பர்மா - சினிமா விமர்சனம்

14-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சின்ன கதை. அதனால் 98 நிமிடங்களில் படத்தை முடித்திருக்கிறார்கள். இதுவே மிகப் பெரிய பின்னடைவாகவும் இருக்கிறது..!

கார் வாங்க கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வருகிறார் கோத்ரா சேட்டுவான அதுல் குல்கர்னி. ஒழுங்காக தவணை செலுத்தாதவர்களின் கார்களை பின் தொடர்ந்து சென்று வேறொரு சாவியை வைத்து எடுத்து வர ஒரு டீமை வைத்திருக்கிறார். அவர் குணாவாகிய சம்பத். இந்த சம்பத்தும் இதில் நேரடியாக இறங்குவதில்லை. இவரும் தனக்குக் கீழ் இரண்டு பேரை வேலைக்கு வைத்திருக்கிறார். ஒருவர் பரமானந்தம் என்கிற பர்மா. இன்னொருவர் பூமர்.
அப்போதுவரையிலும் அதுல் குல்கர்னிக்கும் ஹீரோ பர்மாவுக்கும் நேரடி தொடர்பில்லை.. சம்பத் தங்களுக்கு சொற்பத் தொகையாக வெறும் 100 ரூபாயைக் கொடுத்து ஆயிரத்தில் சம்பாதிப்பதை தெரிந்து கொண்ட ஹீரோ பர்மா கோபப்பட்டு,  சம்பத்தை ஒரு திருட்டுக் காரில் போக வைத்து போலீஸில் மாட்ட வைக்கிறார்.
இந்த வழக்கில் சம்பத்திற்கு ஒரு வருட கால சிறை தண்டனை கிடைக்கிறது. இந்த இடைவெளியில் சம்பத்தின் போஸ்ட் பர்மாவுக்குக் கிடைக்கிறது. அதுல் குல்கர்னியிடம் வேலைக்குச் சேர்ந்து தனது தோழன் பூமரின் உதவியுடன்  கச்சிதமாக வேலையை முடித்து கணிசமான தொகையைப் பெற்று ஜாலியாக இருக்கிறார் பர்மா.
இவருக்குள்ளும் ஒரு காதல்.. தற்போதைய தமிழ்ச் சினிமா டிரெண்ட்படி ரவுடிகளைத்தானே ஹீரோயின்கள் காதலிக்கிறார்கள். அப்படித்தான் ரேஷ்மி மேன்ன் ஹீரோ பர்மாவை லவ்வுகிறார். தன்னுடைய பிறந்த நாளன்று தான் பர்மாவை காதலிப்பதாக தன் அப்பாவிடம சொல்கிறார் ரேஷ்மி. பதிலுக்கு அப்பா செவிட்டில் அறைந்து வீட்டைவிட்டு அனுப்புகிறார்.. ரேஷ்மி நேராக பர்மாவிடம் வந்து அவனை அதே செவிட்டில் அறைந்துகாட்டிவிட்டு காதலன் வீட்டிலேயே ஐக்கியமாகிறார்.
இப்போது சம்பத்தும் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார். பர்மாவை நேரில் சந்தித்தும் மோதலை வளர்க்காமல் காலம் எதிர்பார்த்து காத்திருக்க முடிவு செய்கிறார். இந்த நேரத்தில் அதுல் குல்கர்னி 28 கார்களின் லிஸ்ட்டுகளை கொடுத்து அவைகளை கடத்தி வரும்படியான ஒரு அஸைன்மெண்ட்டை பர்மாவிடம் தருகிறார்.
குல்கர்னி சொல்லியபடியே அதைச் செய்யும் பர்மாவுக்கு அவன் 28-வது காரை கடத்தும்போது விதி விளையாடுகிறது.. கார் திடீரென்று காணாமல் போக.. குல்கர்னி அதை நம்ப மறுக்கிறார். விலையுயர்ந்த ஆடி கார் என்பதால் பர்மா காரை கடத்தி வைத்துக் கொண்டு ஏமாற்றுவதாகச் சொன்னவர்.. பர்மாவின் காதலியை தன் வசம் வைத்துக் கொண்டு காரை கொடுத்து காதலியை கூட்டிட்டுப் போ என்று டீல் பேசுகிறார்.
பர்மா, காரை மீட்டானா..? அல்லது காதலியை மீட்டானா என்பதுதான் மிச்சம் மீதி கதை..!
இது போன்ற திரில்லர், சேஸிங் கதைகளில் கேரக்டர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகள் பலமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் கதையோடும், கேரக்டர்களோடும் ஒன்ற முடியாது.. தன்னை ஒரு வருடம் ஜெயிலில் இருக்க வைத்தவனை வெளியில் வந்தவுடன் ஒண்ணுமே செய்யாமல் சம்பத் வேடிக்கை பார்ப்பது போன்ற இந்தத் திரைக்கதையில் வலுவில்லை.. இதில் மட்டுமில்லை.. சம்பத் இந்தப் படத்தில் எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. கடைசியாக போலீஸில் மாட்டுவதுகூட திரும்பவும் ஒரு காமெடியாகத்தான் பதிவாகிறதே தவிர உணர்ச்சிப்பூர்வமாக இல்லை..!
இப்போது இது போன்ற சம்பவங்களை கார் திருட்டு என்றே வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. கார்களுக்கு தவணை கட்டாவிட்டால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி கோர்ட் மூலமாகத்தான் கார்களை பறிமுதலோ, முடக்கவோ செய்ய வேண்டும் என்று தீர்ப்பாகி பல வருடங்களாகிவிட்டது.. ஆனாலும் இது தெரியாமல் சில பைனான்ஸியர்கள் லோக்கல் போலீஸாரை சரிக்கட்டி இத்தொழிலை செய்து வருகிறார்கள் என்பதும் உண்மைதான். இந்தப் படத்தில் அந்த லோக்கல் போலீஸையும் காட்டவில்லை. அவர்களுக்கும் கோத்ரா சேட்டுவுக்கும் உள்ள தொடர்பும் எதுவுமில்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஏடிஎம்-களில் பணம் நிரப்பப் போகும் வேனை கொள்ளையடிக்கும் அந்தக் கும்பலின் செயல்பாடுகளில் ஒரு குறையும் இல்லை.. நீட்டான திரைக்கதை அது.. ஆடி கார் கொள்ளைக்கு பின்பு.. அந்தக் காரை மடக்க பர்மா போடும் திட்டமும்.. அதற்குப் பின் அடுத்தடுத்து வரும் டிவிஸ்ட்டுகளும் செமத்தியாக படமாக்கப்பட்டுள்ளன.
காதலனுடனேயே தங்கிவிடும் ஹீரோயினும் இந்தக் கொள்ளைக்கு கூட்டு சேர்கிறார் என்பதெல்லாம் கொஞ்சம் டூ மச்சான கற்பனை.. அந்த அளவுக்குப் படித்த பெண் இது போன்ற செயல்களில் ஈடுபடுவாரா என்பதை கொஞ்சம் யோசித்திருக்கலாம். என்னதான் காதலன் என்றாலும் இதெப்படி..?
இடைவேளைக்கு பின்னான திரைக்கதை விறுவிறுப்பாகவே இருந்தாலும் கேரக்டர்களுக்குள் தொடர்பில்லாமல் ஏதோ வந்தோம்.. போனோம்.. என்று இருப்பதால் ஒரு முழுமையான கிரைம் திரில்லர் படமாக இல்லாமல் போய்விட்டது..!
ஹீரோ மைக்கேல்.. மிகப் பெரிய சுமையை அவர் தோளில் சுமத்திவிட்டது போல தெரிகிறது. இன்னமும் நான்கைந்து படங்களில் நடித்த பின்பு இது போன்ற கேரக்டரில் அவர் வந்திருக்கலாம்.. சம்பத்தாவது கலர், கலர் சட்டைகளிலும், ஆக்சன்களிலும் தன்னை நிரூபிக்கிறார். ஹீரோவுக்குத்தான் இதில் பஞ்சம்..
இதுக்கெதற்கு அதுல் குல்கர்னி..? மும்பையில் இருந்து இவரை வரவழைத்த செலவிற்கு இங்கேயே இருப்பவர்களை போட்டிருக்கலாம்.. ஆனாலும் குல்கர்னியின் நடிப்பு வித்தியாசம் ஸ்கிரீனில் தெளிவாகத் தெரிகிறது.. இல்லையென்று மறுக்கவில்லை.. ஆனால் இது படத்தின் பிரமோஷனுக்கு உதவலையே..?
ஹீரோயின் ரேஷ்மி மேனன்.. ச்சும்மா வருகிறார்.. இருக்கிறார்.. செல்கிறார்.. ஆடியிருக்கிறார். அவ்வளவுதான்.. ஹீரோயினுக்கென்றே இருக்கும் வசனங்கள்கூட இவருக்கில்லை என்பதுதான் சோகமானதுதான்..!
பூமராக நடித்திருக்கும் கார்த்திக் சுபாஷ் அவ்வப்போது மென்மையாக சிரிக்க வைத்திருக்கிறார். படம் முழுவதும் வந்திருக்கும் அவருக்கு மட்டும் இந்தப் படம் மிக முக்கியமான படம்தான்..!
கனி என்ற அந்தக் கொள்ளைக்கூட்ட பெண்மணியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.. கேரளாவில் நாடக மேடைகளில் மிக பிரபலமானவராம்.. அதுதான் ஒவ்வொரு ஷாட்டிலும் நடிப்பு முதிர்ச்சி அவரது முகத்தில் தெரிந்தது..!
படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு. யுவனின் அட்டகாசமான ஒளிப்பதிவில் முதல் பிரேமில் இருந்து கடைசிவரையிலும் கண்ணை அகட்டவில்லை.. அற்புதம்.. சின்ன சின்ன இடங்களாக இருந்தும் அத்தனையிலும் காட்சிக்கு காட்சிக்கு கலர் மாற்றி பிரமாதப்படுத்தியிருக்கிறார். காட்சிகளை காட்டுவதிலும் அசத்தியிருக்கிறார். முதல் காட்சியில் ஒரு கார் வந்து கொண்டிருப்பதை ஏரியல் வியூவாக காற்றாடிக்கு மேலாக சென்று காட்டுவாரே.. அசத்தல்..
பாடல் காட்சிகளும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தடை. பாடல்களே இல்லாமல் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கூடுதல் காட்சிகளை அமைத்து.. 120 நிமிடங்களுக்காச்சும் கொண்டு போயிருக்கலாம். நிறைய நேரமிருந்தும் காட்சிகளை அமைக்கும் சூழல்கள் இருந்தும் இயக்குநர் தரணிதரன் ஏன் இதைச் செய்யவில்லை என்பதுதான் புரியவில்லை.
தயாரிப்பாளர் சி.வி.குமார் மிக புத்திசாலி. இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்துதான் அவர் ரிலீஸ் செய்வதில் இருந்து ஜகா வாங்கி தப்பித்துவிட்டார் போலும்..!
இயக்குநர் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் முழுமையான ஒரு ஆங்கில திரில்லர் படம் பார்த்த அனுபவத்தைக் கொடுத்திருக்கும்..!

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விமர்சனம்! நன்றி!