தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்

03-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய மந்த நிலைமைக்கு இது போன்ற திரைப்படங்கள் மிகவும் அவசியம். காவியம் என்றோ, சாதனை படம் என்றோ நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் குடும்பத்துடன் பார்க்கலாம்.. யாரிடமும் துணை இயக்குநராகப் பணியாற்றாத ஒருவர் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.

பூ படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் களவாணி, விருந்தாளி, நெல்லு ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது..!


வழக்கமான காதல் கதைதான்..! அழுக்கு லுங்கி, முகம் முழுக்க தாடி, 5 நிமிடங்களுக்கொரு முறை டாஸ்மாக்கில் உருண்டு புரளும் சகோதரர்கள் பந்தல் பிரதர்ஸ்.. அண்ணன், தம்பிகள்.. ஊரில் காது குத்து, சடங்கு, கல்யாணம், கருமாதி என்று எல்லாவற்றுக்கும் பந்தல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று அவர்களை அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இதில் தம்பிதான் ஹீரோ. அண்ணன் சப்போர்ட்டிங்கு..!

கை சுத்தமான நாச்சியப்ப செட்டியார் சப்-ரிஜிஸ்தரராக பணியாற்றி வருகிறார். அவரது மகள்தான் ஹீரோயின்.  தனது அண்ணனின் கல்யாணத்திற்காக, நாச்சியப்ப செட்டியாரின் மருமகன் நான் என்று அவரது அலுவலகத்திற்குப் போன ஹீரோ உளறிவிட.. இதில்தான் கதை ஆரம்பம்..!

“அதெப்படி நீயி அப்படி சொல்லப் போச்சு..” என்று தனது ஸ்கூட்டியில் விரட்டிப் பிடித்து ஹீரோவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் ஹீரோயின். பதிலுக்கு ஹீரோவின் பதிலால் ஆள் அவுட்டாகி, வழக்கமான சினிமா பார்முலா படி லவ்வோ லவ்வு..!

விஷயம் நாச்சியப்ப செட்டியாருக்கு பாஸாகி, மகளுக்கு காவல் போடுகிறார். வழக்கம்போல பொண்ணு தப்பித்து டேக்கா கொடுக்க.. அமெரி்க்க மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க அழைத்து வருகிறார் செட்டியார். அன்றைய தினம் ஹீரோயினின் அண்ணிக்கும் வளைகாப்பு என்பதால் பந்தல் பிரதர்ஸ்தான் அந்த வீட்டில் பந்தல் போட வந்திருக்கிறார்கள்.

ஹீரோவும், ஹீரோயினும் நிகழ்ச்சியின் இடைவேளையில் தங்களுக்குள் இடைவெளியில்லாமல் லவ்விக் கொண்டிருக்க.. இதை வீட்டில் இருக்கும் சின்ன வாண்டு ஒண்ணு, கனகச்சிதமாக செல்பேசியில் படம் பிடித்துக் காட்டிவிட.. விஷயம் வந்த மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்து வீடு அலங்கோலமாகிறது..!

பாதுகாப்புக்காக சம்பந்தி ஊருக்கு அனுப்பப்பட்ட ஹீரோயினை விரட்டிப் பிடித்து “நாளைக்கே கல்யாணம்.. இதே கோவிலுக்கு காலைல வந்திரு..” என்று சொன்ன ஹீரோவால் மறுநாள் சரியான நேரத்துக்கு அங்கே போக முடியவில்லை.. ஹீரோயின் என்ன செய்தாள்..? என்னதான் செஞ்சாங்க..? கல்யாணம் ஆச்சா? இல்லையா..? இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா கொஞ்சம் காசு செலவழிக்கத்தான் வேணும்..! தியேட்டர்ல போய் பாருங்க..!

வழக்கமான காதல் கதைதான் என்றாலும் தற்போதைய திரைப்படங்களின் போக்கில் தீவிர நம்பிக்கை வைத்து கேரக்டர்களை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு..! அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். பிரியூவில் பார்த்தேன். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன்.

அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது.. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது.. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக் கொள்வது.. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்..!


ஹீரோவாக ஆதீத். ஹீரோயினாக ரேஷ்மி மேனன்.. இனிது, இனிதுவில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் இதுதான் முதல் படம் போல் நடித்துள்ளார்கள். ஹீரோயினின் குழந்தை முகத்தில் கொஞ்சம் அடிக்ட்டாகி இரண்டு நாட்களாக கூகிள் பஸ், பேஸ்புக், டிவிட்டரில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததை கொஞ்சம் அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்..!

இந்தக் குழந்தை நினைச்சால் ஒரு ரவுண்டு வரலாம். நல்ல கைட்னஸ்.. சிறந்த இயக்குநர்கள் கிடைக்க வேண்டும். பெஸ்ட் ஆஃப் லக் சைல்ட்.. ஹீரோவை விரட்டிப் பிடித்துக் கேள்வி கேட்பதில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டைதான் என்றாலும், இப்படியும் பொண்ணு ஊருக்கு ஒண்ணு இருக்குமே என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமையில் இன்னமும் பிரெஷ்ஷாக ஜொலித்தார் ரேஷ்மி..!

ஹீரோ ஆதித் தேநீர் விடுதியில் அடிக்கும் லூட்டியும், அங்கேயிருந்து சைட் அடிக்கும் காட்சிகளும் பலே பலே.. அந்த டீக்கடைக்காரனையும் சந்தடிச்சாக்கில் பாராட்டிக் கொள்வோம். இது போலவே நாச்சியப்பனிடம் பியூன் வேலை பார்க்கும் ஒருவரும் கலகலப்பாக்கிவிட்டார்..

நாச்சியப்பன் கதவைச் சாத்திக் கொண்டவுடன் ஏற்படும் பதட்டத்தை அவர் அடிக்கின்ற சரக்கைப பார்த்து. “போச்சு.. போச்சு. சாயந்தரம் கட்டிங்குக்காக வைச்சிருந்தேன். அதையும் அடிச்சிட்டீங்களே..” என்று புலம்புவதில் மது பிடிக்காத எனக்கே காட்சி மட்டும் பிடித்திருந்தது.

புதுமுக இயக்குநராக மட்டுமில்லாமல் நேர்த்தியாக திரைக்கதையும் எழுதியிருக்கிறார் குமரன்.. ஹீரோவின் அம்மா செத்ததுபோல் இருக்கும் காட்சியில் நிஜமோ என்று நினைக்க வைத்து, மகனது கல்யாணத்துக்காக செய்திருக்கும் செட்டப் என்று  சொல்லும்போது  செம கலகலப்பு..!

நாச்சியப்பரின் வீட்டு வாசலில் இரவோடு இரவாக தோரணம் கட்டுவது.. டாஸ்மாக் கடையில் விஸிட்டிங் கார்டை கொடுத்து கேன்வாஸ் செய்வது.. ஹீரோயின் ஹீரோவின் வீட்டுக்குள்ளேயே வந்து மீனை லவட்டிக் கொண்டு செல்வது.. ஹீரோ அண்ணனின் செல்போனை வைத்துக் கொண்டு ஒருவன் சின்னமனூர், தேவாரத்தில் இருந்தெல்லாம் போன் செய்வது.. என்றெல்லாம் இடையிடையே காட்சிகளுக்கிடையிலேயே நகைச்சுவையை வைத்து தனி ஆவர்த்தனம் இல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்..!

இசையும் அவரேதான்.. பாடல்களைவிடவும், டைட்டில் காட்சிகளின்போது இசைக்கும் பின்னணி இசைதான் எனக்குப் பிடித்திருந்தது. சொந்தப் படம் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்போல் தெரிகிறது..!

ரவுடி போன்றவனை காதலிக்கும் அழகு தேவதைகள் கதைதான் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.. இதுவும் அதில் ஒரு வகைதான். ஆனால் காட்சியமைப்புகளில் மட்டும் வித்தியாசத்தைக் கொட்டி தன்னால் முடிந்த அளவுக்கு சுவாரசியத்தைக் காட்டியிருக்கிறார்..!


நாச்சியப்ப செட்டியாரின் வேலை சப்-ரிஜிஸ்தரர் என்றவுடனேயே என்னை மாதிரி சினிமா மூளை உள்ளவர்கள் இடைவேளைக்குள்ளாகவே கிளைமாக்ஸ் எப்படியிருக்கும் என்பதை கண்டறிந்துவிட்டோம்..! மற்றவர்களுக்கு ஊகிப்பது கடினம்தான் என்றாலும், கிளைமாக்ஸ் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது..! 



காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை.. வெட்டுக் குத்து இல்லை.. ரத்தம் சிந்தவில்லை. அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ரசித்து பார்த்ததற்கு இன்னுமொரு காரணம்..!

இந்த மாத கோட்டாவில் ஒரு படம்தான் என்றால், இந்தப் படத்திற்கு நிச்சயம் குடும்பத்துடன் செல்லலாம்..!

சென்று வருக..!

16 comments:

CS. Mohan Kumar said...

//ஹீரோயினின் குழந்தை முகத்தில் கொஞ்சம் அடிக்ட்டாகி இரண்டு நாட்களாக கூகிள் பஸ், பேஸ்புக், டிவிட்டரில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததை கொஞ்சம் அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்..!//

அதான் விமர்சனம் போட தாமதம் ஆகிடுச்சோ? :)) அந்த பொண்ணு நல்ல அழகு; அது மக்களுக்கு புரிகிற மாதிரி நீங்க இன்னும் நல்ல படங்கள் போட்டிருக்கலாம் :))

Suresh Kumar said...

யாரிடமும் துணை இயக்குநராகப் பணியாற்றாத ஒருவர் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.

appo maniratnam maathiri oru periya director uruvaaga chance irrukuthu?

எல் கே said...

இது உண்மைத் தமிழன் விமர்சனமா ? ரொம்ப சின்னதா இருக்கு . வேற யாரோ எழுதி கொடுத்து இருக்காங்க

pichaikaaran said...

"வேற யாரோ எழுதி கொடுத்து இருக்காங்க"

அடடா.. கண்டுபிடிச்சுடீட்டீங்களா? நீங்கள் சொல்வது உண்மைதான்.. இது நான் எழுதி கொடுத்த விமர்சனம்... அண்ணன் எழுதிய “விரிவான “ விமர்சனம் அடுத்து வெளியாகும்...

பாலா said...

//ரவுடி போன்றவனை காதலிக்கும் அழகு தேவதைகள் கதைதான் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.. //

என்னது... லேட்டஸ்ட் ட்ரெண்டா? நீங்கல்லாம்.. படம் பார்த்து... விடிஞ்சது போங்க. :)

பாலா said...

ஃபேஸ்புக்ல மட்டும் தலையை காட்டுறேன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணுனீங்களேன்னுதான்னே இங்க வந்தேன்.

ஆக்சுவலி.. நான் இங்க நெறய கமெண்ட் போட்டிருக்கேன்னே. எல்லாம் வெவ்வேற பேர்ல.

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

//ஹீரோயினின் குழந்தை முகத்தில் கொஞ்சம் அடிக்ட்டாகி இரண்டு நாட்களாக கூகிள் பஸ், பேஸ்புக், டிவிட்டரில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததை கொஞ்சம் அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்..!//

அதான் விமர்சனம் போட தாமதம் ஆகிடுச்சோ?:)) அந்த பொண்ணு நல்ல அழகு; அது மக்களுக்கு புரிகிற மாதிரி நீங்க இன்னும் நல்ல படங்கள் போட்டிருக்கலாம் :))]]]

மோகன்குமார், இந்த ஒரு படம் போதாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[Suresh Kumar said...

யாரிடமும் துணை இயக்குநராகப் பணியாற்றாத ஒருவர் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.

appo maniratnam maathiri oru periya director uruvaaga chance irrukuthu?]]]

நோ.. அவரவர்க்கு இருப்பதுதான் வரும். மணிரத்னம்போல் வேறொருவர் வர முடியுமா என்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

இது உண்மைத் தமிழன் விமர்சனமா? ரொம்ப சின்னதா இருக்கு. வேற யாரோ எழுதி கொடுத்து இருக்காங்க.]]]

எல்.கே. நானேதான் எழுதினேன்.. இந்தப் படத்துக்கு இது போதும்னு நினைச்சேன். அவ்ளோதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"வேற யாரோ எழுதி கொடுத்து இருக்காங்க"

அடடா. கண்டு பிடிச்சுடீட்டீங்களா? நீங்கள் சொல்வது உண்மைதான். இது நான் எழுதி கொடுத்த விமர்சனம். அண்ணன் எழுதிய “விரிவான “ விமர்சனம் அடுத்து வெளியாகும்.]]]

பார்வை.. -)))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[புள்ளி ராஜா said...

//ரவுடி போன்றவனை காதலிக்கும் அழகு தேவதைகள் கதைதான் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.. //

என்னது... லேட்டஸ்ட் ட்ரெண்டா? நீங்கல்லாம்.. படம் பார்த்து... விடிஞ்சது போங்க. :)]]]

பின்ன இல்லியா..? எத்தனை படத்துல இதே மாதிரி லவ்வ பார்த்து, பார்த்து சலிச்சுப் போய் உக்காந்திருக்கோம்..! இல்லைன்றீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[புள்ளி ராஜா said...

ஃபேஸ்புக்ல மட்டும் தலையை காட்டுறேன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணுனீங்களேன்னுதான்னே இங்க வந்தேன்.]]]

வருகைக்கு மிக்க நன்றி புள்ளிராஜா..!

[[[ஆக்சுவலி. நான் இங்க நெறய கமெண்ட் போட்டிருக்கேன்னே. எல்லாம் வெவ்வேற பேர்ல.]]]

அடப்பாவி.. அவனா நீயி..?

செங்கோவி said...

குழந்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிண்ணே.

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
குழந்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிண்ணே.]]]

தியேட்டருக்கும் போய் பாருங்கண்ணே..!

ஒரு வாசகன் said...

ஜீவியின் செய்தி:
//2011 ஜனவரி முதல் மே வரை 100 நாட்கள் ஓடிய படங்கள் பட்டியல் வெளியானது. 'மைனா’ 'சிறுத்தை’, 'சிங்கம் புலி’, 'காவலன்’ என்று நீளும் பட்டியலில், 'விருதகிரி’, 'லத்திகா’, 'இளைஞன்’ படங்களும் இடம்பெற்று இருப்பதைக் கண்டு, கோடம்பாக்கமே குப்புறப் படுத்துக்கொண்டு, குமுறிக் குமுறி அழுகிறது//
உங்கள் காமண்ட் என்ன? வெளிநாட்டு வாசகர்களுக்கு உண்மையைத் தெரிவியுங்களேன்

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

ஜீவியின் செய்தி:

//2011 ஜனவரி முதல் மே வரை 100 நாட்கள் ஓடிய படங்கள் பட்டியல் வெளியானது. 'மைனா’ 'சிறுத்தை’, 'சிங்கம் புலி’, 'காவலன்’ என்று நீளும் பட்டியலில், 'விருதகிரி’, 'லத்திகா’, 'இளைஞன்’ படங்களும் இடம் பெற்று இருப்பதைக் கண்டு, கோடம்பாக்கமே குப்புறப் படுத்துக் கொண்டு, குமுறிக் குமுறி அழுகிறது//

உங்கள் காமண்ட் என்ன? வெளிநாட்டு வாசகர்களுக்கு உண்மையைத் தெரிவியுங்களேன்.]]]

இதில் "லத்திகா" படம் மட்டும் 100 நாட்கள் ஓட்டப்பட்டது உண்மை. அதாவது முதலில் படம் ரிலீஸானபோது 3 காட்சிகளாவும், பின்பு 2 காட்சிகளாகவும், கடைசியில் காலை நேரக் காட்சியாக மட்டும் தியேட்டர்களில் ஓட்டப்பட்டது. அதுவும் ஒரே தியேட்டரில் அல்ல. ஷிப்ட்டிங் முறையில்..!

அந்தக் காட்சிக்கான வாடகையை தயாரிப்பாளர் முன்கூட்டியே கொடுத்துவிட்டதால், தியேட்டர்காரர்கள் 10, 12 பேர்களுக்காகவே அந்த காலை நேர ஷோக்களை ஓட்டியிருக்கிறார்கள்..!

விருதகிரி மற்றும் இளைஞன் படங்களும் ஷிப்ட்டிங் முறையில் மட்டுமே 100 நாட்களை சிங்கிள் ஷோ முறையில் கடந்திருக்கிறது. அதனால் அதையும் லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறார்கள்.

எல்லாம் ஒரு விளம்பரத்துக்காகத்தான்..!