பிரம்மா.காம் - சினிமா விமர்சனம்

20-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கணேஷ் ட்ரீம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் நகுல் நாயகனாகவும், ஆஷ்னா சாவேரி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர்-நடிகர் கே.பாக்யராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்தார்த் விபின், உபாஷனா,  நீத்து சந்திரா, கௌசல்யா, ஜெகன், சுமிதா ஹஸாரிக்கா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – P.S.விஜயகுமார், ஒளிப்பதிவு – தீபக் குமார் பதி, படத் தொகுப்பு – V.J.சபு ஜோசப், நிர்வாக தயாரிப்பு – V.A.K.செந்தில்குமார், பாடல்கள் – மதன் கார்க்கி, மோகன் ராஜன், கலை – ராஜா மோகன், நடனம் – ராதிகா, ஒலி வடிவமைப்பு -தாமஸ் குரியன், புகைப்படம் – மோதி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது.

இந்து மதப்படி படைக்கும் கடவுளான பிரம்மா படைக்கும்போதே அந்த மனிதனின் தலையெழுத்தையும் சேர்த்தே எழுதிதான் பிறக்க வைக்கிறார் என்பது மத நம்பிக்கை. ஒரு மனிதன் தனக்கு விதிக்கப்பட்டிருப்பதை மாற்ற விரும்பினால் என்ன நடக்கும் என்பதை இந்தப் படத்தில் சற்று நகைச்சுவை கலந்த திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை செய்கிறார் ஹீரோ நகுல். இவருடைய சித்தப்பா மகனான சித்தார்த் விபின், அதே சேனலுக்கு சி.இ.ஓ. கல்லூரி படிப்பில் தன்னை காப்பியடித்து பாஸ் செய்த சித்தார்த்துக்கு சி.இ.ஓ. போஸ்ட் கிடைத்ததில் இப்போதுவரையிலும் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கிறார் நகுல்.
இந்த நேரத்தில்தான் நகுலுக்கு பிறந்த நாள் வருகிறது. ஊரில் இருந்து அவருடைய அம்மா நகுலுக்கு போன் செய்து, கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்யும்படி வேண்டிக் கொள்ள.. அதன்படி அலுவலகத்திற்கு போகும் வழியில் அவசரமாக ஒரு கோவிலுக்குச் செல்கிறார் நகுல்.
காலை நேர தரிசனம் முடிந்து கோவில் பூட்டப்படும் நிலையில் பிரம்மாவின் ஆலயம் மட்டுமே திறந்திருப்பதாகச் சொல்கிறார் கோவிலில் ஐயராக காணப்படும் கே.பாக்யராஜ். “பரவாயில்லை.. யாரையோ கும்பிட்டால் ஓகேதான்…” என்று சொல்லி பிரம்மனுக்கே அர்ச்சனை செய்து ஆராதனையைக் கும்பிட்டுவிட்டு விபூதியை வாங்கி பூசிவிட்டு மனதுக்குள் வேண்டிக் கொண்டு அலுவலகம் திரும்புகிறார் நகுல்.
சேனலுக்காக நகுல் தயாரித்த விளம்பரப் படத்தில் நடித்த ஆஷ்னா சாவேரி நகுலை பார்க்க வருகிறார். அவர் நகுலிடம் மட்டுமே பேசுவதை பார்த்து சி.இ.ஓ. சித்தார்த்துக்கு ரொம்பவே கோபம். ஆஷ்னாவோ சித்தார்த்தை அவாய்ட் செய்யும்விதத்தில் பேச இன்னமும் கோபமாகிறார் சித்தார்த். இதனால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்குபோதே, நகுலின் அறைக்குள் வந்து அவன் சரியாக வேலை செய்யவில்லை என்று கத்திவிட்டுப் போகிறார் சித்தார்த்.
இதனை இன்செல்ட்டாக எடுத்துக் கொள்ளும் நகுல், சித்தார்த் மீது கோபம் கொள்கிறார். அவருடைய இந்தப் புலம்பலுக்கு பிறகு அவருடைய முகநூல் பக்கத்தில் திடீரென்று ‘பிரம்மா’ என்கிற பெயரில் ஒரு பிரண்ட் ரிக்வஸ்ட் வருகிறது. யாராக இருக்கும் என்றெல்லாம் யோசிக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறார் நகுல்.
இப்போது கதை தலைகீழாக மாறுகிறது. நகுல்தான் அந்த சேனலின் சி.இ.ஓ. என்கிறார்கள். சித்தார்த் நகுல் வேலை செய்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் வேலையில் இருக்கிறார் என்கிறார்கள். நகுலால் இதனை நம்பவே முடியவில்லை.
தன்னுடைய வீட்டிற்கு போன் செய்து பேசுகிறார். அவர்கள் அனைவருமே சி.இ.ஓ. சம்பளத்தில் வசதியாக வாழ்வதாகச் சொல்ல நகுல் குழம்பிப் போகிறார். நகுல் அந்த நேரத்தில் என்னென்ன செய்கிறாரோ, அதெல்லாம் உடனுக்குடன் புகைப்படமாகி நகுலின் முகநூல் பக்கத்தில் பதிவாகிறது..!
இந்த நேரத்தில் இன்னொரு சோதனையாக சேனலின் உரிமையாளரான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் தனது மகளை சி.இ.ஓ.வுக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்கெனவே சம்மதம் வாங்கியிருந்ததால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.
அதே நேரம் ராஜேந்திரனின் மகன் ஒரு பார்ட்டியில் ஆடுவதற்காக மும்பையில் இருந்து வந்த நீத்து சந்திராவை பார்த்து ஜொள்ளுவிட… நீத்துவிடம் கான்ட்ராக்ட் பார்மில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, அவரையும் மிரட்டி ராஜேந்திரனின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள்.
ஆஷ்னா சாவேரியை காதலித்து வரும் நகுலுக்கு இன்னொரு சோதனையும் ஏற்படுகிறது. இப்போது சி.இ.ஓ.வாக இருந்து வரும் நகுலைவிட்டுவிட்டு, தயாரிப்பு நிர்வாகியாக இருந்து வரும் சித்தார்த் விபினை, ஆஷ்னா சாவேரி காதலிக்கத் துவங்குகிறார்.
இப்போதுதான் நகுலுக்கு ஒன்று புரிகிறது. தன்னுடைய தலையெழுத்து மாறும்போது முந்தைய நிலையில் இருந்துபோது தனக்குக் கிடைத்த வசதி வாய்ப்புகள் அனைத்தும் அந்த நிலைக்குத்தானே ஒழிய.. தனிப்பட்ட ஆளுக்கு இல்லை என்பது தெரிகிறது.
ஆனாலும் ஆஷ்னாவின் மீதிருக்கும் தீராத காதல் காரணமாக ராஜேந்திரனின் மகளை மணக்க விரும்பாமல் ஆஷ்னா சாவேரியை திருமணம் செய்யவே நினைக்கிறார் நகுல். இதற்கு அவருடைய தலையெழுத்து மாறிய விவகாரம்தான் அடிப்படை காரணமாக இருக்க… அதற்காக மீண்டும் பிரம்ம தேவனை தேடி ஓடுகிறார்.
அவருடைய ஓட்டம் பலனளித்ததா..? பிரம்ம தேவன் மனமிரங்கி நகுலின் தலையெழுத்தை திரும்பவும் மாற்றிவிட்டாரா..? ஆஷ்னா சாவேரியை நகுல் திருமணம் செய்தாரா.. என்பதெல்லாம் இந்தப் படத்தின் சுமாரான சுவாரஸ்ய திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம்ப முடியாத கதைதான். ஆனால் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை உணர்த்துவது போல எடுத்திருக்கிறார் இயக்குநர். கோவிலில் ஐயராக இருக்கும் கே.பாக்யராஜ்தான் பிரம்ம தேவன் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
அவர் சொல்வதுபோல, “இனிமேல் நீ என்ன நினைக்கிறியோ அதெல்லாம் கண்டிப்பா நடக்கும்..” என்பது அவரவர் விருப்பப்படி அனைத்துமே நடைபெற்றால் உலகம் எப்படியிருக்கும் என்பதை கடைசியில் நமக்கு உணர்த்துவதை போல இருக்கிறது.
கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சிரிப்பு.. இன்னும் கொஞ்சம் உதடுகளை பிரிக்கும் அளவுக்கு சிரிப்பு என்று மூன்றுவித கலவைகளில்தான் படத்தில் நகைச்சுவை காட்சிகள் இருக்கின்றன.
நகுலுக்கு காமெடிசென்ஸ் இல்லை என்றாலும், இயக்குநரின் இயக்குதலில் நடிகர், நடிகையரின் நடிப்பிலும், திரைக்கதையிலும்தான் சிரிப்பை வரவழைத்திருக்கிறார்கள். அந்தக் கல்யாண காட்சி இதற்கு சிறந்த உதாரணம். இன்னமும் சிரிப்பை அதிகமாக வரவழைத்திருக்க வேண்டிய அந்தக் காட்சியில் இயக்குநர் இன்னமும் அதிகமாக உழைத்திருக்கலாம். மயிறுக்காகவெல்லாம் சிரிக்க வேண்டும் என்பது இனிமேல் முடியாது.
நகுல் தனக்கு என்ன வருமோ.. அது போலவே நடித்திருக்கிறார். சித்தார்த் மீதான கோபம், இயலாமை, பொறாமை.. ஆஷ்னா சாவேரி மீதான காதல்.. கடவுளர்கள் மீதான பக்தி, இடையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் அவருக்குள் ஏற்படும் குழப்பம்.. இந்தக் குழப்பத்தினால் விளையும் குடும்பக் குழப்படிகள்.. இது அத்தனையையும் தான் ஒருவனே சுமந்து கொண்டு கடைசிவரையிலும் ஓடியிருக்கிறார். குற்றம் சொல்லும் அளவுக்கு இல்லை. அந்தக் கால பாண்டியராஜனிடம் எதை நாம கண்டமோ, அதைத்தான் நகுல் போன்றவர்களிடத்தில் இப்போது நாம் காண முடியும்..!
சித்தார்த் விபினுக்கு இது பெயர் சொல்லும் படம். நிறைய காட்சிகளும், வசனத்தை பேச வைத்திருக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால் நடித்திருக்கிறார். ஆஷ்னா சாவேரிக்கு ஒரு ஹீரோயினுக்கு என்ன வாய்ப்பு கிடைக்குமோ அதுவேதான் இவருக்கும் கிடைத்திருக்கிறது.
மொட்டை ராஜேந்திரனும், அவரது குடும்பமும் சிரிப்பை வரவழைக்க படாதபாடு பட்டிருக்கிறார்கள். இதில் கொஞ்சமே சிரிப்பு வந்திருக்கிறது என்பதும் உண்மை. இயக்குநரின் இயக்கத் திறமை முழுமையாக வெளியாகவில்லை என்பதால் இவ்வளவுதான் சொல்ல முடியும்.
நீத்து சந்திராவை வீணடித்திருக்கிறார்கள். ஒரேயொரு குத்து பாடலுக்கு ஆடிவிட்டு 3 காட்சிகளில் மணமேடையில் அமர்ந்துவிட்டு எழுந்து போயிருக்கிறார். ஜெகன் நாயகன் நகுலின் கூடவே இருந்து சில இடங்களில் வசனத்தை எடுத்துக் கொடுத்தும், பல இடங்களில் காட்சிகள் நகர்வதற்கும் உதவியிருக்கிறார்.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்களை தியேட்டரில் மட்டுமே கேட்கலாம். பாடல் முடிந்தவுடனேயே மறந்துவிட்டது. சித்தார்த் நடிப்பா… இசையா.. என்று இரண்டில் ஒன்றை முடிவு செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிறார். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு பற்றி சொல்லவும் ஒன்றுமில்லை. குறையும் ஏதுமில்லை.
வாழ்க்கையில் எந்தவொரு உயர்விலும் ஒரு சிக்கல் இருக்கும். பல பிரச்சினைகள் கூடவே வரும். பிரச்சினைகள் இல்லாத உயர்வுகள் இல்லை என்பதைத்தான் இந்தப் படத்தில் நமக்கு உணர்த்தியிருக்கிறார் படைப்பு கடவுளான பிரம்மா.
ஆகவே, இப்போது நாம் இருக்கின்ற வாழ்க்கையையே உணர்ந்து வாழ்ந்தால், அதுவே போதும் என்பதுதான் இந்தப் படம் நமக்கு சொல்லும் நீதி.
ஏற்றுக் கொள்வோம்..!

0 comments: