பச்சைக்கிளி பரிமளா - சினிமா விமர்சனம்

12-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சேது மீடியாஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.கே.மூர்த்தி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் தாமோதரன், கார்த்திக், சக்தி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ஜெ.இ.கிறிஸ்டோபர், இசை – குபேரன், படத் தொகுப்பு – வைகை ராஜா. எழுத்து, இயக்கம் – மதுபாலன்.
இந்தப் படத்தின் டைட்டிலை பார்த்தவுடனேயே, டைட்டிலேயே பிட்டு படம் என்று உணரக் கூடிய படங்களை இப்பவும் தயாரிக்கிறார்களா என்று ஆச்சரியம்தான் வந்தது.
ஏனெனில் இது போன்ற படங்களை திரையிடும் தியேட்டர்கள் தமிழ்நாட்டில் அதிகம் போனால் 30 தியேட்டர்கள்தான் இருக்கும். இருந்த தியேட்டர்களெல்லாம் இடிக்கப்பட்டுவிட்டன. அல்லது மாற்றப்பட்டுவிட்டன.
இப்போது இருக்கின்றவைகளில் கிடைக்கும் கலெக்ஷன் மொத்தத்தையும் கைக்குட்டையிலேயே சேகரிக்கலாம். அந்த அளவுக்குத்தான் இருக்கும். இருந்தும், எப்படி இவ்வளவு தைரியமாக இந்த மாதிரியான படத்தை எடுக்க தயாரிப்பாளர் முனைந்து முன் வந்தார் என்று தெரியவில்லை.
சரி.. அது எதற்கு நமக்கு..? கதை என்னவென்று பார்ப்போம்.

தாமோதரன், கார்த்திக் உட்பட நான்கு பேர் இணை பிரியாத நண்பர்கள். இதில் கார்த்திக்கும், இன்னும் இரண்டு நண்பர்களும் தாமோதரனை பார்க்க ஊருக்கு வருகிறார்கள். அங்கே தாமோதரன் தனது மாடர்ன் கேர்ளுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.
“வாழ்ந்தால் இப்படியொரு மாடர்ன் கேர்ளுடன்தான் வாழ வேண்டும். இல்லாமல் சுத்தப் பட்டிக்காடுகளை கட்டிக் கொண்டு மாரடிப்பதற்கு சாகலாம்…” என்று இவர்களது மனதிலும் நஞ்சை கலக்குகிறார் தாமோதரன். இது கார்த்திக்கின் மனதையும் கெடுக்கிறது.
அவரும் தனக்குப் பெண் பார்க்கப் போகுமிடத்தில் மாடர்னான பெண்ணா என்று பார்க்கிறார். ஆனால் பெண்ணோ அப்படியல்ல என்று தெரிந்தாலும், அப்பா, அம்மா பேச்சுக்காக சரியென்று சம்மதிக்கிறார்.
இருவருக்கும் திருமணம் முடிகிறது. சென்னைக்கு குடி வருகிறார்கள். வந்த வேகத்திலேயே தனது புது மனைவியை மாடர்ன் கேர்ளாக்கி பார்த்து அகமகிழ்கிறார் கார்த்திக். புதிய மனைவியும் புதிதாக தனக்குக் கிடைத்திருக்கும் ஆடைகள் தனது அழகைக் கூட்டியிருக்கிறது என்று எண்ணி மேலும், மேலும் மாடர்ன் பெண்ணாகும் ஆர்வத்தில் இருக்கிறார்.
அதே நேரம் திடீரென்று தாமோதரனை பார்க்கிறார் கார்த்திக். இப்போது தாமோதரன் குடித்துவிட்டு ரோட்டோரமாக அலங்கோலமான நிலையில் கிடக்கிறார். தனது நண்பனை உயிர்த்தெழ வைத்து விஷயத்தை என்னவென்று கேட்க.. அவரோ தனது வாழ்க்கையே பறி போய்விட்டதாக புலம்பித் தள்ளுகிறார்.
தனது மாடர்ன் மனைவியான மீரா தனக்குத் துரோகம் செய்துவிட்டு தனது இன்னொரு நண்பனோடு ஓடிப் போய்விட்டதாகவும், இதனால் தான் மிகப் பெரிய மனத் துயரத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்.
அந்த ஓடிப் போன மனைவியான மீராவை மீண்டும் ஒரு கோவில் வாசலில் பார்த்து அவளது காலில் விழுந்து கதறியழுது திரும்பி அழைக்கிறார் தாமோதரன். அப்போதும் மீரா அவரை உதாசீனப்படுத்திவிட்டுப் போக இப்போது மதுவே துணை என்றிருக்கிறார் தாமோதரன்.
தாமோதரனின் நிலைமையை புரிந்து கொண்ட கார்த்திக் தனது நிலைமையை எண்ணிப் பார்க்கிறார். இப்போதும் அவரது வீட்டிற்கு வந்து செல்லும் கார்த்திக்கின் நண்பனிடம் கார்த்திக்கின் மனைவி சிரித்துப் பேசுவதும்,தொட்டுப் பேசுவதும் கார்த்திக்கை அசைத்துப் பார்க்கிறது.
இந்த நேரத்தில் தாமோதரனை ஒரு விபச்சாரத் தரகர் பரிமளா என்னும் விலைமாதுவிடம் அழைத்துப் போகிறார். இந்த பரிமளா என்னும் விலைமாது காசுக்காக தொழிலில் இருந்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டுமென்று நினைக்கக் கூடியவர்.
இவரிடம் ஒரு முறை ஒரு கஸ்டமர் வருகிறார். அதுதான் அவருக்கு முதல் அனுபவம். வீட்டிற்கு மூத்த மகன். இவருக்குக் கீழ் தங்கைகளும், தம்பியும் உண்டு. மாதச் சம்பளம் 6000 ரூபாய். ஆனால் பரிமளாவுக்காக 2000 ரூபாயை செலவழிக்கத் தயாராகியிருக்கிறார்.
பரிமளா இவரிடம் பக்குவமாக யதார்த்த நிலைமையை எடுத்துச் சொல்லி.. “அரை மணி நேர சுகத்துக்காக 2000 ரூபாயை செலவழிப்பது நியாயமா..? உன் ஒருத்தன் சம்பாதித்தியத்தை நம்பி உன் குடும்பமே உக்காந்திருக்கே.. அதை யோசித்துப் பார்த்தியா..?” என்று அன்பாகச் சொல்லி அவனை திருப்பியனுப்புகிறாள்.
இந்த அளவுக்கு நல்லவளாக இருக்கும் பரிமளாவிடம் வரும் தாமோதரன் அந்த வீட்டிலேயே குடிபோதையில் வாந்தியெடுக்கிறான். போதையில் புலம்புகிறான். மயங்கி விழுகிறான். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போதுதான் முந்தின இரவில் அங்கே நடந்ததெல்லாம் அவனுக்குத் தெரிய வர பெரிதும் வெட்கப்படுகிறான்.
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பரிமளாவிடம் வந்து மன்னிப்பு கேட்கிறான் தாமோதரன். அவனுடைய சோகக் கதையைக் கேட்டுவிட்டு தன்னுடைய சோகக் கதையைச் சொல்கிறாள் பச்சைக்கிளி பரிமளா.
பரிமளாவின் கணவன் அவனின் மகனுக்கு 1 வயது இருக்கும்போதே வேறொரு பெண்ணுடன் ஓடிப் போய்விடுகிறான். இதனால் தனி மரமாகிறாள் பரிமளா. தனது பையனுடன் தானே வேலை செய்து சம்பாதித்து தனியே வாழ்ந்து வருகிறாள்.
பையனுக்கு 5 வயதாகும்போது ஓடிப் போன புருஷன் ஒரு நாள் இரவில் திரும்பவும் வருகிறான். தான் இனிமேல் அவளுடன்தான் இருக்கப் போகிறேன் என்கிறான். பரிமளாவும் அதை உண்மை என்று நம்பி அவனைத் தங்க வைக்கிறாள். பரிமளாவிடம் இரவு ‘வேட்கை’யை முடித்துக் கொண்ட அவளது கணவன், காலையில் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப்பாகுகிறான். கூடவே பரிமளா அத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்த பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டே ஓடிவிடுகிறான்.
இதனால் வேறு வழியில்லாமல்தான் இந்தத் தொழிலுக்கு தான் வந்ததாகச் சொல்கிறாள் பரிமளா.  இந்தச் சோக்க் கதையைக் கேட்கும் தாமோதரன், “என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டாள். உன் புருஷனோ உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான். நாம் இருவருமே ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ஆனால் எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. உன் பொறுமையும், சகிப்புத்தன்மையும், அன்பும், பண்பும், பாசமும், நேசமும் எனக்குத் தேவையாய் இருக்கிறது. நாம் ஏன் இணைந்து வாழக் கூடாது…?” என்று கேட்கிறான். இதற்கு பரிமளாவும் ஒப்புக் கொள்ள.. இந்தக் குடும்பம் ஒன்று சேர்கிறது.
இன்னொரு பக்கம் கார்த்திக்கின் மனைவியை அவனுடைய நண்பன் நிஜமாகவே கவர்ந்து செல்கிறான். ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு கணவனின் நண்பனுடன் ஓடுகிறாள் மனைவி. அந்த நண்பனோ ஓடி வரும் நண்பனின் மனைவியை ஒரு நாள் இரவு மட்டும் அனுபவித்துவிட்டு கையில் சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்துவிட்டு திரும்பிச் செல்லும்படி சொல்ல அவள் அதிர்ச்சியாகிறாள்.
தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்து அவள் கதறியழுக.. நண்பன் தப்பியோடுகிறான். தன் வாழ்க்கையை தானே தொலைத்துவிட்டனே என்றெண்ணி அழுதபடியே அவள் சாலையில் செல்ல.. அவளுக்கு எதிர்ச் சாலையில் பைக்கில் பரிமளாவும், தாமோதரனும், பிள்ளையும் சந்தோஷமாகச் செல்கிறார்கள்.
“நாகரிக மனைவி வேண்டும் என்று ஆசைப்பட்டு உங்களது வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள்…” என்ற எழுத்துப் பிழையுடன் கூடிய அட்வைஸோடு படம் முடிவடைகிறது.
சோம்பியான ஒளிப்பதிவு.. அனைவரின் சுமாரான நடிப்பு.. சொதப்பலான இயக்கம் என்று அனைத்திலும் ஓட்டை, ஓட்டையாக வைத்துக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அனைவருமே புதுமுகங்கள் என்பதால் அவர்களால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்கள். பரிமளாவாக நடித்திருக்கும் சக்திஸ்ரீதான் பிரதான கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். விலைமாது கேரக்டர் என்பதால் படம் முழுவதும் அபாயகரமான கவர்ச்சி தோற்றத்திலேயே வலம் வந்திருக்கிறார்.
சீன் பை சீன் கவர்ச்சிதான் முக்கியம் என்பதால் திரைக்கதையில்கூட அதற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மீராவின் மாடர்ன் கேர்ள் உடையில்கூட குனிய வைத்து, நிமிர வைத்து.. ஓட வைத்து.. கேமிராவுக்கே எய்ட்ஸ் வரும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.
அதேபோல் முதலில் கிராமத்துப் பெண்ணாகவும், பின்பு மாடர்ன் கேர்ளாகவும் மாறும் காயத்ரி நிஜமாகவே அழகிதான். நல்ல தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்கூட மின்னுவார். இப்படி இவர்கள் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகிவிட்டார்..! இவரும் தன்னால் முடிந்த அளவுக்கு ‘காட்டி’யிருக்கிறார்.
திரைக்கதையில்கூட காமெடி என்கிற பெயரில் காம நெடியை வீசியிருக்கிறார்கள். கதாநாயகிகள்தான் என்றில்லாமல் காயத்ரியின் அம்மாவையும் கவர்ச்சி காட்ட வைத்திருப்பதுதான் கொடுமை.
உறவுக்கு வர தயங்கும் மனைவியை ஒத்துழைக்க வைக்க மயக்கப் பொடியை கலந்து கொடுத்து காரியத்தை முடிக்க நினைக்கும் கார்த்திக்.. அந்த மயக்க மருந்தை கார்த்திக்கின் தாய், தனது கணவனுக்குக் கொடுத்துவிட.. அடுத்து நடக்கும் அசம்பாவித காட்சியில் கார்த்திக்கின் தாய், தந்தையும் ஆடும் ஆட்டம் எதிர்பாராதது.
இதைவிட காமெடியாக அடுத்த நாள் காலையில் கார்த்திக்கின் தாய், தந்தையர் படுத்திருந்த கட்டிலின் கால் உடைந்து போய் கிடக்க.. புதிய கட்டில் காலை வாங்கி வந்து அதை தச்சு செய்யும் தந்தையும், அதனை பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிடும் மகன் கார்த்திக்கும்.. இதைப் பார்த்து வெட்கப்படும் தாயையும் ஒரு சேர ஸ்கிரீனில் பார்த்தபோது இயக்குநரின் ரசனையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..!
குபேரனின் இசையில் 2 பாடல்கள் கேட்கும்படியாகத்தான் இருந்தது. ஆனால் சின்ன பட்ஜெட் என்பதால் மற்ற தொழில் நுட்பப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால் பின்னணி இசை கடாமுடாவாகத்தான் இருந்தது.  
ஒளிப்பதிவாளர் என்ன வேலை செய்திருக்கிறார் என்றே தெரியவில்லை. படுக்கையறை காட்சிகளில்கூட லைட்டிங்க்ஸை காணோம். இது போன்ற படங்களை திரையிடும் மோசமான தியேட்டர்களில் புரொஜெக்சனே மோசமாகத்தான் இருக்கும். அதைவிட மோசமாக ஒளிப்பதிவு இருந்தால் எப்படியிருக்கும்..? அப்படித்தான் இருந்தது படத்தின் ஒளிப்பதிவின் தரம்.
வருமான வரித்துறைக்கு கணக்குக் காட்டாமல் மறைத்து வைத்திருந்த கருப்புப் பணத்தில் எடுக்கப்பட்ட படமாக இது இருக்கலாம். தமிழகத்திலேயே வெறும் 10 தியேட்டர்களில் வெளியாகி தியேட்டர் வாடகையைக்கூட வசூலிக்காமல் படம் நேற்றைக்குத் தூக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறோம்..!
ஆனாலும் படத்தின் இயக்குநருக்கு டைட்டிலில் தனது பெயர் இயக்குநர் என்று பதிவாகியிருப்பதை பார்த்து நிச்சயம் சந்தோஷம் கிடைத்திருக்கும்..!
இந்த ஒரு திருப்தியோட அவர் எங்கேயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்..!

0 comments: