13-10-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சில நல்ல, கருத்தாழமிக்க திரைப்படங்கள் வெளிவந்தாலும் அவைகளுக்கு போதுமான விளம்பரம் கிடைக்காமல், அவைகள் நம் கண் பார்வைக்கு வராமலேயே போய்விடுகின்றன..! அப்படி பல திரைப்படங்களை நாம் பார்க்காமலேயே தொலைத்திருக்கிறோம். அந்த லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்க வேண்டிய இத்திரைப்படம் இயக்குநரின் விசாலமான பார்வையால், வலைப்பதிவர்கள் பலரையும் பார்க்க வைத்திருக்கிறது..! இயக்குநருக்கு எனது நன்றிகள்..!
இயக்குநரின் சொந்தப் படம். மிகக் குறைந்த பட்ஜெட்.. மோனிகா, சம்பத் இருவரைத் தவிர மற்றவர்கள் அதிகம் தெரியாதவர்கள். சிலர் புதுமுகங்கள். ஆனால் கதையை நம்பி தைரியமாக களத்தில் குதித்திருக்கிறார்கள். ஒரு நாவலின் வெற்றி அதனை படித்துக் களைத்து மூடிய பின்பும் நம் மனத்திரையில் மூடாமல் அசை போட வைப்பதில்தான் உள்ளது. இத்திரைப்படமும் ஒரு கதை நாவல் போன்றதுதான்.
மணி என்னும் தகப்பனை இழந்த அடல்ட்ரி மாணவன், படிப்பை விரும்பாமல் சேட்டைகளை அதிகம் விரும்பி செய்கிறான். தாங்கிக் கொள்ள முடியாத பள்ளி அவனை வெளியே அனுப்ப.. தனது தாய் மாமன் சம்பத்தின் ஊரான தாண்டிக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கேயுள்ள பள்ளியில் மாமனின் தயவில் சேர்க்கப்படுகிறான்.
சுதந்திரம் அடைந்துவிட்ட நாடு என்று நமக்கு நாமே பெருமிதப்பட்டுக் கொண்டாலும் இன்னமும் கிராமப் புறங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைத்தபாடில்லை. தனி காலனி, தனி கோவில், தனி சாலைகள், டீக்கடைகளில் தனி டம்ளர், தனியான சுடுகாடு என்று அவர்களை இன்னமும் அடிமைத்தனமாகத்தான் வைத்திருக்கிறோம். இது போன்ற கொடூரங்கள் நிலவும் ஊர்தான் இந்தத் தாண்டிக்குடி.(நிஜத்தில் இந்த ஊரில் அப்படி இல்லை)
மாமன் சம்பத்துதான் ஊர் மைனர். பெண்களை மேய்வதை முழு நேரத் தொழிலாகவும், மிச்ச நேரத்தில் காபி எஸ்டேட்டை கவனித்துக் கொள்பவராகவும் இருக்கிறார். இங்கேயும் மணியின் சகவாசம் எல்லை மீறும்போது கணக்கு டீச்சரான மோனிகாவும், உடன் படிக்கும் மாணவியான தங்கமும் குறுக்கிடுகிறார்கள்..
மோனிகா சம்பத்தின் கார் டிரைவரை காதலிக்க.. சம்பத்தோ மோனிகாவை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். இந்தக் காதல் ஜோடி ஊரைவிட்டு வெளியேற எத்தனிக்கும்போது இந்த கார் டிரைவர்தான் தான் தேடிக் கொண்டிருக்கும் தனது அப்பாவை கொன்ற கொலைகாரன் என்பது மணிக்குத் தெரிய வர.. சம்பத் ஒரு பக்கம்.. மணி ஒரு பக்கம் என்று காதலர்களை குறி வைக்கும் சூழல்.. தப்பித்தது யார் என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!
இயக்குநர் ராஜூ யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை என்று சொன்னபோது நம்ப முடியவில்லை. படத்தின் மேக்கிங் ஸ்டைல் அப்படித்தான் உள்ளது. டைட்டில் காட்சிகளின் வித்தியாசத்தை உணர்ந்து ஒரு எதிர்பார்ப்போடு அமர்ந்திருக்க முதல் ஷாட்டிலேயே கவர்ந்துவிட்டார் இயக்குநர். படம் முழுவதிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோவொரு வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது..
மணி என்னும் அந்தப் பையனின் வாழ்க்கைக் கதையை அவனே சொல்வதன் மூலம்தான் படம் துவங்குகிறது. அதில் இருக்கும் சஸ்பென்ஸ் இறுதிக் காட்சியில் உடைக்கப்படுவது நல்ல திருப்பம். இதே போன்றதொரு துவக்கமும், முடிவும்தான் தமிழகத்து மக்கள் பலரும் பார்க்காமல் தவறிய தா படத்தில் இருந்த்து..!
எல்லோருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அது நல்லவரோ, கெட்டவரோ என்பதில் ஐயமில்லை. இதில் அந்தப் பையனுக்கு இருக்கும் ஓவியத் திறமை வெகு அழகாக எஸ்டாபிளீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓவியத் திறமைச் சொல்லிக் காட்டியே மோனிகா மணியை மடக்குவதும், அவனை மேற்கொண்டு நல்ல பையனாக்கி படிக்க வைப்பதும் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
அந்த முனி கோவிலில் மோனிகாவை பார்த்தவுடன் உறைந்து போய் நிற்கும் காட்சியில் மணியிடம் நல்ல எக்ஸ்பிரஸன்ஸ் வந்திருக்கிறது.. தங்கத்திடம் பேரம் பேசிவிட்டு இறங்கும் புரோக்கரிடம் இடைவெளிவிட்டுவிட்டு வந்து பேசும் மணியின் நடிப்பு குறிப்பிடத்தகுந்தது.
சம்பத்துடன் பாலத்தில் சண்டையிட்டுவிட்டு போடா என்று அலட்சியமாகச் சொல்லும் அந்தக் காட்சி மிக அழகானது.. இந்த வயதுப் பையன்கள், அதுவும் நெருங்கிய உறவினனால் வேறென்ன சொல்ல முடியும்..?
தங்கம் என்ற அஸ்வதாவுக்கு நடிக்க அதிகம் வாய்ப்பில்லை என்றாலும், தன்னை அவமானப்படுத்தி திட்டும் காட்சியில் துளிக்கூட கண்ணீர் இன்றி அவர் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஸன்கள் சூப்பர்.. நல்ல இயக்குநர்கள் கிடைத்தால் நல்ல நடிப்பும் வெளியே வருமாம்..! அஸ்வதா ஏற்கெனவே புழல், திட்டக்குடி, கரகம் படங்களில் நடித்துள்ளார். திட்டக்குடியில் இவரது நடிப்பு குறிப்பிட வேண்டிய ஒன்று..!
படத்தின் மிகப் பெரிய ஆளுமைகள் சம்பத்தும், மோனிகாவும். சம்பத் வழக்கம்போல வில்லன் போல ஆனால் வில்லன் இல்லை என்றான கேரக்டர்தான்..! மணி, பள்ளிக்கூடத்தில் டீச்சரின் கையைப் பிடித்து வளையலை உடைத்த்தைப் பாராட்டி இப்படித்தான் இருக்கணும். அப்பத்தான் நம்ம மேல அவங்களுக்கு பயம் இருக்கும் என்று மைனர் பரம்பரை ஊட்டி வளர்க்கிறார்.
மோனிகா மீது இவருக்கு இருந்த மோகத்தை துளிகூட காட்டாமலேயே இறுதியில் மோனிகாவுக்காக மணியுடன் சண்டையிடுவது மட்டும்தான் திரைக்கதையில் கொஞ்சம் சேதாரமாகத் தெரிகிறது..!
கீழ் ஜாதிக்காரனை அவமானப்படுத்துவது போன்ற அந்தக் காட்சி படத்தில் நெளிய வைக்கிறதுதான் என்றாலும் தமிழ்நாட்டில் மாதத்திற்கு ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோவொரு இந்தியனுக்கு இந்த அவமானம் இழைக்கப்பட்டுதான் வருகிறது.. இதனைச் சுட்டிக் காட்டியதற்கு இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும்..!
கணக்கு டீச்சர் மோனிகா ஒரு காட்சி என்றாலும், அவரது இதுநாள்வரையிலான நடிப்பு கேரியரில் பெயர் சொல்லும்படியாக நடித்துள்ளார். நிச்சயத்தார்த்தம் நடந்தேறவுள்ள நிலையில் அதனை நிறுத்துவதற்காக அவர் ஆடுகின்ற அந்த பேய் ஆட்டமும், அதைத் துவக்கும் முன் அவருடைய முகத்தில் துவங்கும் ஆரம்ப ரகளைகளும்.. அசத்தல் மோனிகா.
முனி கோவிலில் காதலருடன் சல்லாபத்தில் இருந்த காட்சியில் பிரேமின் கலரும், மோனிகாவின் நடிப்பும் மணியை மட்டுமல்ல.. அனைவரையும் ஏதோவொன்றாக ஈர்த்திருக்கும்.. அம்மணிக்கு இதைவிட நல்ல கேரக்டர் கிடைத்து நல்ல நடிப்பை வெளிக்காட்ட அந்த முனியே அருள் புரியட்டும்..!
அவ்வப்போது வெகு இயல்பான டயலாக் டெலிவரியை பாஸ் செய்திருக்கும் மோனிகாவின் அண்ணனாக நடித்திருந்தவரின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.. வேட்டிக்கு கீழேயிருந்து பார்த்துவிட்டு ரொம்ப வளர்ந்துட்டானோ என்று சொல்வதும். சீரியல் லைட் ஜோக்கிலும் அலுங்காமல் கலக்கியிருக்கிறார் மனிதர்..
இந்தப் படத்தில்தான் இயக்குநர் பெயருக்கு கருத்து-இயக்கம் என்று டைட்டில் போட்டிருக்கிறார்கள். பாராட்டுக்கள். இதைவிடவும் பெரிய விஷயம்.. கதை டிஸ்கஷனில் உட்கார்ந்திருந்த அனைவரின் பெயரையும் போட்டு பெருமைப்படுத்தியிருப்பது.. இந்த இயக்குநருக்கு இருக்கின்ற பெருந்தன்மைகூட பல பெரிய இயக்குநர்களுக்கு இல்லையே என்று யோசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜூ..!
இசை பால் ஐசக் என்ற புதுமுகம்.. முனி பாடலும், அந்தப் பாடலிலேயே ஒரு கதை சொல்லியிருப்பதும் அனைவரையும் கவருகின்ற விஷயம். துவக்கத்தில் பின்னணி இசை சொதப்பலாக இருந்தாலும், முனி கோவில் காட்சிகளில் சலங்கை கட்டி ஆடியிருக்கிறது..!
சிற்சில காட்சிகளில் ஒளிப்பதிவில் குறைகள் தென்பட்டாலும் பள்ளிக்கூட காட்சிகளிலும், மழை காட்சிகளிலும் ஒளிப்பதிவு அபாரம்..! இயக்குதல் மிக ரசிப்புத் தன்மையுடன் இருந்ததால் எந்தக் குறைகளும் பெரிதாகத் தோன்றவில்லை.
சினிமாவில் யாரையும் உடல், தோற்றம், பேச்சை வைத்து எடை போட்டுவிட முடியாது என்பார்கள். எப்படி அவுட்புட் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்தக் கலைஞரை தீர்மானிக்க முடியும்.. அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநர் தனது முதல் படத்திலேயே தான் ஒரு திறமையான இயக்குநர் என்பதை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். இனி வரும் படைப்புகளையும் இது போலவே படைத்தால், தமிழ்ச் சினிமாவில் இவருக்கும் ஒரு இடம் நிச்சயமாக உண்டு. வாழ்த்துகள் ராஜூ ஸார்..!
அவசியம் பார்க்க வேண்டிய சினிமா இது. வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் மக்களே..!
புகைப்படங்களுக்கு நன்றி : Indiaglitz.com
|
Tweet |
20 comments:
Will defenitely see the film.....very long and detailed review sir....thank you very much
[[[ஸ்ரீகாந்த் said...
Will defenitely see the film. very long and detailed review sir. thank you very much.]]]
வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..!
மிகவும் நல்ல விமர்சனம்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
திரை இயக்குனர்களின் இமேஜை டாமாஜ் செய்யாமல் , மிகவும் பொறுப்பாக, அவர்கள் பட்ட கஷ்டத்திற்கும் ,அவர்கள் உழைப்புக்கு
மரியாதை செலுத்தியும் எழுதிய உங்களுக்கு 'தொப்பி கழட்டி' மரியாதை செய்கிறேன்.
ஏழாம் அறிவு , இப்ப Online ல் available
வாழ்த்துக்கள்...
நல்ல விமர்சனம் அண்ணே. ஆனா கொஞ்சம் லேட்டா எழுதுருக்கீங்க
[[[Kannan said...
மிகவும் நல்ல விமர்சனம்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com]]]
வருகைக்கு மிக்க நன்றி கண்ணன்..!
[[[IlayaDhasan said...
திரை இயக்குனர்களின் இமேஜை டாமாஜ் செய்யாமல், மிகவும் பொறுப்பாக, அவர்கள் பட்ட கஷ்டத்திற்கும்,அவர்கள் உழைப்புக்கு மரியாதை செலுத்தியும் எழுதிய உங்களுக்கு 'தொப்பி கழட்டி' மரியாதை செய்கிறேன்.]]]
மிக்க நன்றி தொப்பி இளையதாசன் அவர்களே..!
[[[MANO நாஞ்சில் மனோ said...
வாழ்த்துக்கள்...]]]
எனக்கெதுக்குண்ணே வாழ்த்து. இயக்குநரை பாராட்டுங்கண்ணே..!
[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்ல விமர்சனம் அண்ணே. ஆனா கொஞ்சம் லேட்டா எழுதுருக்கீங்க.]]]
வொர்க் ரொம்ப டைட்டா போயிட்டிருக்கு தம்பி.. அதான் லேட்டு..
பாத்துடலாங்ண்ணா!!
[[[குடிமகன் said...
பாத்துடலாங்ண்ணா!!]]]
அவசியம் பாருங்க குடிமகன் ஸார்..!
Supreme court has literally spit on jayalalitha for dragging the case and refusing to come to bangalore even after adequate security arrangements have been made. 'You are a public figure. why you dont like to meet the public' this are the exact words used by the SC. you have not published a post on it even after 3 days.
இதுவே கருணாநிதிய இருந்தா சுடுதண்ணி கால்ல விழுந்த மாதிரி குதிச்சிட்டு கட்டுரை எழுதி இருபிங்க. ஆனா இந்த mattera கண்டும் காணாத மாதிரி இருக்கீங்க.
ஜெயலளிதானா என்னதான் கரிசனமோ உங்களுக்கு எல்லாம்? கொஞ்சமாச்சும் ஞாயமா இருக்க பாருங்க
படம் வெளிவந்து ஒரு வாரம் 'ஈ' அடித்து, பிற்பாடு படம் பார்த்தவர்கள் வாய் மொழியாக சொல்லி, ஓடிய படங்கள் அதிகம். உதா: ஒரு தலை ராகம் & சேது. அந்தவகையில் இந்தப்படமும் சேர்ந்தால் மகிழ்ச்சி. தங்களது
பகிர்வுக்கு நன்றி!
[[[khaleel said...
Supreme court has literally spit on jayalalitha for dragging the case and refusing to come to bangalore even after adequate security arrangements have been made. 'You are a public figure. why you dont like to meet the public' this are the exact words used by the SC. you have not published a post on it even after 3 days.
இதுவே கருணாநிதிய இருந்தா சுடுதண்ணி கால்ல விழுந்த மாதிரி குதிச்சிட்டு கட்டுரை எழுதி இருபிங்க. ஆனா இந்த mattera கண்டும் காணாத மாதிரி இருக்கீங்க.
ஜெயலளிதானா என்னதான் கரிசனமோ உங்களுக்கு எல்லாம்? கொஞ்சமாச்சும் ஞாயமா இருக்க பாருங்க]]]
இதை ஏற்கெனவே பல முறை நான் எழுதியிருக்கிறேன். எழுதியும் வருகிறேன் நண்பரே.. சொத்துக் குவிப்பு வழக்கு என்று என் தளத்தில் தேடிப் பாருங்கள். கிடைக்கும்..!
[[[தோழன் மபா, தமிழன் வீதி said...
படம் வெளிவந்து ஒரு வாரம் 'ஈ' அடித்து, பிற்பாடு படம் பார்த்தவர்கள் வாய் மொழியாக சொல்லி, ஓடிய படங்கள் அதிகம். உதா: ஒரு தலை ராகம் & சேது. அந்த வகையில் இந்தப் படமும் சேர்ந்தால் மகிழ்ச்சி. தங்களது
பகிர்வுக்கு நன்றி!]]]
2-வது ரவுண்டுக்கு ஏற்பாடு செய்யப் போவதாகத் தயாரிப்பாளர் கூறினார். அப்படிச் செய்தால் அதுவும் நல்லதுதான்..!
இன்று இணையத்தில் தரவிறக்கித்தான் பார்த்தேன். ஆம், உங்கள் விமர்சனத்தினை நியாயப்படுத்தும் வண்ணம் இருந்தது.
இயக்குநர் மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.
[[[Indian said...
இன்று இணையத்தில் தரவிறக்கித்தான் பார்த்தேன். ஆம், உங்கள் விமர்சனத்தினை நியாயப்படுத்தும் வண்ணம் இருந்தது. இயக்குநர் மேலும், மேலும் வளர வாழ்த்துகள்.]]]
நல்லது நண்பரே.. வாழ்க வளமுடன்..! பார்ப்போரிடமெல்லாம் இதையும் சொல்லுங்களேன்..!
Dear UT,
I think you meant adolescent student and not adultery student. Saw this film on the net only yesterday and so came back to read your review.
[[[Subramanian said...
Dear UT, I think you meant adolescent student and not adultery student. Saw this film on the net only yesterday and so came back to read your review.]]]
எல்லா சினிமாவிலும் ரெண்டுங்கெட்டான் வயது காதலைத்தான் பெரிதாகக் காட்டுகிறார்கள்..! இதிலும் ஒரு இன்பாச்சுவேஷனான காதல்தான்..!
Post a Comment