முன்னோடி - சினிமா விமர்சனம்

02-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
தெலுங்கில் தற்போது வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.  நகைச்சுவை நடிகராக நிரஞ்சன்  அறிமுகமாகியுள்ளார்.
‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த பாவல் நவநீதன் இருவரும்  வில்லன்களாக நடித்துள்ளனர்.  இவர்களுடன்  ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினு க்ருதிக் ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி. இசை – கே.பிரபு ஷங்கர். படத் தொகுப்பு – என்.சுதா. நடனம் – ஏபி.சந்தோஷ். சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி. எழுத்து, இயக்கம் – எஸ்.பி.டி.ஏ.குமார்  இயக்கியுள்ளார்.

ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ, அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ, தாழ்வாகவோ அமையும். ‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
இன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை. அது நமக்குத் தெரியவரும்போது உறவுகள் நம்முடன் இருப்பதில்லை. இதைத்தான் இந்தப் படம் பேசியிருக்கிறது.
ஹீரோ ஹரீஷ் வீட்டுக்கு மூத்தப் பையன். இவருடைய 2 வயதிலேயே தந்தையை இழந்தவர். தந்தையின் மரணத்திற்குப் பிறகு இவருக்கு ஒரு தம்பி பிறக்கிறார். ஆனால் சின்ன வயதில் இருந்தே தம்பி மீது ஒரு வெறுப்பு. அம்மாவைக் கஷ்டப்படுத்தினான் என்ற அர்த்தமற்ற கோபம் ஹரீஷுக்குள் பெரிய வெறுப்பை ஏற்படுத்திவிட்டது.
அதே சமயம் தம்பிக்கோ பிறப்பில் இருந்தே ஒரு அரிய நோய். இதயம் பலஹீனமான நிலையில் இருக்கிறான் தம்பி. அதிர்ச்சியாகும் செய்திகளையும், சம்பவங்களையும் தாங்கவே முடியாது என்கிறார் மருத்துவர். இதனால் தம்பியை கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து வருகிறார் அம்மா சித்தாரா.
வளர்ந்து பெரியவனான பின்பும் வீட்டுக்கு அடங்காமல் திரிகிறார் ஹரீஷ். மந்திரமூர்த்தி என்னும் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளரின் அன்புத் தம்பியாக இருக்கிறார். மந்திர மூர்த்திக்கு அடிமை போல வாழ்கிறார். தம்பியோ இப்போதுதான் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நேரத்தில் ஹரீஷ் ஹீரோயின் யாமினியை தெருவில் பார்க்கிறார். வழக்கம்போல பார்த்தவுடன் காதல் வருகிறது. அவர் பின்னாலேயே போய் விசாரிக்க, விசாரிக்க.. அவரும் தன்னுடைய தம்பியும் ஒரே வகுப்பில் படித்து வருவது தெரிகிறது. தம்பியை பார்க்கப் போகும் சாக்கில் யாமினியை சந்திக்கிறார் ஹீரோ. யாமினிக்கும் இது புரியாமல் இல்லை. ஆனால் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்.
இந்த நேரத்தில் தொகுதியில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் கால சிறப்பு துணை கமிஷனராக ஷிஜாய் வர்கீஸ் பொறுப்பேற்கிறார். அவருக்கு மந்திர மூர்த்தி பற்றி தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, மந்திரமூர்த்தியின் வீடு தேடி வந்து எச்சரிக்க செய்துவிட்டுப் போகிறார்.
பழைய பகையை மனதில் வைத்து மந்திரமூர்த்தியின் பழைய எதிரியொருவன் ஆட்களை அனுப்பி மந்திரமூர்த்தியை கொலை செய்ய முயல்கிறான். ஆனால் வந்தவர்களையே கொலை செய்கிறார் மந்திரமூர்த்தி. இந்தக் கொலை வழக்கை விசாரிக்கிறார் துணை கமிஷனர் ஷிஜாய். துப்புக் கிடைக்கவில்லை. வழக்கும் லோக்கல் ஸ்டேஷனில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு செல்கிறது.
மந்திரமூர்த்தியின் மைத்துனரான பாவேலுக்கும், ஹரீஷுக்கும் இடையில் ஈகோ பிரச்சினை தலையெடுக்கிறது. ஹரீஷ் மந்திரமூர்த்தியின் வீட்டில் வளைய வருவது பாவேலுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஹரீஷை எப்படியாவது மந்திரமூர்த்தியிடமிருந்து பிரித்துவிட எத்தனிக்கிறார் பாவேல்.
மந்திரமூர்த்தியிடம் நல்ல பெயர் எடுக்க நினைக்கும் பாவேல் மந்திரமூர்த்தியிடம் சொல்லாமலேயே அவருடைய நீண்ட நாள் எதிரியை திருநெல்வேலிக்கே தனது கூலிப்படையை அனுப்பி தீர்த்துக் கட்டுகிறார்.
தான் காதலிக்கும் ஹீரோயின் தனது தம்பியை விரும்புவதாகச் செய்தி வர கோபம் கொள்ளும் ஹீரோ தம்பியை கொலை செய்ய போகும்போது காதலியும், தம்பியும் பேசிக் கொள்வதை கேட்க நேரிடுகிறது. தம்பி தன் மீது வைத்திருக்கும் உண்மையான பாசத்தை உணரும் அண்ணன் ஹரீஷ், தம்பியை புரிந்து கொள்கிறார். அம்மாவுடன் இணக்கமாகிறார். பாசமான, பொறுப்பான அண்ணனாகிறார்.
இந்த நேரத்தில்தான் திடீரென்று ஹரீஷின் தம்பி கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது மந்திரமூர்த்தியின் மைத்துனர் பாவேல்தான் என்று நினைக்கும் ஹரீஷ் பாவேலை கொலை செய்ய முயல்கிறார். அதே நேரம் தன்னைப் பற்றிய ரகசியங்களை போலீஸுக்கு போட்டுக் கொடுப்பது ஹீரோதான் என்று நினைக்கும் மந்திரமூர்த்தி ஹீரோவைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார்.
இவர்கள் இருவரில் யார் நினைத்தது நடந்தது என்பதுதான் மிச்சம் மீதியான கதை.
ஹீரோ ஹரீஷ், துணை கமிஷனர் ஷிஜாய், மந்திரமூர்த்தியாக நடித்த அர்ஜூனா, இவரது மைத்துனரான பாவேல் என்று இந்த டீம்தான் பலவித நடிப்பைக் காட்டியிருக்கின்றன.
ஹரீஷுக்கு அழுத்தமான வேடம். அம்மாவை புரிந்து கொள்ளாமல் பேசுவது.. தம்பியை திட்டுவது.. மந்திரமூர்த்திக்காக எதிலும் அவசரப்படுவது என்று பல வில்லன் கேரக்டர்களையும் கலந்து கட்டி அடித்தவர் பிற்பாதியில் அப்படியே உல்டாவாகி நல்லவனாகி காட்டும் நடிப்பு ஜோர்..!
கிளைமாக்ஸில் மந்திரமூர்த்தி மீதான பாசத்திலேயே “ஒரு நிமிஷம்ண்ணே” என்று டைம் கேட்டுக் கொண்டே வருவதும், அடி வாங்குவதும்.. கடைசியில், அந்தப் பிரச்சினையை பேசி முடிப்பதும் ஹீரோ என்பதையெல்லாம் மறக்கடித்து கதையின் நாயகனாகவே தென்பட்டிருக்கிறார் ஹரீஷ். வாழ்த்துகள்.
கொஞ்சம் அதிகப்படியான ஆக்சன்களை காட்டியிருந்தாலும் துணை கமிஷனராக நடித்திருக்கும் ஷிஜாய் கொஞ்சம் பதற வைத்திருக்கிறார். இப்படி எப்போதும் விறைப்பாக இருக்கும் போலீஸ் கமிஷனரை தேடித்தான் பிடிக்க வேண்டும் என்றாலும், இவருக்காக போடப்பட்டிருக்கும் பில்டப்புகளும், பின்னணி இசையும் கொஞ்சம் ஓவர்தான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
மந்திரமூர்த்தியாக நடித்திருக்கும் அர்ஜூனாவுக்கு நல்ல கேரக்டர். ஹீரோவுக்கும், பாவேலுக்குமான இடைவெளியை குறைக்க முயற்சியெடுத்து அது பலனளிக்காமல்… தன் உயிரைக் காப்பாற்றிய காரணத்துக்காக மைத்துனன் பாவேலின் பேச்சை நம்பி திசை மாறும் கேரக்டர்தான் என்றாலும் அதற்கு தப்பேயில்லாமல் நடித்திருக்கிறார்.
இவரது மைத்துனராக நடித்திருக்கும் பாவேலின் ஒரிஜினல் வில்லத்தனம் அருமை. அவ்வப்போது வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதை போல ஹரீஷ் பற்றி, பற்ற வைப்பதும்.. சாதி, பணம், குடும்பம் இதை முன் வைத்து இவர் பேசும் வசனங்களும் அசல் வில்லன் இவர்தான் என்பதைக் காட்டுகிறது. நல்ல நடிப்பு ஸார்.. நல்லா வருவீங்க..!
நீண்ட இடை வெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று நடித்துள்ளார். படம் முழுக்க வரும் நல்ல பாத்திரம் அவருக்கு. நிறைவாகவே செய்திருக்கிறார். ஹீரோயினாக யாமினி பாஸ்கர். சுமாரான முகம். தமிழுக்கு புதுமுகம் என்பதால் நிறையவே டப்பிங் தவறுகள். இருப்பினும் நடிப்புக்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லாததால் வந்த காட்சிகளில் நிறைவைத் தந்திருக்கிறார். அவ்வளவே..!
ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள்.. ஹீரோவின் தம்பியாக நடித்தவர்.. உளவுத்துறை இன்ஸ்பெக்டராக நடித்தவர் என்று பலரும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இயக்குநருக்கு இது முதல் படம் என்றாலும், யாரிடமும் இதுவரையிலும் இயக்குதல் பணியாற்றாமல் நேரடியாக படத்தை இயக்கியிருப்பதாலும் சில, பல தவறுகள் இருந்தாலும் அதையெல்லாம் மன்னிப்போமாக..!
அப்படியிருந்தும் திரைக்கதையிலும், காட்சியமைப்பிலும் சில, பல இடங்களில் சபாஷ் போட வைத்திருக்கிறார். திருநெல்வேலியில் மந்திரமூர்த்தியின் எதிரியை அந்த விடியற்காலை பொழுதில் ரவுடிகள் போட்டுத் தள்ளும் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் அழகு.. அதேபோல் இவரது தம்பியை யார் கொலை செய்தது என்கிற உண்மை வெளியாகும் காட்சியும், கிளைமாக்ஸ் சண்டையும் சூப்பர்ப் என்றே சொல்ல வேண்டும்.
போலீஸ் ஒவ்வொரு வழக்கையும் எப்படி கூர்மையாக துப்பறிந்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதற்காக இயக்குநர் அமைத்திருக்கும் கிளைமாக்ஸ் திரைக்கதைக் காட்சியும், அதனை படமாக்கியவிதமும்கூட பரபரப்பாகவே அமைந்திருக்கிறது..!
படத்திற்கு இசை பிரபு சங்கர். இவர் குறும்பட உலகில் பிரபலமானவர் மட்டுமல்ல; கலைஞர் டிவியின் நாளைய இயக்குநர்களில் டைட்டில் வென்ற இசையமைப்பாளர். படத்தில் நான்கு  பாடல்கள். ஒரு பாடலை முழுக்க, முழுக்க கிராபிக்சில் ஆறு மாதங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளனர். பாடல் காட்சிகளும், ஆடும் நடனமும், பாடலும், இசையும் மிகச் சிறப்புதான்..! ஆனால் பின்னணி இசைதான்.. அந்தக் கால இசை போல காட்சிகளுக்கு பொருந்தா கூட்டணியாக இருக்கிறது..!
வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகளையெல்லாம் மிக அழகாகவே சுட்டிருக்கிறார்கள். கோவில் சண்டை காட்சியையும், திருநெல்வேலி படுகொலைக் காட்சியையும் படமாக்கியவிதத்திலேயே இந்த ஒளிப்பதிவாளரின் திறமை பளிச்சிடுகிறது..! அதேபோல் அந்த கிராபிக்ஸ் பாடல் காட்சி.. சிம்ப்ளி சூப்பர் ஸார்..!
கிராபிக்ஸ் பாடல் காட்சியில் ஆடும் நடனம் அழகோ அழகு என்று சொல்ல்லாம். இந்த வருடத்தில் இதுவரையிலும் வெளிவந்த பாடல் காட்சிகளின் நடனத்தில், இந்த நடனம்தான் பெஸ்ட் என்று உறுதியாகச் சொல்லலாம்..!
குடும்பப் பாசத்தை முன் வைத்தும், வன்முறை எதிர்ப்பை முன் வைத்தும் இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார். இந்த நல்ல விஷயத்துக்காகவே இவருக்கு ஒரு பூச்செண்டினை வழங்கலாம்..!
முன்னோடி – பார்க்கலாம்..!

0 comments: