நீங்க ஷூட்டிங்கை ஆரம்பிங்க. கேன்ஸல் பண்ணா எல்லார் பொழைப்பும் கெடும்...” என்று சொல்ல.. இயக்குநர் ஸ்ரீவித்யாவின் காலில் விழுகாத குறையாக அழுதுவிட்டு, ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார்.
மேனேஜருக்கு இப்போது தலை சுற்றிய நிலை. நடிகர், இயக்குநர் என்ற பெரும் தலைகளிடம் மீண்டும் போய் “விஷயம் என்ன..?” என்று கேட்டால் டவுசர் கிழிந்துவிடும் என்று நினைத்தவர், லன்ச் பிரேக்கில் ஸ்ரீவித்யாவிடமே போய் கேட்டுவிட்டார்.
ஸ்ரீவித்யா கொஞ்சமும் வித்தியாசம் காட்டாமல் சொன்ன பதில், “இது என்னோட வீடு..”
சில மாதங்களுக்கு முன்பாகத்தான் ஒரு நள்ளிரவில் ஸ்ரீவித்யா, அவருடைய காதல் கணவரால் அந்த வீட்டிலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டிருந்தார். அந்த வீடு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து தன் பெயரில் கட்டிய வீடு. அதில் வசிக்க தனக்குத்தான் உரிமை உண்டு. அதனை மீட்டுக் கொடுங்கள் என்று நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீவித்யா புகாரும் கொடுத்திருந்தார்.
அதற்குள்ளாக ஸ்ரீவித்யாவின் கணவர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிவிட, ஸ்ரீவித்யாவும் கோர்ட்டுக்கு சென்றுவிட்டார். வழக்கு நீதிமன்றத்தில் காத்திருந்தது.
தான் ஆசை, ஆசையாக கஷ்டப்பட்டு குருவி சேர்ப்பது போல் சேர்த்துக் கட்டி, கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் வாழ்ந்த அதே வீட்டில், ஸ்ரீவித்யா ஒரு மூன்றாம் மனுஷியைப் போல் நடமாடி நடித்ததை ஜீரணிக்க முடியாமல் இருந்தனர் இயக்குநரும், சக நடிகர்களும்.
இதில் அவருடைய கணவர், “ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கிறேன்” என்று சொல்லி ஸ்ரீவித்யாவை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டே பாக்கெட், பாக்கெட்டாக சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தது தனிக்கதையாம்.
“தனக்கு மேக்கப் போட, டிரெஸ் சேஞ்ச் செய்ய எந்த ரூம்..?” என்று ஸ்ரீவித்யா பணிவாகக் கேட்டதையும், அவருடைய சொந்த பெட்ரூமை கதாநாயகனுக்குக் கொடுத்துவிட்டு, வேலைக்காரி தங்கியிருந்த சின்ன ரூமை அவருக்கு ஒதுக்கிய மேனேஜரிடம், எந்த முகச்சுழிப்பும் செய்யாமல் அடக்கமாக ஏற்றுக் கொண்டு அன்றைய தினம் தனது போர்ஷனை நல்லபடியாக நடித்துக் கொடுத்துவிட்டுப் போனாராம்.
அன்றைய இரவில் இந்த சோகக் கதையைக் கேட்டு எங்களது மேன்ஷன் அறையில் இருந்தவர்கள் அனைவருக்கும் தூக்கம் தொலைந்து போன இரவாக அது அமைந்து போனது.
எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை, பிறரை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது.
ரொம்ப நாளாக இதைச் சொல்லிவிட வேண்டும் என்று தவியாக தவித்தேன்.. இப்போதுதான் சமயம் அமைந்தது. சொல்லிவிட்டேன்..
பொறுமையாகப் படித்தமைக்கு எனது நன்றிகள்..
|
Tweet |
52 comments:
நல்ல நடிகை..
ப்ச்....
மிக நல்ல நடிகை...
என்ன சொல்வது... விதி என்பது இதுதானோ...
// எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை, பிறரை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது. //
சரியாகச் சொன்னீர்கள்.
ஸ்ரீ வித்யா ...பெயரிலெயே ஒரு ஈர்ப்பு.. கதாநாயகியாக இவரின் படங்களை பார்த்ததில்லை , இவரின் இழப்பு தமிழ் சினிமாவின் பேரிழப்பு ..... பகிர்வுக்கு நன்றி..
உ.த.,
கடைசி வரியில் நீ்ங்கள் வெளியிட்ட ரகசியத்தை முதலிலேயே யூகிக்க முடிந்தது. இத்தனை இழுத்திரு்க்க வேண்டாம். :-)
நடிகைகள் என்றாலே கேவலமாய்ப் பார்க்கும் / யோசிக்கும் பொதுப்புத்தியில் (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) இந்தப்பதிவு சற்றாவது சலனத்தை ஏற்படுத்தினால் சரி.
:-((
ச்சே
Your site is taking long time to load. I tried and tired to see the contents.
finally I disabled javascript - then It loaded very fast.
Please figure out.
If you added some third party javascript - just remove it. enjoy
எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை, பிறரை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது.
///
ஆமா அதனாலதானே இவ்வளவு பொறுமையா கடைசி வரைக்கும் படிக்கிறோம் :)
(ஓப்பன் ஆக லேட் ஆகுது :(
waiting cick.socmedia.com அப்படியே நிக்குது :( )
நெகிழவைக்கும் பதிவு.
உங்கள் நடையும் அருமை.
பகிர்விற்கு நன்றி.
it take very long time to opne yr blog
srividya is gr8 actor.
நல்ல மனுஷி..ஆனால் வாழ்க்கையும் சரி கடைசி காலக்கட்டமும் சரி மிக பெரிய சோகம்..
நல்ல உள்ளங்களையும் புற்று நோய் விட்டு வைக்காது என்ற விபரீத உண்மையை விளங்க வைத்த அற்புதமான பெண்மணி.
இவ்வளவு நாள் கழித்து அவருக்கு அஞ்சலி செலுத்திய சரவணனுக்கு நன்றிகள்.
பாவம் ...பரிதாபம்,நல்ல நடிகை நல்ல மனுஷி...
அவர் நடிப்பையும் மனதில் கொண்டு ,உங்கள் பதிவையும் சேர்த்து வாசிக்கும் பொழுது sri வித்யாவின் சோக நடிப்போடு படம் பார்த்தாற்போல் இருந்தது
Page load ஆவது தாமதமாகிறது. நீண்ட பதிவு போன்ற புகாருக்கு பதில் சொல்லும் விதமாக அண்ணன் இவற்றையேல்லாம் தாங்கிக் கொள்ளும் இதயம் வேண்டும் என்பதற்காக இந்த கதையை சொன்னார் போலும்.
அண்ணா நல்ல பதிவு.
ஸ்ரீ வித்யாவின் நல்ல குணம் படைத்தவர் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.
இவர் வாழ்க்கையில் பட்ட கழ்டங்கள் அந்த கடவுளக்கே பொறுக்காது
நல்ல பகிர்வு அண்ணே !! பல நேரங்களில் இந்த மாதிரி கதைகள் தான் நமக்கு மன பலம் தரும்
[[[நாடோடி இலக்கியன் said...
நல்ல நடிகை.. ப்ச்....]]]
பாவந்தான்.. என்ன செய்வது..?
[[[இராகவன் நைஜிரியா said...
மிக நல்ல நடிகை...
என்ன சொல்வது... விதி என்பது இதுதானோ...]]]
சத்தியமா இதுதான் விதி..! இதற்கு மேல் ஒன்றுமில்லை இராகவன்..
[[[பேரரசன் said...
ஸ்ரீவித்யா. பெயரிலெயே ஒரு ஈர்ப்பு.. கதாநாயகியாக இவரின் படங்களை பார்த்ததில்லை , இவரின் இழப்பு தமிழ் சினிமாவின் பேரிழப்பு ..... பகிர்வுக்கு நன்றி..]]]
தமிழ்த் திரைப்படங்களைவிட இவர் நடித்த மலையாளத் திரைப்படங்களை வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்..
நடிப்பைக் கொட்டியிருப்பார்..
[[[சுரேஷ் கண்ணன் said...
உ.த., கடைசி வரியில் நீ்ங்கள் வெளியிட்ட ரகசியத்தை முதலிலேயே யூகிக்க முடிந்தது. இத்தனை இழுத்திரு்க்க வேண்டாம்.:-)]]]
ஏதோ சிறுகதை மாதிரி கொண்டு போலாம்னு நினைச்சேன்.. அவ்ளோதான்..
[[[நடிகைகள் என்றாலே கேவலமாய்ப் பார்க்கும் / யோசிக்கும் பொதுப் புத்தியில் (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) இந்தப் பதிவு சற்றாவது சலனத்தை ஏற்படுத்தினால் சரி.]]]
தெரியாத விஷயத்தைத் தெரிந்து கொள்ளட்டுமே என்பதால்தான் மிகத் தாமதம் என்றாலும் வெளியிட்டேன்..
வருகைக்கு நன்றி சுரேஷ் ஸார்.
[[[சரவணகுமரன் said...
:-((
ச்சே]]]
எப்பேர்ப்பட்ட நடிகைக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்தது பாருங்க..
[[[தமிழ்நெஞ்சம் said...
Your site is taking long time to load. I tried and tired to see the contents. finally I disabled javascript - then It loaded very fast. Please figure out. If you added some third party javascript - just remove it. enjoy]]]
அண்ணே.. அதுதாண்ணே.. எதை நீக்கணும்னு தெரியலண்ணே.. கொஞ்சம் சொல்லிக் கொடுண்ணே.. புண்ணியமாப் போகு்ம்..!
[[[மின்னுது மின்னல் said...
எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை, பிறரை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது.///
ஆமா அதனாலதானே இவ்வளவு பொறுமையா கடைசி வரைக்கும் படிக்கிறோம் :) (ஓப்பன் ஆக லேட் ஆகுது :( waiting cick.socmedia.com அப்படியே நிக்குது :( )]]]
சமயோசித குத்துக்கு நன்றி மின்னலு..
அந்த ஜாவாஸ்கிரிப்ட்டை நீக்குவது எப்படின்னு எனக்குத் தெரியலை.. கொஞ்சம் சொல்லித் தர்றது..?
[[[வண்ணத்துபூச்சியார் said...
நெகிழவைக்கும் பதிவு.
உங்கள் நடையும் அருமை.
பகிர்விற்கு நன்றி.]]]
நன்றி பூச்சியாரே..
முதன் முதலான எனது 'நடை'யைப் பற்றி விமர்சனம் செய்திருப்பது நீங்கதான்..
நான் பொறந்ததுல இருந்தே ஒரு மாதிரிதான் நடக்கிறேன் பூச்சியாரே..
[[[குப்பன்_யாஹூ said...
it take very long time to opne yr blog. srividya is gr8 actor.]]]
சரி பண்ணணும்.. ஏதாவது ஐடியா கொடுங்களேன்..!
[[[வினோத்கெளதம் said...
நல்ல மனுஷி.. ஆனால் வாழ்க்கையும் சரி கடைசி காலக்கட்டமும் சரி மிக பெரிய சோகம்..]]]
என்ன செய்ய? விதி.. அழகைக் கொடுத்த இறைவன்தான் இந்த கஷ்டத்தையும் கொடுத்து இம்சைபடுத்தினான்..!
[[[goma said...
அவர் நடிப்பையும் மனதில் கொண்டு, உங்கள் பதிவையும் சேர்த்து வாசிக்கும் பொழுது sri வித்யாவின் சோக நடிப்போடு படம் பார்த்தாற்போல் இருந்தது.]]]
நன்றி கோமா.. இந்த பீலிங் வரணும்ன்றதுக்காகத்தான் இவ்ளோ பில்டப்பு..!
[[[ananth said...
Page load ஆவது தாமதமாகிறது. நீண்ட பதிவு போன்ற புகாருக்கு பதில் சொல்லும் விதமாக அண்ணன் இவற்றையேல்லாம் தாங்கிக் கொள்ளும் இதயம் வேண்டும் என்பதற்காக இந்த கதையை சொன்னார் போலும்.]]]
இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி சொல்லுங்களேன் ஆனந்த்..
[[[Arun Kumar said...
அண்ணா நல்ல பதிவு. ஸ்ரீவித்யாவின் நல்ல குணம் படைத்தவர் என்று கேள்விபட்டு இருக்கிறேன். இவர் வாழ்க்கையில் பட்ட கழ்டங்கள் அந்த கடவுளக்கே பொறுக்காது]]]
தம்பி அருண்..
நல்லவர்களையே முருகன் அதிகம் சோதிக்கிறான்.. என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை. இவர் பட்ட கஷ்டங்களை ஒரு சாதாரண மனுஷிகூட பெறக்கூடாது என்றுதான் சொல்ல வேண்டும்.. பாவம்..
[[[Bhuvanesh said...
நல்ல பகிர்வு அண்ணே !! பல நேரங்களில் இந்த மாதிரி கதைகள்தான் நமக்கு மன பலம் தரும்.]]]
நன்றி புவனேஷ் தம்பி.. அதற்காகத்தான் இந்தப் பதிவு..
பதிவுக்கு மிக்க நன்றி.
நீங்கள் உண்மையாலுமே உண்மைத் தமிழன் தான்.
இன்னும் பல உணமைச் சம்பவங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
[[[ஷண்முகப்ரியன் said...
நல்ல உள்ளங்களையும் புற்று நோய் விட்டு வைக்காது என்ற விபரீத உண்மையை விளங்க வைத்த அற்புதமான பெண்மணி.
இவ்வளவு நாள் கழித்து அவருக்கு அஞ்சலி செலுத்திய சரவணனுக்கு நன்றிகள்.]]]
இயக்குநர் ஸார்..
ஏற்கெனவே
http://truetamilans.blogspot.com/2008/10/blog-post_24.html - இந்தப் பதிவில் இவருடைய சொந்த வாழ்க்கைக் கதையான திரைக்கதா திரைப்படத்தினைப் பற்றி எழுதியுள்ளேன்..
[[[சரவணன் said...
பதிவுக்கு மிக்க நன்றி. நீங்கள் உண்மையாலுமே உண்மைத் தமிழன்தான். இன்னும் பல உணமைச் சம்பவங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.]]]
மிக்க நன்றி சரவணன்..
இங்கே ஒரு விஷயம்.. எனது இயற்பெயரும் சரவணன்தான்..!
மனதை கனக்கச் செய்த பதிவு
//இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி சொல்லுங்களேன் ஆனந்த்..//
தங்கள் கேள்விக்கு நாளை பதில் சொல்கிறேன். பல விஷயங்களை தீர ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டும் பார்க்கிறேன்.
நெகிழ வைத்த பதிவு !
நல்ல, கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த நடிகை. பாவம்...
[[[முரளிகண்ணன் said...
மனதை கனக்கச் செய்த பதிவு.]]]
நன்றி முரளி..
அதனால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் என் இதயத்தில் முள்ளாய்க் குத்திக் கொண்டிருந்தது இந்த விஷயம்..
[[[ananth said...
//இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி சொல்லுங்களேன் ஆனந்த்..//
தங்கள் கேள்விக்கு நாளை பதில் சொல்கிறேன். பல விஷயங்களை தீர ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டும் பார்க்கிறேன்.]]]
நன்றி ஆனந்த்..
பிரச்சினை தீர்ந்துவிட்டது..
தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி..
[[[எம்.ரிஷான் ஷெரீப் said...
நெகிழ வைத்த பதிவு !]]]
நன்றி ரிஷான்..
உடம்பு எப்படியிருக்கு? சுகம்தானே..?
[[[விக்னேஷ்வரி said...
நல்ல, கலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த நடிகை. பாவம்...]]]
இந்தக் கலையுலக வாழக்கையே அவரது அழிவுக்கும் காரணமாகிவிட்டதுதான் சோகம்..!
மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
நல்ல பதிவு...பகிர்வு.
//S.A. நவாஸுதீன் said...
மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.//
தங்களுடைய முதல் வருகைக்கு நன்றி நவாஸூதீன்..!
[[[ஊர்சுற்றி said...
நல்ல பதிவு...பகிர்வு.]]]
நன்றி ஊர்சுற்றி ஸார்..!
/
எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை, பிறரை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும்
/
குருவே சரணம்.
பதிவு ரொம்ப சின்னதா இருக்கே நெசமாலுமே உ.த பதிவுதானா???
[[[மங்களூர் சிவா said...
/எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை, பிறரை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும்/
குருவே சரணம். பதிவு ரொம்ப சின்னதா இருக்கே நெசமாலுமே உ.த பதிவுதானா???]]]
ரொம்ப லேட்டான கமெண்ட்டு..!
தல,இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது..??
http://youthful.vikatan.com/youth/index.asp
இப்ப என்ன சொல்ல போறீங்க...
///வண்ணத்துபூச்சியார் said...
தல, இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது..??
http://youthful.vikatan.com/youth/index.asp
இப்ப என்ன சொல்ல போறீங்க...///
எதுவும் சொல்வதற்கில்லை..
நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..!
கடைசியிலாவது அந்த வீடு அவருக்குக் கிடைத்ததா .........?
[[[தருமி said...
கடைசியிலாவது அந்த வீடு அவருக்குக் கிடைத்ததா .........?]]]
உச்சநீதிமன்றம்வரை சென்று கடும் சட்டப் போராட்டம் நடத்தி தன்னுடைய கடைசிக் காலக்கட்டத்தில்தான் அந்த வீட்டைத் திரும்பப் பெற்றார்.
வீடு திரும்பக் கிடைத்தும் இங்கே அவரால் வர முடியாத அளவுக்கு அவருடைய உடல் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது.
திருவனந்தபுரத்திலேயே மரணமடைந்துவிட்டார்.
தற்போது அந்த வீடு அவருடைய உயிலின்படி அவருடைய அண்ணனின் பராமரிப்பில் இருந்து வருகிறது..
Post a Comment