பெய்யெனப் பெய்யும் குருதி - சினிமா விமர்சனம்

11-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

லயன் ஹண்டர்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதுமுக இயக்குநரான சுதாகர் சண்முகம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது.
இந்தப் படத்தில் 50 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஜனா, சீனிவாசன், ஹரீஷ், ராபின், கணேசன், ஜி உள்ளிட்ட 50 பேர் நடித்துள்ளனர். இதில் ஒரு பெண் கதாபாத்திரம்கூட இல்லை என்பது புதுமை.
ஒளிப்பதிவு – சீனிவாசன், கணேஷ் பாபு, இசை – ஜோஸ் பிராங்ளின், பாடல் – சுதாகர் சண்முகம், படத் தொகுப்பு – ஜோமின் மேத்யூ, பாடகர் – அஜிலால். எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – சுதாகர் சண்முகம்.
படத்தின் நாயகன் வெறும் 15 நொடிகள் மட்டுமே திரையில் தோன்றியிருக்கிறார். அதேபோல் படத்தின் வில்லனும் இறுதியில் நான்கு நிமிடங்கள் மட்டுமே திரையில் தெரிகிறார்.
தமிழ்ச் சினிமாவின் எல்லா இலக்கணத்தையும் அடியோடு புறக்கணித்துவிட்டு வந்திருக்கும், இந்தப் படம் சென்சாரில் ஒரு கட் கூட இல்லாமல் ‘யு’ சர்டிபிகேட் பெற்றிருப்பதுகூட ஆச்சரியம்தான்..!

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதி. தமிழகத்தின் மிக முக்கியமான கட்சியின் செயற்குழு கூட்டம் அன்று காலை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் திடீரென்று சில மர்ம நபர்கள் புகுந்து கிட்டத்தட்ட 40 பேரை படுகொலை செய்கிறார்கள். கொலை செய்த கையோடு இறந்தவர்களின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதுபோல அவர்களது இதயத்தை மட்டும் கத்தரித்து எடுத்துச் சென்று ஆற்றில் வீசிவிட்டுப் போகிறார்கள். 
தமிழகமே அதிரும் இந்தச் சம்பவம் ஆளும் கட்சியின் சதி என்று எதிர்க்கட்சிகள் சொல்ல.. அவர்களைச் சமாளிக்க வேண்டி உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடுகிறது அரசு. உள்துறை அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறார். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவரையே தொடர்ந்து பணியாற்றும்படி சொல்கிறார் முதல்வர்.
காவல்துறையின் உயரதிகாரி உள்துறை அமைச்சரை சந்தித்து இது குறித்து விளக்கமளிக்கிறார். இப்போது தங்களது பிடியில் 5 பேர் இருப்பதாகவும்.. சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பிடித்திருப்பதாகவும் அவர்களிடத்தில் விசாரித்த பின்பு அவர்களைப் பற்றிய தகவலை வெளியில் சொல்லவிருப்பதாகவும் அதிகாரி சொல்கிறார்.
உள்துறை அமைச்சர் இதற்கு ஒத்துக் கொள்ள.. போலீஸ் பிடித்து வைத்துள்ள 5 பேரிடம் விசாரணை நடத்துகிறது.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான விஷயங்களைச் சொல்கிறார்கள். அனைவருடைய வாக்குமூலத்திலும் பாதிக்குப் பாதி ஒத்துப் போகிறது. மீதி ஒத்துப் போகாமல் இருக்கிறது. ஆனால் இந்த 5 பேர் இல்லாமல் கூடுதலாக இவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களும் குற்றவாளியை இரு வேறு ஆளாக காட்டுகிறது. காவல்துறை குழப்பமாகிறது.
இறுதியில் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா இல்லையா..? ஏன் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றது என்பதற்கான விளக்கமெல்லாம் முழு படத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இயக்குநர் புதுமுகம் என்பது கதை தேர்வு, திரைக்கதையாக்கத்தில் புலனாகிறது. ஆனால் இயக்கத்தை மட்டும் செவ்வனே செய்திருக்கிறார்.
என்னதான் இயக்கம் சிறப்பானதாக இருந்தாலும் கதையும், திரைக்கதையும் ரசிகர்களை கவரவில்லை என்றால் படம் எடுபடாது என்பது தெரிந்த விஷயம். இதுதான் இந்தப் படத்திற்கும் நடந்திருக்கிறது.
புதுமுக நடிகர்கள் 50 பேரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அதில் ஒருவர்கூட சோடை போகவில்லை. மிக, மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். கேமிராவின் கோணங்கள்கூட புதியதுதான். அதிகமாக அலட்டிக் கொள்ளாமல், கஷ்டப்படாமல் மிக எளிய பட்ஜெட்டில் படத்தை முடித்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.
ஒளிப்பதிவின் தரம் குறைவு என்பது இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும் ஒளிப்பதிவு பளீச்சென இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை திரையிடும் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஓரளவேனும் திருப்தி வரும். இந்தப் படம் அதிலும் ஏமாற்றத்தையே தருகிறது.
ஒரு கொலை சம்பவம்.. செய்தவர்களை கண்டறியும் துப்பறியும் வேலை.. காவல்துறையின் விசாரணை.. விசாரணை நடத்தும்விதம்.. இதையெல்லாம் காலம், காலமாக நமது பொது புத்தியில் ஒரு சிந்தனையை உருவாக்கி வைத்திருக்கிறது தமிழ்ச் சினிமாவுலகம். அது எதுவுமே இல்லாமல் இந்தப் படத்தில் ஒரு காமெடி போல காட்சியமைத்திருப்பதுதான் கொடுமை.
அரசியலில் இருந்து ரவுடியிஸம் செய்யும் வில்லன் கொல்லப்பட வேண்டியவன்தான் என்பதை உணர்த்தவே பல காட்சிகள் இருக்கின்றன. இதனால் கொலை செய்யப்படுவது சரியானதுதான் என்று நினைத்தாலும், செய்தவனுக்கும் அவனுக்குமான பிரச்சனை இங்கே பிரதானப்படுத்தப்படவில்லை என்பதால் கொலை என்பதுகூட சாதாரணமானதாகிவிட்டது.
அதிலும் இந்த விசாரணை களத்தின் நீளம் அதிகமாக இருப்பதும் இன்னொரு பெரிய குறை. ஒவ்வொரு விசாரணையாளுக்கும் குறைந்தபட்ச நேரமே ஒதுக்கி சந்தேகம் வரும் காட்சிகளை படமாக்கியிருக்கலாம். எல்லாவற்றையும் அவர்கள் வாயாலேயே சொல்லிவிட்டு போவது படம் பார்க்கும் ரசிகனுக்குள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாது..!
குற்றவாளி தற்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் அணுகியவிதம்.. அவர்களிடத்தில் பணத்தைக் கொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவிதம்.. எலியைப் பிடித்துக் கொடுத்தால் காசு என்று சொல்லி அந்த எலியின் இதயத்தை அறுத்துப் பார்க்கும் அளவுக்கு கொடூரமானவன் என்று இவர்கள் மூலமாகவே காவல்துறைக்கு தெரிவிக்கும்விதம் என்று சிலவற்றில் இயக்குநரின் திறமை தெரிந்தாலும் அது விழலுக்கு இழைத்த நீராகிவிட்டது..!
முடிவில் குற்றவாளியை எந்தவித பில்டப்பும் இல்லாமல் அமைதியாகக் காட்டிவிட்டு சட்டென விலகி வேறு காட்சிகளுக்குள் நுழைந்து முடித்திருப்பது யதார்த்தமல்ல.. கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு வாசற்கதவு போடாமல் விடுவது போல..!
சினிமா என்பதே கொஞ்சம் மேல் பூச்சு, கீழ் பூச்சு தேவையானது. அதில் கேரக்டர்களுக்கான அழுத்தம் இருந்தால் மட்டுமே, அவர்கள் செய்யும் செயல்களும் இங்கே கதைகளாகும்..!
படு கொடூரமான கொலைகள் என்றாலும், கொலைச் சம்பவத்தைக் காட்டாமல், ரத்தத் தெறி்ப்பு இல்லாமலும்,  இதயத்தை தோண்டி எடுப்பது போன்ற சில்லுண்டி வேலைகளும் இல்லாமலும் அதையெல்லாம் வெறும் வசனத்திலேயே வைத்து ஜம்ப்பாகியிருக்கும் இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
‘கலிங்கத்துப் பரணி’யின் போர்ப் புகழ் பாடல்களை சில இடங்களில் இணைத்திருக்கிறார் இயக்குநர். டைட்டிலிலும் அந்தப் பாடல் வரிகள் தென்படுகின்றன. முதன்முறையாய் இதனை ஸ்கிரீனில் பார்க்கிறோம். இதற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..!
குத்துப் பாடல்கள், சண்டை காட்சிகள், ஆபாச வசனங்கள் இவையில்லாமல் இருந்தாலே அது நல்ல படம் என்று அர்த்தமில்லை. இப்படியில்லாமல் இருந்தாலும் அந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும் ரசிகனை கவரும்வகையில் இருந்தாக வேண்டும் என்பதுதான் கட்டாயம்..! 
இயக்குநர் சுதாகர் சண்முகம் அடுத்த படத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

0 comments: