சங்கு சக்கரம் - சினிமா விமர்சனம்

29-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய திரைப்படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனமும், கே.சதீஷின் சினிமாவாலா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
படத்தில் குழந்தை நட்சத்திரங்கள்தான் பிரதான பாத்திரங்களை ஏற்றுள்ளனர். மோனிகா, தீபா, ஜெனிபர், நிஷேஷ், தேஜோ, ஆதித்யா, அஜெஷ், ஆதர்ஷ், இவர்களுடன் ‘புன்னகைப் பூ’ கீதா, திலீப் சுப்பராயன், பிரதீப், ஜெர்மி ரோஸ்கி, ராக்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜி.ரவிக்கண்ணன், இசை – ஷபிர், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், கலை இயக்கம் – எஸ்.ஜெயச்சந்திரன், தயாரிப்பு நிறுவனம் – லியோ விஷன், சினிமாவாலா பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் – வி.எஸ்.ராஜ்குமார், கே.சதீஷ், எழுத்து, இயக்கம் – மாரிசன்.
வருடக் கடைசியில் பேய்ப் பட வரிசையில் தனது வருகையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தச் ‘சங்கு சக்கரம்’ திரைப்படம்.

ஒரு தெருவில் வசிக்கும் சில பணக்கார பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடக்கூட இடமில்லாமல் தவிக்கிறார்கள். பஞ்சு மிட்டாய் விற்க வரும் ஒரு பெரியவர் ‘பக்கத்தில் இருக்கும் பெரிய பங்களாவில் யாருமே இ்ல்லை’ என்றும், ‘அங்கே போய் விளையாடினால் யாரும் கேட்கவே மாட்டார்கள்’ என்றும் ஆசையைத் தூண்டுகிறார்.
அந்த பங்களாவை ‘பேய் பங்களா’ என்றே அனைவரும் அழைக்கிறார்கள். இந்த விஷயம் அந்தப் பிள்ளைகளுக்குத் தெரியாது. அந்த பங்களாவை வாங்கியிருக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர், அங்கேயிருக்கும் பேயை ஓட்டுவதற்காக மந்திரவாதியை வைத்து முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார்.. ஆனால் இன்னமும் முடியவில்லை.
அதே நேரம் அதே பகுதியில் வசிக்கும் ‘தமிழ்’ என்ற சின்னப் பையன் 500 கோடி சொத்துக்கு அதிபதி. பெற்றோர் இல்லாததால் இரண்டு நபர்களின் கார்டியனில் வாழ்ந்து வருகிறான். இந்தச் சின்ன வயதிலேயே நிறைய அறிவுப்பூர்வமான கேள்விகளையெல்லாம் கேட்கிறான்.
இவனை கொலை செய்துவிட்டு அந்த 500 கோடியை அபேஸ் செய்ய, அந்த இரண்டு கார்டியன்களும் திட்டம் தீட்டுகிறார்கள். இதற்காக இருவரும் ஜோடி சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில்தான் திப்பு சுல்தானின் வாலும், தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த முதல் பல்பும் அந்த பங்களாவில் இருப்பதாக ஒரு கார்டியன் உளறி வைக்க, இதனை சீரியஸாக எடுத்துக் கொண்ட தமிழ் அதைப் பார்ப்பதற்காகவே அந்த பங்களாவிற்குள் நுழைகிறான்.
அதே நேரம் தெருவில் விளையாடி வந்த 6 பிள்ளைகளும், தொந்தரவு இல்லாமல் விளையாடுவதற்காக அந்த பங்களாவிற்குள் நுழைகிறார்கள். இவர்கள் கூட்டணியில் சேர்க்காத ஏழை பையன் ஒருவனும் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் பின்னாலேயே பங்களாவுக்குள் வருகிறான்.
இந்தப் பையன்களை கடத்திச் செல்வதற்காக ஆகாயம் என்னும் பிரபல ரவுடியான திலீப் சுப்பராயனும், இவனுக்குத் தகவல் சொல்லி உதவிய பஞ்சு மிட்டாய் விற்ற பெரியவரும் அதே பங்களாவுக்குள் வருகிறார்கள்.
தமிழை கொலை செய்ய அந்த இரண்டு கார்டியன்களும் துப்பாக்கியுடன் பங்களாவிற்குள் வருகிறார்கள்.
இதே நேரம் அதே பங்களாவிற்கு தனது காதலியை ஏமாற்றி அழைத்து வருகிறான் ஒரு காதலன்.
இப்போது அதே பங்களாவில் ரொம்ப வருடங்களாக ஒரு தாய் பேயும், மகள் பேயும் குடித்தனம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் மகள் பேயை இந்தச் சிறார்கள் உசுப்பிவிட மகள் பேய் தன் வயதையொத்த அந்த சிறுவர், சிறுமியரின் விளையாட்டை ரசிப்பதற்காகவே அவர்கள் பின்னாலேயே அலைகிறது.
அதே நேரம் ஆகாயம் தமிழை கொலை செய்ய வந்த இரண்டு கார்டியன்களையும் தலையில் அடித்து வீழ்த்தி இருவரையும் கட்டிப் போட்டு வைக்கிறான்.
இந்த நேரத்தில் தாய் பேயையும் இவர்களே உசுப்பிவிட்டுவிட அது இவர்களை தங்களது வீட்டைவிட்டு வெளியேறும்படி விரட்டுகிறது. ஆனால் போவதற்கு வழி தெரியாமல் இவர்கள் அல்லல்படுகின்றனர்.
ஆகாயம், பெரியவரின் எதிர்ப்பையும் மீறி பிள்ளைகள் 8 பேரையும் பிடித்துக் கட்டிப் போட்டு வைக்கிறான்.
இந்த நேரத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஜப்பான் மற்றும் அமெரிக்க மாந்தரீகர்களை அழைத்துக் கொண்டு அங்கே வருகிறார். அவருடைய ஆஸ்தான தமிழகத்து மாந்தரீகரையும், தாய் பேய் அடித்து வீழ்த்திவிட அவர்கள் பங்களாவிற்கு வெளியில் நிற்கிறார்கள்.
இப்போது வெளிநாட்டு மாந்திரீகள் தாய் பேயையும், மகள் பேயையும் தங்களது சக்தியால் கட்டுப்படுத்தி ஒரு குடுவைக்குள் போட்டு அடைத்து வைக்கிறார்கள். அதே நேரம் ஆகாயம் பிள்ளைகளை கடத்திச் செல்ல நினைக்கிறான். தமிழை கொலை செய்துவிட்டு தப்பிக்க இரண்டு கார்டியன்களும் நினைக்கிறார்கள். பஞ்சு மிட்டாய் பெரியவர் எப்படியாவது பிள்ளைகளை காப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். பிள்ளைகளோ எப்படியாவது இந்த பேய் பங்களாவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதில் யார் நினைத்தது நடந்தேறியது என்பதுதான் இந்தச் ‘சங்கு சக்கரம்’ படத்தின் சுவையான திரைக்கதை.
பேய்ப் படங்களுக்கே உரித்தான முறையில்தான் படமாக்கல் செய்திருக்கிறார் இயக்குநர் மாரிசன். பேய்களுக்குக் கொடுக்கப்படும் பில்டப்பும், தாய், மகள் இடையேயான பாசப் போராட்டமும், பேய்கள் கடைசியாக குழந்தைகளைக் காப்பாற்ற துடிப்பதுமான செண்டிமெண்ட் காட்சிகளையும் சரியான திரைக்கதையில் அமைத்திருக்கிறார்.
குழந்தைகள் யாரும் குறை சொல்ல முடியாதபடிக்கு நடித்திருக்கிறார்கள். படம் முழுவதுமே ஓடிக் கொண்டேயிருப்பதால் தனித்த நடிப்பு என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் அந்த மகள் பேயாக நடித்தவரை மனதாரப் பாராட்டுகிறோம்.
தாயாக நடித்திருக்கும் ‘புன்னகைப் பூ’ கீதா மனிதர்களுக்கும், பேய்களுக்குமான வித்தியாசத்தை சொல்லிக் காட்டு்ம்போது தியேட்டரே அதிர்கிறது கை தட்டலில்.. உண்மைதான் பேய்களின் உலகத்தில் பொய், பொறாமை, களவு, திருட்டு எதுவுமே இல்லையே..!
இதேபோல் ‘தமிழ்’ கேட்கும் பல புத்திசாலித்தனமான கேள்விகள் நகைக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் வரக் கூடாது என்பதற்காகத்தான் யூனிபார்ம் என்றால் பள்ளிக்கு, பள்ளிக்கு யூனிபார்ம்கள் ஏன் வேறு, வேறாக இருக்கிறது என்கிறான் சிறுவன் தமிழ். சரியான கேள்விதானே..?
தமிழ் கடைசியாக “ரஜினி அங்கிள் எப்போ அரசியலுக்கு வருவார்..?” என்ற பேய்களிடம் கேட்க, அவைகள் தங்களுக்கே தெரியாது என்பதைபோல உதட்டை பிதுக்குவது உச்சபட்ச காமெடி.
குண்டான கார்டியன் கேரக்டரில் நடித்தவர் பயந்து கொண்டே நடிக்க இன்னொருவர் தமிழை கொலை செய்துவிட்டுத்தான் மறுவேலை என்பதை போல நடிப்பது சுவையான கேரக்டர் ஸ்கெட்ச். பஞ்சு மிட்டாய் விற்கும் பெரியவர் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மிரட்டி கொஞ்சம், கொஞ்சமாக டென்ஷனை கூட்டியிருக்கிறார்.
இதேபோல் தமிழ் மாந்திரீகர்களுக்கும், வெளிநாட்டு மாந்திரீகர்களுக்கும் இடையில் நடக்கும் போட்டியும் ரசனையானது. ஒலியெழுப்பும் கருவிகள் மாறி, மாறி போடும் சண்டை உக்கிரமாவதுவரையிலும் கொண்டு போயிருப்பது பார்க்கவும், கேட்கவும் சிறப்பு.
ஆகாயமாக நடித்திருக்கும் திலீப் சுப்பராயன் இனிமேல் சண்டை பயிற்சியாளர் வேலையை விட்டுவிட்டு நடிப்புத் தொழிலுக்கே வந்துவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அடிக்கடி தனது திறமையைப் பற்றி தானே சொல்லிக் கொள்ளும்விதமாக அமைக்கப்பட்டிருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சின்னக் குழந்தைகளுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
காதைக் கிழிக்காத பின்னணி இசையில் பயமுறுத்தும் கிராபிக்ஸ் காட்சிகளோடு பேய்களின் அட்டகாசத்தை படமாக்கியிருக்கும் விதத்தில் இந்தப் படக் குழுவினர் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
ஒளிப்பதிவாளர் ஜி.ரவிக்கண்ணனின் பணி மெச்சத் தகுந்தது. நிறைய கிராபிக்ஸ் பணிகளும், தொழில் நுட்பப் பணிகளும் செய்திருக்கும் படத்தில் மிக நுணுக்கமாக தவறுகளே கண்ணுக்குத் தெரியாத வகையில் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.
பேய்கள் பறந்து செல்லும் காட்சி, அரூபமாக பின் தொடர்ந்து வரும் காட்சி, சண்டை காட்சிகள் என்று அனைத்திலும் ஒளிப்பதிவாளரின் திறமை திரையில் தெரிகிறது. இதேபோல் கலை இயக்குநர் எஸ்.ஜெயச்சந்திரனின் பங்களிப்பும் படத்தில் பெரியது. அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
விஜய் வேலுக்குட்டி தனது படத் தொகுப்பினால் படத்தை தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். பல காட்சிகளின் கட் டூ கட் காட்சிகளாக வடிவமைத்திருப்பதால் கொஞ்சமும் பிசிறு தட்டாமலும், அடுத்தக் காட்சியை யூகிக்க முடியாதவண்ணமும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார் படத் தொகுப்பாளர்.
குழந்தைகளுக்காக குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பேய் படத்தில் ஒரு திருஷ்டி பொட்டாக அந்தக் காதலர்களின் வருகையை இணைத்திருக்கிறார்கள். அப்போது காதலர்கள் பேசும்பேச்சு குழந்தைகளுக்கானது இல்லை என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறோம். வசனங்களை மட்டும் மாற்றியமைத்திருக்கலாம்.
இதேபோல் பஞ்சு மிட்டாய் விற்கும் பெரியவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் கடைசியில் சொல்லும் டிவிஸ்ட் எதிர்பாராததுதான் என்றாலும் தேவையில்லாதது.. அப்படியே வி்ட்டிருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும்..!
பேய்ப் படங்களில் லாஜிக் பார்ப்பது பேய்களை நம்புவது போலத்தான் என்பதால் அதையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, குழந்தைகளோடு பார்த்து குதூகலிப்பதற்கு ஏற்ற திரைப்படமாக இந்த ‘சங்கு சக்கரம்’ வந்திருக்கிறது.
குழந்தைகளோடு தியேட்டருக்கு சென்று கொண்டாடுங்கள்..!

0 comments: