Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

ஜெயலலிதா கைது படலமும்-சசிகலாவின் வலிப்பு நாடகமும்..!


13-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மீண்டும் காப்பி பேஸ்ட்டா என்று அயர்ச்சியடையாதீர்கள்..! இன்றைய இணையத்தள வரலாற்றில் எவையெல்லாம் அவசியம் பதிந்து வைக்கப்பட வேண்டுமோ அவைகள் இன்னமும் சரிவரச் செய்யப்படவில்லை என்றே கருதுகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன்பாக ஜெயலலிதா கைது செய்யப்பட்ட தேதியை தெரிந்து கொள்வதற்காக இணையத்தில் துழாவியபோது பெரும் ஏமாற்றமே கிடைத்தது..! தமிழில் 'ஜெயலலிதா கைது', 'கைது செய்யப்பட்டார்' என்றெல்லாம்  வேறு விதமாகவெல்லாம் தட்டச்சு செய்தும் கூகிளாண்டார் உண்மைத் தேதியை கண்ணில் காட்டவில்லை.

ஆனால் ஆங்கிலத்தில் 'Jayalalitha Arrested' என்று தட்டச்சு செய்தவுடன் வந்து கொட்டியது தகவல்கள்...! ஆங்கில பத்திரிகைககள்கூட பல தகவல்களை இணையத்தில் சேகரித்து வைத்திருக்கும்போது தமிழ்ப் பத்திரிகைகள் ஏன் இப்படி கஞ்சத்தனம் செய்கின்றன என்று தெரியவில்லை..!

நல்லவேளையாக சென்ற 4 இதழ்களுக்கு முன்பாக ஜூனியர்விகடனில் ஜெயலலிதா கைது பற்றிய பழைய செய்தியை, மீண்டும் பதிவு செய்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்கள். வாழ்க விகடனார்கள்..!

இந்தச் செய்தியைப் பதிவு செய்வதற்காகவும் கூடுதலாக சில தகவல்களைச் சொல்வதற்காகவுமே இந்தப் பதிவு..!

இனி ஜூனியர்விகடன்

தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்​பட்ட முதல் - முன்னாள் முதல்வர் இவர்தான்!

தான் கைது ஆவதைத் தடுத்து நிறுத்த, ஏழு விதமான முன் ஜாமீன் மனுக்களை அவர் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்​தார். அவை நிராகரிக்கப்பட்ட மறு நாள், 1996 டிசம்பர் 7-ம் தேதி சனிக்கிழமை காலை 8.05 மணிக்கு, போயஸ் தோட்டத்தில் அவரைக் கைது செய்ய போலீஸ் நுழைந்தது. டி.ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் தலைமையில் எட்டு போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அது.

அங்கே பி.ஹெச்.பாண்டியன் இருந்தார். கைது செய்வதற்கான சம்மன் அவரிடம் போலீஸாரால் தரப்பட்டது. பஞ்சாயத்து யூனியன்களுக்கு கலர் டி.வி-க்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்படுகிறார் என்பதை அறிந்தவுடன் பி.ஹெச்.பாண்டியன், போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார். ''முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்கிறோம்... அதற்குள் கைது செய்வதா?'' என்று அவர் எதிர்த்ததை, போலீஸ் ஏற்கவில்லை. காலை 9.05-க்கு ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

போயஸ் தோட்ட வாசலில் ஏராளமான நிருபர்கள் அதிகாலையில் இருந்து காத்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு. ''அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை இது!'' என்று நிருபர்களிடம் ஜெயலலிதா சொன்னபோது, அவர் கண்களில் நீர் திரையிட்டது. அப்போது அவர் மிகவும் சோகத்துடன் காணப்​பட்டார்.

போலீஸ் வண்டியான டயோட்டா வேனில், காலை 9.10 மணிக்கு கமிஷனர் ஆபீஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு - உளவுப் பிரிவு டெபுடி கமிஷனர் அறையில் அமரவைக்கப்பட்டார். பிறகு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி ராமமூர்த்தி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டபோது, மணி 11.05. அவரை டிசம்பர் 21-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் என்கிற அளவில் சுலோசனா சம்பத் மட்டுமே தென்பட்டார். ஜெயலலிதா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது நேரம்... காலை 11.45.

சிறைச்சாலை வாசலில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெருவாரியாகக் குழுமி இருந்தனர். அவர்களைப் பார்த்த ஜெயலலிதா உணர்ச்சிவயப்பட்டு, ''தி.மு.க. ஆட்சியின் இந்த அராஜகத்தைப்பற்றி மக்களிடம் போய் விளக்கிச் சொல்லுங்கள்...'' என்று பேசினார்.

ஆங்காங்கே தாங்கள் பார்த்த காட்சிகளை இதோ நிருபர்கள் தருகிறார்கள்...

ஜெயலலிதாவைக் கைது செய்யப் போவது எந்த போலீஸ், எந்த வழக்கில் என்பது பற்றி ஒரு போட்டியே இருந்தது. சி.பி.ஐ. 'நாங்கள்தான் கைது செய்யப் போகிறோம்’ என்று சொன்னது. கடைசியில் மாநிலக் குற்றப் புலனாய்வு போலீஸ் கைது செய்தது. கைது செய்தவர் - இதன் டி.ஐ.ஜி-யான ராதாகிருஷ்ணன். ஒரு விசேஷம் என்னவென்றால், இதே ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். காலத்தில் ஒரு வழக்கில் கலைஞரையும் கைது செய்தவர்!

ஜெயலலிதாவின் தலைமுடி மிகவும் நரைத்து இருந்தது. காபி கலரில், பூப்போட்ட புடவையும் அதே கலர் கோட்டும் அணிந்து இருந்தார். போலீஸ் தன்னை மறுநாள் கைது செய்யப் போகும் தகவல் வெள்ளி இரவு 11 மணிக்கே ஜெயலலிதாவுக்குத் தெரியும். காலையில் 5 மணிக்கே எழுந்து, குளித்துத் தயாராகக் காத்திருந்தார். அதிகாரிகள் வரும்வரையில் பூஜை செய்து இருக்கிறார். 'பூஜை முடியட்டும்’ என்று போலீஸார் சிறிது நேரம் காத்திருந்தனர். பிறகு வந்த ஜெயலலிதாவிடம் அதிகாரிகள் அவரைக் கைது செய்யப் போவதாகத் தெரிவித்தனர். எந்த வழக்கில் என்று கேட்டுத் தெரிந்து கொண்டவர், 'பத்து நிமிடங்கள் பொறுங்கள்’ என்று உள்ளே சென்று, தான் அணிந்திருந்த வைரக் கம்மல் உட்பட நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு வந்தார். வரும்போது வெறும் ஜூஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தாராம்.

ஜெயலலிதாவை போலீஸ் வேனில் ஏற்றியபோது, சமையல்காரி ராஜம்மாள் கதறி அழுதார். ராஜம்மாளை போயஸ் தோட்டத்தில் வேலைக்குச் சேர்த்தவர், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்!

ஜெயலலிதா போலீஸ் வண்டியில் ஏறிய​போது, தோட்டத்தில் இருந்த அத்தனை நாய்களும் பயங்கரமாகக் கத்தித் தீர்த்தன!

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்​தவுடன், ஜெயலலிதா சுதாரித்துக்​கொண்டு​விட்டார். புகைப்படக்காரர்களைப் பார்த்து முகத்தில் புன்னகை தவழவிட்டார். போலீஸ் டி.எஸ்.பி-யான சென்ராய பெருமாள் விசாரணை நடத்தினார்.

போலீஸ் கமிஷனர் ஆபீஸில் இருந்து ஜெயலலிதா அழைத்து வரப்பட்டபோது, நிருபர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னே வர - ஒரே கூச்சல், குழப்பம். ஒரு தனியார் டி.வி-யின் பெண் நிருபர் தடுமாறிக் கீழே விழ, 'தடதட’வென மற்ற நிருபர்களும் சரிந்து விழுந்தனர். அதைப் பார்த்த ஜெயலலிதா பதறிப்போய், அந்தப் பெண் நிருபரைத் தூக்கிவிட்டு, 'என்ன? அடி எதுவும் பட்டதா?’ என்று டென்ஷனுடன் விசாரித்துவிட்டு நகர்ந்தார்.

ஜெயலலிதா கைது படலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் வி.ஐ.பி. மரியாதை கொடுத்து போலீஸ் அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்கள் - சன் டிவி-க்காரர்கள்!
நீதிபதி வீட்டில்...

மிகச் சரியாக 11.05-க்குக் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள 'டவர் பிளாக்’ முன்பு ஜெயலலிதாவைக் கொண்டு வந்து இறக்கினார்கள் போலீஸார். எல்லோரும் இறங்கிய பின் இரண்டு மூன்று பெண் போலீஸ் புடைசூழ வேனைவிட்டு இறங்கினார் ஜெயலலிதா.

ஐந்தாறு நபர்களை மட்டும் ஜெயலலிதா உடன் செல்ல அனுமதித்தனர்.

கொஞ்ச நேரத்தில் கறுப்பு கவுன் சகிதம் பி.ஹெச்.பாண்டியன் வர, அவரை நீதிபதி வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். அவர் பின்னாலேயே சஃபாரியில் வந்த ஜீனசேனன், ''என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க? ரூல்ஸ் தெரியாதவன்கிட்ட உங்க வேலையைக் காட்டுங்க!'' என்று டென்ஷனுடன் கத்த... அவரையும் உள்ளே அனுப்பியது போலீஸ்.

நீதிபதி ராமமூர்த்தி முன்பு, ஜெயலலிதா சிலையாக நின்று இருந்தார். நீதிபதி சோபாவில் அமர்ந்திருந்தார். பி.ஹெச்.பாண்டியன்தான் வாதிட்டார். ஜெயலலிதா அவரிடம் சில பாயின்ட்டுகளை எடுத்துத் தந்தார். ''டி.வி. வாங்கியது முறையாக நடந்த ஒன்று. கேபினெட் கூட்ட முடிவுதான் அது. இந்தக் கைது, அரசியல் நோக்கம் உடையது!'' என்றார் பாண்டியன். ''அரசியல் பற்றி இங்கே பேச வேண்டாம். வழக்கு பற்றி பேசலாம்...'' என்றார் நீதிபதி. ஜெயலலிதா, 'ஊழல் எதுவும் நடக்கவில்லை’ என்று விளக்கினார். 'ஜெயிலில் தனக்குத் தகுந்த பாதுகாப்பு வேண்டும்’ என்றார் ஜெயலலிதா. 'அதற்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்றார் நீதிபதி!

ஏறத்தாழ 35 நிமிடங்கள் கழிந்த பின், எட்டாவது மாடியில் உள்ள நீதிபதி ராமமூர்த்​தியின் வீட்டில் இருந்து லிஃப்ட் மூலம் ஜெயலலிதாவைக் கீழே இறக்கிக் கொண்டு வந்து, போலீஸ் வேனுக்குள் ஏற்றினார்கள்.

கிராமங்களுக்கு 45,000 கலர் டி.வி. வாங்கியதில் எட்டரைக் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டுள்ளார் (இது பற்றி ஜூ.வி. 14.8.96 இதழில் முன்பே செய்தி வந்துள்ளது).

இந்த டி.வி-க்கள் முறையாக வாங்கப்படவில்லை​யாம். அப்போதைய நிதித் துறைச் செயலாளர் ஆட்சேபனை தெரிவித்திருந்தும், முதல்வராக இருந்த ஜெயலலிதா வலுக்கட்டாயமாக வாங்க உத்தரவு போட்டார் என்று குற்றச்சாட்டு.

டெய்ல் பீஸ்...

ஜெயலலிதாவைக் கைது செய்வது பற்றி தமிழக அரசு முதலில் எந்த முடிவுக்கும் வரவில்லை. கைது திடீரென்று நடந்தது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் ஆகியோரைத் திரும்பத் திரும்பத் தாக்கி ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, உடனே கைது செய்யக் காரணமாயிற்று என்கிறார்கள். இந்தக் கைது படலத்துக்குப் பிறகு போயஸ் கார்டனில் இரவுவரை ரெய்டும் நடந்தது.

- நமது நிருபர்கள்

சசிகலாவுக்கு வலிப்பு!      11.12.1996

ஜெ.ஜெ. டி.வி. மூலம் சசிகலா, அந்நியச் செலாவணி மோசடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயிலில் இருந்த அவரிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது, ரத்த அழுத்தமும் வலிப்பும் வந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சசிகலா. இதன் பிறகு, புதியதொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட, கடந்த 3-ம் தேதியன்று ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கோர்ட்டுக்கும் கொண்டுவரப்பட்டார்.

ஆனால், சசிகலாவின் உடல்நலக் கோளாறை, 'ஒரு புரியாத புதிர்’ என்றே வர்ணிக்கிறார்கள் டாக்டர்களும் மற்ற மருத்துவ ஊழியர்களும்!

அரசு பொது மருத்துவமனையில் உள்ள 'இன்டென்ஸிவ் கேர்’ யூனிட்டில் சசிகலா அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு இருந்த இந்த அறையில் சசிகலாவின் படுக்கை தனியாகவே இருந்தது. சசிகலாவுக்கு அருகில் பெண் வார்டன்கள் நான்கு பேர் நிறுத்தப்பட்டு இருந்தனர், வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள்! இவர்களுக்கிடையே சசிகலாவின் உறவினர்கள் ஏராளமான பேர் மருத்துவமனையில் வலம் வந்தபடி இருந்தனர். பெரும்பாலானோர் கைகளில் செல்​போன்!

சசிகலாவுக்காகவே ஐந்து ஹவுஸ் சர்ஜன்கள் தயாராக இருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சசிகலாவுக்குப் பரிசோதனை நடந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று ஓரளவு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. அதற்கான மருந்தைக் கொடுத்தவுடன் சசிகலா குணமாகி​விட்டார். ஆனால், அதன் பிறகு உணவு அருந்த மறுப்பதும், உட்காராமல் பிடிவாதம் செய்வதுமாக இருந்துள்ளார்.

அதனால் வேறு வழி இன்றி அவருக்கு குளு​கோஸ் ஏற்றியுள்ளனர். இருப்பினும், அவ்வப்​போது சசிகலாவுக்குக் கை - கால்கள் இழுத்தபடி இருக்க... அதற்கான காரணத்தைத் தேடினார்கள்.

முதலில் ரத்தப் பரிசோதனைகள். அதில் எதுவும் பிடிபட​வில்லை என்று தெரிந்ததும், 'மூளையில் ஏதாவது பிரச்னை இருந்தால்தான், இப்படி வரும்’ என்று நினைத்து, இ.இ.ஜி பரி​சோதனை செய்யப்பட்டது. அதிலும், 'எந்தக் கோளாறும் இல்லை’ என்று தெரியவந்தது.

சி.டி. ஸ்கேன் மூலம் 'மூளையில் ரத்தக் கட்டி இருக்குமா...?’ என்றும் சோதனை செய்ய... 'அப்படி எந்தக் கட்டியும் இல்லை’ எனத் தெரிந்தது. மனநல ரீதியாக உடல் பாதித்து இருந்தால், அதையும் கண்டறிய முடியும். ஆனால், அந்தச் சோதனை செய்யப் பொது மருத்துவமனையில் வசதி இல்லை. இதனால் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, எம்.ஆர்.ஐ. சோதனை செய்து பார்த்தனர். பிறகு, 'உடலில் ஏதாவது ரசாயன மாற்றம் ஏற்பட்டு இருக்குமோ..?’ என்று ‘Knee Hammer’ என்ற பரிசோதனையையும் செய்தனர். பிறகு இதயம், லிவர், கிட்னியைப் பரிசோதனை செய்ய, எல்லாமே நன்றாகவே இருந்துள்ளன!

இப்படி எல்லாமே சரியாக இருக்க, சசிகலாவுக்கு வலிப்பு வந்தது எப்படி என்று டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். மற்றொரு சோதனைதான் ஹைலைட். நோயாளியின் கால் பாதத்தில் 'ரிஸீமீமீ பிணீனீனீமீக்ஷீ’ என்ற கருவியைக் கொண்டு இழுக்கும்போது, காலின் பெருவிரல் விறைத்து நீட்டிக்கொண்டால், நோயாளிக்கு மூளையின் பாதிப்பால் வலிப்பு நோய் வந்து இருக்கிறது என்று அர்த்தமாம். ஆனால், இ.இ..ஜி. மூலம் மூளையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெளிவான பிறகு, இந்தச் சோதனையின்போது மட்டும் சசிகலாவின் கால் பெருவிரலில் விறைப்பு ஏற்பட்டது கண்டு டாக்டர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

'ஏன் இப்படி இருக்கிறது? முரண்பட்ட வலிப்பு நோயாக இருக்கிறதே என்று டாக்டர்கள் மத்தியில் பேச்சு! இருந்தாலும், 'ஹார்லிக்ஸ் வேண்டுமா..? போர்ன்விட்டா வேண்டுமா..?’ என்று சசிகலாவுக்கு கொடுத்த உபசரணைகள், ஜெயலலிதாவின் ஆட்சிதான் வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது!

சென்னை மனநல மருத்துவமனை டாக்டர்கள் பாஷ்யம் உட்பட நான்கு பேர் வந்து சசிகலாவை பார்த்தனர் அப்போது சசிகலா தனக்கு 12 வயதிலும் பிறகு 18 மாதங்​களுக்கு முன்பும் இதே போன்று வலிப்பு வந்ததாகக் கூறியுள்ளார். பிறகு உயர் மட்ட கமிட்டி முடிவின்படி, கடந்த 5-ம் தேதி மாலை 4 மணிக்கு மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டார் சசிகலா.

- கண்பத்

நன்றி : ஜூனியர்விகடன்

இனி நான்..

ஜெயலலிதா கைதினைவிடவும் சசிகலாவின் கைது விஷயமும், அவர் மருத்துவமனையில் நோயாளி போல் டிராமா போட்டு தப்பித்ததுதாம்தான் அன்றைய பத்திரிகையுலகில் ஹாட் டாபிக்..!

சசிகலா மீது முதலில் அன்னியச் செலாவணி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்காக சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருந்த அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அவரை ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினார்கள் அதிகாரிகள்.

இந்த நோட்டீஸை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்வரைக்கும் சென்றார் சசிகலா. ஆனால் பலனில்லை. நேரில்  ஆஜராகத்தான் வேண்டும் என்று தீர்ப்பளித்தது சுப்ரீம் கோர்ட். ஒரு நாள் ஆஜராவதற்காக சாஸ்திரி பவனுக்குள் காலடி எடுத்து வைத்தார் சசிகலா. அவரோடு தடி, தடியான எருமை மாடு மாதிரியான வாட்ட சாட்டமான அடியாட்களும் வந்திருந்தார்கள். இவர்களுக்கு கேப்டன் தினகரன், சுதாகரன், பாஸ்கரன்களின் தங்கை கணவரான ரிசர்வ் வங்கி பாஸ்கரன்..!

இவர்களது முக்கியப் பணி சசிகலாவை புகைப்படம் எடுக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்பதுதான். இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் என்றால், சசிகலாவைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு வேண்டுமென்றே சுற்றி சுற்றி நடந்தபடியே ஹாலுக்குள் வந்தார்கள். அவர்களை மீறி புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர்களைத் தடுக்கும்பொருட்டு வேண்டுமென்றே அவர்கள் மீது விழுந்து எழுந்தார்கள். பின்னர் தங்களது இரண்டு கைகளை விரித்து மறைத்துக் கொண்டார்கள். தங்களது பூட்ஸ் கால்களால் வேண்டுமென்றே புகைப்படக்காரர்களை உதைத்தார்கள். மிதித்தார்கள். இவர்களது இந்தக் கொடூரத்தையும் தாண்டித்தான் அன்றைய தினம் பத்திரிகையாளர்கள் சசிகலாவை புகைப்படம் எடுக்க முடிந்தது..!

அப்போது நான் வேலை பார்த்த தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அலுவலகம் சாஸ்திரி பவன் அருகிலேயே இருந்ததாலும், அப்போது அந்தப் பத்திரிகையில் வேலை பார்த்ததால், ஒரு ஆர்வக் கோளாறில் இதையெல்லாம் பார்க்கப் போய்தான் சசிகலா அண்ட் கோ- எந்த அளவுக்குக் கொடூரமானவர்கள் என்பதை நேரிலேயே காண முடிந்தது.

சசிகலா தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாட்கள் அங்கு வந்தார் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்புதான் அவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் உடனேயே மயக்கம் வருவதைப் போல் விழுந்துவிட ஸ்ட்ரெச்சரில் அலுங்காமல், குலுங்காமல் அவரை கொண்டு சென்றவிதத்தையும், செத்த பொணம் போல் அவர் படுத்திருந்து ஆக்ட்டிங் கொடுத்ததையும் பார்த்து அப்போதைய பத்திரிகையுலகம் நடிப்பில் சாவித்திரியை மிஞ்சிவிட்டார் சசிகலா என்றே எழுதினார்கள்.. இது உண்மையும்கூட..!


1987, டிசம்பர் 24-ல் என்ன நடந்தது..?

17-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1987, டிசம்பர் 24-ம் நாள்.. தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரான நாள். அ.தி.மு.கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் என்றில்லாமல் அவருடைய ரசிகர் கண்மணிகளும், பொதுவான தமிழகத்து மக்களும் எம்.ஜி.ஆர். என்ற எளிய மனிதருக்காக கண்ணீர்விட்டு அழுத காட்சி தமிழகத்தை உலுக்கியது..!


அன்றைக்கு என்ன நடந்தது என்று இப்போதும் அறிந்து கொள்ளத் துடிக்கும் இன்றைய வாசகர்களுக்காக ஜூனியர்விகடன் இதழ் எம்.ஜி.ஆர். அமரரான நாள் முதல் இன்றுவரையில் நடந்த சில முக்கிய அரசியல் நிகழ்வுகளை தொடர் கட்டுரையாக எழுதத் துவங்கியிருக்கிறது.

இதில் முதல் பாகம் இது : படித்துப் பாருங்கள்..! தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களையும் நான் இங்கே வெளியிடுகிறேன்..!

கடந்த வியாழக்கிழமை அதிகாலை சுமார் 5 மணி இருக்கும்... சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வரும் ஜனாதிபதியும் கலந்து கொள்ளும் 'எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழா’வுக்குச் சவுக்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்துக் கொண்டு இருந்தனர் ஊழியர்கள். அவர்களை நோக்கி விரைந்து வந்தது ஒரு போலீஸ் வேன்...

''வேலைகளை அப்படியே நிறுத்திட்டு எல்லோ​ரும் ராஜாஜி மண்டபத்துக்குக் கிளம்புங்க...'' என்று அதிகாரிகள் உத்தரவிட,  'சரி, விழா நடக்கும் இடத்தை மாற்றிவிட்டார்களாக்கும்...’ என்று ஒரு லாரியில் ஏறி அவர்கள் ராஜாஜி மண்டபம் வந்து சேருவதற்கும், அந்த சோகச் செய்தியைக் கேள்விப்பட்டு  நாமும் அங்கு போய் நிற்பதற்கும் சரியாய் இருந்தது!

போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், ராஜாஜி மண்டபப் படிக்கட்டுகளுக்கு எதிரே ஆணி அடித்து, கயிறுகளைக் கட்டி, தடுப்புகள் அமைக்க 'மார்க்’ செய்துகொண்டு இருந்தனர். வந்த ஊழியர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் திகைத்து நின்றனர். சற்று நேரத்தில் ஊர் விழித்துக்கொண்டது.

'முதல்வரின் உடல், ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது’ என்று கேள்விப்​பட்ட சிலர், அவசர அவசரமாக ஓடி வர, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் போலீஸ் நிறுத்தப்​பட்டது. எம்.எல்.ஏ. ஹாஸ்டல் பக்கம் இருந்து சத்தமான குரலெடுத்து, ''யப்பா...  யப்பா..!'' என்று கதறிக்கொண்டு முதலில் ஓடி வந்தார்  அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. பஞ்சவர்ணம். மக்கள் கடலின் முதல் அலைகூட வந்து சேராத நேரம். கொஞ்ச நேரம்தான்!

ஒரு கட்டடம் சரிவதுபோல் 'டமார்’ என்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பயங்கர அலறல்... இரைச்சல்... தூரத்தில் ஒரு நுழைவாயிலின் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் அலறியடித்துக் கொண்டு  ஓடி வந்தனர்.

சில போலீஸ் அதிகாரிகள், ''இன்னும் இங்கு முதலமைச்சரைக் கொண்டு வரவில்லை, கொண்டு​ வரவில்லை...'' என்று கத்தினார்கள். எதையும் காதில் வாங்காமல் விரைந்து வந்த கூட்டம், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மண்டபத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.

மிகக் குறைந்த எண்ணிக்​கையில் நின்ற போலீஸார், கண நேரத்தில் ஓரமாய் விலகிக் கொண்டனர். படிக்​கட்டின் மேலே இருந்து பார்க்கும்போது, மனிதத் தலைகளால் ஒரு புயல் கிளம்பி வருவதுபோல் இருந்தது. வந்தவர்கள், ராஜாஜி மண்டபத்தின் முன் வாசல் வழியாக மேலே ஏறிக் கதவுகளை முட்டி மோதித் திறந்தனர்.

உள்ளே முதல்வரின் உடல் இன்னும் வைக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னும், ஒவ்வொரு திசைக்கும் அழுதபடி, ''எங்கே... எங்கே எங்க தெய்வம்?'' என்று ஓடித் தேடினர். ராஜாஜி மண்டபத்தை ஒரு சுற்றுச் சுற்றிய பின்னர், ''ஐயோ, காணோமே... காணோமே...'' என்று அரற்றியபடி அவ்வளவு பேரும் அவர்களாகவே கீழே இறங்கிவிட்டனர்.

ராஜாஜி மண்டபத்தின் படிக்கட்டிலும், சுற்று வழியிலும் ரத்தச் சுவடுகளாகக் காலடித் தடங்கள் ஆங்காங்கே இருந்தன. தடுப்புகள் அமைக்க இடம் குறிப்பதற்காகத் தரையில் அடித்துவைக்கப்பட்டு இருந்த ஆணிகளின் மேல் மிதித்து, பலருடைய பாதங்கள் கிழிந்து, கொட்டிய ரத்தம் திட்டுத்திட்டாய்க் கிடந்தது.

ராஜாஜி மண்டபத்தின் எதிரே இருந்த பரந்த மைதானத்தில் நின்றவர்களை போலீஸார் நயந்து ஓரம் கட்டிய பின், சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் வேலை தொடர்ந்தது. அப்போதுதான் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சௌந்தரராஜன், டி.ராமசாமி ஆகிய மூவரும் ஏற்பாடுகளைக் கவனிக்க வந்து சேர்ந்தனர்.

முதல்வர் உடல் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது. பிரதமர் வரும் வரை ராஜாஜி மண்டபத்தின் உள்ளே மேடை மீது வைக்க முதலில் முடிவானது. உடலை வைக்கும் இடம் பற்றி அமைச்சர்களிடம் ஓர் அதிகாரி விளக்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ''மேடையில் வேண்டாம்... ஹாலிலேயே இருக்கட்டும்!'' என்றார். பெரிய மேஜை ஒன்று இழுத்து வரப்பட்டு மண்டபத்தின் நடுவில் போடப்பட்டது.


கறுப்பு கலர் உடையில், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் முன்னால் வந்தார் ஜெயலலிதா. கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பில் இருந்தன. அவரை அடுத்து ஓர் அடி தூர இடைவெளியில் இணையாக ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் வந்தனர்.

பூட்டியிருந்த ராஜாஜி மண்டபத்தின் பக்கவாட்டுக் கதவுகள் வழியாக அவர்களுடன் சேர்ந்து நுழைந்தபோது, உள்ளே... சில விநாடிகளுக்கு முன் பின் வாசல் வழியாகக் கொண்டுவந்து கிடத்தப்பட்ட முதல்வரின் உடலை, மண்டபத்தின் நடுவில் இருந்த மேஜை மீது ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து இருந்தனர். வழக்கமான அவர் உடை... தூங்கிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டார் முதல்வர். வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத் துணியால் கட்டப்பட்டு இருந்தது. முகத்தில் அதே பொலிவு... நாசித் துவாரங்களில் கொஞ்சம் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது. அது தவிர, எந்த மாற்றமும் தெரியவில்லை.  வலது கையில் கட்டப்பட்டு இருந்த பெரிய கறுப்பு டயல் கைக்கடிகாரம் மட்டும் காலை 8.45 - ஐத் தாண்டி இயங்கிக்கொண்டு இருந்தது!

சில நிமிடங்கள்வரை மண்டபத்துக்குள் மலர் மாலைகூட வந்து சேரவில்லை. மிகுந்த நிசப்தம் நிலவியது. முதல்வரை அந்தக் கோலத்தில் பார்க்க சகிக்க முடியாமல் அமைச்சர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் வாய்விட்டு அழுதனர். முதல்வரின் அருகே இடது பக்கமாக, அவரது வளர்ப்பு மகன் அப்பு. அவரையடுத்து சத்யா ஸ்டூடியோ பத்மநாபன்.  கே.ஏ.கே. நெருங்கி வந்து, பத்மநாபனின் தோள்களை இறுகப் பிடித்ததும், வாய்விட்டுக் கதறினார்கள் பத்மநாபனும் அப்புவும்.

ஜெயலலிதா வந்ததும்... சற்று நேரம் அப்படியே முதல்வரை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது. வாய்விட்டு அழாமல் இறுக்கமாக அவர் தலைமாட்டுக்குச் சென்று நின்று​ கொண்டு, யாருடைய முகத்தையும் பாராமல், எதிரே உயரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றார் ஜெயலலிதா. அவரது கைகள், முதல்வரை வைத்திருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றி இருந்தன. ஜெயலலிதாவுக்கு எதிராய் முதல்வரின் கால்மாட்டில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார்.

முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பின்னும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்​படும் சரிவான மேடை, தயாரித்து முடியவில்லை. அப்​போதும் மாலை, பூக்கள் மண்டபத்துக்குள் வந்து சேரவில்லை.

தலைமாட்டில் நின்ற ஜெயலலிதா, முதல்வர் முகத்தையே உற்றுப் பார்ப்பதும், பின்னர் எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தார். தன் கர்ச்சீப்பால் முதல்வரின் முகத்தை அடிக்கடி சரி செய்து​கொண்டு இருந்தார்.

ராமாவரம் தோட்டத்தில் இருந்து வந்திருந்த முதல​மைச்சரின் உறவினர்கள், மண்டபத்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தனர். சற்று நேரத்துக்குள் ஒவ்வொருவராக முண்டியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்துக்குள் நுழையவும், நெரிசல் அதிகமானது. ஓர் அதிகாரி ஓடி வந்து அமைச்சர்களிடம், ''கூட்டம் கூடுகிறது, இந்த ஹால் தாங்காது...'' என்று முறையிட்டார்.

அதற்குள் பொதுமக்கள் பார்வைக்கான மேடை தயாராகிவிட்ட தகவல் கிடைத்தது. முதல்வர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி அமைச்சர்கள் சூழ்ந்து மெள்ளத் தூக்கினர். ஜெயலலிதாவும் நின்ற இடத்திலிருந்தே ஸ்ட்ரெச்சரின் தலைப் பகுதியை ஏந்திப் பிடிக்க, பொதுமக்கள் பார்வையிட சரிவான மேடையில் கிடத்தினார்கள். ஜெயலலிதா அங்கும் முதல்வரின் தலைமாட்டிலேயே நின்றார்.


முதல்வரின் உடலைப் பார்த்ததும், வெளியே காத்திருந்த கூட்டம் கொந்தளித்தது. ஆண்களும் பெண்களும் வாயில் அடித்துக்கொண்டு அலறினர். இரண்டு பெண்கள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிய, காவலர்கள் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அழுகையும் கூக்குரலும் ஒரே இரைச்சலாய் இருந்தது.

வெள்ளை நிற பேன்ட் சட்டையில் இருந்த ஓர் இளைஞர், போலீஸ் தடுப்பை மீறி உள்ளே வர முயற்சித்தார். அது முடியாமல் போகவே, கிடத்தப்பட்டு இருந்த முதல்வரின் உடலைக் கீழே நின்றபடி சில நொடிகள் அண்ணாந்து பார்த்துவிட்டு, தடுப்புக் கட்டைகளின்மேல் தன் நெற்றியால் மாறி மாறி முட்டிக் கொண்டார். நெற்றி பிளந்து அவருடைய மார்புப் பகுதி வரை ரத்தம் பீறிட்டது. அதையும் பொருட்படுத்தாமல், கைகளை நீட்டி, ''தலைவா,! போயிட்டியா... நீ போயிட்டியா...'' என்று கதறியபடி மீண்டும் முன்னேற முயன்றார். அவரைத் தடுத்த காவலர்களின் காக்கி யூனிஃபார்மிலும் ரத்தக் கறை படிந்தது.

- தொடரும்!

நன்றி : ஜூனியர்விகடன்-20-04-2011

சென்சஸ் - 2011 - சில புள்ளி விபரங்கள்..!

07-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய சில புள்ளிவிவரங்கள் இது.. 

வழக்கம்போல இணையத் தகவல்களை சேமிப்பு வைப்பதற்காக மட்டுமே..!

 இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது.

உலக மக்கள் தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதமாகும்.

இது இந்தியாவின் 15-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும், இந்தக் கணக்கெடுப்பு இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை நடத்தப்பட்டது.

பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தாண்டு பிப்., 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு செலவான தொகை 2,200 கோடி ரூபாய். கணக்கெடுக்கும் பணியில் மொத்தம் 27 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக மொத்தம் 8,000 டன் பேப்பர் செலவிடப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின் சில முக்கியத் தகவல்கள் இங்கே :

* கடந்த பத்தாண்டுகளில்(2001 - 2011) மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது. அது, 2011-ம் ஆண்டு, 17.64 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும்போது தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது.

* இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. இது உலக மக்கள் தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய நாடுகளின் மக்கள் தொகை முழுவதையும் கூட்டினால், அதைவிட அதிகமாக நமது நாட்டின் மக்கள் தொகை உள்ளது.

* ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.

* ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக் குறைவான விகிதமாகும்.

* மக்கள் தொகையில், 7 வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதவீதம். படிக்காதவர்கள் 26 சதவீதம்.

* 2001-ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதமாக இருந்தது, 2011-ம் ஆண்டில் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மட்டும் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


* 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். இது, 2011-ம் ஆண்டு 65.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு எழுத, படிக்க தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 சதவீதமாக இருந்தது. இது, 2011-ம் ஆண்டு, 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

* மாநிலங்களில் அதிகம் எழுத, படிக்க தெரிந்தவர்கள் கேரளாவில் உள்ளனர். இங்கு 93.91 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். குறைவான எண்ணிக்கை உள்ள மாநிலம் பீகார். இங்கு 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.

* மிகக் குறைவான மக்கள் தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.

* உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களின் மக்கள் தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

* அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.

* மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.

* உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்கள்: மகாராஷ்டிரா- 11 கோடியே 23 லட்சம், பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மாவட்ட வாரியாக மக்கள் தொகை விவரங்கள் வருமாறு :-

1.திருவள்ளூர்-27,54,756 - 37,25,697

2.சென்னை-43,43,645 - 44,81,087

3.காஞ்சீபுரம்-28,77,468 - 39,90,897

4.வேலூர்-34,77,317 - 39,28,106

5.தர்மபுரி-12,95,182 - 15,02,900

6.கிருஷ்ணகிரி-15,61,118 - 18,83,731

7.திருவண்ணாமலை-21,86,125 - 24,68,965

8.விழுப்புரம்-29,60,373 - 34,63,284

9.சேலம்-30,16,346 - 34,80,008

10.நாமக்கல்-14,93,462 - 17,21,179

11.ஈரோடு-20,16,582 - 22,59,608

12.நீலகிரி-7,62,141 - 7,35,071

13.கோவை-29,16,620 - 34,72,578

14.திருப்பூர்-19,20,154 - 24,71,222

15.திண்டுக்கல்-19,23,014 - 21,61,367

16.கரூர்-9,35,686 - 10,76,588

17.திருச்சி-24,18,366 - 27,13,858

18.பெரம்பலூர்-4,93,646 - 5,64,511

19.அரியலூர்-6,95,524 - 7,52,481

20.கடலூர்-22,85,395 - 26,00,880

21.நாகப்பட்டினம்-14,88,839 - 16,14,069

22.திருவாரூர்-11,69,474 - 12,68,094

23.தஞ்சாவூர்-22,16,138 - 24,02,781

24.புதுக்கோட்டை-14,59,601 - 16,18,725

25.சிவகங்கை-11,55,356 - 13,41,250

26.மதுரை-25,78,201 - 30,41,038

27.தேனி-10,93,950 - 12,43,684

28.விருதுநகர்-17,51,301 - 19,43,309

29.ராமநாதபுரம்-11,87,604 - 13,37,560

30.தூத்துக்குடி-15,92,769 - 17,38,376

31.திருநெல்வேலி-27,03,492 - 30,72,880

32.கன்னியாகுமரி-16,76,034 - 18,63,174.

கலைஞரின் தந்திரத்தில் சிக்கியிருக்கும் காங்கிரஸ்..!

15-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சோனியாவின் தயவால் 63 தொகுதிகளை விடாப்பிடியாகப் பெற்றுக் கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியினரால் கலைஞரிடமிருந்து அவர்களுக்கேற்ற தொகுதிகளைப் பெறுவதற்குள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது..!

தமிழக காங்கிரஸ் கட்சியில் தனிப்பெரும் தலைவர்கள் பட்டியலில் வாசன், சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ற மூன்று பேர்தான் இதுவரையில் இருந்தனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பதால் தங்கபாலு தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்தார். அதுவரையில் வாசன் கோஷ்டியில் இருந்து ஒரு சிலர் பிரிந்து தங்கபாலுவின் பின்னால் போய்விட்டனர். சிதம்பரம் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்த மாத்திரத்திலேயே தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பித்தவர் மாதர் குல மாணிக்கம் ஜெயந்தி நடராஜன்.

சிதம்பரம் என்றாலே  ஜெயந்திக்கு இன்றுவரையிலும் எட்டிக் காய்..! இன்றைய தேதி வரையிலும் ஜெயந்தியின் கோஷ்டியில் இருக்கும் பெயர் சொல்லும்படியான ஒரேயொருவர் மதுராந்தகம் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி மட்டும்தான். தன் வீட்டு வாசல்படிவரையில் ஒரு தொண்டனைக் கூட நிற்க விடாத அளவுக்கு தொண்டர்களிடத்தில் நெருக்கம் காட்டும் ஜெயந்திக்கு இப்படியொரு மகளிரணி பிரமுகர் கிடைத்ததே பெரிய விஷயம்தான்.

தன்னுடைய பிறந்த நாளுக்காக போஸ்டர் அடித்து சென்னை முழுக்க தனது பெயரை பிரபலப்படுத்திய ஒரே காரணத்திற்காக 2006 சட்டசபைத் தேர்தலில் தனது கோட்டாவில் காயத்ரிதேவியை மதுராந்தகத்தில் நிற்க சீட் வாங்கிக் கொடுத்தார் ஜெயந்தி.

இளங்கோவன் அண்ணாச்சிக்கு இன்றுவரையிலும் தமிழகம் முழுவதும் பரவலாக தொண்டர்கள் செல்வாக்கும், தலைவர்கள் ஆதரவும் உண்டு. வெட்டு ஒன்று.. துண்டு இரண்டாக காமராஜர் காலத்து காங்கிரஸை நோக்கி தமிழக காங்கிரஸை லேசாக நகர்த்திய பெருமை இவரையே சாரும். ஆனாலும் இன்றைய கூட்டணி அரசுக்கு இவருடைய பேச்சுக்கள் தினம்தோறும் தலைவலியைக் கூட்டித் தந்ததால் அவசரத்துக்கு மட்டுமே பயன்படக்கூடிய தலைவராக இப்போதும் அக்கட்சியின் தலைமைப் பீடத்தால் கவனிக்கப்படுகிறார்.

தமிழ் மாநில காங்கிரஸை, அகில இந்திய காங்கிரஸுடன் கடலில் கரைத்த பெருங்காயமாக கரைத்துவிட்ட பாவத்திற்காக ஜி.கே.வாசனை எப்படி வேண்டுமானாலும் திட்டித் தீர்க்கலாம். அந்தக் கட்சி இப்போதும் தனித்தே நின்றிருந்தால் இன்றைக்கு விஜய்காந்துக்கே இத்தனை மவுசு வந்திருக்காது.. கட்சியின் சொத்துக்களையும், உடனடி பதவிகளையும் அடைய வேண்டிய கட்சியினரின் வற்புறுத்தலினாலும் த.மா.கா.வை தாய்க் கட்சியுடன் இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வாசனுக்கு..!

இப்படி ஜல்லிக்கட்டு விளையாடும் இந்தத் தலைவர்களுக்கிடையில் சிதம்பரத்திற்கு முன்பு நெருக்கமாக இருந்தவர்கள் புரசைவாக்கம் ரங்கநாதன், மற்றும் காட்டுமன்னார்கோவில் வள்ளல்பெருமான் ஆகியோர்தான். இதில் ரங்கநாதன் தி.மு.க.வில் சேர்ந்து எம்.எல்.ஏ.வும் ஆகிவிட்டார். வள்ளல்பெருமான் மட்டுமே பாக்கி..! இப்போதைக்கு சிதம்பரம் தலையசைத்தால் சீட்டு கிடைக்கும் என்பதால் அவரது கோஷ்டியில் சில முன்னாள்களும், இன்னாள் எம்.எல்.ஏ.க்களும் இணைந்துள்ளார்கள்.

மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் தங்கபாலுவின் தற்போதைய ஒரேயொரு லட்சியமே தனது மனைவியை ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி எம்.எல்.ஏ.வாக்கிவிட வேண்டும் என்பதுதான்.

சென்ற தேர்தலிலேயே அதற்கான முஸ்தீபுகளை செய்து பார்த்தார். ஆனால் இளங்கோவன் அப்போது நடந்த நெல்லை பொதுக்கூட்டத்தில் “அப்படியொன்று நடந்தால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்..” என்று போட்ட போட்டில் கடைசி நேரத்தில் இளங்கோவனை பகைத்துக் கொள்ள விரும்பாமல் குலாம்நபி ஆசாத் அதற்கு தடை போட்டுவிட்டார். ஆனால் இப்போது துணிந்து தனது மனைவிக்காகவே ஒரு தொகுதியை கேட்டுத் தொங்கிக் கொண்டிருக்கிறார் தங்கபாலு..!

இப்படி ஆளுக்கொரு கெரகங்களாக இருக்கும் நிலையில் இளங்கோவனைத் தவிர மற்றவர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொகுதிகளை அடையாளம் காணும் குழுவில் செயல்பட்டுள்ளார்கள்.


இருக்கின்ற 63 தொகுதிகளில் வாசன் கோஷ்டிக்கு 17, சிதம்பரம் கோஷ்டிக்கு 16, தங்கபாலு அணிக்கு 12, இளங்கோவன் அணிக்கு 4, ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜெயக்குமார் அணிக்கு தலா 2, இவர்கள் தவிர மிச்சம் இருக்கின்ற 10-ம் இளைஞர் காங்கிரஸுக்கு என்று பிரிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

ராகுல்காந்தியின் நேரடி கண் பார்வையில் இருப்பதால் இளைஞர் காங்கிரஸாருக்கான தேர்வில் மற்றவர்கள் தலையிட முடியாது என்றாலும் அவர்களுக்கேற்ற தொகுதிகளை கண்டறிந்து கொடுப்பதில் இவர்களது பங்கு முக்கியமானதுதான்..!

இந்தப் பேச்சுவார்த்தையின்போது துவக்கத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதிகளை அப்படியே திருப்பித் தருகிறோம் என்று உறுதியளித்தது தி.மு.க. மிச்சம், மீதியிருக்கும் தொகுதிகளிலும், மறு சீரமைப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொகுதிகளில் இருந்து காங்கிரஸுக்கு தேவையானவற்றை ஒதுக்குவதிலும்தான் பெரும் சிக்கல்..!

ஆனால் இவர்களது சிக்கலைவிடவும் தி.மு.க. தலைமை ஏற்படுத்திய சிக்கல்தான் மிகவும் தந்திரமானது. காங்கிரஸுடன் பேசுவதற்கு முன்பாகவே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கட்சிகளுடன் பேசி அவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை கையில் வைத்துக் கொண்டுதான் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

கூடவே, தனது கட்சியின் நேர்காணலையும் கச்சிதமாகத் தொடர்ந்து நடத்தியபடியே இருந்த கலைஞர், தாங்கள் நிற்கவிருக்கும் தொகுதிகளுக்குத் தோதான ஆட்கள் கிடைக்கின்றவரையில் பேச்சுவார்த்தையின் வெற்றியை ஒத்திப் போட்டுக் கொண்டே போய்விட்டார்.

காங்கிரஸூக்கான ஒதுக்கீட்டில் பிரச்சினையான 15 தொகுதிகளைப் பற்றிப் பேச்செடுத்தபோதுதான் விடுதலைச் சிறுத்தைகள்., பாமக, முஸ்லீம் லீக் என்று இவைகளின் விருப்பப் பட்டியலும் காண்பிக்கப்பட்டு வேண்டாமே என்று இழுத்திருக்கிறார்கள். அவர்கள் கேட்பார்கள். கேட்டால் கொடுத்திரணுமா என்று நாம் கேட்கலாம். ஆனால் காங்கிரஸ் சார்பில் பேசிய அடிமைகள் அப்படி கேட்டிருக்க மாட்டார்கள்..!

ராதாபுரம், திருத்தணி, மாதவரம், ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் போன்ற காங்கிரஸ் பெல்ட் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் பிரதிநிதிகள் கேட்கவே இல்லை என்று இளங்கோவன் நேற்று குற்றம்சாட்டியுள்ளார். வாசனும், சிதம்பரமும் முயற்சி செய்து கேட்ட சில தொகுதிகளை குழுவில் இருந்த தங்கபாலு வற்புறுத்தவில்லை என்று அறைக்குள் நடந்ததை அம்பலப்படுத்தியிருக்கிறார் இளங்கோவன்.

இருக்கின்ற ஐந்து பேரில் நிச்சயம் வாசன் தரப்பில் இருந்துதான் இந்தத் தகவல் இளங்கோவனுக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் சமீப காலமாக வாசனுடன் இளங்கோவன் கொஞ்சம் நெருக்கம் காட்டி வருகிறார். தற்போதைய சட்டசபைத் தேர்தலில் இளங்கோவன், தனது கோட்டாவை கூட வாசன் தரப்பே நிரப்பிக் கொள்ளலாம் என்று ஏதோ மறைமுகமான அக்ரிமெண்ட் போட்டிருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் பேசப்படுகிறது..!


இப்படி அவரவர் ஆதரவாளர்களுக்காகவே ஒரு சில தொகுதிகளை விடாப்பிடியாக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டதையே சாக்காக வைத்து பேச்சுவார்த்தையை இழுத்தடித்திருக்கிறது தி.மு.க.

இடையிலேயே சரத்குமாரை இரவோடு இரவாக பதவி நீக்கம் செய்து உதவியதற்காக என்.ஆர்.தனபாலனுக்கு ஒரு சீட்டு என்று ஒதுக்கீடு செய்து வைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸுக்கு செக் வைத்திருக்கிறது.

இறுதிக் கட்டத்தில் விரும்பியோ, விரும்பாமலோ காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் தி.மு.க. கொடுக்க விரும்பிய தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் தலையில் கட்டப்பட்டிருக்கின்றன என்பது மட்டும் உறுதி. நாளை பட்டியல் வெளியானால் எல்லாம் தெரிந்துவிடும்..!

தங்களுக்குச் செல்வாக்கில்லாத தொகுதிகளினால், தோற்கப் போகிறோம் என்று தெரிந்தும் மேலிடம் கொடுக்கும் தேர்தல் செலவுக்கான பணத்தில் கொஞ்சம் அபேஸ் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் காங்கிரஸ்காரர்களும் இத்தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்க பார்க்கலாம். ஆனால் தோற்கவே வேண்டும்..!

கூட்டணியில் இருந்து விலகுகிறேன் என்று அஸ்திரத்தை வீசியும் அசைந்து காட்டாத சோனியாவின் மீதிருக்கும் கோபத்தில், கலைஞர் செய்திருக்கும் இந்த உள்குத்து, அப்படியே தேர்தலில் எதிரொலித்து இந்தக் கூட்டணிக்கு பஞ்சரை ஏற்படுத்தினால் தமிழ்நாட்டுக்கும், நமக்கும் மிக மிக நல்லதுதான்..!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த அமைச்சர் சுரேஷ்ராஜன்..!

09-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தேர்தல் கமிஷன் வானளாவிய அதிகாரம் படைத்தது என்பதை முதன்முதலில் நிரூபித்துக் காட்டிய டி.என்.சேஷனை இந்தச் சமயத்தில் நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்..!

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கைக் காண்பிக்க வேண்டும் என்கிற விதிமுறையின் காரணமாகத்தான் தற்போதைக்கு ஒரளவுக்காகவாவது அரசியல்வியாதிகளின் நேரடி கொள்ளை கொஞ்சம் நிறுத்தப்பட்டு பினாமி பெயரில் சொத்து சேகரிக்க மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்..!

தேர்தலின்போது அரசியல்வியாதிகள் சமர்ப்பிக்கும் சொத்துக் கணக்கிற்கும், அடுத்தத் தேர்தலின்போது சமர்ப்பிக்கப்படும் சொத்துக் கணக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடே அவர்களை கொள்ளையர்களாக இனம் காட்டிவிடுகிறது. இந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு முதன்முதலில்  அகில இந்திய ரீதியில் மிகவும் பிரபலமானவர் நமது ஆத்தா ஜெயலலிதாதான்.

அவருக்குப் பின்பு இன்றுவரையிலும் பலரும் மாட்டினாலும் சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தித் தப்பிக்க வழியெடுத்துக் கொடுக்கும் ஆடிட்டர்களும், வழக்கறிஞர்களும் இருக்கின்றவரையில் இவர்களை சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிரூபிப்பது மிகவும் கடினம்தான்..!

சமீபத்தில் கனிமொழிகூட தனது எம்.பி. தேர்தலின் வேட்புமனு தாக்கலின்போது சமர்ப்பித்த சொத்துப் பட்டியலில் தான் கலைஞர் டிவியில் இயக்குநராக இருந்ததையும், அதில் தனக்கு பங்குகள் இருந்ததையும் குறிப்பிடாதது கண்டறியப்பட்டு சர்ச்சையாகியுள்ளது. இது பற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தத் தேர்தல் கமிஷனிடம் புகார் சொல்லி என்னவாகப் போகிறது என்றே தெரியவில்லை. ஒரு வேட்பாளர் இரண்டிற்கு மேற்பட்ட தொகுதிகளில் நிற்கவே கூடாது என்கிற மிக முக்கிய விதிமுறையைத் தெரிந்து வைத்துக் கொண்டும் நான்கு தொகுதிகளில் அசாத்திய தைரியத்துடன் நின்று காட்டிய ஜெயலலிதாவின் மீதே இதுவரையில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதற்கா எடுக்கப் போகிறார்கள்..? எனக்கு நம்பிக்கையில்லை..

அமைச்சர் சுரேஷ்ராஜன் முதல்முறையாக 1997-2001 திமுக ஆட்சிக் காலத்தில்தான் அமைச்சராகப் பணியாற்றினார். அமைச்சராக இருந்தபோதுதான் இவருக்குத் திருமணமானது என்பதும் எனக்கும் நினைவிருக்கிறது..! அப்போதுதான் கன்னியாகுமரி மாவட்ட அரசியலிலும் இவரது பெயரை நான் கேள்விப்பட்டிருந்தேன்.

 
இப்போது அமைச்சர் சுரேஷ்ராஜன் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தேர்தல் கமிஷன் முன்பு தாக்கல் செய்த சொத்துக்கள் பட்டியலையும் தாண்டி, கடந்த ஐந்தாண்டுகளில் நியாயமான முறையில் சம்பாதித்திருக்கும் வருமானத்தையும் மீறி அமோக விளைச்சலை அறுவடை செய்திருக்கிறார் என்று அவர் மீது ஒரு புதிய  புகார் எழுந்துள்ளது.

இது பற்றி சென்ற வார ஜூனியர்விகடன் பத்திரிகையில் வெளி வந்த செய்தியை முதலில் படித்துவிடுங்கள்..!

'தமிழக சுற்றுலா மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் வருமானத்துக்கும் மேலாகக் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்தி​ருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது. இந்த விவரங்களை கவர்னருக்கும், சி.பி.ஐ-க்கும் தெரியப்படுத்திவிட்டேன். எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்​படலாம்...’ - இப்படி ஒரு தகவலை நமது ஆக்ஷன் செல்லில் (044 4289 0005) சொல்லி இருந்தார்,  நாகர்​கோவிலைச் சேர்ந்த வாசகர் ஒருவர்.

 வாசகர் தகவல் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டோம். கிரினி​வாச பிரசாத் என்பவர் பேசி​னார். ''சார், நான் ஒரு வக்கீல். நாகர்​கோவிலில் 'மனித உரிமைக்கான இலவச சட்ட உதவி மைய’த்தை நடத்திட்டு வர்றேன். சமீபகாலமாக, குமரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் அமைச்சர் சுரேஷ்ராஜனின் பெயரைச் சொல்லிக்​கிட்டு பலர், இடங்களை வாங்கிக் குவிப்பதாகக் கேள்விப்​பட்டேன். அதனால் அவரோட சொத்து விவரம் பற்றி விவரங்​களைச் சேகரிச்சேன். அப்பதான் அதிர்ச்சியான தகவல்கள் கொட்​டுச்சு...'' என்றவர் தொடர்ந்தார்..

''கடந்த 2006 தேர்தலில் போட்​டியிட்ட சுரேஷ்ராஜன் தன்னோட சொத்துக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருக்கார். அவர் பெயரில் 7 லட்சம், மனைவி பாரதி பெயரில் 15 லட்சமும், மகன் நீலதமிழரசன், மகள் பூமாலை பெயரில் சுமார் 2 லட்சம் மதிப்பிலும் சொத்து மற்றும் ரொக்கம் இருப்பதாக தெரிவிச்சிருக்கார். அதாவது ஐந்து வருஷங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தோட மொத்த சொத்து மதிப்பு சுமார் 24 லட்சம் மட்டுமே. அதே சுரேஷ்ராஜன் அமைச்சரானதும் சொத்து மதிப்பு பல கோடியா மாறிடுச்சு.

மூணு வருஷங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் தங்க நாற்கர சாலைக்கு அருகில் எட்டு ஏக்கர் நிலம் சுரேஷ்ராஜனின் மனைவியான பாரதி பெயரில் வாங்கப்பட்டு இருக்கு. இதன் சந்தை மதிப்பு பல கோடி. ஆனால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைவான விலைக்கு பத்திரப் பதிவு செஞ்சு, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பணகுடி சப்-ரெஜிஸ்டர் அலுவல​கத்தில் பத்திரப் பதிவு செஞ்சப்ப, தவறான முகவரி, தகவல்களைத் தந்திருக்காங்க. பாரதியின் கணவர் பெயராக சுரேஷ்ராஜன் என்று போட்டால் வெளியே தெரிஞ்சுடும்னு என்.எஸ்.ராஜன்னு போட்டி​ருக்காங்க.


 
இது தவிர, பழவூரில் 'என்.எஸ்.ஆர். ஸ்டீல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ பெயரில் பெரிய உருக்கு ஆலையை நிறுவி இருக்கிறார். இதன் மதிப்பும் 100 கோடியைத் தாண்டும். இந்த கம்பெனி தொடங்கவும் அரசிடம் இருந்து முன் அனுமதி எதுவும் வாங்கியதா தெரியலை. இந்த ஆலையில் கடந்த நவம்பர் மாதம் கலால் துறை அதிகாரிங்க அதிரடியாக சோதனை நடத்தினாங்க. அப்போ, அரசுக்கு முறையாக கலால் வரி செலுத்தாமல் 64 லட்சத்தை வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிச்சாங்க. சில ஆவணங்களில், பாரதி தன்னை உருக்கு ஆலையின் மேலாண்மை இயக்குநர் என்றும் வேறு சில ஆவணங்களில் கம்பெனிப் பிரதிநிதி என்றும் தவறான தகவல்களைக் கொடுத்திருக்காங்க.

குமரி மாவட்டம் கோணம் என்ற இடத்தில் தொடங்கப்பட்ட ஃபிஷ் நெட் கம்பெனியும் சுரேஷ்ராஜனுக்குச் சொந்த​மானது. வேறொருவரின் பெயரில் இந்த கம்பெனி செயல்​பட்டாலும், அதில் சுரேஷ்ராஜனின் மனைவி பாரதி நிர்வாக இயக்கு​நராக இருப்பதால், பினாமி பெயரில் இந்த கம்பெனி நடக்கிறதோ என சந்தேகம் ஏற்படுது...'' என்றவர், ''அமைச்சரா இருப்பதன் மூலம் சுரேஷ்ராஜனின் மாத வருமானம் 47 ஆயிரம் மட்டும்தான். அப்படியிருக்க... ஐந்து வருடங்களுக்கு முன்பு, தேர்தல் கமிஷனிடம் தன்னுடைய சொத்து மதிப்பை 24 லட்சம்னு காட்டிய சுரேஷ்ராஜனின் தற்போதைய சொத்து மதிப்பு 500 கோடியைத் தாண்டி இருப்பது எப்படி? இந்த விவரங்களை கவர்னருக்கு தெரியப்படுத்தி அவர் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டி​ருக்கேன். அத்துடன் சி.பி.ஐ., விஜிலென்ஸுக்கும் ஆதாரங்களை இணைத்து புகார் அனுப்பி இருக்கேன். நடவடிக்கை எடுக்கல்லேன்னா கோர்ட்டுக்குப் போகத் திட்டமிட்டு இருக்கேன்...'' என்றார் சூடாக.

இது குறித்து அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் விளக்கம் கேட்டோம். ''ஏற்கெனவே, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி என் பெயரைக் கெடுக்க முயற்சி செய்தார். அந்த மோசடி நபர் மீது மானநஷ்ட வழக்குப் போட்டு இருக்கிறேன். இப்போது வேறு யாரோ அதே மாதிரியான குற்றச்சாட்டுகளை சொல்வதாகச் சொல்கிறீர்கள். இந்த புகார்களில் துளியும் உண்மை கிடையாது. எனது குடும்பத்தினரின் சொத்துகள் அனைத்தும் முறையாக உழைத்து சம்பாதித்தது. முறைப்படி வருமான வரி கட்டுகிறோம். சுய விளம்பரத்துக்காக சிலர் இது மாதிரி புகார்களை கிளப்பி விடுகிறார்கள். எனது சொத்துபற்றி யாராவது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன்!'' என்றார் காட்டத்துடன்.

மடியில் கனம் இல்லை என்றால், விவரமாக பதில் சொல்லலாமே!

நன்றி : ஜூனியர்விகடன்

இனி நான்..!

பழவூர் ஸ்டீல் நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு கலால் துறையினர் வரிச் சோதனை நடத்தியபோது அது தனது ஆலை இல்லை என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் மறுக்கவில்லை. எல்லாம் முறையாகத்தான் நடக்கிறது. அதிகாரிகள் சாதாரணமான விசாரணைக்காகத்தான் வந்து சென்றார்கள் என்று பதிலளித்திருந்தார்.

இது மாதிரியான ஸ்டீல் நிறுவனம் ஒன்று, சென்ற வாரம் திருச்சியருகே திறக்கப்பட்டுள்ளது. அதன் மொத்த மூலதனச் செலவு 300 கோடி என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தார்கள். அந்த வகையில் சுரேஷ் ராஜனின் இந்த ஸ்டீல் நிறுவனமும் சுமாராக 100 கோடி ரூபாயைத் தொட்டிருக்கும்.. இது குறைந்த உற்பத்தி சார்ந்த நிறுவனம் என்கிறார்கள்.

மடியில் கனமில்லை என்பவர்கள் எதற்காக பெயரைச் சுருக்கி பதிவு செய்ய வேண்டும்..? மாண்புமிகு அமைச்சர் சுரேஷ்ராஜன் என்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டு வாசலில் மட்டும் போர்டு தொங்குகிறதே.. இதிலும் சுருக்க வேண்டியதுதானே..? நேர்மையிருப்பின் சொந்தப் பெயரிலேயே சொத்துக்களை பதிவு செய்திருப்பார்களே..? எதற்கு இந்தப் பயம்..? இதுவே சந்தேகத்தைக் கிளப்புகிறதே..?

மத்தியில் ஆட்சி நடத்தும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது எதற்காக உதவுகிறதோ இல்லையோ, கொள்ளையடித்ததை சேப்டியாக பாதுகாக்கவும், சட்டப்படியான வரவுகளாகப் பதிவு செய்யவும் நிச்சயமாக உதவுகிறது.

வருமான வரித்துறை என்கிற ஒரு துறை மத்தியில் ஆளும் கட்சியினரையும், அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியினரையும் அதிகம் கண்டு கொள்வதில்லை. அவர்கள் கேட்பதுபோல், விரும்புவதுபோல் சர்டிபிகேட்டை தந்துவிட்டால் போதும், நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்டை தூக்கிக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்..!

இவ்வளவு தொகை கொடுத்து ஆலையைத் துவக்குகிறார்களே..? இத்தனை லட்சம் ரூபாய் கொடுத்து நிலத்தை வாங்குகிறார்களே..? எங்கேயிருந்து வந்தது பணம்? எப்படி வந்தது பணம்..? இது போன்ற கேள்விகளையெல்லாம் கட்சி சார்பற்று நேர்மையாக உழைத்து சம்பாதித்த இந்தியர்களிடம் தோண்டித் துருவிக் கேட்கும் வருமான வரித்துறை, சுரேஷ்ராஜன் போன்ற அரசியல்வியாதிகளிடம் மட்டும் மண்டியிட்டு கண்டும், காணாததுபோல போய்விடுகிறார்கள்..!

இந்த ஆட்சியில் இவர் மட்டுமல்ல.. அனைத்து அமைச்சர்களுமே இன்றைக்கு நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிட்டதுதான் உண்மை. வரும் தேர்தலில் இவர்கள் தோற்றால்கூட இவர்களது 5 தலைமுறைகள் நிச்சயமாக பிழைத்துக் கொள்வார்கள்..!

ஆகவே வாக்காளப் பெருங்குடி மக்களே..! இந்த முறை வாக்களிக்கும்போது சிந்தித்து செயல்படுங்கள்..! இந்த சுரேஷ்ராஜன் மீண்டும் வாக்கு கேட்டு வந்தால் இதுவரையில் சம்பாதித்த கணக்கை தவறாமல் கேளுங்கள்...! அந்தக் கணக்கு காந்தி கணக்காக இருந்தாலும் சரி.. மொய்க் கணக்காக இருந்தாலும் சரி.. உங்களது வாக்குக் கணக்கை மறக்காமல் எதிர் ஓட்டுக்களாக குத்தி உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்..!

இதைவிடவும் வேறொரு சிறந்த வழி உங்களுக்கு இனிமேல் கிடைக்காது..!