இரவும் பகலும் வரும் - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்கை டாட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரித்திருக்கும் படம் ‘இரவும் பகலும் வரும்’. R.S.S.S. Pictures  நிறுவனத்தின் சார்பில் எஸ். தணிகைவேல் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் மற்றும் அனன்யா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். மேலும் வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு ஜெகன், சாமிநாதன் என பலரும் நடித்துள்ளனர். இசை – தீனா, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி. படத்தொகுப்பு – வி.டி.விஜயன்.  ஏ.வெங்கடேஷிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாலா ஸ்ரீராம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
சந்தர்ப்ப சூழலால் பகலில் மாணவன்.. இரவில் திருடனாக வாழும் ஒரு இளைஞன் திடீரென்று மனம் மாறிய நிலையில் அந்த திருட்டு வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கிறான். அது முடிந்ததா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ஹீரோ மகேஷ் கல்லூரி மாணவர். பகலில் கல்லூரி மாணவராகவும், இரவில் திருட்டுத் தொழிலில் தனியாளாக ஈடுபடும் திருடனாகவும் இருக்கிறார்.
இவரது அம்மா இறந்தவுடன் தந்தை இன்னொரு திருமணம் செய்து கொள்ள வந்த சித்தி தனது மகளுக்காக பணத்தைச் சேமித்து வைக்கும் குணமுள்ளவராக இருக்கிறார். தன்னைக் கவனிப்பதே இல்லையே என்கிற ஏக்கத்தில் இருக்கும் மகேஷுக்கு கல்லூரி தோழர்கள் மட்டும்தான் குடும்பத்தினராகவும் இருக்கிறார்கள்.
ச்சும்மா கடந்துபோகும் ஒரு நாள் காலைப் பொழுதில் ஹீரோயின் அன்ன்யாவை பார்த்தவுடன் பித்துப் பிடித்துப் போகிறார். அனன்யாவை காதலிக்க நினைத்து வழக்கமான ஹீரோக்கள் செய்யும் அனைத்தையும் இவரும் செய்கிறார்.
இந்த நேரத்தில் செய்யாத ஒரு தவறுக்காக மகேஷின் சித்தி அவனை வீட்டைவிட்டு வெளியே போகும்படி சொல்ல.. ரோஷமடையும் மகேஷ் அதுபோலவே வெளியேறுகிறான்.
இதே நேரம் அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஒரு பக்கா பிராடு. உலக மகா கிரிமினல். நகை பைத்தியம். நகை ஆசை கொண்டு அலையும் இவருடைய கையில் ஊரில் இருக்கும் அனைத்து செயின் திருடர்களும், வீடு புகுந்து திருடும் கொள்ளையர்களும் அடக்கம்..
கண் துடைப்புக்காக யாராவது சிலரை எப்போதாவது சரணடைய வைத்துவிட்டு கேஸை குளோஸ் செய்துவிடுவார். இவருக்குத் துணையாக மேஜிக் ஷோ நடத்தும் ஒரு வில்லனும் இருக்கிறார். இவர்களது கொள்ளைக்கு நாள், நட்சத்திரம் பார்த்துக் கொடுக்கவும் ஒரு ஐயரும் இந்தக் கூட்டத்தில் உண்டு.
அப்படியொரு நாள் மேஜிக் ஷோ நடத்த வாய்ப்பு வருகிறது வில்லனுக்கு. அவர் மேஜிக் ஷோவை நடத்திக் கொண்டிருக்க.. ஆள் இல்லாமல் பூட்டியிருக்கும் வீடுகளில் திருடர்கள் லபக்குகிறார்கள். இதே நேரம் ஒரு வீட்டில் மகேஷும் திருடிக் கொண்டிருக்க.. வில்லனின் ஆட்களும் அதே வீட்டில் திருட வருகிறார்கள். இரு தரப்பினரும் பார்த்துவிட.. மகேஷை துரத்துகிறார்கள். இந்தக் களேபரத்தில் வில்லனின் அடியாட்கள் பொதுமக்களின் கையில் சிக்கிவிட மூவரையும் பிடித்து அடித்து உதைத்து இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கிறார்கள்.
உண்மை தெரிந்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பதைபதைக்கிறார். “என் லிமிட்ல எனக்கே தெரியாம எவன்யா அந்த இன்னொரு திருடன்..? அவனை உயிரோட பிடிக்கணும்..” என்று கங்கணம் கட்டி மகேஷைத் தேடிப் பிடிக்கிறார். பிடிபடும் மகேஷ் இப்போது பிளேட்டை திருப்பிப் போட்டு அவர்களுடனேயே ஜோடி சேர்கிறார். கொள்ளையடிக்கும் படலம் இப்போது சட்டப்பூர்வமானதாகவே நடக்கிறது.
ஒரு கட்டத்தில் அனன்யாவின் வீட்டிலும் மகேஷ் திருடப் போக அனன்யா இதைப் பார்த்துவிடுகிறாள். ஆனால் மகேஷ் தப்பிவிடுகிறான். ஊரில் நடக்கும் தொடர் கொள்ளைகள் பற்றி போலீஸ் கமிஷனர் இன்ஸ்பெக்டரை அழைத்துக் கண்டிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக செய்தி பத்திரிகைகளில் வருகிறது. இப்போது திருட்டுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார் அனன்யா.
இந்த நேரத்தில் அனன்யாவின் சித்தியான யுவராணியின் செயினை  ஒருவன் அறுக்க.. அந்தச் சம்பவத்தில் கழுத்து நரம்பு அறுபட்டு யுவராணி மரணமடைகிறார். ஆனால் இந்தக் கொலை வழக்கை இன்ஸ்பெக்டர் தனது அதிகார பலத்தால் சாதாரண விபத்தாக மாற்றிவிட.. இந்த நேரத்தில் மகேஷும் மனம் மாறுகிறார். அந்தத் திருட்டுக் கும்பலிடமிருந்து தப்பிக்க நினைக்கிறார்.
இதன் முதல் கட்டமாக இன்றைக்கு எங்கெங்கே கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்கிற விஷயத்தை அனன்யா இருக்கும் திருட்டு விழிப்புணர்வு கூட்டத்திற்கு தகவல் கொடுத்துவிட.. பல திருடர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். இது இன்ஸ்பெக்டருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. தன்னிடம் இருப்பவர்களில் யாரோ ஒருவர்தான் இதனைச் செய்கிறார்கள் என்ற சந்தேகம் அவருக்கு வருகிறது.
அதே நேரம் அனன்யா மகேஷின் மீது காதல் கொண்டிருப்பது இன்ஸ்பெக்டருக்கு தெரிய வர.. சூழ்நிலை புரிந்து மகேஷை மடக்கத் திட்டம் போடுகிறார். இதன் பின் என்ன ஆனது என்பதைப் பார்க்க தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே..!
ஹீரோ மகேஷ் ‘அங்காடி தெரு’ படம் போலவே இதிலும் அப்பாவியான குணாதிசயத்திலேயே நடித்திருக்கிறார். அனைத்துவிதமான ஆக்சன்களுக்கும் ஒரே மாதிரியான முகபாவனையைக் காட்டினால் எப்படி..? காதலுக்கு ஓகே.. ஆனால் ஆக்சனுக்கும், ஒரு ஹீரோத்தனத்துக்கும் பொருத்தமாக வேண்டாமா..? இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட்டானால் அவருக்கும் நல்லது..
அனன்யா.. நடித்தால் டீஸண்ட்டான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன் என்று கங்கணம் கட்டி செலக்ட் செய்து நடிக்கும் நடிகை. அழுத்தமான நடிப்பை தனக்குக் கிடைத்த இடங்களிலெல்லாம் காட்டியிருக்கிறார். வெல்டன். இவருக்கான கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால் போகப் போக அவரை மென்மையான பேச்சாளி என்பது போல மாற்றிவிட்டது ஏனென்றுதான் தெரியவில்லை.
மகேஷுக்கு சித்தியாக நடித்தவரும், இன்ஸ்பெக்டராக நடித்த இயக்குநர் வெங்கடேஷும்தான் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்கள். அதிலும் வெங்கடேஷ் உடல் முழுக்க நகைகளை அணிந்து கொண்டு தனது நகை பைத்தியக் கதையைச் சொல்லிவிட்டு ஒரு ஆட்டம் ஆடுகிறார் பாருங்கள்.. கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும், தீனாவின் இசையும் குறிப்பிடும்படி இல்லை. ஆனால் கெட்டது போலவும் இல்லை. வழக்கமான அதே பார்மெட்டான பாடல்கள், சீன்கள்.
பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர்தான் அதிகம் பேர் நகைகளை வீட்டில் வைத்திருப்பார்கள். மேலும் நகைகள் கொள்ளை போனால் இவர்களால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய முடியாது. ஒரு கட்டத்தில் சலித்துப் போய்விட்டுவிடுவார்கள். இதனாலேயே இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் இந்த மிடில் கிளாஸ் பேமிலிகளையே பதம் பாருங்கள் என்று தனது டீமுக்கு அறிவுறுத்துகிறார்.
இதுவொன்றுதான் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ரியலிஸம். போலீஸை கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள். கொள்ளை நடந்த வீட்டில் 100 பவுன் தொலைந்திருந்தால்கூட “வெறும் 50 பவுன்னு எழுதிக் கொடுங்க..” என்று போலீஸ் ஸ்டேஷனில் மிரட்டி பணிய வைப்பார்கள். ஏனெனில் ஒருவேளை திருடன் பிடிபட்டால் அவன் மூலமாக கிடைக்கும் 100 பவுனில் 50-ஐ பறி கொடுத்தவர்களிடம் கொடுத்துவிட்டு மிச்சம் 50 பவுன்கள் ஸ்டேஷனில் இருப்பவர்களின் பாக்கெட்டுகளுக்கு சென்றுவிடும்.
இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனைத் தவிர்க்க ஒரே வழி பாதுகாப்பை நாமளே அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார் இயக்குநர்.
சொல்ல வந்த விஷயம் சரிதான் என்றாலும், போலீஸ் தொடர்பான விஷயங்களிலும், மற்ற திரைக்கதைகளிலும் பெரிய ஓட்டைகள் இருப்பினும் இந்த மெஸேஜூக்காக அவர்களையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது எனலாம்.

0 comments: