போலீஸ் கொலையாளிகளுக்கு ஒரு அட்வைஸ்..!

24-02-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வெகுநாட்களாகிவிட்டது நமது போலீஸுக்கு.. ரத்தச் சகதியை ஏற்படுத்தி..! தங்களுக்கு எப்போதெல்லாம் அவமானங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதனைத் துடைப்பதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாரையாவது என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுவது அவர்களது வழக்கம்.

கோவையில் மோகன்ராஜ் கொல்லப்பட்டு ஒன்றேகால் வருட இடைவெளிக்குப் பின்பு சென்னையில் தங்களது வெறியைக் காண்பித்திருக்கிறார்கள். வழக்கம்போல “உங்க வீட்டுச் சொத்தை கொள்ளையடிச்சா ச்சும்மா விட்ருவீங்களா..? உங்க பணத்தைக் களவாண்டிட்டு போனா பார்த்துக்கிட்டிருப்பீங்களா..? போட்டுத் தள்ளணும்.. விடக் கூடாது..” என்றெல்லாம் வெட்டி நியாயம் பேசும் கனவான்களின் அனர்த்தமும் காலையில் இருந்து இணையத்தளங்களில் அளவுக்கு அதிகமாகவே புழங்குகிறது.

செய்தது கொள்ளை. அளவு 35 லட்சம். நேரடி ஆதாரங்கள் இல்லை. வீடியோவில் கிடைத்தது சந்தேகப் புள்ளி மட்டுமே..! ஆளைத் தேட பத்திரிகைகளுக்கு மட்டும் புகைப்படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். 300 பிளக்ஸ் பேனர்கள் வைக்க உடனுக்குடன் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் டெண்டர்கள் ஏதும் இல்லாமலேயே..! காத்திருக்கிறது விசாரணைகள்..!


இரவில் தொலைபேசியில் துப்பு கிடைத்த்தாம்..! உடனே ஓடிச் சென்றார்களாம்.. இருப்பது ஒரேயொரு வாசல் கொண்ட வீடு. முன்புறம் மட்டுமே. வெளியில் வர வேறு வழியில்லை. இரவு நேரம். உள்ளே 5 பேர்தான்.. வெளியில் வாருங்கள் என்று அழைத்தபோது சுட்டார்களாம். மயிறே போச்சுன்னுட்டு வெளியில் காத்திருந்திருக்கலாமே..! எப்படியும் வெளியில் வந்துதானே ஆக வேண்டும். அதுதான் நடிப்புலத் திலகங்களான அடிபட்ட 2 துணை ஆய்வாளர்களும் ஆஸ்பத்திரியில் வந்துதானே கட்டு போட்டார்கள். பிறகென்ன..? விடியும்வரையும் காத்திருந்திருக்கலாம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதனையும் மீறி அவர்களே தற்கொலை செய்து கொண்டால் போய்த் தொலையுது என்று விட்டிருக்கலாம்.. இல்லை.. அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் வெளியில் வந்திருப்பார்கள். அக்கம் பக்கத்து சாட்சிகள் பார்த்திருப்பார்கள். 


எதற்குமே வாய்ப்பளிக்காமல், ஜன்னல் வழியாக அரிவாளால் வெட்டினார்கள் என்று இராம.நாராயணன் படத்தின் ஜிகினா வேலை போல் முதலில் ஒரு கமெண்ட்டை சொல்லிவிட்டு, பின்பு துப்பாக்கியால் சுட்டார்கள். அதனால் திருப்பிச் சுட்டோம் என்று தோசையைத் திருப்பிப் போடுகிறார்கள்.

அதென்னவோ தெரியவில்லை. போலீஸ் சுட்ட ஐந்து குண்டுகளும் மிகச் சரியாக இறந்து போனவர்களின் நெஞ்சில்தான் பாய்ந்துள்ளது. அவர்கள் சுட்ட குண்டுகளோ போலீஸாரின் தலையிலும், தோள்பட்டையிலும், தொடையிலுமாக பாய்ந்துள்ளது. தலையில் குண்டு பாய்ந்து யாராவது உயிருடன் இருக்க முடியுமா..? அதுவும் அழகாக சோப்பு டப்பா போல் ஒருத்தர் மேக்கப் போட்டு படுத்திருக்கார் பாருங்க.. அசத்தல்..! சினிமாலகூட இதைச் செய்ய முடியாது..!


அந்த வீட்டின் ஜன்னல் பகுதியை திருப்பித் திருப்பிக் காட்டுகிறார்கள்.  இரும்பு கிரில் போட்டது. அதில் அரிவாளை நீட்டி போலீஸாரை எப்படி வெட்டி..? உஷ்.. சினிமாக்காரங்களே யோசிக்க முடியாதுப்பா..! இப்போதுவரையிலும் கதவைத் திறக்கவேயில்லை என்றுதான் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட கொலையாளியும், ஆணையருமான திரிபாதி கூறி வருகிறார். அப்படீன்னா நாம இப்படித்தான யோசிக்க வேண்டியிருக்கு..? அரிவாள் எங்கிட்டிருந்து வந்துச்சுன்னு..!? தலைல குண்டு பாய்ஞ்சது கரெக்ட்டா..? அரிவாள்ல வெட்டினது கரெக்ட்டான்னு யாராச்சும் கேட்டுச் சொல்லிட்டீங்கன்னா எங்களுக்கும் ஒரு விளக்கம் கிடைச்ச மாதிரியிருக்கும்..!

அவங்க கதவைத் திறக்க மாட்டேன்னு சொன்னாங்களாம்.. இவங்க உடனே கதவை உடைச்சு உள்ள போய் சுட்டாங்களாம்.. செத்துட்டாங்களாம்.. ஏம்ப்பா இவங்களையெல்லாம் அப்படியே ஒரு படகுல ஏத்தி இராமேஸ்வரம் கடல் பகுதில விட்டுட்டா என்ன..? ஒரு நாள்விட்டு ஒரு நாள் சிங்கள போலீஸ்காரன் தமிழகத்து பகுதிக்குள்ள வந்த நம்ம இந்தியனை, நம்ம தமிழனை சுட்டுட்டுப் போறான். காப்பாத்த நாதியில்லை..! இங்க, இவ்ளோ குறி பார்த்து சுடுற போலீஸ்காரங்களை வீட்ல ஆர்டர்லி வேலை பார்க்க வைச்சே இடுப்பொடிய வைக்குறாங்களே ஸ்டார் அந்தஸ்து அதிகாரிகள்.. எதுக்கு..? திரிபாதியையும் சேர்த்தே பார்சல் செஞ்சுரலாம்..!

உள்ளே இருப்பது அந்தக் கும்பல்தான் என்றால் ஆட்களை உயிருடன் பிடித்திருக்கலாம். அவர்கள் மூலமாக இப்பவும் காணாமல் போன 31 லட்சம் ரூபாயை மீட்டிருக்கலாம்.. இப்ப அதுவும் போச்சு. அந்த 31 லட்சத்தை யார்கிட்டேயிருந்து இனிமேல் தேடுவாங்களாம்..? பணம் இவர்களிடம்தான் கைப்பற்றப்பட்டதுன்னு போலீஸ் விடுற கதையையெல்லாம் நான் நம்பத் தயாராக இல்லை. போலீஸின் ரகசிய நிதியே கோடிக்கணக்கில் இருக்கும்..! கொஞ்சூண்டு அள்ளிவிட்டு கணக்கைக் காட்டி முடிச்சிட்டா போதும்தான்..!

எதையாவது செய்து கேஸை முடித்துவிட நினைத்திருக்கிறார்கள்..! வசதியாக கிடைத்திருக்கிறார்கள் வெளி மாநில இந்தியர்கள். நன்கு கவனிக்கவும் இவர்கள் இந்தியர்கள்தான். இந்திய தேசியம் பேசும் இந்தியர்கள் மிகவும் கவனிக்கவும். இறந்து போன இந்த இந்தியர்களைத்தான்.. இந்த அப்பாவிகளைத்தான்(குற்றம் நிரூபிக்கப்படும்வரையிலும் அவர் அப்பாவிதானாம்..! எல்லா அரசியல்வியாதிகளும் இதைத்தான் சொல்லுதுக.. அதுனால இவங்களையும் நாம இப்படியே அழைக்கலாமே..?) சமூக விரோதிகள்ன்னு திருப்பித் திருப்பிச் சொல்லுது அரசு அதிகார வர்க்கம்..!

ஐயோ பாவம்.. ஐ.பி.எஸ். படித்த பிதாமகன்கள்.. பொறுப்பில் இருக்கும் கொஞ்ச காலத்தையே அதிகாரத்துடன் வாழ்ந்து, குடும்பத்திற்காக கொஞ்சம் சம்பாதித்துவிட்டு ஓய்வு பெற்று பின் பொறுப்பில் இருந்தபோது வாலாட்டியதை நினைவுபடுத்தி மீண்டும் ஒரு பதவியைப் பிடித்து சாகும்வரை ஆட்சி, அதிகாரத்தில் இருக்கத் துடிக்கும் கேவலப்புத்தி கொண்டோர்தான் அதிகாரிகளாக இருந்து தொலைகிறார்கள்..! 

5 பேரை உயிருடன் பிடிக்கத் துப்பில்லாத இவர்கள்தான் இந்தியாவிலேயே மிகச் சிறந்த போலீஸாம்.. இதை இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்..! சம்பவத்தில் பலவித ஓட்டைகளை வைத்துக் கொண்டு இவர்கள் பின்னியிருக்கும் திரைக்கதையில்தான் இந்தியாவின் ஜனநாயகம் பல்லைக் காட்டுகிறது..! இந்த லட்சணத்துல இந்தியர்கள் ஒரே ஜாதியாம்.. இந்தியர்கள் ஒரே இனமாம்..! 

கேட்க நாதியில்லாத, தேடி வராத இந்தியர்களை பரலோகத்திற்கு பார்சல் கட்டியிருக்கும் இந்த ஐ.பி.எஸ்.கள்தான் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் மார்பில் கேடயங்களைக் குத்திக் கொண்டு தங்களது திருமதிகளை மகிழ்விக்கப் போகிறார்கள்..! அடுத்த வருஷ பரம்வீர்சக்ரா விருதை சந்தேகமே இல்லாமல் திரிபாதிக்கு வாரி வழங்கலாம்..!

இந்த 14 லட்சம் மீட்புக்கே 5 கொலைகள் என்றால் திரிபாதி இன்னமும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது..!

60 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத பணத்தினை சொத்தாக காட்டியிருக்கும் போயஸ் ஆத்தாவையும் இதேபோல் போட்டுத் தள்ளிவிட்டு வீட்டில் இருப்பவைகளை அள்ளிக் கொண்டு வந்தால் புண்ணியமாக இருக்கும்..!

ஆத்தாவின் முன்னாள் உடன்பொறவா சகோதரி மற்றும் அவரது உற்றார், உறவினர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமே பார்க்காமல் ஒரு குண்டைகூட வீணாக்காமல் செலவழித்தால் இன்னும் ஒரு 1000 கோடி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்..!

அப்படியே கோபாலபுரத்து பக்கம் போய் அங்கேயும் தனது வீர பராக்கிரமங்களைக் காட்டினால் 200 கோடி ரூபாய் கிடைத்தது போல.. 
கோபாலபுரத்து சொந்தங்களையும் இதேபோல் ரவுண்டு கட்டினால் நிச்சயமாக 10000 கோடி கிடைக்கும்.. இதை வைத்து 10 லட்சம் போலீஸாரை நியமித்து ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியின் வீட்டுக்கு 200 போலீஸாரை ஆர்டர்லியாக நியமித்து அவரவர் மனைவிமார்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம்..!

சி.ஐ.டி. காலனியில் ஒரு அம்மா இருக்கிறார். இப்போதுதான் உள்ளே போய்விட்டு வந்திருக்கிறார். கேட்கவே வேண்டாம். டெல்லி சிபிஐ கோர்ட்டே குற்றவாளி என்றே இப்போதும் கருதி வருகிறது. நீங்கள் துப்பாக்கியைத் தூக்கினால் அவர்கள் ஏதும் சொல்ல மாட்டார்கள். மாறாக, உங்களுக்கு பதவி உயர்வு உடனேயே கிடைத்தாலும் கிடைக்கலாம்..!

அப்படியே கொஞ்ச நாள் காத்திருங்கள். டெல்லியை வென்ற மாவீரன்.. தி.மு.க.வின் மானம் காத்த கொள்கை பரப்புச் செயலாளர் என்ற போஸ்டர் பாராட்டுதல்களோடு ராசா என்பவர் சென்னை விமான நிலையம் வழியாகத்தான் தமிழ்நாட்டுக்குள் கால் வைப்பார். இவரை போட்டுத் தள்ளினால் உங்களுக்கு எப்படியும் 1000 கோடியாவது கிடைக்குமாம்..!

உங்களிடம்தான் நிறைய உளவுத் துறை ஆட்கள் இருக்கிறார்களே..! ஏன் வீணாக்குகிறார்கள். ஒவ்வொரு அரசியல்வியாதி, கருப்புப் பணத்தில் உண்டு, களித்து உறங்கும் தொழிலதிபர்கள் என்று லிஸ்ட் எடுத்து எல்லோரையும் இதே போல் போட்டுத் தள்ளுங்க..! 

சர்வதேச நீதிமன்றமும், சர்வதேச போலீஸும் உங்களை அழைத்து கெளரவப்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். நாங்களும் உண்மையான இந்தியர் ஒருவரை இப்போது அடையாளம் கண்டு கொண்டோம் என்று பெருமைப்படுவோம்..!

69 comments:

பாலகுமார் said...

யாரு சார் இவங்களை கேள்வி கேட்கிறது? இதுக்கு எல்லாம் என்ன தான் தீர்வு.

சீனு said...

கேக்குறதுக்கு நல்லாத்தான் இருகும் உத. அங்க இருந்து பார்த்திருந்தா தெரிந்திருக்கும் நிலைமையின் தீவிரம்.

மொக்கை பதிவு.

சார்வாகன் said...

நல்ல பதிவு
அவர்களை உயிருடன் பிடித்து ,வழக்கு தொடுத்து தண்டனை வாங்கி கொடுக்க முடியாது என் முடிவு கட்டி செய்யப்பட்டதா!.
இல்லை எப்படியாவது காவல்துறை ,அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயரை துடைக்கும் முயற்சியா!.

இவை இரண்டை விட அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படுவது மிக முக்கியம் .இப்போது வழக்கு அப்படியே மேல் விசாரணையின்றி மூடப்படும்.

எப்படியோ காவல்துறை கொஞ்ச நாளைக்கு நாயகர்களாக வலம் வருவார்கள்.
நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[பாலகுமார் said...

யாரு சார் இவங்களை கேள்வி கேட்கிறது? இதுக்கு எல்லாம் என்னதான் தீர்வு.]]]

மக்களின் பயத்தை தங்களின் செயலுக்கு அச்சாணியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலீஸார். மனித நேயமிக்க தலைமை கிடைத்தால்தான் இதனையெல்லாம் தடுக்க முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

கேக்குறதுக்கு நல்லாத்தான் இருகும் உத. அங்க இருந்து பார்த்திருந்தா தெரிந்திருக்கும் நிலைமையின் தீவிரம்.

மொக்கை பதிவு.]]]

சந்தோஷம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சார்வாகன் said...
நல்ல பதிவு.
அவர்களை உயிருடன் பிடித்து, வழக்கு தொடுத்து தண்டனை வாங்கி கொடுக்க முடியாது என் முடிவு கட்டி செய்யப்பட்டதா! இல்லை எப்படியாவது காவல்துறை, அரசுக்கு ஏற்பட்ட அவப் பெயரை துடைக்கும் முயற்சியா! இவை இரண்டைவிட அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படுவது மிக முக்கியம். இப்போது வழக்கு அப்படியே மேல் விசாரணையின்றி மூடப்படும்.
எப்படியோ காவல்துறை கொஞ்ச நாளைக்கு நாயகர்களாக வலம் வருவார்கள்.
நன்றி]]]

ஆளை குளோஸ் செய்தால் கேஸ் முடிந்தபாடுதான்..! ஒரு நாள் வேலை மட்டும்தான். உயிருடன் பிடித்தால் கோர்ட், விசாரணை என்று இவர்களை வைத்து அலைய வேண்டுமே என்று யோசித்திருக்கிறார்கள். கூட, ஆத்தாவிடம் உடனடியாக நல்ல பேர் எடுப்பது எப்படின்னு யோசிச்சிருக்காங்க.. ஆத்தாவுக்கு ஆளை போட்டுத் தள்ளுறதுதான் ரொம்பப் புடிக்குமே..!செஞ்சுட்டாங்க..!

ரிஷி said...

நிலைமையின் தீவிரத்தைப் பற்றிப் பேசும் சீனு போன்றவர்கள் அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையின் தீவிரத்தைப் பற்றிப் பேசாதது ஆச்சரியம்தான்!

பேங்க்ல குருவி போல சேர்த்துவச்ச துட்ட கொள்ளையடிச்சா இப்படித்தான் வேணும்னு சில பேர் சொல்றாங்க. அவங்க குற்றவாளின்னு இவங்களே எப்படி முடிவு பண்றாங்கன்னே தெரியல.

இனிமே பேங்குல புகுந்து கொள்ளையடிக்க நினைக்கிறவங்க வயித்துல இது புளியக் கரைக்கும் சொல்றவங்க, இதே போல் நாலு மினிஸ்டரையும் ரெண்டு முதலமைச்சரையும் மக்களே போட்டுத் தள்ளுனா அதுக்கப்புறம் அவங்களும் கொள்ளையடிக்கப் பயப்படுவாங்களேனு மட்டும் சொல்ல மாட்றாங்க. இதுதான் எனக்கு ஆச்சரியம்!

ரிஷி said...

இது போன்ற என்கவுண்டர்களைப் பாராட்டுவோர் பேங்கில் கண்காணிப்பு கேமராக்கள் ஏன் இல்லை? துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் ஏன் இல்லை? அலாரம் வசதி ஏன் இல்லை? ஹாட்லைன் வசதி ஏன் இல்லை? என்றெல்லாம் கேட்க மறுக்கிறார்கள்! இது மற்றுமோர் ஆச்சரியம்!

RAVI said...

இந்தமாதிரி வீட்டுகுள்ள சிக்கி இருக்க குற்றவாளிகள உயிரோட பிடிக்க முடியலன்னு சொல்றதுக்கா அம்புட்டு போலீஸூ. விட்ட பொதுசனமே இந்த வேலையச் செஞ்சிரலாமே. இவிங்களுக்கு மாஸ்ட்டர் ப்ரைன்னு ஒருத்தன் இருந்தா அவனப் பிடிக்க வாய்ப்பே இல்லாமப் பூடுச்சே.

Vijai said...

All are in their game (police & politicians)...thats it...!!!

தமிழ்மலர் said...

என்கவுண்டரை ஆதரித்து பேசும் தமிழர்களே உலக அரங்கில் இரக்க குணம் அற்ற மிருகங்கள் தான் தமிழர்கள் என்ற பெயரை எடுத்து விடாதீர்கள்.

மனித உரிமைகள் பற்றி பேச உங்களுக்கு துளியும் யோக்கியதை இல்லை. உங்கள் தலைசிறந்த காவல்துறையால் இன்று நீங்கள் தலைகுனித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்கவுண்டர் என்பது வீரம் என்று யார் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது. கோழைகளே இனியாவது திருந்துங்கள்.

மனித உயிர்களுக்கு மதிப்பளியுங்கள். அது ஒன்றாய் இருந்தால் என்ன? ஐந்தாய் இருந்தால் என்ன? ஈழத்தில் இழந்த லட்சமாய் இருந்தால் என்ன?

சூனிய விகடன் said...

இந்த மாதிரி டூ மினிட்ஸ் நூடுல்ஸ் நீதி வழங்கல்கள், வெகு ஜன மத்தியில் ஒரு ஹீரோயிசமாகப் பார்க்கப்படுகிறது. போலிசாரின் உச்ச கட்ட அத்துமீறல்கள் சட்ட ஒழுங்குக்கான அத்தியாவசியங்களாகச் சித்தரிக்கப்படுகிறது. தங்களை எந்தப்போலிசாரும் நடுராத்திரியில் எழுப்பி சுட்டுக்கொல்லப் போவதில்லை என்ற நம்பிக்கையில் என்கவுன்ட்டர்களை வேகமாக ஆமோதிப்பவர்கள், தாங்களும் அந்த அத்துமீறல்களின் ஏதாவதொரு வடிவத்தைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்வதில்லை.

ஐந்து நாள் மேட்ச், அம்பது ஓவர்களாகி அப்புறமும் கட்டெறும்பாகி இருபதில் வந்து நிற்பது மாதிரி நீதியும் நமக்கு இன்ஸ்டன்ட் ஆக வேண்டுகிறோம். அதனால் தான் உடனடி அநீதி கூட நமக்கு நீதி வழங்கப்பட்ட திருப்தியைத் தருகிறது .காஷ்மீரின் பாரமுல்லாவில் நடப்பதற்கும் இங்கே கொசப்பேட்டையில் நடப்பதற்கும் என்கவுண்டர் என்று ஒரே பெயர் தான் சூட்டப்படுகிறது

நான்கு பெரிய கேஸ்களில் குற்றவாளிகள் சிக்கவில்லைஎனில் அடுத்து ஒரு என்கவுண்டர் நடக்கப்போகிறது என்பதை இப்போதெல்லாம் ஒரு எல்கேஜி பையனே சொல்லி விடுகிறான்

எதற்கும் இனிமேல் நடுராத்திரியில் யார் கதவைத் தட்டினாலும் திறந்து விட்டு விடலாம் என்றுதான் இருக்கிறேன்.திருடர்களாக இருந்தாலும் பரவாயில்லை .

Anonymous said...

போலீஸ்காரங்க சொல்றது ஒரு கதைன்னா அதெப்படி நீங்களும் பக்கத்துல சேர் போட்டு உக்கார்ந்து பார்த்த மாதிரி ஒரு கதை எழுதறீங்க? சிம்பிள். அவர்கள் சொன்ன கதைக்கு நேர்எதிர்கதை எழுதினா போதும் இல்லையா? உண்மையில் தேவை விசாரணை மட்டுமே. அவர்கள் சுட்டு வேறு யாராவது செத்திருந்தால்? போலீஸ்காரன் உயிர் போயிருந்தால் மனித உரிமை பிரச்னை வராது இல்லையா?
கொள்ளையன் சுட வந்தால் நீ அவனை கைது பண்ணலாமே என்கிறீர்கள்?
துப்பாக்கியால் சுடும்போது போலீஸ் மட்டும் பறந்து பறந்து கைது மட்டும் பண்ணனும் என்பது சினிமாத்தனமே!
இதில்உள்ள விபரீதம் போலீஸூக்கு கொலை செய்ய அதிகாரம் இல்லை என்று உணர்த்துவதுதான். வேறு வழியில்லை விசாரணைதான். மனித உரிமை கமிஷன் மூலம்தான் நடக்கணும்.
என்னைப் பொறுத்தவரை மனித உரிமை கொள்ளையனுக்கு மட்டும் அல்ல போலீஸூக்கும் இருக்கு. ஆனால் போலீஸூக்கு அதெல்லாம் கிடையாது என்பது இப்போதெல்லாம் 'முற்போக்கு' விவாதம்.
நமக்கு ஒண்ணும் தெரியாது என்பது தான் உண்மை.காத்திருப்பதுதான் ஒரே வழி!

Anonymous said...

உண்மையில் 'முற்போக்கு'வாதிகள்தான் போலீஸை 'சூப்பர்மேன்' என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நிறைய சினிமாக்கள் பார்த்துவிட்டு. சினிமாவில் வருவது போலவே ஏ.ஸி.ஜிம்னாஸ்டிக் வேலை செய்து கைது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது.குத்தம் சொல்லலாம்.ஆனால் விசாரணை முடியும் முன்பே எப்படி தைரியமா அடிச்சு விடறீங்க..?

பேங்க்கில் கொள்ளை அடிக்கிறவன் பிக்பாக்கெட் அடிக்கிறவன் மாதிரி கையில் ப்ளேடு வைத்துக் கொண்டா அடிப்பான். தனக்கு குறுக்கே வருகிறவனை போட்டுத் தள்ளும் வெறியோடு இருக்கமாட்டானா? அவன் என் உ.தமிழன் இல்லை சில்டு பியர் மாதிரி பொட்டி தட்டி ப்ளாக் எழுதுகிற மனநிலையிலா இருப்பான்? :(

நிச்சயம் உயிரோடு பிடிபட்டிருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சூழ்நிலை எப்படி? அதைக் கேள்வி கேட்பவர்கள் குற்றம்சாட்டிவிட்டு எப்படி கேட்கிறார்கள்? இதுதான் புரியவில்லை.
ஒன்று வேண்டுமானால் சொல்லலாம்...இது சரிதான் தேவைதான் என்று வீட்டில் உக்கார்ந்து சொல்கிறவர்களுக்கான பதில்தான் உங்கள் பதிவு என்று வேண்டுமானால் சொல்லலாம். வேறு வழியே இல்லை.விசாரணைதான்.(அதுல என்ன நடக்கும்னு தெரியாதா? என்று சலித்துக் கொண்டாலும் அதுதான் வழி)

ஐந்து போலீஸ்காரன் செத்தாலும் துப்பாக்கியால் சுடுபவர்களை உயிரோடு பிடித்திருக்கணும் என்று சொல்லமுடியுமா? உண்மைகள் இரண்டு பக்கமும் இறைந்து கிடக்கின்றன.நிச்சயம் பொய்களும்.நியாயமான விசாரணைக்கு கோரவேண்டும். இதை எல்லாரும் செய்யவேண்டும்.

Anonymous said...

//இதில்உள்ள விபரீதம் போலீஸூக்கு கொலை செய்ய அதிகாரம் இல்லை என்று உணர்த்துவதுதான்.//

'இதில்உள்ள விபரீதம் போலீஸூக்கு கொலை செய்ய அதிகாரம் இருக்கு என்று நினைத்துவிடக்கூடாது என்று உணர்த்துவதுதான்' என்று படிக்கவும்

ரிஷி said...

ஹாய் ச்சில்டு பீர்!
"நமக்கு ஒண்ணும் தெரியாது என்பதுதான் உண்மை" என்பது சாலவும் சரி. ஆனால் இந்த 'காமன்சென்ஸ்'னு ஒன்னு சொல்றாங்களே.. அதக் கொஞ்சம் யூஸ் பண்ணவும் கத்துக்கலாமே! பொத்தாம்பொதுவாக இது போன்ற கருத்துகளை உதிர்ப்பதை விட ஆணித்தரமாக ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியே மறுக்க முயற்சிக்கலாமே! ஏன் முடியவில்லை?

மற்றபடி, இது போன்ற சினிமாத்தனமான என்கவுண்ட்டர்களை ஆதரிக்கும் மனோபாவம் வெகுஜனத்திடம் இருப்பது பெரும் ஆபத்தான ஒரு விஷயமாகக் கருதுகிறேன்.

Anonymous said...

இது போன்ற சினிமாத்தனமான என்கவுண்ட்டர்களை ஆதரிக்கும் மனோபாவம் வெகுஜனத்திடம் இருப்பது பெரும் ஆபத்தான ஒரு விஷயமாகக் கருதுகிறேன்.// நிச்சயம் ஆபத்துதான்.போலீஸை ஆதரிக்க முடியாது. ஆனால் என்ன நடந்தது என்று தெரியாமல் எப்படி குற்றம் சொல்ல முடிகிறது?

இப்படி இருந்திருக்க'லாம்' அப்படி செய்திருக்க'லாம்' என்று ஏகப்பட்ட லாம் போட்டு எழுதுவது ஆதிரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் இரண்டு பேருமே எழுதக்கூடியதுதானே!

SIV said...

தமிழக போலீஸ் பவர் ஸ்டார், விசயகாந்த் படங்கள் நிறைய பார்ப்பார்கள் போல..

ரிஷி said...

@Chilled Beers

:-)

Anonymous said...

ஆனால் இந்த 'காமன்சென்ஸ்'னு ஒன்னு சொல்றாங்களே.. அதக் கொஞ்சம் யூஸ் பண்ணவும் கத்துக்கலாமே!// அறிவு ஜீவிகள் மற்றும் பாமரன்களின் காமன்சென்ஸ் சினிமாத்தனத்திலிருந்தே வருகிறது. பின்னர் அதை மட்டும் யூஸ் பண்ணி என்ன செய்ய.

ஒன்று 'என்கவுன்டர் சூப்பர்' என்று குதிக்கிற இல்லையெனில் 'போலீஸை மட்டும் மிருகம்' என்றும் 'கொள்ளையன்/திருடன்/கொலைகாரன்' இவர்கள் எல்லாம் குழந்தைகள்,வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாதவர்கள், மனித உரிமையில் சேர்ந்தவர்கள் என்று எழுதுகிற காமன்சென்ஸ் உள்ள அ.ஜீவிகள்...என்ற நிலையில் காமன் சென்ஸ் என்று எதை சொல்கிறீர்கள்.

நிஜ போலீஸை சினிமா போலீஸா நினைத்து தன் அபிப்பாரயத்தை உருவாக்கிக்கொள்கிறவர்கள் 'என்கவுன்ட்ரை ஆதரிக்கிறவர்கள்' மட்டுமல்ல போலீஸை ஒரு சூப்பர்மேனாக நினைக்கிற முற்போக்குவாதிகளும் கூடத்தான்.

Anonymous said...

இந்த பதிவில் உள்ள ஒரு இணைப்பில் உள்ள பழைய பதிவைப் பார்த்தேன்.என் அபிப்ராயமும் என்கவுன்ட்டர் கட்டுப்படுத்தப்பட வேண்டியதுதான்.ஆனால் இந்த வரிகள் வீரமணியைப் பற்றிதெரிந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.

//மெரீனா கடற்கரையில் ஒரு விடியற்காலையில் படகருகே நின்று கொண்டு வலையைக் கட்டிக் கொண்டிருந்த வீரமணி என்னும் மனிதனை கொல்லத் துவங்கி//

ஆஹா...ஒரு அப்பாவி மீனவனின் பிம்பத்தை வீரமணிக்குப் பொருத்திப் பார்த்து எழுதியிருக்கிறார். சத்தியமாக இது மணிரத்னத்தின் பட காட்சிதான்.என் கேள்வி அப்படியே இருக்கிறது காமன்சென்ஸ் சினிமாத்தனத்தில் இருந்து வருமானால்.......????????

வீரமணி அப்படி ஒன்றும் எளிய மீனவன் கிடையாது.(அதற்காக கொலை நியாயம் கிடையாது!)

ரிஷி said...

@Chilled Beer,
உங்கள் எளிமையான தத்துவங்களுக்கு என் வந்தனங்கள்! என் பங்குக்கு நானொரு தத்துவத்தையும் உதிர்க்கிறேன்.

"கற்பனையை விட உண்மை பயங்கரமானது" :-(

the so called சினிமாத்தனங்களிலிருந்து கிடைக்கும் காமன்ஸென்ஸ் கொடுக்கும் அனுமானத்தை விட, கற்பனையை விட... உண்மை மிக மிக பயங்கரமானதாக இருக்கும் in either ways! :-((

aotspr said...

எல்லாம் அதிகாரத்தின்........... ஆணவம் தான் ........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

நெல்லை கபே said...

ஒரு நல்ல நீதிபதி விசாரணை செய்யவேண்டிய விஷயம் இது.என்கவுன்ட்டர் தொடர விட்டால் போலீஸ் அராஜகம் அதிகமாகிடும். ஆனால் இது என்கவுன்ட்டர் இல்லை என்கிறார்கள் அவர்கள். அது விசாரணையில்தான் தெரியவரும். அதற்கு முன் போலீஸ் மேலதான் தப்பு என்று நம் காமன்சென்ஸ் பயன்படுத்தி சொல்வது சரி என்று படவில்லை. பொறுத்திருக்க வேண்டியதுதான்.நம் காமன்சென்ஸ் இதுக்கு முன்பு நடந்ததின் அடிப்படையில்தான் இருக்கும். இரவு அந்த சூழ்நிலை என்னவென்று யாருக்குத் தெரியும்?

வீட்டுக்குள்ளே எத்தனை துப்பாக்கி இருக்க,குண்டுகள் இருக்கா என்று நுணுக்கமான விபரம் அறிந்தவர்கள் போலீஸ் என்று சொல்வதை நான் நம்பவில்லை. அது சினிமா போலீஸ்.நிஜம் அப்படியா?

நெல்லை கபே said...

இந்த என்கவுன்ட்டர் அரசியல்வாதிகளின் கொள்ளையைப் பற்றி அதிகம் பேச வைத்திருக்கிறது என்பதே உண்மை.மக்களிடம் அவங்களையும் போடணும் சார் என்றே பேசுகிறார்கள். ஆனால் அதற்காக இருபது லட்சம் ஒரு பணமா என்று கேட்பது சரியா?

நெல்லை கபே said...

தமிழக போலீஸூக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ். விளக்கம் அளிக்க...

http://news.vikatan.com/index.php?nid=6769

விளக்கம் வந்ததும் நோண்டி நுங்கெடுக்க முடியுமா என்று பாக்கணும்.

benjamin david said...

ஒருத்தனை கூடவா உயிருடன் பிடிக்க முடியவில்லை ?.............. போலீஸ் மீது பலத்த சந்தேகமே எழுகிறது.உண்மை விவரங்கள் வெளிப்படும் என்ற நம்பிக்கை இல்லை.

Anonymous said...

What is your stand on Kasab ?

khaleel said...

china and saudi arabia are far better in human rights. comparing this stupids with scotland yard is a shame for scotland yard.A

ராஜ நடராஜன் said...

முன்னே போனால் முட்டும்,பின்னால் போனால் உதைக்குங்கிற கதையாக காவல்துறையின் நிலை.உண்மையான குற்றவாளிக்ளாக இருந்து பிடிபட்டு பின் கோர்ட்,விசாரணையென நீண்ட கால நீதித்துறை காலங்கள் மக்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தவும்,தொடர்ந்து இது போன்று இன்னொருவரும் குற்றம் செய்யும்படியான சமூக சூழலை உருவாக்கி விடுகிறது.

குற்றவாளிகளாக இல்லாமல் இருந்து எதையாவது ஒன்றை மூடி மறைக்கவோ அல்லது அரசியல் மாற்றுக்காரணங்களுக்காகவோ இப்படி துப்பாக்கிச் சூடுகள் நிகழ்கின்றனவா என்ற வெளிப்படைத் தன்மையற்ற சூழலும்,அதிகார சூழலில் நிகழும் தவறுகளுமென இன்னுமொரு பக்கமிருக்கிறது.

நிகழ்வு குறித்து எதுவாக இருந்தாலும் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம்.தற்போதைய தொழில்நுட்ப சூழல்,காமிரா சகிதம் நிகழ்வை பொதுமக்களுக்கு விளக்குவதில் காவல்துறைக்கு சிரமம் இல்லையென்றே நினைக்கின்றேன்.

அரசியல்வாதிகள் குறித்த தாக்கு மிகவும் வெளிப்படையான அதே நேரத்தில் ஜனநாயக நம்பிக்கைகளை குழி தோண்டிப் புதைத்து விடுகின்ற கோபமான வாதம்.அதே நேரத்தில் 2G யாவது கழுதையாவது என இவர்கள் மீண்டும் அரசியலில் வலம் வரவும் அதற்கென்று தலையாட்டு பொம்மைகளாய் தொண்டர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

ஜெயலலிதா மாறுவார் என எதிர்பார்த்தால் நிகழ்கிற ஒன்றாக இல்லை என்பதை அரசியல் நகர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

காவல்துறையைப் பொறுத்த வரையில் தீர்மானிக்க ஒன்றாக இல்லாமல் நீதித்துறை குறித்த தீர்ப்பே சரியாக இருக்கும்.அது காலதாமதமாக இருந்தாலும் கூட.

Unknown said...

athu sari.potti keduchchuthunnu ishtaththum ezhutha koodaathu.Police-kaararkalin velai onnum laddu thinnuvathu pola illai.oru naal vanthu velai paarunga.oorukke odi poiduveenga.

சீனு said...

ரிஷி,

//நிலைமையின் தீவிரத்தைப் பற்றிப் பேசும் சீனு போன்றவர்கள் அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையின் தீவிரத்தைப் பற்றிப் பேசாதது ஆச்சரியம்தான்!//

நான் என்கவுட்டரை எல்லாம் ஆதரிக்கவில்லை. ஆனால், உத பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதியிருப்பது தான் சகிக்கவில்லை. நியூஸ் கிடைச்சதும் விடிய விடிய உக்காந்து பரபரப்பா பதுவு போடனும்னு அடிச்சு விட்டிருக்கார். அதைத்தான் சொல்றேன்.

என்கவுன்ட்டரை ஆதரிச்சா, பின்னாடி ரிவிட்டு ரிவர்ஸுல ஒர்க் அவுட் ஆகுமின்னு தெரியும்.

எல்லா பிரச்சினைகளின் ஆரம்பம் ஊழல். ஊழல் தழைப்பதற்கு காரணம் நீதித்துறை ஆமை வேகத்தில் நடப்பது. ஆணிவேர் நீதித்துறையில் உள்ளது. அதை மாற்றத்தான் நாம் போராடவேண்டும். ஒரு குற்றவாளியை பிடித்து நீதித்துறையின் முன் நிறுத்தி தண்டிப்பதை வேகமுடன் செயல்படவைத்தால் இவை போன்றவைகள் குறையும். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு பரபரப்பாக நடப்பதை தான் உத-வும் விமர்சனம் செய்கிறார். அதைத்தான் வேண்டாம் என்கிறேன்.

Anonymous said...

சினிமாத்தனங்களிலிருந்து கிடைக்கும் காமன்ஸென்ஸ் கொடுக்கும் அனுமானத்தை விட, கற்பனையை விட... உண்மை மிக மிக பயங்கரமானதாக இருக்கும் in either ways!// 100% ஒத்துப் போகிறேன் இந்தக் கருத்துடன். அதனால்தான் நாம் கற்பனை கொடுக்கிற ஆசுவாசத்திற்காக உண்மையை விட்டுவிடுகிறோம்.

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

நிலைமையின் தீவிரத்தைப் பற்றிப் பேசும் சீனு போன்றவர்கள் அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையின் தீவிரத்தைப் பற்றிப் பேசாதது ஆச்சரியம்தான்! பேங்க்ல குருவி போல சேர்த்து வச்ச துட்ட கொள்ளையடிச்சா இப்படித்தான் வேணும்னு சில பேர் சொல்றாங்க. அவங்க குற்றவாளின்னு இவங்களே எப்படி முடிவு பண்றாங்கன்னே தெரியல. இனிமே பேங்குல புகுந்து கொள்ளையடிக்க நினைக்கிறவங்க வயித்துல இது புளியக் கரைக்கும் சொல்றவங்க, இதே போல் நாலு மினிஸ்டரையும் ரெண்டு முதலமைச்சரையும் மக்களே போட்டுத் தள்ளுனா அதுக்கப்புறம் அவங்களும் கொள்ளையடிக்கப் பயப்படுவாங்களேனு மட்டும் சொல்ல மாட்றாங்க. இதுதான் எனக்கு ஆச்சரியம்!]]]

கண்ணுக்குத் தெரியற கொள்ளைக்காரன்தானைப் பத்திதான் அவங்களுக்குக் கவலை.. நம்ம கண்ணு முன்னாடியே வேட்டியை உருவறவன்கிட்ட சமாதானம் பேசுவாங்க போல..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

இது போன்ற என்கவுண்டர்களைப் பாராட்டுவோர் பேங்கில் கண்காணிப்பு கேமராக்கள் ஏன் இல்லை? துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் ஏன் இல்லை? அலாரம் வசதி ஏன் இல்லை? ஹாட்லைன் வசதி ஏன் இல்லை? என்றெல்லாம் கேட்க மறுக்கிறார்கள்! இது மற்றுமோர் ஆச்சரியம்!]]]

அதையெல்லாம் அவர்கள் யோசிப்பதே இல்லை.. திருடன் கைல கிடைச்சா நாலு சாத்து சாத்துவாங்க. மறுபடியும் வீட்டைத் திறந்து போட்டுட்டுத்தான் தூங்குவாங்க..1

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

இந்த மாதிரி வீட்டுகுள்ள சிக்கி இருக்க குற்றவாளிகள உயிரோட பிடிக்க முடியலன்னு சொல்றதுக்கா அம்புட்டு போலீஸூ. விட்ட பொதுசனமே இந்த வேலையச் செஞ்சிரலாமே. இவிங்களுக்கு மாஸ்ட்டர் ப்ரைன்னு ஒருத்தன் இருந்தா அவனப் பிடிக்க வாய்ப்பே இல்லாமப் பூடுச்சே.]]]

இதுவே திரிபாதி என்பவரின் தனி மனித ஆசைக்காக நடத்தப்பட்டது. மக்களுக்காக இல்லை..! தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் செய்திருக்கும் படுகொலைகள்தான் இவை..!

உண்மைத்தமிழன் said...

[[[Vijai said...

All are in their game (police & politicians)...thats it...!!!]]]

மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். 5 பேரைகூட உயிருடன் பிடிக்க இயலாதவர்களை யார் கேள்வி கேட்பது..

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்மலர் said...

என்கவுண்டரை ஆதரித்து பேசும் தமிழர்களே உலக அரங்கில் இரக்க குணம் அற்ற மிருகங்கள்தான் தமிழர்கள் என்ற பெயரை எடுத்து விடாதீர்கள். மனித உரிமைகள் பற்றி பேச உங்களுக்கு துளியும் யோக்கியதை இல்லை. உங்கள் தலைசிறந்த காவல்துறையால் இன்று நீங்கள் தலைகுனித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
என்கவுண்டர் என்பது வீரம் என்று யார் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது. கோழைகளே இனியாவது திருந்துங்கள். மனித உயிர்களுக்கு மதிப்பளியுங்கள். அது ஒன்றாய் இருந்தால் என்ன? ஐந்தாய் இருந்தால் என்ன? ஈழத்தில் இழந்த லட்சமாய் இருந்தால் என்ன?]]]

அனைத்து நாடுகளிலும் அரச அதிகாரத்தை, அரச துஷ்பிரயோகத்தை நாம் எதிர்க்கத்தான் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

சூனிய விகடன் said...

எதற்கும் இனிமேல் நடுராத்திரியில் யார் கதவைத் தட்டினாலும் திறந்து விட்டு விடலாம் என்றுதான் இருக்கிறேன்.திருடர்களாக இருந்தாலும் பரவாயில்லை.]]]

ஹா.. ஹா.. நானும் இதைத்தான் நினைக்கிறேன் ஸார்..! கதவைத் தட்டினாங்களாம்.. திறக்கலையாம்..! சுட்டாங்களாம்.. பதிலுக்குச் சுட்டாங்களாம்.. சினிமா கதை விடுறாங்க..

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

போலீஸ்காரங்க சொல்றது ஒரு கதைன்னா அதெப்படி நீங்களும் பக்கத்துல சேர் போட்டு உக்கார்ந்து பார்த்த மாதிரி ஒரு கதை எழுதறீங்க? சிம்பிள். அவர்கள் சொன்ன கதைக்கு நேர் எதிர்கதை எழுதினா போதும் இல்லையா? உண்மையில் தேவை விசாரணை மட்டுமே. அவர்கள் சுட்டு வேறு யாராவது செத்திருந்தால்? போலீஸ்காரன் உயிர் போயிருந்தால் மனித உரிமை பிரச்னை வராது இல்லையா? கொள்ளையன் சுட வந்தால் நீ அவனை கைது பண்ணலாமே என்கிறீர்கள்?
துப்பாக்கியால் சுடும்போது போலீஸ் மட்டும் பறந்து பறந்து கைது மட்டும் பண்ணனும் என்பது சினிமாத்தனமே!
இதில் உள்ள விபரீதம் போலீஸூக்கு கொலை செய்ய அதிகாரம் இல்லை என்று உணர்த்துவதுதான். வேறு வழியில்லை விசாரணைதான். மனித உரிமை கமிஷன் மூலம்தான் நடக்கணும். என்னைப் பொறுத்தவரை மனித உரிமை கொள்ளையனுக்கு மட்டும் அல்ல போலீஸூக்கும் இருக்கு. ஆனால் போலீஸூக்கு அதெல்லாம் கிடையாது என்பது இப்போதெல்லாம் 'முற்போக்கு' விவாதம். நமக்கு ஒண்ணும் தெரியாது என்பதுதான் உண்மை. காத்திருப்பதுதான் ஒரே வழி!]]]

இன்னும் எத்தனை படுகொலைகளுக்குப் பின்பு இதையே சொல்லச் சொல்கிறீர்கள் ஸார்.. இதுவரையில் 75 இந்தியர்களை இதேபோல் படுகொலை செய்திருக்கிறது தமிழகத்து போலீஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

நிச்சயம் உயிரோடு பிடிபட்டிருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சூழ்நிலை எப்படி? அதைக் கேள்வி கேட்பவர்கள் குற்றம்சாட்டிவிட்டு எப்படி கேட்கிறார்கள்? இதுதான் புரியவில்லை. ஒன்று வேண்டுமானால் சொல்லலாம். இது சரிதான் தேவைதான் என்று வீட்டில் உக்கார்ந்து சொல்கிறவர்களுக்கான பதில்தான் உங்கள் பதிவு என்று வேண்டுமானால் சொல்லலாம். வேறு வழியே இல்லை. விசாரணைதான்.(அதுல என்ன நடக்கும்னு தெரியாதா? என்று சலித்துக் கொண்டாலும் அதுதான் வழி)
ஐந்து போலீஸ்காரன் செத்தாலும் துப்பாக்கியால் சுடுபவர்களை உயிரோடு பிடித்திருக்கணும் என்று சொல்ல முடியுமா? உண்மைகள் இரண்டு பக்கமும் இறைந்து கிடக்கின்றன. நிச்சயம் பொய்களும். நியாயமான விசாரணைக்கு கோர வேண்டும். இதை எல்லாரும் செய்ய வேண்டும்.]]]

போலீஸின் சதிச் செயல்களை நிறையவே பார்த்தாகிவிட்டது. அதனால்தான் நம்ப மறுக்கிறது மனம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

//இதில்உள்ள விபரீதம் போலீஸூக்கு கொலை செய்ய அதிகாரம் இல்லை என்று உணர்த்துவதுதான்.//

'இதில் உள்ள விபரீதம் போலீஸூக்கு கொலை செய்ய அதிகாரம் இருக்கு என்று நினைத்துவிடக் கூடாது என்று உணர்த்துவதுதான்' என்று படிக்கவும்.]]]

ரெண்டுமே ஒண்ணுதான..

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ஹாய் ச்சில்டு பீர்!

"நமக்கு ஒண்ணும் தெரியாது என்பதுதான் உண்மை" என்பது சாலவும் சரி. ஆனால் இந்த 'காமன்சென்ஸ்'னு ஒன்னு சொல்றாங்களே.. அதக் கொஞ்சம் யூஸ் பண்ணவும் கத்துக்கலாமே! பொத்தாம் பொதுவாக இது போன்ற கருத்துகளை உதிர்ப்பதைவிட ஆணித்தரமாக ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியே மறுக்க முயற்சிக்கலாமே! ஏன் முடியவில்லை?

மற்றபடி, இது போன்ற சினிமாத்தனமான என்கவுண்ட்டர்களை ஆதரிக்கும் மனோபாவம் வெகுஜனத்திடம் இருப்பது பெரும் ஆபத்தான ஒரு விஷயமாகக் கருதுகிறேன்.]]]

அவரவர்க்கு விருப்பமான முறையில்தான் பதில் வரும் ரிஷி..! தாங்கள் எப்போதுமே தவறு செய்ததில்லை. செய்ய மாட்டோம் என்று நம்பிக் கொள்ளும் ஒரு கூட்டம்தான் இதனையும் சொல்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

இது போன்ற சினிமாத்தனமான என்கவுண்ட்டர்களை ஆதரிக்கும் மனோபாவம் வெகுஜனத்திடம் இருப்பது பெரும் ஆபத்தான ஒரு விஷயமாகக் கருதுகிறேன்.// நிச்சயம் ஆபத்துதான்.போலீஸை ஆதரிக்க முடியாது. ஆனால் என்ன நடந்தது என்று தெரியாமல் எப்படி குற்றம் சொல்ல முடிகிறது?

இப்படி இருந்திருக்க'லாம்' அப்படி செய்திருக்க'லாம்' என்று ஏகப்பட்ட லாம் போட்டு எழுதுவது ஆதிரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் இரண்டு பேருமே எழுதக் கூடியதுதானே!]]]

இதில் ஏதாவது ஒரு பக்கம்தானே நீங்கள் நிற்க முடியும்..! ஏன் நழுவுகிறீர்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[SIV said...

தமிழக போலீஸ் பவர் ஸ்டார், விசயகாந்த் படங்கள் நிறைய பார்ப்பார்கள் போல..]]]

துப்பாக்கியை கைல கொடுத்து, என்ன வேண்ணாலும் பண்ணலாம்.. கேட்கவே மாட்டோம்ன்னு மட்டும் சொல்லிப் பாருங்க.. என்ன நடக்குதுன்னு..

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

அறிவு ஜீவிகள் மற்றும் பாமரன்களின் காமன்சென்ஸ் சினிமாத்தனத்திலிருந்தே வருகிறது. பின்னர் அதை மட்டும் யூஸ் பண்ணி என்ன செய்ய. ஒன்று 'என்கவுன்டர் சூப்பர்' என்று குதிக்கிற இல்லையெனில் 'போலீஸை மட்டும் மிருகம்' என்றும் 'கொள்ளையன்/திருடன்/கொலைகாரன்' இவர்கள் எல்லாம் குழந்தைகள்,வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாதவர்கள், மனித உரிமையில் சேர்ந்தவர்கள் என்று எழுதுகிற காமன்சென்ஸ் உள்ள அ.ஜீவிகள். என்ற நிலையில் காமன்சென்ஸ் என்று எதை சொல்கிறீர்கள். நிஜ போலீஸை சினிமா போலீஸா நினைத்து தன் அபிப்பாரயத்தை உருவாக்கிக் கொள்கிறவர்கள் 'என்கவுன்ட்ரை ஆதரிக்கிறவர்கள்' மட்டுமல்ல போலீஸை ஒரு சூப்பர்மேனாக நினைக்கிற முற்போக்குவாதிகளும் கூடத்தான்.]]]

நான் வன்முறையை யார் நிகழ்த்தினாலும் அது தவறுதான். சட்டப்படிதான் அதற்கு பரிகாரம் தேட வேண்டும் என்று சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

Chilled Beers said...

//மெரீனா கடற்கரையில் ஒரு விடியற்காலையில் படகருகே நின்று கொண்டு வலையைக் கட்டிக் கொண்டிருந்த வீரமணி என்னும் மனிதனை கொல்லத் துவங்கி//

ஆஹா. ஒரு அப்பாவி மீனவனின் பிம்பத்தை வீரமணிக்குப் பொருத்திப் பார்த்து எழுதியிருக்கிறார். சத்தியமாக இது மணிரத்னத்தின் பட காட்சிதான்.என் கேள்வி அப்படியே இருக்கிறது காமன்சென்ஸ் சினிமாத்தனத்தில் இருந்து வருமானால்.......????????
வீரமணி அப்படி ஒன்றும் எளிய மீனவன் கிடையாது.(அதற்காக கொலை நியாயம் கிடையாது!)]]]

அதென்ன 2 பக்கமும் பேசுறது.. வீரமணி சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நான் சொல்லவில்லை. அவரைப் பற்றியும் எனக்குத் தெரியும். விசாரணை, கோர்ட் என்றெல்லாம் சென்றுதான் அவர் செய்த தவறுகளைத் தண்டிக்க முடியும். கேள்வியே கேட்காமல் அவருக்கு மரண தண்டனை கொடுக்க போலீஸுக்கு யார் அதிகாரம் கொடுத்தது..

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
@Chilled Beer,
உங்கள் எளிமையான தத்துவங்களுக்கு என் வந்தனங்கள்! என் பங்குக்கு நானொரு தத்துவத்தையும் உதிர்க்கிறேன்.

"கற்பனையை விட உண்மை பயங்கரமானது" :-(

the so called சினிமாத்தனங்களிலிருந்து கிடைக்கும் காமன்ஸென்ஸ் கொடுக்கும் அனுமானத்தைவிட, கற்பனையை விட... உண்மை மிக மிக பயங்கரமானதாக இருக்கும் in either ways! :-((]]]

அவர்கள் கொள்ளையர்களாகவே இருக்கட்டும். உயிருடன் பிடித்து கோர்ட்டில் நிறுத்தி தண்டனையை வாங்கித் தருவதை விட்டுவிட்டு சுட்டுக் கொல்வது எந்தச் சட்டப்படி சரியானது..

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...

எல்லாம் அதிகாரத்தின்........... ஆணவம் தான் ........]]]

அதிகாரத் திமிர்.. ஆணவத்தின் உச்சக்கட்டம்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாயன்:அகமும் புறமும் said...

ஒரு நல்ல நீதிபதி விசாரணை செய்ய வேண்டிய விஷயம் இது.என்கவுன்ட்டர் தொடர விட்டால் போலீஸ் அராஜகம் அதிகமாகிடும். ஆனால் இது என்கவுன்ட்டர் இல்லை என்கிறார்கள் அவர்கள். அது விசாரணையில்தான் தெரிய வரும். அதற்கு முன் போலீஸ் மேலதான் தப்பு என்று நம் காமன்சென்ஸ் பயன்படுத்தி சொல்வது சரி என்று படவில்லை. பொறுத்திருக்க வேண்டியதுதான்.நம் காமன்சென்ஸ் இதுக்கு முன்பு நடந்ததின் அடிப்படையில்தான் இருக்கும். இரவு அந்த சூழ்நிலை என்னவென்று யாருக்குத் தெரியும்?
வீட்டுக்குள்ளே எத்தனை துப்பாக்கி இருக்க, குண்டுகள் இருக்கா என்று நுணுக்கமான விபரம் அறிந்தவர்கள் போலீஸ் என்று சொல்வதை நான் நம்பவில்லை. அது சினிமா போலீஸ்.நிஜம் அப்படியா?]]]

இதுவரையில் நடந்த படுகொலைகளில் எந்தக் கொலைக்கு இங்கே நியாயம் கிடைத்திருக்கிறது..

உண்மைத்தமிழன் said...

[[[மாயன்:அகமும் புறமும் said...

இந்த என்கவுன்ட்டர் அரசியல்வாதிகளின் கொள்ளையைப் பற்றி அதிகம் பேச வைத்திருக்கிறது என்பதே உண்மை. மக்களிடம் அவங்களையும் போடணும் சார் என்றே பேசுகிறார்கள். ஆனால் அதற்காக இருபது லட்சம் ஒரு பணமா என்று கேட்பது சரியா?]]]

அப்படியல்ல.. பணத்தை மையமாக வைத்துதானே இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது..

உண்மைத்தமிழன் said...

[[[மாயன்:அகமும் புறமும் said...

தமிழக போலீஸூக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ். விளக்கம் அளிக்க...

http://news.vikatan.com/index.php?nid=6769

விளக்கம் வந்ததும் நோண்டி நுங்கெடுக்க முடியுமா என்று பாக்கணும்.]]]

அதெல்லாம் ஒண்ணும் நடக்காது.. போலீஸுக்கு எதிரா யார் சாட்சி சொல்லப் போறா.. இதுவும் சுடுகாட்டுக்குத்தான் போவும்..

உண்மைத்தமிழன் said...

[[[benjamin david said...

ஒருத்தனை கூடவா உயிருடன் பிடிக்க முடியவில்லை? போலீஸ் மீது பலத்த சந்தேகமே எழுகிறது. உண்மை விவரங்கள் வெளிப்படும் என்ற நம்பிக்கை இல்லை.]]]

பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் செய்யலாம். அவர்களுக்குத்தான் அந்த நோக்கமே இல்லையே.. கேஸை மூடிவிடுவதுதான் அவர்களது நோக்கம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ramesh said...

What is your stand on Kasab?]]]

தூக்கில் போடக் கூடாது என்பதுதான்..

உண்மைத்தமிழன் said...

[[[khaleel said...

china and saudi arabia are far better in human rights. comparing this stupids with scotland yard is a shame for scotland yard.]]]

தங்களைத் தாங்களே இப்படிச் சொல்லிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

முன்னே போனால் முட்டும், பின்னால் போனால் உதைக்குங்கிற கதையாக காவல்துறையின் நிலை. உண்மையான குற்றவாளிக்ளாக இருந்து பிடிபட்டு பின் கோர்ட், விசாரணையென நீண்ட கால நீதித்துறை காலங்கள் மக்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தவும்,தொடர்ந்து இது போன்று இன்னொருவரும் குற்றம் செய்யும்படியான சமூக சூழலை உருவாக்கி விடுகிறது.
குற்றவாளிகளாக இல்லாமல் இருந்து எதையாவது ஒன்றை மூடி மறைக்கவோ அல்லது அரசியல் மாற்றுக் காரணங்களுக்காகவோ இப்படி துப்பாக்கிச் சூடுகள் நிகழ்கின்றனவா என்ற வெளிப்படைத் தன்மையற்ற சூழலும், அதிகார சூழலில் நிகழும் தவறுகளுமென இன்னுமொரு பக்கமிருக்கிறது. நிகழ்வு குறித்து எதுவாக இருந்தாலும் வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியம். தற்போதைய தொழில்நுட்ப சூழல், காமிரா சகிதம் நிகழ்வை பொதுமக்களுக்கு விளக்குவதில் காவல்துறைக்கு சிரமம் இல்லையென்றே நினைக்கின்றேன்.
அரசியல்வாதிகள் குறித்த தாக்கு மிகவும் வெளிப்படையான அதே நேரத்தில் ஜனநாயக நம்பிக்கைகளை குழி தோண்டிப் புதைத்து விடுகின்ற கோபமான வாதம். அதே நேரத்தில் 2G யாவது கழுதையாவது என இவர்கள் மீண்டும் அரசியலில் வலம் வரவும் அதற்கென்று தலையாட்டு பொம்மைகளாய் தொண்டர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
ஜெயலலிதா மாறுவார் என எதிர்பார்த்தால் நிகழ்கிற ஒன்றாக இல்லை என்பதை அரசியல் நகர்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
காவல் துறையைப் பொறுத்தவரையில் தீர்மானிக்க ஒன்றாக இல்லாமல் நீதித் துறை குறித்த தீர்ப்பே சரியாக இருக்கும். அது காலதாமதமாக இருந்தாலும்கூட.]]]

நீதித்துறையும் இதற்கு முலாம் பூசி மறுக்கத்தான் செய்யும்.. வேண்டுமானால் காத்திருந்து பாருங்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[ssr sukumar said...

athu sari. potti keduchchuthunnu ishtaththum ezhutha koodaathu. Police-kaararkalin velai onnum laddu thinnuvathu pola illai. oru naal vanthu velai paarunga. oorukke odi poiduveenga.]]]

கொலையைத் தடுப்பதுதான் அவர்களது வேலை. கொலை செய்வது இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

நான் என்கவுட்டரை எல்லாம் ஆதரிக்கவில்லை. ஆனால், உத பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல எழுதியிருப்பதுதான் சகிக்கவில்லை. நியூஸ் கிடைச்சதும் விடிய விடிய உக்காந்து பரபரப்பா பதுவு போடனும்னு அடிச்சு விட்டிருக்கார். அதைத்தான் சொல்றேன்.
என்கவுன்ட்டரை ஆதரிச்சா, பின்னாடி ரிவிட்டு ரிவர்ஸுல ஒர்க் அவுட் ஆகுமின்னு தெரியும்.
எல்லா பிரச்சினைகளின் ஆரம்பம் ஊழல். ஊழல் தழைப்பதற்கு காரணம் நீதித்துறை ஆமை வேகத்தில் நடப்பது. ஆணிவேர் நீதித்துறையில் உள்ளது. அதை மாற்றத்தான் நாம் போராட வேண்டும். ஒரு குற்றவாளியை பிடித்து நீதித்துறையின் முன் நிறுத்தி தண்டிப்பதை வேகமுடன் செயல்படவைத்தால் இவை போன்றவைகள் குறையும். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு பரபரப்பாக நடப்பதைதான் உத-வும் விமர்சனம் செய்கிறார். அதைத்தான் வேண்டாம் என்கிறேன்.]]]

என்கவுண்ட்டர் எந்த மாதிரி நடந்தது என்பதை விளக்கித்தான் ஆக வேண்டும். தெரிந்த தகவல்களை வைத்துதான் சொல்கிறேன்.. இதையும் சொல்லக் கூடாது எனில் பொத்தாம் பொதுவாக என்கவுண்டர் கூடாது என்றால், படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

சினிமாத்தனங்களிலிருந்து கிடைக்கும் காமன்ஸென்ஸ் கொடுக்கும் அனுமானத்தை விட, கற்பனையை விட உண்மை மிக மிக பயங்கரமானதாக இருக்கும் in either ways!//

100% ஒத்துப் போகிறேன் இந்தக் கருத்துடன். அதனால்தான் நாம் கற்பனை கொடுக்கிற ஆசுவாசத்திற்காக உண்மையை விட்டு விடுகிறோம்.]]]

-))))))))))

Anonymous said...

//[[[ssr sukumar said...

athu sari. potti keduchchuthunnu ishtaththum ezhutha koodaathu. Police-kaararkalin velai onnum laddu thinnuvathu pola illai. oru naal vanthu velai paarunga. oorukke odi poiduveenga.]]]

கொலையைத் தடுப்பதுதான் அவர்களது வேலை. கொலை செய்வது இல்லை..!//

எதிரில் இருப்பவன் சுட்டால் அதை நெஞ்சில் வாங்கிக் கொண்டு உயிர் விட்டு 'தான் கொலையைத் தடுப்பவன்' என்று நிரூபிக்கணுமோ? அப்ப மனித உரிமை கமிஷன் எல்லாம் வராது?

நெல்லை கபே said...

//எதிரில் இருப்பவன் சுட்டால் அதை நெஞ்சில் வாங்கிக் கொண்டு உயிர் விட்டு 'தான் கொலையைத் தடுப்பவன்' என்று நிரூபிக்கணுமோ? அப்ப மனித உரிமை கமிஷன் எல்லாம் வராது?// chilled beers இப்போது தான் செய்தது எப்படி சரி என்று நிரூபிக்க வேண்டியதுதான் போலீஸ் செய்யவேண்டியது.மனித உரிமை கமிஷனிடம் இதை அவர்கள் தான் சொல்லணும்.அந்த நடைமுறைகள் நமக்குத் தெரியாது.

//அவர்கள் கொள்ளையர்களாகவே இருக்கட்டும். உயிருடன் பிடித்து கோர்ட்டில் நிறுத்தி தண்டனையை வாங்கித் தருவதை விட்டுவிட்டு சுட்டுக் கொல்வது எந்தச் சட்டப்படி சரியானது..// இதைத்தான் ராஜநடராஜன் எழுதியிருக்கிறார் முன்னே போனால் முட்டும், பின்னால் போனால் உதைக்குங்கிற கதையாக காவல்துறையின் நிலை. சொல்வதும் டைப்படிப்பதும் சுலபம்.ஒருவேளை நிஜமாகவே கதவைத் தட்டியதும் சுட ஆரம்பித்தால் போலீஸ் செத்துத்தான் நிரூபிக்கவேண்டும் என்று எல்லாம் கேட்க முடியாது.

Anonymous said...

என் விவாதம் எல்லாம் நீங்கள் போடுகிற கண்டிஷன் எல்லாம் சரி! சட்டம் நியாயம் தர்மம் எல்லாம்.ஆனால் இது எதையுமே குற்றவாளிகளிடம் சொல்லமுடியாது. குற்றவாளியிடம் போலீஸின் முட்டிக்கு கீழே சுடு என்று சொல்லவே முடியாது.எப்படி வேண்டுமானாலும் சுடலாம்.போலீஸீடம் இதையெல்லாம் சொல்லித்தான் தீரவேண்டும் என்ற சூழ்நிலையில் இந்த மாதிரி ஒருவிஷயம் நடந்தால் விசாரணைக்கு கோருவீர்களா...இல்லை முதலிலேயே குற்றம் சாட்டி சாத்து சாத்து என்று சாத்திவிட்டு விசாரணைக்கு கோருவீர்களா?

Anonymous said...

எதற்கும் இனிமேல் நடுராத்திரியில் யார் கதவைத் தட்டினாலும் திறந்து விட்டு விடலாம் என்றுதான் இருக்கிறேன்.திருடர்களாக இருந்தாலும் பரவாயில்லை//

யார் வந்து கதவைத் தட்டினாலும் உடனே துப்பாக்கி எடுத்து சுடுவீர்களா? பதிவர்களிடம் துப்பாக்கி எல்லாம் இருக்கிறதா?

உண்மைத்தமிழன் said...

Chilled Beers said...
கொலையைத் தடுப்பதுதான் அவர்களது வேலை. கொலை செய்வது இல்லை..!//

எதிரில் இருப்பவன் சுட்டால் அதை நெஞ்சில் வாங்கிக் கொண்டு உயிர் விட்டு 'தான் கொலையைத் தடுப்பவன்' என்று நிரூபிக்கணுமோ? அப்ப மனித உரிமை கமிஷன் எல்லாம் வராது?]]]

போலீஸ் சுட்ட சப்தம்கூட கேட்கவில்லை என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர்..! அப்புறம் எங்க அவங்க சுட்டு.. இவங்க திருப்பிச் சுட்டு.. அதுவும் அது பொம்மை துப்பாக்கின்னு வேற திரிபாதியே சொல்றாரு.. அப்புறம் என்னாங்க அது சுட்டது..? என்ன வெடி கேப்பு போட்டு வெடிச்சாங்களோ.. அந்தச் சத்தத்தைக் கேட்டு பயந்துக்கிட்டு இவுங்க நிஜ துப்பாக்கியால சுட்டு்ட்டாங்களோ..?

உண்மைத்தமிழன் said...

மாயன்:அகமும் புறமும் said...

//அவர்கள் கொள்ளையர்களாகவே இருக்கட்டும். உயிருடன் பிடித்து கோர்ட்டில் நிறுத்தி தண்டனையை வாங்கித் தருவதை விட்டுவிட்டு சுட்டுக் கொல்வது எந்தச் சட்டப்படி சரியானது..//

இதைத்தான் ராஜநடராஜன் எழுதியிருக்கிறார் முன்னே போனால் முட்டும், பின்னால் போனால் உதைக்குங்கிற கதையாக காவல்துறையின் நிலை. சொல்வதும் டைப்படிப்பதும் சுலபம்.ஒருவேளை நிஜமாகவே கதவைத் தட்டியதும் சுட ஆரம்பித்தால் போலீஸ் செத்துத்தான் நிரூபிக்க வேண்டும் என்று எல்லாம் கேட்க முடியாது.]]]

அவர்கள் எதை வைத்துச் சுட்டார்கள் என்பதை இவர்கள் முதலில் நிரூபிக்கட்டும்.

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

என் விவாதம் எல்லாம் நீங்கள் போடுகிற கண்டிஷன் எல்லாம் சரி! சட்டம் நியாயம் தர்மம் எல்லாம். ஆனால் இது எதையுமே குற்றவாளிகளிடம் சொல்ல முடியாது. குற்றவாளியிடம் போலீஸின் முட்டிக்கு கீழே சுடு என்று சொல்லவே முடியாது. எப்படி வேண்டுமானாலும் சுடலாம். போலீஸீடம் இதையெல்லாம் சொல்லித்தான் தீர வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தால் விசாரணைக்கு கோருவீர்களா. இல்லை முதலிலேயே குற்றம் சாட்டி சாத்து சாத்து என்று சாத்திவிட்டு விசாரணைக்கு கோருவீர்களா?]]]

ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்ளும் கேவலமான இந்த நாட்டில் என்னால் முடிந்தது எனது எதிர்ப்பை இப்படி பதிவு செய்து வைப்பதுதான்..! தன் உயிரை இழந்தாவது குற்றவாளியை உயிருடன் பிடித்துக் காட்டுபவன்தான் காவலாளி..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

எதற்கும் இனிமேல் நடுராத்திரியில் யார் கதவைத் தட்டினாலும் திறந்து விட்டு விடலாம் என்றுதான் இருக்கிறேன். திருடர்களாக இருந்தாலும் பரவாயில்லை//

யார் வந்து கதவைத் தட்டினாலும் உடனே துப்பாக்கி எடுத்து சுடுவீர்களா? பதிவர்களிடம் துப்பாக்கி எல்லாம் இருக்கிறதா?]]]

நிச்சயமாக இருக்கும். அவர்கள் வைத்திருந்த அதே பொம்மைத் துப்பாக்கி..! சின்னப் புள்ளைகதான் எல்லார் வீட்லேயும் இருக்காங்களே..?

Ganpat said...

தார்மீக கோபம என்றால் என்ன என்று உங்கள இந்த பதிவைப்பார்த்து தெளிவுற்றேன்,உண்மைத்தமிழன்.மிக தைரியமாக கருத்துக்களை சொன்னதிற்கு வாழ்த்துக்கள்.
உண்மை என்ன என்று இனி நமக்குத்தெரியப்போவதில்லை.(அதான் பிரதிவாதிகளே இல்லையே)

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...
தார்மீக கோபம என்றால் என்ன என்று உங்கள இந்த பதிவைப் பார்த்து தெளிவுற்றேன், உண்மைத்தமிழன்.மிக தைரியமாக கருத்துக்களை சொன்னதிற்கு வாழ்த்துக்கள். உண்மை என்ன என்று இனி நமக்குத் தெரியப் போவதில்லை.(அதான் பிரதிவாதிகளே இல்லையே)]]]

இவர்களே விசாரணை நடத்தி, இவர்களே தீர்ப்பு சொல்லப் போகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்பதும் கண் துடைப்புதான்..! கேஸை இழுத்து மூடுவதற்கு இதையும் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்..!