01-10-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'களவாணி' என்ற சூப்பர் ஹிட்டுக்கு பின்பு அந்த ஒரு வெற்றியை மட்டுமே அடையாளமாக கொண்டு இயக்குநர் சற்குணத்தின் இந்தப் படைப்புக்காக தமிழ்த் திரையுலகமே ஆவலோடு காத்திருந்தது. ஒரு கல்யாண விருந்துக்காக காத்திருந்தவர்கள் பாதி வயிறு நிரம்பிய நிலையில் எழுந்து போன மனநிலையைத்தான் இப்படம் தந்திருக்கிறது என்பது சோகமானது..!
கதைக்களம் 1966-ம் ஆண்டு நடப்பதாக உள்ளது. சர்க்கார் உத்தியோகத்தில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக கே.பாக்யராஜை அவருடைய மைத்துனர் அவமானப்படுத்திவிட்டார். இதற்காக ஒரு வைராக்கியத்துடன் தனது மகன் விமலை டீச்சர் டிரெயினிங்கிற்கு படிக்க வைத்து அரசுப் பள்ளி ஆசிரியராக்குவதுதான் தனது லட்சியமாக்க் கொண்டிருக்கிறார்.
அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவதற்கு முன்பு கிராமசேவாவின் மூலம் கிடைக்கின்ற டீச்சர் வேலையில் சேர்ந்து அதன் மூலம் டீச்சர் அனுபவத்தைப் பெற்று பின்பு ரெகுலர் டீச்சர் வேலையில் மகனை சேர்த்துவிட்டு தனது லட்சியத்தை நிறைவேற்றலாம் என்று துடிக்கிறார் அப்பா பாக்யராஜ்.
இதற்காக கண்டெடுத்தான் காடு என்னும் குக்கிராமத்திற்கு வருகிறார் விமல். செம்மண் புழுதியில் செங்கல் சூளை மட்டுமே அக்கிராமத்தின் வாழ்வாதாரமாக இருக்க, படிப்பறிவே இல்லாத பாமர மக்கள் தங்களது குடும்பத்தினரோடு அடிமைகளை போல் நாளைய பொழுதை பற்றிக்கூட கவலைப்படாமல் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
இவர்களுடைய குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம் என்று வந்த விமலை அந்த ஊரிலேயே டீக்கடை நடத்தும் மதி என்னும் பெண் ஒரு தலையாக்க் காதலிக்கிறாள். பிள்ளைகள் பள்ளிக்கு வர மறுக்கிறார்கள். பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். செங்கல்களை மொத்தமாக வாங்கும் முதலாளி விமலை ஊரைவிட்டு துரத்த முயல்கிறான். இறுதியில் யார் வென்றது என்பதுதான் கதை..!
முருங்கைக்காய்களுடன் பாக்யராஜின் என்ட்ரியை பார்த்தவுடனேயே படம் பற்றிய எனது கணிப்பு லேசாக மாறியது.. பின்பு ஹீரோயினின் கேரக்டர் ஸ்கெட்ச்சை பார்த்தவுடனேயே ஆஹா.. டிராக் மாறிருச்சு என்று கணிக்க முடிந்த்து..
களவாணியைப் போலவே இதிலும் விமலின் கேரக்டரை அப்படியே வைத்திருக்கிறார். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதைத் தவிர மீதியெல்லாம்தான் செய்து கொண்டிருக்கிறார். கூடவே ஒரு தலைக் காதலுக்காக அவ்வப்போது பாடுவதும், ஆடுவதுமாக கதை செல்கிறது..!
கதையின் முதல் முடிச்சே இடைவேளை பிளாக்கிற்குப் பின்பு அரை மணி நேரம் கழித்துதான் வருகிறது. அதுவரையில் நடந்த்தெல்லாம் எதற்காக..? முன்பே அந்தக் காட்சிகளை வைத்து பிற்பாடு காதலை சொல்லியிருக்கலாம்..! ஹீரோயினின் தீவிரமான ஒரு தலைக் காதலை புரியாத அளவுக்கு அப்பாவியாய் இருக்கும் விமலின் கேரக்டர் இறுதிவரையில் பொங்கி எழவே இல்லை. கிளைமாக்ஸில்கூட அமைதியாகத்தான் அவர் தனது அப்பாவிடம் தனது விருப்பத்தைக் கூறி கிராமத்துக்கு திரும்புகிறார்.
கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர்த்தியிருக்க வேண்டிய திரைப்படம், வலுவான திரைக்கதையில்லாத்தால் ஏதோ லைட்டா சொல்லியிருக்காங்க என்றாகிவிட்டது..!
சில சில காட்சிகள் ரசிப்புக்குரியவையாக இருந்தாலும் அதனால் ஒட்டு மொத்த படத்திற்கு என்னதான் கிடைத்த்து? தம்பி ராமையா போடும் கணக்குகள் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்.. பதிலுக்கு விமல் கூறும் கணக்கை அவர் எங்கேயிருந்து படித்தார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் ஊரைவிட்டு எங்கேயும் போகவே இல்லையே..? தெரிந்திருந்தால் முன்பே சொல்லியிருக்கலாமே..?
குமரவேலுவின் கேரக்டரை வைத்து ஏதோ பெரிதாகச் செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன். நான் போறேன். நீ இருக்கணும் என்று அவர் சொல்வதை பார்த்தபோது பெரிய பூதம் கிளம்பப் போகிறது என்று பார்த்தால் கடைசிவரையில் அது வரவேயில்லை..!
பொன்வண்ணன் அடிபட்ட நிலையில் திரும்பி வருவேன். வந்து வச்சுக்குறேன் என்று கருவிவிட்டு போகிறார். ஆனால் இவரும் திரும்பி வரவில்லை. ஆனால் திடீர் ஹீரோக்கள் என்ட்ரியை போல கே.பாக்யராஜ் கிளைமாக்ஸில் தலையைக் கொடுக்கிறார். சிரிப்பாக இருக்கிறது.
விமலின் நடிப்பில் அப்பாவித்தனம் ஓகே. ஆனால் எகத்தாளமாக பேசும்போது உண்மையாகவே வில்லனை போல் தெரிகிறார். ஆனால் கேள்விகள் கேட்கும்போது அப்பாவியாய் வருகிறது.. குழப்பமான கேரக்டர் ஸ்கெட்ச்.. ஆடு முட்ட வருவதை பார்த்து பயந்து ஓடுபவர் என்ற ஒரு குணாதிசயத்திற்காக 3 முறை அதே காட்சிகளை வைத்து வெறுப்பேற்ற வேண்டுமா..?
ஹீரோயினுக்கு முதல் படம் என்றாலும் நிறைய டிரெயினிங் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். நன்று. டீயின் விலையை பைசாவில் சொல்லி அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து தன்னுடைய திருமணச் செலவுக்காக டீயின் விலையை ஏற்றிவிட்டதாக அனைவரிடமும் வாலண்டியராக சொல்லிவிட்டுச் செல்லும் காட்சி ரசிப்பு..!
போதாக்குறைக்கு அந்த ஹீரோயின் எப்போது விமல் மீது எதற்காக காதல்வயப்படுகிறார் என்றே தெரியவில்லை. அவ்வப்போது திடீர், திடீரென்று பத்து, பன்னிரெண்டு வரிகளோடு பாடல் காட்சிகள் ஓடி மறைகின்றன. சரசர சாரக் காத்து என்ற பாடலை படமாக்கிய விதம் அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் படத்துடன் ஒட்டவில்லையே..?
என்னை கல்யாணம் செஞ்சுக்கய்யா என்று கேட்கின்ற பெண்ணிடம் விமல் பேசுகின்ற பேச்சை கேட்டால்.. உஷ்.. முடியல சாமி.. இதே விமல்தான் இறுதிக் காட்சியில் திடீர் ஞானதோயத்தில் வாழ்க்கை முழுக்க சோறு கிடைக்குமா என்று ஒரே வரியில் தோசையைத் திருப்பிப் போட்டு கேட்கிறார்..இவ்வளவு அவசரமாக கிளைமாக்ஸை முடிக்க வேண்டுமா..?
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பித்தான் வேண்டும் என்று சொல்லி விமல் அவர்களுடன் சண்டையிடுவதாக நினைத்து 2 காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அதில் விமல் காட்டும் எக்ஸ்பிரஸனையும், வசனங்களையும் கேட்டால் ஏதோ சம்பிராதயத்துக்கு கேட்பதுபோல் இருக்கிறது..
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு முரண்.. படிப்பறிவே இல்லாத குழந்தைகள் பேசுகின்ற பேச்சைக் கேட்கும்போது அது அவர்களது வயதுக்கு மீறியதாக இருக்கிறது. ஆனாலும் பிள்ளைகளின் தேர்வு அருமை. நிமிடத்திற்கு நிமிடம் விமலை வாரிவிடும் அந்தச் சிறுசுகளின் வேலையினால் நகைச்சுவையை சிந்த முடிந்தது என்றாலும், கதையின் பெரும்பாலான நேரத்தை அவைகள் விழுங்கிவிட்டன என்ற குற்றச்சாட்டையும் சொல்லத்தான் வேண்டும்..!
அப்பாவிகள்.. படிப்பறிவில்லாதவர்கள்.. இப்படித்தான் இருப்பார்கள் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் கல்வி வேண்டும் என்ற மனநிலை பெற்றோர்களுக்கு தோன்ற ஒரு காரணம் வேண்டுமே..? அது இங்கே அழுத்தமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மிகத் தாமதமாக.. செங்கற்களை எண்ணிப் பார்த்து கண்டுபிடிக்க தூண்டிவிடும் விமலின் இந்தக் காட்சியை முதற்பாதியில் வைத்திருந்தாலாவது படத்தின் ஓட்டத்திற்கு கை கொடுத்திருக்கும்..! எல்லாம் முடிந்து கடைசியில் என்ன செய்வது..?
அழுத்தமான, மனதை தைக்கக் கூடிய காட்சிகளை தேடித் தேடிப் பார்த்தேன். அவைகள் கிடைக்கவில்லை. இவ்வளவு அழகான கதையில் அது இருந்திருக்க வேண்டாமா..?
எதுவுமே நல்லாயில்லையா என்று கோபப்பட வேண்டாம். கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள். கலை இயக்குநர் சீனுவுக்கு ஒரு பாராட்டு.. ஒரு பொட்டல் காட்டில் 35 குடும்பங்களுக்கான குடிசைகளை அமைத்து, அதனை அழகியல் கெடாதவண்ணம் அக்கால கிராமமாக காட்டியிருக்கிறார்..!
இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோக்களை பார்த்து பிரமித்துப் போனேன்.. சிலேட்டுக் குச்சியுடனும், விளையாட்டுப் பொருட்களுடனும் விளையாடிக் களைத்துப் போக வேண்டிய அந்த பிஞ்சு கைகளுக்கு குழைக்கப்பட்டிருக்கும் மண்ணில் இருந்து செங்கலை உருவாக்க செய்து கொடுக்கும் வித்தையை பார்த்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்த்து.
பக்கத்தில் இருந்த கிராமங்களில் இருந்து ஒட்டு மொத்த மக்களை ஒன்று திரட்டி அவர்களில் இருந்து குறிப்பிட்டி சிலரை மட்டும் தேர்வு செய்து, சிறு குழந்தைகளுக்காக ஒரு பெரிய வொர்க் ஷாப்பே நடத்தியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். அங்கே நடுவில் இருந்த குளம்கூட தயாரிக்கப்பட்டதுதான்.. ஒவ்வொரு வீட்டையும் எப்படி அமைத்தார்கள் என்பதைக் காண்கின்றபோது தமிழ்த் திரையுலக சிற்பிகள் எப்பேர்ப்பட்ட கலைஞர்கள் என்பது புரிகிறது..!
அடுத்த பாராட்டு ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷுக்கு..! கொஞ்சமும் பிசிறு தட்டாத அளவுக்கு கடைசிவரையில் கலர் மாறாமல் அதே செம்மண் கலரையே வரித்துக் கொண்டு நிற்கின்றன திரைக்காட்சிகள். குமரவேலு இறந்த செய்தி கேட்டு ஊரே திரண்டு ஓடும் அந்த ஒரு காட்சியை படம் பிடித்திருக்கும் விதம் சூப்பர்..!
இந்தப் படத்திற்கு எதற்காக 1966-ம் வருட காலக்கட்டம்..? இப்போதுகூட தமிழ்நாட்டில் பல மலைக்கிராமங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு மலைக்கிராமத்தில் ஒரு இளைஞன் குழந்தைகளின் படிப்பறிவுக்காக போராடுகிறான் என்றே எடுத்திருக்கலாம்.. எதற்காக 1966 என்று தெரியவில்லை..!
இரண்டாவது திரைப்படம். தானும் பைனான்ஸ் செய்து தயாரித்திருக்கும் படம். நிறைய பொருட் செலவு. இதையெல்லாம் மனதில் வைத்து செய்திருக்கலாமே..? அந்தக் காலக்கட்டம் என்பது எந்தவிதத்திலும் சற்குணத்திற்கும், கதைக்கும் உதவவில்லை.. வானொலியின் பாடல் ஒளிபரப்பும், மீன்களின் வகைகளை அடுக்குவதும், மக்கள் பயன்படுத்தும் பழங்காலப் பொருட்களுமாக வேறென்ன காட்ட முடிந்தது இதில்..!?
மிகச் சிறப்பான ஒரு கதைக்களனில் விளையாட்டு காட்டியிருக்க வேண்டிய இடத்தில், வெறுமனே எழுத்தில் மட்டுமே அதனை செய்திருக்கிறார் என்பதுதான் வருத்தத்திற்குரியது.
வாகை சூட வா - திரைக்கதையில் மாற்றம் செய்திருந்தால் நிச்சயம் வாகை சூடியிருப்பான்..!
|
Tweet |
21 comments:
1966?
[[[Guru said...
1966?]]]
குரு ஸார்.. படத்தின் கதை 1966-ம் ஆண்டு நடக்கிறதாம்..!
சரி விடுங்ணே... அடுத்த படம் நல்லதாக் கொடுக்கட்டும்.
அடடா, எல்லாரும் எதிர்பார்த்த படமாச்சே? :-((
வாகை இல்லை போல...
நல்ல விமர்சனம் நண்பரே...
[[[பழமைபேசி said...
சரி விடுங்ணே... அடுத்த படம் நல்லதாக் கொடுக்கட்டும்.]]]
இதுவும் "நல்ல" படம்தான் பழமை.. ஆனால் ரசிக்க வைக்கவில்லை. இதுதான் குறை..!
[[[சேட்டைக்காரன் said...
அடடா, எல்லாரும் எதிர்பார்த்த படமாச்சே? :-((]]]
ஏமாத்திருச்சு சேட்டை..!
[[[ரெவெரி said...
வாகை இல்லை போல...
நல்ல விமர்சனம் நண்பரே...]]]
நன்றி நண்பரே..!
விரிவான விமர்சனம் எழுத வைத்த படத்துக்கு நன்றிவிரிவான விமர்சனம் எழுத வைத்த படத்துக்கு நன்றி
விமர்சனம் எழுதுவதில் நல்ல முன்னேற்றாம் தெரிகிறது உங்களிடம்.
வாழ்த்துகள். இன்னும் கச்சிதமாக எழுத முயலவும்.
[[[பார்வையாளன் said...
விரிவான விமர்சனம் எழுத வைத்த படத்துக்கு நன்றி.]]]
பார்வை.. விரிவெல்லாம் இல்லை. ரொம்பச் சுருக்கமாத்தான் கிறுக்கியிருக்கேன்..!
[[[manjoorraja said...
விமர்சனம் எழுதுவதில் நல்ல முன்னேற்றாம் தெரிகிறது உங்களிடம்.
வாழ்த்துகள். இன்னும் கச்சிதமாக எழுத முயலவும்.]]]
அறிவுரைக்கு மிக்க நன்றிகள் மஞ்சூர் ஸார்..!
நல்லா அனலிஸ் பண்ணி இருக்கீங்க.
இந்த கமெண்ட் படிக்கும் அனைத்து வாசக நண்பர்களே ,என் கன்னி முயற்ச்சி இது:
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011
[[[IlayaDhasan said...
நல்லா அனலிஸ் பண்ணி இருக்கீங்க.]]]
நன்றி நண்பரே..!
களவாணி படத்துக்கு உங்க "அறிக்கி LC 112 கூட்டு - திரை விமர்சனம்" தான் ரொம்பவும் நேர்மையா இருந்துச்சு... இந்த படத்துக்கும் அதே மாதிரி ஒரு விமர்சனம் என்னும் எதிர்பார்போடு வந்தேன்.. ஆனா முதல் வரியிலேயே என் எதிர்பார்ப்பு சுக்குநூறாகிவிட்டது..
ஓகே..மொதல்ல முரண் பார்போம், அப்புறம் டைம் கெடைச்சா இதையும் பாப்போம்...
அப்புறம் அண்ணே உங்க பாஸ் என்கிற பாஸ்கரன் விமர்சனத்துல ""படத்தின் ஹீரோ ஆர்யாவா? சந்தானமா?"" ன்னு கேட்டிருந்தீங்கல்ல , அத பத்தி கொஞ்சம் விலாவாரியா நம்ம ஐம்பதாவது பதிவில் சொல்லி இருக்கோம்... பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க அண்ணே!!
தமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்
[[[மொக்கராசு மாமா said...
களவாணி படத்துக்கு உங்க "அறிக்கி LC 112 கூட்டு - திரை விமர்சனம்"தான் ரொம்பவும் நேர்மையா இருந்துச்சு... இந்த படத்துக்கும் அதே மாதிரி ஒரு விமர்சனம் என்னும் எதிர்பார்போடு வந்தேன்.. ஆனா முதல் வரியிலேயே என் எதிர்பார்ப்பு சுக்குநூறாகிவிட்டது..
ஓகே.. மொதல்ல முரண் பார்போம், அப்புறம் டைம் கெடைச்சா இதையும் பாப்போம்...]]]
இதில் நேர்மை என்பதெல்லாம் இல்லை. கலை ரசனையை வைத்துத்தான் ஜட்ஜ்மெண்ட் செய்கிறோம்..!
[[[அப்புறம் அண்ணே உங்க பாஸ் என்கிற பாஸ்கரன் விமர்சனத்துல ""படத்தின் ஹீரோ ஆர்யாவா? சந்தானமா?"" ன்னு கேட்டிருந்தீங்கல்ல, அத பத்தி கொஞ்சம் விலாவாரியா நம்ம ஐம்பதாவது பதிவில் சொல்லி இருக்கோம்... பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க அண்ணே!!]]]
கண்டிப்பா சொல்றேண்ணே.. வருகைக்கு மிக்க நன்றிங்கோ..!
அருமையான விமர்சனம்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
[[[Kannan said...
அருமையான விமர்சனம்......]]]
நன்றி கண்ணன்..!
The answer for the puzzle was in the letter return by Bhagyaraj. I think the movie was a courageous attempt for a director with 1 film, probably with more experience he'll create more impact with such subjects.
[[[neovasant said...
The answer for the puzzle was in the letter return by Bhagyaraj. I think the movie was a courageous attempt for a director with 1 film, probably with more experience he'll create more impact with such subjects.]]]
ஆனால் மனதில் நிற்கும்படி இல்லை என்பதுதான் ஒரே குறை.. மற்றபடி சற்குணத்தின் உழைப்பு மெச்சத்தகுந்ததுதான்..!
//தம்பி ராமையா போடும் கணக்குகள் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்.. பதிலுக்கு விமல் கூறும் கணக்கை அவர் எங்கேயிருந்து படித்தார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் ஊரைவிட்டு எங்கேயும் போகவே இல்லையே..? தெரிந்திருந்தால் முன்பே சொல்லியிருக்கலாமே..?//
ஊர் நெலவரம் பற்றி பாக்கியராஜ்க்கு லெட்டர் போடும் போதே இந்த கணக்கை பற்றி பதில் போட சொல்லிதான் லெட்டரில் எழுதுவார்...
ஒருக்கா மறுக்கா பாருங்கள்
Post a Comment