12-03-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
நாட்டில் பெருகி வரும் விலைவாசிகள், ஏறிச் செல்லும் வீட்டு வாடகைகள் என்றெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலும் தமிழக அரசியல் களமும் தற்போது கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் ஜோதி, அகமது சையதுகான், தங்கதமிழ்ச் செல்வன், பெருமாள் ஆகிய அ.தி.மு.க.வினரின் பதவிக் காலமும், தி.முக.வைச் சேர்ந்த வக்கீல் சண்முகசுந்தரத்தின் பதவிக் காலமும், காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே.வாசனின் பதவிக் காலமும் வருகின்ற ஏப்ரல் 2-ம் தேதியோடு நிறைவடைகிறது.
காலியாகப் போகும் இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதியன்று நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 8-ம் தேதியன்று தொடங்கியும் விட்டது.
ஒருவர் ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமெனில் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 34 பேரின் வாக்குகள் வேண்டும்.
தி.மு.க. கூட்டணியின் பலத்தை வைத்துப் பார்த்தால் 4 எம்.பி.க்கள் சுலபமாகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.
அதே சமயம் அ.தி.மு.க. கூட்டணி 2 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்க இரண்டு எம்.எல்.ஏ.க்களின் வாக்கு குறைவாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழக சட்டசபையில் தி.மு.க.வுக்கு சபாநாயகரையும் சேர்த்து 96 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் ஒரு வாக்கு உபரியாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுக்கு ஒரு சீட் வேண்டும் என்று கொடி பிடித்திருக்கிறது. கூடவே டாக்டரய்யா 15-ம் தேதிவரை கெடுவும் விதித்திருக்கிறார். அன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தி.மு.கவுக்கு உள்ள 96 எம்.எல்.ஏ.க்களில் அவர்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 2 பேரை ஜெயிக்க வைக்க 68 பேர் போதும்..
மீதமிருக்கும் 28 எம்.எல்.ஏ.க்களில் சி.பி.எம்.மின் 9 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் சேர்த்து வாக்களித்தாலே, மூன்றாவது உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் சுபலமாக வெற்றி பெற முடியும்.
மார்க்சிஸ்ட்களிடம் இப்போது மீதம் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
காங்கிரஸிடம் 35 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அதில் 34 பேர் சேர்ந்து நான்காவது உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள்.
மீதமுள்ள 1 எம்.எல்.ஏ.வுடன், பா.ம.க.வின் 18 எம்.எல்.ஏ.க்கள், விடுதலைச் சிறுத்தைகளின் 2 எம்.எல்.ஏ.க்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சை உறுப்பினர் 1, இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களில் மீதமுள்ள 3 பேர் சேர்ந்தால் 31 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக நிற்கிறார்கள்.
இப்போது 5-வதாக தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் உறுப்பினர் ஜெயிப்பதற்கு 3 எம்.எல்.ஏ.க்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர கேப்டன் விஜயகாந்த் நடுநாயகமாக தனியே நின்று கொண்டிருக்கிறார்.
விஜயகாந்தை சேர்த்தால்கூட இன்னமும் 2 பேர் தி.மு.க. கூட்டணி தரப்பில் நிறுத்தப்படும் 5-வது வேட்பாளருக்குத் தேவைப்படும்.
ஆக மொத்தம், இப்போது கவனத்தில் இருப்பது 5-வது வேட்பாளர் தி.மு.க. கூட்டணியில் நிறுத்தப்பட்டால் அவரால் எப்படி ஜெயிக்க முடியும் என்பதுதான்..
மேலும் காங்கிரஸிற்கு 2 இடங்கள் என்று தெரிய வந்திருப்பதால் அது 4-5-வது சீட்டா அல்லது 3-4-வாது சீட்டா என்பது தெரியாததால் அரசியல் கட்சிகளின் குழப்பத்தில்தான் உள்ளன.
3-4-வது சீட்டு எனில் காங்கிரஸ் மிக எளிதாக வென்றுவிடும். மார்க்சிஸ்ட் கட்சி 5-வது சீட்டுக்குப் போட்டியிட வேண்டி வரும்..
ஆனால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் 4-5-வது சீட்டு எனில் 4-வதில் வென்றுவிட்டு 5-வதிற்கு காங்கிரஸார் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
அல்லது சென்ற முறை கேப்டனின் உதவி கேட்டு போய் நிற்கும் உபத்திரவம் வேண்டாம் என்ற கவுரவக் குறைச்சலின் காரணத்தால், உலக அதிசயமாக அம்மாவிடமே பாராட்டைப் பெற்று தேர்தலை நடத்தியதைப் போல வெற்றி வாய்ப்புள்ள 4 இடங்களில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தி போட்டியைத் தவிர்க்கும் வாய்ப்பையும் கலைஞர் செய்யலாம்.
அ.தி.மு.க. கூட்டணியில் முதல் இடத்திற்குப் போட்டியிடும் வேட்பாளர் மிக எளிதாக ஜெயித்து விடுவார்.
ஆனால் 2-வதாகவும் ஒருவரை அம்மா நிறுத்தினால் அவரை ஜெயிக்க வைக்க அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் கூடுதலாக 2 எம்.எல்.ஏ.க்களின் வோட்டு தேவை.
இன்றைய நிலையில் “பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுத்தாரா..” என்ற கேள்விக்கே இன்னமும் அம்மா பதில் சொல்லாத காரணத்தால், கேப்டனை அவர்கள் நாடுவார்களா என்பது சந்தேகம்.
அப்படியே நாடி ஒருவேளை அவர் கிடைத்து, மேற்கொண்டும் வேண்டிய 1 ஓட்டை காங்கிரஸில் இருந்து பெற்றால் அ.தி.மு.க. இன்னொரு இடத்தையும் பிடிக்கலாம்.
ஆனால் அது கூரை மீதேறி கோழி பிடிக்கிற கதைதான்.. காங்கிரஸ் சிக்கினாலும் கேப்டன் சிக்குவாரா என்பது மெகா சந்தேகம்.
இதில் டாக்டரய்யாவும் தன் பங்குக்கு தனது 18 எம்.எல்.ஏ.க்களை கருத்தில் கொண்டு தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார்..
ஆனால் கலைஞரோ சென்ற முறை கேட்டவுடனேயே முணுமுணுக்காமல் அன்புமணிக்கு சீட் கொடுத்ததை அவர் மறக்கக்கூடாது என்று சொல்லி இம்முறை கேட்க வேண்டாம் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.
டாக்டர் எவ்வளவுதான் முறைத்துக் கொண்டாலும் அன்புமணி கூட்டணியிலிருந்து விலக ஒத்துக் கொள்ளவே மாட்டார் என்பதனை டெல்லி அரசியல்வாதிகள்கூட ஒத்துக் கொள்வார்கள்.
எனவே டாக்டரின் சீட் எச்சரிக்கை பிசுபிசுத்துப் போய்விடும் வாய்ப்புதான் அதிகம் உண்டு.
ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சி இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொன்னாலும் கலைஞர் வருத்தப்படப் போவதில்லை.
தி.மு.க. கூட்டணி 4 இடங்களில் மட்டுமே போட்டியிடுவதாக இருந்தால், பா.ம.க.வின் ஆதரவுகூட அவர்களுக்குத் தேவையில்லை.
பா.ம.க. இல்லாமலேயே தி.மு.க. கூட்டணியின் பலம் 149 என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள்.
ஒருவர் திருமதி வசந்தி ஸ்டான்லி. மற்றொருவர் ஜின்னா.
ஜின்னா ஒரு வழக்கறிஞர். மிசா காலத்திலேயே தி.மு.க. சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்ற வகையில் அவருடைய தேர்வு, அக்கட்சிக்கு பெருமைக்குரிய விஷயம்தான்..
இதில் வசந்தி ஸ்டான்லி பற்றித்தான் தற்போது பல பூதங்கள் கிளம்பியுள்ளன.
முதல் விஷயமே இவர் இதுவரையில் வெளியில் தெரியாதவண்ணம் இருந்தவர் என்பதுதான். அரசியலின் லைம் லைட்டிற்கு ஒரே இரவில் வந்துவிட்டவர் இவர்.
கூடவே, இவரைப் பற்றிய பல பகீர்ரக மோசடிப் புகார்கள் தற்போது அம்பலத்துக்கு வந்தவண்ணம் இருக்கின்றன.
அவர் மீது எழும்பியுள்ள குற்றச்சாட்டுக்களைப் பார்த்தால் ஒருவேளை இந்த வேட்பாளர் மாற்றப்படக்கூடும் என்ற பேச்சும் அரசியல் உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் ஆண்டவனே வந்தாலும் அடையாளம் காண முடியாது அக்கட்சியின் வேட்பாளர் யார் என்று.. அவ்வளவு இரும்புத்திரை கட்சி..
ஒருவேளை உடன்பிறவாத் தோழியாகக்கூட இருக்கலாம். யார் கண்டது..?
இப்போதைக்கு புரட்சித்தலைவியின் ஆஸ்தான வக்கீல் ஜோதியின் பெயரையே மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் முன்னர் 5-ம் வகுப்பு மட்டுமே படித்த கோபிச்செட்டிப்பாளையத்தின் காளியப்பனை எம்.பி,யாக்கியதைப் போல இந்த முறை எந்தவொரு அப்பனுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ தெரியவில்லை.
கிடைத்தால் என்ன? கிடைக்காமல் போனால் என்ன? குனிந்து, விழுந்து, நிமிர்வது அவர் பாடு.. அவருடைய தலைவியின் பாடு.. நமக்கென்ன?
2-வதாக ஒரு உறுப்பினரை அ.தி.மு.க. நிறுத்தும் என்று இன்றுவரையிலும் யாரும் நம்பவில்லை. அப்படி ஒருவரை நிறுத்தினால் கூடுதலாகத் தேவைப்படும் 2 ஓட்டுக்களை பெறுவதற்கு தில்லாலங்கடி வேலையையெல்லாம் செய்ய வேண்டி வரும்.
ஒருவேளை டாக்டரய்யா இருக்கின்ற கோபத்தில் இவர்களுக்கு உதவி செய்ய வரலாம்.
அப்படிச் செய்தால் அவருடைய மகன் அன்புமணி மத்திய அரசில் இருந்து விலக நேரிடும். தமிழக கூட்டணியிலிருந்து வெளியறலாம் அல்லது வெளியேற்றப்படலாம்.
இந்தத் தற்கொலை முடிவுக்கு டாக்டரய்யா வருவாரா என்பது சந்தேகம்தான்..
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கடைசி நிமிடத்தில்தான் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்பது பரம்பரை, பரம்பரையாக பின்பற்றப்பட்டு வருவதால் யார் நிறுத்தப்படுவார்கள் என்பது அக்கட்சியினருக்கே தெரியாத விஷயம்தான்..
ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக இருப்பதால் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் அக்கட்சிக்கு உண்டு. ஸோ, வாசனின் ரூட் கிளியர்.
இன்னொரு வேட்பாளரும் உண்டு எனில் அது யார் என்பதில் ஜெயந்தி நடராஜனுக்கும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கும் இடையில் பலத்த போட்டியே நடைபெற்று வருகிறதாம். இருவருமே டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் தகவல்.
இந்த இருவரில் யார் பெயர் அறிவிக்கப்பட்டாலும் அவர்கள் எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்பது அவர்கள் பாடு.
காங்கிரஸ¤டன் வருங்காலத்தில் அமையப் போகும் கூட்டணிக்கு இது அச்சாரமாக இருக்கும் என்ற வகையில் கேப்டன் தன் வாக்கை செலுத்தினாலும், மிச்சமிருக்கும் 2 ஓட்டுக்களுக்கு என்ன செய்வார்கள் என்பது புலப்படவில்லை.
இதில் கள்ள ஓட்டும் போட முடியாது என்ற சோகமும் அரசியல்வாதிகளுக்கு எக்கச்சக்கமாகவே உண்டு.
சட்டம் இயற்றுவதும் அவர்கள்தான்.. சட்டத்தைப் பாதுகாப்பதும் அவர்கள்தான் என்பதால் அவர்களே தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏற்கெனவே இது தொடர்பான சட்டத்தை இயற்றிவிட்டார்கள்.
ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தல் ரகசியமானது அல்ல. அது கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவிற்குக் கட்டுப்பட்டது என்று சொல்லிவிட்டார்கள்.
எனவே சிரித்துக் கொண்டே கழுத்தை அறுப்பதைப் போல பெட்டி அருகே போய் ஓட்டை மாற்றிப் போட முடியாது.
மறைவான இடத்திற்குப் மாற்றிக் குத்திவிட்டு பெட்டியில் போட வெளியே வரும்போது, அங்கே நிற்கப் போகும் கட்சி பிரதிநிதி காட்டச் சொன்னால் வோட்டை அவரிடம் காட்டித்தான் ஆக வேண்டும்.
அது கொறடா உத்தரவை மீறியதாக இருந்தால் அவர் பதவியிலிருந்து நீக்கப்படும் அபாயமும் உண்டு.
ஸோ..
ஜெயிக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
|
Tweet |
10 comments:
ADMK announced Bala Ganga and another person from MDMK. Doctor Ramdoss already indicated that they will go with cong only.
மதிமுகவில் வைகோ வேட்பாளராக இருந்தால் நன்றாக இருக்கும். தேர்தல் இன்னும் சூடு பறக்கும். திமுக அணி வைகோவைத் தோற்கடிக்க எல்லா முயற்சியும் எடுக்கும்.
அதிமுக வேட்பாளர் பாலகங்கா பத்தி உங்கள் கருத்து என்ன ? அவர் நல்லவரா கெட்டவரா ? (நாயகன் வசனம் பாணியில் படிக்கவும்)
//Anonymous said...
ADMK announced Bala Ganga and another person from MDMK. Doctor Ramdoss already indicated that they will go with cong only.//
அனானி.. இந்தச் செய்தி வருவதற்கு முன்பே நான் போஸ்ட் செய்துவிட்டதால் குழப்பம் வந்துவிட்டது. எது எப்படியிருந்தாலும் ம.தி.மு.க. சார்பாக யார் நின்றாலும், ஜெயிப்பது விஜயகாந்த் மற்றும் சுயேட்சையின் கையில்தான் உள்ளது.
//Anonymous said...
மதிமுகவில் வைகோ வேட்பாளராக இருந்தால் நன்றாக இருக்கும். தேர்தல் இன்னும் சூடு பறக்கும். திமுக அணி வைகோவைத் தோற்கடிக்க எல்லா முயற்சியும் எடுக்கும்.
அதிமுக வேட்பாளர் பாலகங்கா பத்தி உங்கள் கருத்து என்ன ? அவர் நல்லவரா கெட்டவரா ? (நாயகன் வசனம் பாணியில் படிக்கவும்)//
வைகோ நிற்க மாட்டார் என்றே கருதுகிறேன். ஏனெனில் அவர் நின்றால் எப்பாடுபட்டாவது அவரைத் தோற்கடித்தே தீர வேண்டும் என்று அரசுத் தரப்பு முயற்சி செய்யும் என்பது அவருக்குத் தெரியும்.
ஆனாலும் புரட்சித்தலைவியின் இந்தப் புரட்சி யாருமே எதிர்பார்க்காதது.. அ.தி.மு.க.வே அந்த இன்னொரு இடத்துக்குப் போட்டியிட்டால் கண்டிப்பாக விஜயகாந்துடன் பேச வேண்டி வரும் என்பதால் போனால் போகிறது.. ஜெயித்தால் ஜெயித்துக் கொள்ளுங்கள் என்று விட்டுக் கொடுத்துள்ளார். இந்த மட்டுக்கும் அவரைப் பாராட்டலாம்.
இனி பந்து விஜயகாந்த் மற்றும் சுயேட்சை உறுப்பினரின் கையில் உள்ளது.
விஜயகாந்த் சும்மா ஓட்டை வைத்திருப்பதற்கு நாளைக்கு எதுக்காச்சும் உதவி கேட்டுக் கொள்ளலாமே என்ற ரீதியில் ம.தி.மு.க.வுக்கு ஆதரவு தரலாம்.
ஆனால் சுயேட்சை உறுப்பினர் என்ன செய்வாரோ.. அவர் இப்போதே தி.மு.க.கூட்டணியின் ஆதரவாளர்தான்..
ஆக.. அரசியல் களம் இது போன்று மிகச் சூடாகி நாளாகிவிட்டது. வேடிக்கை பார்ப்போம்..
Is kalaignar is reading your blog, see today's news DMK is changing Vasanthi after your blog publishes yesterday.
அண்ணே,
வசந்தி ஸ்டான்லி ஏதோ ஒரு சீனியர் அமைச்சருக்கு "ரொம்ப" வேண்டப்பட்டவராமே? யாருண்ணே அந்த அமைச்சர்? ஏதோ "மின்னலான" அமைச்சர்னு சொல்றாங்க, ஒன்னுமே புரியலைண்ணே, கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்கண்ணே. பொதுல எழுதமுடியாட்டா போன் பண்றேண்ணே, சொல்லுவீங்களா?
//Anonymous said...
Is kalaignar is reading your blog, see today's news DMK is changing Vasanthi after your blog publishes yesterday.//
இல்லை அனானி.. அந்தம்மா பற்றியும், அவருடைய கணவரைப் பற்றியும் உள்ள சில அல்ல பல வழக்குகளைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகளில் வெளிவந்துவிட்டன.
அந்த அம்மையாரின் கணவர் மீது சிபிஐதான் வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில் கணவருக்கு சாட்சி கையெழுத்து இவர் இட்டுள்ளார் என்பதுதான் அந்தக் குற்றப்பத்திரிகையில் பிரதான குற்றச்சாட்டு.
எது எப்படியிருந்தாலும் இவரை நிறுத்தியிருக்கக்கூடாது..
//Anonymous said...
அண்ணே, வசந்தி ஸ்டான்லி ஏதோ ஒரு சீனியர் அமைச்சருக்கு "ரொம்ப" வேண்டப்பட்டவராமே? யாருண்ணே அந்த அமைச்சர்? ஏதோ "மின்னலான" அமைச்சர்னு சொல்றாங்க, ஒன்னுமே புரியலைண்ணே, கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்கண்ணே. பொதுல எழுதமுடியாட்டா போன் பண்றேண்ணே, சொல்லுவீங்களா?//
குசும்பா..? ரொம்ப நாள் எல்லாத்தையும் மூடி மறைக்க முடியாது.. ஒரு நாள் தானா வெளிய வரும். அப்ப தெரிஞ்சுக்குங்க..
எனக்குத் தெரியாதுங்க சாமி..
இந்தப் பதிவின் தொடர்பான அப்டேட் செய்திகள்.
ம.தி.மு.க. தேர்தலில் நிற்க மறுத்துவிட்டதால் போட்டி தவிர்க்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியும் 5-வது வேட்பாளராகப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் திரு.டி.கே.ரங்கராஜன் அவர்களுக்கு வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளதால் இவர் நிச்சயம் ஜெயிக்கிறார்.
ஸோ, அனைத்துமே சுபமாக முடியப் போகிறது..
அவ்வளவுதான்..
See who owns blackhatworld.com or any other website:
http://whois.domaintasks.com/blackhatworld.com
Post a Comment