25-11-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஜெயலலிதா எதை எதிர்பார்த்தாரோ அது கிடைத்துவிட்டது..! கருணாநிதி எதை எதிர்பார்க்கவில்லையோ அதுவும் கிடைத்துவிட்டது. விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்கு என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தியாகிவிட்டது. வைகோவுக்கு அவரது பெயருக்குள்ள செல்வாக்கு இருப்பது மட்டுமே மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஜெயிக்க வைக்கக் கூடிய அளவுக்கான தொண்டர்களை இன்னமும் அவர்கள் பெறவில்லை என்பது சொல்லப்பட்டுவிட்டது. பாரதீய ஜனதாவுக்கு மாற்று ஆள் தேடிக்கிட்டிருக்கோம் என்ற சிக்னலை கொடுத்தாகிவிட்டது.. ஆனால் தமிழகத்து மக்களுக்குத்தான் என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை..!
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே முறைகேடாக நடத்தப்பட்ட ஒரு தேர்தல் என்று நான் கருதுகிறேன்.. டி.என்.சேஷன் காலத்தில் மயிலாப்பூர் இடைத்தேர்தலில் நடத்திய அத்தனை அட்டூழியங்களையும் வொயிட் அண்ட் வொயிட் டிரெஸ் போட்டு கச்சிதமாக அரிவாள், கத்திகளை கையில் எடுக்காமல், வன்முறையை கொஞ்சமும் சிந்தவிடாமல், கணிணியைப் பயன்படுத்தியே அனைத்துக் கட்சிகளின் கழுத்தையும் அறுத்துவிட்டார் ஜெயலலிதா.
இப்படித்தான் தேர்தலை நடத்தி, இப்படித்தான் ஜெயித்தாக வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே நினைத்திருந்ததால் அதற்கேற்ற தலையாட்டி பொம்மையாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சோ.அய்யரை அந்தப் பதவியில் உட்கார வைத்ததே இந்த முறைகேட்டின் முதல் காட்சி.
எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பது ஜெயல்லிதாவுக்கும், சோ.அய்யருக்கும் மட்டுமே தெரியும் என்ற அளவுக்கு ஏற்பாடுகளை செய்துவிட்டு, தான் மட்டும் கனகச்சிதமாக பெண்களுக்குரிய தொகுதிகளில் பெண்களையே தேடிப் பிடித்து அறிவித்துவிட்டு அதன் பின்பே தேர்தல் கமிஷனின் அறிவிப்பை வெளியிடச் செய்த ராஜதந்திரம், கோவிலில் கன்னம் வைத்து திருடுவதற்குச் சமமானது..!
தேர்தல் தேதி அறிவித்த பின்பும், கூட்டணி உண்டா இல்லையா என்பதையே தன்னை நம்பி வந்த கட்சிகளிடம் தெரிவிக்காமல் நாட்களைக் கடத்தி அவர்களை அலைபாய வைத்து கடைசியில் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கையது, வாயது பொத்திக் கொண்டு செல்லுங்கள் என்று சர்வாதிகாரமாகச் சொல்லி அவர்களை நட்டாற்றில்விட்டது நம்பிக்கை துரோகம். இதுதான் அரசியல் ராஜதந்திரம் எனில், இதற்கான பலனும் நிச்சயமாக ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்றேனும் ஒரு நாள் கிடைக்கத்தான் போகிறது..!
தி.மு.க.வின் அமைச்சர்கள் பலர் மீதும் வழக்குகள் பாய்ந்தவண்ணம் இருந்தன. இருக்கின்றன. இதில் பலரும் தவறுகள் செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த்தில் தவறில்லை. ஆனால் அதே சமயத்தில் தி.மு.க. ஆட்சியில் இவர்கள் சொல்பேச்சு கேட்டு பாதிக்கப்பட்ட பொது மக்களின் புகார்களை வாங்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது இந்தக் கைதுகளைக்கூட தனது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தத்தான் என்பது தெளிவாகவே தெரிகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரது மகன் கைப்புள்ள ஸ்டாலினும் தி.மு.க. ஏன் ஆட்சியை இழந்தது என்பதை புரிந்து வைத்திருந்தும் அது தெரியாததுபோல் நடிக்கிறார்கள். திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் நேருவையே நிறுத்தியது படுமுட்டாள்தனம். தி.மு.க. என்ற கட்சி மீதுள்ள கோபத்தைவிட நேரு மீதுதான் திருச்சி மாவட்ட மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைக்கூட புரிந்து கொள்ளாத இவர்களது கட்சித் தலைமையை என்னவென்றுதான் சொல்வது..?
நேரு மற்றும் அவரது உறவினர்களின் ஆதிக்கம் அரசு அதிகாரத்தில் எத்தனை தூரம் மலிந்து போய் இருந்தது என்பது திருச்சி மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாக உள்ளது. இத்தனை நடந்தும் மீண்டும் நேருதான் எமது வேட்பாளர் என்று தி.மு.க. தலைமை அறிவித்ததற்கு கிடைத்த செருப்படிதான் சென்ற தேர்தல் வித்தியாசத்தைவிட 1 மடங்கு வித்தியாசத்தை கூட்டி பொதுமக்கள் அளித்தது..! நேருவைவிட வேறு யாரையாவது நிறுத்தியிருந்தால்கூட வெற்றி வித்தியாசம், இந்த அளவுக்கு போயிருக்காது என்றே நான் நம்புகிறேன்..!
உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவின் திருவிளையாடல்களை முன்னரே ஊகித்துவிட்ட கருணாநிதி, தானும் அவசரம் அவசரமாக வேட்பாளர்களை நிறுத்தி வைத்து களத்தில் குதித்துவிட்டார். ஆனால் எதைக் காரணமாக வைத்து மக்களிடம் ஓட்டு வாங்குவது என்பதில்தான் தவறிவிட்டார். சந்திக்கு சந்திக்கு, ஊருக்கு ஊர் ஜெயலலிதா ஊதித் தள்ளிய ஸ்பெக்ட்ரம் ஊழலையும், தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் அட்டூழியத்தையும் கருணாநிதியாலும், ஸ்டாலினாலும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியவில்லை. நடப்பவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.
தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன இவை அனைத்திலும் சேர்த்து மொத்தம் 1,32,467 பதவியிடங்கள் உள்ளன. இதில், 19,646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அ.தி.மு.க., 9,864 பதவிகளை கைப்பற்றியுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க.வே கைப்பற்றியுள்ளது.
10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில், 580 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. 124 நகராட்சிகளில் 89 நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது 1,680 நகராட்சி வார்டுகளையும், 285 பேரூராட்சிகளையும், 2,849 பேரூராட்சி வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 574 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3,797 பதவிகளையும் அதிமுக பிடித்துள்ளது. அதிமுக மொத்தமாக 30.02 சதவீத வாக்குகளை அள்ளியுள்ளது. நகர்ப்புறத்தில் 39.24 சதவீத வாக்குகளையும், கிராமப்புறங்களில் 38.69 சதவீத வாக்குகளையும் அக்கட்சி பெற்றுள்ளது.
அதிமுகவின் இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சமச்சீர் கல்வி திட்டத்தில் ஜெயல்லிதா செய்த குளறுபடி மட்டுமே அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அவர் மீது அதிருப்தி ஏற்பட்ட ஒரே காரணம். அந்த ஒரு காரணத்தை அப்போதே மக்கள் மறந்துவிட்டார்கள் போலும். மேலும், தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது... இந்தம்மா ஆட்சிக்கு வந்தால்தான் இதுவெல்லாம் நடக்கும்போலிருக்கு என்ற நம்பிக்கையை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த வெற்றிகள் ஜெயலலிதாவிற்கு கிடைத்திருக்கிறது.
இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தான் சிறைக்குள் போகவிருக்கும் நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சிக்குக் கிடைத்திருக்கும் இந்த ஜாக்பாட்டை ஜெயலலிதா எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை..
தி.மு.க. உள்ளாட்சி அமைப்புகளில் 4059 பதவிகளை கைப்பற்றியுள்ளது. 23 நகராட்சித் தலைவர் பதவியையும் 121 பேரூராட்சித் தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது. 10 மாநகராட்சி வார்டுகளில் 129 கவுன்சிலர் பதவிகளையும், நகராட்சி வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1,820 பதவிகளையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 27 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 976 பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. திமுகவுக்கு 26.09 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இக்கட்சிக்கு நகர்ப்புறங்களில் 26.67 சதவீத வாக்குகளும், கிராமப்புறங்களஇல் 25.71 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
அ.தி.மு.க.வுக்கு அடுத்த நிலையில் தி.மு.க. என்றாலும் 10 மாநகராட்சிகளையும் ஒருசேர பறி கொடுத்த அபல நிலையில் தி.மு.க. உள்ளது. மதுரையில் குட்டி முதல்வராக கோலோச்சிய அஞ்சாநெஞ்சன் அழகிரியின் சொந்த வீடு இருக்கும் சத்யசாய் நகரை உள்ளடக்கிய வார்டில் தி.மு.க. உறுப்பினர் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதை மதுரை மக்கள் நல்ல சகுனமாகத்தான் பார்க்கிறார்கள்.. 2-வது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் 871 ஓட்டுக்களே பெற்று 4-வது இடம் எனில், அழகிரியின் மீது அந்தப் பகுதி மக்களுக்கு இருக்கும் பாசமும், தி.மு.க. மீதான பற்றும் தெளிவாகவே புரிகிறது..!
இது மட்டுமா.. சென்னையில் தமிழினத் தலைவர் குடியிருக்கும் கோபாலபுரம் பகுதியின் 111-வது வார்டையும் முதன்முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.. தான் குடியிருக்கும் பகுதியிலேயே செல்வாக்கை இழந்துவிட்டார் தாத்தா. கூடவே தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் அமைந்திருக்கும் தேனாம்பேட்டை 117-வது வார்டிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.
இப்படி அ.தி.மு.க.வுக்கு மாற்றாக உள்ள தி.மு.க.வுக்கு மரண அடி கொடுத்திருக்கும் நிலையில் தி.மு.க. தற்போது தனது கட்சியையும், கட்சியினரையும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இந்தக் கேவலமான தோல்வி எதனால்.. என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மிகவும் சென்சிட்டிவ்வான கல்வி விஷயத்தில் தாறுமாறாக விளையாடினார். இதனை அவர்களின் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைவருமே கண்டித்தும், ஏசியும் பேசி வந்தார்கள். இந்தக் குழப்பத்தை ஒருவாறு சமாளித்திருந்தாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்போதும் பிள்ளைகளுக்காக வீட்டில் கஷ்டப்படுவது அவர்கள்தானே.. ஜெயலலிதாவுக்கு நிச்சயம் ஒரு ஷாக் கொடுப்பார்கள் என்று இந்த ஒரு விஷயத்தை வைத்து மட்டுமே கங்கணம் கட்டி அலட்சியப்படுத்தினார்கள் தி.மு.க. தலைவர்கள்.
மக்கள் இதனையொரு பொருட்டாகவே கருதவில்லை என்பது இந்த்த் தேர்தலின் மூலம் தெரிந்துவிட்டது.
இனி தி.மு.க. செய்ய வேண்டியது அடுத்த வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஊழல் மயமான கட்சி என்ற அவப் பெயரிலிருந்தும், அராஜகம், ரவுடிகள், குண்டர்களுடன் நெருங்கியத் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடமிருந்தும் கட்சியைக் காப்பாற்ற வேண்டியதும் இருக்கிறது. இதனை முறைப்படி செய்தால், அதன் பலன் அப்போது அவர்களுக்குக் கிடைக்கும். இல்லையெனில் அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு எம்.பி. தொகுதியில்கூட ஜெயிக்க முடியாமல் போகும் வாய்ப்புண்டு..!
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தன்னைவிட்டால் மாற்றில்லை என்று செயல்பட்ட விஜயகாந்துக்கும் கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளது. 857 பதவிகளை மட்டுமே பிடித்து சுயேச்சைகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது தே.மு.தி.க. 2 நகராட்சித் தலைவர் பதவிகள், 2 பேரூராட்சித் தலைவர் பதவிகள், மாநகராட்சிகளில் மொத்தமே 8 கவுன்சிலர் பதவிகள் இவ்வளவுதான் புரட்சிக் கலைஞருக்குக் கிடைத்துள்ளது.
ஆனால் இக்கட்சியின் வாக்கு வங்கி கிட்டத்தட்ட ஒரே நிலையாக உள்ளது. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் தனியாக போட்டியிட்ட இக்கட்சிக்கு 8.38 சதவீத வாக்குகள் கிடைத்தன. லோக்சபா தேர்தலில் 10.01 சதவீத வாக்குகளை தே.மு.தி.க. பெற்றது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 10.11 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த லோக்சபா தேர்தலைவிட லேசான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது தேமுதிக. இருந்தாலும் வெற்றி பெற்ற இடங்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த காரணத்தினாலும், தி.மு.க. மீதான கடுமையான எதிர்ப்பில் இருந்த காரணத்தினாலும்தான் தற்போது தான் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் இருப்பதை விஜயகாந்த் உணராமல் இருக்கிறார். இதற்கான பாடம் இது.! சட்டசபையில் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக அவர் செயல்படவில்லை. ஜெயல்லிதா கோபித்துக் கொள்வாரே என்பதற்காக அமைதியாக இருந்த அவரை இனியும் இதுபோல் அமைதியாகவே இருந்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் வாக்காளர்கள்.
இனி வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது.. மிஞ்சிப் போனால் 3-வது அணியாக பல கட்சிகளை சேர்த்து வைத்து போராட வேண்டும். அப்படி போரடினாலும் ஜெயல்லிதா மக்களுக்கு வெறுப்பு வரும் அளவுக்கு ஆட்சியை நடத்த வேண்டும். அப்போதுதான் ஓட்டுக்கள் மாறி விழுகும். அப்படியொரு சூழலுக்கு ஜெயல்லிதா தனது கட்சியைத் தள்ள மாட்டார் என்பதனால் ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அனுபவித்த பெருமை மட்டுமே விஜயகாந்துக்கு கிடைக்கும் என்றே நம்புகிறேன்..!
4-வது பெரிய கட்சியும் தமிழர் விரோதக் கட்சியுமான காங்கிரஸ் கட்சிக்கும் இத்தேர்தலில் மரண அடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் கிடைத்த பதவிகள் 740. இதில், 24 பேரூராட்சிகளும் அடங்கும். அந்தக் கட்சிக்கு ஒரு நகராட்சிகூட கிடைக்கவில்லை. இக்கட்சிக்கு 5.71 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
தங்கபாலுவும், இளங்கோவனும் தங்களுக்கு இடையேயான விளையாட்டை நிறுத்திக் கொண்டு ஒரே ஜீப்பில் தேர்தல் பிரச்சாரம் செய்தாலும், காங்கிரஸை மக்கள் சீண்டவில்லை. இப்போது ஜெயித்திருப்பவர்களும் அவரவர் பகுதிகளில் தங்களுக்கு இருக்கும் சொந்த செல்வாக்கினால் ஜெயித்தவர்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.
வாக்காளர்கள் அடுத்தபடியாக வெளுத்துக் கட்டியிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியை. எங்களைப் புறக்கணித்துவிட்டு யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றெல்லாம் அறைகூவல் விடுத்த டாக்டர் ராமதாஸின் இன்றைய நிலைமை அதோ கதிதான்..! 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 60 நகராட்சி கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்துக்களில் 2 தலைவர் பதவி, 108 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினராக 3, மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக 225 என்று மொத்தமாக 400 பதவிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவிகிதம் வெறும் 3.55 மட்டுமே..!
இவருக்கு இது தேவைதான். தனது மகனது நல்வாழ்க்கைக்காகவே கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார் என்பதை தமிழகத்து மக்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக இருப்பதாக சொல்லிக் கொள்ளும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலேகூட ஒரு நகரசபையைக் கூட இவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்னும்போது கட்சி மக்களிடத்தில் நம்பிக்கையைப் பெற இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதை இப்போதாவது ராமதாஸ் புரிந்து கொள்ளட்டும்..!
இந்தத் தேர்தலில் எனக்கு வருத்தமளித்த விஷயம் ம.தி.மு.க.வை மக்கள் புறக்கணித்திருப்பதுதான். தற்கால அரசியலுக்கு ஏற்றவகையிலான குணநலன்களை பெற்றிருக்கும் வைகோவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். ஆனால் வைச்சால் குடுமி, அடித்தால் மொட்டை என்பதைப் போல வாக்காளப் பெருங்குடி மக்கள் அதிமுகவை விட்டால், தி.மு.க.வுக்கும், இவரைவிட்டால் அவருக்குமாக ஓட்டளித்து புதியவர்களை வளர்த்துவிட மறுக்கிறார்கள். தமிழகத்தின் சீரழிவுக்கு நிச்சயமாக ஒரு புறம் தமிழகத்து வாக்காளர்களும் காரணமாவார்கள்.
மதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் 11 மாநகராட்சி கவுன்சிலர்கள், 1 நகராட்சித் தலைவர், 49, நகர சபை உறுப்பினர்கள், 7 கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், 82 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 42 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 193 பதவிகள் கிடைத்துள்ளன. பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 1.7.
ஈழப் பிரச்சினையில் கடந்த 35 ஆண்டு காலமாக வைகோ எடுத்திருக்கும் நிலையான உறுதிப்பாடு பாராட்டத்தக்க ஒன்று. அதே சமயம், தமிழகத்து விஷயத்தில் அவர் அவ்வப்போது எடுத்த சில முரண்பாடுகள்.. கட்சியினரை தக்க வைத்துக் கொள்ளாதது.. தன்னைத் தவிர நட்சத்திரங்களை கட்சியில் நிலை நிறுத்தாதது போன்ற விஷயங்களால்தான் மக்களுக்கு அவர் மீது இன்னமும் பிடிப்பு வரவில்லை என்றே நினைக்கிறேன். மக்கள் மாற வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில் வைகோவும் அதற்குத் தயார் நிலையில் தனது கட்சியினரை வைத்திருக்க வேண்டும்.. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நான் ஒரு நல்லவன் என்ற சிம்பலை மட்டும் வைத்துக் கொண்டே காலத்தை ஓட்ட முடியும்..?
இந்தத் தேர்தலில் ஆச்சரியமான ஒரு விஷயம் பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கும் சில வெற்றிகள்தான். தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருக்கும் இக்கட்சி 2 நகராட்சித் தலைவர் பதவி, 4 மாநகராட்சிக் கவுன்சிலர்கள், 37 நகராட்சி கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 கவுன்சிலர்கள், 2 வார்டு உறுப்பினர்கள் என குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சி பெற்ற வாக்குகள் சதவிகிதம் 1.35.
வரும்காலத்திலும் இக்கட்சி தனித்து நிற்கும் சூழலே தென்படுவதால் இதனுடைய வளர்ச்சியை மற்றக் கட்சிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. சிற்சில இடங்களில் பல முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை இக்கட்சி வேட்பாளர்கள் தடுத்துள்ளார்கள். அகில இந்திய அளவிலான இக்கட்சியின் மதம சார்ந்த கொள்கைகள் மாறாதவரையில் இக்கட்சியின் வாக்கு சதவிகிதம் உயர வ்ழியில்லை என்றே நினைக்கிறேன்..!
தேமுதிகவின் கூட்டணிக் கட்சியாக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சித் தலைவர்கள், 20 நகராட்சி கவுன்சிலர்கள், 5 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 101 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 26 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று 159 பதவிகளும் கிடைத்துள்ளன. பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 1.02
இதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 99 பதவிகளே கிடைத்துள்ளன. 4 மாநகராட்சி கவுன்சிலர்கள், 10 நகராட்சி கவுன்சிலர்கள், 2 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 33 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 46 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று கிடைத்திருக்கும் சிபிஐ கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 0.71.
இந்த இருவரின் வாக்கு சதவிகிதம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைந்திருக்கிறது. இதுவரையிலும் அதிமுக, தி.மு.க. என்று மாறி, மாறி கூட்டணி வைத்திருந்த்தால் இவர்களது உண்மையான பலம் என்ன என்பது தெரியாமல் இருந்த்து. இப்போது, இந்தத் தேர்தலின் மூலம் தெரிந்துவிட்டது. இனி இவர்களுக்கு 3-வது அணி மட்டுமே கை கொடுக்கும். அதற்கான முயற்சிகளை செய்வதுதான் இக்கட்சிகளின் எதிர்காலத்திற்கு நல்லது.
இறுதியாக திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. 1 மாநகராட்சி கவுன்சிலர், 13 நகராட்சி கவுன்சிலர்கள், 12 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 9 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தமே 35 பதவிகள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. பாரதீய ஜனதாவைவிடவும் மிகச் சொற்பமான செல்வாக்கில் இருக்கும் இக்கட்சியின் ஆரம்பக் காலத்தை நினைவில்கொண்டால் இது மாபெரும் தோல்வி..!
தமிழகத்தில் கட்சிகளை ஆரம்பிக்கும் அனைவருமே ஆரம்பத்தில் நம்பிக்கையூட்டும்விதமாகவே செயல்படுகிறார்கள். கட்சியின் வட்டச் செயலாளர்கள் டாடா சுமோவில் வலம் வந்து, மாவட்டச் செயலாளர்கள் டயோட்டா குவாலிஸில் வரத் துவங்கியவுடன் கட்சியும் நொண்டியடிக்கத் துவங்குகிறது. இப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் ஆகிவிட்டது.
கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் போன்றவற்றில் தனது கட்சியினரின் செயல்பாடுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் இருக்கும் திருமாவளவன் மக்களிடத்தில் அதிகம் நெருங்க முடியாத சூழலில் இருக்கிறார். அவர்களுக்கு செல்வாக்கு அதிகமுள்ள இடங்களில்கூட இந்த நிலைமைதான் என்பதனால் இனி இக்கட்சிக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவளித்து ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..!
இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தினை சுயேச்சைகள் பெற்றிருப்பதே குறிப்பிடத்தக்கது. 5 நகராட்சித் தலைவர்கள், 55 மாநகராட்சி கவுன்சிலர்கள், 552 நகராட்சி கவுன்சிலர்கள், 64 பேரூராட்சித் தலைவர்கள், 1995 டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள், 655 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 3322 பதவிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சுயேச்சைகள் பெற்ற மொத்த வாக்குகளின் சதவிகிதம் 9.46.
இவர்களில் அநேகம்பேர் பெரிய கட்சிகளில் சீட் கொடுக்கப்படாத்தால் தனியாக நின்றவர்கள். எனவே வெற்றி பெற்ற பின்பும் அவர்கள் சார்ந்த கட்சி உறுப்பினர்களாகவே இருப்பார்கள். அல்லது மீண்டும் கட்சியில் சேர்ந்துவிடுவார்கள். எப்படியோ உள்ளாட்சி அமைப்புகள் என்று வரும்போது மக்கள் பக்கத்து வீட்டுக்காரர், ஊர்க்காரர், தெரிந்தவர், சொந்தக்காரர் என்றெல்லாம் பார்த்தே வாக்களிப்பார்கள் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை..
சட்டசபை தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றிருக்கும் ஜெயல்லிதா இந்த உள்ளாட்சி தேர்தலின் மூலமும் அசுர பலம் பெற்றிருக்கிறார். ஆனாலும் மிக விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளே செல்ல வேண்டியிருப்பதால், அவருக்குப் பின்னான தலைமை எப்படி கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தப் போகிறது என்று தெரியவில்லை.
தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல் வெடிக்காதா என்று அ.தி.மு.க.வும், ஜெயலலிதாவும், சசிகலாவும் வெளியில் இல்லாத நிலையில் அதிமுகவை சீர்குலைத்துவிடலாம் என்று தி.மு.க.வும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இரண்டில் எது நடந்தாலும் அது தமிழகத்துக்கு நல்லதே..!
உள்ளாட்சித் தேர்தல்-2011 இறுதி முடிவுகள்
கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம் (நகர் மற்றும் ஊரகப் பகுதிகள்) -கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கான பதவிகள் நீங்கலாக.
மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்
மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சித் தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்
அனைத்து மாநகராட்சிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்
அனைத்து பேரூராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்
அனைத்து நகராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்
நன்றி : பல்வேறு இணையத்தளங்கள்
|
Tweet |
48 comments:
மிக்க நன்றி.
எனக்கென்னமோ ஜெ.க்கு தணடனை கிடைக்காது, விடுதலை ஆகி விடுவார் என்றே தோன்றுகிறது.
இவ்வளவு பெரிய பதிவை எழுதியதே பெரிய சாதனைதான். அருமையான பதிவு. ம தி மு க தலைவர் நல்லவர்தான். அவர் நல்ல தரமான கேண்டிடேட் தேர்தெடுக்கும் பட்சத்தில் அவருக்கும் வெற்றி உறுதிதான். அதில் தான் அவர் தவறுகிறார் என்றே நான் நினைக்கிறேன்.
இனிய தீபத்திரு நாள் வாழ்த்துக்கள்...
தீபாவளி வாழ்த்துகள்
அருமையான பதிவு! அதிக புள்ளிவிவரங்களுடன்! நல்லாட்சி கிடைப்பதும் கிடைக்காததும் மக்கள் கையில் உள்ளது! பணம் மற்றும் பரிசுகளுக்கு மக்கள் மயங்கி வாக்களிக்கும் போதே ஜனநாயகத்துக்கு சாவுமணி அடித்துவிடுகிறார்கள்! பின்னர் அரசாங்கம் சரியில்லை என்று புலம்புகிறார்கள்!
//ஆனால் தமிழகத்து மக்களுக்குத்தான் என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை..!//
நச்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
உள்ளாட்சித்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 2500 ரூபாய் கொடுத்து அதிமுகா 1 ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடலூர் தென்னம்பாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது அதிமுகாவின் பலத்தை பார்த்தீர்களா?
கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் ஊராட்சிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றார். ஒவ்வொரு ஓட்டுக்கும் 1000ரூபாய் கொடுத்து நான் வெற்றிப்பெற்றால் வாழ்த்துங்கள் தோல்வி அடைந்தால் இந்த காசில் 100ரூபாய்க்கு மாலை வாங்கி வந்து எங்க குடும்ப சாவுக்கு வந்துவிடுங்கள் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டி வெற்றி பெற்று உள்ளார் வாழ்த்துகள் அவருக்கு.
//தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன இவை அனைத்திலும் சேர்த்து மொத்தம் 1,32,467 பதவியிடங்கள் உள்ளன. இதில், 19,646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.//விஜயகாந்த் சீக்கிரமா ஓடி வாங்க!உங்க கின்னஸ் ரெக்கார்டைப் புடுங்கறதுக்கு இங்கே ஒருத்தரு போட்டி:)நலமா தமிழண்ணே!
அடுத்த தேர்தலுக்கு புது பார்முலா சொல்றேன்!மூன்றாவது அணி!காரணம் தாத்தா டெல்லி டேரா தவிர ரொம்ப நொண்டி.அழகிரி மாயை முடிந்து விட்டது.கைப்புள்ளைக்கு தனியே கட்டியிழுக்கும் தெம்பில்லை.அடங்காப்பிடாரி அ.தி.மு.க என்ற நிலைக்கு தனியாக ஒரு கட்சியை வளர்த்து விடுவது தமிழகத்துக்கு நல்லதல்ல.
அ.தி.மு.கவின் அத்துமீறல்கள் நிறையவே இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)
அவர் ஏற்கனவே நீதிமண்றத்தில் அணைத்திற்கும் விளக்கம் அளித்து விட்டார், அதிகபட்சம் நகைகள் அணைத்தும் அவரிடம் இருந்து பறிக்கபடும், அதை தவிர வேற எது வும் நடக்க வாய்ப்பே இல்லை, தன் கையெழுத்தில்லை என்பதை நம்பிய உலகமல்லவா?
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..
இது ஒரு தேறுதல்!!
நல்லதோர் அலசல். ஜெ.க்கு தண்டனை கிடைக்காது என்றே தோன்றுகிறது. ஒருக்கால் கிடைத்தாலும் சோனியா காந்தி மனமோகனச் சிங்கரை வைத்து அட்சி செய்வது போல ஜெ. ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து ஆட்சி செய்வார். அம்புட்டுத்தான்.
தாத்தாவுக்கு கனி ஜாமீன் பற்றிக் கவலைப்படவே நேரமில்லை. பொன்முடி நேரு வீரபாண்டி ஆறுமுகம் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை அவர். அவர் எங்கே கட்சி பற்றிக் கவலைப்படுவது. கைப்புள்ள இசுடாலின் கொஞ்ச இடங்களுக்குத் தனியாகப் போய் பேசியது மட்டுமே துணிவுக்குச் சான்று. கடைசியில் கைப்புள்ள பேசீட்டாரு எத்தன ஓட்டு விழப்போவுதோ என்று ஊர் நம்பிக்கொண்டிருந்தது தான் மிச்சம். அஞ்சாநெஞ்சன் இப்போதெல்லாம் "மதுரயா? அதென்ன ஊரா அது? ஆமாம்... அது எங்கிட்ருக்கு?" என்று விசாரிப்பதாகக் கேள்வி.
விஜயகாந்த் பாவம். அவரு கட்சி மொதலாளியம்மா பிரச்சாரத்துல கொஞ்சம் ஓவராத்தான் பேசிப்புட்டாகப்பூ. போயஸ் தோட்டம்னு இனி நெனச்சாலே அடிவிழும்ங்கிற அளவுக்கு ஜெவைத் தாறு மாறாத் திட்டிபுட்டாக. இனி மூணாவது அணி லெவன் அணின்னு எதுலயாச்சும் ஆடினா உண்டு. ஒண்ணு, தைலாபுர வைத்தியரு கணக்கா வெக்கம் சூடு சொரணை எல்லாத்தயும் வீட்டுல பத்திரமா வெச்சு பூட்டிட்டு போய் கூட்டணி சேரணும். இல்ல, சிரஞ்சீவி மாதிரி காங்கிரசுல ஐக்கியமாகி புள்ளக்குட்டிகளுக்கு வளமான எதிர்காலத்த அமைச்சுத்தர வழி பாக்கலாம்....
I WITNESSED THIS ELECTION CLOSELY AS I AM UNEMPLOYED EX SERVICE MAN.MONEY AND WINE DOMINATED.AS MR.VAI.KO PARTY MAN DO NOT HAVE RESOURCE FOR THIS,IT NOT POSSIBLE TO WIN.I DO NOT WANT VAI.KO TO COMPROMISE HIS CLEAN IMAGE FOR THIS DIRTY POLITICS.HE WILL BE REWARDED IN FUTURE.
தமிழரே நல்ல மிக விரிவான அலசல், நன்றி.
கட்சிகளும் காட்சிகளும் - ஓர் அலசல்
நல்லதோர் அலசல்...
நம்ம ஊர் வேட்பாளர்களின்(மேயர்,வார்டு,நகராட்சி,பேரூராட்சி, கவுன்சிலர், சிற்றூராட்சி) விவரம் அவர்கள் பெற்ற ஓட்டுகள் பற்றிய முழுமையான விவரம் அறிய
http://tnsec.tn.nic.in/results/index_result.htm
உங்களுக்கும் ,நண்பர்கள் எல்லோருக்குமம் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...
[[[JOTHIG ஜோதிஜி said...
மிக்க நன்றி.]]]
வருகைக்கு மிக்க நன்றிகள் ஜோதிஜி ஸார்..!
[[[manjoorraja said...
எனக்கென்னமோ ஜெ.க்கு தணடனை கிடைக்காது, விடுதலை ஆகி விடுவார் என்றே தோன்றுகிறது.]]]
தண்டனை பெறுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது..! ஆதாரங்கள் அவ்வளவு இருக்கிறதே..? அப்படி விடுதலையடைந்தால் அது நிச்சயம் சட்டவிரோதமான தீர்ப்பாகத்தான் இருக்கும்..!
[[[கே. ஆர்.விஜயன் said...
இவ்வளவு பெரிய பதிவை எழுதியதே பெரிய சாதனைதான். அருமையான பதிவு. ம தி மு க தலைவர் நல்லவர்தான். அவர் நல்ல தரமான கேண்டிடேட் தேர்தெடுக்கும் பட்சத்தில் அவருக்கும் வெற்றி உறுதிதான். அதில்தான் அவர் தவறுகிறார் என்றே நான் நினைக்கிறேன்.]]]
கட்சியினரை முதலில் தக்க வைக்க வேண்டும். இரண்டாம் கட்டத் தலைவர்களை வளர்த்துவிட வேண்டும். மக்களுக்கு அறிமுகமான லோக்கல் தலைவர்களை கைவிடக் கூடாது.. இதையெல்லாம் வைகோ முன்பே செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது அவர் அடைந்திருப்பார்.
[[[MANO நாஞ்சில் மனோ said...
இனிய தீபத்திரு நாள் வாழ்த்துக்கள்...]]]
உங்களுக்கும் எனது வாழ்த்துகள் மனோ..!
[[[மனசாட்சி said...
தீபாவளி வாழ்த்துகள்.]]]
நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துகள்..!
[[[Vijay Prasanna said...
அருமையான பதிவு! அதிக புள்ளி விவரங்களுடன்! நல்லாட்சி கிடைப்பதும் கிடைக்காததும் மக்கள் கையில் உள்ளது! பணம் மற்றும் பரிசுகளுக்கு மக்கள் மயங்கி வாக்களிக்கும் போதே ஜனநாயகத்துக்கு சாவுமணி அடித்து விடுகிறார்கள்! பின்னர் அரசாங்கம் சரியில்லை என்று புலம்புகிறார்கள்!]]]
உண்மைதான்.. மக்களின் தவறினால்தான் அரசியல்வியாதிகளின் ஆட்டம் நடக்கிறது..!
[[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//ஆனால் தமிழகத்து மக்களுக்குத்தான் என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை..!//
நச்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!]]]
உங்களுக்கும் எனது வாழ்த்துகள் யோகன்..!
[[[விடுதலை said...
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 2500 ரூபாய் கொடுத்து அதிமுகா 1 ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடலூர் தென்னம்பாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது அதிமுகாவின் பலத்தை பார்த்தீர்களா?]]]
ஆச்சரியமாகத்தான் உள்ளது. இப்படி ஜெயித்து என்னதான் செய்யப் போகிறார்கள்..?
[[[விடுதலை said...
கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் ஊராட்சிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஒவ்வொரு ஓட்டுக்கும் 1000 ரூபாய் கொடுத்து நான் வெற்றி பெற்றால் வாழ்த்துங்கள். தோல்வி அடைந்தால் இந்த காசில் 100 ரூபாய்க்கு மாலை வாங்கி வந்து எங்க குடும்ப சாவுக்கு வந்துவிடுங்கள். நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டி வெற்றி பெற்று உள்ளார் வாழ்த்துகள் அவருக்கு.]]]
என்ன கொடுமைடா இது..? சாவுன்னு விட்டிருக்கணும். ஏன் இந்த மக்கள் ஓட்டு போட்டாங்களாம்..?
[[[ராஜ நடராஜன் said...
விஜயகாந்த் சீக்கிரமா ஓடி வாங்க! உங்க கின்னஸ் ரெக்கார்டைப் புடுங்கறதுக்கு இங்கே ஒருத்தரு போட்டி:)நலமா தமிழண்ணே!]]]
மிக்க நலம்ண்ணே.. இனிய தீபாவளி வாழ்த்துகள்ண்ணே..!
[[[ராஜ நடராஜன் said...
அடுத்த தேர்தலுக்கு புது பார்முலா சொல்றேன்! மூன்றாவது அணி!காரணம் தாத்தா டெல்லி டேரா தவிர ரொம்ப நொண்டி. அழகிரி மாயை முடிந்து விட்டது. கைப்புள்ளைக்கு தனியே கட்டியிழுக்கும் தெம்பில்லை. அடங்காப்பிடாரி அ.தி.மு.க என்ற நிலைக்கு தனியாக ஒரு கட்சியை வளர்த்து விடுவது தமிழகத்துக்கு நல்லதல்ல.]]]
நல்லதுதான்.. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் சேர்ந்தால்தான் இவர்களை விரட்ட முடியும்..!
[[[சேட்டைக்காரன் said...
அ.தி.மு.கவின் அத்துமீறல்கள் நிறையவே இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.]]]
இதுதான் உண்மை சேட்டைக்காரன்ஜி..
[[[ராஜரத்தினம் said...
அவர் ஏற்கனவே நீதிமண்றத்தில் அணைத்திற்கும் விளக்கம் அளித்து விட்டார், அதிகபட்சம் நகைகள் அணைத்தும் அவரிடம் இருந்து பறிக்கபடும், அதை தவிர வேற எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை, தன் கையெழுத்தில்லை என்பதை நம்பிய உலகமல்லவா?]]]
இந்த நீதிமன்றத்தில் அது நடக்காது என்றே நான் உறுதியுடன் நம்புகிறேன்..!
[[[ரெவெரி said...
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..]]]
உங்களுக்கும் எனது வாழ்த்துகள் நண்பரே..!
[[[பழமைபேசி said...
இது ஒரு தேறுதல்!!]]]
கூடவே ஆற்றாமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. இந்த மக்கள் திருந்த மாட்டேங்குறாங்களே..?
[[[Arun Ambie said...
நல்லதோர் அலசல். ஜெ.க்கு தண்டனை கிடைக்காது என்றே தோன்றுகிறது. ஒருக்கால் கிடைத்தாலும் சோனியா காந்தி மனமோகனச் சிங்கரை வைத்து அட்சி செய்வது போல ஜெ. ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து ஆட்சி செய்வார். அம்புட்டுத்தான்.]]]
அதான்.. எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.. ஜெயலலிதாவும், சசிகலாவும் வெளியில் இல்லாத நிலையில் அதிமுக எப்படி செயல்படும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்..!
[[[boopathyp said...
I WITNESSED THIS ELECTION CLOSELY AS I AM UNEMPLOYED EX SERVICE MAN. MONEY AND WINE DOMINATED. AS MR.VAI.KO PARTY MAN DO NOT HAVE RESOURCE FOR THIS,IT NOT POSSIBLE TO WIN.I DO NOT WANT VAI.KO TO COMPROMISE HIS CLEAN IMAGE FOR THIS DIRTY POLITICS.HE WILL BE REWARDED IN FUTURE.]]]
கிளீன் இமேஜ் வேறு.. கட்சியைக் கட்டிக் காப்பாற்றுவது என்பது வேறு ஸார்.. வைகோ விஜயகாந்தை பார்த்தாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்..!
[[[அப்பு said...
தமிழரே நல்ல மிக விரிவான அலசல், நன்றி.
கட்சிகளும் காட்சிகளும் - ஓர் அலசல்]]]
வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!
[[[Thomas Ruban said...
நல்லதோர் அலசல்...
நம்ம ஊர் வேட்பாளர்களின்(மேயர்,வார்டு,நகராட்சி,பேரூராட்சி, கவுன்சிலர், சிற்றூராட்சி) விவரம் அவர்கள் பெற்ற ஓட்டுகள் பற்றிய முழுமையான விவரம் அறிய
http://tnsec.tn.nic.in/results/index_result.htm
உங்களுக்கும் ,நண்பர்கள் எல்லோருக்குமம் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...]]]
வருகைக்கு நன்றி தாமஸ்..!
மிக நீண்ட அலசல். யதார்த்தத்தை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
*****************
தேர்தலில் தோவியடைந்தவர்களும் வெற்றிப் பெறலாம்...?!
நன்றி.
//இப்படித்தான் ஜெயித்தாக வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே நினைத்திருந்ததால் அதற்கேற்ற தலையாட்டி பொம்மையாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சோ.அய்யரை அந்தப் பதவியில் உட்கார வைத்ததே இந்த முறைகேட்டின் முதல் காட்சி.//
ஹையா அண்ணே இப்பவாவது தூக்கத்தில இருந்து முழிச்சீங்களே அதுவே போதும்
[[[அமைதி அப்பா said...
மிக நீண்ட அலசல். யதார்த்தத்தை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.]]]
நன்றி நண்பரே..!
[[[அத்திரி said...
//இப்படித்தான் ஜெயித்தாக வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே நினைத்திருந்ததால் அதற்கேற்ற தலையாட்டி பொம்மையாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சோ.அய்யரை அந்தப் பதவியில் உட்கார வைத்ததே இந்த முறைகேட்டின் முதல் காட்சி.//
ஹையா அண்ணே இப்பவாவது தூக்கத்தில இருந்து முழிச்சீங்களே அதுவே போதும்.]]]
தம்பி.. நான் எப்போ தூங்கினேன்.. இப்ப முழிக்கிறதுக்கு..?
ஆமா.. நீ எப்படி இருக்க..? செளக்கியம்தானா..? போன் செய்யு ராசா..!
Very Detailed Post. If anyone wants to know about this local body election and its result after one or 2 months after it is announced, the only post is enough to know all.
Great Effort!!!!
பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்றாலே மாநிலத்தின் ஆளும் அணிக்குத் தான் சாதகமாக இருக்கும். ஒருவேளை மாநிலத் தேர்தலுக்கு பின் குறைந்தது ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் வந்திருக்குமேயானால், பொதுமக்கள் தங்கள் விருப்பு, வெறுப்பினை வாக்கினில் காண்பித்திருக்க வாய்ப்புண்டு. கூட்டணியில் இருந்துகொண்டே குடைச்சல் கொடுத்த பாமகவும், எதிர்க்கட்சிதலைவர் எனும் பதவி கிடைத்த பின்பும் அதன் தகுதி உணராது அல்லது அதற்கு தன்னை தகுதியாக்கி கொள்ளாது இருந்த விஜய்காந்திற்கும் மக்கள் நல்லதொரு படிப்பினையை அளித்திருக்கின்றனர். கட்சிக்கட்டமைப்பையும், உள்ளூர் பிரச்னைகளில் பங்கெடுப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்சத்தில் மதிமுக வாய்ப்பிருக்கின்றது. நல்லதொரு அலசல்!
பொது தேர்தலுக்கு இன்னமும் நாட்கள் உள்ளன என்றவுடன் தன் சுயமுகத்தை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. பேரறிவாளன் உட்பட மூவர் தூக்குதண்டனைக்கு எதிராக தீர்மானமிட்ட ஜெ. தற்போது அதற்கு எதிரான நிலையினை உயர்நீதி மன்றத்தினில் பதில் மனு அளித்திருக்கின்றார். இனி வாக்காளர்களிடம் கேயேந்த நிறைய நாட்கள் உள்ளதால்...இலங்கை தமிழர், தமிழக மீனவர், கூடங்குள அணுமின் உலை.... அனைத்திற்கும் அதே போல் ஒரு ’பெப்பே!’ காண்பிக்க போவது உறுதி! தாங்கள் கூறியது போல உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு அசுரபல வெற்றியை தந்த ’தமிழகத்து மக்களுக்கு இனி என்ன கிடைக்கப் போகிறது?’
இனிமையான ஆட்சியை தருகிறாரோ இல்லையோ பொதுமக்களுக்கு தவறான நிலைப்பாடால் / நிர்வாகத்தால் ‘இனிமா’ தராதிருந்தால் சரிதான்!
[[[ஜமீல் said...
Very Detailed Post. If anyone wants to know about this local body election and its result after one or 2 months after it is announced, the only post is enough to know all.
Great Effort!!!!]]]
இதற்காகத்தான் எழுதினேன் நண்பரே..! வருகைக்கு மிக்க நன்றி..!
[[[நெல்லி. மூர்த்தி said...
பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்றாலே மாநிலத்தின் ஆளும் அணிக்குத்தான் சாதகமாக இருக்கும். ஒருவேளை மாநிலத் தேர்தலுக்கு பின் குறைந்தது ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் வந்திருக்குமேயானால், பொதுமக்கள் தங்கள் விருப்பு, வெறுப்பினை வாக்கினில் காண்பித்திருக்க வாய்ப்புண்டு. கூட்டணியில் இருந்துகொண்டே குடைச்சல் கொடுத்த பாமகவும், எதிர்க்கட்சி தலைவர் எனும் பதவி கிடைத்த பின்பும் அதன் தகுதி உணராது அல்லது அதற்கு தன்னை தகுதியாக்கி கொள்ளாது இருந்த விஜய்காந்திற்கும் மக்கள் நல்லதொரு படிப்பினையை அளித்திருக்கின்றனர். கட்சிக் கட்டமைப்பையும், உள்ளூர் பிரச்னைகளில் பங்கெடுப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்சத்தில் மதிமுக வாய்ப்பிருக்கின்றது. நல்லதொரு அலசல்!]]]
ஆளும் கட்சி மீதான அதிருப்தியைக் காட்டுவதற்கும் மக்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வகையில் இதனையும் மக்களின் தீர்ப்பாக நாம் எடுத்துக் கொண்டாக வேண்டும்..!
விஜயகாந்த், ராமதாஸ், வைகோ பற்றிய உங்களது ஒப்பீடு உண்மையானதே..!
[[[நெல்லி. மூர்த்தி said...
பொது தேர்தலுக்கு இன்னமும் நாட்கள் உள்ளன என்றவுடன் தன் சுயமுகத்தை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. பேரறிவாளன் உட்பட மூவர் தூக்குதண்டனைக்கு எதிராக தீர்மானமிட்ட ஜெ. தற்போது அதற்கு எதிரான நிலையினை உயர்நீதி மன்றத்தினில் பதில் மனு அளித்திருக்கின்றார். இனி வாக்காளர்களிடம் கேயேந்த நிறைய நாட்கள் உள்ளதால்... இலங்கை தமிழர், தமிழக மீனவர், கூடங்குள அணுமின் உலை.... அனைத்திற்கும் அதே போல் ஒரு ’பெப்பே!’ காண்பிக்க போவது உறுதி! தாங்கள் கூறியது போல உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு அசுரபல வெற்றியை தந்த ’தமிழகத்து மக்களுக்கு இனி என்ன கிடைக்கப் போகிறது?’
இனிமையான ஆட்சியை தருகிறாரோ இல்லையோ பொதுமக்களுக்கு தவறான நிலைப்பாடால் / நிர்வாகத்தால் ‘இனிமா’ தராதிருந்தால் சரிதான்!]]]
இனிமா தராமலிருந்தாலே போதும் என்ற மனநிலையில்தான் மக்களும் இருக்கிறார்கள்..!
Post a Comment