ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

01-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தானே கதை எழுதி, தானே திரைக்கதை எழுதி, தானே வசனம் எழுதும் படங்களை மட்டுமே தான் இயக்குவேன் என்பதை மட்டும் செய்யாமல் இது போன்ற சிறந்த அயல்மொழி கதைகளை நம் மொழிக்கு படமாக்குவது இயக்குநர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்.. அந்த வகையில் இந்த 'ஜன்னல் ஓரம்' என்ற நல்லதொரு படம் கிடைத்ததால் நம் தமிழ்ச் சினிமாவுக்கும் தற்போது பெருமைதான்..!  பாராட்டுக்கள் இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு..!


2012-ல் மலையாளத்தில் வெளிவந்து டாப் டென் படங்களில் முதலிடத்தைப் பிடித்த 'ஆர்டினரி' படத்தின் தமிழ்ப் பதிப்புதான் இந்த 'ஜன்னல் ஓரம்'..!  ஒரிஜினலில் குஞ்சக்கோ போபன் நடித்த கேரக்டரில் விமல்.. பிஜூ மேன்ன் கேரக்டரில் பார்த்திபன்.. ஆனி அகஸ்டின் கேரக்டரில் பூர்ணா.. ஷ்ரத்தா சிவதாஸ் கேரக்டரில்  மணிஷா யாதவ்..! 

இந்தப் படத்தில் நடித்திருக்கும் விமல், பார்த்திபன், விதார்த் மூவரையும் பாராட்டியே தீரவேண்டும்..! ஏனெனில் மூவருமே தனித்தனி ஹீரோக்களாக தற்போது நடித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் இது போன்று ஒன்றிணைந்து நடிக்க வருவதென்பது தமிழ்ச் சினிமாவின் ஆரோக்கியமான போக்கிற்கு வழி செய்வது போலாகும்..!  

பழனி டூ பண்ணைக்காடு பேருந்து. இதுதான் படத்தின் களம்..! இந்த மார்க்கத்தில் பயணிக்கும் அரசுப் பேருந்தின் டிரைவர் பார்த்திபன். நடத்துனர் விமல். இரவில் பண்ணைக்காடு வந்து சேரும் பேருந்து, மறுநாள் காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பழனிக்கு வந்து சேரும்.. இரவில் டிரைவரும், நடத்துனரும் அங்கேயே தங்கியிருந்து மறுநாள் காலை பேருந்தை இயக்கி வருவார்கள்.. இதற்காக அங்கேயே ஒரு வீட்டை கெஸ்ட் ஹவுஸாக ஆக்கியிருக்கிறார்கள்..!

ஒரே பேருந்து.. ஒரே ஓட்டுநர், நடத்துனர்.. தினமும் வேலைக்குச் சென்று திரும்பும் அவ்வூர் மக்கள்.. என்று அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை முதல் ஷாட்டிலேயே அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர்..! தேவையற்ற பில்டப்புகள் ஏதுமில்லாமல் சாதாரணமாகவே துவங்குகிறது படம்..!

டிரைவர் பார்த்திபன் சரக்கடித்துவிட்டுதான் பேருந்தை ஓட்டுவார்.. கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி.. வண்டியை விட்டு இறங்கியவுடன் கட்டிங் சாப்பிட்டே தீருவார்.. டீக்கடைக்காரரின் பெண்ணை டைம்பாஸுக்காக லவ்விக் கொண்டிருக்கிறார்.. தனது சர்வீஸில் முதல் டூட்டியாக இந்த ரூட்டில் பார்த்திபனுடன் சேரும் விமலுக்கு ஏர்செல்லின் விற்பனை பிரதிநிதி மணிஷா யாதவின் மீது காதல்.. ஊர்ப் பெரியவர் ராஜேஷின் வீட்டில் தங்கியிருக்கும் பூர்ணாவுக்கும், ராஜேஷின் மகனுக்கும் காதல்.. திருமணம் நடக்கப் போகிறது..! விதார்த் ராஜேஷின் வீட்டில்தான் வசிக்கிறார்.. ஊரில் அனைவரின் வேலைகளையும் தட்டாமல் செய்யும் ஒரு ஆள்.. காலையில் மலைவிட்டு இறங்கும்போது நெற்றியில் திருநீறு பட்டையோடு பக்திப் பழமாக திகழும், கிருஷ்ணமூர்த்தி, கடைசியாக மலையேறும்போது நிஜமாகவே ‘மலை’யேறியே வருகிறார்.. இவருடைய தண்ணி அலம்பல் சுவாரசியமானது..!

ஒரு நாள் தண்ணியடித்து மட்டையான நிலையில் இருக்கும் பார்த்திபனுக்கு, பதிலாக பஸ்ஸை ஓட்டும் விமல், கல்யாணத்திற்காக ஊர் திரும்பும் ராஜேஷின் மகன் மீது மோதி விடுகிறார்.. அந்த நேரத்தில் எதிரில் வரும் வேன் டிரைவரிடம் ராஜேஷ் மகனை ஒப்படைத்துவிட்டு பார்த்திபனும், விமலும் தப்பிக்கிறார்கள். ராஜேஷ் மகனின் பை மட்டும் இவர்கள் வசம் வருகிறது..! திருமணத்திற்கு வந்துவிடுவான் என்று பெற்றவர்கள் காத்திருக்க.. பக்கத்தில் இருக்கும் மலையில் பிணம் கிடந்ததாக போலீஸ் வந்து சொல்கிறது..! ஏதோ ஒருவகையில் மரணம் என்று அனைவருமே சொல்லிக் கொண்டிருக்க.. விமல் குற்றவுணர்ச்சியில் தத்தளிக்க.. தன்னுடைய தங்கையின் திருமணம் விரைவில் நடக்கவிருப்பதால் போலீஸ் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள மறுத்து பார்த்திபன் தயங்கி நிற்க..! ஒரு நாள் மணிஷா யாதவால், ராஜேஷ் மகனின் பையில் இருக்கும் காதல் கடிதங்கள் அந்த ஊருக்கே அம்பலமாகிறது..! 

சர்ச்சைகள் விமல், பார்த்திபனை சுற்றிச் சுற்றி வர.. விமல் ஜெயிலுக்குப் போவதுவரையிலும் நடந்துவிடுகிறது அதகளம்.. அந்த இரவில் ராஜேஷ் மகனைத் தூக்கிச் சென்ற வேன் டிரைவரை பிடித்தால்தான் உண்மை தெரியும் என்பதால் பார்த்திபன், விமல் இருவரும் டிரைவரைத் தேடிப் பிடிக்க அதற்கடுத்து நடப்பவைகள்தான் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்..! 

சின்ன கதை.. படம் நெடுகிலும் கேரக்டர்கள் மூலமாகவே சட்டு சட்டென கதை மாறும்விதம்.. அழகான லொகேஷன்கள்.. இனிப்பான பாடல்கள்.. மிக நகைச்சுவையான வசனங்கள்.. என்று படம் மிக ஈர்ப்பாகவே இருக்கிறது..! 

வழக்கம்போல பார்த்திபன்தான் தனது டைமிங்சென்ஸ் வசனத்தில் காட்சிகளை ரசிக்க வைக்கிறார்..! அவரும் சிங்கம்புலியும் பேசுகின்ற வசனங்களும், கட்டிங் போடுவது தொடர்பானவைகளும் அசத்தல்.. விமல்கூட அழகாக டயலாக்குகளை பேசியிருக்கிறாராப்பா..! ஆச்சரியம்..! அதிலும் கொஞ்சம் கூடுதலாக நடிக்கவும் செய்திருக்கிறார்.. "லெட்டரை கொடு" என்று மணிஷா யாதவிடம் விமல் கோபப்படும் காட்சிகளில் இருக்கும் விமலை, வேறெந்த படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.. எல்லாம் இயக்கத்தைப் பொறுத்ததுதான்..! 

அண்ணன் கரு.பழனியப்பனின் படம் என்றாலே பொதுவாக பொது அறிவு வசனங்கள் நிறையவே இருக்கும்.. ஆனால் இதில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே பார்த்திபன் மூலமாக பேச வைத்திருக்கிறார்.. மற்றபடி வசனங்கள்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்..! 

விதார்த், பூர்ணா, மணிஷா யாதவ்.. அவரவர் கேரக்டர்களை அளவோடு செய்திருக்கிறார்கள்.. விதார்த்தின் கிளைமாக்ஸ் அவதாரம் எதிர்பார்க்காதது. ஆனால் இந்த கேரக்டர் அவரது நடிப்பு கேரியரிலும் ஒரு வித்தியாசமானதும், முக்கியமானதுமாகும்..! ஆனாலும் மணிஷா யாதவிற்குப் பதிலாக கிளைமாக்ஸில் பார்த்திபனுடன் கடலை போடும் மோனிகாவையே நடிக்க வைத்திருக்கலாம்..! உல்டா பண்ணிட்டாரு டைரக்டரு..! 

வித்யாசாகரின் இசையில் 'என்னடி என்னடி' பாடலும், 'உன்னைப் பார்க்காம' பாடலும் முணுமுணுக்க வைக்கின்றன..! நீண்ட நாட்கள் கழித்து நல்லதொரு மெலடி பாடல்கள் தமிழ்ப் படத்தில்..!  

டெப்போவில் இருந்து மெக்கானிக் சந்தானபாரதி வந்து ரிப்பேரை தொடங்கும்போதே வெளிப்படும் காமெடியையும் தாண்டி ஏதோவொன்று அப்போதே நடக்கப் போவதை உணர்த்தும்விதமாக காட்சியமைப்பும், பின்னணி இசையும் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு வருவதை படம் பார்ப்பவர்கள் நிச்சயம் உணரலாம்..! வெல்டன் வித்யாசாகர் ஸார்..!

தமிழ் வணிகச் சினிமா நோக்கத்தில் சில காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பதை பார்த்து கொஞ்சம் சங்கடப்பட வேண்டியிருக்கிறது..! மேலும், பார்த்திபன்-டீக்கடைக்காரப் பெண் காதல் சாதாரணமாக இருப்பதும்.. விதார்த்தின் முடிவுக்குப் பிறகு ஊர்க்காரர்கள் சட்டென சகஜ நிலைமைக்கு திரும்புவதும்..  ஜீப் சர்வீஸை புறக்கணித்துவிட்டு மக்கள் பேருந்தில் பயணம் செய்வது தொடர்பான சர்ச்சையில் உடனுக்குடன் காட்சிகள் மாறி, பார்வையாளனின் மனநிலையைச் சட்டென மாற்றுவதும்.. பார்த்திபனின் அழுத்தமில்லாத சில நடிப்பு காட்சிகளும், எப்போதும் சீரியஸ் படங்கள் என்றாலே எதிர்பார்க்கும் அழுவாச்சி காவிய நடிப்புகள் இதில் இல்லாததும்.. படத்தின் இறுதியில் ஏதோவொன்று மிஸ்ஸிங் என்பது போலவே சொல்கிறது..!

அப்படியிருந்தும் படத்தை நிச்சயம் ஒரு முறையாவது பார்க்கலாம் என்று சொல்வதற்கு ஒரேயொரு காரணம்தான்.. அது பழனி டூ பண்ணைக்காடு என்கிற கதைக்களம்..! ஒரு புதிய அனுபவத்தையும், ஒரு சிறுகதையையும் வாசித்த திருப்தியை இந்தப் படம் எனக்கு அளித்திருக்கிறது..!

ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்..! 

22 comments:

Riyas said...

மலயாளத்தில் பார்த்திருக்கிறேன்.. எனக்கு மிகப்பிடித்திருந்தது..

ஒரு சிலர் நல்லாயில்லண்டு சொல்றாங்க பொதுவாக மலயாளத்தில் வெற்றிபெற்ற படங்கள் தமிழில் ரீமேக்காகி வெற்றி பெறுவது குறைவு. தமிழனுக்கு எக்ஸ்டராவா என்னமோ தேவைப்படுகிறது.

வவ்வால் said...

அண்ணாச்சி,

விமர்சனமெல்லாம் ஓ.கே, ஆனால் நீங்க வழக்கமா படத்தில தண்ணியடிக்கிற காட்சி வைச்சால் அறச்சீற்றம் காட்டுவீங்க, இப்போ என்னவென்றால்,

//டிரைவர் பார்த்திபன் சரக்கடித்துவிட்டுதான் பேருந்தை ஓட்டுவார்.. கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி.. வண்டியை விட்டு இறங்கியவுடன் கட்டிங் சாப்பிட்டே தீருவார்..//

//ஒரு நாள் தண்ணியடித்து மட்டையான நிலையில் இருக்கும் பார்த்திபனுக்கு, பதிலாக பஸ்ஸை ஓட்டும் விமல், கல்யாணத்திற்காக ஊர் திரும்பும் ராஜேஷின் மகன் மீது மோதி விடுகிறார்.//

//வரும் சிங்கம்புலியும் பேசுகின்ற வசனங்களும், கட்டிங் போடுவது தொடர்பானவைகளும் அசத்தல்..//

அப்படியேஉல்டாவா, சிலாகிச்சு சொல்லி இருக்கிங்க , என்ன மேட்டர் , குவாட்டர்,கட்டிங் வாசமெல்லாம் புடிக்க ஆரம்பிச்சுட்டீரா :-))

அந்த பழனி பாலதண்டாயுதபாணி தான் அண்ணாச்சிக்கு நல்லவழிக்காட்டணும் , கடவுள் இருக்கான்டா வவ்வாலு அவ்வ்( நாத்திகம்லாம் பேசினாலும் அண்ணாச்சிக்கு நல்ல புத்தி வரனும்னா கடவுள நம்பினாலும் தப்பில்லை ஹி...ஹி)

vimal said...

என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார்...இந்த பாடல் வித்யாசாகரின் இசையில் மிளிர்கிறது.(ordinary) மலையாள மொழியில் சுன் சுன் சுந்தரி தும்பி செம் செம் செம்பக கொம்பில் ....பாடல்மிக அழகாக இருக்கும் காட்சி அமைப்பும் அருமையாக இருக்கும்

VANDHIYAN said...

You are fully supporting the director. He totally spoiled the story the casting of this film is very worst parthiban and vimal are wrong casting.

VANDHIYAN said...

The color tone of the film is very dry no greenish and never make feel that story is go in on hill side
And director didn't know the detail of closeup andllong shot
All characters stand and talk like stage drama
I am not comparing with ordinary movie but the director avoided small small dialogues which make feel nativity

Nondavan said...

மலையாளத்தில் இப்படம் பார்த்துள்ளேன். மிக அருமையான படம்... தமிழில் நிச்சயம் நல்லா இருக்கும்ன்னு தோணுது...

மேலும் எனக்கு கரு.பழனியப்பன் படங்கள் நெம்ப பிடிக்கும்... :) :)

வழக்கம் போல உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது

கேரளாக்காரன் said...

//ஆனி அகஸ்டின் கேரக்டரில் மணிஷாஜித்.. ஷ்ரத்தா சிவதாஸ் கேரக்டரில் பூர்ணா..! //

Ann Augustine -- Poorna

Shritha Sivadas ---- Manisha Yadav


Btw Who is மணிஷாஜித்??????

உண்மைத்தமிழன் said...

[[[Riyas said...

மலயாளத்தில் பார்த்திருக்கிறேன்.. எனக்கு மிகப் பிடித்திருந்தது..
ஒரு சிலர் நல்லாயில்லண்டு சொல்றாங்க பொதுவாக மலயாளத்தில் வெற்றிபெற்ற படங்கள் தமிழில் ரீமேக்காகி வெற்றி பெறுவது குறைவு. தமிழனுக்கு எக்ஸ்டராவா என்னமோ தேவைப்படுகிறது.]]]

அந்த ஒண்ணுதாங்க என்னன்னு தெரியவே மாட்டேங்குது..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, விமர்சனமெல்லாம் ஓ.கே, ஆனால் நீங்க வழக்கமா படத்தில தண்ணியடிக்கிற காட்சி வைச்சால் அறச்சீற்றம் காட்டுவீங்க, இப்போ என்னவென்றால்,

//டிரைவர் பார்த்திபன் சரக்கடித்துவிட்டுதான் பேருந்தை ஓட்டுவார்.. கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி.. வண்டியை விட்டு இறங்கியவுடன் கட்டிங் சாப்பிட்டே தீருவார்..//

//ஒரு நாள் தண்ணியடித்து மட்டையான நிலையில் இருக்கும் பார்த்திபனுக்கு, பதிலாக பஸ்ஸை ஓட்டும் விமல், கல்யாணத்திற்காக ஊர் திரும்பும் ராஜேஷின் மகன் மீது மோதி விடுகிறார்.//

//வரும் சிங்கம்புலியும் பேசுகின்ற வசனங்களும், கட்டிங் போடுவது தொடர்பானவைகளும் அசத்தல்..//

அப்படியேஉல்டாவா, சிலாகிச்சு சொல்லி இருக்கிங்க , என்ன மேட்டர் , குவாட்டர்,கட்டிங் வாசமெல்லாம் புடிக்க ஆரம்பிச்சுட்டீரா :-))]]]

என்ன செய்யறது..? அதில்லாம படமே இப்போ வர மாட்டேங்குதே..? வேற வழியில்லை.. ஊரோட ஒத்துப் போக வேண்டியதுதான்..!

[[[அந்த பழனி பாலதண்டாயுதபாணி தான் அண்ணாச்சிக்கு நல்லவழிக் காட்டணும் , கடவுள் இருக்கான்டா வவ்வாலு அவ்வ்( நாத்திகம்லாம் பேசினாலும் அண்ணாச்சிக்கு நல்ல புத்தி வரனும்னா கடவுள நம்பினாலும் தப்பில்லை ஹி...ஹி)]]]

நல்ல புத்தியெல்லாம் வேணாம்.. சீக்கிரமா என்னை அவன்கிட்ட கூப்பிட்டுக்கச் சொல்லும்.. புண்ணியமாப் போவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[vimal said...
என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார்... இந்த பாடல் வித்யாசாகரின் இசையில் மிளிர்கிறது.(ordinary) மலையாள மொழியில் சுன் சுன் சுந்தரி தும்பி செம் செம் செம்பக கொம்பில் பாடல் மிக அழகாக இருக்கும் காட்சி அமைப்பும் அருமையாக இருக்கும்.]]]

நல்லது.. அப்போ அந்த அளவுக்கு பாடலும், காட்சிகளும் வந்திருக்கிறது.. வெல்டன் டைரக்டர் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[VANDHIYAN said...

You are fully supporting the director. He totally spoiled the story the casting of this film is very worst parthiban and vimal are wrong casting.]]]

என்னத்த சொல்றது..? உங்களுக்கு இப்படி படுதா..? வேற ஆள் இல்லீங்களே..! அதையும் யோசிக்கணுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[VANDHIYAN said...

The color tone of the film is very dry no greenish and never make feel that story is go in on hill side
And director didn't know the detail of closeup and long shot All characters stand and talk like stage drama. I am not comparing with ordinary movie but the director avoided small small dialogues which make feel nativity.]]]

அதாங்க எங்களுக்கும் புரியலை.. ஏதோ ஒண்ணு குறையுதுன்னு சொல்றோம்..! அதான் சூப்பர் ஹிட்டுன்னு சொல்ல முடியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

மலையாளத்தில் இப்படம் பார்த்துள்ளேன். மிக அருமையான படம். தமிழில் நிச்சயம் நல்லா இருக்கும்ன்னு தோணுது. மேலும் எனக்கு கரு.பழனியப்பன் படங்கள் நெம்ப பிடிக்கும்:) வழக்கம் போல உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.]]]

அவசியம் பாருண்ணே..! அங்க இன்னும் ரிலீஸ் ஆகலையா..?

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன் said...

//ஆனி அகஸ்டின் கேரக்டரில் மணிஷாஜித்.. ஷ்ரத்தா சிவதாஸ் கேரக்டரில் பூர்ணா..! //

Ann Augustine -- Poorna

Shritha Sivadas ---- Manisha Yadav]]]

நானும் அப்படித்தான போட்டிருக்கேன்.. இப்போ போய்ப் பாருங்க.. ஹி.. ஹி.. ஹி..!

[[[Btw Who is மணிஷாஜித்??????]]]

அந்த பிள்ளை பேரைத்தான் இப்படி மாத்தி வைச்சுப்புட்டேன்..! எனக்கும் ஹீரோயின்களுக்கும் ஆகவே ஆகாதுங்க. இப்பவாவது நம்புங்க.. நான் ரொம்ப நல்ல பையன்னு..!!!

Nondavan said...

இங்கு ரிலீஸ் ஆகவில்லை... நவீன சரஸ்வதி சபதம் தான் போன வாரத்தின் புதுவரவு

கேரளாக்காரன் said...

//அந்த பிள்ளை பேரைத்தான் இப்படி மாத்தி வைச்சுப்புட்டேன்..! எனக்கும் ஹீரோயின்களுக்கும் ஆகவே ஆகாதுங்க. இப்பவாவது நம்புங்க.. நான் ரொம்ப நல்ல பையன்னு..!!!//

Nambitten Brother Ji :)

sornamithran said...

இப்பதான் டிவியில் என்னடி எனனடி ஓவியமே பாடல்பார்த்தேன். நன்றாக இருந்தது

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

இங்கு ரிலீஸ் ஆகவில்லை... நவீன சரஸ்வதி சபதம்தான் போன வாரத்தின் புது வரவு.]]]

அடுத்த வாரமாச்சும் வரும்ன்னு நினைக்கிறேன். பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன் said...

//அந்த பிள்ளை பேரைத்தான் இப்படி மாத்தி வைச்சுப்புட்டேன்..! எனக்கும் ஹீரோயின்களுக்கும் ஆகவே ஆகாதுங்க. இப்பவாவது நம்புங்க.. நான் ரொம்ப நல்ல பையன்னு..!!!//

Nambitten Brother Ji :)]]]

சந்தோஷம்..! வெல்கம் பிரதர்..!

Nondavan said...

ஹஹஹஹா... ஒரு டிக்கெட் இல்லை... 3 டிக்கெட்... (நான், மகன், மனைவி)

நாங்களும் எத்தனை படத்தை தான் தியேட்டரில் பார்க்குறது...???

ஒரு படத்திற்கு போனால், மினிமம் ரூபாய் 5,000 செலவு ஆகுது... இதை பொறுத்துகிட்டு தான் ஒவ்வொரு படத்திற்கும் போகிறோம்...

பல சமயம், அடிச்சு வெளியிலே அனுப்புறாங்க...அவ்வளவு மொக்கை

உண்மைத்தமிழன் said...

[[[sornamithran said...

இப்பதான் டிவியில் என்னடி எனனடி ஓவியமே பாடல் பார்த்தேன். நன்றாக இருந்தது.]]]

இந்த வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

ஹஹஹஹா... ஒரு டிக்கெட் இல்லை... 3 டிக்கெட்... (நான், மகன், மனைவி)

நாங்களும் எத்தனை படத்தைதான் தியேட்டரில் பார்க்குறது??? ஒரு படத்திற்கு போனால், மினிமம் ரூபாய் 5,000 செலவு ஆகுது. இதை பொறுத்துகிட்டுதான் ஒவ்வொரு படத்திற்கும் போகிறோம்.
பல சமயம், அடிச்சு வெளியிலே அனுப்புறாங்க. அவ்வளவு மொக்கை..]]]

சரி.. நீங்க போடுற பிச்சையாலதான் தமிழ்ச் சினிமா வாழுது..! அது அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குது பிரதர்..! ஆனாலும் நீங்க அவசியம் இதைப் பார்க்கோணும் பிரதர்.. எப்படியாச்சும் பார்த்திருங்க..!