துருவங்கள் பதினாறு - சினிமா விமர்சனம்

30-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2013-ம் ஆண்டு நவம்பர் கடைசியில் ‘விடியும் முன்’ என்றொரு படம் வெளிவந்து அந்த வருடத்திய சிறந்த படங்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்தது. அப்படியொரு சிறப்பான படம் அது.
அதேபோலத்தான் இந்த 2016 டிசம்பர் இறுதியில் வந்திருக்கும் இந்த ‘துருவங்கள் பதினாறு’ படமும் பெரும் பெயரைப் பெற்றிருக்கிறது.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் இரவு நேரத்தில் ஒரு கொலையும், அதைத் தொடர்ந்து ஒரு வீட்டில் இளம் பெண் காணாமல் போன விஷயமும், அந்த வீட்டில் படிந்திருக்கும் ரத்தக் கறைப் பற்றியும் புகார் வருகிறது. அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரான ரகுமான் இந்தக் கேஸை விசாரிக்கத் துவங்குகிறார்.
விசாரிக்க.. விசாரிக்க.. அந்தக் கொலை சம்பவம் பற்றியும், இளம் பெண் காணாமல் போன விஷயமும் வேறு வேறு வடிவங்களில் போய்க் கொண்டேயிருக்க கடைசியாக ரகுமானே விபத்துக்குள்ளாகி போலீஸ் வேலையில் இருந்தே விலக வேண்டி வருகிறது.
போலீஸ் வேலையை இழந்து ஊட்டியில் ஓய்வில் இருக்கும் அவரை இப்போது தேடி வரும் ஒரு இளைஞன், அந்தக் கதையை முழுவதுமாகச் சொல்லும்படி வற்புறுத்துகிறான். இப்போது ரகுமான் அந்தக் கதையைச் சொல்லத் துவங்க.. அது அவ்வப்போது வேறு வேறு கிளைக் கதைகளுடன் செல்ல..
இறுதியில் யார்தான் அந்தக் கொலையாளி..? ஏன் இது நடந்தது..? எப்படி நடந்தது..? ரகுமானின் இப்போதைய நிலைமைக்கு யார் காரணம்..? என்பதை யாருமே யூகிக்க முடியாத திரைக்கதையில் மிக அழகாக இயக்கித் தந்திருக்கிறார் 23 வயதே நிரம்பிய இளம் பொறியியல் பட்டதாரியான அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன்.
படத்தில் அத்தனை காட்சிகளிலும் இயக்கம் சிறப்பாக இருப்பதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். நடிகர்கள் அனைவரும் யதார்த்தமாக மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ரகுமானுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு பெரிய பெயரை பெற்றுத் தரப் போகிறது. அந்த அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஊட்டி காட்சிகளில் அவருடைய ஒவ்வொரு ஆக்சனும் ஒரு நடிப்பு என்றே சொல்ல்லாம்.
ஒரே நேரத்தில் அங்குமிங்கும் நடந்தபடியே ரகுமான் பேசுவதும்.. அப்படி பேசும்போதே நான்கு பேரிடம் அவ்வப்போது பதில் சொல்லி அவர்களை அனுப்பி வைப்பதுமாக இயக்கத்தில் அழகைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இவர் மட்டுமில்லாமல் படத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை நடிகர், நடிகைகளையும் கச்சிதமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். டெல்லி கணேஷ் ஒரேயொரு காட்சியில் வந்தாலும் மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் பார்வையாளர்களின் மனதில் ஒரு பாரத்தை சுமத்துகிறார் டெல்லி கணேஷ். உபயம் இயக்குநர்தான்.
கெளதம் என்கிற அந்த போலீஸ் கான்ஸ்டபிள் பயமே இல்லாமல் இன்ஸ்பெக்டரிடம் உரையாடுவதும்.. தனது சந்தேகத்தை தெரிவிப்பதும்.. காட்சிகளை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது.
அந்த மூன்று இளைஞர்கள், ராஜனாக நடித்த பிரதீப், கிருஷாக நடித்த வினோத் வர்மா, பேப்பர் போடும் ஷரத்குமார் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கிறார்கள். மிக அழகியாக யாஷிகாவும், யதார்த்தமான அழகியாக அஞ்சனாவும் சில காட்சிகளே வந்தாலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.
சுஜீத் சாரங்கின் ஒளிப்பதிவும், ஜித் சாரங்கின் படத் தொகுப்பும் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம் எனலாம். படமே பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடக்கிறது என்றாலும் அதனை படமாக்கியவிதமும்.. மழை காட்சிகளை திரையில் காண்பித்திருக்கும்விதமும், பல காட்சிகளில் கேமிராவின் கோணமும் இது ஹாலிவுட் படமோ என்று நினைக்கத் தோன்றியிருக்கிறது. அந்த இரவு நேரக் காட்சிகளுக்குப் பிறகு மறுநாள் இரவில் நடக்கும் கார் சேஸிங் காட்சியிலும் கேமிராவின் பங்களிப்பு பெரியது.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை எந்த உறுத்தலும் இல்லாமல் படத்தினை தொடர்ந்து பார்க்க உதவியிருக்கிறது. மழை காட்சிகளில் ஒரு சின்ன சப்தம்கூட கவனத்தை திசை திருப்பிவிடும் என்பதால் அவற்றை கவனமாகவே பதிவு செய்திருக்கிறார்.
முன் பின்னான காட்சிகளை தொகுத்து அளித்திருப்பதால் எந்த இடத்திலும் பார்வையாளன் குழப்பமாகிவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு படத்தொகுப்பினை செய்திருக்கிறார்கள்.  கொஞ்சமும் சொதப்பினாலும் படமே கோவிந்தா என்கிற நிலைமையில் எடிட்டரின் பணிதான் இயக்குநரை காப்பாற்றியிருக்கிறது.
எந்தவித லாஜிக் மீறல்களையும் பார்வையாளன் கண்டறியக் கூடாது என்பதற்காக மிகப் பெரிய அளவில் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர்.
அப்போதுதான் புதிதாக அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கிறார் ரகுமான். வீட்டில் லேண்ட்லைன் போன் இருக்கிறது. ஆனால் நம்பர் இன்னும் யாருக்குமே தெரியாது. அவருடைய செல்போன் அந்த நாள் இரவில் தெரியாமல் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைக்கப்பட்டது. அதனை சார்ஜ் போட்டும் ஏறாமல் போய்.. மாலையில்தான் அதையும் பார்த்து வேறொரு பிளக்கில் சொருகி சார்ஜ் போடப்படுகிறது.
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வெள்ளை நிறக் கார் வந்து நிற்பது.. ரகுமான் வீட்டு வாசலில் வந்து காத்திருப்பது.. பத்து மிஸ்டு கால் கொடுத்த பின்பு, ரகுமான் திரும்பி போன் செய்யும்போது அந்த போன் சுவிட்ச் ஆப் ஆகியிருப்பது.  
போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு புதிய கான்ஸ்டபிள்களால் சில பிரச்சனைகள் ஏற்படுவது. அவர்களே க்ளூவையும் கொடுப்பது.. எல்லாவற்றையும் சந்தேகி என்பதுபோல எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்து ரகுமான் ஹேண்டி கேமிராவை பறிமுதல் செய்து வருவது.. அதன் மூலமாக ஒரு க்ளூ கிடைத்து திரைக்கதை விரிவடைவது.
அந்த மூன்று இளைஞர்களில் கோபக்காரனுக்கு “ஸார்” போட்டு பேச வேண்டும் என்று உணர்த்துவது.. ரோட்டில் பார்க்கும் மனோவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு மாரிமுத்துவின் வீட்டுக்கு வந்து அமைதியாக அவரை மிரட்டி விஷயத்தை வாங்குவது..
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல கெளதமின் இன்றைய நிலைமை.. அதை அவர் தெரிவிக்கும் முறை.. கடைசியாக ரகுமானுக்கும், அந்தக் கொலையாளிக்குமான உறவு.. அதன் பின் நடக்கும் அந்தக் கோரச் சம்பவம் என்று அனைத்துமே கச்சிதமாக அமைக்கப்பட்ட திரைக்கதையாக இருக்கிறது.
இருந்தும் ரகுமான் மருத்துவமனையில் இருந்து உயிருடன் திரும்பும்போது அவருக்கு டிரைவராக இருந்த கெளதமின் அன்றைய நிலைமையைப் பற்றி அவர் ஏன் கவலைப்படவில்லை…? ஐந்தாண்டுகளாக கோமாவில் இருந்திருக்கிறார் கெளதம். இது பற்றி டிபார்ட்மெண்ட் மூலமாக ரகுமானுக்கு நிச்சயமாக தெரிந்திருக்குமே..! இல்லையெனில் ரகுமான் விசாரித்திருக்க வேண்டுமே..? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் இயக்குநர் பதில் சொல்லவில்லை என்பதுதான் படத்தில் இருக்கும் ஒரேயொரு குறை..!
பாதி, பாதி கதைகளாக சொல்லப்பட்டாலும் யார்தான் கொலையாளி.. அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்கிற தேடலை ரசிகனுக்குள் புகுத்தியிருக்கிறார் இயக்குநர். இதிலேயே அவர் ஜெயித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
திரைக்கதையும், இயக்கமும்தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். ஒரு கிரைம், திரில்லர் படத்தின் திரைக்கதை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணத்தைக் கொடுத்திருக்கிறது.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரகுமானையே படம் சுற்றிச் சுற்றி வந்தாலும், படத்தின் திரைக்கதை ஒரு போலீஸ் விசாரணை எப்படியிருக்க வேண்டும் என்பதை சொல்லிக்காட்டும் விதமாகவும் இருப்பது சுவையான விஷயம்.
அதேபோல் தனக்குக் கீழேயிருக்கும் அதிகாரிகளிடத்தில் எப்படி பேச வேண்டும்..? எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லிக் காட்டியிருப்பதும், குற்றஞ்சாட்டப்பவர்களை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதற்கும் மிகப் பெரிய உதாரணமாகியிருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை. காவல்துறையினர் மிஸ் பண்ணக் கூடாத படமும்கூட..!
ஒரு நிமிடம்.. ஒரு நொடி செல்போனை பார்க்க தலையைக் குனிந்தால்கூட இந்தப் படத்தின் கதை புரியாமலேயே போய்விட வாய்ப்புண்டு. அப்படியொரு இக்கட்டான சூழலை தியேட்டருக்கு வரும் ரசிகனுக்குக் கொடுத்திருக்கிறார் இந்த இயக்குநர். இதுவே அவரது திறமைக்குச் சான்று.
இந்தப் படம் நிச்சயமாக உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அவசியம் பார்க்க வேண்டிய படம்..! மிஸ் பண்ணிராதீங்க..!

0 comments: