28-06-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்று காலையில் தொலைக்காட்சியில் பிளாஷ் நியூஸாக ஓடிய இந்த செய்தி ஒரு கணம் என்னை ஆடத்தான் வைத்துவிட்டது..
மலையாளத் திரையுலகின் முன்னணி கதாசிரியரும், இயக்குநருமான லோகிததாஸ் மாரடைப்பால் காலமானார் என்கிற இந்த துயரச் செய்தி நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு மிகப் பெரும் துக்கத்தைத் தரும்.
இன்று கொச்சியில் நடைபெற்ற மலையாளத் திரையுலகின் ‘அம்மா' என்கிற அமைப்பின் பொதுக்குழுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார் லோகிததாஸ். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி வர மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தீவிர சிகிச்சையளித்தும் முடியாமல் காலை 10.50 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகிததாஸ் மற்றும் இயக்குநர் சிபிமலையில் இருவரும் இணைந்து படைத்த மலையாளத் திரைப்படங்கள் அனைத்தும் இன்றைக்கும், என்றைக்கும் மலையாளத் திரையுலகின் பெயரை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டக் கூடியத் திரைப்படங்கள்.
இந்த ஜோடி முதலில் இணைந்த திரைப்படம் ‘தனியாவர்த்தனம்'. 1987-ல் வெளி வந்தது. மம்முட்டியும், சரிதாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் கண்ணில் குளம் கட்டாமல் விடாது. சிபியின் இயக்கம் அப்படி என்றாலும் தனது முதல் கதை, திரைக்கதையை அழுத்தமாகக் கொடுத்திருந்தார் லோகிததாஸ்.
‘எழுதாபுரங்கள்', ‘கிரீடம்', ‘முத்ரா', ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா', ‘பரதம்', ‘கமலாதலம்', ‘தனம்', ‘தசரதம்', ‘செங்கோல்' என்று இந்தக் கூட்டணி கொடுத்தத் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சமுள்ள திரைக்காவியங்கள்.
இதில் ‘கிரீடம்', ‘பரதம்', ‘தனம்', ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா', ‘தசரதம்', ‘செங்கோல்' ஆகிய திரைப்படங்களை பார்த்து அழுதிருக்கிறேன்.
சிபியின் திரைப்படங்கள் முடிந்தவுடன் மனதில் ஒரு பாறாங்கல் அழுந்தியிருப்பது போலத்தான் தோன்றும். ஆனால் இன்றைக்கு யோசித்துப் பார்த்தால் அதற்கு அடித்தளமிட்டிருப்பது லோகிததாஸின் கதையும், திரைக்கதையும்தான் என்று யோசித்துப் பார்த்தால் வெற்றியின் பாதியை அவருக்கும் வழங்கத்தான் வேண்டும்.
லோகிததாஸ் இதுவரையிலும் தனித்து 12 திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.
இவர் இயக்கிய திரைப்படங்களில் ‘பூதக்கண்ணாடி', ‘கண்மதம்', ‘காருண்யம்', ‘கஸ்தூரி மான்', ‘அரையன்னங்களுடவீடு' திரைப்படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
இதில் ‘பூதக்கண்ணாடி'யும், ‘கண்மதமும்', ‘காருண்யமும்' நெகிழ வைத்தத் திரைப்படங்கள். ‘பூதக்கண்ணாடி' யில் மம்முட்டியின் அப்பாவித்தனமான அந்த செய்கையின் பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ் இறுதியில் உடைக்கப்படும்போது, ‘ஐயோ' என்று அடிவயிற்றில் எழுந்த உணர்வை மறக்கவே முடியாது.
‘கண்மத'த்தில் மஞ்சுவாரியர் தனது நடிப்பு கேரியரில் மிகச் சிறந்த நடிப்பைக் கொட்டியிருந்தார். மோகன்லாலும் அப்படியே.. மிக மிக இயல்பான நடிப்பு. அப்படியெல்லாம் நடிப்பையும், இயக்கத்தையும் பார்த்த பின்புதான் தமிழ்த் திரைப்படங்களை பார்ப்பதற்கு சங்கடங்கள் ஏற்பட்டது.
தன்னுடைய முதல் படமான ‘தனியாவர்த்தனம்' திரைப்படத்திற்கே கேரள மாநில அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருதை வாங்கியிருக்கிறார் தாஸ். ‘பூதக்கண்ணாடி' திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும், மாநில விருதும் கிடைத்துள்ளது. லோகிததாஸ் தமிழில் இயக்கிய ‘கஸ்தூரிமான்' திரைப்படத்திற்கு தமிழக அரசு சிறந்த திரைப்பட விருது வழங்கியுள்ளது.
இதுவரையில் 14 முறை சிறந்த கதாசிரியர் விருது, 4 முறை சிறந்த இயக்குநருக்கான விருது என்று கேரளாவின் சிறந்த திரைப்பட அமைப்பான Film Critics Award-ஐ பெற்றுள்ளார்.
இவர் கடைசியாக இயக்கிய ‘நைவேத்தியம்' திரைப்படம்கூட சிறந்த திரைப்படம், சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.
சிறந்த கதாசிரியராக வலம் வந்து கொண்டிருந்த லோகிததாஸை மீராஜாஸ்மின் விவகாரம்தான் விவகாரமானவராக மாற்றிவிட்டது. 2001-ல் தான் இயக்கிய ‘சூத்ரதாரன்' திரைப்படத்தின் மூலம் மீராவை மலையாளத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் லோகி.
இதே லோகிததாஸ்தான் 1996-ல் ‘தூவல் கொட்டாரம்' படத்தின் மூலம் மஞ்சுவாரியரையும், 1999-ல் சம்யுகத்வர்மாவையும் மலையாளத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி மீராவின் விஷயம்தான் அவரை மிகவும் நெருக்கிவிட்டது. லோகி இயக்கிய 4 திரைப்படங்களில் மீரா கதாநாயகியாக நடித்திருந்தார். இதனை வைத்து மலையாள பத்திரிகையுலகம் இருவருக்குமான நட்பை கன்னாபின்னாவென்று எழுதித் தீர்த்துவிட்டது.
அவருக்கும் தனக்குமான நட்பு அப்பா, மகள் உறவுதான் என்று மீரா ஜாஸ்மீன் பல முறை சொல்லியும் பத்திரிகைகள் அதனை பொருட்படுத்தவில்லை. ஜாஸ்மீனுக்காகவே லோகிததாஸ் எடுத்த அடுத்த திரைப்படமும் பத்திரிகைகளுக்கு நன்றாகவே அவல் போட்டது. ஆனால் அந்தத் திரைப்படம் படுதோல்வியடைந்து அதற்காக முதல் போட்ட கடனுக்காக மீரா தனது வீட்டை விற்று கடனை அடைத்தார்.
இதன் பின்பு மீராவுடனான இவரது நட்பில் விரிசல் ஏற்பட்டாலும், சமீப நாட்களில் மீராவுக்காகவே தான் ஒரு கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அதில் அவர்தான் நடிப்பார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். கூடவே கமலஹாசனை வைத்தும் தான் ஒரு படத்தினை இயக்கப் போவதாகவும் சொன்னார்.
இவருடைய ‘சல்லாபம்' திரைப்படம்தான் தற்போது ‘ரயிலு' என்கிற பெயரில் ரஞ்சித் நடிப்பில் தமிழ்த் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.
எனக்குத் தெரிந்து மலையாளத் திரையுலக கதாசிரியர்கள் பட்டியலில் எம்.டி.வாசுதேவன் நாயர், பத்மராஜன், வரிசையில் லோகிததாஸும், சீனிவாசனும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். இந்தப் பட்டியலில் ஒன்று இன்றைக்கு விடைபெற்றுச் சென்றுவிட்டது.
மலையாளத் திரையுலகம் என்றில்லை பொதுவாகவே திரைப்படங்கள் மீதான ஆர்வலர்கள் அத்தனை பேருக்குமே லோகிததாஸின் மரணம் ஒரு மிகப் பெரும் சோகமே.
அவருடைய ‘கிரீடமும்', ‘தசரதமும்', ‘தனமும்', ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா'வும், ‘பரதமும்' மலையாள மொழி என்றில்லை.. அனைத்து மொழி ரசிகர்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டத் திரைப்படங்கள்.
இனி இது போன்ற திரைப்படங்கள் தோன்றவியலாது என்ற எண்ணம் நமக்குள் உதித்தாலும், இதுவரையில் படைத்திருப்பதே அவரது பெயரை வருங்கால சினிமா ரசிகர்களிடத்தில் அவருடைய பெயரைச் சொல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.
அவருடைய ஆத்மா சாந்தியடைய என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..
|
Tweet |
42 comments:
தமிழ்மணத்தில் இணைய மறுத்து சண்டித்தனம் செய்கிறது..!
காரணம் என்ன..?
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
சற்றே அதிர்ச்சி அடைந்தேன், மிக சிறந்த படைபாளி, அவரின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
இனி வாரத்திற்கு ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை மட்டும் பதிவிடுவீகளோ.
நிற்க, அவரின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மலையாள திரையுலத்தைச் சேர்ந்தவரைப் பற்றி முதன்முறையகத் தெரிந்து கொண்டேன். நான் மலையாளத் திரைபடங்களைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். வருடத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோதான். காரணம் மொழி பிரச்சினைதான்.
அன்னாருக்கு எனது மரியாதை கலந்த அஞ்சலிகள்.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாருக்கு என் அஞ்சலிகளையும்,
அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழந்த அனுதாபங்கள், அவரது ஆண்மா சாந்தி அடையட்டும்
நானும் நேற்று காலையில் செய்தியை பார்த்து அதிர்ந்தே போனேன், எனக்கு தெரிந்து மிக சிறந்த ஒரு கதை, திரைகதை கர்த்தாவை மலையாள திரையுலகம் இழந்துவிட்டது! நிச்சயமாக இது ஒரு பேரிழப்பே!
//இதில் ‘கிரீடம்', ‘பரதம்', ‘தனம்', ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா', ‘தசரதம்', ‘செங்கோல்' ஆகிய திரைப்படங்களை பார்த்து அழுதிருக்கிறேன்.//
நானும்!
கிரீடம் இப்பொழுது தானே அஜித் நடிப்பில் தமிழில் அதே பெயரில் வெளிவந்தது :((
:(
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
இப்போதுதான் மலையாள பத்திரிக்கையில் அவரது இறப்பு குறித்த செய்தியை நண்பர் வாசித்துக்காண்பித்தார். தமிழ்மணத்தில் உங்கள் பதிவு!
லோகிததாஸ்ன்னா. மீரா ஜாஸ்மின் மேட்டர்ல கிசுகிசுக்கப்பட்டவர்தானே..!
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகளையும், குடும்பத்தாருக்கு இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
லோகிதாஸ் சிபிமலயில் கூட்டணி மலையாளத் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணிகளில் ஒன்று. மலையாளத்தின் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களின் வரிசையில் கண்டிப்பாக என்றும் லோகிதாஸின் பெயரும் இருக்கும். இந்த வயதில் இவரை மரணம் தழுவி இருக்க வேண்டாம். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
மோகன்லால், மஞ்சுவாரியர் நடித்தப் படத்தின் பெயர் கண்மாடம் அல்ல, கண்மதம்.
கஸ்தூரிமான் படத்த தவிர வேற அவரோட வேறு எந்த படத்தையும் நான் பார்த்ததில்ல. கஸ்தூரிமான் படமே மிக அருமையானப் படம் தான்.
நல்ல படைப்பாளி . முடிவில்லா அமைதியை இறைவன் அவருக்கு அருளட்டும்.
நல்ல வேளை....இந்த பதிவை அவரால படிக்க முடியல....
சூத்திரதாரனும் இவருடைய படம்தான். திலீப், கலாபவன் மணி, மஞ்சு வாரியர், மீரா ஜாஸ்மின் போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல் ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை உண்டு.
ஆழ்ந்த அஞ்சலிகள்!
அவருடைய ஆன்மா சாந்தி அடைவதாக..
ஆனந்த்..
கொஞ்சம் மனம் சரியில்லை. அதனால்தான் எழுதவில்லை. எதிர்பார்ப்புக்கு மிக்க நன்றிகள்.. மலையாளப் படங்களை பாருங்கள்.. மொழிப் பிரச்சினை 99 சதவிகிதம் வராது.. மலையாள மொழி கிட்டத்தட்ட புரியும்..
அக்னிபார்வை, நையாண்டி நைனா, டக்ளஸ், சுரேஷ், சென்ஷி..
வருத்தங்களை பகிர்ந்தமைக்கு நன்றி..
நான் குறிப்பிட்டிருக்கும் சில திரைப்படங்களை இனிமேலாவது பாருங்கள்.. இவருடைய இழப்பின் கொடுமை புரியும்..!
ஜெய் ஸார்..
அந்த கிரீடம் படத்தை எந்த அளவுக்கு சிதைக்கணுமோ அந்த அளவுக்கு தமிழ்ல சிதைச்சுட்டாங்க..!
அதான் கொடுமை..!
கேவிஆர் ஸார்..
உங்களுடைய தகவலுக்கு நன்றி..
ஆங்கிலத்தை அப்படியே தமிழாக்கம் செய்ததால் எழுதிவிட்டேன்..
மன்னிக்கவும்.. திருத்தி விடுகிறேன்..
ஜோஸப் ஸார்..
கஸ்தூரிமான் நல்ல திரைப்படம்தான்..
ஆனால் மலையாளத்தில் ஓடிய அளவுக்கு தமிழில் ஓடவில்லை என்பது வருத்தம்தான்.
தண்டோரா அண்ணே..
ஏன் என்பதையும் சொன்னீர்களானால் புரிந்து கொள்வேன்..
நாராயணன் ஸார்..
நீங்கள் சொல்வதும் சரிதான்..
நன்றி குறை ஒன்றும் இல்லை..!
நானும் அவரின் இரசிகன் என்றமுறையில் எனது மனமார்ந்த அஞ்சலிகளை இங்கு பதிவு செய்கிறேன் :((
நல்ல இயக்குனர் இவரின் கஸ்தூரிமான் வசூல் இல்லாவிட்டாலும் நல்ல படம் என்ற பாராட்டுப் பெற்றது பரதம், ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா இரண்டும் மட்டுமே பார்த்தேன். ஏனைய பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவருக்கு என் அஞ்சலிகள்
அஞ்சலி..
ஒன்று இரண்டு படத்தில் கெஸட் ரோல் கூட செய்திருப்பார் (உதயஞானுதாரம். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
நன்றிகள் மணியன், தீப்பெட்டி..
வந்தியத்தேவன் ஸார்..
இவருடைய மற்ற திரைப்படங்களையும் தயவு செய்து மறக்காமல் பாருங்கள்..!
மலையாளத்தின் கதை, திரைக்கதை என்றால் என்னவென்று தெளிவாகப் புரியும்..!
நாஞ்சில்நாதம் ஸார்..
ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்..
சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவசரத்தில் மறந்துவிட்டேன்..
வருத்தம் தரும் செய்தி!
என் அஞ்சலிகளையும்,
ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கன்மாடம்', - கண்மதம்,
‘ஆர்யங்களோட வீடு' - அரையன்னங்களுடவீடு
//கொஞ்சம் மனம் சரியில்லை. அதனால்தான் எழுதவில்லை.//
பிரமச்சாரியான அண்ணனுக்கே மனம் சரியில்லை என்றால் என்னைப் போல் சம்சாரிகள் நிலை என்னவென்று சொல்வது. ஓஹோ இதுதான் (பிரமச்சாரியாக இருப்பது) பிரச்சினையோ. இருந்தாலும் வேலவர் தங்களை இப்படி சோதிக்ககூடாது. தனக்கு 2 வைத்துக் கொண்டு தங்களுக்கு ஒன்றும் இல்லாமல் செய்து விட்டாரே. வேறு பிரச்சினை என்றால் சொல்லுங்கள். அடுத்த விமானத்திலேயே பறந்து வந்து விடுகிறேன்.
தாங்கள் பதிவிடாத இடைவெளியில் தங்களுடைய பழைய பதிவுகளைப் படித்தேன். தங்களைப் பற்றி மேலும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
நன்றிகள் வால்பையன், டிவிஆர் ஸார்..!
மனசு தகவல்களுக்கு மிக்க நன்றி..
மாற்றிவிட்டேன்..
ஆனந்த் ஸார்..
தங்களுடைய இடைவிடாத பின் தொடரல் எனக்குள் நம்பிக்கையை விதைக்கிறது..
இந்த நட்புக்கு மிக்க நன்றி..!
தமிழ் கஸ்தூரிமானால் பெரிய கடனில் இருப்பதாக தகவல்.
மம்முட்டி லோகிததாஸ் பிள்ளைகளின் படிப்புச்செலவை ஏற்றிருக்கிறார்.
[[[manasu said...
தமிழ் கஸ்தூரிமானால் பெரிய கடனில் இருப்பதாக தகவல்.
மம்முட்டி லோகிததாஸ் பிள்ளைகளின் படிப்புச்செலவை ஏற்றிருக்கிறார்.]]]
மனசு ஸார்..
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு என் மனசும் சரியில்லை..!
என்னவொரு கொடுமை பாருங்க..!
கலைஞர்களுக்கு நேரும் இது போன்ற துயரங்கள்தான் ஆர்வமுள்ள பலரையும் கலைஞர்களாக ஆக்காமல் விடுகிறது..!
ஆழ்ந்த வருத்தங்கள்..
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
அற்புதமான கதையாசிரியர்.
மறக்க முடியுமா லோகிதாஸ் - சிபிமலயில் - மோகன்லால் கூட்டணியை..!
See who owns elhacker.net or any other website:
http://whois.domaintasks.com/elhacker.net
Post a Comment