இந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் தேவையா..?

12-03-2008


என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ஐயோ.. ஐயோ.. இப்படியெல்லாமா படம் எடுப்பாங்க..?

எம்புட்டு ஆசை, ஆசையா ராத்திரியோட ராத்திரியா 20 பக்கத்துக்கு விமர்சனம் எழுதிப்புடணும்னு விழுந்தடிச்சு ஓடுனேன்..

அதே வேகத்துல புடனில கை வைச்சு வெளில தள்ளிட்டாரே இந்த டைரக்டர்..

ஏதோ ‘Independence Day', 'The day after tommorow'ன்னு பெரிய பெரிய பிச்சுவா படமெல்லாம் எடுத்தவராச்சே. இந்தப் படத்துலேயும் அப்படியே நம்மளை தூக்கிக்கிட்டுப் போகப் போறாருன்னு நினைச்சு உள்ள போய் உக்காந்தா..

ஒரு நாட்ல ஒரு ஊராம்..

அந்த ஒரு ஊர்ல பல குடும்பமாம்..

அந்த ஊர்ல ஒரு வயசான கிழவியாம்..

ஊர்ல ஒரு சின்னப் பையனுக்கும், சின்னப் பொண்ணுக்கும் தொட்டுப் புடிச்சு விளையாடுற காலத்துல இருந்து ஒரு ‘இது’வாம்..

இந்த ‘இது’ உறுதியாகறதுக்கு ஒரு போட்டியாம்..

அந்த போட்டில ஹீரோ ஜெயிக்கிறானாம்..

உடனே இது உறுதியாயிருச்சாம்..

திடீர்ன்னு ஒரு இருபது, இருபத்தைஞ்சு வில்லனுக வரானுங்கோ..

ஹீரோயினை அல்லாக்கத் தூக்கிட்டுப் போயிடறானுங்கோ..

ஹீரோவுக்கு வாழ்க்கையே பூட்டுக்குது..
எப்படியாச்சும் ஹீரோயினைக் காப்பாத்தணும்னு துடிக்கிறாரு..

தூக்கிட்டுப் போனவங்களைத் தேடி ஓடுறாரு..
வழில கிடைக்குறவங்களை கைக்குள்ள போட்டுக்குறாரு..

அவரோட அப்பா ஒரு சமயம் அந்த ஊர்க்காரங்களுக்கு ஏதோ உதவி பண்ணியிருக்காராம்..
அவரோட நிறைவேறாத ஆசை ஒண்ணு இருக்காம். அதை நம்ம ஹீரோதான் நிறைவேத்தணுமாம்.. புது பிரெண்ட்ஸ் எல்லாரும் சொல்றாங்கோ..

நம்ம ஹீரோ அப்பன் பேரைச் சொல்லி உதவி கேக்குறாரு.. அவுகளும் ஒத்துக்குறாங்க.. ஏன்னா ஹீரோவோட வில்லன், அவுங்களுக்கும் வில்லனாம்..

இது போதாதா..?

நேருக்கு நேர்.. கல்லுக்குக் கல்.. பல்லுக்குப் பல்ன்னு சண்டை நடக்குது..

வில்லனை வீழ்த்தி, கயவர்களை அடியோடு அழித்து தன் மனதில் இமைப்பொழுதும் நீங்காதிருக்கும் தனது காதலியைக் கரம் பிடிக்கிறான் ஹீரோ..

இதுதான் கி.மு.10,000-ம் வருஷத்துக்கு முந்தி உலகத்துல நடந்ததாம்.

ஆத்தாடி.. இதுக்கா இம்புட்டு பெரிசா அலட்டல் வுட்டானுக..

இந்தக் கதையை யோசிக்கிறதுக்கு இன்னாத்துக்கு ஹாலிவுட்டுக்கு போகணும்..? நம்ம காட்டுப்பட்டில மாடு மேய்க்கிறவன்கிட்ட கேட்டாலே சொல்லிருப்பானே..

எத்தனி வருஷமா, எத்தினி புத்தகத்துல படிச்சிருக்கோம் இந்தக் கதையை..

இதுல கொடுமையிலும் கொடுமை தமிழ்ல வசனம் வேற..

“உங்கப்பா ஒரு கோழை.. அவருக்குப் பொறந்த நீயும் ஒரு கோழைதான்..
என்னை கோழைன்னு அவமானப்படுத்திட்டான்.. எப்படி தாங்குறது?

உனக்காக நான் இருக்கேன்.. நீ கவலைப்படாத..

அவளை நான் காப்பாத்தியே ஆகணும்..
முதல்ல உன்னை நீ காப்பாத்திக்க.. அப்புறமா அவள பாக்கலாம்..

அவுக சாதாரணமானவங்க இல்ல.. அழிக்கிறதுக்குன்னே பொறந்தவங்க..
அவுங்களை அழிக்கணும்னா நாம மூணு பேரால முடியாது..
முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமில்ல..

எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சு அவமானப்படுத்திட்ட இல்ல.. பின்னாடி நிச்சயமா வருத்தப்படுவ..

அவனை மறந்திரு.. அவன் நிழல்கூட இங்கபட முடியாது. உனக்காக நான் இருக்கேன்.. வா..”

ஐயோடா.. எனக்கு ஹாலிவுட் சினிமா பாக்குற ஆசையே விட்டுப் போச்சுடா சாமி..

ஆனாலும் ரொம்பத் தைரியம்யா அந்த டைரக்டருக்கு..

“எவ்ளோ பெரிய ஹிட் கொடுத்திருக்கோம். அதுனால முட்டாப் பசங்க விழுந்தடிச்சு ஓடி வந்து பார்ப்பானுக”ன்னு கரெக்ட்டாத்தான் கணக்குப் போட்டிருந்திருக்காரு....

நேத்து ஈவினிங் ஷோல தியேட்டர் ஹவுஸ்புல்.. ஆச்சரியம்.. ஆனால் உண்மை..

என்னய்யா ரீசன்னா.. வரிசைக்கு வரிசை சின்னப் பசங்க கூட்டம் வேற..

ஏதோ தினுசு, தினுசா மிருகத்தைக் காட்டுறாங்கன்னு எவனோ வெளில பத்த வைச்சிருக்கான் போல..

தினுசு மிருகமாடா அது..?

அடப்பாவிகளா.. நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கும்போது என் சிலேட்டுல வரைஞ்சதே இது மாதிரிதான்டா..

அதையே 28 வருஷம் கழிச்சு கம்ப்யூட்டர்ல வரைஞ்சு என்கிட்டயே காட்டுறானுகப்பா.. இன்னா தில்லு இருக்கும் இவனுகளுக்கு..

பேசாம ஒரு பாலம் ஏறி இறங்கி அங்கிட்டுப் போயி 'ஜோதி' தியேட்டர்ல ஐக்கியமாகி பரவசப்பட்டுட்டு வந்திருக்கலாம். இன்னிக்கு அங்கன படத்தோட பேரே ‘பரவசம்’தானாம்..
ம்.. கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்..!

23 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

//எம்புட்டு ஆசை, ஆசையா ராத்திரியோட ராத்திரியா 20 பக்கத்துக்கு விமர்சனம் எழுதிப்புடணும்னு விழுந்தடிச்சு ஓடுனேன்..//

ஏனிந்த கொலைவெறி....ம்ம்ம்...நேத்து படம் முடிஞ்சவுடனே ஒரு ஃபீலிங் வந்திருக்குமே...அதே ஃபீலிங் உங்க பதிவ படிச்சி முடிச்ச்ச்ச்ச்ச்ச்சவுடனெ எங்களுக்கும் இருக்கும்....இப்ப புரியுதா மண்ட காயுறதுன்னா என்னான்னு....ஹி..ஹீ..ஹி...

இரண்டாம் சொக்கன்...! said...

மொத பின்னூட்டம்...டமாஸ்...ஆக எடுத்துக்கொள்ளவும்...

வருத்தமேற்பட்டியிருந்தால்..வருந்துகிறேன்.

Anonymous said...

நல்ல படத்துக்கு தரமாக எழுதுறீங்க, மோசமான படத்தையும் நல்ல நக்கல் அடிகிறீங்க.... கலக்குங்க

உண்மைத்தமிழன் said...

//இரண்டாம் சொக்கன்...! said...
ஏனிந்த கொலைவெறி....ம்ம்ம்...நேத்து படம் முடிஞ்சவுடனே ஒரு ஃபீலிங் வந்திருக்குமே...அதே ஃபீலிங் உங்க பதிவ படிச்சி முடிச்ச்ச்ச்ச்ச்ச்சவுடனெ எங்களுக்கும் இருக்கும்....இப்ப புரியுதா மண்ட காயுறதுன்னா என்னான்னு....ஹி..ஹீ..ஹி...//

சொக்கன்ஜி.. இதான் சமயம்னு போட்டுத் தாக்குறீங்க.. தாக்குங்க.. தப்பேயில்ல..

உண்மைத்தமிழன் said...

//மொத பின்னூட்டம்... டமாஸ்-ஆக எடுத்துக் கொள்ளவும்... வருத்தமேற்பட்டியிருந்தால்.. வருந்துகிறேன்.//

சேச்சே.. சொக்கன்ஜிக்கு இல்லாத உரிமையா.? இதுல என்ன ஸார் இருக்கு.. நீங்க இதை நினைச்சு வருத்தப்படாதீங்க..

இதெல்லாம் என்னை மாதிரி 'கலையுலக' வாழ்க்கைல இருக்கிறவங்களுக்கு சகஜம்..

நித்யன் said...

உண்மைத்தமிழன் சார்...

20 பக்கமா... அதை எண்ணிப் பார்க்கவே பயமா இருக்குது. எங்களைக் காப்பாத்திய Roland Emmerich வாழ்க வாழ்க...

கை வலிக்காதா சார்... அடுத்த படம் வர்ற வரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.

அன்புடன் நித்யகுமாரன்

Unknown said...

உண்மைத்தமிழன்,
இந்தப் படத்துக்கே இப்படி நொந்துட்டீங்கன்னா இந்தப் பதிவைப் போய்ப் பாருங்க.
http://vettipaiyal.blogspot.com/2008/02/sam-anderson.ஹ்ட்ம்ல்

பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல நண்பரே :)))

Unknown said...

யப்பா அந்த முருகன் தான் உங்களை இந்த படம் பாக்க வெச்சி எங்களை எல்லாம் காப்பத்தினான் :)).. இல்லாட்டி 20 பக்க விமர்சனமா? படத்தோட வசனத்துக்கே அவங்க இம்முட்டு பேப்பர் யூஸ் பண்ணாங்களான்னு தெரியலை. இந்த படத்துக்கு பிரமீட் சாய்மீரா பதிவுல குடுத்த பில்டப்ப படிச்சிங்களா?

தகடூர் கோபி(Gopi) said...

//பேசாம ஒரு பாலம் ஏறி இறங்கி அங்கிட்டுப் போயி 'ஜோதி' தியேட்டர்ல ஐக்கியமாகி பரவசப்பட்டுட்டு வந்திருக்கலாம். இன்னிக்கு அங்கன படத்தோட பேரே ‘பரவசம்’தானாம்..
ம்.. கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்..!//

:-))))))

கவலைப்படாதீங்க. கொஞ்சநாள் போனா 'என் ஆசையை நிறைவேற்று' போடுவாங்க. 'அஞ்சரைக்குள்ள வண்டி' புடிச்சி போய் பாத்து 'பரவசம்' அடையுங்க.

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
உண்மைத்தமிழன் சார்... 20 பக்கமா... அதை எண்ணிப் பார்க்கவே பயமா இருக்குது. எங்களைக் காப்பாத்திய Roland Emmerich வாழ்க வாழ்க.. கை வலிக்காதா சார்... அடுத்த படம் வர்ற வரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.
அன்புடன் நித்யகுமாரன்//

நன்றி நித்யா.. 20 பக்கமெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம்ப்பூ.. அடிக்க, அடிக்க வந்துக்கிட்டேயிருக்கும். டைப் பண்றதை நிறுத்தறதுதான் எனக்கு கஷ்டம்..

இருந்தாலும் இந்த வாட்டி அந்த புத்திசாலி டைரக்டரால தப்பிச்சிட்டீங்க..

அடுத்த படம் ஒண்ணு சிக்காமலா போகும்..?

உண்மைத்தமிழன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
உண்மைத்தமிழன், இந்தப் படத்துக்கே இப்படி நொந்துட்டீங்கன்னா இந்தப் பதிவைப் போய்ப் பாருங்க.
http://vettipaiyal.blogspot.com/2008/02/sam-anderson.ஹ்ட்ம்ல். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல நண்பரே :)))//

ரிவான் ஸார்.. இதை முன்பே பார்த்து படித்துவிட்டேன்.. இதெல்லாம் கைல காசு வைச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம ஒரு ஆர்வத்துல வர்றவங்க செய்ற கூத்துதான்.. ரெண்டு படம் ஊத்திக்கிட்டு கைல இருக்குற காசு கரைஞ்சவுடனே திரும்பிப் பார்க்காம போயிருவாங்க..

ஒரு முறையான வழிகாட்டுதல் இந்தச் சினிமாத் துறையில் இல்லை என்பதால்தான் இந்த மாதிரியான சிரிப்பூட்டும் சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன.

இப்பக்கூட மெட்ராஸ்ல ஒரு படம் ஓடுது.. எழுதியதாரடி என்பது அப்படத்தின் பெயர். போய் பார்த்துட்டு கதை என்னன்னு யாராச்சும் விமர்சனம் எழுதிட்டா..

முருகன் மேல சத்தியமா அடுத்த ஒரு மாசத்துக்கு நான் எதுக்கும் விமர்சனம் எழுத மாட்டேன்..

உண்மைத்தமிழன் said...

//சந்தோஷ் (aka) Santhosh said...
யப்பா அந்த முருகன தான் உங்களை இந்த படம் பாக்க வெச்சி எங்களை எல்லாம் காப்பத்தினான்:))//

முருகா.. இன்னிக்கு ஒருத்தரை உன் பேரை சொல்ல வைச்சுட்டேன். இவரை நல்லபடியா பாத்துக்க..

//இல்லாட்டி 20 பக்க விமர்சனமா? படத்தோட வசனத்துக்கே அவங்க இம்முட்டு பேப்பர் யூஸ் பண்ணாங்களான்னு தெரியலை.//

கிண்டலு.. ம்.. என்ன செய்றது?

//இந்த படத்துக்கு பிரமீட் சாய்மீரா பதிவுல குடுத்த பில்டப்ப படிச்சிங்களா?//

அதைப் பார்த்துதான்ப்பா தெரியாத்தனமா போய் மாட்டிக்கிட்டேன்..

உண்மைத்தமிழன் said...

///கோபி(Gopi) said...
//பேசாம ஒரு பாலம் ஏறி இறங்கி அங்கிட்டுப் போயி 'ஜோதி' தியேட்டர்ல ஐக்கியமாகி பரவசப்பட்டுட்டு வந்திருக்கலாம். இன்னிக்கு அங்கன படத்தோட பேரே ‘பரவசம்’தானாம்..
ம்.. கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்..!//
:-))))))
கவலைப்படாதீங்க. கொஞ்சநாள் போனா 'என் ஆசையை நிறைவேற்று' போடுவாங்க. 'அஞ்சரைக்குள்ள வண்டி' புடிச்சி போய் பாத்து 'பரவசம்' அடையுங்க.///

தம்பீபீபீபீபீ அஜீத்து.. என்ன திடீர்ன்னு என் பக்கம் காத்து வீசுது..

தம்பீபீபீபீ.. இந்நேரம் நீ சொன்ன ரெண்டு படத்தோட ரீலே தேய்ஞ்சு போயிருக்கும்.. அம்புட்டு ஓட்டம் ஓடிருச்சுக.. இன்னிக்கும் உன்னை மாதிரி சின்னப் புள்ளைக மட்டும்தான் அந்தப் படத்தை பார்க்காம இருக்கும்ங்க..

சரி.. படம் போட்டாங்கன்னா ஒரு சங்கு வுடறேன்.. பிளைட் பிடிச்சு வந்துட்டு சட்டுன்னு போயிரு..

நித்யன் said...

//
இருந்தாலும் இந்த வாட்டி அந்த புத்திசாலி டைரக்டரால தப்பிச்சிட்டீங்க..

அடுத்த படம் ஒண்ணு சிக்காமலா போகும்..?
//

இதைத்தான் கொலைவெறி என்று சொல்வார்களா...

இம்சை said...

அடப்பாவிகளா.. நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கும்போது என் சிலேட்டுல வரைஞ்சதே இது மாதிரிதான்டா..

அதையே 28 வருஷம் கழிச்சு கம்ப்யூட்டர்ல வரைஞ்சு என்கிட்டயே காட்டுறானுகப்பா.. இன்னா தில்லு இருக்கும் இவனுகளுக்கு..


இப்பவாச்சும் உங்க வயச ஒத்துக்கிட்டீங்களே...ஆமா இந்த படத்த பாத்ததே தப்பு இதில விமர்சனம் வேறெயா அதுலயும் 4 வரில எழுதாம 4 பக்கம் எழுதி இருக்கீங்க...

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
//இருந்தாலும் இந்த வாட்டி அந்த புத்திசாலி டைரக்டரால தப்பிச்சிட்டீங்க.. அடுத்த படம் ஒண்ணு சிக்காமலா போகும்..?//
இதைத்தான் கொலைவெறி என்று சொல்வார்களா...?///

கரெக்ட்டூ.. தேறிட்டீங்க நித்யா..

உண்மைத்தமிழன் said...

///இம்சை said...
//அடப்பாவிகளா.. நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கும்போது என் சிலேட்டுல வரைஞ்சதே இது மாதிரிதான்டா..
அதையே 28 வருஷம் கழிச்சு கம்ப்யூட்டர்ல வரைஞ்சு என்கிட்டயே காட்டுறானுகப்பா.. இன்னா தில்லு இருக்கும் இவனுகளுக்கு..//
இப்பவாச்சும் உங்க வயச ஒத்துக்கிட்டீங்களே...//

சாமி ஏதோ உணர்ச்சிப் பெருக்குல சொல்லிப்புட்டேன்.. உடனே குறிப்பெடுக்குறீகளே..?

//ஆமா இந்த படத்த பாத்ததே தப்பு இதில விமர்சனம் வேறெயா அதுலயும் 4 வரில எழுதாம 4 பக்கம் எழுதி இருக்கீங்க...//

'பாக்குறது தப்பு'ன்னு பாத்த உடனே பதிவு போட்டுச் சொல்ல வேண்டாமா?

நான் வேலை மெனக்கெட்டு பதிவு போட்டு அழுதப்புறம் வந்து சொல்றியேப்பூ..

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,
எனக்கு இராமயணம் கதை எல்லாம் ஏற்கனவே தெரியும், சும்மா உட்டாலக்கடியா ராமாயணத்தை மாத்திப்போட்டு சொல்லக்கூடாது, உண்மைல படத்தில இருந்த கதை என்னனு மீண்டும் சரியா படத்தை பார்த்துட்டு வந்து சொல்லுங்க :-))

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
உண்மைத்தமிழர்,
எனக்கு இராமயணம் கதை எல்லாம் ஏற்கனவே தெரியும், சும்மா உட்டாலக்கடியா ராமாயணத்தை மாத்திப்போட்டு சொல்லக்கூடாது, உண்மைல படத்தில இருந்த கதை என்னனு மீண்டும் சரியா படத்தை பார்த்துட்டு வந்து சொல்லுங்க :-))//

இன்னொரு தடவை பாக்கணுமா?

வவ்ஸ்.. இதுக்குத் தூக்குப் போட்டுத் தொங்கிரலாம்..

இது ராமாயணக் கதை மாதிரி தெரிஞ்சா டைரக்டர் மேல கேஸ் போடுங்க..

என்னை ஆளை விடுங்க சாமி..

குமரன் said...

நானும் இந்த பட டிரைலர் பார்த்து அசந்து பார்க்கலாம்னு நினைச்சுட்டுகிட்டு இருந்தேன்.

காப்பத்தீட்டீங்க! ரெம்ப டாங்க்ஸ்!

உண்மைத்தமிழன் said...

//நொந்தகுமாரன் said...
நானும் இந்த பட டிரைலர் பார்த்து அசந்து பார்க்கலாம்னு நினைச்சுட்டுகிட்டு இருந்தேன்.
காப்பத்தீட்டீங்க! ரெம்ப டாங்க்ஸ்!//

வாய்ல டாங்க்ஸ் சொல்லிட்டு அப்பால ஜல்தியா போய்க்கின்னே இருக்கக்கூடாது..

அடுத்த தபா மீட்டிங்குல பாக்கும்போது நாஸ்தாவோட, போண்டாவும் வாங்கிக் குடுத்திரணும்.. இப்ப அந்தக் காசு மிச்சம்தானே..

ரியோ said...

//இதுல கொடுமையிலும் கொடுமை தமிழ்ல வசனம் வேற..
“உங்கப்பா ஒரு கோழை.. அவருக்குப் பொறந்த நீயும் ஒரு கோழைதான்.. என்னை கோழைன்னு அவமானப்படுத்திட்டான்.. எப்படி தாங்குறது?
உனக்காக நான் இருக்கேன்.. நீ கவலைப்படாத..
அவளை நான் காப்பாத்தியே ஆகணும்.. முதல்ல உன்னை நீ காப்பாத்திக்க.. அப்புறமா அவள பாக்கலாம்..
அவுக சாதாரணமானவங்க இல்ல.. அழிக்கிறதுக்குன்னே பொறந்தவங்க.. அவுங்களை அழிக்கணும்னா நாம மூணு பேரால முடியாது.. முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமில்ல..
எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சு அவமானப்படுத்திட்ட இல்ல.. பின்னாடி நிச்சயமா வருத்தப்படுவ..
அவனை மறந்திரு.. அவன் நிழல்கூட இங்கபட முடியாது. உனக்காக நான் இருக்கேன்.. வா..”
ஐயோடா.. எனக்கு ஹாலிவுட் சினிமா பாக்குற ஆசையே விட்டுப் போச்சுடா சாமி..//

படமும் கதையும் மோசமாக இருக்கட்டும். இந்த தமிழ் வசனங்களில் என்ன கொடுமை? இதே வசனங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் கொடுமையில்லையா? தமிழில் இந்த வசனங்கள் உச்சரிக்கும்போது கொடுமையாகவும் ஆங்கிலத்தில் உச்சரித்தால் ஸ்டைலாகவும் உங்களுக்கு தோன்றுமா?????

abeer ahmed said...

See who owns thaiseoboard.com or any other website:
http://whois.domaintasks.com/thaiseoboard.com