வீர சிவாஜி - சினிமா விமர்சனம்

19-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது இன்னொருவகையான ‘சதுரங்க வேட்டை’. முழித்திருக்கும்போதே கண்ணைத் தோண்டும் திருடர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்வதைப் போல எத்தனை எச்சரித்தாலும் அதிகப் பணத்துக்கு ஆசைப்பட்டு இருக்கின்ற பணத்தை இழக்கும் பேராசைக்காரர்களும் நாட்டில் அதிகமாகிவிட்டார்கள். அவர்களைப் பற்றிய கதைதான் இது.

பாண்டிச்சேரியில் கால்டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. பெற்றோர் இல்லை. உற்றார், உறவினர்களும் இல்லை. ஆனால் வளர்ப்பு அக்காவான வினோதினி இருக்கிறார். இவரும், இவருடைய 13 வயது மகளும்தான் விக்ரம் பிரபுவுக்கு துணை.
இன்னும் காதலிக்கவே ஆள் கிடைக்காத நிலையில் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அவள்தான் உன் ஆள் என்று மனதிற்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்க வேண்டும். அப்படியொரு ஆளை தேடுவதாகச் சொல்கிறார் விக்ரம் பிரபு. அந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட ஹீரோயின் அஞ்சலி என்னும் ஷாம்லி விக்ரம் பிரபுவின் கார் மீது தன்னுடைய டூவீலருடன் வந்து மோதி விக்ரம் பிரபுவுக்கு அறிமுகமாகிறார்.
பார்த்தவுடன் காதலில் விழும் விக்ரம் பிரபு வேண்டுமென்றே ரகளை செய்து ஷாம்லியின் டூவீலரை பிடுங்கி வைத்துக் கொள்கிறார். பத்தாயிரம் பணம் கொடுத்தால் வண்டியைத் தருவதாகச் சொல்கிறார். மறுநாள் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்.
ஷாம்லி மறுநாள் பணத்துடன் வந்து கேட்க.. வண்டி காணாமல் போயிருக்கிறது. இப்போது வண்டியை கேட்டு ஷாம்லி டார்ச்சர் செய்ய.. புதிய வண்டியை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் விக்ரம் பிரபு.
இந்த நேரத்தில் வினோதினியின் மகளுக்கு மூளையில் கட்டி என்பது தெரிய வர.. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனேயே ஆபரேஷன் செய்ய வேண்டும். 25 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் சொல்ல.. இதற்கும் தனியாக பணத்தைத் தேட துவங்குகிறார் விக்ரம் பிரபு.
இந்த நேரத்தில் அதே பாண்டிச்சேரியில் அனைத்துவித திருட்டுத்தனங்களையும் செய்யும் ரமேஷ், சுரேஷ் என்னும் ரோபோ சங்கரும், யோகி பாபுவும் விக்ரம் பிரபுவிடம் நட்பாகிறார்கள். ஒருவரிடம் அடித்த 2 லட்சம் ரூபாய் பணத்தை விக்ரம் பிரபுவின் வண்டியிலேயே விட்டுவிட்டு போகிறார்கள். பின்பு அவரைத் தேடி அலைந்து கண்டுபிடிக்க முடியாமல் ஓய்ந்திருப்பவர்களை பாரில் சந்திக்கிறார் விக்ரம் பிரபு. மூவரும் நண்பர்களாகிறார்கள்.
இப்போது ரமேஷ், சுரேஷுக்கு கள்ள நோட்டு அச்சடித்து நாடெங்கும் சப்ளை செய்யும் மிகப் பெரிய திருடனான ஜான் விஜய்யின் நட்பு கிடைக்கிறது. 10 லட்சம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய்க்கு கள்ள நோட்டு தருவதாகவும், அதனை அவர்கள் வெளியில் விட்டு சம்பாதிக்கலாம் என்றும் ஆசை காட்டுகிறார் ஜான் விஜய்.
இந்த ஆசை வார்த்தையில் கவிழ்ந்துவிடும் ரோபோவும், யோகியும் 5 லட்சத்தை தயார் செய்கிறார்கள். மீதமான 5 லட்சத்துக்கு ஆள் தேடும்போது விக்ரம் பிரபு கண்ணில் சிக்க அவரிடத்தில் பொய் சொல்லி கூட்டணி பிடிக்கிறார்கள்.
5 லட்சம் கொடுத்தால் 25 லட்சம் கடன் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்ட விக்ரம் பிரபுவும் இதற்கு ஒப்புக் கொள்கிறார். ஜான் விஜய்யிடம் 10 லட்சம் நல்ல நோட்டை கொடுத்து பணம் கேட்க.. பணத்தைக் கொடுத்தனுப்புகிறார் ஜான் விஜய். ஆனால் வழியிலேயே ஜான் விஜய் அனுப்பிய ஆட்கள், போலீஸ் உடையில் வந்து அந்தப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுப் போக.. மனம் உடைந்து போகிறார் விக்ரம் பிரபு.
இதன் பின்பு நடந்த உண்மைகளை யோகியும், ரோபோவும் விக்ரம் பிரபுவிடம் சொல்லிவிட.. அவர்கள் பாணியிலேயே சென்று அவர்களை மடக்க திட்டம் தீட்டுகிறார் விக்ரம் பிரபு. மிக பிரயத்தனப்பட்டு தற்போது கரூரில் முகாமிட்டுள்ள அந்தக் கும்பலைக் கண்டுபிடிக்கிறார் விக்ரம் பிரபு.
ஜான் விஜய்க்கு தந்திரமாக போன் செய்து அவரைக் குழப்பி.. பணத்தை வெளியில் கொண்டு வரச் செய்து.. அதனைக் கைப்பற்றிவிட்டு தப்பிச் செல்கிறது விக்ரம் பிரபு குழுவினர். இதையறிந்து ஜான் விஜய் டீமும் இவர்களை பின் தொடர்ந்து துரத்த.. ஒரு கட்டத்தில் விபத்துக்குள்ளாகிறார் விக்ரம் பிரபு.
இந்த விபத்தினால் மூன்று மாதங்களுக்கு முன்புவரையிலும் நடந்த அத்தனை விஷயங்களும் விக்ரம் பிரபுவுக்கு மறந்து போகிறது. ஷாம்லியை காதலித்தது.. வினோதினியின் மகளுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியிருப்பது.. யோகி, ரோபோ கூட்டணியை சந்தித்தது.. தன் காரை விற்பனை செய்து 5 லட்சம் சம்பாதித்தது.. அதனை ஜான் விஜய் கும்பலிடம் கொடுத்து ஏமாந்தது.. பின்பு தேடியலைந்து ஜான் விஜய் கும்பலைத் துரத்திப் பிடித்து பணத்தை மீட்டது என்று எல்லாமும் மறந்து போகிறது..
இதன் பின் என்னவாகிறது..? விக்ரம் பிரபு குழந்தையைக் காப்பாற்றினாரா..? ஜான் விஜய் கும்பலிடமிருந்து தப்பித்தாரா..? ஷாம்லியுடனான காதல் என்னவானது..? என்பதெல்லாம் பக்கா கமர்ஷியல் கம்மர்கட்டான இந்தப் படத்தின் இடைவேளைக்கு பின்பான கதை.
விக்ரம் பிரபுவுக்கு இதுவரையிலும் எந்தவொரு இமேஜும் செட்டாகவில்லை. அவர் இப்படித்தான் என்கிற மாதிரியான மென்ட்டாலிட்டி, சினிமா ரசிகர்களுக்குள்ளும் நுழையவில்லை. ஆகவே அவர் இது மாதிரியான கமர்ஷியல் படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளில் இன்னும் கூடுதலாக எதிர்பார்ப்பு உள்ளதால் இன்னும் சிறந்த இயக்குநர்கள் கைகளில் சிக்கினால் விக்ரம் பிரபுவுக்கு ரொமான்ஸ் மெருகேறும் போல தோன்றுகிறது.
நடிப்பில் குறைவில்லை. யோகி, ரோபோ கூட்டணியினருடன் அவர்களுக்குச் சமமாகவே டயலாக் டெலிவரியில் பின்னியிருக்கிறார் விக்ரம் பிரபு. நகைச்சுவையும் இயல்பாகவே வந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் விக்ரம் பிரபுவை பிடித்திருக்கிறது. ஆனால் இன்னும் அதிகமாகப் பிடிக்க வைக்க அவர்தான் முயல வேண்டும்.
ஒரு படத்தில் நடித்துவிட்டு எஸ்கேப்பான ஷாம்லி.. மீண்டும் ஒரு நல்ல படத்தில் ரீஎண்ட்ரியாகியிருக்கிறார். அப்படியொன்றும் அழகில்லை என்றாலும், பார்க்க வைக்கிறார். நடிப்பிலும் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே நடித்த நடிப்பு கை கொடுத்திருக்கிறது. அதிகமாக இவரது நடிப்புக்கு ஸ்கோப் கொடுக்காமல் காதல், டூயட் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதால் தவறு இவர் மீதில்லை..
படத்தின் மிகப் பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர் கூட்டணிதான். பல காட்சிகளை ரசிக்க வைத்து, சிரிக்க வைத்திருக்கிறார்கள். ‘ப்ரோ’ என்கிற வார்த்தையை இருவரும் எத்தனை முறை பயன்படுத்தினார்கள் என்பதற்காக தனியாக போட்டியே வைக்கலாம். அதேபோல் இருவரும் மாறி ரமேஷ், சுரேஷ் என்று பெயர்களை உச்சரிப்பதே ஒரு காமெடியை உருவாக்கியிருக்கிறது..!
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து கொள்ளும் அந்தக் காட்சி கலகல.. ஹோட்டலில் ‘சட்டை’ என்கிற பெயரில் பிரார்த்தல் தொழிலை அறிமுகப்படுத்தும் ரோபோ, யோகி கூட்டணியின் டயலாக்குகளும், ஆக்சன்களும் தியேட்டரில் காமெடி கலாட்டாவை உருவாக்கியிருக்கிறது.
பாசத்திற்கு வினோதினி.. உருக்கத்திற்கு அவரது மகள்.. காதலுக்கு ஷாம்லி, வில்லத்தனத்திற்கு ஜான் விஜய், நகைச்சுவைக்கு ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் என்று பல அளவுகோல்களில் கேரக்டர்களை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இருந்தாலும் லாஜிக் எல்லை மீறல்களும் படத்தில் இல்லாமல் இல்லை. ஒரு இன்ஸ்பெக்டரின் மகள் இப்படியா இருப்பார்..? “ஸ்டேஷனுக்கு வந்து அப்பாகிட்ட பணத்தை வாங்கிக்க…” என்று சொன்னாலே விக்ரம் பிரபு ஆடியிருப்பார்.. இருந்தாலும் எதிர்பாராத அந்த டிவிஸ்ட் கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் கொண்டு போய் கலகலப்பாக்கியிருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அந்தக் குழந்தையின் மருத்துவத்திற்காக விக்ரம் பிரபு உருகுவது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா இயக்குநரே..? இப்போதெல்லாம் அரசு மருத்துவமனைகளிலேயே உயர் ரக சிகிச்சை தரப்படுகிறது. பைசா, காசு செலவில்லாமல் இது போன்ற சிக்கலான கேஸ்களை கவனித்து அனுப்புகிறார்கள். எதுக்கு 25 லட்சம் ரூபாய் செலவழித்து தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டும்..? ரொம்பத்தான் இடறியிருக்கிறீர்கள் இயக்குநரே..?!  ஒரு விபத்தில் சிக்கியதால் ஏற்படும் மறதி.. வில்லன் தாக்கியதால் மீண்டும் சரியாவதெல்லாம் எந்த வகை மருத்துவம் என்று தெரியவில்லை..!?
முதற்பாதியில் 15 நிமிடமே வரும் ஷாம்லி பிற்பாதியில் தனது காதலை வாழ வைக்க அரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறார். இதுதான் கொஞ்சம் சோதிப்பதாக உள்ளது. இந்த மறதி ஏற்பட்ட விஷயம், விக்ரம் பிரபுவுக்கு முன்பே தெரிந்துவிட்டதாகவே சொல்லி திரைக்கதையை மாற்றப்பட்டிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்..!
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு ஓஹோ ரகம்.. பாண்டிச்சேரி மற்றும், இரவு நேர தமிழகத்து காட்சிகள்.. ஜார்ஜியா நாட்டின் வெளிப்புற அழகுகளை மிக அழகாக படமாக்கியிருக்கிறார் சுகுமார். இதேபோல் டி.இமான் இசையமைப்பும் இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு மிகப் பெரிய பலம். அனைத்து பாடல்களுமே கேட்கும் ரகம்.
‘தாறுமாறு தக்காளி சோறு’ம், ‘சொப்பன சுந்தரி’ பாடலும் சொக்க வைக்கின்றன. இந்தாண்டுக்கான மிகச் சிறந்த குத்துப் பாடலாக ‘சொப்பன சுந்தரி’யை தேர்வு செய்யலாம். மெட்டும், பாடல் வரிகளும், வைக்கம் விஜயலட்சுமியின் கிறங்கடிக்கும் குரலும், திரையில் தோன்றும் ஆட்டமும் அப்படியிருக்கிறது..!
பகிரங்கமாக இப்படி ஹோட்டலில் அறையெடுத்து பணத்தை இரட்டிப்பாக்கும் வித்தையைச் செய்யும் திருடர்கள் கூட்டம் நாடு முழுவதும் இருக்கிறது. அவர்களது குணாதிசயங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக ‘சதுரங்க வேட்டை’ படம் போல சொல்லியிருந்தால் படம் இன்னமும் நன்றாகவே இருந்திருக்கும்.
யோகிபாபு, ரோபோ சங்கர் கூட்டணியின் தயவால் படத்தின் முதல் பாதி மிக, மிக கலகலப்பாக போகிறது. இரண்டாம் பாதியில் இருக்கும் டிவிஸ்ட்டுகள்தான் படத்தைத் தாங்கியிருக்கின்றன.  மொத்தத்தில் ஒரு கமர்ஷியல் படத்திற்குண்டான அனைத்துக் குணங்களையும் உள்ளடக்கிய படமாக இது இருக்கிறது.
பார்க்கலாம்தான்..!

0 comments: