சூரத் தேங்காய் - சினிமா விமர்சனம்

10-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மாருதி பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் என்.முத்துக்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தில் ஹீரோவாக குரு அரவிந்தும், சமந்தி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் 45 புதுமுகங்களும் படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ஹார்முக், இசை – சக்தி, பாடல்கள் – நலன் கிள்ளி, எழுத்து, இயக்கம் சஞ்சீவ் சீனிவாஸ்.

கதாநாயகன் குரு அரவிந்த் மார்க்கெட்டில் வாழைக்காய் மண்டியில் கடை வைத்திருக்கிறார். இவருக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான்.  ஹீரோ நல்லவராக இருந்தாலும் அவரிடமிருக்கும் ஒரேயொரு கெட்டப் பழக்கம் குடிதான். அவருடைய தாய்மாமன்தான் இதற்குக் கூட்டாளி.
ஹீரோவின் சொந்த அக்காள் மகளான சமந்திதான் ஹீரோயின். 11-ம் வகுப்பையே மூன்றாவது வருடமாக படித்துக் கொண்டிருக்கிறார். படிப்பில் ஆர்வமில்லை. பள்ளிக்கு போக வேண்டிய நேரத்தில் அதை கட்டடித்துவிட்டு தியேட்டருக்கு போய் சினிமா பார்க்கும் அளவுக்கு தைரியமானவர். ஹீரோவை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாக துடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த ஊரின் பகுதி கவுன்சிலர் மிகப் பெரிய ரவுடி. கொள்ளையடிப்பதையே குலத் தொழிலாகக் கொண்டவர். எது நல்லது நடந்தாலும் அது தனது குடும்பத்திற்கு மட்டுமே நடக்க வேண்டும் என்று விரும்புவர். இவருக்கு 4 தம்பிகள். அனைத்துவித கொடூரங்களையும் செய்யத் துணிந்தவர்கள்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து என்று அனைத்திலும் கவுன்சிலர் மற்றும் அவரது தம்பிகளின் அட்டூழியம் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது.
இதே கவுன்சிலர்தான் ஹீரோவின் தந்தையிடமிருந்து தென்னந்தோப்பை வாங்குவதற்காக அவரை கொலை செய்தவன். இது ஹீரோவுக்கு தெரியும் என்றாலும் தனது அம்மாவுக்காக அமைதி காத்து பொறுமையாக இருக்கிறார்.
ஹீரோவின் குடிப் பழக்கம் முற்றிப் போய் பகலிலும் குடிக்க ஆரம்பிக்க அவருடைய தாயார் பெரிதும் வருத்தப்படுகிறார். தாயாரின் அறிவுரை மகனின் மனதைக் கரைக்க “இனிமேல் குடிக்க மாட்டேன்…” என்கிறார். ஹீரோயின் சமந்தி பள்ளியிறுதி தேர்வில் வெற்றி பெற தான் கல்யாணத்திற்கும் தயார் என்கிறார் ஹீரோ.
இந்த நேரத்தில் சமந்தியின் பெற்றோர் வைத்திருக்கும் நிலத்தை அடாவடியாக பிடுங்க நினைக்கிறார் கவுன்சிலர். இதற்காக தனது தம்பிகளை அனுப்பி வைக்கிறார். இது பெரிய மோதலாக உருவெடுத்து ஹீரோவுக்கும், கவுன்சிலர் தம்பிகளுக்கும் இடையில் நேரடி சண்டை உருவெடுக்கிறது.
கவுன்சிலரின் தம்பிகள் வீடு தேடி வந்து சமந்தியின் அப்பாவை அடித்துவிட.. கோபம் கொண்ட ஹீரோயின் கவுன்சிலரின் சட்டையைப் பிடித்து அடித்து அவரை அவமானப்படுத்துகிறார். இதனால் கோபம் கொண்ட கவுன்சிலர் ஹீரோயினை கொலை செய்ய முயற்சிக்க.. இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
சின்ன பட்ஜெட் படங்களுக்கேயுரிய கதை தேர்வு. திரைக்கதையாக்கம். நடிகர்கள் தேர்வு.. இனிமையான இசை.. அளவான பின்னணி இசை.. அழகான இயக்கம்.. வேறென்ன வேண்டும்..? கடைசிவரையிலும் போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் சஞ்சீவ் சீனிவாஸ்.
நாயகன் குரு அரவிந்த் நன்றாகவே நடித்திருக்கிறார். கவுன்சிலரின் தம்பிகளை கூல் செய்தபடியே சண்டையிடும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். குடி போதையில் லந்து செய்யும் காட்சியிலும், அம்மாவுடன் கழிவிரக்கத்தில் பேசும் காட்சியிலும் உருகவும் வைக்கிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சிறந்த இயக்குநர்கள் கைகளில் கிடைத்தால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.
ஹீரோயின்தான் படத்தின் மிகப் பெரிய பலம். சரியான வாயாடி என்பதற்கு உதாரணமாகியிருக்கிறார். சராமரியாக வாய்த் துடுக்கில் பேசும்போதும், மாமனை தேடி வந்து ரகளை செய்துவிட்டு போவதிலும், பாடல் காட்சிகளின் நடனத்திலும் அறிமுகம் மாதிரியே தெரியவில்லை. இயக்குநரின் இயக்குதல் வேலையின் பலன் ஹீரோயினின் நடிப்பில் தெரிகிறது. கிளைமாக்ஸில் சமந்தியை படுத்தியபாட்டை பார்க்கும்போது இந்தப் பெண்ணின் பொறுமைக்கும், நடிப்பார்வத்திற்கும் ஒரு ‘ஜே’ போடலாம் போலிருக்கிறது. வெல்டன்மா..!
நாயகன் குரு அரவிந்த்தின் தாய் மாமனாக படம் முழுவதும் வலம்வரும் துணை நடிகர் ஜெயமணி இன்னொரு பக்கம் காமெடிக்கும், நடிப்புக்கும் பெயர் வாங்குகிறார். இதேபோல் நாயகனின் அம்மாவாக நடித்தவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. பையன் நடுரோட்டில் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதறியடித்து ஓடி வரும் காட்சியில் இவரது நடிப்பே பதைபதைக்க வைக்கிறது. எத்தனை, எத்தனை ஆயிரம் தாய்மார்களை இப்படி தினமும் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்..? என்று தணியும் இந்தச் சோகம்..?
சக்தியின் இசையில் அனைத்து பாடல்களும் ஏ ஒன் ரகம். ‘அடாவடி பொண்ணு’, ‘சூரத் தேங்கா’, ‘பச்சைக் காயிருக்கு’ பாடல்கள் கேட்கும் ரகம் என்றால் ‘ஒத்தை பார்வை’ பாடல் அனைவரையும் ஒரே நேரத்தில் கவனிக்க வைத்திருக்கிறது. மகிழினி குணசேகரின் கிராமத்திய குரலில் இது ஒலிக்கும்போது அரங்கமே நிசப்தமானது என்பதில் சந்தேகமில்லை. பெற்றெடுத்த பாடல் ஒரு தாயின் மனத்தாங்கலை சோகத்துடன் வெளிப்படுத்தியது.. பாடல் காட்சிகளையும் அழகுற படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சண்டை காட்சிகளில் யதார்த்தம் மீறாமல் பார்த்துக் கொண்டு அதையும் எல்லை மீறாமல் பார்த்திருக்கிறார்.
எல்லாம் நன்றாக இருந்தும் படத்தின் முக்கிய பகுதியான ஒளிப்பதிவு மட்டுமே இந்தப் படத்தில் சோர்ந்து போயிருக்கிறது. அதுவே படத்தை ரசிக்கவிடாமல் செய்திருக்கிறது. ஒளிப்பதிவின் தரம் மட்டும் கூடுதலாக இருந்திருந்தால், தியேட்டருக்கு வந்த ரசிகர்களை நிச்சயமாக இந்தப் படம் முழு திருப்தியடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை..!
இயக்குநர் சஞ்சீவ் சீனிவாஸுக்கும், படக் குழுவினருக்கும் நமது வாழ்த்துகள்..!

0 comments: