மியாவ் - சினிமா விமர்சனம்

01-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பிரபல திரைப்பட விநியோகஸ்தரான வின்சென்ட் அடைக்கலராஜ், தனது குளோபல் வுட்ஸ் மூவீஸ்  நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
ராஜா இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஊர்மிளா காயத்ரி, ஷைனி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
கலை இயக்கம் – ஆறுச்சாமி, சி.ஜி. மேக்கிங் – ரமேஷ் ஆச்சார்யா,  ஒளிப்பதிவு – போஜன்.கே.தினேஷ், படத் தொகுப்பு – சதிஷ் சூர்யா, இசை – ஸ்ரீஜித் என்டவனோ. எழுத்து, இயக்கம் – சின்னாஸ் பழனிச்சாமி.
நாய், பூனைகளை மையமாக வைத்து ஹாலிவுட்டில் தொடர்ச்சியாக பல சிறுவர் படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதில் ஒரு பூனையின் கேரக்டரை சுட்டு, தமிழுக்கு ஏற்ற கதையுடன் படமாக்க முனைந்திருக்கிறார் இயக்குநர்.
நல்ல எண்ணம்தான். ஆனால் கதை..?

சென்னையில் மிகப் பெரிய அபார்ட்மெண்ட்.. அங்கே பலதரப்பட்டவர்களும் குடியிருக்கிறார்கள். பெற்றோர்கள் சம்பாதித்துக் கொடுக்க அதை வைத்து ஜாலியாக குடித்துவிட்டு, பெண்களை மேய்ந்துவிட்டு ஊரைச் சுற்றும் நான்கு இளைஞர்களும் இருக்கிறார்கள். விளம்பரப் படங்களில் நடிக்கும் ஹீரோயினும் இருக்கிறார்.
மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு உடனேயே டாஸ்மாக்கில் அட்டெண்டெண்ட்ஸ் போடும் குடும்பத் தலைவனும் இருக்கிறான். ‘பேச்சுலர்’ என்று சொல்லிக் கொண்டு குடியும், குடித்தனமுமாக வாழும் ஒருவரும் இருக்கிறார்.  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் தனது மாமனார் வாங்கிக் கொடுத்த வீடு என்பதால் அங்கேயே குடி வந்திருக்கிறார்.
அமைதியான குடும்பங்களும் சூழ்ந்திருக்கிறது. அதில் ஒன்றாக இருக்கும் குழந்தை யுவனா தன் வீட்டில் செல்பி என்னும் ஒரு பூனையை வளர்த்து வருகிறாள். அந்தப் பூனை தன் வீட்டில் மட்டுமில்லாமல் அபார்ட்மெண்ட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வரும் அளவுக்கு ஜாலியாகத்தான் இருக்கிறது.
அந்த நான்கு இளைஞர்களுமே பெண்கள் விஷயத்தில் மோசமாக இருக்க.. இதன் பொருட்டு ஹீரோயினுக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையில் ஒரு நாள் சண்டை ஏற்பட்டுவிடுகிறது.
இந்த நேரத்தில் நான்கு இளைஞர்களில் ஒருவர் குடித்துவிட்டு தனது வீட்டுக்குள் போன வேகத்திலேயே இறக்கிறார். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் சந்தேக மரணம் என்றே தெரிய வர.. போலீஸும் விசாரிக்கிறது.
இந்தக் கொலைச் சம்பவம் மறப்பதற்குள்ளாகவே மொட்டை மாடியில் இதே இளைஞன் கோஷ்டியில் இருக்கும் இன்னொரு இளைஞனும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறான். இதைக் கண்டு அபார்ட்மெண்ட்டே ஆடிப் போகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் வழக்கை தொடர்ந்து விசாரிக்கிறார். இறந்தவர்களின் நண்பர்களோ ஹீரோயினை கை காட்டுகிறார்கள். அவள்தான் தங்களை மிரட்டியதாகச் சொல்கிறார்கள். ஹீரோயினையும் அழைத்து விசாரிக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர். தான் மிரட்டியது உண்மை என்றாலும், தான் கொலை செய்யும் அளவுக்கெல்லாம் போகவில்லை என்கிறாள்.
இந்த நேரத்தில் அபார்ட்மெண்ட்டின் சிசிடிவி கேமிராவை சோதனையிட்டதில் அந்தக் கொலை நடந்த நேரத்தில் அந்த இடத்தில் சிறுமி யுவினாவின் செல்பி பூனை மட்டும் இருப்பது தெரிய வர.. பூனைதான் அந்தக் கொலைகளை செய்கிறது என்று ஹீரோயின் சந்தேகப்படுகிறாள்.
அந்த இளைஞர்களில் மீதமிருக்கும் இருவரையும் காப்பாற்ற நினைக்கிறாள் ஹீரோயின். பூனை ஏன் இவர்களை கொலை செய்கிறது..? மீதமிருப்பவர்களை ஹீரோயின் காப்பாற்றினாரா என்பதை தியேட்டருக்கு போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.
இப்போதும் ஆவிகளின் யுகம் என்பதால் ஒரு கெட்ட ஆவி பூனையின் உடலுக்குள் புகுந்து படுகொலைகளை செய்வதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஆவி, ஆவியானதற்கான காரணம்தான் அரதப் பழசான கதை. இந்த 2016-ம் வருடத்திலும் அதையே காரணமாக்கினால் எப்படிங்க இயக்குநரே..?!
படத்தில் ஹீரோயினும், குடிகார கணவன் கேரக்டர்களுக்கு மட்டுமே நடிப்புக்கென ஸ்கோப் உள்ளது. மற்றவர்களெல்லாம் ச்சும்மா வந்து போவது மாதிரியே நடித்திருக்கிறார்கள்.
இதில் டேனியலை வைத்து ஒரு தனி காமெடி டிராக். இது போன்று கதையோடு ஒட்டாத காமெடி டிராக்குகள் தற்போதைய சினிமாவில் இல்லவே இல்லை. அதாவது புதிதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மொக்கைத்தனமாக இருக்கிறது அந்தக் காமெடி.
செல்பி பூனையின் அட்டகாசத்தை சி.ஜி. வடிவத்தில் வடிமைத்துள்ளார்கள். பூனை டிராகானா மாறுவது போல சி.ஜி. செய்து நம்மை பயமுறுத்தப் பார்த்து காமெடிதான் செய்திருக்கிறார்கள்.
கெளதமாக ராஜா, கார்த்தியாக சஞ்சய் மிக்கி, கிரணாக ஹைடன், ஆகாஷாக குமார் நடித்துள்ளனர். சுஹானாவாக வரும் ஊர்மிளா காயத்ரிதான் கொஞ்சம் பதட்டத்தைக் கூட்டி நடிப்பை காட்டியிருக்கிறார்.
குட்டியாக ஷைனி, வாட்ஸ் அப் மணியாக டேனியல், சைக்கோவாக சாய் கோபி, கான்ஸ்டபிளாக டெலிபோன் ராஜ், போலீஸ் எஸ்.ஐ ஆக ஆனந்த் தாகா, க்யூட் பேபியின் தந்தையாக ஸ்டான்லி, பூனை வளர்க்கும் க்யூட் பேபியாக யுவினா, மயிலாக மோகனா உள்ளிட்ட பல புதுமுகங்களும், பழகிய முகங்களும் இருக்கின்றனர். கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் ஷைனியும் ஒரளவு நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவில் குறைவில்லைதான். ஆனால் படமே சுவாரஸ்யமாக இல்லாத்தால் அதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. ‘க்யூட் லிட்டில் பொண்ணு…’ பாடலும், ‘இங்கி பிங்கி’ பாடலும்தான் ஓகே ரகம்.  
சின்னாஸ் பழனிச்சாமியின் இயக்கக் குறைவினால் பல காட்சிகளில் சுவாரஸ்யமே இல்லாமல் இருக்கிறது.  பூனையை மடக்க பெரிய சாமியாரைத் தேடாமல் டெக்னிக்கல் வல்லுநரை அழைத்து.. கம்ப்யூட்டர் வித்தையினால் ஏதாவது செய்யலாம் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் எதுவும் போணியாகவில்லை என்பது வருத்தமான விஷயம்.
ஆசை காட்டி மோசம் செய்த ஆண்களை பழி வாங்கும் பெண்ணின் ஆவி என்னும் அரதப் பழசான கதைதான் இந்த ‘மியாவ்’ படத்தின் அடிநாதக் கதை என்பது படத்தின் மிகப் பெரிய பலவீனம்..!
ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறது..!

0 comments: