27-10-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நான் ஹாலிவுட் படங்கள் பார்க்கத் துவங்கிய காலத்தில் இருந்து தற்போதுவரையிலான அமெரிக்காவின் பெருமையை பறைசாற்றும் படங்களில், பெரும்பான்மையான வில்லன், ரஷ்ய நாடு அல்லது ரஷ்ய ராணுவமாகத்தான் இருந்தது-இருந்து வருகிறது..
அமெரிக்கா-ரஷ்யா, இடையே எப்போதும் இருந்துவந்த பனிப்போரை மையமாக வைத்து ஹாலிவுட் நன்றாகவே கல்லா கட்டிவிட்டது. அவைகள் சொல்லிச் சொல்லி வளர்த்த அமெரிக்க மக்களில் இளையோர் அன்றளவும் ரஷ்யா என்றாலே தங்களது விரோத நாடு என்பதை உள்வாங்கிக் கொண்டனர். உலகளவில் அமெரிக்காவை வீழ்த்தவே ரஷ்யா தினம்தினம் அல்லல்படுகிறது என்பது போன்ற பிரமையையும் உருவாக்கி வந்தது ஹாலிவுட் சினிமா.
இப்போது அதுபோன்ற தேச பக்தியை முதன்முதலாக நமக்குள் ஊட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். சீனா, இந்தியாவை அழிக்கவே நினைக்கிறது என்று இவரது கற்பனையில் உருவான ட்ரீட்மெண்ட்டுக்கு பொட்டு வைத்து பூ வைக்கும்விதமாக, போதி தர்மர் என்னும் தமிழரும் கிடைத்துவிட... அலங்காரம் பண்ணி முடித்துவிட்டார்..!
நிச்சயமாக இந்தப் படம் தமிழின் முதன்மையான திரைப்படமோ, அல்லது காவியமான, உன்னதமான திரைப்படமோ இல்லை. ஆனால் குறிப்பிடத்தக்கத் திரைப்படம்.
முருகதாஸ் போதி தர்மர் பற்றிக் கூறும்வரையில், எனக்கு இவரைப் பற்றித் தெரியாது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். அதன் பின்புதான் அவரைப் பற்றி விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்து கொண்டேன். சீன அரசும், சீனர்களும் போதி தர்மர் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த ஒரு தமிழர்(இது ஒரு பெரிய சர்ச்சையில் உள்ளது. இதனை வேறொரு பதிவில் பார்ப்போம்) என்பதை ஒத்துக் கொண்டு அவருக்குரிய கவுரவத்தைக் கொடுத்திருக்கும்போது, இத்தனை நாட்களாக இதனைப் பற்றி தெரிந்தவர்கள் ஏன் வெளியில் சொல்லாமல் இருந்தார்கள் என்று தெரியவில்லை.
தமிழ்ச் சினிமா வர்த்தகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குங்பூ சண்டை படங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. குங்பூ ஆஃப் செவன் ஸ்டெப் என்ற திரைப்படமும், ஷாலின் டெம்பிள் என்ற திரைப்படமும் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட திரைப்படங்கள். இவற்றை பார்த்துதான் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் முனைப்பையும், அக்கறையையும் காட்டினார்கள் நமது இயக்குநர்கள். ஜாக்கிசானின் திரைப்படங்களின் ரிலீஸின்போது கமல், ரஜினிக்கு வரும் கூட்டத்தைப் போல கூட்டம் கூடியதை, தமிழ்த் திரையுலகம் கண்டிருக்கிறது.
இத்தனை நெருங்கிய தொடர்புகள் இருந்தும், இந்த்த் தகவல் மட்டும் இத்தனை நாட்களாக வெளியில் வராமல் இருந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை.
இப்போது இதனை உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையோடு போதி தர்மர் பற்றி திரைப்படமெடுக்க முன் வந்த முருகதாஸின் முயற்சிக்கு எனது வந்தனங்கள். வேறு யாராவது எடுத்திருந்தால்கூட போதிதர்மர் இந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் ரீச் ஆகியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் முருகதாஸ் வணக்கத்துக்குரியவர்..!
திரைப்படமாக பார்க்கப் போனால் முதல் 20 நிமிடங்களில் எடுத்திருப்பதையே முழுத் திரைப்படமாக உருவாக்கியிருக்கலாம். அதனை இன்றைய காலக்கட்டத்தோடு ஒப்பிட்டு இன்றைய தமிழ்ச் சினிமாவின் வியாபாரத்துக்கும் ஏற்றார்போல் செய்ய முனைந்தது முருகதாஸின் தவறல்ல. ஆனால் படம் முழுமையடையாமல் இருக்கும்போது, இத்திரைப்படம் தமிழ்ச் சினிமாவின் காவியப் படம்.. இதுபோல் எவரும் படம் எடுக்கவில்லை.. கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் என்றெல்லாம் அவர் பேசியது இப்போது படத்தின் ரிசல்ட்டுக்கே எதிராகப் போய்விட்டது..
இப்படியெல்லாம் பேசாமல், “இது புதுமையான பேக்கிரவுண்ட்டில் வழக்கமான கரம் மசாலா படம்தான்..” என்று அண்ணன் முருகதாஸ் சொல்லிவிட்டுப் போயிருந்தால், இத்தனை சர்ச்சைகள் வந்திருக்காது..! ஓவர்.. படத்துக்கு வருவோம்..!
முதல் 20 நிமிடங்களில் போதி தர்மரின் வாழ்க்கை வரலாறு சொல்லும்போது ஏற்றி வைத்த பெப், அடுத்த சில காட்சிகளிலேயே நமநமத்துப் போய் கீழிறங்கிவிட.. அதற்குப் பிறகு கடைசி 20 நிமிடங்களில் மட்டுமே படத்தில் மனம் லயிக்கிறது. இடைப்பட்ட நேரங்களில் நடப்பதையெல்லாம் நல்ல இயக்கமாக இருந்தும், ஒரு சீரியல் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டியதாகிவிட்டது.. சர்க்கஸ் கலைஞராக வரும் சூர்யாவின் பார்த்தவுடன் காதலிலேயே படம் சாதாரண படமாகிவிட்டது.. முருகதாஸின் உதவியாளர்கள் இதைக் கூடவா எடுத்துச் சொல்லாமல் விட்டார்கள்..!?
போதி தர்மருக்காக சூர்யா மெனக்கெட்டிருக்கிறார் என்றாலும் சண்டைக் காட்சிகளில் கிராபிக்ஸை பயன்படுத்தி அதையும் கொலை செய்திருக்கிறார்கள். முதல் ஒரு வாரத்தில் படம் பார்க்கப் போகும் அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களும், இதனால் ஏமாறப் போவது நிச்சயம். குங்பூ படங்களும், ஜாக்கிசானும் எதை குங்பூ என்று சொல்லியிருந்தார்களோ, அதுவெல்லாம் இல்லாமலேயே இதுதான் குங்பூ சண்டை என்று சொல்லி முடித்திருக்கிறார் முருகதாஸ்.
சூர்யா போதி தர்மர் கேரக்டரில் அழகாக இருக்கிறார். நஞ்சு கலந்திருக்கும் உணவைக் கையில் எடுத்து சுவைக்கும்போது அவர் முகம் காட்டும் எக்ஸ்பிரஷன்.. இது சூர்யா என்கிறது..! இந்த சூர்யா சண்டையிடும் காட்சிகளும் குங்பூ கலைக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதால் அகாசய சூரனாகவே காட்சியளிக்கிறார். சர்க்கஸ் சூர்யா வழக்கம்போல காதலிக்க அலையும் பேட்பாயாகவே தெரிகிறார். சர்க்கஸிஸ் செய்திருக்கும் இவருடைய காட்சிகளைத்தான் இப்படி பாராட்டியிருந்தாரா முருகதாஸ்..? ஐயோடா முருகா.. இதைத்தான் சொல்ல முடியும்..!
சர்க்கஸ் சூர்யா சீரியஸாவதை மிக காமெடியாக எடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் தன்னை சர்க்கஸ் வாசலில் இறக்கிவிட்டுச் செல்லும் ஸ்ருதியைப் பற்றி சித்தப்பா சொல்லும் செய்தியைக் கேட்டவுடன் படாரென்று பொங்கியெழுந்து ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று கொதிக்கும் அந்தக் காட்சி.. டிவி சீரியல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது..!
ஸ்ருதிக்கு மிக பொருத்தமான அறிமுகம். எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று.. ஸ்ருதியின் கண்கள் ஏதோ சொல்ல வருவதைத்தான் அவருடைய அறிமுகக் காட்சியில் காட்டியிருக்க வேண்டும். ஆனால் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் அந்தக் காட்சியில் கோட்டைவிட்டுவிட்டார்கள்.
குளோஸப் காட்சிகளில் வாய்ஸ் மாடுலேஷன் சிறிதளவுகூட மாறாமல், சிந்தாமல், சிதறாமல் இருக்கிறது.. அழகு.. சூர்யாவைவிடவும் அழகாக நடனமாடியிருக்கிறார். கப்பல் மீது ஆடும் அந்த ஒரு ஸ்டெப் போதும் அம்மணிக்கு.. கான்பரன்ஸில் தமிழர்களைப் பற்றி பொங்கியெழும் காட்சியில் ஒரு துளி கண்ணீர்கூட சிந்தாமல் கண்ணீரைத் தேக்கி வைத்த நிலையில் ஸ்ருதியின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.. ஆடைக் குறைப்பில் அதிகம் அக்கறை காட்டாமல் அவரை நடிக்க வைப்பதிலேயே முருகதாஸ் தீவிரம் காட்டியிருக்கிறார்..!
இந்தியாவையும், இலங்கையும் போட்டுத் தாக்கிவிட்டு, சந்தடிச்சாக்கில் இட ஒதுக்கீட்டின் மீதும் பாய்ந்திருக்கிறார் முருகதாஸ். யாரும் இதை இன்னும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. தப்பித்தார் இயக்குநர். படத்தில் தமிழர்கள் சம்பந்தப்பட்ட வசனத்திலும், இலங்கையை மறைமுகமாகத் தாக்கிய வசனத்திலும், இலங்கை சென்சார் போர்டு கத்திரி போட்டுவிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..!
சர்க்கஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பிரமிக்க வைக்க எத்தனையோ இருந்தும் ஒளிப்பதிவு மந்தமாக இருந்த்து ஏன் என்று தெரியவில்லை. சூர்யா, ஸ்ருதியின் பர்ஸை லவட்டும் காட்சிகளிலெல்லாம் கேமிராமேனின் லென்ஸும் லவட்டாகிவிட்டது போலும்.. சில இடங்களில் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு ஒன்றுமேயில்லை..
போதி தர்மர் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல் காட்சிகள், இறுதிக் காட்சியிலும் மட்டுமே சுழன்று, சுழன்று வேலை பார்த்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் அசோசியேட் வேலை பார்த்திருப்பாரோ..?
வில்லன் நடிகரான அந்த டோங்லீ. நல்ல தேர்வுதான் ஆனால் அவர் அளவுக்கு சூர்யாவுக்கு குங்பூ தெரியாத்தால் ஹீரோவுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறார்..! ஸ்ருதிக்கு உதவிக்கு செய்யும் மாலதி என்ற பெண் நல்ல அழகு. சினிமாவுக்கேற்ற முகம்.. முயன்றால் ஹீரோயினாகலாம்..!
நாய்க்கு ஊசி போட்டு நோயைப் பரப்பும் காட்சிகளின் பிரம்மாண்டம் பயமூட்டுகிறது. இந்தக் காட்சியை விஸ்தாரமாக காட்டினாலும் எடுக்கப்பட்டவிதம் மிக நேர்த்தி..!
லீ, சூர்யா, ஸ்ருதி விரட்டல் காட்சிகளில் பலவற்றை அடுத்த்து இதுதான் என்பதை தொடர்ச்சியாக சினிமா பார்த்து வருபவர்கள் மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாம் நினைப்பதுதான் ஸ்கிரீனிலும் வருகிறது. நம்மை கெளரவிக்க வேண்டும் என்பதற்காகவே முருகதாஸ் இதைச் செய்திருக்கிறாரோ..? வாழ்க இயக்குநர்..!
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஆடியோ ரிலீஸின்போதே வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது முன் அந்திச் சாரல் பாடல். படமாக்கப்பட்டவிதமும் பிரெஷ்னஸ்.. அழகு.. பின்னணி இசையில் பல இடங்களில் பரபரப்பை ஊட்டியிருக்கிறார். சில இடங்களில் அதுவே அலங்கோலமாகவும் தெரிகிறது. அடிக்கடி வரும் தீம் மியூஸிக் காதைக் குடைகிறதே தவிர.. வேறு எதையும் செய்யவில்லை..!
இறுதியில் டோங்லீ வீழ்வார் என்று தியேட்டர் வாட்ச்மேனுக்கே தெரியுமென்பதால் அதிக சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது சினிமா ரசிகர்களுக்கு.. லாஜிக் மீறலில் இந்தப் படத்தில் செய்திருக்கும் தவறுகளைப் பட்டியலிட்டால் அதை வைத்தே இன்னொரு சினிமா எடுத்துவிடலாம்..!
ஹிப்டினாசம் முறையிலேயே அனைவரையும் திசை திருப்ப முடியுமெனில், ஸ்ருதியையும், சூர்யாவையும் மடக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அத்தனையையும்விட்டுவிட்டு 16 ரீல்களுக்கு கதையை நகர்த்த வேண்டி இத்தனை அதகளம் செய்திருக்கிறார்கள்.
நோக்கு வர்மக் கலையால், போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே நுழைந்து பல காவலர்களை சாகடித்த பின்பும் அவரைத் தேடாத போலீஸ் என்று சொல்லி தமிழ்நாட்டு போலீஸை மிகவும் கேவலப்படுத்திவிட்டார் முருகதாஸ். இந்தப் படத்தை முருகதாஸின் கேரியரில் மிக முக்கிய படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு போனதற்கு இந்த ஒரு லாஜிக் மீறலையே உதாரணமாகச் சொல்லிவிடலாம்..!
டோங்லீ இறுதிக் காட்சியில் மரத்தையே தூக்கும் டூ மச்சான ஷாட்டுகள், சர்க்கஸை நிஜமாகவே கோமாளிகளின் கூடாரமாகக் காட்டியது.. 300 கோடி ரூபாயை ஸ்விஸ் வங்கியில் போட்டிருப்பதாக சாதாரண மெயில் மூலம் கண்டுபிடிப்பது.. சூர்யா திடீரென்று தனி டிராக்கில் சென்று பேராசிரியரை கடத்துவது.. சூர்யாவின் குடும்பத்தினரின் வருகையும், ஆன் தி ஸ்பாட்டில் காணாமல் போவதுமாக.. எண்ணற்ற சினிமா விதிமீறல்களை வைத்திருப்பதால் முருகதாஸ் தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த முறை தோற்றுப் போனவராகவே காட்சியளிக்கிறார்..!
நான் முன்பே சொன்னதுபோல சீனா-இந்தியா எதிர்ப்பு என்ற ஒன்றைக் காட்டி இந்திய தேசியத்தைக் கட்டிக் காப்பதற்காக போதி தர்மரின் டி.என்.ஏ. மீண்டும் தோண்டியெடுக்கப்படுகிறது என்று படத்தின் ஒன்லைனை வைத்துவிட்டு, “தமிழர்கள்ன்னா இந்தியாவிலேயும் அடிக்கிறாங்க.. வெளிநாட்டுலேயும் அடிக்கிறாங்க.. எங்க போனாலும் அடி வாங்குறது தமிழர்கள்தான்”னு கொந்தளிக்கிற டயலாக்கை வேறு வைத்திருப்பது இடிக்கிறதே..!
இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை. இதையாவது அண்ணன் முருகதாஸ் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளட்டும்..!
இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை. இதையாவது அண்ணன் முருகதாஸ் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளட்டும்..!
நிச்சயம் பார்க்கக் கூடாத, வேண்டாத படமல்ல. அதே சமயம் பார்த்தே தீர வேண்டிய படமும் அல்ல. நேரம் கிடைத்தால் பாருங்கள்..!
படத்தின் டிரெயிலர் :
|
Tweet |
54 comments:
vada
என்பது கோடி ரூபாய் வியாபாரத்தை கொடுத்த படம்.இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
//நோக்கு தர்மாவால்//
நோக்கு வர்மம்\நோக்கு வர்மத்தால்
"இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை." Athu eppidi sir ungalukku therinjathu? Naalu peru koottam pottu sonna, odane thamizh nattu makkal yaarukkume Inthiya Thesiyam pudikkalainnu aayiruma? Etho ongalukku therinjavanga mattum thaan thamizharkalnu nenaikkatheenga sir!
யாருப்பா அண்ணன் வலைப்பக்கத்தை திருடியது? வெறும் ரெண்டே பக்கம் தான் இருக்கு விமர்சனம்..
கூகிள் அவர்கள் servers எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதான்னு சரிபார்க்க ஆள் அனுப்பி இருக்காங்களாம் :)
////நிச்சயம் பார்க்கக் கூடாத, வேண்டாத படமல்ல. அதே சமயம் பார்த்தே தீர வேண்டிய படமும் அல்ல. நேரம் கிடைத்தால் பாருங்கள்..!
///
அப்போ சரிங்க.....
நாடு நிலையான விமர்சனம்.
நல்ல விமர்சனம்.
அண்ணே நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கே???
//இது ஒரு பெரிய சர்ச்சையில் உள்ளது. இதனை வேறொரு பதிவில் பார்ப்போம்
Read more: http://truetamilans.blogspot.com/#ixzz1c2o6WGvU//
தனிப்பதிவா?? ஹய்யா ஜாலி
மாதா ஆஸ்பிடல்லில் ஸ்ருதி தன் நண்பர்களிடம் அமைச்சரிடம் போனை போடு pressயை கூப்பிடு எல்லாரும் யோய் மேட்டரை சொல்லுன்னு பரபரப்பாக சொல்கிறார். கடைசி வரை ப்ரஸ் போலிஸ் யாரும் வரவே இல்லை. அவசர அவசரமாக மக்கள் எப்படி எடுத்தாலும் பார்பாங்கன்னு அதீத நம்பிக்கையில் முடிந்த அபத்தம் :)
//இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை.
//
அண்ணே இது போங்கு ஆட்டம் ;) ஹிட்ஸ்க்குகாக நீங்களும் அடிச்சு வுடாதீங்க.
[[[யோஹான் said...
vada]]]
மறுபடியுமா..? ஏன்.. ஏன் இப்படி..?
[[[மு.சரவணக்குமார் said...
என்பது கோடி ரூபாய் வியாபாரத்தை கொடுத்த படம்.இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.]]]
உண்மைதான். அனைத்து வெற்றி இயக்குநர்களுக்குமே கொஞ்சம் அலட்சியம் வந்துவிடும்..! திரைக்கதையை செப்பனிட்டிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்..!
[[[காலப் பறவை said...
//நோக்கு தர்மாவால்//
நோக்கு வர்மம்\நோக்கு வர்மத்தால்]]]
நன்றிண்ணே.. மாத்திட்டேன்..!
[[[Manik said...
"இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை.
" Athu eppidi sir ungalukku therinjathu? Naalu peru koottam pottu sonna, odane thamizh nattu makkal yaarukkume Inthiya Thesiyam pudikkalainnu aayiruma? Etho ongalukku therinjavanga mattumthaan thamizharkalnu nenaikkatheenga sir!]]]
ஆமாம்.. எடுத்துச் சொன்னால் நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்..!
[[[செந்தில் நாதன் Senthil Nathan said...
யாருப்பா அண்ணன் வலைப்பக்கத்தை திருடியது? வெறும் ரெண்டே பக்கம்தான் இருக்கு விமர்சனம்..
கூகிள் அவர்கள் servers எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதான்னு சரிபார்க்க ஆள் அனுப்பி இருக்காங்களாம் :)]]]
போதும்ண்ணே.. இனிமே கொஞ்சம்தான்..!
[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நிச்சயம் பார்க்கக் கூடாத, வேண்டாத படமல்ல. அதே சமயம் பார்த்தே தீர வேண்டிய படமும் அல்ல. நேரம் கிடைத்தால் பாருங்கள்..!//
அப்போ சரிங்க.....]]]
ஓகே ஸார்..!
[[[சண்முகம் said...
நடு நிலையான விமர்சனம்.]]]
நன்றி சண்முகம்..!
[[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நல்ல விமர்சனம். அண்ணே நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கே???]]]
அது என்னமோ தெரியலை.. இப்பல்லாம் "த், து" போன்றவைகளை டைப் செய்யும்போது முன் எழுத்திலும் ஒரு
"த்" தானாகவே விழுகிறது. என்ன காரணம்.. உனக்குத் தெரியுமா..?
[[[SIV said...
//இது ஒரு பெரிய சர்ச்சையில் உள்ளது. இதனை வேறொரு பதிவில் பார்ப்போம்
Read more: http://truetamilans.blogspot.com/#ixzz1c2o6WGvU//
தனிப்பதிவா?? ஹய்யா ஜாலி]]]
ஆமாம் ஸார்.. பல்லவ மன்னர்கள் தமிழர்களே இல்லை என்கிறார்கள் ஒரு சிலர்.. இந்தப் பிரச்சினையும் தனி டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது..!
[[[Arun Kumar said...
மாதா ஆஸ்பிடல்லில் ஸ்ருதி தன் நண்பர்களிடம் அமைச்சரிடம் போனை போடு pressயை கூப்பிடு எல்லாரும் யோய் மேட்டரை சொல்லுன்னு பரபரப்பாக சொல்கிறார். கடைசிவரை ப்ரஸ் போலிஸ் யாரும் வரவே இல்லை. அவசர அவசரமாக மக்கள் எப்படி எடுத்தாலும் பார்பாங்கன்னு அதீத நம்பிக்கையில் முடிந்த அபத்தம்:)]]]
அதேதான்.. முருகதாஸ் தவறாமல் வலைப்பூக்களை வாசித்து வருகிறார். இதைப் படிக்கும்போது நிச்சயமாக உணர்ந்து கொள்வார் என்றே நானும் நம்புகிறேன்..!
//இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை./
அண்ணே இது போங்கு ஆட்டம் ;) ஹிட்ஸ்க்குகாக நீங்களும் அடிச்சு வுடாதீங்க.]]]
ஹிட்ஸா..? அட போங்கப்பா.. இருக்கிறதே போதாதா..? கொஞ்சம் ஆழ்ந்து யோசிச்சுப் பாருங்க.. தெரியும்..! புரியும்..!
//சீனா, இந்தியாவை அழிக்கவே நினைக்கிறது என்று இவரது கற்பனையில் உருவான ட்ரீட்மெண்ட்டுக்கு பொட்டு வைத்து பூ வைக்கும்விதமாக,//
elephant vs draggon
http://www.deccanherald.com/content/121243/banner-300x250.swf
இதையெல்லாம் வாசிக்க முயற்சியாவது பண்ணுங்க . இதையே வெள்ளைக்காரன் எடுத்தா பேசாம போவீங்க தானே ? கருவை பாருங்க. இன்டைக்கு விமர்சனம் செய்வீங்க. நாளைக்கு வேற ஏதாவது வேலை பாத்திட்டு போவீங்க . முருகதாசுக்கு ஒரு கமெர்ஷியல் படம் கொடுப்பது ,பழிவாங்கல் படம் கொடுப்பது பெரிய வேலை இல்லை என்பதை புரிட்ன்ஹு கொள்ளுங்கள் . விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதியில்லை என்பது என் கருத்து .
http://ethamil.blogspot.com/2011/10/7.html
நம்மை இங்கு நாம் தொலைத்தோம் .அதையே தோடர்ந்து செய்கிறோம் என சொல்கிறேன் ...
உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக அப்பிடின்னு எங்க ஊரு டி.வில போடுவாங்க
அப்ப பாத்திட்டு சொல்றேன். எல்லோரும் ரொம்ப எதிர் பார்த்து போய் , பல்ப் வாங்கின கடுப்பா?
உனது விழி வலிமையிலே!
//இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை. //
Really?
நடுநிலையான விமர்சனம்...
படம் பொக்குன்னு போயிருச்சுன்னு மட்டும் புரியுது!
//இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை.//
இது என்ன வர்மம் அண்ணே? :-)
தமிழர் என்ற வார்த்தைக்கு முன்னால் " ஒரு பாவமும் அறியா அப்பாவித்தமிழர் " என்று போட்டுக்கொள்கிறேன். தமிழக ரவுடிகளுக்கும் கொலைகாரனுக்கும் தீவிரவாதி மிருகங்களுக்கும் அந்த அடைமொழியை சூட்டி மகிழ்கிறேன். போதாக்குறைக்கு இலங்கையிலிருந்து இங்கு வந்து அட்டூழியம் செய்தாலும் அந்த அடைமொழியை வழங்குவதில் எனக்கு எந்த வெட்கமுமில்லை. தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக யாழ்ப்பாணம் நகரை அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...தமிழ்நாட்டின் பெரும்பான்மை தமிழர்களால் பின்பற்றப்படும் இந்து மதத்தைக் கேவலமாகவும், தமிழர்களில் ஒரு அங்கமான தமிழகத்து பிராமணர்களை மிகக்கேவலமாகவும் திட்டுகின்றேன்...எழுதுகின்றேன்...தாழ்த்தப்பட்ட.... பிற்ப்படுத்தப்பட்ட ....இப்படிப்பேசிக்கொண்டிருப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவர்களெல்லாம் மனிதர்களே அல்ல என்று கேவலப்படுத்துகிறேன்......தமிழர்களை எவ்வளவு தூரம் கூறு போட முடியுமோ அவ்வளவு தூரம் கூறு போட்டு பிரித்து கேவலப்படுத்துகிறேன்... மூணு பேருக்கு தூக்குன்னால் தமிழா தமிழா என்று நரம்பு புடைக்கிறேன்...கூட்டம் கூடாதவனுக்கு கேவலமான சாபம் இடுகிறேன்... உச்ச நீதிமன்றம் எனக்கு மலத்துக்கு சமானம். தமிழ்நாட்டை காவு கொடுத்தாவது ஈழம் கிடைக்க வேண்டுமென துடிக்கிறேன்..அப்படியும் என் கோபம் தீராவிட்டால் இந்தியாவே நாசமாகப்போகட்டும் என்று கொதிக்கிறேன்...சக போராளிகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த பிரபாகரன் எனக்கு மாவீரன்......இன்றைய தமிழகத்தின் மாபெரும் தலைவர்கள்... கொளத்தூர் மணி, நெடுமாறன், பெ.மணியரசன், அற்புதம்மாள், வைகோ, சீமான், ராமதாசு, தியாகு, வீரமணி மட்டுமே....இப்போது எனக்கு லேட்டஸ்ட் வேலை...கூடன்குளத்திலே மூடு மூடுன்னு கத்துவது....
உண்மைத்தமிழன் சார் ....இப்போது சொல்லுங்கள் நான் உண்மையாலுமே தமிழன் தானே.....
தமிழன் என்று சொல்லுங்கள் ....ஒன்றுமறியா அப்பாவித்தமிழன் என்று சொல்லுங்கள்..
@ சூனிய விகடன் - பெரும்பாலான தமிழர்களின் மனக்குமுறலை கொட்டி த் தீர்த்து இருக்கிறீர்கள் ! பட விமர்சனத்தை அலசிக் கொண்டிருக்கும்போது கொஞ்சம் திசை திரும்புகிற விவாதம் தான் ! இருப்பினும் அட்சர சுத்தமாக சொல்லி உள்ளீர்கள் ! உள்ளிருக்கும் வெட்பத்தை வெளியிட்டு இருக்கிறீர்கள்! ஆனால் அப்படி கத்திக்கொண்டிருக்கும் தமிழர் ஒரு சாரார் தான் என்பதை மறந்து விடாதீர்கள் ! நம்மை போல் வலைத்தளத்தில் மட்டும் கொதித்துக்கொண்டிருக்கும் அப்பாவி தமிழர் கோடான கோடி உண்டு!
@ உண்மை தமிழன் - விமர்சனம் அற்புதம் !
[[[S.Sudharshan said...
//சீனா, இந்தியாவை அழிக்கவே நினைக்கிறது என்று இவரது கற்பனையில் உருவான ட்ரீட்மெண்ட்டுக்கு பொட்டு வைத்து பூ வைக்கும்விதமாக,//
elephant vs draggon
http://www.deccanherald.com/content/121243/banner-300x250.swf
இதையெல்லாம் வாசிக்க முயற்சியாவது பண்ணுங்க. இதையே வெள்ளைக்காரன் எடுத்தா பேசாம போவீங்கதானே? கருவை பாருங்க. இன்டைக்கு விமர்சனம் செய்வீங்க. நாளைக்கு வேற ஏதாவது வேலை பாத்திட்டு போவீங்க. முருகதாசுக்கு ஒரு கமெர்ஷியல் படம் கொடுப்பது, பழிவாங்கல் படம் கொடுப்பது பெரிய வேலை இல்லை என்பதை புரிட்ன்ஹு கொள்ளுங்கள். விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதியில்லை என்பது என் கருத்து.
http://ethamil.blogspot.com/2011/10/7.html
நம்மை இங்கு நாம் தொலைத்தோம். அதையே தோடர்ந்து செய்கிறோம் என சொல்கிறேன்...]]]
முடியல முருகா.. விமர்சனம் செய்ய யாருக்கும் தகுதியில்லை என்று யார் சொல்வது..? விமர்சனமே செய்யக் கூடாதெனில் எதற்காக தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்கிறீர்கள். படத்தைப் பார்த்துவிட்டு கையது, வாயது பொத்திக் கொண்டு அமைதியாகப் போக வேண்டும் என்றா..? டிக்கெட்டுக்கு காசு முருகதாஸ் தரவில்லை.. நான் உழைத்துச் சம்பாதித்த பணம். விமர்சனம் செய்ய எனக்கு முழு உரிமையுண்டு பிரதர்..!
[[[IlayaDhasan said...
உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக அப்பிடின்னு எங்க ஊரு டி.வில போடுவாங்க. அப்ப பாத்திட்டு சொல்றேன். எல்லோரும் ரொம்ப எதிர் பார்த்து போய், பல்ப் வாங்கின கடுப்பா?]]]
இல்லை. அவர்களுடைய பிரச்சாரம் ஓவராக இருந்தது.. ஆனால் படைப்பு சாதாரணமாக இருக்கிறது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவுதான் இது..!
[[[Senthil Nathan said...
//இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை. //
Really?]]]
யெஸ்..!
[[[விச்சு said...
நடுநிலையான விமர்சனம்...]]]
நன்றி விச்சு..!
[[[சேட்டைக்காரன் said...
படம் பொக்குன்னு போயிருச்சுன்னு மட்டும் புரியுது!]]]
ஹி.. ஹி.. ஹி..
//இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை.//
இது என்ன வர்மம் அண்ணே?:-)]]]
நோக்கு வர்மம்..!
சூனியவிகடன்..
வருகைக்கு நன்றி..!
உங்களது மாறுபட்ட கருத்துக்களை அறிந்தேன். உமது கண்மூடித்தனமான எதிர்ப்புணர்வு கண்டு வருத்தப்படுகிறேன்.. அனுபவப்பட்டால்தான் இதையெல்லாம் அறிய முடியும். காத்திரும்..!
[[[somus12345 said...
@ சூனிய விகடன் - பெரும்பாலான தமிழர்களின் மனக்குமுறலை கொட்டி த் தீர்த்து இருக்கிறீர்கள் ! பட விமர்சனத்தை அலசிக் கொண்டிருக்கும்போது கொஞ்சம் திசை திரும்புகிற விவாதம் தான் ! இருப்பினும் அட்சர சுத்தமாக சொல்லி உள்ளீர்கள் ! உள்ளிருக்கும் வெட்பத்தை வெளியிட்டு இருக்கிறீர்கள்! ஆனால் அப்படி கத்திக்கொண்டிருக்கும் தமிழர் ஒரு சாரார் தான் என்பதை மறந்து விடாதீர்கள் ! நம்மை போல் வலைத்தளத்தில் மட்டும் கொதித்துக்கொண்டிருக்கும் அப்பாவி தமிழர் கோடான கோடி உண்டு!
@ உண்மை தமிழன் - விமர்சனம் அற்புதம்!]]]
வருகைக்கு நன்றி சோமு ஸார்..!
இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை. இதையாவது அண்ணன் முருகதாஸ் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளட்டும்..!
=======
அண்ண சரியா சொன்னீங்க
அதுதான் மக்களோட மனநிலை
அரசியல் புரிந்தவர்களும்
வரலாறு படித்தவர்களும்
உணர்ந்த உண்மை.
இது புரியாத மக்களுக்கு நாம்தான் எடுத்து
சொல்ல வேண்டும்.
உங்களிடம் இருந்து ஒரு பதிவு எதிர் பார்க்கிறேன்.
இந்திய தேசியததில் மிகவும் ஏமாற்ற பட்டது
வட கிழக்கு மாநில மக்கள். அதற்கு பிறகு
தமிழன்தான். இதில் உள்ள முக்கிய விசயம்
தமிழனை பயன்படுத்தி தமிழ்நாட்டை ஏமாற்றி
விட்டான்
www.youtube.com/watch?v=x4DGwe704Fc
[[[Suresh Perumal said...
இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை. இதையாவது அண்ணன் முருகதாஸ் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளட்டும்..!]]]
ஒருமித்தக் கருத்துக்கு நன்றி சுரேஷ்..!
சாரு புழிஞ்சதா ஸார்..
இந்த வீடியோ நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன். ஆத்தா ஆட்சியில் அடக்குமுறைக்கா பஞ்சம்..? அல்லது புதியதா என்ன..?
//
Friday, October 28, 2011 10:44:00 PM
உண்மைத்தமிழன்said...
[[[சேட்டைக்காரன் said...
//இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை.//
இது என்ன வர்மம் அண்ணே?:-)]]]
நோக்கு வர்மம்..!
//
முழுசாவே சொல்லுங்கண்ணே..
'பின் நோக்கு வர்மம்'னு
நான் உங்களின் தொடர் வாசகன் என் முதல் comment… தரமான விமர்சனம்… சரியான பார்வை…
போதி தர்மனைப் பற்றியும் டி.என்.ஏ வைப் பற்றியுமான டாக்குமென்டரிப் படம். சுருதி எதற்காக பல காட்சிகளில் அனைவரையும் டீச்சர் போல அதைச் செய், இதைச் செய் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்? மரத்தைப் பிடுங்கும் காட்சி இதற்கு முன்பே பொன்னம்பலம் ஒரு படத்தில் செய்திருக்கிறார், அதுவும் அவர் பிடுங்கியது பனை மரம் என்று நினைக்கிறேன். சூர்யா வீணடிக்கப் பட்டிருக்கிறார். எப்படியாவது படத்தை முடித்தால் போதும் என்று நினைத்திருப்பார்கள போல.
மேலும் படத்தில் முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு நிமிடத்திறு ஒரு கோடி செலவாகியிருப்பதாக சொன்னார் டைரக்டர். குதிரையைப் பிடித்துக் கொண்டு மலையில் நடப்பதற்கு எதற்கு ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி?. எந்த காட்சியிலும் பிரம்மாண்டம் இல்லை. சீக்வென்ஸும் சரியில்லை. சூர்யா நடிப்பதற்கு சந்தர்ப்பமும் கொடுக்கப் படவில்லை.
//எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று.. //
What nonsense? ஸ்ருதிக்கு நடிப்பே வரவில்லை. வேற நல்லா நடிக்கக் கூடிய நடிகையைப் போட்டு படம் எடுத்திருக்க வேணும். அவர் பேசும் தமிழும் பொறுந்தவில்லை. ஸ்ருதி அழகு ஒத்துக்கொள்கிறேன். அதற்காக மோசமான நடிப்பை சகிச்சுக் கொண்டு படம் பார்க்க முடியவில்லை.
தெற்காசியாவில் இருப்பவர்களுக்கு உலகின் முதலாவது மார்சல் ஆர்ட் சிலம்பாட்டம் என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால், மார்சல் ஆர்ட் விற்பனர்களுக்கும், தென்கிழக்காசிய நாட்டவர்களுக்கும் சிலம்பாட்டம் தான் உலகின் முதலாவது மார்சல் ஆர்ட், எல்லா மார்சல் ஆட்டுக்கும் முன்னோடி என்று தெரியும். இந்த சின்ன விடயமே தெரியாமல் எங்களவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று இந்தப் படம் வந்த பின்னர் தான் புரிந்தது. செம் கடுப்பாக இருக்கு.
கப்பல் ஓட்டிய தமிழனையாவது தெரியுமா? வாழ்க தமிழர்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பாடல்கள் இல்லாமல் படம் எடுத்திருக்கலாம். நிறைய லொஜிக் மீறல்கள் இருந்தாலும், நல்ல படம் பார்த்த திருப்தி, ஈழத்தை ஊறுகாயாக்கிய வியாபாரத் தந்திரத்தால் அதிகமாகவே கடுப்பு.
ஜொனிக்கு ஈடாக சூர்யா நடித்திருக்கிறார். இந்த ரோலை சூர்யாவைத் தவிர யாராலும் செய்திருக்க முடியாது, அது விக்ரமாக, அர்ஜூனாக இருந்தால் கூட முடியாதே என்று தோன்றுகிறது. அப்படி இருக்கும் போது, தனுஷ், விஜய், ரஜினி, விஜயகாந் போன்றவர்கள் நடிச்சிருந்தால். ஸ்ப்பா நினைக்கவே மயக்கம் வருது. அதை நினைச்சு சந்தோசப்படுங்கள். சூர்யா வீணாக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. சூர்யாவின் நடிப்புக்கு நல்ல தீனி. சூர்யாவின் கண்களும் நடிக்கின்றன. சபாஷ்.
வர வர உங்க விமர்சனங்கள் சரியே இல்ல அங்கிள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
[[[Karikal@ன் - கரிகாலன் said...
முழுசாவே சொல்லுங்கண்ணே..
'பின் நோக்கு வர்மம்'னு]]]
இல்லை.. இல்லை.. முன் நோக்கிய வர்மம்..!
[[[mani said...
நான் உங்களின் தொடர் வாசகன் என் முதல் comment… தரமான விமர்சனம்… சரியான பார்வை…]]]
ஆஹா.. பாக்கியம் செய்திருக்கிறேன். நன்றிகள் மணி ஸார்..!
[[[அமர பாரதி said...
சூர்யா வீணடிக்கப்பட்டிருக்கிறார். எப்படியாவது படத்தை முடித்தால் போதும் என்று நினைத்திருப்பார்கள போல.]]]
இது கிளைமாக்ஸ் காட்சியை நினைத்தால் மட்டுமே தோன்றுகிறது.. அவ்வளவுதான்..!
[[[அனாமிகா துவாரகன் said...
//எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று.. //
What nonsense? ஸ்ருதிக்கு நடிப்பே வரவில்லை. வேற நல்லா நடிக்கக் கூடிய நடிகையைப் போட்டு படம் எடுத்திருக்க வேணும். அவர் பேசும் தமிழும் பொறுந்தவில்லை. ஸ்ருதி அழகு ஒத்துக் கொள்கிறேன். அதற்காக மோசமான நடிப்பை சகிச்சுக் கொண்டு படம் பார்க்க முடியவில்லை.]]]
அனாமிகா.. இதுவும் நல்லாயில்லையா..? என்ன கொடுமை சரவணா இது..? எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கும்மா..!
[[[அனாமிகா துவாரகன் said...
வர வர உங்க விமர்சனங்கள் சரியே இல்ல அங்கிள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.]]]
வைத்தால் குடுமி.. அடித்தால் மொட்டை என்பதைப் போல் என்னால் எழுத முடியாது தாயி..!
நல்ல விமர்சனம்..நானும் சொல்லியிருக்கிறேன்..எனது கருத்தினை..
http://pattarivu.blogspot.com/2011/11/blog-post_11.html
[[[இனியன் said...
நல்ல விமர்சனம்.. நானும் சொல்லியிருக்கிறேன்.. எனது கருத்தினை..
http://pattarivu.blogspot.com/2011/11/blog-post_11.html]]]
வருகைக்கு மிக்க நன்றி இனியன் ஸார்..!
நல்ல விமரிசனம்.
நம்ம வீட்டில் அந்த ஏழாம் அறிவு ரொம்ப நாளாத் தூங்குதுன்றது நினைவுக்கு வந்து, குலுக்கலின் ஊடாக அதை இப்போதான் பார்த்து முடிச்சோம்.
போதிதர்மர் எல்லாம் புனைவுன்னு காமிக்க டைரக்டர் டச் ஒன்னு படத்தில் வருது. சென்னை ஆள்வார்பேட்டை சிக்னலில் ஆட்டோ கூப்பிட்டதும் வந்து ஏத்திக்கிட்டு 'மீட்டர்' போடறார் டிரைவர்:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
உண்மையான போதி தர்மருக்கு தமிழ் சினிமா செஞ்ச அதர்மம்தான் இந்தப் படம்.
[[[துளசி கோபால் said...
நல்ல விமரிசனம். நம்ம வீட்டில் அந்த ஏழாம் அறிவு ரொம்ப நாளாத் தூங்குதுன்றது நினைவுக்கு வந்து, குலுக்கலின் ஊடாக அதை இப்போதான் பார்த்து முடிச்சோம். போதிதர்மர் எல்லாம் புனைவுன்னு காமிக்க டைரக்டர் டச் ஒன்னு படத்தில் வருது. சென்னை ஆள்வார்பேட்டை சிக்னலில் ஆட்டோ கூப்பிட்டதும் வந்து ஏத்திக்கிட்டு 'மீட்டர்' போடறார் டிரைவர்:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
உண்மையான போதி தர்மருக்கு தமிழ் சினிமா செஞ்ச அதர்மம்தான் இந்தப் படம்.]]]
ச்சே.. இந்தச் சிந்தனை நம்ம மண்டைக்குத் தோணாமப் போச்சே.. டீச்சர்களெல்லாம் எப்பவுமே இப்படி கோக்கு மாக்காத்தான் யோசிப்பாங்க போலிருக்கு..!
Post a Comment