காதலும் கடந்து போகும் - சினிமா விமர்சனம்

12-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உலக சினிமா ஆர்வலர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த படம் 2010-ம் வருடம் வெளிவந்த ‘My Dear Desperado’ என்கிற கொரியன் திரைப்படம். கொரியாவில் பாக்ஸ் ஆபீஸில் உண்மையாகவே ஹிட்டடித்து விருதுகளையும் பெற்ற படம்.
இதன் கதையை முறைப்படி கேட்டு வாங்கி படத்தில் வரும் ஒரு சில காட்சிகளைத் தவிர மீதமானவற்றை தமிழுக்கேற்றபடி கொஞ்சம் மாற்றி ‘காதலும் கடந்து போகும்‘ என்று அளித்திருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.
இதே படத்தை அனுமதி வாங்காமலேயே இந்தக் கூட்டணி அளித்திருக்கலாம். ஆனால் முறைப்படி செய்வோமே என்று இனிமேல் தயங்காமல் காப்பியடிக்க இருப்பவர்களின் மண்டையில் குட்டுவதைப் போல, ஒரு நல்ல வழியைக் காட்டியிருக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு நமது பாராட்டுக்கள்.
இந்த கொரியன் திரைப்படம் 2013-ம் வருடம் ஹிந்தியில் விவேக் ஓபராய், நேகா சர்மா நடிப்பில் ‘Jayantabhai Ki Luv Story’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

விழுப்புரத்தில் தனது அப்பா, அம்மா, தங்கையுடன் வசித்து வரும் ஹீரோயின் மடோனா ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளார். அவருடைய தாய், தந்தைக்கு இது பிடிக்கவில்லை. உள்ளூரிலேயே வேலை தேடிக் கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். இதனால் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்குக் கிளம்புகிறார் மடோனா. இதனால் கலவரமான அவரது பெற்றோர் அவரை அரை மனதுடன் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
சென்னையில் டைட்டல் பார்க்கில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் மடோனா. தோழிகளுடன் தனியே வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார். வாழ்க்கை சந்தோஷமாக போக ஆரம்பித்த சூழலில் திடீரென்று அவர் வேலை பார்க்கும் நிறுவனம் வங்கி மோசடியில் சிக்கி மூடப்பட… வேலையை இழக்கிறார் மடோனா. அதுவரையில் பெரிய வீட்டில் இருந்தவர் சட்டென பொருளாதார நெருக்கடி காரணமாய் சின்னதாய் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு குடி வருகிறார்.
அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் விஜய் சேதுபதி குடியிருக்கிறார். ஒரு மது பாரின் ஓனராக வேண்டும் என்பதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி இப்போதைக்கு லோக்கல் தாதாவான சத்யா சுந்தரிடம் அடியாளாக இருக்கிறார். கடனையும், மாமூலையும் வசூலித்து தந்து கொண்டிருக்கிறார்.
விஜய்க்கும், மடோனாவுக்கும் இடையேயான நட்பு முதலில் சண்டையில் ஆரம்பிக்கிறது. பின்பு போகப் போக இருவருக்குமிடையில் நல்ல புரிதல் உண்டாகி அது நட்பாகிறது. அந்த நட்பு சோகத்தைத் தீர்த்துக் கொள்ள இருவரும் சேர்ந்து தண்ணியடிக்கும் அளவுக்கு செல்கிறது.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் பழ அங்காடியில் பார்ட் டைம் வேலை பார்க்கிறார் மடோனா. இந்த்த் தகவல் அவரது பெற்றோருக்குத் தெரிய வர உடனடியாக அவரை ஊருக்கு வரச் சொல்கிறார்கள்.  ஊருக்குப் போனால் திரும்பவும் அங்கேயே உட்கார வைத்துவிடுவார்கள் என்பதால் தான் சில நாட்களில் வேலையில் சேரப் போவதாகவும், இங்கே தனக்கொரு காதலர் இருப்பதாகவும், அவர்தான் தனக்கு வேலை வாங்கித் தருவதாகவும் பொய் சொல்கிறார். அவரையும் அழைத்துக் கொண்டு வரும்படி அப்பா சொல்லிவிட.. வேறு வழியில்லாமல் விஜய் சேதுபதியை தன்னுடைய காதலராக நடிக்கும்படி வற்புறுத்தி அவரை விழுப்புரத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
என்னதான் டிரெயினிங் கொடுத்தாலும் விஜய் சேதுபதியால் இயல்பு நிலைமையை மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்தப் பயணத்தில் தான் விஜய்யை காதலிப்பதாகச் சொல்லிவிடுகிறார் மடோனா. அன்றைக்கே ஒரு சம்பவத்தின் மூலம் விஜய் மீது மடோனாவின் குடும்பத்தினர் அதிருப்தியாக.. இவர் மட்டும் சென்னை திரும்புகிறார். அதே நேரம் சென்னையில் சத்யா சுந்தர் நடத்தி வரும் பார்களை இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி சீல் வைக்கும் வேலையில் இறங்க.. இதற்காக விஜய் சேதுபதியை களமிறக்குகிறார் சத்யா சுந்தர்.
அன்றைய நாளில் தனது வேலைக்கான இரண்டாவது மற்றும் கடைசியான நேரடித் தேர்வை சந்திக்க தயாராகிறார் மடோனா. தான் செய்யப் போகும் அடியாள் வேலையைவிடவும் மடோனாவுக்கு வேலை வாங்கித் தருவதில் உறுதியாக இருக்கிறார் விஜய். அதைச் செய்தாரா..? மடோனா வேலையில் சேர்ந்தாரா..? இருவரின் காதலும் என்ன ஆனது என்பதுதான் திரைக்கதை.
படத்தை தமிழுக்கேற்றபடி மாற்ற நினைத்த இயக்குநர் அதற்கு வசதியாக அவர் தேர்ந்தெடுத்த ஒரு விஷயத்துக்காக அவரை மேலும் பாராட்ட வேண்டும்.
ஹீரோயின் மடோனா அதிகம் பிரபலம் இல்லாத கல்லூரியில் படித்து பட்டம் பெற்றதால் மிகப் பெரிய நிறுவனங்களில் அவரை வேலைக்கு எடுக்க மறுக்கிறார்கள். திறமை இருக்கிறதா என்றுகூட பார்க்காமல் நிராகரிப்பதாக மனம் புழங்குகிறார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஹெச்.ஆர். மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கே போன் செய்து இது பற்றி புலம்பித் தள்ளுகிறார். திட்டித் தீர்க்கிறார் மடோனா. கூடவே விஜய் சேதுபதியிடம் பேசும்போது, “எங்க நிலைமையே இப்படியிருக்கும்போது புதுசு புதுசா என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு பெர்மிஷனையும் கொடுக்குறாங்க. அதுல படிக்குறவங்க என்ன ஆவாங்களோ..? என்கிற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.
படத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இது. நியாயமான உணர்வும்கூட. இன்றைக்கும் அதிகம் பெயர் அறியப்படாத கல்லூரிகளில் பல லட்சம் ரூபாயை கட்டணமாகக் கொடுத்து பொறியியல் படிப்பு படித்த மாணவர்களெல்லாம் 10000, 15000 சம்பளத்துக்கெல்லாம் சின்ன நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். அதே நேரம் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தும் அளவுக்கு பிரபலமான கல்லூரிகளில் படித்தவர்கள் படிப்பை முடிப்பதற்குள்ளாக வேலை கிடைத்து செட்டில் ஆகிறார்கள்.
எந்தக் கல்லூரியில் படித்தால் என்ன..? அதான் பட்டம் கிடைக்கப் போகிறதே..? என்றெண்ணும் மாணாக்கர்களுக்கு இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் நலன் குமாரசாமி சொல்லியிருக்கும் இந்த விஷயம் நிச்சயம் ஒரு புரிதலைத் தரும் என்று நம்புகிறோம்.
‘சூது கவ்வும்’ என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த டீம் என்பதால் அடுத்தப் படத்திற்கு அதைவிட அதிகமாக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் ‘ஆம்’ என்றே சொல்லலாம். படத்தின் பல காட்சிகளில் தியேட்டர்களில் கைதட்டல்கள் தூள் பறக்கின்றன.
விஜய் சேதுபதியின் உடற்கட்டுக்கு ஏற்ற அடியாள் வேடம் என்றாலும் அதிலும் அவர் செய்யும் சில, பல ஸ்டைல்களும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாரில் ரகளை செய்பவர்களை ஒரு ஆர்வத்தில் அடிக்கப் போய் பலமாக அடிவாங்கிவிட்டு கீழே விழுந்து புரண்டு இனி சமாளிக்க முடியாது என்று நினைத்து கண்ணாடியை அணிந்து கொண்டு சிகரெட்டை பறித்து வாயில் வைத்தபடியே மின்னல் வேகத்தில் படியிறங்கிச் செல்லும் அந்த கிளாஸ் நடிப்பிற்கு முதல் கை தட்டல் கிடைக்கிறது.
கூடுதலாக 100 ரூபாய் கேட்டதால் பொருட்களை தூக்கி வைக்காமல் போய்விட்டதாக மடோனா சொல்ல. ‘அப்ப நீயே தூக்கு’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு போகின்ற பாங்கு.. மடோனாவின் குட்புக்கில் இடம் பிடித்துவிட்டதாக நினைத்து ‘கா.க.போ.’ பாடலை வெறியுடன் ஆடும் ஆட்டம்.. எக்ஸிமோ நாய் வசனத்தை மனதில் வைத்திருந்து பின்பு எடுத்துவிடும் காட்சி.. மடோனாவின் பெற்றோர்களை சமாளிக்க முடியாமல் தவிப்பது.. சமுத்திரக்கனியை தாக்கச் செல்லும் காட்சியில் உடன் வரும் தம்பியை அடித்து ‘வராதே போ’ என்று சொல்லி விரட்டுவது.. அரைமணி நேரத்திற்கு நேர்முகத் தேர்வை நீடிக்க வைக்க அவர் செய்யும் டிராமா.. என்று விஜய் சேதுபதியின் சுவையான ஆட்டம் படத்தில் அமர்க்களம்..!
‘பிரேமம்’ படத்தில் பார்த்தே சொக்கிப் போயிருக்கும் மடோனா செபாஸ்டியன் முதல் முறையாக தமிழில் கால் வைத்திருக்கிறார். அற்புதமான கேரக்டர். அழகான நடிப்பு.. ‘நேரம்’ படத்தில் நஸ்ரியாவை பார்த்து திகைத்து, அதிர்ச்சியாக ரசித்ததை போல இந்தப் படத்திலும் தனது இயக்கத் திறமையால் இவரை அணு, அணுவாக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
படிப்பது பெருமைக்காக அல்ல.. சொந்தக் காலில் நிற்பதற்காக.. இதன் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காக என்பதை இவரது கேரக்டர் ஸ்கெட்ச்  மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
போட்டோஜெனிக் முகம் என்பார்களே அது மடோனாவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. குளோஸப் காட்சிகளில் அவர் காட்டும் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள்கூட ரசிக்க வைக்கிறது. தமிழ்ச் சினிமாவுக்கு இன்னொரு நஸ்ரியா கிடைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதியுடனான முதல் சந்திப்பு முதலே அவரை ரவுடிபோல் பாவித்து பேசுவதும்.. பின்பு தன்னைத் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு வந்து சேர்ப்பித்த்து.. தன்னை படுக்கைக்கு அழைத்தவனை புரட்டியெடுத்த பின்பு இவர்கள் இருவருக்கும் நெருக்கம் கூடத் துவங்குவதை ஆட்டோவில் ஒரு ஷெல்பி எடுப்பதன் மூலமாக சிம்பிளாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இருவரும் சேர்ந்து மது அருந்தும் காட்சியை இந்தப் படத்தில் முற்றிலுமாக நீக்கியிருக்க வேண்டும். இயக்குநர் ஏன் வைத்தாரோ..? அந்தக் காட்சியின் மூலம் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மது பழக்கம் இல்லாத மாணவிகள் தெரிந்தோ, தெரியாமலோ உடன் படிக்கும் மற்ற மாணவிகளால் மதுவை டேஸ்ட் செய்யும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள் என்று அர்த்தமாகிவிட்டது.
குடையை வாங்கி வந்து கொடுத்ததற்காக ‘தேங்க்ஸ்’ என்று மடோனா சொல்லும் வார்த்தையை விஜய் சேதுபதி பின்பு பல இடங்களில் அதனைச் சொல்லிப் பழகுவதும்.. ‘எப்படியோ இருக்க வேண்டிய பொண்ணு.. வேலை கிடைக்காமல் இப்படி கஷ்டப்படுதே’ என்பதற்கான அழுத்த்த்தை அவருடைய குடும்பத்தினர் காட்டும் நெருக்கடியில் உணர்ந்து கொள்ளும் விஜய் சேதுபதி, இதனாலேயே கிளைமாக்ஸில் நேர்முகத் தேர்வில்  தலையிடும் முடிவுக்கு வருவதை திரைக்கதையில் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
மடோனாவின் அப்பாவான கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்.. தாதாவாக மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு நடித்திருக்கும் சத்யா சுந்தர்.. 3 காட்சிகளில் வந்தாலும் அழுத்தமாக தனது வருகையைப் பதிவு செய்திருக்கும் சமுத்திரக்கனி.. விஜய்யின் டிரைவராக வரும் அந்த இளைஞன்.. என்று அனைவருமே அவரவர் பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் இறுதிவரையிலும் கலர்புல்தான். வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீட்டையும் இத்தனை நேர்த்தியாக, கலை ரசனையோடு காண்பித்திருக்கிறார். அந்த தண்ணி பார்ட்டி காட்சியின்போதும், அதற்கடுத்த காட்சியிலும் கேமிராவின் கைவண்ணம் அழகு.. கன்னத்தில் முத்தம் கொடுக்கப் போகிறாரோ என்று நினைத்தால் விஜய் சேதுபதியின் தோளில் மெதுவாக சாய்ந்து மயங்கும் மடோனாவின் அழகை மிக அழகாக ரசிக்க வைத்திருக்கிறார் கேமிராமேன். வெல்டன் ஸார்..
இப்போதைய ஹாட்டான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் இசையில் படத்தின் தீம் மியூஸிக்கில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அதிலும் பின்னணி இசை பல இடங்களில் அமர்க்களமாக நகைச்சுவையை வரவழைத்திருக்கிறது.
படம் பிற்பாதியில் மிக மெதுவாக நகர்வதைப் போல தோன்றினாலும் இந்தக் கதைக்கு இப்படித்தான் இருந்தாக வேண்டும். ஹீரோயிஸ படமாக கொண்டு போகாமல் சண்டை காட்சியில்கூட அடி வாங்கிக் கொண்டு தப்பித்து ஓடும் ஹீரோவாக காட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமா இப்படித்தான் இருக்கும் என்கிற டெம்ப்ளேட்டையெல்லாம் சமீபத்திய இயக்குநர்கள் உடைத்துக் கொண்டே வருகிறார்கள்.  அந்த வரிசையில் இந்தப் படத்தையும் நிச்சயம் சொல்லலாம்..!
படத்தின் இறுதிக் காட்சியில் மடோனாவின் முகத்திற்கு ஜூம் செய்தபடியே போகும் கேமிராவின் காட்சியைப் பார்த்தவுடன் “ஆஹா.. அது நிச்சயம் விஜய் சேதுபதியா இருக்கணுமே..?” என்று ரசிகர்களையும் மனதுக்குள் சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர். இதுவே அவருக்கும், அவர் படத்திற்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி..!
‘காதலும கடந்து போகும்’ எந்தவொரு தமிழ் சினிமா ரசிகனும் பார்க்காமல் கடந்து போக முடியாத படம்..!

0 comments: