என் வழி தனி வழி - சினிமா விமர்சனம்

10-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் ஷாஜி கைலாஷுக்கென்றே மலையாளத்தில் தனி மரியாதையும், மார்க்கெட்டும் உண்டு. கமர்ஷியல் டிராக்கில் இவருடன் மல்லுக்கட்டும் ஒரே இயக்குநர் ஜோஷிதான். அவரே கொஞ்சம் அசந்துபோகும் அளவுக்கு திரைக்கதையில் வேகத்தையும், இயக்கத்தில் சிறப்பையும் காட்டுபவர் இந்த ஷாஜி கைலாஷ்.
ஏற்கெனவே நமது நாயகன் ஆர்.கே. என்னும் ராதாகிருஷ்ணனை வைத்து ‘எல்லாம் அவன் செயல்’ என்ற படத்தைக் கொடுத்தவர். ஆர்.கே.வின் அடுத்தப் படத்தையும் இவர்தான் இயக்கப் போகிறார். இப்படி இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு என்றாலும், ஆர்.கே. என்னும் பொன் முட்டையிடும் வாத்தை வைத்து எப்படியெல்லாம் ஒரு படத்தை தன் பாணியில் தயாரிக்க முடியுமோ அதையெல்லாம் இதிலும் செய்திருக்கிறார் ஷாஜி.
நட்சத்திரப் பட்டாளத்திற்கு இந்தப் படத்தில் பஞ்சமேயில்லை.. நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக இதில் நடித்திருக்கிறார்கள் என்கிற பீலிங்கை தருகிறது.
ராதாரவி, விசு, ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், இளவரசு, சம்பத்,  சீதா, ரோஜா, தம்பி ராமையா, சிங்கமுத்து, பூனம் கவுர், ‘தெனாலிராமன்’ புகழ் மீனாக்ஷி தீட்சித் என்று பலவிதமான நடிகர்களையும் வைத்து இந்தத் தேரை இழுத்திருக்கிறார் இயக்குநர்.

ஆர்.கே. நேர்மை தவறாத அதிகாரி. மத்திய குற்றப் பிரிவு இலாகாவில் துப்பாக்கியை கையாளும் வேலைக்கே வழியில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இதில் இளவரசு, தலைவாசல் விஜய், மீனாட்சி தீட்சித் ஆகிய மூவரோடு இணைந்து கடமையாற்றுகிறார் ஆர்.கே.
ரவுடிகளை பிடித்து அடித்து, உதைத்து ஜெயிலில் போட்டு, விசாரணை நடத்தி தண்டனை வாங்கித் தருவதற்குள் சம்பந்தப்பட்ட போலீஸாரே ரிட்டையர்டாகி வீட்டுக்குப் போய்விடுவார்கள்.  இதெல்லாம் எதற்கு..? ஒரே குண்டு.. போய்த் தொலையட்டும் என்று என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளும் டெர்ரரிஸ்ட் போலீஸாக இருக்கிறார் ஆர்.கே.
அப்படியொரு முறை ஆர்.கே. என்கவுண்ட்டர் செய்ய ரோஜாவின் வீட்டுக்காரரான அரசியல்வாதி இறந்து தொலைக்கிறார். வெகுண்டெழும் ரோஜா தனது கணவரை போட்டுத் தள்ளிய போலீஸை தானும் போட்டுத் தள்ளுவேன் என்று கொதிப்போடு அரசியலில் குதிக்கிறார்.
இதற்கிடையில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட.. வழக்கம்போல அதிகாரிகள் இந்த மூலைக்கும், அந்த மூலைக்குமாக தூக்கியடிக்கப்படுகிறார்கள். சிட்டி போலீஸின் புதிய கமிஷனராக ராதாரவி பொறுப்புக்கு வருகிறார். “என்கவுண்ட்டரெல்லாம் வேண்டாம்.. அரசியல்வாதிகளை அடஜ்ஸ்ட் பண்ணிட்டு போங்க..” என்று அட்வைஸ் செய்கிறார்.
குடித்துவிட்டு வந்த ஒரு ரவுடி அதை போலீஸ் மூஞ்சிலேயே துப்பிவிட்டுப் போக.. கோபப்படும் ஆர்.கே. கமிஷனரின் உத்தரவையும் மீறி அவனை போட்டுத் தள்ள.. ராதாரவின் கோபத்திற்கு ஆளாகிறார் ஆர்.கே.
இந்த நேரத்தில் ஊரில் அவரது அம்மா சீதாவைப் பார்க்கச் சென்ற இடத்தில் திடீரென்று ஒருவன் சீதாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய.. ஆர்.கே. கொதித்தெழுந்து விசாரிக்கிறார். இது அரசியல் சூழ்ச்சி.. பழிக்குப் பழி வாங்க செய்த வேலையென்பதையறிந்து சம்பந்தப்பட்ட எம்.பி.யை நேரில் சந்தித்து “அழிச்சிருவேன்..” என்று மிரட்டிவிட்டு வருகிறார்.
மறுநாளே அந்த எம்.பி. கொலை செய்யப்பட.. பழி மிக எளிதாக ஆர்.கே.வின் மீது விழுகிறது. பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் ஆர்.கே.. ஆனால் புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் அஸைன்மெண்ட்டே ஆர்.கே.வை போட்டுத் தள்ளுவதுதான் என்றிருக்க.. தலைமறைவாகிறார்.
ஆனாலும் தனது அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்க ஆர்.கே. துடிக்க.. இன்னொரு பக்கம் மத்திய அமைச்சரான ரோஜா தனது கணவருக்காகவும், ஆஷிஷ் வித்யார்த்தி அரசியல் மற்றும் அதிகார பலத்திற்காக ஆர்.கே.வை கொலை செய்யவும் துடிக்க.. இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.
பார்ப்பதற்கு போலீஸ் அதிகாரி போலவே ஆர்.கே. இருப்பதால் போலீஸ் வேடம் கச்சிதமாகத்தான் இருக்கிறது. ஆர்.கே. வசனம்பேசும்போது மட்டும் அவரது நடிப்பில் ஆவேசம் தெரிகிறது.. மற்றபடி காவல்துறை உடைக்கு ஏற்றாற்போல் தனது கம்பீரத்தை நடையிலும், ஆக்சனிலும் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் ரொமான்ஸ்தான் அவருக்கு இன்னமும் பக்கத்தில் வராமல் இழுத்தடிக்கிறது. இதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அடுத்தடுத்த படங்களில் நல்லதுதான்..!
ஹீரோயின்களில் ஆர்.கே.வின் முறைப்பெண்ணாக வருபவர் பூனம் கவுர். ஜோர்டானில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிக்கு கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மீனாட்சி தீட்சித். கவர்ச்சிக்கும், பாந்தத்துக்கும் இடைப்பட்ட  தூரத்தில் நடித்திருக்கிறார்.
படத்தின் கதை பெரும்பாலும் ஆர்.கே.வை சுற்றியே நகர்ந்திருப்பதால், மற்ற கதாபாத்திரங்களுக்கு மிகப் பெரிய ஸ்கோர் செய்யும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காட்சிகளும் மிக வேக, வேகமாக நகர்வதால் திரைக்கதையோடு ஒன்ற முடியவில்லை.
வில்லன்களில் அசத்தியிருப்பது ரோஜாதான். என்னவொரு டெர்ரர் நடிப்பு..? ராதாரவிக்கு அடுத்த இடம்.. எப்போதும்போல அலட்சியமாக நினைத்து பேசுவதும், திட்டம் போடுவதும்.. சகுனி வேலை பார்ப்பதுமாக இவரையும் பிடிக்கிறது.. ஆஷிஷ் வித்யார்த்தியின் கொலை வெறி கடைசியில் அவருக்கே ஆப்பு வைப்பதாக அமைவது திரைக்கதையில் ஒரு டிவிஸ்ட். சீதாவை ஆர்.கே.வின் அம்மாவாக பார்ப்பது மட்டும்தான் படத்தில் தெரிந்த ஒரு நெருடல்.. சீதாவுக்கு அவ்ளோ வயசா ஆயிருச்சு..?
தம்பி ராமையா, சிங்கமுத்து இருவரின் எடுத்து ஒட்டப்பட்ட காமெடி காட்சிகள் ரசிக்க முடியவில்லை. இதைவிட எத்தனையோவற்றை பார்த்தாகிவிட்டது.. விவேக்கும், பரோட்டா சூரியும் நடித்திருக்க வேண்டியது. ஏதோ ஒரு காரணத்தினால் நடிக்க முடியாமல் போக.. கடைசி நிமிடத்தில் இவர்களை வைத்து எடுத்திருக்கிறார்கள்.  
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். திரைக்கதைக்கு பொருத்தமான பின்னணி இசையை மிரட்டலாக கொடுத்திருக்கிறார். ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவில் காட்சிகளில் குறைவில்லை.
நீதிமன்றத்தில் ஆர்.கே. பேசும் பக்கம், பக்கமான வசனங்கள் இன்றைய காலக்கட்டத்தில் போலீஸ் துறை சந்திக்கும் பிரச்சினைகள்தான். ஆனால் இதற்காக என்கவுண்ட்டர் என்னும் கொலை கலாச்சாரத்தை நியாயப்படுத்துவதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.  இருந்தாலும் எடுத்துக் கொண்ட விஷயத்தை இத்தனை ஆணித்தரமான வாதங்களாக வசனங்களை எழுதியிருக்கும் வசனகர்த்தா பிரபாகருக்கு பாராட்டுக்கள்.
அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் மட்டுமே இந்த நாட்டில் மற்றவைகளும் சரியாக இருக்கும். அரசியலை திருத்தாமல் எந்த நிர்வாகத் துறையையும் திருத்தம் செய்யவே முடியாது.
போலீஸ் கதையெல்லாம் இயக்குநர் ஷாஜி கைலாஷுக்கு அல்வா சாப்பிட்டது போல.. மலையாளத்தில் இதைவிட பெரிய போலீஸ் கதையையெல்லாம் கையாண்டிருக்கிறார். அதனால்தான் சென்சார் போர்டு கை வைக்காத அளவுக்கு வசனங்களை எழுதி தப்பித்திருக்கிறார்.
ஒரு முறை பார்க்கலாம் என்பதற்கு உத்தரவாதம் இந்தப் படம்..!

0 comments: