மகாபலிபுரம் - சினிமா விமர்சனம்

21-03-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வாழ்க்கைக்கு நெருக்கமான கதையை தேர்வு செய்து சிறிய நடிகர்களை வைத்து, தன்னால் முடிந்த அளவுக்கு ஒரு நேர்மையான படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

மகாபலிபுரத்தில் பலி கொல்லும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதைதான் இந்தப் படம். தனது சிறு வயதிலேயே கடல் அலையில் தன் பெற்றோர்களை இழந்த விநாயக் அந்த ஊரின் முக்கியப் புள்ளியான துரையால் எடுத்து வளர்க்கப்பட்டவர். இப்போதும் அதே துரை அதே பகுதியில் போதை கடத்தல் புள்ளியாக வாழ்ந்து வருகிறார். இவர் சொன்னால் எதையும் செய்து முடிக்கும் அளவுக்கு நன்றியும், விசுவாசவும் மிக்கவராக இருக்கிறார் விநாயக்.
இவரது நண்பர்களான கருணா, ரமேஷ், வெற்றி, கார்த்திக் நால்வரில்.. வெற்றியைத் தவிர மற்றவர்கள் டூரிஸ்ட் கைடு வேலை செய்கிறார்கள். வெற்றி மட்டுமே சாப்ட்வேர் கம்பெனியில் வேலை. இவர் அங்கனாவை காதலிக்கிறார். வெற்றி-அங்கனா காதலுக்கு வெற்றியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க நண்பர்களே ஒன்று சேர்ந்து கோவிலில் திருமணம் செய்து வைத்து இவர்களே வீடு எடுத்து தங்கவும் வைக்கிறார்கள்.
விநாயக்கின் கண்ணில் படுகிறார் ஊருக்குள் புதிதாக குடி வந்திருக்கும் இன்னொரு ஹீரோயின் விர்த்திகா. வழக்கம்போல பார்த்தவுடன் காதல் கொள்கிறார் விநாயக். பின்னாலேயே அலையோ அலை என்று அலைந்து கடைசியாக காதலுக்கு ஓகே வாங்குகிறார்.
நண்பர்கள் அனைவரும் அவ்வப்போது வெற்றியின் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வருவது வழக்கமாகிறது. வெளியில் சென்று குடிக்க வேண்டாம் என்று அங்கனா சொல்வதால், பாட்டிலை வாங்கி வந்து வெற்றியின் வீட்டிலேயே குடிக்க பழகுகிறார்கள். அங்கனா அவர்களிடத்தில் விகல்பமில்லாமல் பழகுகிறார்..
இந்த நேரத்தில் வேறொரு இடத்தில் குடிக்க வந்தவர்கள் ரொம்ப நாளாச்சே என்று பலான படம் பார்க்க விரும்புகிறார்கள். லேட்டஸ்ட்டாக வாங்கி வந்த படம் என்று சொல்லி ஒரு டிவிடியை திரையிட.. அதில் அங்கனா இருக்கிறாள். அதிர்ச்சியான வெற்றி தனது வீட்டிற்கு ஓட.. அங்கே அங்கனா தூக்கில் தொங்குகிறாள். அந்த அதிர்ச்சியில் வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறான் வெற்றி.
நண்பர்கள் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். யார் வீடியோ எடுத்த்து என்பது தெரியாமல் முழிக்கிறார்கள். இடையில் கவுன்சிலர் தேர்தல் வருவதால் அரசியலில் அதிகம் ஈடுபாடுடைய கருணா தனக்கு சீட் வேண்டும் என்று துரையிடம் கேட்கிறான். ஆவண செய்வதாக அவர் சொல்ல கருணா காத்திருக்கிறான்.
இந்த நேரத்தில் மகாபலிபுரத்திற்கு வந்திருக்கும் வெளிநாட்டவர் குழு ஒன்று ஹீரோயின் விர்த்திகாவை பார்த்தவுடன் அவளை அடைய திட்டம் தீட்டுகிறது. துரையிடம் விண்ணப்பம் செய்கிறது. கிடைக்கப் போகும் பெரும் பணத்தை நினைத்து துரையும் இதற்கு சம்மதிக்க.. கருணாவிடம் பேரம் பேசுகிறார்.
தனக்கு கவுன்சிலர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கருணாவும் மனசாட்சியில்லாமல் விர்த்திகாவை கடத்தி வந்து துரை அண்ட் கோ-விடம் ஒப்படைக்கிறார். அங்கே நடக்கும் சில கசமுசாக்களில் விர்த்திகா குற்றியிரும், குலையிருமாக ஆகிவிட.. அங்கே தற்செயலாக வந்து நிற்கிறார் விநாயக்.
வழக்கம்போல இதுவும் ஒரு மூட்டைதான் என்று சொல்லி அவரிடம் விர்த்திகாவை ஒப்படைத்து புதைத்துவிடும்படி சொல்கிறார் துரை. விநாயக் செய்தாரா..? காதலி தப்பித்தாரா..? கருணா கவுன்சிலரானாரா..? துரை என்ன ஆனார் என்பதெல்லாம் மிச்சம் மீதிக் கதை..!
நட்புகளோ, உறவுகளோ எல்லாரையும் ஒரு அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வீட்டின் ஹாலைத் தாண்டி நண்பர்களை அனுமதிப்பது தொல்லையில்தான் முடியும்.. இப்படியும் நடக்க வாய்ப்புண்டு என்கிற விழிப்புணர்வுக் கொள்கையோடுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்.
விநாயக் புதுமுக நடிகர். அழுத்தமாக சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில்தான் ரொமான்ஸ் வரவில்லையே தவிர, கோபமும், தாபமும், வீரமும் காணும் போதெல்லாம் சரியான அளவில் பொங்கியிருக்கிறார். வாய்ஸ் மாடுலேஷன் கச்சிதம்.. புதுமுகம் என்றே தெரியவில்லை.
கருணா வழக்கம்போல.. அமைதியின் திருவுருவமாக.. அன்பின் அடையாளமாக.. பண்பின் பதிவாக நடித்திருக்கிறார். இடையிடையே எடுத்துவிடும் கச்சிதமான டயலாக்குகள் படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கின்றன. துரையாக நடித்தவரின் வெகு இயல்பான நடிப்பும் படத்தை ரசிக்க வைத்தமைக்கு ஒரு காரணம்..
அங்கனா காட்சிக்கு அழகு.. சில காட்சிகளில் குறைவான நடிப்புடன் பாதியிலேயே விடை பெறுகிறார். விர்த்திகா பார்வைக்கு அழகு. ஆனால் இன்னும் கொஞ்சம் நடிக்க வேண்டும். கல்லறை காட்சிகளில்தான் நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கே-வின் இசையில் பாடல்களை ஒரு முறை கேட்கலாம். மற்றபடி வழக்கமான தமிழ்ச் சினிமாக்கள் போலவேதான் படமாக்கியிருக்கிறார்கள். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார் கே. சந்திரனின் ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்க ஒன்று. மகாபலிபுரத்தின் அழகை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். பல இடங்களில் இவருடைய கேமராவும் சுற்றுப்புறங்களும் துடைத்து வைக்கப்பட்ட சுவர் போல பளிச்சென்று தெரிகிறது.
படத்தின் கிளைமாக்ஸில் இருக்கும் டிவிஸ்ட்டுகள் நிச்சயமாக எதிர்பாராதது. சிறைச்சாலை சம்பந்தமான காட்சிகளில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் மன்னிக்கலாம்.. இயக்குனர் டான் சாண்டி திரைக்கதையில் பல திருப்பங்களை புகுத்தி திடுக்கிட வைத்திருக்கிறார்.  படத்தின் துவக்கத்திலேயே விநாயக் 4 கொலைகளை செய்தவர் என்று கூறி அதற்கான காரணங்களையும், காட்சிகளையும் பிளாஷ்பேக் யுக்தியில் சொல்லியிருக்கிறார்.
காமம் ஆளுக்கு ஆள் வேறுபட்டது. அது எப்போது வேண்டுமானாலும் வரும்.. வராமலும் போகும்.. அதன் தூண்டுதல் எப்போது வெளிப்படும் என்பதுதான் சொல்ல முடியாகது. இதை மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம்.  நண்பர்களுக்குள் ஒருவனே வில்லன் என்பதுதான் சற்று நெருடலாக இருக்கிறது..
நண்பர்களுக்குள் துரோகம் என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதையும், நன்றி, விசுவாசம் இவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு என்பதையும் ஒரு சேர இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர். அளவான நடிப்புடன், கனமான கதையுடன்.. சுவையான திரைக்கதையுடன் தன்னால் முடிந்த அளவுக்கான இயக்கத்துடன் இந்தப் படத்தை கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி.
இயக்குநருக்கு இது முதல் படம் என்பதால் குறைகளை குறைவாகச் சொல்லி நிறைகளை அதிகம் சொல்லி வாழ்த்துகிறோம்…!

0 comments: