அருவி - சினிமா விமர்சனம்

17-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
அதிதி பாலன் என்னும் புதுமுகம் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் முகமது அலி பாய்க், அஞ்சலி வரதன் என்ற திருநங்கை, லட்சுமி கோபால்சாமி, மதன், கவிதா பாரதி, பிரதீப் ஆண்டனி, கார்த்திகேயன், ஜோஸப் மோகன்தாஸ், ஸ்வேதா சேகர், அபூர்வா நட்ராஜ், ஹேமா, பாலா, விஜயராமன், திருநாவுக்கரசு, பேபி பிரணிதி, பேபி தர்ஷிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஷெல்லி கலிஸ்ட், இசை – பிந்து மேனன், வேதாந்த பரத்வாஜ், பாடல்கள் – குட்டி ரேவதி, அருண் பிரபு புருஷோத்தமன், படத் தொகுப்பு – ரெய்மெண்ட் டெர்ரிக் க்ரஷ்டா, கலை இயக்கம் – சிட்டி பாபு, உடைகள் – வாசுகி பாஸ்கர், கிராபிக்ஸ் – ஜெமினி – ஹரிஹர சுதன், ஒலிப்பதிவு – சூரன் ஜீ., அழகிய கூத்தன், டிஸைன்ஸ் – கபிலன், சோமசேகர், ஒப்பனை – முருகன், இணை தயாரிப்பு – அரவிந்த்ராஜ் பாஸ்கரன், தயாரிப்பு நிறுவனம் – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் – எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எழுத்து, இயக்கம் – அருண் பிரபு புருஷோத்தமன்.

பெண்களை மையப்படுத்தி திரைப்படங்கள் வருவதே அரிது. அந்த அரிதிலும் அரிதாக இந்தாண்டை பெருமைப்படுத்த வந்திருக்கும் திரைப்படம் இது.
அருவி. உயரத்தில் இருந்து தாழ்வுப் பகுதிக்கு நீரை தருவதாலேயே அது ‘அருவி’ என்றாகிறது. இதன் நிலை எப்போதும் உயர்ந்ததுதான். தட்டுத் தடங்கல் இல்லாமல் எதற்காகவும் நிற்காமல் தன்னிடம் வந்த நீரை தயங்காமல் தனக்குக் கீழுள்ள பகுதிக்கு அனுப்பி இயற்கையை சம நிலைக்குக் கொண்டு வர பெரிதும் உதவும் ‘அருவி’யின் பெயரையே இந்த நாயகியின் பெயருக்கும் வைத்தது சாலப் பொருத்தம்.
ஒரு மலைப் பிரதேசத்தில் அருவியும், ஆறும் இருக்கும் இடத்தில் இயற்கைச் சூழலில் பிறந்து வளர்கிறாள் அருவி. அருமையான தகப்பனும், அழகான அம்மாவும், பாசமான தம்பியுமாக இருந்த இந்தக் குடும்பம் வாழ்வாதாரத்திற்காக அதுவரையிலும் நாங்கள் பார்க்காத நகரத்திற்கு குடி பெயர்கிறது.
நகரம் அருவிக்குப் பிடிக்கவில்லை. அதன் வேகம் அருவிக்கு பிடிபடவில்லை. பத்தாம் வகுப்பில் டியூஷன் படிக்கப் போகும்போதே, காதல் கடிதம் கொடுத்தவனை கடிந்து கொள்கிறாள். கல்லூரியில் படிக்கத் துவங்கும்போது அவளுடைய வாழ்க்கை முறையும் மாறுகிறது.
நுகர்வு கலாச்சாரத்தின் ஒருபடியாய் சமூக கலாச்சாரத்தை சீரழிக்கும் நவநாகரிக பழக்கத்தில் சிக்குகிறாள் அருவி. புகை, மது பழக்கமாகிறது. வீட்டுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறாள்.
ஆனால் தெரியாமல் அவளுக்குள் நுழைந்துவிட்ட ஒரு வியாதி அவளது வாழ்க்கையை அந்த நொடியில் புரட்டிப் போடுகிறது. அதுவரையிலும் அவளை தனது அம்மாவின் மறுவடிவமாகப் பார்க்கும் அப்பாவே அவளைச் சந்தேகப்படுகிறார். “வீட்ல இருக்காத.. வெளில போ…” என்று தான் நேசித்த அப்பா தன்னைச் சொன்ன பிறகு, அந்த வீட்டில் இருக்காமல் வெளியேறுகிறாள் அருவி.
தன்னுடைய நெருங்கிய தோழியின் வீட்டில் சில நாட்கள் தங்குகிறாள். அந்தத் தோழியின் தகப்பன் அவளை பாலியல் ரீதியாய் அணுக.. அங்கேயிருந்து விலகி ஒரு ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் செல்கிறாள். ஒரு திருநங்கை அங்கே அவளுக்குத் தோழியாகிறாள்.
அப்பா ஆஸ்பத்திரியில் இருப்பதை அறிந்து அவருடைய சிகிச்சைக்காக கடன் கேட்க போய் கடன் கொடுத்தவனும் அருவியை பதம் பார்க்கிறான். ஏன் எதற்கு என்றெல்லாம் யோசிப்பதற்குள்ளாக தனது வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளால் விரக்தியின் எல்லைக்கே போகும் அருவி, மனித இலக்கணத்தின்படி பக்தி மார்க்கத்தில் வீழ்கிறாள். ஆனால் அங்கேயும் அவளது உடல் கோரப்படுகிறது. மூன்றாவது முறையாகவும் தான் ஒரு பெண் என்பதாலேயே ஏமாற்றப்படுவதாக நினைத்து வேதனைப்படுகிறாள் அருவி.
ஒரு மிகப் பெரிய தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார் நடிகை லட்சுமி கோபால்சாமி. இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் கவிதா பாரதி. இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வந்து தன்னுடைய நிலைமையைச் சொல்லி, தனக்கு ஒரு நியாயம் வேண்டும் என்கிறாள் அருவி.
‘மூன்று முறை கற்பிழந்தவள்’ என்கிற ஒரேயொரு கான்செப்ட்டை மட்டுமே மையக் கருத்தாக எடுத்துக் கொண்ட அந்த டி.ஆர்.பி. வெறி பிடித்த டிவி நிலையம், மறுநாள் அதனை படமாக்குகிறது.
‘தன்னை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரையும் தன்னிடம் மன்னிப்பு கேட்க வைப்பார்கள்’ என்று எதிர்பார்த்து வந்த இடத்தில் நிகழ்ச்சிக் குழுவினர் தன்னை வைத்து நாடகமாடி ஏமாற்றுகிறார்கள் என்பதையறியும் அருவி வெகுண்டெழுந்து துப்பாக்கியைக் கையில் தூக்குகிறாள்.
புரளியை மட்டுமே நம்பி அதனை செய்தியாக்கும் இன்றைய அவசர யுக செய்தி ஊடகங்கள் ‘சென்னையில் தீவிரவாத தாக்குதல்’.. ‘டிவி அலுவலகத்தில் ஊழியர்கள் சிறை பிடிப்பு’ என்று இதனை திரித்து வெளியிட.. அடுத்த நொடியில் இந்தியா முழுமைக்குமான நேரடி ஒளிபரப்பு செய்தியாகிறாள் ‘அருவி’.
இதன் பின்பு நடப்பது என்ன என்பதுதான் இந்த ‘அருவி’ படத்தின் திரைக்கதை.
ஏற்கெனவே ‘பீச்சாங்கை’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன், இந்தப் படத்தில் முழுமையான நாயகியாக அவதாரமெடுத்திருக்கிறார்.
தனக்கு வந்த நோய்க்கு தான் காரணமில்லை என்பதை பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள் என்பதிலேயே இவருடைய போராட்டம் துவங்கிவிடுகிறது.
இதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக இவரது சிறகுகள் வெட்டப்பட்டுக் கொண்டே வரும்போது தாங்க முடியாமல்தான் தொலைக்காட்சியில் வெளியிட வருகிறார். அங்கேயும் தன்னுடைய இழப்பு நாடகமாக்கப்பட அதன் பின்புதான் வெகுண்டெழுகிறார் அதிதி.
“நான் எதுக்கு இங்க வந்தேன். இவங்களை என்கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கன்னு கேட்கத்தானே..?” என்று அப்பாவியாய் அதிதி கேட்கும்போது அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மிக தெளிவாகத் தெரிகிறது.
சமூகத்தில் ஒரு பெண் தனிமைப்படுத்தப்பட்டால் அவள் எந்த அளவிற்கு அலைக்கழிக்கப்படுவாள் என்பதைத்தான் இந்த அருவி தெரியப்படுத்துகிறாள். எந்தப் பக்கம் போனாலும் தனது உடல் மீதான ஆதிக்கத்தைச் செலுத்தத்தான் ஆண் சமூகம் நினைக்கிறது என்கிற விஷயமே அருவியின் இந்த சமூகம் மீதான கோபத்திற்குக் காரணமாகிறது.
ஒரு அருவியின் குணாதிசயத்திற்கேற்ப நவரசங்களையும் தனது முகத்தில் காட்டியிருக்கிறார் அதிதி. கோபம், பாசம், அன்பு, விரோதம், நட்பு, குரோதம் என்று அனைத்தையுமே கலந்து கட்டி காண்பித்திருக்கிறார் அதிதி.
போலீஸ் விசாரணையில் உண்மையைச் சொல்ல முயன்றும் தன்னைச் சந்தேகிக்கிறார்கள் என்பதையறியும் அந்தக் கணத்தில் “எழுந்து வெளில போடா…” என்று ஐ.பி.எஸ். அதிகாரியை முறைத்தபடியே சொல்லும் அந்த ஒரு நிமிடத்தில் சபாஷ் போட வைக்கிறது அதிதியின் நடிப்பு.
இதேபோல் சொல்வதெல்லாம் உண்மை செட்டிற்குள் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதையிறந்து துப்பாக்கியை காட்டி அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்து  அமைதியாய் செய்யும் அடுத்தடுத்த காட்சிகளில் அவர் ஒருவரே மோனோ ஆக்டிங் செய்திருக்கிறார்.
நிகழ்ச்சியின் துணை இயக்குநரான அருண் பிரபுவை பார்த்தவுடன் தன் மனதுக்குள் காதல் வந்துவிட்டது என்பதை அறிந்து கொண்டு அதையே துப்பாக்கியை காட்டி மிரட்டி “என்னை பயங்கரமா லவ் பிரபோஸ் பண்ணு…” என்று சொல்லும்போது தனது குரலிலேயே ஏக்க நடிப்பைக் காட்டியிருக்கிறார் அதிதி.
தொடர்ந்து “பீட்டர்” என்று அழைத்து அந்தப் பையனிடம் கதை கேட்பதும், லட்சுமி கோபால்சாமியை வைத்து அவரையே கேலிப் பொருளாக்கி கள்ளக் காதல் வகையறாவில் திணித்து காமெடியாக்குவதும்.. “பாப்பாத்தி” என்று டச்சப் கேர்ளை ஸ்டைலாக அழைத்து சொல்லிக் காட்டுவதிலும் இயக்குநரையும் மிஞ்சுகிறார் அதிதி.
இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது கொஞ்சம், கொஞ்சமாக தனது தேஜஸை இழந்து அசல் நோயாளி போல் தெரிவதும், கிளைமாக்ஸில் இறக்கும் தருவாயில் இருப்பவர் போல் முகத்தையும், உடல் மொழியை காட்டியும் ஒட்டு மொத்தமாய் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதினை இவரே தட்டிச் சென்றுள்ளார் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
‘சொல்வதெல்லாம் உண்மை’ செட்டில் நடப்பதெல்லாம் நகைச்சுவை தர்பார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நகைச்சுவையை தெளித்திருக்கிறார் இயக்குநர். ‘ஸ்டார்ட், ஆக்சன், ரோலிங் ஸார்’ என்று வெற்று வசனத்திலேயே நகைச்சுவையைக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
நிகழ்ச்சி நடத்துபவராக நடித்திருக்கும் லட்சுமி கோபால்சாமி தனது இத்தனையாண்டு கால நடிப்பு அனுபவத்தின் மூலம் மிக அழகாக சமாளித்து நடித்திருக்கிறார். கடைசியாக தன்னை வைத்து நடத்தப்படும் கள்ளக் காதல் கதையில் வாட்ச்மேனின் நிஜமான வசனத்தைக் கேட்டு அவரும் சேர்ந்து சிரிக்கும் அந்த ஒரு சிரிப்பிலேயே மனதைக் கொள்ளை கொள்கிறார் மேடம்..!
திருநங்கை கேரக்டர்களுக்கே சிகரம் வைத்தாற்போல் நடித்திருக்கும் அஞ்சலி வரதன் தனது தோழி நடிப்பை குறைவில்லாமல் செய்திருக்கிறார். அறிமுகமாகும் துவக்கத்தில் ஹாஸ்டலில் ஜட்டி காணாமல் போவதால் ஏற்படும் அரசியலைச் சொல்லும்போதுதான், படத்தில் நகைச்சுவையே துவங்குகிறது. சிறப்பான நடிப்பு..
நிகழ்ச்சியின் இயக்குநராக நடித்திருக்கும் இயக்குநர் கவிதா பாரதிக்கு ஒரு ‘ஜே’ போடலாம். மனிதர் இப்படியொரு கேரக்டருக்காக காத்திருந்தார்போலும்..! இயக்குநர் சொல்லிக் கொடுத்திருந்தாலும், நிஜமான இயக்குநர்களே பொறாமைப்படும் அளவுக்கு உண்மைத் தன்மையுடன் நடித்திருக்கிறார் இயக்குநர்.
பிரியாணி இல்லாமல் சாப்பாடு இறங்காது என்பது போல இருப்பதும், இத்தனை களேபரத்திலும் ‘காபி ஏன் கொண்டு வரல’ என்று பையனிடம் கோபித்துக் கொள்வதிலும், அதிதியும் மற்றவர்களும் டென்ஷனில் இருக்கும் சூழலில்கூட அதையே வியாபாரமாக்கித் துடிக்க ‘கேமிராவை பக்கத்தில் கொண்டு போ’ என்று கத்துவதும்.. டி.ஆர்.பி. ரேட்டிங்கு ஏற்றாற்போல எபிசோடுகளைத் தேர்வு செய்யும்விதமும் இன்றைய சின்னத்திரை இயக்குநர்களுக்கு உதாரணப் புருஷனாகியிருக்கிறார் கவிதா பாரதி.
கூடவே, ‘அடுத்த சண்டே பீச் ஹவுஸுக்கு வா’ என்று அழைத்துவிட்டு அதிதிக்கு எய்ட்ஸ் நோய் இருக்கும் செய்தியறிந்தவுடன் அவரை பார்த்து முறைக்கும் அந்தக் காட்சியில் எக்கச்சக்க வயித்தெரிச்சல் அகன்ற கைதட்டல்களை தியேட்டரில் அள்ளியிருக்கிறார் கவிதா பாரதி. வாழ்க..!
முகமது அலி பெய்க் என்னும் மராத்தி நடிகர் டெல்லியில் இருந்து வரும் தீவிரவாத தடுப்புப் பிரிவு உயரதிகாரியாக நடித்திருக்கிறார். அதிதியின் அப்பாவாக நடித்தவரின் சின்னச் சின்ன நடிப்புகள்கூட அழகாக இருக்கிறது. அதேபோல் அம்மாவும்..!
சின்ன வயது அதிதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் கொள்ளை அழகு. அத்தனையும் கவிதைத்தனமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனாலேயே துவக்கத்தில் இருந்தே திரைப்படம் ‘இது வேறொரு வித்தியாசமான படம்டா சாமி’ என்று பார்வையாளர்களுக்கு சொல்லாமலேயே உணர்த்துகிறது.
இவர்கள் மட்டுமல்ல.. பீட்டர் என்ற புரொடெக்சன் பாய், திருநங்கையை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை போல தனது அதிகாரத்தைக் காட்டும் வாட்ச்மேன், ‘ரோலிங் ஸார்’ என்று இழுத்துச் சொல்லும் உதவி இயக்குநர்.. பாப்பாத்தி என்ற டச்சப் கேர்ள்.. அதிதியை அபலையாக்கிய அந்த மூன்று ஆண்கள்.. என்று படத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எதுவும், எவரும் சோடை போகவில்லை. எந்தக் காட்சியும் வீணாகவில்லை.
பெண்.. துப்பாக்கி.. மிரட்டல்.. என்றவுடனேயே ‘தீவிரவாதியா, மாவோயிஸ்ட்டா.. முஸ்லீம் தீவிரவாதியா, அல்கொய்தாவா..’ என்றெல்லாம் சிந்திக்கத் துவங்கும் இந்திய அதிகார மனோபாவத்தை அப்படியே தோலுரித்திருக்கிறார் இயக்குநர்.
‘ஏன்..? என்ன விஷயம்..? யார்..? எப்படி…?’ என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் துப்பாக்கியை பயன்படுத்த நினைக்கும் அரசுகளின் எண்ணவோட்டத்தையும் பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஷெல்லி காலிஸ்ட்டின் அற்புத ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். படத்தின் துவக்கத்தில் அந்த மலையோரத்தில் இருக்கும் வீட்டில் நடக்கும் காட்சிகளில், ஒளிப்பதிவு ஒரு கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறது.
இதேபோல் படத்தின் இறுதியிலும் ‘அருவி’யின் இறுதிக் கட்டத்திலும் அதே ஒளிப்பதிவுதான் படத்தின் தரத்தை நிர்ணயத்திருக்கிறது.  அரங்கக் காட்சிகளிலும், துப்பாக்கியை வைத்து மிரட்டி விளையாடும் காட்சியிலும் ஒளிப்பதிவு அழகோ அழகு.
அருவியான அதிதா பாலன் ஏற்கெனவே அழகியாகத்தான் இருக்கிறார். இவருடைய ஒளிப்பதிவில் இன்னும் அழகாக ஜொலிக்கிறார். மொட்டை மாடியில் பரத நாட்டியம் ஆடும் காட்சியில் கேமிராவின் கோணத்தில் அவர் தேவதை போலவே தெரிகிறார். இயக்குநர் ‘500-க்கும் மேற்பட்ட பெண்களை வரவழைத்து டெஸ்ட் எடுத்துப் பார்த்த பின்பு கடைசியாகத்தான் அதிதி கிடைத்தார்’ என்றார். இத்தனை கடின உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் அதிதி பாலன் எனலாம்.
இதேபோல் படத் தொகுப்பாளர் ரெய்மெண்ட் டெர்ரிக் கிரெஸ்ட்டாவின் பணியும் சிறப்பானது. வெளியில் நடைபெறும் போலீஸ், பொதுமக்கள், மீடியாக்கள் மோதலுடன் செட்டுக்குள் நடக்கும் இவர்களது மோதலையும் கச்சிதமாக நறுக்கி பரபரப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.
‘உச்சம் தொடும்’ பாடல், ‘குக்காட்டி குனாட்டி’, ‘அசைந்தாடும் மயில்’, ‘சிமெண்ட் காடு’, ‘மேற்குக் கரையில்’ என்று ஐந்து பாடல்களும் படத்தில் மாண்டேஜ் காட்சிகளைக நகர்வதால் அதிகம் கேட்க முடியாமல் போய்விட்டது. ‘குக்காட்டி குனாட்டி’ மட்டுமே வித்தியாசமான பாடல் வரிகளாலும், காட்சியமைப்பினாலும் பெரிதும் கவர்கிறது. இசையமைப்பாளர்கள் பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜுக்கு நமது பாராட்டுக்கள்.
படத்தில் நடிப்புக்கு பிறகு அதிகமாக பேசப்படுபவை படத்தின் வசனங்கள்தான். அதிதி நியாயம் கேட்டு வந்த பின்பு டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக அங்கே பேசப்படும் வசனங்களும், நகர்த்தப்படும் காட்சிகளும்தான் மக்களை பெரிதும் கவர்ந்தவை.
அதிலும் அதிதி பேசும் மிக நீண்ட வசனமான இந்த வசனம் மிகப் பெரிய கை தட்டலை பெற்றுள்ளது.
“இந்த சமூகம் என்ன சொல்லுது.. நீ எங்க வேணா வேல செய்.. எவன வேணா சொரண்டி திண்ணு.. காக்கா புடி.. அடிமையா இரு.. ஊழல் பண்ணு.. லஞ்சம் வாங்கு.. குத்து.. அடி.. மிரட்டு.. கொலை பண்ணு.. ரேப் பண்ணு.. எத்தன பேரு வயித்துல வேண்ணாலும் மிதி.. எவ்ளோ பேர வேண்ணாலும் முட்டாளாக்கு.. பல்லாயிரக்கணக்கான.. லட்சக்கணக்கான..  கோடிக்கணக்கான.. பணத்த வேண்ணாலும் கொள்ள அடி.. யாரும் உன்ன தூக்கிப் போட்டு மிதிக்க மாட்டாங்க.. இங்க ஒரே ரோல்தான்.. பணம்.. பணம் சம்பாதிச்சா இந்த சமூகம் உன்ன மதிக்கும்.. இல்லேன்னா இந்த சமூகம் உன்ன மிதிக்கும்..  இப்படியொரு குப்ப வாழ்க்கை வாழ்றதுக்கு,  நாக்க புடுங்கிட்டு செத்துப் போகலாம்..!!”
இந்திய தேசத்தின் இன்றைய நிலைமையை அப்படியே அட்சரப் பிசகாமல் இந்த ஒரு நீண்ட வசனத்திலேயே பிட்டு பிட்டு வைத்துவிட்டார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.
இதேபோல் அருவி பேஸ்புக் லைவ் வீடியோவில் தன்னைப் பற்றியும், தான் உயிராய் நேசித்த தன் அப்பாவைப் பற்றியும் பேசும் அந்த உருக்கமான பேச்சுதான் படத்தின் தன்மையை பெரிதும் மாற்றியிருக்கிறது. அதுவரையிலும் நகைச்சுவையால் கேலியும், சிரிப்பும், சந்தோஷமுமாய் இருந்த திரையரங்கு ஆடிப் போய் அமைதியாய் அமர்ந்திருக்கிறது.
அத்தனை பெரிய சோகத்தை இயக்குநர் கடைசியில் கொடுத்திருக்க வேண்டாம். மனம் கனக்க வைக்கும் நிகழ்வு அது. அதனை படமாக்கியவிதம் நிச்சயமாக இறுகிய மனம் உடையவர்களைக்கூட கண் கலங்க வைத்திருக்கும். வெல்டன் இயக்குநரே..!
இத்தனை சிறப்புகள் இருந்தும் இத்திரைப்படத்தை இந்தாண்டின் சிறந்த படம் என்று சொல்ல முடியாமைக்கும், இதே இயக்குநரே காரணமாக இருந்திருக்கிறார் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
இது போன்ற மருத்துவ அறிவியல்பூர்வமான கதைக்கு மிகப் பொருத்தமான காரணங்கள் சொல்லப்பட வேண்டும். எய்ட்ஸ் நோய் இளநீர் அருந்தும்போது வெறும் ரத்தம் பாஸாவதிலேயே ஏற்படுகிறது என்பது நம்பும்படியில்லை. அதன் விளக்கவுரைகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. இயக்குநர் இதனை கொஞ்சம் கவனித்திருக்க வேண்டும்.
இதேபோல் எய்ட்ஸ் நோய் என்றவுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்ட அந்த மூன்று ஆண்களும் பயப்படுகிறார்கள். ஐயையோ என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவவில்லை என்பதும் வேறொரு வினோதம். ஒருவேளை இவர்கள் ஆணுறையை பயன்படுத்தியிருந்தால் இவர்கள் பயப்பட வேண்டிய கட்டாயமே இல்லையே இயக்குநரே..?!
சாதாரண ஒரு சின்ன துப்பாக்கியை வைத்து செட்டில் இருக்கும் 12 ஆண்களை ஒரு பெண் மிரட்டி வைக்க முடியுமா..? அதிலும் துப்பாக்கிக் காயம்பட்ட ஒரு இயக்குநர் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும்போது அவரை காப்பாற்ற முனையாமல் அனைவருமே அடுத்தக் கதையை நோக்கி நகர்வதெல்லாம் அதிதியை நாயகியாக்க இயக்குநர் எழுதிய திரைக்கதைக்கு பலியாகிவிட்டார்கள் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
துப்பாக்கியை வைத்து அதிதி நடத்தும் டிராமாவில் பீட்டரை வைத்து படத்தின் தலைப்பை சொல்லும்படி ஒரு டிராமாவை நடத்துவதும், இன்னொரு துணை இயக்குநரிடம் ஒரு கதை சொல்லு என்று சொல்லிக் கேட்பதும் அந்த நேரத்திய திரைக்கதைக்கு தேவையில்லாததாக இருக்கிறது. ஆனால், லட்சுமி கோபால்சாமியை கலாய்ப்பதும், அருண் பிரபுவிடம் தன்னை காதலிப்பது போல பேசச் சொல்லிக் கேட்பதும் கதைக்குத் தேவையாய் இருந்த்து என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஷூட்டிங் தளத்தில் இருந்து ஒரு சிறிய குண்டு சப்தம் மட்டுமே வெளியில் கேட்டிருக்கிறது. உள்ளே யார், என்ன செய்கிறார்கள்.. எப்படி இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் உடனேயே துப்பாக்கிக் குண்டு, தீவிரவாத தாக்குதல் என்றெல்லாம் அதீதமாக கற்பனை செய்து கொண்டு அரச அமைப்புகள் செயல்படுவதும், மீடியாக்கள் இதனை நேரலை செய்து கூவ துவங்குவதும் கொஞ்சமும் லாஜிக்கிற்கு ஒத்து வரவில்லை.
சிறு வயதில் சிகரெட் வாடை பிடிக்கவில்லை என்று தன் தந்தையிடம் சொல்லி அவரது சிகரெட் பழக்கத்தை நிறுத்தும் அதே பெண்தான் கல்லூரி வயதில் பப்புகளுக்கு போகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதுமாக மாறிப் போகிறார். இது அவரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்ட பின்பும், சிகரெட் பிடிப்பதையே வாடிக்கையாக வைத்திருப்பது போன்று சித்தரிப்பது அருவியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு செய்த துரோகமாகவே தோன்றுகிறது..! மேலும் இது தவறு என்று சொல்வது போன்று ஒரு வசனம்கூட இல்லாமைக்கு பெரிதும் வருந்துகிறோம்..!
கடைசியாக மருத்துவமனையில் இருந்து வெளியேறி மலைப் பகுதிக்கு தன்னந்தனியே வந்து வசிக்கும் அருவியின் செயலும் அவருடைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அது முடியாத விஷயமாகவே இருக்கிறது..!
பரவாயில்லை. இத்தனையையும் தாங்கிக் கொண்டு இத்திரைப்படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று மற்றவர்களுக்கு சொல்லும்படியான ஒரு உணர்வை இயக்குநர் உருவாக்கியிருப்பதே இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான்.
இந்த ‘அருவி’யை மறுக்காமல் பார்த்துவிடுங்கள் மக்களே..!

0 comments: