அழகென்ற சொல்லுக்கு அமுதா – சினிமா விமர்சனம்

02-12-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“பேரெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா சரக்கைத்தான் காணோம்…” என்பதற்கு உதாரணமாகிவிட்டது இந்தப் படம்.

ஹீரோ ரெஜன் சுரேஷ். 26 வயது இளைஞர். வீட்டில் தண்டச்சோறு. வேலை வெட்டிக்குப் போகாமல் ஊரைச் சுற்றி வருகிறார். அந்த ஊர் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர். வீட்டில் சதாசர்வகாலமும் தனது அப்பாவான ‘பட்டிமன்றம்’ ராஜாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் குறைந்தபட்சம் ஒரு வேளைக்கே 20 இட்லி சாப்பிடுகிறார்.
இவருக்குள்ளும் வழக்கமான சினிமா ஹீரோக்கள் செய்வதை போல ஒரு காதல் பிறக்கிறது. செல்போன் கடையில் வேலை செய்யும் ஆர்ஷிதாவை பார்த்தவுடன் காதல் கொண்டு அவர் பின்னாலேயே செல்கிறார். துரத்துகிறார். பார்க்கிறார். பேசுகிறார். ஆர்ஷிதா அவரை விரும்பவில்லை. காதலிக்க மறுக்கிறார். செருப்பைக் கழட்டி காண்பித்தும்கூட ஹீரோ திருந்தியபாடில்லை.
ரவுடிகளிடம் சொல்லி அடிக்க வைப்பது.. போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று பஞ்சாயத்து செய்வது.. என்று சகல வழிகளிலும் முயற்சித்துப் பார்த்தும் தோற்றுப் போகிறார் ஆர்ஷிதா. இவர் இது போன்று செய்ய.. செய்ய.. ஹீரோவுக்குள் தன்மானம் தூண்டப்பட… விடாப்பிடியாய் ஆர்ஷிதாவின் மீது பைத்தியமாய் அலைகிறார்.
இந்தக் காதல் பைத்தியம் முற்றிப் போய் ஏரியாவில் சிறுவர்களை வைத்து வீட்டுச் சுவற்றில் இருவரின் பெயரையும் எழுதி காதல் சிம்பல் வரைந்து வைக்கும் அளவுக்கு போகிறது.
இதனால் மிக கோபமாகும் ஆஷ்ரிதா தான் கல்யாணம் செய்து கொண்டு போனால்தான் ஹீரோவிடமிருந்து தப்பிக்க முடியும் என்று நினைத்து தனக்கு மாப்பிள்ளை பார்க்கும்படி தன் வீட்டில் சொல்கிறார்.
ஆர்ஷிதாவின் அப்பாவும் அவசரம், அவசரமாக மாப்பிள்ளை பார்க்கிறார். ஆனால் வருபவர்களெல்லாம், ஏற்கெனவே ஹீரோவுடன் ஊர் முழுக்க கிசுகிசுக்கப்பட்ட பெண்ணாச்சே என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்கள்.
அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மிச்சம் மீதியான கதை..!
எடுக்கக் கூடாத கதையை.. எடுக்கத் தெரியாதவிதத்தில் எடுத்துத் தொலைத்திருக்கிறார் படத்தின் இயக்குநரான நாகராஜன். இயக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பதை போல பல காட்சிகளை அமைத்திருக்கிறார்.
முதலில் கதாநாயகனின் கேரக்டர் ஸ்கெட்ச்சே தவறானது.. வேலைக்கு போகாமல் ஊரைச் சுற்றுபவர்.. பொறுப்பில்லாதவர்.. இவருக்கு ஒரு பெண்ணைப் பிடித்துப்போய், அவரை ஒருதலையாய் காதலிக்கிறார் என்பதற்காக, அந்தப் பெண் இவரை காதலித்தே தீர வேண்டும் என்று வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்..?
முதலில் காதலிக்கும் தகுதியாவது ஹீரோவுக்கு இருக்க வேண்டுமே..? அவரே ஒரு மனநோயாளி போலத்தான் படம் முழுவதும் வலம் வருகிறார். அவரைப் போய் எப்படி ஒரு பெண் காதலிப்பார்..? திருமணம் செய்து கொள்ள நினைப்பார்..?
சசிகுமாருக்கு ஒண்ணுவிட்ட தம்பி போலவே பேசுகிறார் ஹீரோ ரெஜின் சுரேஷ். முதல் பத்து நிமிடங்களை கடக்கும்போது ஏதோ காமெடிக்கு பேசுகிறார் போல என்று நினைத்தால் கடைசியில் ஹீரோவின் இயல்பான நடிப்பே இவ்வளவுதான் என்றானவுடன் அத்தனையும் காமெடியாகிவிட்டது.
சாதாரணமான காமெடி நடிகர்களுக்குக்கூட இத்தனை கைதட்டல்களும், சிரிப்பலைகளும் தியேட்டரில் கிடைக்காது. அத்தனையும் ஒரு ஹீரோவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவர் எந்த அளவுக்கு காமெடியான நடிப்பைக் காட்டியிருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்..!
இவருக்கு மட்டுமல்ல.. படத்தில் நடித்த அத்தனை பேரையுமே இதுபோலவேதான் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் ஹீரோவின் அம்மாவான ரேகா சுரேஷின் நடிப்பை சில காட்சிகளில் பார்க்க வேண்டுமே..? கொடுமை எனலாம்..!
ஹீரோயின் ஆர்ஷிதா பரவாயில்லை என்ற முகம். அதிகமான குளோஸப் காட்சிகளில் இவரை மட்டும் படம் பிடித்து ரசிகர்களை கூல் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர். அத்தனையும் வீண்தான். ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சல் மேல் எரிச்சல் வரும் அளவுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தையும் சேர்த்து இழுத்து வைத்திருக்கிறார் இயக்குநர். ரஜினி ரசிகர் மன்றத்திலும் ஊழல் நடப்பது போலவும், அவருடைய ரசிகர்கள் அனைவருமே பதவிக்காக அலைபவர்கள் போலவும்.. அவர்கள் வெட்டி ஆபீஸர்கள் போல ஊரைச் சுற்றி வருபவர்கள் போலவும் காட்சிகள் அமைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.
படம் முழுவதிலும் ஆள், ஆளுக்கு ரஜினி படங்களின் வசனங்களை கொத்துப் புரோட்டா போட்டு பேசுகிறார்கள். நாம் பல முறை கேட்டு, கேட்டு ரசித்த நல்ல, நல்ல வசனங்களை இவர்கள் இழுத்து, இழுத்து பேசுவதை கேட்கும்போது கொடுமையாக இருக்கிறது.
படத்தில் ஒரேயொரு ஆறுதல். ராஜின் மகாதேவின் இசையும், பாடல்களும்தான். ‘ஒரு தேவதையோட’ பாடலும், ‘வியாசர்பாடி’ பாடலும் கேட்பதற்கு இனிமை. பாடல் காட்சிகளும் ரம்மியமாகத்தான் இருக்கின்றன. ஆனால் கதையோடு பார்த்ததால் ஒன்றத்தான் முடியவில்லை.
பல படங்களை பார்க்கும்போது “இது மாதிரியெல்லாம் மத்தவங்களும் படம் எடுக்க மாட்டாங்களா…?” என்று தோன்றும். ஒரு சில படங்களை பார்க்கும்போதுதான் “இது மாதிரியான படங்களை எடுப்பதற்கு, எடுக்காமலேயே இருக்கலாமே…?” என்று தோன்றும். அதில் ஒன்றுதான் இந்தப் படம்..!
இந்தப் படத்திற்கு இவ்வளவு விமர்சனம் எழுதியதே பெரிய விஷயம் என்று நினைக்கிறோம்..! அவ்வளவுதான்..!

0 comments: