12-12-1950 - சினிமா விமர்சனம்

10-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜியோ ஸ்டார்  நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் செல்வா ‘கபாலி’ செல்வா என்று பெயர் மாற்றி நடித்து இயக்கியிருக்கிறார்.
மேலும், டெல்லி கணேஷ், தம்பி ராமையா, ஈ.ராம்தாஸ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன், அஸ்வினி, ரிஷா, சுவாமிநாதன், குமரவேல், பொன்னம்பலம், ஷபி, நந்தா சரவணன், சேரன் ராஜ், பாலாஜி மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கலை இயக்கம் – ஏ.ராஜேஷ், ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், ஒளிப்பதிவு – கே.விஷ்ணு ஸ்ரீ, இசை – ஆதித்யா, சூரியா, பாடல்கள் – முத்தமிழ், சண்டை பயிற்சி – தினேஷ் காசி, தயாரிப்பு – எம்.கோடீஸ்வர ராஜூ, எழுத்து, இயக்கம் – ‘கபாலி’ செல்வா.

இது சூப்பர் ஸ்டார் ரஜினி சம்பந்தப்பட்ட படம் என்பதை உணர்த்தும்வகையில் அவரது பிறந்த நாளையே படத்தின் தலைப்பாக வைத்தமைக்காக இயக்குநருக்கு நமது முதல் பாராட்டு..!
ஒரு தீவிரமான ரஜினியின் ரசிகரை ‘கபாலி’ படம் பார்க்க சிறையில் இருந்து எப்படி வரவழைத்து பார்க்க வைக்கிறார்கள் என்பதுதான் கதையின் கரு.
ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாந்த் நால்வரும் நெருங்கிய நண்பர்கள். தீவிரமான ரஜினி ரசிகர்கள். இவர்களுக்கு குங்பூ கற்றுக் கொடுத்த குருநாதர் ‘கபாலி’ செல்வா. திருமணமானவர். ஒரு குழந்தையும் உண்டு. இவரும் தீவிரமான ரஜினியின் வெறியர்.
ரஜினியின் புதிய படம் ரிலீஸான சமயத்தில் போஸ்டர் ஒட்டும்போது ஏற்படும் சண்டையில் அந்தப் பகுதி கவுன்சிலரை தெரியாத்தனமாக கொலை செய்துவிடுகிறார் ‘கபாலி’ செல்வா. இதனால் இவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. இப்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கிறார்.
‘கபாலி’ படம் வெளியாவதால் அந்த நேரத்தில் தங்களது குருநாதரை சிறையில் இருந்து பரோலில் வெளியில் எடுத்து, அவரைப் படம் பார்க்க வைக்க இந்த நான்கு சீடர்களும் திட்டமிடுகிறார்கள்.
பரோலுக்கு சரியான காரணத்தைத் தேடுகிறார்கள். செல்வாவின் தாத்தா சீரியஸாக இருப்பதாகச் சொல்லி கேட்க முடியாது என்று நினைத்து, தாத்தா இறந்துவிட்டால் பரோல் கிடைக்குமே என்றெண்ணி தாத்தாவை கொலை செய்ய முயல்கிறார்கள்.
ஆனால் இது உல்டாவாகி தாத்தா இயல்பாகவே மரணித்துவிடுகிறார். அதே நேரம் ‘கபாலி’ படம் ஒரு வாரத்திற்கு தள்ளிப் போக.. அதுவரையிலும் தாத்தாவை விட்டு வைத்தால், புதைத்துவிடுவார்கள் என்றெண்ணி உயிரற்ற உடலோடு தாத்தாவைக் கடத்துகிறார்கள்.
நண்பர்களில் ஒருவரான ஆதவன் வேலை செய்யும் ஹோட்டலின் ஹனிமூன் ஷூட்டில் தாத்தாவை பிரேதப் பெட்டியில் ஐஸ் வைத்து பாதுகாத்து வைக்கிறார்கள். அதே நேரம் திடீரென்று சிறைத்துறை டி.ஐ.ஜி.யான தம்பி ராமையா ரிஷாவை அழைத்துக் கொண்டு அங்கே வருகிறார்.
அவருக்கு இந்தக் களேபரங்கள் எல்லாம் தெரிந்தாலும், அவருக்கும் ரிஷாவுக்குமான தொடர்பை தம்பி ராமையாவின் மனைவியிடம் சொல்லிவிடுவோம் என்று நால்வரும் மிரட்ட.. தாத்தாவை மறைத்து வைக்க தம்பி ராமையாவும் ஒத்துழைக்கிறார்.
சீடர்கள் நால்வரும் திட்டமிட்டப்படி கபாலி செல்வாவை பரோலில் எடுக்கிறார்கள். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
சாதாரண ரசிகர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களது தலைவனின் படத்தைப் பார்ப்பது மட்டுமே தங்களது முழு நேர வேலையாக வைத்திருப்பார்கள் என்பதால் இந்த சீடர்களின் முட்டாள்தனமான செயல்களை நாமும் அந்தப் போக்கில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக தாத்தாவை கொலை செய்ய முயல்வதெல்லாம் ரொம்பவே டூ மச் இயக்குநரே..! ஏற்கெனவே போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் அடிதடி சண்டையாகி அது கொலையில் போய் முடிந்து கபாலி செல்வா சிறைக்குப் போக.. அவருடைய மனைவி அவரை டைவர்ஸ் செய்துவிட்டு குழந்தையுடன் பிரிந்து போன சோகமும் நடந்திருக்கும்போது மறுபடியும் ஒரு அது போன்ற முட்டாள்தனங்கள் தேவையா..?
அதற்கு பதிலாக தாத்தா சீரியஸாக இருக்கிறார் என்று சொல்லியே பரோல் கேட்டிருக்கலாமே..? செல்வாவின் தந்தையான டெல்லி கணேஷ் இதனை ஏற்கவில்லையென்றால், அப்போது தாத்தாவைக் கடத்திச் சென்று ஒளித்து வைப்பது போல கதையை அப்படி கொண்டு போயிருக்கலாம்.
ஆனாலும் படம் இந்த இரண்டு மணி நேரமும் வேகமாகத்தான் நகர்ந்திருக்கிறது. அசட்டையோ, கொட்டாவியோ வர விடாத அளவுக்கு சுவாரஸ்யமாகத்தான் நகர்த்தியிருக்கிறார்கள்.
இதற்கு பெரிதும் உதவியிருப்பது தம்பி ராமையா, ரிஷா, யோகி பாபு கூட்டணிதான். அதிலும் யோகி பாபு வந்த பின்புதான் படத்தில் அதகளமே ஆரம்பிக்கிறது. தம்பி ராமையாவின் மிக நீண்ட அனுபவம் வாய்ந்த நடிப்புக்கு ஏற்றவாறு யோகி பாபுவின் நடிப்பும் சேர்ந்திருக்க.. அந்த ஹனிமூன் காட்டேஜில் நடக்கும் காமெடியை பெரிதும் ரசிக்க முடிகிறது.
தம்பி ராமையாவின் மனைவியின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், வீட்டில் அவர் அதனை சமாளிக்கும்விதமும், அவருடைய மனைவியின் முகத்தையே காட்டாமல் கதையை நகர்த்தியிருக்கும்விதமும் ரசிப்பானது.
தம்பி ராமையாவை கமல்ஹாசனின் ரசிகராக காட்டாமல் ரஜினியின் ரசிகராகவே காட்டி ரஜினி பாடல்களையே அவருக்கும் ஒலிக்க வைத்திருந்தால்கூட படம் நன்றாகத்தான் இருந்திருக்கும். கமல் ரசிகராக மாற்றியதால் கொஞ்சம் சந்தேகமும் வருகிறது..! இதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம் இயக்குநரே.
நடிகர் செல்வா, ‘கபாலி’ செல்வாக மாறி இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். ‘கபாலி’யை போன்ற தோற்றத்தில் அவருடைய பெர்பார்மென்ஸ் ஒரு ரசிகனாக பார்க்க முடிந்திருக்கிறது. தன்னுடைய குழந்தையை பார்த்தவுடன் அவர் துடிக்கும் ஒரு சின்ன காட்சியில்தான் மிகைப்படுத்தலாக இருந்தது. மற்றபடி குற்றம், குறையில்லை.
இவருடைய நான்கு நண்பர்களும் டைமிங் காமெடியை கடைசிவரையிலும் அப்படியே தொடர்ந்து செய்திருக்கிறார்கள். நடித்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் தங்களது நீண்ட அனுபவ நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.
பொன்னம்பலத்தின் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்புடையதல்ல. ஆனால் திரைக்கதையில் சரியான இடத்தில் அவரை இழுத்துவிட்டிருப்பது பாராட்டுக்குரியது. ரிஷாவின் அலப்பறையான நடிப்புடன், ஆடவும் வைத்து பி அண்ட் சி ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார்கள்.
விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவு படம் நெடுகிலும் உருத்தாமல் பயணித்திருக்கிறது. சண்டை காட்சியில் குங்பூ ஸ்டைலை கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். செல்வாவின் முடிவு எதிர்பாராதது..!
ரஜினி ரசிகர்களாகவே இருந்தாலும் அவர்கள் தரப்பு நியாயத்தையும் கொஞ்சம், கொஞ்சம் சொல்லியிருக்கிறார் ‘கபாலி’ செல்வா. ‘வருடத்திற்கு ஒரு முறை தியேட்டர்களுக்கு வந்து படத்தை வரவேற்று கொண்டாடிவிட்டு மற்ற நாட்களில் தத்தமது குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்பதுதான் தலைவரின் உத்தரவு. ஒரு உண்மையான ரசிகன் அதைத்தான் பின்பற்றுவான்’ என்கிறார் கபாலி செல்வா.
இப்போதைய நிலையில் ‘அந்தக் கொண்டாட்டம்கூட தேவையில்லை’ என்கிற கூக்குரல்தான் நாலா பக்கமும் எழும்பியிருக்கிறது. அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் இதனை மனதில் கொண்டால் நல்லது.
ரஜினிக்கு இந்தாண்டு பிறந்த நாள் பரிசாக இத்திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ‘கபாலி’ செல்வா.
நிச்சயமாக இது ரஜினிக்கு விலை மதிப்பற்ற பரிசுதான்..!

0 comments: