வெற்றிகரமாக முடிந்த பேருந்து கடத்தல் நாடகம்..!

16-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது 1990-களில் நடந்த கதை..!

மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் யானைமலை ஒத்தக்கடையை தாண்டி, விவசாயக் கல்லூரிக்கும் அடுத்து ஏ.வெள்ளரிப்பட்டி என்ற சிற்றூர் உள்ளது. இந்த ஊருக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியான பேருந்தே உள்ளது.



அந்த ஊரைச் சேர்ந்த ஒரு மாணவி, ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவர்.. அன்றைக்கு வீட்டில் பெற்றோருடன் ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தினால் கோபித்துக் கொண்டு எங்கோ போய்விட்டார். எப்போதும் மாலையில் பள்ளி முடிந்து பேருந்தில் வீடு வந்து சேரும் மாணவி, அன்றைக்கு வராததால் சந்தேகப்பட்ட மாணவியின் பெற்றோர் அங்குமிங்கும் தேடினார்கள். கிடைக்கவில்லை.

ஒத்தக்கடைக்கு வந்து அந்த மாணவியுடன் படித்த சக மாணவிகளை விசாரித்தார்கள். “அவ அப்பவே கிளம்பிட்டாளே..” என்றே பதில் கிடைத்திருக்கிறது. சரி.. நாளை காலைவரையிலும் பொறுத்துப் பார்ப்போம் என்றெண்ணி காத்திருக்கிறார்கள். காலையிலும் மகள் வரவில்லை.

பதறிப் போன பெற்றோர், ஊர்க்காரர்கள் சிலருடன் ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்தார்கள். புகாரை வாங்கிய இன்ஸ்பெக்டர் அப்போது என்ன மூடில் இருந்தாரோ தெரியவில்லை.. வழக்கமாக எல்லாரையும் அர்ச்சிக்கும் பாணியிலேயே இவர்களையும் நக்கல், கிண்டல், கேலி, அர்ச்சனையெல்லாம் செய்துவிட்டார்.

“உன் பொண்ணு யார்கூடயாச்சும் ஓடிப் போயிருப்பா.. புள்ளைய ஒழுங்கா வளர்க்கணும்ய்யா.. அதைவிட்டுட்டு இப்போ இங்க வந்து ஒப்பாரி வைக்குற..? எவனையாவது இழுத்துக்கிட்டு ஓடிருப்பா.. நீயே தேடிப் பாரு.. இல்லாட்டி நாலு நாள் கழிச்சு மாலையும், கழுத்துமா வருவா.. அப்போ நானே சொல்லியனுப்புறேன். வந்து கூட்டிட்டுப் போ..” என்று சினிமா டயலாக் மாதிரியே பேசி வந்தவர்களைக் கடுப்படித்துவிட்டார்.

ஏற்கெனவே வேறு சில வழக்குகளின்போது அந்த இன்ஸ்பெக்டரின் பேச்சாற்றலால் அவர் மீது கடுப்பாய் இருந்த ஊர்க்காரர்கள் இந்த முறை இதை சுலபத்தில் விடுவதாய் இல்லை. ஊருக்குத் திரும்பி ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததைச் சொல்லிவிட ஊரின் இளவட்ட பையன்கள் எல்லோரும் கொதிப்பானார்கள். அந்தாளுக்கு ஏதாவது பாடம் புகட்டணும்.. என்றவர்கள் அடுத்த நாள் காலைவரையிலும் காத்திருந்தார்கள்.

காலையில் முதல் பேருந்து ஊருக்குள் வந்து நின்றது. பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் வண்டியில் இருந்து இறங்கி வழக்கமான அதே டீக்கடையில் ஒரு டீயை குடித்துவிட்டு அக்காடா என்று அமர்ந்தார்கள்.

என்னண்ணே வீல்ல என்னமோ ஒட்டியிருக்கு..?’ என்று பேச்சுவாக்கில் டிரைவரிடம் சொல்லி கலவரப்படுத்த அவரும், நடத்துனரும் என்னமோ, ஏதோ என்றெண்ணி பேருந்தின் அருகே ஓடி வந்தார்கள். அப்படி ஓடி வந்தவர்களை அங்கே தயார் நிலையில் இருந்த ஒரு ஆட்டோவில் வலுக்கட்டாயமாக தூக்கித் திணித்தார்கள் சிலர். ஆட்டோ மெயின் ரோட்டுக்கு வந்து நின்றது..

ஆட்டோவில் இருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் இறக்கிய ஊர்க்காரர்கள்.. “இங்க பாருண்ணே.. உங்களுக்கும், எங்களுக்கும் எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. எங்க ஊர்க்காரப் பொண்ணு ஒண்ணு காணாமப் போயிச்சு. பொண்ணைப் பெத்தவங்க தவியாய் தவிச்சுக்கிட்டிருக்காங்க. இப்போவரைக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஒரு தகவலும் இல்லை. அதுனால நாங்க என்ன செய்றோம்னா.. உங்க பஸ்ஸை நாங்க கடத்தி வைச்சிருக்கோம்னு உங்க மேலதிகாரிகள்கிட்ட சொல்லிருங்க. குறிப்பா அந்த ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர்கிட்ட.. எது வந்தாலும் நாங்க பார்த்துக்குறோம்.. இப்போ நீங்க கிளம்புங்க..” என்று அவர்களை பேசக்கூட விடாமல் தடுத்து அனுப்பிவிட்டார்கள்.

அதிர்ச்சி தாங்காமல் ஓட்டுநரும், நடத்துனரும் அந்த வழியே வந்த பேருந்தில் ஏறி நடந்ததை அந்த பேருந்து ஓட்டுநரிடம் சொல்லி, “டெப்போல சொல்லிருய்யா..” என்று சொல்லிவிட்டு ஒத்தக்கடையில் இறங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்கள். அங்கே இன்ஸ்பெக்டர் இல்லை. மதுரைக்குள் போயிருப்பதாகத் தெரிய.. ஸ்டேஷனில் இருந்த கான்ஸ்டபிள்களிடம் இதைச் சொல்லியிருக்கிறார்கள்.

“ஐயையோ..” என்று பதறிப் போன கான்ஸ்டபிள்கள், இன்ஸ்பெக்டருக்கு போனை போட்டு அவசரமாக வரச் சொல்லியிருக்கிறார்கள். அவர் வந்து சேரவே மதியம் 12 மணி ஆகிவிட.. வந்து விசாரித்து தனது உயரதிகாரிகளுக்கு தகவலை பாஸ் செய்துவிட்டு ஊருக்கு கிளம்பி வருகிறார் இன்ஸ்பெக்டர். கூடவே பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும்.. காலையில் பேருந்து நின்றிருந்த இடத்தில் இப்போது இல்லை.

யோவ்.. எங்கய்யா பஸ்ஸு..?

எங்க பொண்ணு எங்க ஸார்..?

யோவ் அது கவர்ன்மெண்ட்டு பஸ்ஸுய்யா..

அது எங்க ஊர் பொண்ணு ஸார்..

டேய்.. யார்கிட்ட பேசுறீங்க தெரியுதா..? ஊரையே மொத்தமா தூக்கி உள்ள வைச்சிருவேன்..

எங்க புகார் என்ன ஸார் ஆச்சு..?

யோவ்.. பஸ்ஸை கடத்தியிருக்கீங்கய்யா.. அது பெரிய குத்தம்யா..?

எங்க பொண்ணும் காணாமப் போயி 24 மணி நேரமாச்சு ஸார்..

- இப்படியே இன்ஸ்பெக்டரும், ஊர்க்காரர்களும் வாயாலேயே வசனம் பேசிக் கொண்டிருக்க, மதுரை மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளும் பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தின் உயரதிகாரிகளும் ஓடோடி வந்தார்கள்.

வந்தவர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் வரவேற்று சேர் போட்டு அமர வைத்து, நடந்ததைச் சொல்லியிருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். “இருந்தாலும் இது சட்டப்படி மிகப் பெரிய குற்றம்.. நீங்க இப்போ பஸ்ஸை ஒப்படைக்கலான்னா, உங்க எல்லோரையும் கைது செய்ய வேண்டி வரும்..” என்றார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். “இங்க இருக்குற யாரை வேண்ணாலும் அரெஸ்ட் செஞ்சுக்குங்க. ஆனா ஒண்ணு, ஒருத்தன் மேல கை வைச்சீங்க அப்புறம் பஸ்ஸோட ஒரு நட்டு போல்ட்டுகூட உங்களுக்குக் கிடைக்காது. சொல்லிப்புட்டோம்..” என்று ஒரு பெருசே சவால்விட்டதை கண்டு திகைத்தார் காவல்துறை கண்காணிப்பாளர்.

அன்றைக்கு ஒத்தக்கடை இன்ஸ்பெக்டருக்கு அந்த இடத்தில், அத்தனை பேரின் மத்தியில் கிடைத்த மண்டகப்படியை ஜென்மத்தில் அவர் மறந்திருக்கவே மாட்டாராம்.. போலீஸ் உயரதிகாரிகள் அவரை அப்படிப் போட்டுத் தாளித்திருக்கிறார்கள். 

“கிராமத்து பொண்ணுகன்னா நீங்க என்ன வேண்ணாலும் பேசுவீங்களா..? இதையே எங்கூர்க்கார பசங்க யாராச்சும் பேசியிருந்தால் இந்நேரம் கொலையே நடந்திருக்கும். அது போலீஸ் ஸ்டேஷன்றதால விட்டுட்டு வந்தோம்...” என்று கொதிப்படங்காமல் பேசிய ஊர்க்காரர்களிடத்தில் பாண்டியன் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பேரம் பேசியிருக்கிறார்கள். ம்ஹூம்.. எதற்கும் மசியவில்லை.

அதற்குள்ளாக மாலை நேரமாகிவிட்டதால் போலீஸ் வெறும் கையுடன் திரும்பியது. மறுநாள் காலை சர்.. சர்ரென போலீஸ் ஜீப்புகளும், வேன்களும், பஸ்களும் ஊருக்குள் வந்து இறங்கின. போலீஸ் பஸ்ஸில் இருந்து இறங்கிய ஆயுதப் படை காவலர்கள் ஊரைச் சுற்றியிருந்த மேடு, பள்ளம், பாறை, இப்போது கிரானைட் குவாரிகளாக இருக்கும் இடம்  என்று இண்டு இடுக்குவிடாமல் தேடத் துவங்கினார்கள்.

ஊரில் டீக்கடையைகூட மூடிவிட்டு ஆண்கள் அனைவரும் மந்தையில் வந்து உட்கார்ந்து கொள்ள.. மறுபடியும் சமாதானப் பேச்சு வார்த்தை. ம்ஹூம்.. அசைந்து கொடுக்கவில்லை மக்கள். “ஸார். பஸ்ஸு பத்திரமா இருக்கு. திருப்பித் தரோம். மொதல்ல எங்க ஊரு பொண்ணை தேடிக் கண்டுபிடிச்சு கொடுங்க.. அவ்ளோதான்..” என்று திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்க.. மூன்று தனிப்படை போலீஸை போட்டு பொண்ணை தேடி வருவதாகச் சொன்னார்கள் போலீஸார். “அது ஓகே ஸார்.. பொண்ணை கூட்டிட்டு வாங்க. நாங்க பஸ்ஸை தர்றோம்..” என்றனர்.

அந்த வேகாத வெயிலில் பஸ்ஸை தேடியலைந்த ஆயுதப் படை காவலர்களுக்கு நா வறண்டதுதான் மிச்சம். “அவ்ளோ பெரிய பஸ்ஸை எங்கதான்யா மறைச்சு வைச்சானுக?” என்ற ஆச்சரியத்துடன் ஊர்க்காரர்களை பெருமிதத்துடன் பார்த்தனர் ஒரு சில காவலர்கள்.

எங்கு தேடியும் கிடைக்காததால் ஊர்க்காரர்களை கைது செய்ய மேலிடத்தில் அனுமதி கேட்டது போலீஸ். “அது வேண்டாம். சமாதானமா பேசி பஸ்ஸை வாங்குங்க..” என்று அங்கேயிருந்து தகவல் வர.. மறுபடியும் மரத்தடி பஞ்சாயத்து.. ம்ஹூம்.. பலனில்லை.

அதே நாள் இரவு.. சிவகாசி அருகே திருத்தங்கல் என்ற ஊரில் இருக்கும் பேருந்து நிலையத்தில் மதுரை போகும் பஸ்ஸுக்காக ஸ்கூல் யூனிபார்மில் காத்திருந்த வெள்ளரிப்பட்டி மாணவி அந்த ஊர் போலீஸாரின் கண்ணில்பட்டார். அவர்கள் விசாரித்து இவர்தான் அவர் என்பது தெரிந்து மதுரைக்குத் தகவல் சொல்லி.. இரவோடு இரவாக மாணவி மதுரைக்கு அனுப்பப்பட்டார்.

மதுரையில் ஆயுதப் படை குவார்ட்டர்ஸில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. “அம்மா அடிச்சுச்சு. அதான் கோச்சுக்கிட்டு சிவகாசில இருக்குற மாமா வீட்டுக்கு வந்தேன். அங்கே மாமாவும் இல்லை. அத்தையும் வீட்ல சொல்லாம வந்ததுக்காக என்னைய திட்டுச்சு. அதுனால திரும்பவும் ஊருக்கே போலாம்னு பஸ்ஸ்டாண்டுல நின்னுக்கிட்டிருந்தேன்..” என்றார் அப்பாவியாய்..!

இரவெல்லாம் அவரை அங்கேயே வைத்திருந்துவிட்டு மீண்டும் காலை 6 மணிக்கெல்லாம் மாணவியை அழைத்துக் கொண்டு ஊருக்குள் வந்து நின்றது போலீஸ். “இந்தாப்பா உங்க பொண்ணு.. சிவகாசில கண்டுபிடிச்சோம்..” என்று சொல்லி பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீஸார்.. நிம்மதிப் பெருமூச்சுவிட்ட பெற்றோர்.. “உக்காருங்க. இவ்ளோ தூரம் நல்லது செஞ்சிருக்கீங்க. ஒரு வாய் சாப்பிட்டுட்டு போங்க..” என்று போலீஸ் உயரதிகாரிகளை உபசரிக்கத் துவங்க.. “அதெல்லாம் வேணாம்பா.. மொதல்ல பஸ்ஸை கொடுங்க..” என்று போலீஸார் எரிச்சலானாலும்.. “ச்சும்மா உக்காருங்க ஸார். டீயாவது சாப்பிடுங்க..” என்று வந்திருந்த அத்தனை பேருக்கும் டீ கொடுத்து உபச்சாரம் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் டீயை குடித்து முடிப்பதற்குள்ளாக 60 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் சட்டையில்லாமல் வெறும் வேஷ்டி மட்டுமே கட்டிய நிலையில் மெயின் ரோட்டில் இருந்து சைக்கிளில் வந்தவர்.. சாவகாசமாக போலீஸார் மத்தியில்  வந்து இறங்கி.. “ஏம்ப்பா பஸ்ஸை மெயின் ரோட்டுக்கு கொண்டாந்தாச்சாம்.. போய் எடுத்துக்கச் சொல்லு.. ஒரு டீ போடும்மா..” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவர்கள் அருகேயே அமர்ந்ததை பார்த்து திகைத்தே போனார்கள் போலீஸார்.

“இப்போ போறோம்.. ஆனா ச்சும்மா இருக்கோம்னு மட்டும் நினைக்காதீங்க..” என்று எச்சரித்துவிட்டு கோபத்துடன் கார் ஏறினார்கள் போலீஸ் அதிகாரிகள். பஸ்ஸை மீட்க வந்த ஓட்டுநர், நடத்துனரிடம் “நல்லா பார்த்துக்க சாமி.. அப்புறமா டயரை காணோம்.. ஸ்டியரிங்கை காணோம்னு வந்து கம்ப்ளையிண்ட் செய்யக் கூடாது..” என்று பவ்யமாகச் சொல்லி பேருந்தை ஒப்படைத்தார்களாம் ஊர்ப் பெரிசுகள்..!

அப்போது மேலூர் பகுதியில் செல்வாக்குடன் இருந்த அம்பலக்காரர்கள், ஏ.வெள்ளரிப்பட்டி ஊர்க்காரர்களை அழைத்துக் கொண்டு போலீஸ் உயரதிகாரிகளை நேரில் சந்தித்து, “இனிமேல் இது போல் நடக்காது” என்று சமரசம் செய்து வைத்தார்களாம்.

இது போல் இன்றைக்கு தமிழகத்தில் எந்த ஊரிலாவது செய்ய முடியுமா..? ஊரையே கொளுத்திருவாங்க ஆத்தாவோட போலீஸ்..!

(அன்றைய தினத்தந்தியில் இது பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி நான் படித்து என் நினைவில் இருப்பதில் இருந்து இதனை எழுதியிருக்கிறேன்.)

1 comments:

Ponchandar said...

அந்த பஸ்ஸை எங்கே ஒளிச்சு வச்சிருந்தாங்கன்னு கடைசிவரை சொல்லலையே ! ! !