சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - 2013 - முதல் நாள்..!

13-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

11-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாகத் துவங்கியது..! வழக்கம்போல உட்லண்ட்ஸ் காம்பளக்ஸில் காலை மற்றும் மதியக் காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன. வெட்டி ஆபீஸராக இருப்பதால் கடந்த 2 வருடங்களாக போக முடியாமல் இருந்த நான் இந்த வருடம் முழுமையாக கலந்து கொள்வது என்று முடிவெடுத்து எனது வேலை தேடும் படலத்தை 10 நாட்களுக்கு மட்டும் ஒத்தி வைத்துள்ளேன்..!

9.30 மணிக்கு வளசரவாக்கத்தில் இருந்து கிளம்பி 10.45 மணிக்குத்தான் உட்லண்ட்ஸ் தியேட்டருக்குள் நுழைய முடிந்த்து..! எங்கிருந்துதான் இத்தனை பேர் கிளம்பி வருகிறார்கள்.. செல்கிறார்கள் என்று தெரியவில்லை. பல இடங்களில் டிராபிக் ஜாம்.. சாலிகிராம்ம் அருகே கேப்டனின் மகன் நடிக்கும் சகாப்தம் படத்தின் துவக்க விழா அவர் வீட்டுத் தெருவிலேயே நடந்ததால் அந்த இடத்தில் ஒரு முறை டிராபிக் ஜாம். அதைத் தாண்டினால் வடபழனி டிப்போ அருகில்.. பின்பு அம்பேத்கார் சிலை அருகே.. பின்பு கோடம்பாக்கம் பாலம் ஏறி இறங்கிய பின்பு.. அதையும் தாண்டினால் பாம்குரோவ் அருகில்.. அதுக்கப்புறம்தான் உச்சக்கட்ட கடுப்பு.. போயஸ் ஆத்தா கிளம்பப் போவுதுன்னு சொல்லி அப்படியே ஸ்டாப் பண்ணிட்டாங்க.. கிட்டத்தட்ட 15 நிமிஷம் கழிச்சதுத்தான் லைன் கிளியராச்சு.. என்ன கொடுமை இது..? இனிமே பொறந்தாலும் சி.எம்.மாதாங்க பொறக்கணும். அப்போதான் கரெக்ட் டயத்துக்கு எல்லா இடத்துக்கும் போய்ச் சேர முடியும்..!

பார்த்தவுடன் கை குலுக்கி 'வாங்க லூட்டி சரவணன்' என்று வாஞ்சையாக அழைத்து கேண்டீனுக்கு அழைத்துச் செல்லும் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் ஸார், இவ்வுலகிலேயே இல்லை.. ஆனாலும் உட்லண்ட்ஸின் படிகளில் என் கால் பட்டவுடன் இவர் நினைவு சட்டென்று எனக்குள் எழுந்தது..! இதுதான் நல்லவர்களின் சக்தி..! "மதியம் என்னோடதான் லன்ச்.. எங்க இருந்தாலும் மதியம் கேட்ல நிக்கணும்..." என்று உரிமையோடு கண்டிப்புடன் சொல்லி போன் அடித்து அழைத்து சாப்பிடக் கூட்டிப் போகும் 'வேதம்புதிது' கண்ணன் ஸாரும் இன்றைக்கு கனடாவில்.. "அடுத்து எந்தப் படம் நல்லாயிருக்கும்..? சிம்பொனியா..? உட்லண்ட்ஸா..? நம்பி உக்காரலாமா..?" என்று லேசாக கண்ணடித்து கேட்டுச் சிரிக்கும் ஐயா எஸ்.பி.முத்துராமனையும் காணவில்லை..! பழைய தோஸ்த்துகளில் இயக்குநர் தம்பி சுலைமானை மட்டுமே இன்றைக்கு பார்த்தேன்..! 

இந்தச் சோகத்துக்கிடையில் இலக்கியச் சுடர் அண்ணன் செ.சரவணக்குமார்தான் இந்தாண்டு எனக்குக் கிடைத்திருக்கும் புதிய கம்பெனி..! காலையில் பார்த்த முதல் படம் The Disciple. பின்லாந்து நாட்டு படம்.. 1939-ல் கதை நடக்கிறதாம்..! 


பால்டிக் கடல் பகுதியில் ஒரு தீவில் இருக்கும் கலங்கரைவிளக்கத்திற்கு உதவியாளராக  அனுப்பப்படுகிறான் 13 வயது Karl. ஏற்கெனவே அங்கே குடும்பத்துடன் பணியாற்றிவரும் பொறுப்பாளர் Hasselbond. முரட்டுத்தனமானவர். சில நேரம் நேர்மையாகவும், பல நேரங்களில் கண்டிப்பு மிகுந்தவராகவும் இருக்கிறார். தனது மகன் Gustaf Hasselbond-ஐ கப்பல் பணியில் சேர்க்கும் முடிவில் இருக்கிறார் ஹஸ்ஸல்பாண்ட். புதிதாக வேலைக்கு வரும் கார்ல் மிகவும் சிரமப்பட்டு ஹஸ்ஸல்பாண்டிடம் நன்மதிப்பைப் பெற்று கப்பல் பணிக்குச் செல்ல ஆயத்தமாகிறான். முதலில் கார்லுடன் நட்புணர்வுடன் இருக்கும் கஸ்டப் கடைசி நிமிடத்தில் பொறாமை கொள்கிறான்.. 

ஏற்கெனவே தனக்கு ஒரு மகன் இருந்து அவன் இறந்து போனதால் அந்த சோகம் தீராமல் இருப்பதாக அடிக்கடி சொல்கிறார் ஹஸ்ஸல்பாண்ட். சிறுவர்களின் பொறாமை சண்டை ஒரு பக்கம்.. மனைவியின் பியானோ இசையில் மயங்கும் மேலதிகாரியை பார்த்து கோபப்படும் ஹஸ்ஸல்பாண்ட் பியானோவை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட.. மனைவி பேக்கப் செய்து தயார் நிலையில் இருக்க.. குடும்பம் குழப்பத்தின் உச்சத்தில் வரும்போது அந்த லைட் ஹவுஸையே தீ வைத்து எரிக்கிறாள் மிஸஸ் ஹஸ்ஸல்பாண்ட்.. தீக்காயங்களுடன் ஹஸ்ஸல்பாண்ட் சென்றவுடன் இவர்களும் வேறு இடம் பார்க்கத் தயாராகும் சூழலுடன் படம் நிறைவடைகிறது..! சென்ற ஆண்டுக்கான அகாடமி அவார்டு பட்டியலில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்காக இந்தப் படமும் போட்டியிட்டதாம்..! ஜெயிக்கவில்லை..! 

சில இடங்களில் நன்றாக இருப்பதுபோல தெரிந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு சுமாரான படமாகத்தான் எனக்குத் தெரிந்தது..! படத்தில் நிறைய குறியீடுகள் இருப்பதாக செ.சரவணக்குமார் சொன்னார்.. இதையெல்லாம் பார்த்து புரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு அறிவு இல்லை என்பதால் மிச்சம், மீதியை அவர் விரைவில் எழுதும்போது படித்துக் கொள்ளுங்கள்..!  

மதியம் அடையாள அட்டை வாங்க கியூவில் நிற்கும்போது கவித்துவ எழுத்தாளர் அண்ணன் ரோசாவசந்தை சந்தித்தேன். சென்ற ஆண்டு சந்தித்தது.. ஒவ்வொரு வருடமும் சில நண்பர்களை இப்படித்தான் சந்திக்க முடிகிறது..! சாப்பிடப்போகும்போது அண்ணன்கள் ஜாக்கி சேகரும், நித்தியும் வந்து சேர்ந்தார்கள்.. ஜாக்கி இந்த ஆண்டு வரவில்லையாம்.. ரொம்ப வருத்தமாகச் சொல்லிவிட்டுப் போனார்..! ஏதோ 'வேலை' ரொம்ப 'டைட்'டா இருக்காம்..! அதுனாலயாம்..!  எனது பிளாக்கில் இருக்கும் நித்தியின் விளம்பரத்தைப் பார்த்து எங்கிருந்தோ யாரோ ஒருத்தர் போன் செய்து பிஸினஸ் பற்றி விசாரித்ததாகச் சொன்னார் நித்தி..! ஆனா கமிஷனை பத்தி மூச்சேவிடலை..! புத்திசாலி பிள்ளைகப்பா..!


மதியம் பார்த்த படம் No. சிலி நாட்டுத் திரைப்படம். அந்நாட்டின் புகழ் பெற்ற சர்வாதிகாரி பினாச்சோடின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி இதுவரையிலும் சுமார் 15 படங்களுக்கும் மேலாக இதே உலக சினிமா நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். இது 16 என்று நினைக்கிறேன்..!

1973-ல் இருந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த பினாச்சோட் உலக நாடுகளின் வற்புறுத்தல் மற்றும் தென் அமெரிக்க அண்டை நாடுகளின் அறிவுறுத்தல் காரணமாக ஜனநாயகமான வழியில் மறைமுமாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் 1988-ம் ஆண்டு ஒரு கருத்துக் கணிப்புக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்.

அதாகப்பட்டது அடுத்த 8 ஆண்டுகளுக்கு தானே தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக பணியாற்ற மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தனக்கு பாராளுமன்றம் கட்டுப்பட வேண்டும் என்ற ரீதியில் அவரது கோரிக்கை இருந்த்து. இதில் யெஸ் - நோ என்ற இரண்டு ஆப்சன்கள் மட்டுமே இருந்தன. இதுதான் இந்தப் படத்தின் களம்..!

படத்தின் ஹீரோ சவீந்திரா ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். இந்த கருத்துக் கணிப்புக்காக அப்போதைய அரசு தொலைக்காட்சியில் இரு தரப்பினருக்கும் சம அளவிற்கு பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 27 நாட்கள்.. 15 நிமிடங்கள்.. இது தரப்பும் தங்களது பிரச்சாரத்தை செய்து கொள்ளலாம் என்பதே அந்த தேர்தல் சுதந்திரம். இதனைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த பினோச்சேடின் எதிர்த் தரப்பு இதற்காக சவீந்திராவை அணுகுகின்றன. அவர் இதற்கு ஒப்புக் கொள்ளும் நேரத்தில் இவருடைய பாஸ் லூகோவோ தனது பிஸினஸுக்காக யெஸ் தரப்பை ஆதரிக்க வேண்டிய சூழல் வருகிறது..!

இந்தக் கருத்துக் கணிப்பில் தான் ஜெயிக்க வேண்டிய பினோச்சாட் செய்த உள்ளடி வேலைகள்.. பயன்படுத்திய ராஜதந்திரம்.. சாமதான தண்டல்கள்.. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி செலுத்திய வன்முறைகள்.. கைதுகள்.. சித்ரவதைகள் என்று அனைத்தையும் அப்போதைய காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்புகள் மூலமாக ஆங்காங்கே இடையிடையே காட்டி ஒரு டாக்குமெண்ட்ரி போலவே எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்..! முடிவில் பினோச்சேடை வீட்டுக்குப் போகச் சொல்லி 55.98 பேரும், அவருக்கு ஆதரவாக 44.02 பேரும் வாக்களிக்க.. ஒரு சர்வாதிகாரம் சிலி நாட்டில் இப்படித்தான் முடிவுக்கு வந்துள்ளது..! இதைத்தான் உள்ளது உள்ளபடியே இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள்..!

இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு தோன்றுவது இதுதான்..  இப்படி பினாச்சோட் ஆட்சியில் நடந்த சித்ரவதைகள்.. அரசியல் கொலைகள்.. ராணுவ அத்துமீறல்களை வெளிப்படையாக படம் போட்டுக் காண்பித்தது போன்று வடஎல்லை, தென்எல்லை போராட்டம்.. மொழிவாரி மாகாணப் பிரிப்பு.. ராஜாஜி காலத்து இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம்... காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம்.. பக்தவச்சலம் காலத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம்.. கீழ்வெண்மணி படுகொலை.. இம்மானுவேல் சேகரன் படுகொலை.. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலை.. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராமதாஸ் நடத்திய சாலை மறியல்..  ஆத்தா ஆட்சியில் வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்களை கொன்று குவித்த வரலாறு.. ஆத்தாவின் சொத்துக் குவிப்பு வழக்கு.. தாத்தா மீதான சர்க்காரியா கமிஷன்.. தாமிரபரணி ஆற்றில் நடந்த படுகொலைகள்.. 2 ஜி கேஸ்.. ஈழப் பிரச்சனை.. முள்ளிவாய்க்கால் படுகொலைகள்.. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..!!! 

நமக்கு இதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லவே இல்லை. ஆனால் நாமதான் வெட்கமில்லாமல் சொல்லிக்கிட்டே இருக்கோம். உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியான்னு..!?  ஜெயலலிதா, கருணாநிதி,  ராஜீவ்காந்தி, ஈழம், சோனியா காந்தி, சிதம்பரம், ராகுல்காந்தி ஒரு பெயரைக்கூட ஒரு திரைப்படத்திலும் வெளிப்படையாக வைத்து விமர்சனம் செய்யக்கூட உரிமையில்லாத இந்த நாட்டில்தான் ஜனநாயகம் வாழுதாம்..!  நல்லா வாழுங்கடே..!

5 comments:

குரங்குபெடல் said...

"ஜெயலலிதா, கருணாநிதி, ராஜீவ்காந்தி, ஈழம், சோனியா காந்தி, சிதம்பரம், ராகுல்காந்தி ஒரு பெயரைக்கூட ஒரு திரைப்படத்திலும் வெளிப்படையாக வைத்து விமர்சனம் செய்யக்கூட உரிமையில்லாத இந்த நாட்டில்தான் ஜனநாயகம் வாழுதாம்..! நல்லா வாழுங்கடே.. "

நியாயமான கோபம் அண்ணே . .

" வெட்டி ஆபீஸராக இருப்பதால் "


நீங்களே களத்துல இறங்கி ஒரு படம் எடுங்க அண்ணே . .


படம் அண்ணே . . . போட்டோ இல்ல . . .

கேரளாக்காரன் said...

// இம்மானுவேல் சேகரன் படுகொலை//

தமிழ்நாடு அடிச்சிக்கிட்டு சாகரத பாக்கனும்னு ஆசை போல :(

கேரளாக்காரன் said...
This comment has been removed by the author.
உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

"ஜெயலலிதா, கருணாநிதி, ராஜீவ்காந்தி, ஈழம், சோனியா காந்தி, சிதம்பரம், ராகுல்காந்தி ஒரு பெயரைக்கூட ஒரு திரைப்படத்திலும் வெளிப்படையாக வைத்து விமர்சனம் செய்யக்கூட உரிமையில்லாத இந்த நாட்டில்தான் ஜனநாயகம் வாழுதாம்..! நல்லா வாழுங்கடே.. "

நியாயமான கோபம் அண்ணே . .

"வெட்டி ஆபீஸராக இருப்பதால் நீங்களே களத்துல இறங்கி ஒரு படம் எடுங்க அண்ணே. படம் அண்ணே... போட்டோ இல்ல..]]]

நீங்கள் தயாரிப்பதாக இருந்தால் நான் ரெடி..!

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன் said...

// இம்மானுவேல் சேகரன் படுகொலை//

தமிழ்நாடு அடிச்சிக்கிட்டு சாகரத பாக்கனும்னு ஆசை போல :(]]]

இதைத்தான் சொல்றேன். இங்க கருத்து சுதந்திரமே இல்லைன்னு..!