சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டமால் டுமீல்..!

07-02-2012




என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1960-களில் வங்கத்தைச் சேர்ந்த நிமாய்கோஷும், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.சீனிவாசனும் இணைந்து உருவாக்கிய பெப்சி என்னும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு மாற்றாக புதிய தொழிலாளர் சங்கத்தை நாம் உருவாக்குவோம் என்று சொன்ன தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது டமாலாகிவிட்டது..!

ஏற்கெனவே புறக்கணிப்பின் வெறுப்பில் இருந்த தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யின் தலைமையில், இயக்குநர் கே.ஆர்., பழம் பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன், இவரது ஆத்மார்த்த நண்பரும், இயக்குநருமான சி.வி.ராஜேந்திரன் மற்றும் நடிகை ஜெயசித்ரா இவர்களது தலைமையில் 75-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தனி அணி அமைக்கத் தயாராகிவிட்டார்கள்.

இந்த அணியில் பெரும்பாலோர் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமையன்று(03-02-2012) தங்கள் தரப்பு வாதத்தை பத்திரிகையாளர்களிடம் கொட்டித் தீர்த்தார்கள். SAC என்பதற்கு “Service Against Chinna Thayarippaalargal - சர்வீஸ் அகைன்ஸ்ட் சின்னத் தயாரிப்பாளர்கள்” என்றுதான் அர்த்தமாம்.

இராம.நாராயணன் பதவி விலகி, எஸ்.ஏ.சந்திரசேகர் பொறுப்புத் தலைவராக பதவியேற்றவுடன் இயக்குநர் கே.ஆர்., எஸ்.ஏ.சி.யிடம் “இதென்ன புதுசா இருக்கு..? துணைத் தலைவர், தலைவரா வரலாம்னு துணை விதிகூட இல்லையே..? நீங்க ஏன் பதவி ஏத்துக்கிட்டீங்க..?”ன்னு கேட்டாராம்.. அதற்கு எஸ்.ஏ.சி. “நான் ஒரு பத்து மாசம்தான் இந்தப் பதவில இருப்பேன். அதுக்கப்புறம் அடுத்த 4 வருஷம் என் பையனோட கட்சியை வளர்க்கப் போயிருவேன்.. 10 மாசம் மட்டும் என்னை இங்க இருக்க விடுங்களேன். அதுக்கப்புறம் இந்தக் கருமத்தை எவன் கட்டிக்கிட்டு அழப் போறான்..?” என்றாராம். “இப்போ புது ஆட்சியும் பொறுப்பேத்தாச்சு. இன்னும் 4 வருஷம் இருக்கு. அதுக்குள்ள இவர் கட்சி ஆரம்பிச்சு, நடத்தி, தேர்தலை சந்திச்சு இவர் முதலமைச்சரா வருவாரா..? இல்லாட்டி இவர் பையன் வருவாரான்னு பார்ப்போம்.. என்றார் கே.ஆர்.  

அங்கே பேசிய அனைவருமே எஸ்.ஏ.சி.க்கு சங்கத்தை நடத்தவே தெரியவில்லை. சங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் குழப்பத்தையே உண்டாக்கியிருக்கின்றன என்று குற்றம் சாட்டினார்கள். எப்போதோ, அமைதியான முறையில் பேசித் தீர்த்திருக்க வேண்டிய பெப்சி சம்பளப் பிரச்சினையை கையாளத் தெரியாமல்தான் எஸ்.ஏ.சி. இப்போது முடிக்க முடியாமல் திணறுகிறார் என்றார்கள்.


“தலைவராகப் பொறுப்பேற்ற மறுநாளே மூலிகை சிகிச்சைக்காக கேரளா சென்ற எஸ்.ஏ.சி., 48 நாட்கள் கழித்துதான் திரும்பி வந்தார். இப்படி எந்தத் தொழிலாளர் தலைவனாச்சும் செய்வானா..?” என்றார்கள் கோபத்துடன். சங்க உறுப்பினர்களின் குடும்ப நிதிக்காக வைத்திருக்கும் பணத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயை எடுத்து தானே புயல் நிவாரண நிதியாக கொடுக்கவிருக்கும் செயலை வன்மையாகக் கண்டித்தார்கள்.. “இவர் பையன்தான் கோடி, கோடியா சம்பாதிக்கிறாரே.. அதுல ஒரு 50 லட்சத்தை கொண்டு போய் கொடுக்கட்டுமே.. அதுக்கு சங்க உறுப்பினர்களின் பணம்தான் கிடைத்ததா..?” என்று விளாசினார்கள்.

மேற்கொண்டு தாங்கள் சொல்ல வேண்டியதையெல்லாம் பிரசுரமாக விநியோகித்தார்கள். அதன் ஒரு பிரதி இங்கே உங்களுக்காக :

S.A.சந்திரசேகர் பதவி விலகினால் தமிழ்ச் சினிமாவிற்கு விடிவுகாலம்

கடந்த சில மாதங்களாகவே தமிழ்த் திரைப்படத் துறையில் நிச்சயமற்ற நிலை நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. பெப்சி தொழிலாளர்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்கள் சங்கத்திற்கும் இடையிலான ஊதிய ஒப்பந்தம் கடந்த வருடம் ஜனவரி 15-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது.

ஆனால், அப்போது பெப்சியில் நிர்வாகிகளாக இருந்தவர்களும், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்களும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். தேர்தல் முடிவுக்குப் பிறகு இரண்டு அமைப்பில் பொறுப்பில் இருந்தவர்களும் ராஜினாமா செய்துவிட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் பொறுப்புத் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கும்போதே பெப்சி தொழிலாளர்களிடம், நான் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதும் 60 சதவிகிதம் சம்பள உயர்வு பெற்றுத் தருகிறேன் என்று மறைமுகமாக வாக்குறுதி கொடுத்தார். அதே நேரத்தில் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களிடம் தொழிலாளர் சம்பள விகித்த்தை A, B, C என மூன்று பிரிவுகளாகப் பிரித்து நிர்ணயித்து தருவேன். அப்படிச் செய்யவில்லை என்றால், என்னைத் தூக்கில் போடுங்கள் என்று ஸ்டண்ட் அடித்தார்.

அப்போதிலிருந்தே பெப்சி தொழிலாளர்கள் 60 சதவிகிதம் சம்பளத்தை உயர்த்தி வற்புறுத்தி வாங்கத் தொடங்கிவிட்டனர். அப்போதே படப்பிடிப்புகளை நிறுத்தியிருந்தால், இந்தப் பிரச்சினையை சுமூகமாக்க் கையாண்டிருக்கலாம். தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதும் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டார். பிள்ளையையும் கிள்ளிவிட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதில் கை தேர்ந்தவர் எஸ்.ஏ.சி. என்பதற்கு இதுவே சாட்சி.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்குப் பிறகாவது தமிழ்ச் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்க, தேர்தலுக்கு மறுநாளே, தன் ஆரோக்கிய சிகிச்சைக்காக கேரளா சென்றுவிட்டார் எஸ்.ஏ.சி. சுமார் 48 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் திரும்பி வந்து பார்த்தால், பிரச்சினை இன்னும் பெரிதாகிப் போயிருந்தது.

தயாரிப்பாளர்களுக்கு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் எஸ்.ஏ.சி., இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வாரா..? இந்தச் சூழ்நிலையில்தான் பெப்சி அமைப்பினரும், தங்கள் சம்பள உயர்வை தன்னிச்சையாகவே அறிவித்த்துடன் புதிய சம்பளம் தந்தால் மட்டுமே வேலை செய்வோம் என்று அறிக்கைவிட்டனர். 


கடந்த ஆண்டில் வெளிவந்த நேரடி தமிழ்ப் படங்கள் 144. அவற்றில் 5 படங்கள் மட்டுமே சூப்பர் ஹிட். 5 படங்கள் மட்டுமே பணத்தை மீட்டுக் கொடுத்தன. மற்ற 134 படங்களினாலும் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதலான தயாரிப்புச் செலவுகள், திருட்டு வி.சி.டி., நடிகர், நடிகைகளின் சம்பள உயர்வு, தியேட்டர் கிடைக்காத்து போன்ற பல்முனை தாக்குதல்களால் நொந்து போயிருந்த தயாரிப்பாளர்களுக்கு பெப்சியின் இந்த சம்பள உயர்வு அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருந்த்து.

இந்தப் பிரச்சினை பற்றிப் விவாதிக்க அவசர சிறப்புக் கூட்டமும் நடந்த்து. அதில் பேசிய அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஊதிய உயர்வு தர முடியாது என்பதையும் தாண்டி, பெப்சி அமைப்பின் கடுமையான சட்ட திட்டங்களால் அனுபவித்த கொடுமைகளைப் பட்டியலிட்டு குமுறிக் கொட்டினர். அந்தக் கூட்டத்திலேயே சம்பள உயர்வு தரலாம் என்று எஸ்.ஏ.சி. சொல்ல அனைவரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  இறுதியில் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து “இனி பெப்சியுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது. தயாரிப்பாளர்கள் சுதந்திரமாக யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்து கொள்ளலாம்..” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ்த் திரைப்படத் துறைக்கு என தனியாக ஒரு தொழிலாளர் அமைப்பும் உருவாக்கப்படும்..” என்று எஸ்.ஏ.சி. தெரிவித்தார்.

இதற்கிடையே நடந்து கொண்டிருந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இனி யாரை வைத்து வேலை செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட அவசரச் சூழ்நிலையில் போர்க்கால நடவடிக்கை எடுப்பதுபோல 24 மணி நேரமும் செயல்பட்டு நமது தயாரிப்பாளர்கள் தொய்வின்றி படப்பிடிப்பை நடத்துவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் ஏனோ, தானோ என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி.

சில பெரிய படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு அளிக்கலாமா என்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார். இது இரட்டை வேடம் அல்லவா? ஒட்டு மொத்தமாக உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்த தயாரிப்பாளர்கள் முன்னிலையில், இனி பெப்சியுடன் ஒப்பந்தம் இல்லை என்று அறிவித்துவிட்டு ஒரு சில பெரிய தயாரிப்பாளர்களின் நலனுக்காக சங்கத்தை அடகு வைக்கும் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது.

பெப்சி பிரச்சினை என்பது வெறும் 10 சதவிகிதம்தான். திருட்டு விசிடி, நடிகர், நடிகைகளின் சம்பள உயர்வு, சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம், புதிய வரிகள், சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத்து போன்ற 90 சதவீத பிரச்சினைகள் தமிழ்த் திரையுலகை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதில் அவற்றைத் திசை திருப்பதற்காகவே இந்த பெப்சி பிரச்சினையை பூதாகாரமாக்கி, அப்பாவித் தயாரிப்பாளர்களை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. உங்கள் விபரீத விளையாட்டுக்கு வேறு மைதானத்தை பாருங்கள்.

தீர்மானம் போட்டுவிட்டால் போதுமா..? அதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாமா..? உடனடியாக தயாரிப்பாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க உறுதியான முடிவை எடுத்து செயல்படுத்துங்கள். இல்லையேல், “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி” தயாரிப்பாளர்களை குழப்பமால் உடனடியாக உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள். ஒரு சிலரின் பதவியைவிட, ஒட்டு மொத்த இண்டஸ்ட்ரியின் நலன்தான் முக்கியம் என்பதை இனியாவது உணருங்கள்.

தயாரிப்பாளர்களின் நலனுக்காக என்ன செய்தார் எஸ்.ஏ.சி..?

1. நான் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானால் சன் தொலைக்காட்சி நிர்வாகத்திடமிருந்து 2000 கோடி ரூபாய் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வாங்கித் தருவேன் என்றது என்னவாயிற்று..? (2000 கோடி லட்சம். ஆனால் ரூபாய் 200 கோடி நிச்சயம் என்ற முழக்கத்தின் இன்றைய நிலைமை என்ன..?)

2. சன் தொலைக்காட்சி தமிழ்நாட்டை ஆளுகிறதா? கலைஞர் தமிழ்நாட்டை ஆளுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பிய தாங்கள், சன் தொலைக்காட்சியால் பல தயாரிப்பாளர்கள் இன்னல்களுக்கு ஆட்பட்டு இருக்கும் நிலையில், சிறு படத் தயாரிப்பாளர்களை புறக்கணித்து சன் தொலைக்காட்சியில் நண்பன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை விற்று, மண்டியிட்டுக் கிடப்பதன் மர்மம் என்ன..?

3. எண்ணற்ற சிறு படத் தயாரிப்பாளர்களின் சாட்டிலைட் உரிமை விற்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் அதைத் தீர்ப்பதற்காக இதுவரை என்ன செய்தீர்கள்..? என்ன செய்யப் போகிறீர்கள்..?

4. படம் முடிந்து திரையிட முடியாமல் நிலுவையில் உள்ள படங்களை பதவி ஏற்ற உடன், வெளியிட ஆவண செய்வதாக்க் கூறினீர்கள்.. அதன்படி இதுவரை எத்தனை படங்கள் திரைக்கு வந்துள்ளன என்பறு கூற முடியுமா?

5. சிறு முதலீட்டு படங்களின் வெளியீட்டின்போது சங்கத்தின் மூலம் 2 லட்சம் தருவதாக உறுதியளித்தீர்கள். நீங்கள் பதவிக்கு வந்து 4 மாதங்களாகிவிட்டது. இதுவரை எத்தனை படங்கள் 2 லட்சம் ரூபாய் பெற்று திரைக்கு வந்தன என்ற பட்டியலை வெளியிட முடியுமா..?

6. தொலைக்காட்சியில் செய்யப்படும் விளம்பரங்களை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்தீர்கள். இதுநாள்வரை அதற்கான முயற்தி எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.. ஏன்..? தங்கள் மகனின் வளர்ச்சி பாதிக்கும் என்ற எண்ணமா..? தங்கள் மகனுக்காக ஒட்டு மொத்தத் தயாரிப்பாளர்களின் நலனை பலி கொடுக்கலாமா..?

7. தேர்தலில் வெற்றி வாகை சூடி தலைவர் பதவியில் அமர்ந்த உடன், நலிந்த தயாரிப்பாளர்கள் 60 பேருக்கு அரை கிரவுண்ட் நிலம் உடனடியாக வழங்கப்படும் என்று அறிவித்தீர்கள். வழங்கப்படவில்லை என்றால்..? பலமான ஒரு வார்த்தையைச் சொன்னீர்கள். அதை தங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். அதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

8. பொங்கலுக்கு முன்பாக நடந்த செயற்குழுக் கூட்டத்தில் பத்திரிகை விளம்பரம் 2 தமிழ் 2 ஆங்கிலப் பத்திரிகை மட்டும் என்று முடிவு செய்யப்பட்டதை மீறி நண்பன் பட விளம்பரம் இன்றுவரை (20 நாட்களாக) அனைத்து ஆங்கிலப் பத்திரிகைகளிலும், தினமணி தமிழ்ப் பத்திரிகையிலும் தொடர்ந்து கால் பக்க விளம்பரம் கொடுப்பது எந்த விதியின் கீழ்..? இது தங்கள் மகனின் படம் என்பதால் நீங்கள் வழங்கிய சலுகையா..? இது நியாயமா? தர்ம்மா?

9. சேம்பரில் நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் தியேட்டரில் டிக்கெட் விலை குறைப்பு என்று அனைவரும் ஒப்புக் கொண்டபோது தாங்களும் அனைவரின் முன்பாகவும் இதனை ஒத்துக் கொண்டு வெளியே வந்தவுடன் சில பெரிய தியேட்டர் அதிபர்களிடம் உங்கள் மகனின் படத்திற்கு மட்டும் விலையை உயர்த்திக் கொள்ளக் கேட்டது எந்த வகையில் நியாயம்..? இது யாரை ஏமாற்றும் வேலை..?

10. தானே புயலால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வரலாறு காணாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சூழ்நிலையில், முதல்வர் அம்மா அவர்கள் புயல் நிவாரண நிதி கேட்டபொழுது திரையுலகத்தைச் சார்ந்த எண்ணற்றவர்கள் முதல்வர் அம்மா அவர்களை நேரில் சந்தித்து நிதி வழங்கிக் கொண்டிருக்கும்போது தங்கள் மகன் விஜய் மட்டும் முதல்வர் அம்மா அவர்களை நேரில் சந்தித்து நிதி தராமல், கடலூருக்குச் சென்று ஒரு சிலருக்கு மட்டும் 5 கிலோ அரிசி வழங்கியது அரசியல் சுயலாபத்திற்காகவா? இல்லை தங்கள் மகனின் தமிழக அரசின் மீதான எதிர்ப்பைக் காட்டவா? தங்கள் மகனின் செயலால் பாதிக்கப்படப் போவது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களே..!

11. கடந்த நிர்வாகத்தால் திரைத்துறையில் நீண்ட காலமாக இருக்கும் தயாரிப்பாளர்களை கெளரவிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட கருணைத் தொகையை பெற்றுக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் இன்று ரத்தக் கண்ணீரோடு ஒவ்வொரு மாதமும் அவமானப்பட்டுத்தான் அத்தொகையை வாங்க முடிகிறது. உரிமைத் தொகை கருணை இல்லாமல் போன காரணம் என்னவோ..?

12. கேபிள் டிவியில் படங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தில் பெரும் மோசடி நடந்திருப்பதாகவும், அதைக் கண்டுபிடித்து பணத்தை மீட்டு தயாரிப்பாளர்களுக்கு வழங்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரைக் கொடுத்தீர்கள். அது கிணற்றில் விழுந்த கல்லாக இருக்கிறது. இந்தப் புகாரின் மேல் ஏன் விரைந்து நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை..?

13. கடந்த நிர்வாகத்தில் ஏகப்பட்ட ஊழல் நடந்த்தாகவும், அதைக் கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத் தருவேன்(ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்) என்றது.. அமைதியானது ஏன்..? தாங்கள் பதவியேற்றவுடன் அவர்கள் அனைவரும் புனிதர்களாகிவிட்டார்களா..?

14. பெப்சி உடன் ஒப்பந்தம் ரத்தாகிவிட்டது. இனி யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்யலாம் என்று பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன்..? தங்கள் சொல்லுக்கு மதிப்பளித்து படப்பிடிப்பை ரத்து செய்த தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் அவர்கள் படப்பிடிப்பைத் தொடர மாற்று திட்டம் அறிவிக்காமல் காலம் கடத்துவது ஏன்..?

15. பாதுகாப்புக் குழுவிற்காக வாங்குவதாக சொன்ன வேன்களின் நிலைமை என்ன..?

16. கடந்த காலங்களில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக முதல்வரைச் சந்திப்பதும், அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு எண்ணற்ற உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதும் நாம் கண்டதே.. ஆனால் தாங்கள் பதவிக்கு வந்து நான்கு மாதங்களாகியும் இதுவரை நிர்வாகிகளுடன் முதல்வரை சந்திக்காதது ஏன்..?

17. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பு தலைவராக 4 மாதங்களும், தலைவராக 4 மாதங்களும் பதவியில் இருக்கும் தாங்கள் பெப்சி பிரச்சனையை தீர்க்காமல் இழுத்தடிப்பது ஏன்..? இன்று பெப்சி பிரச்சினை இந்த அளவிற்கு மோசமானதுக்கு முழுக் காரணம் தலைவரான தாங்கள்தான்..!

03-02-2012 அன்று பாம்குரோவ் ஹோட்டலில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

23-01-2012-ல் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பெப்சியுடனான ஊதிய உயர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினையில் விரிவாக விவாதித்து எடுக்கப்பட்ட முடிவை இதுநாள்வரை நடைமுறைப்படுத்த தலைவர் திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் வருத்த்த்திற்குரியது. கண்டனத்துக்குரியது.. எனவே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக பொதுக்குழுவின் முடிவின்படி தொழிலாளர்கள் அமைப்பை புதிதாக உருவாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள திரு.அமீர் அவர்கள் தன்னிச்சையாக இயக்குநர்களுக்கு 10 லட்சம், இணை இயக்குநர்களுக்கு 4 லட்சம், முதல் உதவியாளர்களுக்கு 2 லட்சம் என்றும், தினப்படி இயக்குநருக்கு 1000 ரூபாய் என்றும் அறிவித்திருப்பதும், மேலும் இயக்குநர் சங்கத்தில் படத்தின் தலைப்பை பதிவு செய்ய வேண்டும் என்பதும்.. பட வெளியீட்டிற்கு இயக்குநர் சங்கத்திலும் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்று அறிவித்திருப்பதும் தயாரிப்பாளர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகத் தெரிகிறது. ஆகவே அமீரின் இந்தச் செயலை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது..

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலின்போது தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக ஒரு தவறான தோற்றத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களிடம் வாக்குகளைப் பெற்று.. வெற்றி பெற்ற நாளில் இருந்து இதுநாள்வரையிலும் முதல்வர் அம்மா அவர்களைச் சந்திக்க முடியாமல் உள்ள நீங்கள்.. மற்றும் சங்கம் அறிவித்த தானே புயலுக்கான நிதி 25 லட்சத்துக்கான காசோலையை இன்றுவரையிலும் தர முடியாமல் காத்திருக்கும் தாங்கள் எப்படி முதல்வர் அம்மா அவர்களிடம் பேசி தயாரிப்பாளர்களுக்கு நன்மை பெற்றுத் தர முடியும்..?

மேலும் தாங்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதியையும் இன்றுவரை நிறைவேற்றாத்தால் தங்கள் மீது சங்கத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகவே, தாங்கள் இயலாமை செயலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலகி இச்சங்கத்திற்கு நன்மை செய்யுமாறு இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

- இப்படி ஒட்டு மொத்தமாக எஸ்.ஏ.சி.யை சங்கத்தைவிட்டு வெளியேற்றும் ஒற்றைக் குறிக்கோளுடன் இவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். ஆனாலும் பெப்சி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் சங்கத்தின் தற்போதைய முடிவையே இவர்கள் ஆதரிப்பதாகச் சொல்லியிருப்பதால், பெப்சி இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை..!


எஸ்.ஏ.சி. சங்கத் தேர்தலில் வெற்றி பெற காரணமே, எப்படியாவது ஜெயலலிதாவிடம் பேசி குறும்பட தயாரிப்புக்கான நிதியுதவியை பெற்றுத் தந்துவிடுவார் என்று நினைத்து சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அளித்த அதிகப்படியான வாக்குகளினால்தான்..! 

கடந்த 4 ஆண்டுகளாக சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அரசு தரும் மானியமான 7 லட்சம் ரூபாய் தரப்படவே இல்லை என்பதுதான் பெரும் சோகம். இந்தக் குறும்படத் தயாரிப்பு லிஸ்ட்டிற்குள் செல்லவே சில விதிமுறைகள் உள்ளன. 8 முதல் 25 பிரிண்டுகள் மட்டுமே போடப்பட்டிருக்க வேண்டும். முழுக்க, முழுக்க தமிழ்நாட்டிற்குள்ளேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் ஏதாவது ஒரு தியேட்டரிலாவது படத்தை ஓட்டியிருக்க வேண்டும் என்ற வகையில் சில நிபந்தனைகள் உள்ளன. 2 கோடிக்கு படமெடுத்து வெறும் 25 பிரிண்டுகள் மட்டுமே யாரும் போட்டிருக்க மாட்டார்கள் என்பதால், இந்த விதிமுறையில் அதிகம் பலனடையப் போவது 35-ல் இருந்து 65 லட்சம் வரையில் படம் எடுத்த புண்ணியவான்கள்தான். அவர்களே 4 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பணமாவது கிடைத்தால் இனி வரும் காலத்திற்காவது உதவும் என்று ஏக்கத்துடன் இருக்கிறார்கள் அவர்கள்.


தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தொடர்ச்சியாக படமெடுத்து வருபவர்கள் 20 பேருக்குள்தான் இருப்பார்கள். சங்கத்தின் விதிமுறைப்படி 5 ஆண்டுகளுக்குள் ஒரு திரைப்படமாவது தயாரித்தவர்கள்தான் சங்க நிர்வாகிகளில் தேர்தலில் போட்டியிட முடியும். இதற்காகவே சிலர் கஷ்டப்பட்டு படத்தைத் தயாரித்து வருகிறார்கள். போட்டியிட முடியாதவர்கள் ஒதுங்கிப் போய் அமைதியான உறுப்பினர்களாக சங்கக் கூட்டத்திற்கு மட்டும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால்தான் பிரச்சினை என்று பெப்சியும், மற்ற சினிமா துறையினரும் சொல்கின்றனர். பெரிய தயாரிப்பாளர்கள் யதார்த்த நிலைமையை உணர்ந்து, பெப்சி ஊழியர்களின் ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ள முன் வந்தாலும், சிறு படத் தயாரிப்பாளர்கள்தான் இதனை எதிர்க்கிறார்கள்..! பொதுக்குழுவில் எஸ்.ஏ.சி.யை கடைசி நிமிடத்தில் கெரோ செய்து சாதித்தது சிறு பட தயாரிப்பாளர்கள்தான். சங்கத் தலைவராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவருடைய ஆசைக்கு அவரே பலிகடாவாக்கிவிட்டார் என்கிறார்கள் சேம்பர் வட்டாரத்தில்.

பெப்சியின் உண்ணாவிரதக் கூட்டத்தில் இதைத்தான் சொன்னார் பெப்சியின் செயலாளர் சிவா. “ஏற்கெனவே ஒத்துக் கொண்ட ஊதிய விகிதத்தை, வழங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தை, சில நாட்களில் கையெழுத்திடலாம் என்று சொல்லியிருந்த்தை எஸ்.ஏ.சி. ஏதோ ஒரு காரணத்திற்காக பகிரங்கமாக வெளியில் சொல்ல மறுத்து, பெப்சி ஊழியர்களுக்கு எதிரியாகிவிட்டார். அதே நேரத்தில் தனது பதவிக்காகவும், தனது மகன் விஜய்யின் வளர்ச்சிக்காகவும் பெரிய தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து சின்ன தயாரிப்பாளர்களை எதிர்த்து, தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் தனது செல்வாக்கை இழந்துவிட்டார். ஆக மொத்தம், எங்கள் பக்கம் வந்திருந்தால் அவர் ராஜாவாக இருந்திருப்பார். ஆனால் வராத காரணத்தினால், அந்தப் பக்கம் கூஜாவாககூட இல்லாமல் போய்விட்டார்” என்றார் சிவா.

பெப்சியை இரண்டாக உடைக்கலாம் அல்லது புதிய தமிழ்த் தொழிலாளர் அமைப்பை உருவாக்கலாம் என்று தெரிவித்த யோசனை புதைகுழிக்குப் போய்விட்டது. பெப்சியின் அகில இந்திய அமைப்பு பெப்சிக்கே தனது முழு ஆதரவையும் அளித்திருப்பதால் அதனை எதிர்த்து புதிய அமைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் பேசியவைகளும், எஸ்.ஏ.சி.யை எதிர்க்கும் அணியினரின் வீர ஆவேசமும் காற்றில் கரைந்துவிட்டன.


அமீர் அறிவித்த ஊதிய உயர்வு பற்றி கே.ஆர்.ஜி.யிடம் கேட்டபோது, "அமீர் யார் இதைச் சொல்வதற்கு..? அதன் தலைவர் சொல்லட்டும். நிர்வாகிகள் சொல்லட்டும். அப்புறம் பேசுறோம்..." என்றார். ஆனால் அடுத்த நாளே இயக்குநர்கள் சங்கத்தின் அவசரச் செயற்குழு கூட்டம் நடந்து அதில் இயக்குநர்களின் ஊதிய உயர்வுக்கு அனைவருமே ஒப்புக் கொண்டுவிட்டார்கள். தேனியில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்த பாரதிராஜாவிடம், பெப்சி சிவா போனில் பேசி சமாதானப்படுத்தி தன் பக்கம் இழுத்துவிட்டார். அமீர் தலைமையில் பெருவாரியான இயக்குநர்களும், துணை இயக்குநர்களும் ஊதிய உயர்வுக்காக ஒன்றுகூடிவிட்டதை சற்று தாமதமாக உணர்ந்துவிட்ட பாரதிராஜா, தனது இயக்குநர்கள் கூட்டத்தோடு நிற்கவே முடிவெடுத்து தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தான் தெரிவித்த இயக்குநர்கள் சங்க ஆதரவை யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்து, அமீரின் தலைமையில் ஐக்கியமாகிவிட்டார். 

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு மேடையில் தோன்றி தயாரிப்பாளர்களுக்கு மந்திராலோசனை தெரிவித்த நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவிதான் பெப்சியின் உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்தார்.  அவருடைய ஆதரவும் புஸ்ஸாகிப் போய் தற்போதைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமே தனித்து நிற்கிறது..!

பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்குமான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நேற்று நடந்து முடிந்துள்ளது. சில கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சிலவைகள் காத்திருப்பில் உள்ளன. வரும் 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இந்த ஊதிய உயர்வை தயாரிப்பாளர்கள் சங்கம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் எஸ்.ஏ.சி. தனது தலைவர் பதவியைத் துறந்து, தான் ஏற்கெனவே சொன்னதுபோலவே தனது மகனின் கட்சியை உடனடியாகத் துவக்கி அதன் பிரச்சாரத்திற்குக் கிளம்புவார் என்று உறுதியுடன் நம்பலாம்..!

13 comments:

சில்க் சதிஷ் said...

Me the 1

Avargal Unmaigal said...

நடந்த உண்மைகளை அப்படியே எடிட் செய்யாமல் விரிவாக தந்த உங்களூக்கு நன்றி. உங்களால் எப்படி ஐயா இவ்வளவு பெரிய பதிவை தரம் குறையாமல் தரமுடிகிறது

KOMATHI JOBS said...

இந்த புடுங்கியும், இவன் மகனும் அரசியலுக்கு வந்தால், மாறன் மாபியாக்கள், சசிகலாவின் மன்னார்குடி மாபியாவே மேல் என மக்கள் என்ன துவங்கிவிடுவார்கள்!
திரைத் தரையின் தயாரிப்பாளர் சங்கத் தலைவாரனதற்கே, தன் மகனின் வளர்ச்சி, சம்பளம் பற்றி மட்டுமே அக்கறை கொண்டு சுயனலமுடன் நடந்து கொள்ளும் இவனெல்லாம் கருணாநிதியை பற்றியோ குடும்பத்தை பற்றியோ பேசவே அருகதையில்லாத நாய்கள் என்பதை மாற்றம் வேண்டி வாக்களித்த மடையர்கள் உணர்வார்களா???

அமர பாரதி said...

பணத்தைப் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் யாரை வைத்து வேண்டுமானாலும் படம் எடுக்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் விளம்பரம் கொடுக்கலாம். அதில் எந்த தவறுமில்லை. அதில் சங்கம் மூக்கை நுழைப்பது தவறு. தயாரிப்பாளர்களுக்கு முறையற்ற வழியில் பிரச்சினை வந்தால் அதைத் தீர்ப்பதற்கு மட்டுமே சங்கம்.

//அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு எண்ணற்ற உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதும்//

அரசாங்கம் எதுக்கு சார் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் செய்யனும். வரி விலக்கு கொடுப்பதையே நிறுத்த வேண்டும். சினிமா ஒரு தொழில், அவ்வளவே. இதைப் போல நாட்டில் இருக்கும் பல தொழில்களில் நிறைய பிரச்சினக்ள் இருக்கிறது. அதையெல்லாம் அரசாங்கம் தீர்க்க முடியுமா?

sundari said...

உண்மை தமிழன் சார்
தங்களீன் பதிவு ரொம்ப(எழுதும் முறை) மற்ற ப்திவுகளை விட ரொம்ப பிடித்திருக்கிறது நீங்க 2007 வகுப்புக்கு ஏன் வரவில்லை. நீங்கள் உலகத்தில் குறிப்பா இந்தியாவில் நடக்கும் அவலங்களை நல்லா விளக்கமா சொல்றீங்க அதோடு சந்து பொந்தில் இருக்கும் செய்திகளையெல்லாம் ரொம்ப தெரிவிக்கிறீங்க‌
ரொம்ப நன்றி சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

உண்மைத்தமிழன் said...

[[[Avargal Unmaigal said...
நடந்த உண்மைகளை அப்படியே எடிட் செய்யாமல் விரிவாக தந்த உங்களூக்கு நன்றி. உங்களால் எப்படி ஐயா இவ்வளவு பெரிய பதிவை தரம் குறையாமல் தர முடிகிறது?]]]

கொஞ்சம் பொறுமையும், நேரமும் கிடைத்தால் இப்படி விரி்வான கட்டுரையை பதிவு செய்யலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[KOMATHI JOBS said...
இந்த புடுங்கியும், இவன் மகனும் அரசியலுக்கு வந்தால், மாறன் மாபியாக்கள், சசிகலாவின் மன்னார்குடி மாபியாவே மேல் என மக்கள் என்ன துவங்கிவிடுவார்கள்!
திரைத்தரையின் தயாரிப்பாளர் சங்கத் தலைவாரனதற்கே, தன் மகனின் வளர்ச்சி, சம்பளம் பற்றி மட்டுமே அக்கறை கொண்டு சுயனலமுடன் நடந்து கொள்ளும் இவனெல்லாம் கருணாநிதியை பற்றியோ குடும்பத்தை பற்றியோ பேசவே அருகதையில்லாத நாய்கள் என்பதை மாற்றம் வேண்டி வாக்களித்த மடையர்கள் உணர்வார்களா???]]]

இந்தப் பின்னூட்டத்தை நான் விரும்பவில்லை. இந்த அளவுக்கு காட்டமான வார்த்தைகளை கொட்டாமல் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கலாமே பிரதர்..?

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

பணத்தைப் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் யாரை வைத்து வேண்டுமானாலும் படம் எடுக்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் விளம்பரம் கொடுக்கலாம். அதில் எந்த தவறுமில்லை. அதில் சங்கம் மூக்கை நுழைப்பது தவறு. தயாரிப்பாளர்களுக்கு முறையற்ற வழியில் பிரச்சினை வந்தால் அதைத் தீர்ப்பதற்கு மட்டுமே சங்கம்.]]]

இங்கே அப்படியில்லை.. சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்தால் நிறைய செல்வாக்கும், கொஞ்சம் "லட்சுமியும்" கிடைக்கும்..!

//அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு எண்ணற்ற உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதும்//

அரசாங்கம் எதுக்கு சார் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் செய்யனும். வரிவிலக்கு கொடுப்பதையே நிறுத்த வேண்டும். சினிமா ஒரு தொழில், அவ்வளவே. இதைப் போல நாட்டில் இருக்கும் பல தொழில்களில் நிறைய பிரச்சினக்ள் இருக்கிறது. அதையெல்லாம் அரசாங்கம் தீர்க்க முடியுமா?]]]

தீர்க்க முடியாததுதான்.. ஆனால் திரைத்துறை வாயிலாகவே அரசியலை அணுகும் நம் மக்களின் மனோநிலை மாறும்வரையில் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[sundari said...
உண்மை தமிழன் சார்
தங்களீன் பதிவு ரொம்ப(எழுதும் முறை) மற்ற ப்திவுகளை விட ரொம்ப பிடித்திருக்கிறது நீங்க 2007 வகுப்புக்கு ஏன் வரவில்லை. நீங்கள் உலகத்தில் குறிப்பா இந்தியாவில் நடக்கும் அவலங்களை நல்லா விளக்கமா சொல்றீங்க அதோடு சந்து பொந்தில் இருக்கும் செய்திகளையெல்லாம் ரொம்ப தெரிவிக்கிறீங்க‌
ரொம்ப நன்றி சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.]]]

தங்களுடைய வாழ்த்துகளுக்கும், அன்பிற்கும் மிக்க நன்றிகள்..! எனக்கு இதுபோல் விரிவாக எழுதத்தான் பிடிக்கிறது..! வேறு வழியில்லை. உங்களைப் போன்ற வாசகர்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை..? நன்றி..!

நவன் said...

//கடந்த 4 ஆண்டுகளாக சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அரசு தரும் மானியமான 7 லட்சம் ரூபாய் தரப்படவே இல்லை என்பதுதான் பெரும் சோகம். //
அமர பாரதி சொன்னதை போல, சினிமா ஒரு தொழில். அதில் முதலீடு செய்பவர்தான் அதற்கான லாப நஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். தயாரிப்பாளர் லாபம் வந்தால் பணத்தை மக்களுக்கு தருகிறாரா? குறைந்தது ஒழுங்காக வரியாவது கட்டுகிறாரா? பொது மக்களின் வரிப்பணத்தில் மான்யம் அளிப்பது எந்த வகையில் நியாயம்? தொழிலாளர் நலன் கருதி என்ற சப்பையான வாதம் வேண்டாம். அது எல்லா தொழில்களுக்கும் பொருந்தும்.

உண்மைத்தமிழன் said...

[[[நவன் said...

//கடந்த 4 ஆண்டுகளாக சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அரசு தரும் மானியமான 7 லட்சம் ரூபாய் தரப்படவே இல்லை என்பதுதான் பெரும் சோகம். //

அமர பாரதி சொன்னதை போல, சினிமா ஒரு தொழில். அதில் முதலீடு செய்பவர்தான் அதற்கான லாப நஷ்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். தயாரிப்பாளர் லாபம் வந்தால் பணத்தை மக்களுக்கு தருகிறாரா? குறைந்தது ஒழுங்காக வரியாவது கட்டுகிறாரா? பொது மக்களின் வரிப் பணத்தில் மான்யம் அளிப்பது எந்த வகையில் நியாயம்? தொழிலாளர் நலன் கருதி என்ற சப்பையான வாதம் வேண்டாம். அது எல்லா தொழில்களுக்கும் பொருந்தும்.]]]

நியாயமான கருத்து நவன். இங்கே ஆட்சிப் பீடத்தில் அமர்வதற்கும் சினிமாக்காரர்களின் தயவு தேவைப்படுவதால்தான் அவர்களைக் குளிர்விக்க இப்படி சில முறைகேடுகளைச் செய்கின்றன அரசுகள்..!

aotspr said...

கோபம் நியாயமானது .....

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

உண்மைத்தமிழன் said...

கண்ணன்..

இதெல்லாம் ஓவரா இல்ல..! நீங்க எழுதினதே ஒரு வரி. அதுக்கு நான் என்னதான் பதில் சொல்றது..?

போன் செய்யுங்க சாமி..!