பறந்து செல்ல வா - சினிமா விமர்சனம்

11-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

8 பாயிண்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் சார்பில் பி.அருமைச்சந்திரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோவாக லுத்ஃபுதின், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சீன நடிகையான நரேல் கெங் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மேலும், கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ஜோ மல்லூரி, நெருப்பு குணா, மதி, ஆனந்தி, சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சந்தோஷ், இசை – ஜோஷ்வா ஸ்ரீதர், பாடல்கள் – நா.முத்துக்குமார், படத் தொகுப்பு – M.V.ராஜேஷ்குமார், எழுத்து, சண்டை பயிற்சி – சன்னி பாங், இயக்கம் – தனபால் பத்மநாபன்.

ஏற்கெனவே ‘சைவம்’, ‘இது என்ன மாயம்’ போன்ற படங்களில் நடித்திருக்கும் லுத்ஃபுதீன் தனி ஹீரோவாக களம் கண்டிருக்கும் முதல் படம் இது. 2013-ல் வெளிவந்த ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தை இயக்கிய தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது.
பார்க்கும் பெண்களிடத்திலெல்லாம் காதல்வயப்படும் குணமுள்ளவர் ஹீரோ லுத்ஃபுதீன். ஐடி படித்திருக்கிறார். சிங்கப்பூரில் வேலை கிடைக்கிறது. சிங்கப்பூர் பறக்கிறார். அங்கே அவரது நண்பரான சதீஷ் தங்கியிருக்கும் பிளாட்டில் தங்குகிறார். அதே பிளாட்டில் ஏற்கெனவே டைவர்ஸான ஆனந்தியும், சதீஷின் காதலியான சுகன்யாவும், டைவர்ஸான ஜோ மல்லூரியும் தங்கயிருக்கிறார்கள்.
பார்த்த மாத்திரத்திலேயே ஜாதகக் கோளாறின்படி ஆனந்திக்கும், சுகன்யாவுக்கும் ‘ஐ லவ் யூ’ சொல்லி பல்பு வாங்குகிறார் லுத்ஃபுதீன். இதைப் பார்த்து சதீஷும் மற்றவர்களும் அவரை கிண்டலடித்து கலாய்க்கிறார்கள். போதாக்குறைக்கு அலுவலகத்திலும் ‘ஐ லவ் யூ’ சொன்ன பெண்களிடத்தில் இதே பதில்தான் கிடைக்கிறது.
இதனால் ரோஷப்படும் லுத்ஃபுதீன் தன்னை கிண்டல் செய்யும் நண்பர்களை வெறுப்பேற்ற ஒரு கில்லாடி வேலையைச் செய்கிறார். தனது அலுவலக நண்பரான ஆர்.ஜே.பாலாஜியின் உதவியோடு முகநூலில் பேக் ஐடி ஒன்றை உருவாக்கி அதில் சிங்கப்பூரின் பிரபல டிவி நடிகையான நரேல் கிங்கின் போட்டோவை வைத்து அவர் தன்னைக் காதலிப்பதாகச் சொல்லி தன் வீட்டு நண்பர்களையெல்லாம் நம்ப வைக்கிறார் லுத்ஃபுதீன்.
இந்த நேரத்தில் அவர்களுடைய வீடு இருக்கும் குடியிருப்பிலேயே கருணாகரனும் ஒரு சிறிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். சிங்கப்பூரின் தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் உரிமையாளரான பொன்னம்பலத்திடம் கடன் வாங்கியிருக்கிறார் கருணாகரன். அதனைத் திருப்பி கொடுக்க முடியாமல் தவியாய் தவிக்கிறார்.
இந்தக் கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டி பொன்னம்பலத்திடம் பேசுகிறார் கருணாகரன். ஒரு ரியாலிட்டி ஷோவை வைத்து சேனலை பிரபலப்படுத்த வேண்டியிருப்பதால் அதற்கேற்ற வேலைகளைச் செய்யும்படி சொல்கிறார் பொன்னம்பலம்.
என்ன மாதிரியான புரோகிராமை செட் செய்யலாம் என்று கருணாகரன் கோஷ்டி குழப்பத்தில் இருக்கும்போது இங்கே லுத்ஃபுதீனே அதற்கான களத்தை அமைத்துத் தருகிறார்.
ஊரில் இருந்து அவரது அம்மா போன் செய்து அவருக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், அந்தப் பெண்ணும் இப்போது சிங்கப்பூரில்தான் இருப்பதாகவும் சொல்லி மாதவி என்கிற ஐஸ்வர்யா ராஜேஷின் தொலைபேசி எண்ணை கொடுக்கிறார்.
காதலிக்கவே ஆள் இல்லை என்கிறபோது கல்யாணத்துக்கே ஆள் ரெடி என்பது தெரிந்துவிட விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார் லுத்புதீன். அங்கே ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் அவரைப் பிடித்துப் போய்விட.. இருவரும் காதல்வயப்பட்டு காதலர்களாக மாறுகிறார்கள்.
இந்த நிலையில் முகநூலில் லுத்ஃபுதீனின் பேக் ஐடியில் தனது போட்டோ இணைக்கப்பட்டு தான் லுத்ஃபுதீனுக்கு காதலி என்கிற கமெண்ட்டுகளையெல்லாம் பார்த்து கோபப்படுகிறார் நரேல் கெங்.  இதனால் லுத்ஃபுதீனை பாலோ செய்கிறார் நரேல். போகப் போக லுத்ஃபுதீனின் வெகுளியான குணங்களால் ஈர்க்கப்படும் நரேல், உண்மையாகவே லுத்ஃபுதீனை காதலிக்கத் துவங்குகிறார்.
திடீரென்று லுத்ஃபுதீனுக்கு எதிரில் வந்து நின்று தான் அவரைக் காதலிப்பதாகச் சொல்ல திக்கென்றாகிறது லுத்ஃபுதீனுக்கு. இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷும் கல்யாணத்துக்கு தயாராக இருக்க.. என்ன செய்வது என்கிற குழப்பமாகிறார் லுத்ஃபுதீன்.
இந்தக் கூத்தை பார்த்த கருணாகரன் கோஷ்டி லுத்ஃபுதீனின் வீட்டில் அவர்களுக்கே தெரியாமல் மைக்ரோ போனை வைத்து அனைத்து விஷயங்களையும் ஒட்டுக் கேட்டு அதை டேப் செய்து பொன்னம்பலத்திடம் கொடுத்துவிட்டு கடனை அடைக்க தயாராகிறார்கள்.
இறுதியில் என்னாகிறது என்பதுதான் படமே..!
லுத்ஃபுதீன் இந்தக் கேரக்டருக்கு ஏற்றவர்தான். அடிதடி, வெட்டுக் குத்தெல்லாம் இல்லாமல்.. ஆக்சன் ஹீரோவாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் தனக்கேற்ற கதையில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு நமது நன்றிகள்..!
பெண்களைப் பார்த்து ஜொள்ளுவிடுவதாக சொல்லாமல், காதலிக்க நினைப்பதாக நாகரீகமாகவே ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை மாற்றியிருக்கும் இயக்குநருக்கும் நன்றி.
அந்த உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் லுத்ஃபுதீன். விமானத்தில் பார்க்கும் முதல் பெண்ணில் துவங்கி.. முதல் நாள் டைனிங் டேபிளிலேயே ஆனந்தி, சுகந்தியிடம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை கேட்கத் துவங்கும் கணத்தில் ஆள் இப்படித்தான் என்பதை பதிய வைத்துவிடுவதால் அவர் ‘அலைவதைப்’ பார்த்து பார்வையாளர்களுக்கு எரிச்சல் வரவில்லை என்பது உண்மை.
லுத்ஃபுதீன் வசன உச்சரிப்பு, நடனம், நடிப்பு என்பதில் இன்னும் பல படிகள் ஏற வேண்டியிருப்பதால் இது அவரது முதல் படம் என்பதாலும் குறைகளை குறைவாகச் சொல்லி நிறைகளை நிறையச் சொல்லி ஊக்குவித்து பாராட்டுவோம்.  வெல்கம் பிரதர்..
அதிசயமாக நம்மூர் ஐஸ்வர்யா ராஜேஷைவிடவும் சீன நடிகை நரேல் கெங் நடிப்பில் நம்மைக் கவர்கிறார். ஓரிரு ஷாட்டுகளிலேயே முகபாவனையை சட்டென மாற்றி லுத்ஃபுதீன் மீதான தனது கோபப் பார்வையை காதல் பார்வையாக மாற்றி திரைக்கதையை சுவாரசியப்படுத்தியிருக்கிறார் நரேல் கெங். அம்மணி சண்டை காட்சியிலும் அசத்தல் நடிகை போலும். அந்தச் சண்டை காட்சியும் சூப்பர்தான்..!
ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம்போல காதலியாக வாழ்ந்திருக்கிறார். இடையிடையே விஷயம் தெரியாமல் கோபப்படுகிறார். காதல்வயப்படும்போது பேசும் வசனங்கள் ரைமிங்.. கிளைமாக்ஸில் தன்னைவிட நரேல் கெங்கின் காதல் தீவிரமாக இருப்பதை உணர்ந்து லுத்புதீனிடம் பை சொல்லிவிட்டு விலகும் காட்சியில் நடிப்பில் ஒன்றிப்போய் இருக்கிறார். “நிச்சயம் அவள் அளவுக்கு நான் உன்னை காதலிக்க முடியாது…” என்று சொல்லிவிட்டுப் போகும் ஐஸ்வர்யா ச்சோ.. ஸ்வீட்..!
சதீஷ் வழக்கம்போல இடைமறிக்கும் காமெடியை அள்ளி வீசுகிறார். கூடவே ஆர்.ஜே.பாலாஜி தனது ஸ்டைல் காமெடியையும் கொடுத்துக் கொண்டேயிருக்க.. சில நேரங்களில் யார் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு வசனங்கள் புரியாமல் போய்விட்டது. ஒலிக்கலவையில் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கருணாகரன், பொன்னம்பலம் கதையின் ஊடாகவே காமெடி வரும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள். தியாகியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் கருணாகரன், ஊடக முதலாளியாக தன்னை நிலை நிறுத்த சிரித்தே கொள்ளும் பொன்னம்பலம், இவர்களது இடையில் வேலை பார்த்து கோஷ்டி மாறும் நபர் என்று இன்னொரு பக்கம் சுவாரசியமான திரைக்கதையை இன்னும் சுவாரசியப்படுத்தியிருக்கிறது இந்தக் கூட்டணி.
ஆனந்தி, சுகந்தி என்ற இரண்டு ஹீரோயின்களும் இத்தனை பெரிய உடம்போடு கொஞ்சம் கிளாமரை காட்டியும், கூட்டியும் ஸ்கிரீனைவிட்டு கண் அகலாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநரின் ரசனையே ரசனை..!?
வசனமெழுதிய பேயோனுக்கு இது முதல் படம் என்று நினைக்கிறோம். பல வசனங்கள் புரியாமல் போனதில் அவரது தப்பில்லை. ஆனால் புரிந்த சில வசனங்களும் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருக்கின்றன என்பது புரிகிறது. “நீ என்ன வேண்ணாலும் பனிஷ்மெண்ட் கொடு. ஆத்திரமா ஒரு கிஸ்..?” என்று ஹீரோ அப்போதும் தனது குணாதிசயம் மாறாமல் மன்னிப்பு கேட்பதும், “என் கிஸ் உனக்கு பனிஷ்மெண்ட்டா..?” என்று ஐஸ்வர்யா திருப்பிக் கேட்கும் அழகும்.. செமையான ஹைக்கூ கவிதை..!
சிங்கப்பூரில் லொக்கேஷன்களையெல்லாம் தேடி, தேடி பிடித்திருக்கிறார்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருப்பது போன்ற வெளிப்புற காட்சிகளால் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் விஜயகுமாரின் வேலைத்திறன் தெரிகிறது. இவ்வளவு அழகிய சிங்கப்பூரை இதற்கு முன் வேறெந்த படத்திலும் பார்க்கவில்லை.  
ஜோஷ்வா ஸ்ரீதருக்கு இது 25-வது படமாம். ஆனால் அந்தச் சாதனையைச் சொல்லும் அளவுக்கு பாடல்கள் இல்லை என்பது சோகமான விஷயம். ‘நதியில் விழுந்து போயேன்’ பாடலும், ‘அடி சாலையோர பூங்காற்றே’ பாடலும் கொஞ்சம் இதமாக இருந்தன. எம்.எஸ்.வி.யின் ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடலை இதில் இணைத்திருப்பதன் மூலம் இசையமைப்பாளர்கள் என்பவர்கள் யார் என்பதை நம்மால் உணர முடிகிறது.
தமிழ் சினிமாவின் அரதப் பழசான முக்கோண காதல் கதைதான் இந்தப் படமும். முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதியில்தான் சுவாரசியமான திரைக்கதை அமைந்திருக்கிறது. ஆனால் இன்னமும் அழுத்தமான இயக்கம் இருந்திருக்க வேண்டும். முற்பாதியில் திரைக்கதையில் வலு இல்லை. எனவே கதை எதை நோக்கி போகிறது என்பதையே யூகிக்க முடியாமல் எதையோ பார்க்கிறோம் என்பது போன்ற உணர்வையே  தருகிறது.
இடைவேளைக்கு பின்பான திரைக்கதையில் இருக்கும் டிவிஸ்ட்டுகள்தான் படத்தின் போக்கையே மாற்றி கொஞ்சமேனும் படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. இதையே படம் முழுவதுமாக செய்திருந்தால் லுத்ஃபுதீனுக்காச்சும் இது கவனிக்கத்தக்க படமாக இருந்திருக்கும்..!
‘பறந்து செல்ல வா’ ஒரு வித்தியாசமான முயற்சி..!

0 comments: