சரவணா ஸ்டோர்ஸில் நடந்த சொதப்பலான கொள்ளை திட்டம்

16-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தி.நகர் சரவணா ஸ்டோர்ஸில் 15 ஆண்டுகளுக்கு முன்பேயே தின வசூல் 50 லட்சத்தைத் தாண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் பொறாமை கொள்ளும் அளவுக்கு வசூலில் பட்டையைக் கிளப்பும் அந்தக் கடையிலேயே கை வைக்க சில வில்லாதி வில்லன்களுக்கும் ஆசை வந்தது.அன்றைக்கும் அப்படித்தான் முதல் நாள் வசூலான தொகையான 50 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு டிரெங்க் பெட்டியில் வைத்து கடையின் பின்புற வாசல் வழியாகக் கொண்டு வந்து எப்போதும்போல அதே அம்பாசிடர் காரில் ஏற்றினார்கள். முன்னும் பின்னும் வழக்கமான ஆட்கள் அமர்ந்து கொள்ள கார் பறந்தது.

தி.நகர் பர்கிட் ரோட்டின் முனைக்கு வந்ததும் இரண்டு டூவீலர்கள் குறுக்கே வந்து சட்டென்று நிற்க.. அதில் இருந்த ஆறு பேரில் நால்வர் கீழே குதித்து, காரின் கதவுகளைத் திறந்து அரிவாளைக் காட்டி உள்ளேயிருந்தவர்களை பிடித்திழுத்து வெளியே தள்ளினார்கள்.

டிரைவர் இவர்களை பார்த்து பயந்து போய் இருக்க.. காருக்குள் ஏறி அமர்ந்து டிரைவர் கழுத்தில் கத்தியை வைத்து ஓட்டச் சொன்னார்கள். பர்கிட் ரோட்டின் கடைசிக்கு சென்றவுடன் டிரைவரையும் கீழே இறக்கிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு தப்பியோடினார்கள்.

பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனின் மிக அருகில் பட்டப் பகலில் நடந்த இந்தக் கொள்ளை சென்னையை திகிலடைய வைத்தது.

போலீஸ் பரபரப்பாகி தேட துவங்க.. அவர்களுக்கு அதிகமாக வேலையே வைக்காமல் தானாகவே, அன்றைய இரவிலேயே வந்து மாட்டினார்கள்.

கொள்ளையர்கள். மாட்டிய கதையும் சுவாரஸ்யம்தான்.

கொள்ளையரில் ஒருவர் போதை பார்ட்டி. அவரிடம்தான் 30 லட்சம் ரூபாயைக் கொடுத்து வைத்திருந்தனர். அவர் அதனை தனது மனைவிக்குக்கூட தெரியாமல் தனது தாம்பரம் வீட்டில் பரண் மீது பதுக்கி வைத்திருக்கிறார். வைத்துவிட்டு பேசாமல் வீட்டிலேயே இருந்திருந்தால் கதையே மாறியிருக்கும். ஆனால் அவரால் ச்சும்மா இருக்க முடியவில்லை. விதி விளையாடிவிட்டது.

கொள்ளையடித்த பணத்திலிருந்து சில ரூபாய் நோட்டுக்களை கத்தையாக எடுத்துக் கொண்டு தனியார் டாக்ஸியை புக் செய்து தாம்பரத்தில் இருந்து அடையார் பார்க் ஹோட்டல் பாருக்கு வந்திருக்கிறார்.

மூக்கு முட்ட குடித்துவிட்டு அங்கேயிருந்த ஊழியர்களிடம் “டோப்பு இருக்கா..?” என்று கேட்டிருக்கிறார். போதை மருந்து விற்பனையாளர்கள், மற்றும் உபயோகிப்பாளர்கள் பலரும் அவ்வப்போது அங்கே வந்து செல்வது வழக்கம். ஹோட்டல் ஊழியர்களுக்கும் அது தெரியும். இதனால்தான் தாம்பரத்தில் இருந்து இங்கே வந்து கேட்டிருக்கிறார்.

ஊழியர்கள் “இங்கே அது இல்லை..” என்று சொல்லியும் கேட்காமல் உள்ளே போன மதுவின் மயக்கத்தில் தாம், தூம் என்று குதித்து தன் கையில் இருந்து பணக்கட்டுக்களை எடுத்து அவர்களின் மீது வீசி பெரும் ரகளை செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார்.

ஒவ்வொரு ஹோட்டலிலும் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீஸ் உளவுக்காக ஆள் வைத்திருக்கிறது. அப்படியொரு உளவு ஆள் அன்றைக்கு பார்த்து அங்கே இருந்திருக்கிறார். அவர் உடனேயே மத்திய போதை தடுப்பு போலீஸுக்கு தகவல் சொல்ல.. அவர்கள் விரைந்து வந்து விசாரித்திருக்கிறார்கள்.

டாக்சி எண்ணை ஹோட்டல்காரர்கள் குறிப்பிட்டுச் சொல்ல.. அன்றைய இரவிலேயே தாம்பரம் பஸ்ஸ்டாண்டில் இருந்த அந்த டாக்ஸி டிரைவரை பிடித்தார்கள்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் மது மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த நம்மாளை தட்டியெழுப்பியிருக்கிறார்கள் போலீஸ்.

போதை மருந்து பற்றி அவரிடத்தில் விசாரித்திருக்கிறார்கள். போதை மருந்து இருக்கிறதோ என்றெண்ணி வீட்டை சோதனையிட்டிருக்கிறார்கள். போதை மருந்து கிடைக்கவில்லை. ஆனால் 30 லட்சம் ரூபாய் பணம் கிடைத்தது.

“ஏதுய்யா இவ்ளோ பணம்..?” என்று அவருடைய மனைவி கேட்க.. மதுவின் மயக்கத்திலேயே அன்றைய காலையில் தி.நகரில் அடித்த கொள்ளையை பெருமையாகச் சொல்லியிருக்கிறார் நம்ம அண்ணன்.

பிறகென்ன..? ரொம்ப கூலாக தி.நகர் போலீஸுக்கு தகவலைச் சொல்லி ஆளை பிடித்துக் கொடுத்தார்கள் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீஸார்.

போலீஸ் இவரை 'சுளுக்கெடுத்ததில்' அடுத்தடுத்த நாட்களில் கொள்ளை ஆட்கள் வரிசையாக மாட்டிக் கொள்ள 50 லட்சமும் மீட்கப்பட்டது.

ஆனால் வழக்கு.. அது, இது என்று இழுத்து.. கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்துதான் பணத்தை அண்ணாச்சிகளிடம் கொடுத்தார்களாம்..!

1 comments:

Nat Chander said...

only half of the amount wouldhavebeen given back to saravana... the great police