களவாடிய பொழுதுகள் - சினிமா விமர்சனம்

30-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக கே.கருணாமூர்த்தி, சி.அருண்பாண்டியன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இதில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இன்பநிலா என்னும் புதுமுகமும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசை – பரத்வாஜ், பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு – பீ.லெனின், சி.சு.பிரேம், கலை இயக்கம் – சி.கதிர், ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் – தங்கர்பச்சான்.
‘அழகி’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘சொல்ல மறந்த கதை’ போன்ற அற்புதமான திரைப்படங்களை தமிழுக்கு தந்திருக்கும் இயக்குநர் தங்கர்பச்சானின், அடுத்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய படைப்புதான் இந்த ‘களவாடிய பொழுதுகள்’.
இத்திரைப்படம் கடந்த 2009-ம் ஆண்டு துவக்கப்பட்டு 2010-ம் ஆண்டு தயாரித்து முடிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால் தாமதமாகி, இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.

இயக்குநர் தங்கர்பச்சானின் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற ‘அழகி’ படம் போலவே இதுவும் காதலை மையப்படுத்திய கதைதான்.
இன்னும் சொல்லப் போனால் ‘அழகி’ படத்திலிருந்து தலைகீழ் மாற்றம் உள்ள கேரக்டர்களைக் கொண்ட படம் இது. ‘அழகி’யில் ஏழை காதலி.. பணக்கார காதலன் என்றிருக்கும். இத்திரைப்படத்தில் காதலி பணக்காரி; காதலன் ஏழை. அவ்வளவுதான்..!
தங்கர்பச்சான் எழுதிய ‘சருகுகள்’ என்னும் சிறுகதையின் திரை வடிவம்தான் இது..!
கார் டிரைவரான பிரபுதேவா ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு ஒரு சவாரியை அழைத்துச் சென்றவர் திரும்பி வருகையில் சாலையில் ஒரு விபத்து நடந்திருப்பதை பார்க்கிறார். அந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கிறார் பெரும் தொழிலதிபரான பிரகாஷ் ராஜ். யாருமே காப்பாற்ற முனையாத அந்த நேரத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்து காப்பாற்றுகிறார்.
மறுநாள்வரையிலும் மருத்துவமனையில் கூடவே இருந்து பிரகாஷ்ராஜை பார்த்துக் கொள்கிறார் பிரபுதேவா. விஷயம் கேள்விப்பட்டு பிரகாஷ்ராஜின் மனைவி பூமிகா பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். அவரைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சியாகும் பிரபுதேவா, சொல்லாமல் கொள்ளாமல் அங்கேயிருந்து கிளம்பி தனது சொந்த ஊரான ஈரோட்டிற்கு திரும்புகிறார்.
சவாரியில் கிடைத்த பணத்தையெல்லாம் பிரகாஷ்ராஜுக்கு செலவழித்துவிட்டு கையில் காசில்லாமல் ஊர் திரும்பிய பிரபுதேவாவை அவரது மனைவி இன்பநிலா திட்டித் தீர்க்கிறார்.
அங்கே பிரகாஷ்ராஜ் பூரண நலம் பெற்று வீடு திரும்பியவர், தன்னை சரியான சமயத்தில் மருத்துவமனையில் சேர்ப்பித்து உயிரைக் காப்பாற்றிய பிரபுதேவாவை பார்க்க விரும்புகிறார். தனது மனைவி பூமிகாவிடம் சொல்லி பிரபுதேவாவை சென்னைக்கு வரச் சொல்கிறார். ஆனால் பிரபுதேவா வர மறுக்கிறார். ஏன் என்று காரணம் கேட்கையில் அவர் தன்னுடைய பழைய காதலர் என்பது பூமிகாவுக்கு தெரிய வர அவரும் அதிர்ச்சியாகிறார்.
கல்லூரி காலங்களில் பிரபுதேவாவும், பூமிகாவும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்யவும் முடிவெடுத்து காத்திருக்கிறார்கள். ஆனால் பெரும் பணக்காரரான பூமிகாவின் அப்பா சதித் திட்டம் தீட்டி பிரபுதேவா மீது கஞ்சா புகாரை பதிய வைத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பி தண்டனையும் வாங்கித் தருகிறார்.
தண்டனை காலம் முடிந்து வெளியில் வரும் பிரபுதேவாவுக்கு பூமிகாவுக்கு திருமணமான விஷயம் தெரிய வர.. அதிர்ச்சியானவர் வேறு வழியில்லாமல் இன்பநிலாவை கல்யாணம் செய்து செட்டிலாகியிருக்கிறார்.
பூமிகாவோ தனது தந்தை செய்த சதிச் செயல் பற்றித் தனக்குத் தெரியாது என்றும், தனது தந்தையின் தொழிலில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக அதற்கு பண உதவி செய்தமைக்காக கட்டாயத்தினால் பிரகாஷ்ராஜை கல்யாணம் செய்ய நேரிட்டதாகவும் சொல்கிறார்.
பூமிகா, பிரபுதேவாவை போனில் அழைத்தும் அவர் வராமல் போகவே… நேரில் அழைக்க ஈரோட்டுக்கே வருகிறார் பூமிகா. பிரபுதேவாவின் மனைவியிடம் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவரை ஏதாவது பிஸினஸ் செய்து பிழைத்துக் கொள்ளச் சொல்லும்படி சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்.
பிரபுதேவா மனம் கேட்காமல் பூமிகாவை பின் தொடர்ந்து வர அவரை எமோஷனல் பிளாக்மெயில் செய்து சென்னைக்கு அழைத்து வருகிறார் பூமிகா. இங்கேயும் பூமிகா பல உதவிகளைத் தான் செய்வதாகச் சொல்லியும் தான் அவளது அருகில் இருக்க விரும்பவில்லை என்று சொல்லி கிளம்பிப் போகிறார் பிரபுதேவா.
இன்னொரு பக்கம் பிரகாஷ்ராஜ் பிரபுதேவாவை பார்த்தே தீர வேண்டும் என்று விருப்பத்தில் இருக்கிறார். பின்பு வேறொரு சந்தர்ப்பத்தில் வேண்டாவெறுப்பாக சென்னைக்கு வரும் பிரபுதேவா, பிரகாஷ்ராஜை சந்திக்கிறார். அந்தச் சந்திப்பின் முடிவாக தான் சென்னையில் இருந்து பிரகாஷ்ராஜின் தொழிலில் உதவி செய்வதாக ஒப்புக் கொள்கிறார் பிரபுதேவா.
பிரகாஷ்ராஜின் சக்கரை ஆலையின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் பிரபுதேவா அதனை திறம்பட நடத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அதே சமயம் பூமிகாவும் அவரும் சந்திக்கும் சமயங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்க… அது அவர்களது நட்பை குலைக்கிறது. காதலையும் வளர்க்கிறது.
இடையில் பிரபுதேவாவின் மனைவி கர்ப்பமடைய.. இதைக் கேட்டவுடன் இதுவரையில் குழந்தையில்லையே என்கிற ஏக்கத்தில் இருக்கும் பூமிகாவுக்கு பிரபுதேவாவின் மீது இனம் புரியாத கோபம் ஏற்படுகிறது. இது தங்களுக்குள் முறைகேடான ஒரு தொடர்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற பயம் பிரபுதேவாவுக்கு ஏற்படுகிறது.
இதனை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சட்டென்று ஒரு முடிவெடுத்து ஊரைவிட்டுக் கிளம்புகிறார்.. இன்னொரு பக்கம் பூமிகாவும் அவரைக் காணாமல் தேடுகிறார். பிரகாஷ்ராஜும் பிரபுதேவாவை தேடுகிறார். முடிவு என்னாகிறது என்பதுதான் இந்த ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் சுவையான திரைக்கதை.
காதலித்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த வலி என்பார்கள். அதுபோல காதலித்தவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலிக்கப்பட்டவர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்தால் நெக்குருகிப் போவார்கள் என்பது மட்டும் உறுதி.
காதலர்கள் வாழ்க்கையில் சேர முடியாமல் போய் பிரிந்து சென்று பின்பு மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்தால் என்ன நடக்கும்.. அவர்கள் மனதுக்குள் நடக்கும் போராட்டம் எத்தகையதாக இருக்கும் என்பதை அவர்கள் மட்டுமே உணர முடியும். அப்படியொரு காதல் போராட்டத்தைத்தான் இந்தப் படத்தில் காதலனான பொற்செழியனும், காதலியான ஜெயந்தியும் படுகிறார்கள்.
பிரிந்தவர் கூடினால் பேச்சு எழாது என்பார்கள். ஆனால் துக்கமும், கோபமும், வலியும் ஒருங்கே சேர்ந்து அந்தக் காதலர்களை துன்புறுத்தும். அதுவரையிலான அவர்களது சந்தோஷ வாழ்க்கையில் ஒரு புயல் வீசி அவர்களைத் தடுமாற்றத்துக்குள்ளாக்கும். இந்தப் போராட்டத்தைத்தான் படத்தில் மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான்.
சிறுகதையைப் போலவே திரைப்படத்திற்கான திரைக்கதையையும் செதுக்கியிருப்பதால் படம் எந்த நிலையிலும் போரடிக்கவில்லை. மெதுவாகச் செல்கிறதே தவிர, அடுத்து என்ன என்கிற ஆவலையும், ஆசையும் தூண்டிவிட்டிருக்கிறது.
பொற்செழியன் என்னும் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் பிரபுதேவா. கல்லூரி காலத்தில் சிரித்த முகத்தோடு இருக்கும் காட்சிகள் சிலவைதான். அதிலும் ஆக்ரோஷமாக கேள்விகளை எழுப்பும் துடிப்பான இளைஞராகவும் தென்படுகிறார்.
இதன் பின்பு தனது பழைய காதலையும், காதலியையும் மறக்கவும் முடியாமல், மறைக்கவும் தெரியாமல் அல்லல்படும் அந்தக் காதலனின் மனத்துடிப்பை தன் நடிப்பில் அட்சரப்பிசகாமல் காட்டியிருக்கிறார் பிரபுதேவா.
தனது ஏழ்மையைச் சுட்டிக் காட்டி பேசும் மனைவியிடம் பதிலளிக்க முடியாமல் திணறுவதும், சராசரியான ஒரு கணவனால் பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்று தனது இயலாமையையும் வெளிப்படுத்தியிருக்கும் பிரபுதேவாவை உண்மையாக இந்த அளவுக்கு திறம்பட நடிக்க வைத்திருக்கும் தங்கர்பச்சானுக்கு ஒரு ‘ஜே’ போடலாம்..!
காதலியாகவும், மனைவியாகவும் இருதலைக்கொள்ளி எறும்பு போல தவிக்கும் கேரக்டரில் பூமிகா அற்புதமாக நடித்திருக்கிறார். இத்தகையை நடிப்புத் திறமையுள்ள நடிகையை தமிழ்ச் சினிமாவுலகம் சரிவர பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.
காதலனுக்கு உதவ நினைப்பதும், பின்பு அவன் பக்கத்திலேயே குடி வந்ததும் அவனது நினைவுகளே தன்னை ஆக்கிரமிப்பதையும் தாங்கி முடியதவராக தடுமாற்ற வாழ்க்கையில் அடையாளம் தெரிவதுபோல நடித்திருக்கிறார் பூமிகா.
தன்னை எப்போதும் தாங்கிப் பிடிக்கும் கணவன் ஒரு பக்கம், தன்னை உயிருக்கு உயிராய் காதலித்த காதலன் இன்னொரு பக்கம்… என்று இரண்டு பேரையுமே விட்டுக் கொடு்க்க மனசில்லாமல் ஒருநிலைப்பாடில்லாமல் தத்தளிக்கும் மன விளையாட்டை பூமிகா நடித்துக் காண்பித்திருக்கிறார்.
தன்னால்தான் தனது காதலனின் வாழ்க்கை இந்த அளவுக்கு சீர்கெட்டுப் போனதே என்கிற குற்றவுணர்ச்சி வேறு பூமிகாவை வறுத்தியெடுக்க அவரால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. தாய்மையும், பெண்மையும் கலந்த உருவமாக அவர் இருப்பதால் அவர் படும்பாடு இனிமேல் தப்பித் தவறிக்கூட காதலித்துவிடக் கூடாது என்று பெண்களுக்கு எச்சரிக்கையாக சொல்வது போலவே இருக்கிறது..!
ஜெண்டில்மென் என்பதற்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச் பிரகாஷ்ராஜூக்கு. “லூஸாய்யா நீயி”, “உனக்கு என்னதாய்யா பிரச்சினை..” என்று பிரபுதேவாவிடம் சண்டைக்கு நின்று பின்பு அவரை அரவணைக்கிறார்.
முதல் நாளிலேயே தனது கம்பெனியை டேக் ஓவர் செய்யும் அளவுக்கு இருக்கும் பிரபுதேவாவின் பேச்சுத் திறமையை பாராட்டும் தன்மையான குணம் பிரகாஷ்ராஜுக்கு. நடிப்பில் ஒரு துளியைக்கூட அவர் குறைக்கவில்லை.
கிளைமாக்ஸில் அவருடைய பதற்றமான நடிப்பும், தனக்கு எல்லாம் தெரியும் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லி, பூமிகாவை காப்பாற்றும் ஒரு நேர்மையான கணவன் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திப் போகிறார் பிரகாஷ்ராஜ்.
பிரபுதேவாவின் மனைவியாக நடித்திருக்கும் இன்பநிலா இ்ன்னொரு பக்கம் விளாசித் தள்ளுகிறார். தனது குடும்பம் இருக்கும் சூழலை அடிக்கடி சொல்லிக் காட்டி பணத்தேவையை கணவனுக்கு அறிவுறுத்தும் சராசரி பெண்ணின் கேரக்டர் இவருக்கு.
கிளைமாக்ஸில் தனது மகளின் படிப்பு, மற்றும் குடும்பத்தின் அப்போதைய நிலைமை.. திரும்பிச் சென்று என்ன பாடுபட வேண்டும் என்றெல்லாம் கெஞ்சலாகச் சொல்லி அழகும் அவருடைய நிலைமை யாருக்கும் வரக் கூடாதுதான்.. மிக இயல்பாக நடித்திருக்கிறார் இன்பநிலா. வாழ்த்துகள். குழந்தை யாழினி இந்தக் காட்சியில் “நாம மறுபடியும் ஏழையாயிட்டோமாப்பா…” என்று பிஞ்சுக் குரலில் கேட்கும்விதம் அடிவயிற்றை ஒரு நிமிடம் புரட்டிவிடுகிறது..!
சத்யன் கேரக்டர் மீண்டும் படத்தில் வந்தவுடனேயே எப்படியும் அவர்தான் குட்டை உடைக்கப் போகிறார் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிந்துவிட்டது.
படத்தின் திரைக்கதை வேகமில்லாமல் மெதுவாக ஊர்ந்து செல்வதுதான் படத்தின் பிரதான குறை. ஆனால் கத்தி மீது நடப்பது போன்ற கதை என்பதால் இதனை இப்படித்தான் சொல்ல முடியும்.
தங்கர்பச்சானே ஒளிப்பதிவு செய்திருந்தாலும் இன்னும் அழகான பிரேம்களில் படம் பிடித்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. பாடல் காட்சிகளையும், சில, பல பிரேம்களிலும் அவரது கண்கட்டுவித்தை தெரிகிறது என்றாலும் கலர் டோன் கண்ணை உறுத்துகிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
பரத்வாஜின் இசையில் ‘சேரன் எங்கே’ பாடல் பட ரிலீஸுக்கு முன்பே ஹிட்டாகிவிட்டது. அந்தப் பாடல் காட்சியில் பிரபுதேவாவை கொஞ்சம் நடனமாட அனுமதித்திருக்கிறார் இயக்குநர். மற்றபடி நடனப் புயல் பிரபுதேவாவை இந்தப் படத்தில் பார்க்கவே முடியாத நிலைமை.
அறிவுமதியின் ‘அழகழகே’ பாடல் காட்சியும், ‘தயவு செய்து என்னைக் களவாடு’ பாடலும், காட்சிகளும் கவிதை வடிவில் அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன.  கொஞ்சம், கொஞ்சமாக விட்டுவிட்டு ஒலித்த ‘தேடித் தேடிப் பார்க்கிறேன்’ பாடலும் ரசிக்க வைத்திருக்கிறது.
வெறும் காதல் மட்டுமில்லாமல் நாட்டின் மிக முக்கிய பிரச்சினையான அரசியல்வியாதிகளின் அட்டூழியம், லஞ்சம், ஊழல், ஊடகங்களின் கார்ப்பரேட் கலாச்சாரம், மதுபானக் கடை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் அலட்சியம் என்று பேச வேண்டிய பலவற்றையும் பேசியிருக்கிறார் இயக்குநர். இதற்கு மிகப் பொருத்தமான இடத்தில் சத்யராஜ் பெரியார் வேடத்தில் வந்து புத்திமதியும் சொல்லிவிட்டுப் போகிறார். இவைகள் இடைச்செருகல்தான் என்றாலும் அனைத்துமே நன்று..!
கிளைமாக்ஸில் பிரபுதேவா அப்படியொரு முடிவை எடுப்பதற்கு அந்த ஒரு நிமிட அத்துமீறல்தான் காரணம் என்பதை நாமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதுபோல திரைக்கதை இருப்பதுதான், படத்தின் மிகப் பெரிய குறை. சாதாரண மக்களால் இதனை உணரவே முடியாது.
ஆனால், அது அருமையான முடிவு. அருகருகேயிருக்கும்போது எப்படியும் தங்களை மீறி எல்லை மீறிவிடுவோம் என்பதை உணர்ந்துதான் இனிமேல் இருவரும் சந்திக்கவே கூடாது என்பதாக பிரபுதேவா எடுக்கும் தீர்மானம்… அவரவர் வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு நேர்த்தியான கதையில், குழப்பமேயில்லாத திரைக்கதையில்.. சிறப்பான வசனங்களுடன், நேர்த்தியான நடிப்பில்.. அழுத்தமான இயக்கத்தில் சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கிறது இந்த ‘களவாடிய பொழுதுகள்’ திரைப்படம்.
நிச்சயமாக இத்திரைப்படம் நமது நேரத்தைக் களவாடாது. மாறாக நம் மனதை நிச்சயமாக களவாடும்..!
அவசியம் பாருங்கள்..!

0 comments: