இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இதுவும் வேணும்..! இன்னமும் வேணும்..!

02-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 16-ம் தேதி இரவு 8 மணியில் இருந்தே திரையுலகப் புள்ளிகள் பலருக்கும் செல்போனில் மெஸேஜ்கள் பறந்து கொண்டிருந்தன. அது இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது என்கிற செய்திதான்..

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடனேயே என்னால் திகைப்பை அடக்க முடியவில்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் மிக முக்கிய காங்கிரஸ் தலைகளின் தோல்விக்கு பாரதிராஜா தலைமையிலான திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தினரின் விடாப்பிடியான பிரச்சாரமும் ஒரு காரணம் என்பதை தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே என்னால் யூகிக்க முடிந்தது.

ஆனால் அதற்கான எதிர்வினையை இன்னமும் ஓட்டு எண்ணிக்கை முடியாத சூழலிலும் தமிழ்நாட்டு அரசியல் ரவுடிகளால் நடத்திக் காட்டப்படும் என்றுதான் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


பாரதிராஜா அலுவலகம் இருக்கும் சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்சன் காம்ப்ளெக்ஸிற்கு இரவு 7.20 மணிக்கு 5 அல்லது 6 பேர் வந்துள்ளனர். அவர்கள் வந்த காரை காம்ப்ளெக்ஸின் வாசலிலேயே நிறுத்திவிட்டு அவர்கள் மட்டுமே பாரதிராஜாவின் அலுவலகத்திற்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு உள்ள வந்தார்கள்.

பாரதிராஜா அலுவலகம் எப்போதுமே திறந்துதான் இருக்கும். இரவு பகலாக அங்கே ‘தெக்கத்திப்பொண்ணு' சீரியலின் பின்புலப் பணிகளான எடிட்டிங் மற்றும் டப்பிங் நடைபெற்று வருவதால் ஆட்கள் எப்போதுமே இருப்பார்கள். அன்றைக்கு சனிக்கிழமை என்பதோடு தேர்தல் ரிசல்ட் வரும் நாள் என்பதாலும்தான் ஆட்கள் இல்லை.

ஆனால் அலுவலகத்திலேயே தங்கியிருக்கும் இரண்டு பேர் மட்டுமே அங்கேயிருந்தனர். உள்ளே நுழைந்தவர்கள் யார், என்ன என்று கேட்கப்படுவதற்குள் தாங்கள் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த கம்புகளால் அலுவலகத்தை தாக்கத் தொடங்கினார்கள்.

அலுவலகப் பணியாளர்களை வெளியே விடாமல் கதவருகே ஒருவர் நின்று கொண்டு கதவை வெளிப்புறமாகப் பூட்டிக் கொண்டதால் பணியாளர்களால் வெளியேற முடியவில்லை. கீழ்த்தளத்தில் இருந்த எடிட்டிங் மிஷின்கள், டப்பிங் மிஷின்களை கைக்கு கிடைத்தவற்றை எடுத்து அடித்ததில் அனைத்துமே நொறுங்கிப் போயின.


அதோடு மேலே பாரதிராஜாவின் அறைக்கு அவர்கள் ஓட.. பின்னாலேயே பணியாளர்களும் ஓடிப் போய் தடுத்திருக்கிறார்கள். ஆனால் வந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அவர்களால் மேற்கொண்டு தடுக்க முடியவில்லை. மாடியில் பாரதிராஜாவின் அறையில் இருந்த ஷீல்டுகளை கீழே போட்டு உடைத்துள்ளனர். அந்த அறையில் இருந்த கம்ப்யூட்டர்களும் உடைத்தெறியப்பட்டுள்ளன.

10 நிமிடத்தில் தங்களுடைய அரசியல் ரவுடித்தனத்தை செய்து காட்டிவிட்டு பின் வெளியே ஓடியிருக்கிறார்கள். பணியாளர்களும் பின் தொடர்ந்து சென்று அவர்கள் வந்த காரின் எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டனர்.

பின்பு பலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட முதலில் பாரதிராஜாவின் தம்பி ஓடோடி வந்தார். பின்பு பாரதிராஜாவும் வந்தார். அவருடைய வருத்தமெல்லாம் எடிட்டிங் மிஷின், டப்பிங் மிஷின் பற்றியதல்ல..

மேல் மாடியில் தன்னுடைய படைப்புகளுக்காக உலகம் முழுவதிலும் பரிசாக வென்றிருந்த ஷீல்டுகள் சுக்குநூறாக கிடப்பதைப் பார்த்து மனம் நொந்து போனார். அன்றைய இரவிலேயே திரையுலகின் முக்கிய இயக்குநர்கள் பலரும் பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் வந்து நடந்ததை பார்த்து கொதித்துதான் போனார்கள்.

காவல்துறையும் வந்தது. முதல் புகாரிலேயே அந்த ரவுடிகள் வந்த காரின் எண்ணும் குறித்துக் கொடுக்கப்பட்டது. “காலைக்குள்ள நிச்சயமா பிடிச்சிருவோம்..” என்று சபதமிட்டுவிட்டுச் சென்ற காவல்துறை இன்றுவரையில் மேல் நடவடிக்கை எதையுமே எடுக்காமல் மெளனம் சாதிக்கிறது.

இத்தனைக்கும் அந்த எடிட்டிங் ஷூட்டில் செய்து கொண்டிருந்த வேலை கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘தெக்கத்திப்பொண்ணு' சீரியலுக்காகத்தான். மறுநாள் இரவு வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையறிந்துதான் இதில் ஆளும்கட்சியினருக்கும் சம பங்கு உண்டு என்பதைப் புரிந்து கொண்டார் இயக்குநர் இமயம்.

இதற்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் இது பற்றி நாசூக்காகத் தெரிவித்து தனது வருத்தத்தைத் தெரிவித்தார் பாரதிராஜா. அதைவிட அவரை வருத்தப்பட வைத்தது அவரால் அதிக காலம் புகழப்பட்ட தமிழனத் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர் என்ன நடந்தது என்று ஒரு போன் செய்துகூட விசாரிக்கவில்லை என்பதுதான்.

இத்தனை நாட்கள் தன் வாயால் புகழ்ந்ததற்கு கிடைத்த பலன் இதுதான் என்று மனம் வெறுத்த நிலையில் சொல்கிறார் இயக்குநர் இமயம். தன்னுடைய தந்தை ஸ்தானத்தில் வைத்திருந்து பார்ப்பதாக இமயம் அடிக்கிடி சொல்லி வந்தும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் துணிச்சலுடன் கருணாநிதியுடன் ஒட்டும், உறவுமாக இருந்ததும் கலைப்பாசம் என்கிற காரணத்தினால்.

ஒவ்வொருவரையும் தனக்குத் தேவையான தருணத்தில் பயன்படுத்திக் கொள்வதும், பின்பு வேண்டாம் என்று நினைத்தால் நொடியில் தூக்கிப் போடுவதும் கருணாநிதிக்கு கை வந்த கலை. கலையுலகில் பலரும் இதைத்தான் அடிக்கடி சொல்லிச் சொல்லி வந்தார்கள். ஆனால் இமயம் கேட்கவில்லையே.. அவர்தான் கலைஞானி என்றும், கலையுலகின் பிதாமமகன் என்றும், கலைஞர்களின் தெய்வம் என்றும் புகழ்ந்து தள்ளி தன்னையே அவரிடம் ஒப்படைத்துக் கொண்டார்.

இந்த ஈழப் பிரச்சினையில் கருணாநிதியின் கபட நாடகத்தை சகித்துக் கொள்ள முடியாமல் பாதிக்குப் பாதியான இயக்குநர்கள் இயக்குநர் இமயத்தை நெருக்கியபோதும் கலைஞரைத் தாக்காமல் காங்கிரஸை மட்டும் தாக்கி பேசுவோம்.. போராடுவோம் என்றுதான் முதலில் யோசனை சொன்னார்.


முதல் பரப்புரிமை கூட்டத்தில் கவிஞர் தாமரை பேசும்போதுகூட இடையில் வந்து குறுக்கிட்டதற்கு அந்தக் கலை பாசம்தான் காரணம். ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதைப் போல் கருணாநிதியின் நாடகத்திற்கு நம்மையும் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை மிக, மிக தாமதமாகத் தெரிந்து கொண்டும், இன்றுவரையில் தி.மு.க.வை நேரடியாகத் தாக்காமல், கருணாநிதியை விமர்சிக்காமல்தான் இருக்கிறார் இயக்குநர் இமயம்.

இப்போது தானே குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பும், ஆளும் கட்சியின் அமைதியும், கலைத்தந்தையின் புறக்கணிப்பும் அவருக்குள் புதிய சிந்தனையை உருவாக்கியிருக்கிறது.

அந்தத் தந்தையின் இன்னொரு முகமும் சமீபத்தில்தான் வெளி வந்தது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தற்போது ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சியை வெகுவாக விமர்சித்து வரும் தமிழருவி மணியன் மத்திய, மாநில அரசுகளின் பாராமுகம்தான் ஈழத் தமிழர்களின் தற்போதைய அழிவுக்குக் காரணம் என்று பத்திரிகைகளில் பேட்டியளித்திருந்தார்.

அந்த பேட்டி வந்திருந்த அன்று இரவு தமிழருவி மணியனிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார் கருணாநிதி. “இன்னும் நான் என்னதான் செய்றது..?” என்று கேட்டிருக்கிறார். “பதவியை விட்டு விலகிருங்க தலைவரே.. மத்தியிலும் ஆட்சியில் இருந்து விலகி விடுங்க. ஆட்சி கவிழும் அபாயம் வந்தால் காங்கிரஸ் தானாக வழிக்கு வரும்..” என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார் தமிழருவி மணியன்.

“நான் ஆட்சியை விட்டு விலகினா உடனேயே தமிழீழம் பிறந்துவிடுமா..?” என்று அறிவுப்பூர்வமாகக் கேள்வி கேட்டுள்ளார் கருணாநிதி. “வேற வழியில்லை.. பதவியில் தொடர்ந்து இருந்தால் துரோகியாகிவிடுவீர்கள்..” என்றிருக்கிறார் தமிழருவி மணியன். டொக்கென்று போனை வைத்தாராம் கருணாநிதி.

மறுநாள் காலையிலேயே தமிழருவி மணியன் தங்கியிருந்த அரசு குடியிருப்பு வீட்டை அடுத்த 24 மணி நேரத்திற்குள் காலி செய்துவிட்டுப் போக வேண்டும் என்று நோட்டீஸ் பறந்து வந்திருக்கிறது தமிழருவி மணியனுக்கு. காலியும் செய்துவிட்டார் மணியன். இதனை அவரே நொந்து போய் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இதுதான் தமிழினத் தலைவர் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் லட்சணம்.

மறுபடியும் இயக்குநர் இமயத்தின் கதைக்கு வருவோம்..

இப்படியே இதனை கண்டு கொள்ளாமல் விட்டால் யாரை வேண்டுமானாலும் அடுத்துத் தாக்குவார்கள். ஆட்சியாளர்களை எதிர்த்து ஒரு குரல் கூட எழுப்ப முடியாது. இதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியே தீர வேண்டும் என்று நினைத்துத்தான் கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.

அந்தக் கூட்டத்தில், ஆர்.கே.செல்வமணி, சீமான், வைகோ, சி.மகேந்திரன், பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வியனரசு, சிவாஜிலிங்கம், த.வெள்ளையன் என்று தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் வருத்தங்களையும் பதிவு செய்தார்கள்.

இதில் வைகோ, சீமான், சி.மகேந்திரன், பழ.நெடுமாறன் ஆகியோர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு ஆளும்கட்சியின் ஆதரவும் உண்டு என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்கள். வைகோவும், பழ.நெடுமாறனும் “கருணாநிதிக்கும் இதில் பங்கு உண்டு. அவருடைய தூண்டுதலால்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக” வெளிப்டையாகவே குற்றம் சாட்டினார்கள்.

அவர்களுடைய இந்தப் பேச்சுக்கான காரணமே சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 22 நாட்கள் ஆகியும், அந்த ரவுடிகள் வந்த காரின் எண்ணைக் குறித்துக் கொடுத்தும் புகழ் பெற்ற நமது சென்னை காவல்துறை இதுவரையில் அது தொடர்பாக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்கிற ஆற்றாமையில்தான்.

இதில் ஒன்றும் தவறில்லையே..

ஆனால் அந்தக் கூட்டம் முடிந்ததும், முதல் பாய்ச்சல் நெடுமாறன் ஐயா மீது பாய்ந்தது.

வைகோ வெளியூரில் இருந்து அவசரம், அவசரமாக இந்த நிகழ்ச்சிக்காகவே வந்ததால் சற்றுத் தாமதமாக 7.40 மணிக்குத்தான் தலைவர்கள் மேடை ஏறினார்கள். பலரும் பேசி முடித்த பின்பு வைகோ மைக் முன் வந்து நின்றபோது மணி 9.40. அப்போது ஆரம்பித்து 11.15 மணிக்குத்தான் தனது கம்பீரப் பேச்சை முடித்தார் வைகோ. இந்தக் களேபரத்தில் இயக்குநர் இமயத்தால் நன்றியுரைகூட நிகழ்த்த முடியவில்லை.

ஆனால் விழாவின் துவக்கத்திலேயே அங்கேயே நின்றிருந்த காவல்துறையினரிடம் இந்தச் சூழலை விளக்கி கூட்டத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் “கூட்டத்தை பத்து மணிக்கு மேலும் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது..” என்று கைப்பட எழுதிக் கொடுத்த கடிதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லையாம்.

“நாளைக்கு ஸ்டேஷனுக்கு வந்து கொடுங்க..” என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னார்களாம். சரி பார்த்துக் கொள்வோம் என்பதால்தான் கூட்டத்தை தொடர்ந்து நடத்திவிட்டார்கள்.

ஆனால் நமது அரசு தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது எவ்வளவு அசுர வேகத்தில் பாயும் என்பதை செய்து காட்டிவிட்டது. அன்றைக்கு இரவோடு இரவாகவே கூட்ட அமைப்பாளர் பழ.நெடுமாறன் மீது இதற்காகவே ஒரு வழக்கை போட்டுவிட்டார்கள். கூட்டத்தின் நேரத்தை நீட்டித்துவிட்டார் என்று. மறுநாள் பத்திரிகைகளில் கூட்டத்தின் செய்தியை விடவும், பழ.நெடுமாறன் மீது போடப்பட்ட வழக்கு பற்றிய செய்திதான் வந்திருந்தது.

இந்த அவசரம் சட்டப்படியாம்.. சரி போகட்டும்..

இந்தக் கூட்டத்தில் பல தலைவர்கள் அரசுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால்தான் மேல் நடிவடிக்கை எடுக்காமல் ரவுடிகளை கைது செய்யாமல் தப்பிக்கப் பார்க்கிறது என்ற போர்க்குரலைக் கேட்டாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்றுதான் நானும் நினைத்தேன்.

ஆனால் நடந்திருப்பது வேறு.. காவல்துறையினரை முடுக்கிவிட்டு அந்த எண்ணை பின்பற்றி குற்றவாளிகளை கைது செய்யும்படி சொல்வதை விட்டுவிட்டு, “அந்தத் தாக்குதலை நான்தான் நடத்தச் சொன்னேன் என்று எப்படி நீங்கள் சொல்லலாம்..?” என்று தமிழினத் தலைவராக தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

என்னிடம் ஆட்சி, அதிகாரம் இருக்கிறது. நான் நினைத்தால் எதையும் செய்வேன் என்கிற திமிர்தான் இதற்குக் காரணம்.

கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் அளவுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களை தாங்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் இமயத்திற்கு, ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கவில்லை. நிவாரணம் தரப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால் பரிசாக இது போன்ற துரோகங்கள்தான் கிடைத்திருக்கின்றன.

எத்தனை நாட்கள் தாங்கு, தாங்கென்று தாங்கியிருப்பார் கருணாநிதியை..? அத்தனைக்கும் சேர்த்து வட்டிக்கும், முதலுக்குமாக இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் இமயம்.

ஒரு தாக்குதல் நடந்து குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டி அனைத்து ஆதாரங்களையும் பாதிக்கப்பட்டவர்களே தேடிக் கொடுத்த பின்பும் அதனைச் செய்யாமல் காலம் தாழ்த்தும் இந்தக் கேடு கெட்ட அரசின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியாம்..

கேவலம்..! மகா கேவலம்..!

22 comments:

ISR Selvakumar said...

பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.

ஆனால் அவருடைய ஈழ ஆதரவு போராட்டம் அவருடைய கையையும் மீறி ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்கும் போராட்டமாக மாறியதை பாரதிராஜாவே மறுக்க மாட்டார்.

தற்போது தேர்தல் முடிந்துவிட்டது. ஜெ. வழக்கம் போல கொடநாட்டுக்கு குறட்டை விடப் போய்விட்டார். அதனால் ஜெவுக்கு ஓட்டு கேட்கிற வேலையும் போய்விட்டது.

எனவே பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கருணாநிதியை திட்டி கண்டனம் தெரிவிக்கும் போராட்டமாக மாறிவிட்டது.

ஆரம்பிக்கும்போது உணர்ச்சிகரமாக தனிஈழ ஆதரவு போராட்டமாக இருந்து, ஜெ.வுக்கு ஓட்டு கேட்ட போராட்டமாக மாறி, தற்போது பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கருணாநிதியை திட்டும் போராட்டமாக மாறிவிட்டது.

பாவம் பாரதிராஜா, சீமான் மற்றும் சிலர். ஜெ மற்றும் கருணாநிதியின் அரசியல் ஆட்டங்களில் தங்கள் உண்மையான உணர்வுகளைத் தொலைத்துவிட்டார்கள். இது எதிர்பார்த்ததுதான்.

ங்கொய்யா..!! said...

:)))



:)))))


ஹா ஹா கூல்ல் கூல்ல்ல் :))

KOTTAKUPPAM said...

அப்ப தெக்கத்தி பொண்ணு ஏன் நிறுத்த வில்லை. எல்லாம் அரசியல். பணமும் வரணும் அரசியலும் பண்ணனும். பாரதிராசா திருந்துங்க சார்

யட்சன்... said...

இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் கலைஞரை குறைசொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்களோ தெரியவில்லை.

தொடர்ச்சியாய் இம்மாதிரியான பதிவுகளை படிப்பது சலிப்பைத்தான் தருகிறது.

பாரதிராஜா, சீமான், நெடுமாறன் வகையறாக்களை இலங்கை குடியுரிமை கேட்டு அங்கே போய்விடச்சொல்லுங்கள்....அப்போதுதான் கலைஞரின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

கல்வெட்டு said...

ரொம்ப பொலம்பாதீங்க உண்மையாரே.....நீங்கள் நம்பும் கடவுள்கள் உங்களை மட்டும்தான் காப்பார்களா? பாரதிராஜா மற்றும் ஈழத்தவர்களையும் காக்க கந்தனுக்கு காசு கொடுக்கனுமா என்ன ? கொடுமை சாமி...

எல்லாம் கந்தன் செயலே எனவே அவனிருக்க நீங்கள் ஆடாமல் செவனே என்று இருக்கவும்.

***

இணையத்தில் கிறுக்குவது, சினிமா பார்ப்பது , விமர்சனம் எழுதுவது, கதை எழுதுவது என்று நிறுத்திக் கொண்டால் நல்லது. கூடமாக‌ எதையாவது சொல்லி/எழுதி எந்தக் கட்சிக்கும் எதிரியாக, அவர்களின் கவனிப்பு வட்டத்திற்குள் வந்துவிடாதீர்கள் உடம்புக்கு ஆவாது. :-(((

ஆயிரம் தவறுகள் இருந்தாலும் அரசியல் கட்சிகள் செய்யும் சில நல்ல விசயங்களைப்பார்த்தாவது மனசை தேற்றிக் கொள்ளவும்.

***

இந்திய அரசியல் என்பது அதிகாரம்,பணம்,பதவி , செல்வாக்கு, என்று அனைத்தையும் கொண்ட ஒரு சூப்பர் பவர்.

எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து ஒரு அளவிற்கே பேச முடியும். அதிமுக விற்கு ஒரு இலட்சுமண் ரேகை என்றால் திமுக விற்கு மற்ற ஒன்று

இலட்சுமண் ரேகைநீள அகலங்கள் மாறுபடும். ஆனால் இலட்சுமண் ரேகை உண்டு. அதைத்தாண்டி வாலாட்டினால் , எங்கே அடித்தால் என்று வலிக்கும் என்று தெரிந்தே அடிவிழும்.

கோவணம் உருவப்படும் நிலையில் உங்களால் பொது விசயங்களைப் பேச முடியாது. கோவண‌த்தைக் காப்பதிலேயே நேரம் செலவாகும். அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல ஒன்னுக்கும் உதவாத சுப்பிரமணியசாமி வகையறாக்கள் கூட கேஸ் போட்டே தாலியறுப்பார்கள்.

**

தனி மனிதனின் வாழ்க்கையில் வலியவர்கள் கொடுக்கும் அடி மரண அடியாக இருக்கும்.


**

போங்க போய் உலக சினிமா பாருங்க. அல்லது கதை எழுதி காசு வாங்க வழியப் பாருங்கோ. ரொம்ப சமுதாய அக்கறை இருந்தா குத்தம்பாக்கம் இளங்கோபோல் ஏதாவது உருப்படியா செய்யுங்கோ.

இந்திய அரசியலை விமர்சிப்பது நேரவிரயம்.

அக்னி பார்வை said...

அப்போ இனிமே தெக்கத்தி பொண்ணு நாடகம் கலைஞர் டீவியில வராது? அதாவது நாடகத்தை உடனடியாக பாரதிராஜா நிறுத்திவிடுவார்..

வால்பையன் said...

எனது வருத்தமெல்லாம் ”இந்தியா ஒரு ஜனநாயக நாடு” என பள்ளியில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களை பற்றி தான்!

கல்வெட்டு said...

//எனது வருத்தமெல்லாம் ”இந்தியா ஒரு ஜனநாயக நாடு” என பள்ளியில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களை பற்றி தான்!//

வால்பையன்,
பல பெருசுகளே இன்னும் அதை நம்பிக்கிட்டு இருக்கு. அதைவிட கட்சி விசுவாசிகள் , என்ன செஞ்ச்சாலும் "காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு" என்ற ரேஞ்சில் கட்சியை அடைகாப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இந்த ரேஞ்சில் பள்ளிக் குழந்தைகளை என்ன செய்வது? அதுகள் அப்படியே படிக்கட்டும் நாம் மாறும்வரை.

பாலகுமார் said...

இமயம் போன்ற பெரிய மனிதர்களுக்கே இந்த கதி என்றால் சாதரண மக்கள் கதி?

கும்மாச்சி said...

கலைஞரிடம் வெரி எதை எதிர் பார்க்க முடியும். வேண்டும் பொழுது சேர்த்துக்கொள்வார். வேண்டாத பொழுது தள்ளிவிடுவார், எதிர்த்தால் போட்டுத் தள்ளுவார். இதெல்லாம் இவருக்கு கை வந்த கலை.

தாத்தா இன்னும் பேரனுக்கெல்லாம் அமைச்சர் பதவி வாங்க வேண்டியுள்ளது.

Unknown said...

r.selvakumar மற்றும் கல்வெட்டு இவர்களின் கருத்துகளை நான் ஆமோதிக்கிறேன். அதிலும் கல்வெட்டு அவர்களுடையது வைர வரிகள் என்பேன்.

போராட்டம் என்று எதற்கோ ஆரம்பித்து வேறு எதிலேயோ முடிந்து விட்டது. எல்லாம் வீண் வேலை(யாகிவிட்டது).

யதார்த்தவாதி வெகு ஜன விரோதி. இதையும் மனதில் கொள்ளுங்கள்.

malar said...

சார் இந்த சினிமா காரங்களை நம்பதேங்க நாளைக்கு இவங்க மஞ்சள் துண்டுக்கு பின்னாடயும் பச்சை துண்டுக்கு பின்னாலையும் தான் போவார்கள் .தாத்தா எனதருமை தம்பி பாரதிராஜா என்று சொல்வார் முடிந்தது கதை .

malar said...

அரசியலை கல்வெட்டு அழகாக சொல்லியிருக்கிறார் .

Cable சங்கர் said...

//"இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இதுவும் வேணும்..! இன்னமும் வேணும்..!"//

Repeateyyyyyyyyyy,,,,,,,,,

தீப்பெட்டி said...

கலைஞரின் இந்த அரசியல் புதிதல்ல...

இயக்குனருக்கு தெரியாமல் போனதுதான் துரதிஷ்டம் அல்லது தன்னை யாரும் ஒண்ணும் பண்ண முடியாதுங்குற தான் என்கிற எண்ணம் இயக்குனருக்கு இருந்திருக்கலாம்

தாக்குதலுக்கு எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.. இந்த பதிவை முன்பே எதிபார்த்தேன் உங்களிடம் மிகவும் தாமதித்துவிட்டீர்கள்..

Anonymous said...

nice

இரா.சுகுமாரன் said...

//நான் ஆட்சியை விட்டு விலகினா உடனேயே தமிழீழம் பிறந்துவிடுமா..?” என்று அறிவுப்பூர்வமாகக் கேள்வி கேட்டுள்ளார் கருணாநிதி. “வேற வழியில்லை.. பதவியில் தொடர்ந்து இருந்தால் துரோகியாகிவிடுவீர்கள்..” என்றிருக்கிறார் தமிழருவி மணியன். டொக்கென்று போனை வைத்தாராம் கருணாநிதி.//

ஆட்சி இன்று போனால் நாளை வரும் ஆனால் தமிழினத்தலைவர் பதவி போனால் இனி என்றுமே அது திரும்பி வரவே வராது. காங்கிரசு ஆட்சிக்கு ஆதரவு விலக்கிக் கொண்டால் நான் வைகோவிடம் பேசுகிறேன், ஈழ ஆதரவுடைய எல்லா கட்சிகளின் ஆதரவுடன் நீங்கள் வெற்றி பெறலாம் ஈழத்தின் இன்றைய நிலையால் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி காணப்படுகிறது. எனவே நீங்கள் தேர்தலின் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் அவர் தமிழருவி மணியன் பேசி இருக்கிறார்.

உங்கள் கருத்துக்கு ஏற்றவாறு பாரதி ராசா நடக்க வேண்டும் என்று நீங்கள் கருதக்கூடாது. கருணாநிதியின் தொல்லை தாங்காது என்பதால் தான் திரைப்படத் துறையினர் கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள் . ஆனால், கருணாநிதி தேர்தலின் போது, காங்கிரசுக் காரணைவிட மோசமான காங்கிரசு கொள்கை பிரச்சாரம் செய்யும் தமிழினத் துரோகியானார்.

கல்வெட்டு said...

கொடுமையப் பாத்தீங்களா???

ராஜினாம பண்ணினால் ஈழத்திற்கு குரல் கொடுக்க வசதியாய் இருக்கும். எந்த நெருடலும் இல்லாமல் போராடலாம்.வெற்றிபெரும் பட்சத்தில் ஈழம்,கட்சத்தீவு , சேது இன்னபிற கொள்கைகளுக்காக போராட வச்தியாய் இருக்கும்....

அப்படீன்னு சொல்லவில்லை பாருங்கள்.

தமிழருவி மணியன் இப்படிச் சொல்கிறார்

//ஈழ ஆதரவுடைய எல்லா கட்சிகளின் ஆதரவுடன் நீங்கள் வெற்றி பெறலாம்//

//ஈழத்தின் இன்றைய நிலையால் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி காணப்படுகிறது. எனவே நீங்கள் தேர்தலின் வெற்றி பெற்றுவிடலாம்//


:-((((

ஈழ அலையைப் பயன்படுத்தி எப்படி தேர்தலில் வெற்றி பெறலாம் என்றே சொல்லப்படுகிறது. அதுதான் அதை எதிர்த்தே வென்றுவிட்டாரே? இப்ப என்ன குறைந்துவிட்டது?

***

கடந்த முறை நாற்பதும் இந்த திமுக தலைமையில் இருந்த கூட்டணியின் வசம்தான் இருந்தது? என்ன செய்தார்கள் எல்லாரும்?

***

மற்ற மாநிலங்களுக்கு தேசிய அளவில் பேச வேண்டிய பிரச்சனைகள் பல இருக்கலாம். ஆனால் தீபகற்க இந்தியாவின் கடைக்கோடி கடல் எல்லை மாநிலமான தமிழ்நாட்டிற்கு , அருகில் உள்ள இலங்கை என்ற தீவு நாட்டின் அரசியல் பிரச்சனைகள் மிக முக்கியமானவை.

தமிழக அரசியல் கட்சிகளுக்கு இலங்கை என்ற எல்லைப்புற நாடு குறித்தான புரிதல்கள் சில அரசியல் சார்புகளைக் கொண்டதாகவோ அல்லது வேறுவிதமாகவோ (என்னால் புரியமுடியாத ) இருக்கிறது.

அந்தப் பிரச்சனை குறித்து எடுக்கும் எந்த முடிவுகளும் /கொள்கைகளும் சுய இலாப/நஷ்டக் கணக்கில்தான் இருக்கிறது. ஆட்சி போயிரும்/பதவி போயிரும் என்ற வகியில்..

பாரளுமன்ற தேர்தலில் முன்னிலைப்படுத்த வேண்டிய பிரச்சனைகள் குறித்த சரியான புரிதல் யாருக்கும் இல்லை. மக்களும் கவலைப்படுவது இல்லை.
தேர்தலில் ஓட்டுக்கான காசு வந்துசேரவில்லை என்று வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று காசு கேட்பதும், அந்தக் காசு இவ்வளவு வரை இருக்கும் என்று உத்தேசித்து முன்னரே க‌டன்வாங்குவதும் மிகவும் சகஜமாகிவிட்டது.

எனவே இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் என்பது இந்த நூற்றாண்டில் சாத்தியம் அல்ல.

கச்சத்தீவை தாரை வார்த்தது போல நாளை இராமேஸ்வரத்தை தாரைவார்த்தாலும் ஆச்சர்யம் இல்லை.

***

ஈழம்/இந்திய அரசியல் குறித்தான எனது உரையாடல்களில் சில...


இலங்கைத் தமிழர் மீது நிஜமான அக்கறை கொண்டோர் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்?
http://rathnesh.blogspot.com/2009/04/blog-post_14.html

வாய்ச் சொல் வீரர்கள்
http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

பிரிவினை வாதி அத்வானி - தேசத் துரோகி நரேந்திர மோடி
http://masivakumar.blogspot.com/2009/04/blog-post_14.html

Unknown said...

உண்மையாரை சில சமயங்களில் ஐயோ பாவம் என்று நினைக்க தோன்றுகிறது. இத்தனை வயதாகியும் இந்திய/தமிழ் நாட்டு அரசிலைப் பற்றி இன்னும் புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறாரே. தாங்கள் எதிர் பார்க்கும் அரசியல் மேல் நாட்டில்தான் இருக்கிறது. அல்லது அண்ணா காமராஜர் காலத்தோடு போய் விட்டது. இன்னும் பல விசயங்கள் சொல்ல தோன்றுகிறது. இது போதும்.

bandhu said...

can you please give me your email_id?

thanks

நாகூரான் said...

நல்ல பதிவு, பாரதிராஜா சில சுயநல காரணங்களால்தான் கலைஞரை விமர்சிக்காமல் இருந்தார், இப்பொழுது புத்தி வந்திருக்கும். பாரதிராஜா சரியில்லை...
Pls allow wordpress comments! your settings only allows bloggers!
thanks!

மங்களூர் சிவா said...

/
r.selvakkumar said...

பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.

ஆனால் அவருடைய ஈழ ஆதரவு போராட்டம் அவருடைய கையையும் மீறி ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்கும் போராட்டமாக மாறியதை பாரதிராஜாவே மறுக்க மாட்டார்.

தற்போது தேர்தல் முடிந்துவிட்டது. ஜெ. வழக்கம் போல கொடநாட்டுக்கு குறட்டை விடப் போய்விட்டார். அதனால் ஜெவுக்கு ஓட்டு கேட்கிற வேலையும் போய்விட்டது.

எனவே பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கருணாநிதியை திட்டி கண்டனம் தெரிவிக்கும் போராட்டமாக மாறிவிட்டது.

ஆரம்பிக்கும்போது உணர்ச்சிகரமாக தனிஈழ ஆதரவு போராட்டமாக இருந்து, ஜெ.வுக்கு ஓட்டு கேட்ட போராட்டமாக மாறி, தற்போது பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கருணாநிதியை திட்டும் போராட்டமாக மாறிவிட்டது.

பாவம் பாரதிராஜா, சீமான் மற்றும் சிலர். ஜெ மற்றும் கருணாநிதியின் அரசியல் ஆட்டங்களில் தங்கள் உண்மையான உணர்வுகளைத் தொலைத்துவிட்டார்கள். இது எதிர்பார்த்ததுதான்.
/

ஹும்
:(