என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

23-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குடி, குடியைக் கெடுக்கும் என்ற விளம்பரத்தை மட்டும் துவக்கத்தில் காட்டினால் போதாது.. ஒரு திரைப்படத்தில் இத்தனை முறைதான் பாட்டிலை காட்ட வேண்டும்.. இத்தனை முறைதான் குடிப்பதுபோல் காட்சிகள் இருக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்தினால் நல்லதோ என்று நினைக்கிறேன்.. இந்த வாரம் வெளிவந்த பிரியாணியிலும் குடிதான் முதலிடம்.. இதிலும் குடிதான் முதலிடம்..! என்னவோ போங்க.. நாடு குட்டிச் சுவராயிருச்சு..!


ஜீவா, வினய், சந்தானம் - இணை பிரியாத பள்ளிப் பருவத்து நண்பர்கள்.. விளம்பரக் கம்பெனி வைத்திருக்கிறார்கள்.. எப்போதும் குடிக்கிறார்கள்.. வேலையில் இருக்கும்போதும குடிக்கிறார்கள்.. இல்லாதபோதும் குடிக்கிறார்கள். குடிப்பதற்கு ஏதும் காரண, காரியங்கள் இல்லை..! 

தன்னுடைய சின்ன வயதில் தனது தாய் தன்னைவிட்டு ஓடிப் போனதை இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார் ஜீவா. அந்தச் சிறிய வயதில் அவரது அப்பா நாசர் கோபத்தில் சொன்ன “இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான் . நம்பவே கூடாது..” என்ற வார்த்தையை இன்னமும் மறக்க முடியாமல் வேத வாக்காகவே வைத்திருக்கிறார்..!  சோகத்தை மறக்க ஊட்டியில் இருந்து சென்னைக்கு குடியேறுகிறார் நாசர்.. வந்த இடத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய எண்ண.. அந்தப் பெண்ணை பார்த்தவுடன் ஜீவா பிடிக்கவில்லை என்கிறார்.. ஆத்திரப்படுகிறார்.. கோபப்படுகிறார்.. அந்தப் பெண் திரும்பிச் சென்றுவிட.. இதுக்காகவே அப்பா நாசருடன் பேசாமலேயே தனது வாழ்க்கையைத் கழிக்கிறார் ஜீவா..!

மூன்று பேருமே தங்களது வாழ்க்கையில் திருமணமே செய்யக் கூடாது என்று சத்தியம் செய்து கொள்கிறார்கள். இந்த நேரத்தில் விளம்பரப் படம் தயாரிப்பில் உதவ பெரிய நிறுவனத்தில் இருந்து திரிஷா மூவரையும் சந்திக்கிறார்..! திரிஷாவின் கவனிப்பில் கொஞ்சம், கொஞ்சமாக தன்னை அறியாமலேயே இழந்து கொண்டிருக்கிறார் ஜீவா..!  இப்போது செய்து கொடுத்த சத்தியத்தை மீறும் சந்தர்ப்பம் நண்பர்களான வினய், சந்தானத்திற்கு ஏற்படுகிறது.. அவர்களுடைய திருமணத்திற்குக்கூட செல்லாமல் அவர்களைப் புறக்கணிக்கிறார் ஜீவா..! அவர்கள் ஏன் அதை மீறினார்கள்..? என்பதுவும், திரிஷா-ஜீவா கதை என்ன ஆனது என்பதும்தான் மிச்சம் மீதிக் கதை..!

ஜீவாவுக்கு நிச்சயமாக இது வெற்றிப் படம்தான்..! இந்தக் காலத்து விடலைப் பசங்களுக்கேத்தாப்புலேயே திரைக்கதை அமைச்சிருக்காங்க..! யூ டியூபில் புகழ் பெற்ற வீடியோக்களை காப்பியடிச்சு சில சீன்களை வைச்சிருக்காங்க..! பாடல் காட்சியில் வரும் காரின் முன் சீட்டில் சந்தானம் ஒரு போலி ஸ்டீரியங்கை பிடித்து மோதுவது போல் பாவ்லா காட்டுவது.. தண்ணியடித்துவிட்டு சாய்ந்தபடியே நடப்பது போன்ற காட்சி.. வீட்டின் மாடியில் கைப்பிடியில் அமர்ந்திருக்கும் ஜீவா தவறி கீழே விழுகப் போய் திரிஷாவின் கைப்பிடியில் தப்பிக்கும் காட்சி.. இது போதாதென்று பல பத்திரிகைகளில் வெளிவந்த மொக்கை ஜோக்குகளை வைத்தும் கொஞ்சம் அலப்பறையைக் கூடுதலாக்கியிருக்கிறார்கள்.. பாராட்டுக்கள்..! காப்பின்னாலும் அதையும் ரசிக்கிற மாதிரி சுட்டிருக்காங்களே.. வாழ்த்தலாம்..!

ஜீவாவுக்கு ஏற்ற கேரக்டர்.. நண்பர்களுடன் அட்டூழியம் செய்வதைவிடவும் திரிஷாவை காதலிப்பதை தன் மனம் ஏற்காத ஈகோவுடன் திரியும் அந்த ஜீவா தன் பணியை கச்சிதமா செஞ்சிருக்காரு..! நாசருடன் பேச மறுத்திருக்கும் காட்சியின் அழுத்தம், நாசரின் நோய் பற்றி தெரிந்தவுடன் உடனேயே அந்த ஈகோ காணாமல் போவதுதான் கொஞ்சம் லாஜிக் இடிக்குது. மற்றபடி பாசத்தையும், அன்பையும், நேசத்தையும் குழைத்துக் கொடுத்திருப்பதால் அந்தப் பகுதி டச்சிங்காகவே இருந்த்து..!

வினயைவிடவும் சந்தானம் இதில் மீண்டும் கொஞ்சம் ஸ்கோர் செய்திருக்கிறார்.. 5.10 மேட்டரை மாற்றி அது போலவே வேறு வசனத்தை மின்னல் வேகத்தில் எடுத்துக் காண்பித்திருக்கும் இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..! எப்போதும் போலவே அடையாளப்படுத்தியே கிண்டலடிப்பது.. மறைமுக இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள்.. குடி புகழ் பாடுவது என்பதெல்லாம் இருந்தாலும் திருமணத்திற்குப் பிந்தைய சந்தானத்தின் காட்சிகள்தான் பார்க்கும்படி இருந்தது..!

திரிஷா எப்போதும்போலவே நடிக்கிறார்..! மென்மையான நடிப்புக்கு திரிஷாவைவிட்டால் வேறு ஆளில்லைதான்..! பீல்டுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்மணியை இன்னமும் அவுட்டாக்க முடியாததற்கு இதுதான் காரணம் போலும்..! ஜீவாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து ஜெயித்தும்விட்டார்கள். பாராட்டுக்கள்..! ஆண்ட்ரியாவுடனான மோதல்.. பின்பு பேசுவது.. தான் ஒரு நடிகை என்பதை சுவிட்சர்லாந்தில் போய் காட்டுவது.. அப்போதும் ஜீவா எடுத்தெறிந்து பேசி வெளியேற்றுவது.. இப்போது திரிஷா ஜீவாவுக்கு சப்போர்ட்டாக பேசப் போய் அப்போதுதான் முதல் முறையாக திரிஷா மீது ஒரு கவனமும் ஈர்ப்பும் ஜீவாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.. அவர் நினைத்ததே நடந்தேறிவிட்டது..! வெரிகுட்.. ஆண்ட்ரியாவின் சிக் அழகு.. விளம்பரப் பட முகம்.. அதனை வெளிக்காட்டும்விதமான படப்பிடிப்பு.. இவருக்கு ஒரு ஹிட்டான படம் கிடைக்கவில்லை என்பது மட்டுமே உண்மை..!  மலையாளத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.. தமிழில்தான்.. ம்ஹூம்..!

மதியின் ஒளிப்பதிவு முதல் காட்சியில் இருந்தே பளீச் ரகம்..! எந்த இடத்திலும் எதையும் இருட்டடிப்பு செய்யாமல் எடுத்திருக்கிறார்கள்..! இதுவே செம கலராக இருக்கிறது..! ஹாரிஸ் ஜெயராஜின் இசை.. இந்தப் படத்தின் இடையில் சுவிட்சர்லாந்தின் ஒரு கடையில் இளையராஜா பாடல் சிடி இருப்பதை போல் காட்டி, 'காதலின் தீபம் ஒன்று' பாடலின் ஒரு வரியை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.. இதுதான் இசையமைப்பு..! ஹாரிஸுக்கு தெரிந்தால் நல்லது..!

விட்டுவிட்டு கொண்டாடினாலும்... கொண்டாட்டம் மனதைவிட்டு அகலாமல் பார்த்துக் கொள்ளும் திரைக்கதையில், காமெடி என்னும் சரவெடியை அவ்வப்போது கொளுத்திக் கொண்டு ஒரு தீபாவளியை காட்டியிருக்கிறார் படத்தில்..! 

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்..!

2 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

படம் பார்த்தமா விமர்சனம் எழுதினமானு இருக்கணும் என்ன வெட்டி பொலம்பல் அவ்வ்!

//என்னவோ போங்க.. நாடு குட்டிச் சுவராயிருச்சு..!//

நாட்டில ஜனநாயகம் ,கருத்து சுதந்திரம் இல்லைனு வெளிநாட்டுக்கு போறேன்னு யாரோ ஒரு நடிகர் சொன்னார் அதே போல நாடு குட்டிச்சுவராகிடுச்சு வெளிநாட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்ப வேண்டியது தானே :-))

சன்னல் ஓரம் படத்தில டிரைவரா நடிக்கிறவரே குடிச்சிக்கிட்டு இருந்தார் ஆனால் குடிக்கும் போது பேசுன டயலாக் சூப்பரா இருந்துச்சுனு சொன்னிங்க,இப்ப மட்டும் என்ன "பொங்கல்" ?

குடிச்சுட்டு பயணிகள் பயணிக்கும் பேருந்து ஓட்டுறாப்போல படம் எடுத்தது தான் மிகப்பெரிய குத்தம் அதையே நல்லா இருக்குனு சொன்னால் ,இதுவும் நல்லா இருக்குனு சொல்லோணும்!!!

# //மலையாளத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.//

ஆமாமாம் "ரொம்பப்பயன்ப்படுத்திட்டாங்க" தமிழ் நாட்டுல அனிருத் தான் நல்லாப்பயன்ப்படுத்த தெரிஞ்ச ஆளு அவ்வ்!

# // எதையும் இருட்டடிப்பு செய்யாமல் எடுத்திருக்கிறார்கள்..! இதுவே செம கலராக இருக்கிறது..! //

கலர் லைட்டு போட்டு படம் எடுத்திருப்பாங்கண்ணே!

# விமர்சனம் சின்னதா இருக்கு, படம் ரொம்ப சின்ன படமோ?

அருமை!

உண்மைத்தமிழன் said...

வவ்ஸ்..

ஜன்னல் ஓரம் குடிச்சிட்டு வண்டியோட்டும்போது பேசுற டயலாக்குன்னா சொல்லியிரு்ககேன்..!? குடிச்சிட்டு வண்டியோட்டுறதே தப்பாச்சே..? நீராவது சொல்லும்.. சினிமாக்காரங்க கேக்குறாங்களான்னு பார்ப்போம்..!