மெட்ராஸ் - சினிமா விமர்சனம்

30-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பயமாக இருக்கிறது தமிழ்ச் சினிமா செல்லும் பாதை.. யதார்த்தத்தை சொல்கிறேன் என்று சொல்லி இன்றைய இளைய சமுதாயத்தை திசை திருப்பும் பணிகள்தான் இப்போது நடைபெற்று வருகின்றன.

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் கிளைமாக்ஸில் தியேட்டரில் எழுந்த அப்ளாஸை நினைத்தபோதே வயிற்றை கலக்கியது. அதன் பாதிப்பை இப்போதும் தமிழகம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது.. சினிமாவால் சமூகம் கெடவில்லை என்று சினிமாக்காரர்கள் சொன்னாலும் உண்மை வேறு.. இளைய சமூகத்தினருக்கு உத்வேகத்தைக் கொடுப்பதற்கு, இன்றைக்கு சினிமா ஹீரோக்களைவிட வேறு ஆட்கள் யாருமில்லை.



இந்த ‘மெட்ராஸ்’ திரைப்படம் வடசென்னைவாழ் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லியிருப்பதாக பலரும் எழுதி வந்தாலும், இதன் போதை இனி வரும் இளைஞர்களையும் நிச்சயம் பாதிக்கும். அந்த அளவுக்கு உண்மைத்தனத்துடன் மிகச் சிறப்பான இயக்கத்துடனும் வெளிவந்திருக்கிறது.

சென்னையிலேயே வடசென்னைதான் ரவுடிகள் அதிகம் வாழும் பகுதி என்று போலீஸ் ரிக்கார்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான மெட்ராஸ்வாசிகள் இங்கேதான் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்திருக்கிறார்கள்.. வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.. வடசென்னையில் பிராமணர்கள் குறைந்த சதவிகிதம்பேர்தான் இருப்பார்கள்.. அவர்களைத் தவிர எல்லா தரப்பு மக்களும் அதிகமாக இருக்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் சினிமாவிற்கு முன்பேயே சமூகத்தை அதிகம் பாதிப்படையச் செய்திருப்பது அரசியல்தான்.. இந்த அரசியலால் குடும்பத்தை இழந்தவர்கள்.. வாழ்க்கையை இழந்தவர்கள் லட்சணக்கணக்கில் தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள். குடியைவிட அதிக போதை தரும் அதிகார போதையை நாடி அலையும் அரசியல்வாதிகள் கொலைகளுக்கு அஞ்சுவதே இல்லை. தங்களது அதிகாரமென்னும் சாட்டை எப்போதும் தங்களது கைகளில் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். நினைப்பார்கள்.. அப்படியொரு அரசியல் அதிகாரப் போட்டியினால் சிக்கிச் சீரழியும் இரண்டு நண்பர்களின் கதைதான் இந்த ‘மெட்ராஸ்’.

வடசென்னை பகுதியில்  இதுவரையில் நடந்த அரசியல் படுகொலைகளில் மிக முக்கியமானவை நமக்குத் தெரிந்தது இரண்டுதான். இரண்டுமே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்களை காவு வாங்கியது. ஒருவர் ஏழுமலை. அக்கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர். ஒரு நாள் மாலை ராயபுரத்தில் எப்போதும்போல தனது நண்பரின் சைக்கிள் கடையில் அமர்ந்து சாவகாசமாக பேசிக் கொண்டிருந்தவரை கும்பலாக வந்த ஒரு டீம் பொலி போட்டுவிட்டுப் போனது..

இந்த ஸ்கெட்ச் போலீஸுக்கு முன்கூட்டியே தெரிந்ததுதான் என்று கொலைக்கு பின்பு பரவலாகப் பேசப்பட்டது. காரணம் மிக முக்கியமானது. அதிகாரப் போட்டி. அப்போது தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க. உருவாகியிருந்த காலம். வடசென்னையில் தங்களது ஆதிக்கம் உள்ள பகுதிகளில் புதிதாக ம.தி.மு.க. கொடிகள் பறப்பதை எதிரணியும் விரும்பவில்லை.. ஏற்கெனவே துறைமுகம் பகுதியில் காண்ட்ராக்ட் எடுக்கும் வேலைகளில் ஏழுமலை தலையிட்டு தனக்கு சாதகமாகவே ஆக்கிக் கொள்வதால் கோபத்தில் இருந்த கும்பலை.. அரசியல் லாபியும் ஏற்றிவிட.. ஏழுமலை கொலையானார். பாவம்.. அப்போது அவரது பையன் கைக்குழந்தை.. 

இரண்டாவது கொலை அதே கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த துறைமுகம் சிவா. விடியற்காலையிலேயே எழுந்து ரவுண்ட்ஸுக்கு போகும் பழக்கமுள்ள சிவா.. துறைமுகம் பகுதியில் ஒரு தெரு வழியாக தனது டாடா சுமோ காரில் வந்தபோது அந்தத் தெருவில் இரண்டு புறமும் கார்களை கொண்டு வந்து நிறுத்தி வெளியேற விடாமல் தடுத்துவிட்டு.. சாவகாசமாக நடந்து சென்று சிவாவை வெட்டி கொன்றார்கள். தன்னை நோக்கி சாவு வருவதை சில நிமிடங்கள் அனுபவித்து, உணர்ந்து பின்பு செத்து போனார் சிவா.. பரிதாபமான முடிவு. இதுவும் அதிகாரப் போட்டிதான்..

தங்களைத் தவிர வேறு யாரும் வடசென்னை பகுதியில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடாது என்று நினைத்த வேற்று கட்சிக்காரர்களின் தூண்டுதலில் கூலிப்படையினர் இந்தக் கொலை நடந்ததாகச் சொன்னார்கள்.. ஆனால் துறைமுகத்திற்குள் கான்ட்ராக்ட் எடுப்பதில் நடந்த பிரச்சனையினால்தான் இந்தக் கொலை என்று போலீஸ் சொன்னது.. 

இப்போதுவரையிலும் வடசென்னை அரசியல்வாதிகள் தனியாக எங்கேயும் செல்ல மாட்டார்கள்.. ஆள், ஆளுக்கு டாடா சுமோ கார்களில் அடியாட்களுடன் பவனி வருவார்கள்.. இது போலீஸுக்கும் தெரியும்.. அவர்களே “சூதானமா இருந்துக்குங்க ஸார்...” என்று எச்சரிக்கை செய்துதான் வருகிறார்கள்.

இந்த ‘அதிகாரம்’ என்கிற வார்த்தை எப்படியெல்லாம், எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தப் படத்தின் அடையாளக் குறீயீடாகவே இருக்கும் ஒரு பெரிய சுவர் சொல்கிறது.. அந்தச் சுவரில் யாருடைய கட்சியின் சின்னத்தை வரைவது என்பதுதான்  படத்தின் மையக்கரு. இந்தச் சுவரை கையகப்படுத்த நினைத்து இரு தரப்பு கட்சியினருக்கும் இடையில் நடந்த வெட்டுக் குத்து, கொலைகளையெல்லாம் சொல்லிவிட்டுத்தான் படமே துவங்குகிறது..!

வடசென்னை பகுதியில் முக்கால்வாசி மக்கள் சராசரிக்கும் கீழான நிலையில் அன்றாட தொழிலாளர்கள்தான்.. இதில் பாதி பேர் மீனவர்கள். மீதி பேர் துறைமுகத் தொழிலாளர்கள்.. அந்த ஒரு தலைமுறையில் இருந்துதான் அடுத்த மூன்று தலைமுறையும் உருவாகி இன்றைக்கு அங்கேயிருந்தும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் டைட்டல் பார்க்வரைக்கும் சென்றிருக்கிறார்கள்..!

இடிந்து விழுக்க் கூடிய வீடுகளை நீங்கள் பார்க்க வேண்டுமெனில் உடனேயே வடசென்னைக்கு போகலாம்.. அங்கே அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். காலத்தில் அந்தப் பகுதி மக்கள் வாழ்ந்த குடிசைப் பகுதிகளை அகற்றி அவர்களுக்காக்க் கட்டிக் கொடுக்கப்பட்ட ஹவுஸிங் போர்டு குடியிருப்புகள் பலவும் இப்போதும் சரியான பராமரிப்பின்றி எலும்பும், தோலுமாக காட்சியளிக்கின்றன.. ஆனால் வீடுகளின் வெளிப்புறம்தான் இப்படி..

வீட்டிற்குள்ளே தரையெல்லாம் மார்பிள் போட்டு.. பாலீஷ் போட்டு.. உட்புறத்தை கச்சிதமாக மாற்றியிருக்கிறார்கள் பலரும். இதனால்தான் அந்த வீடுகளைவிட்டு வெளியேற மறுக்கிறார்கள். இத்தனைக்கும் பெரும்பாலான வீடுகள் ஒற்றை படுக்கையறை வீடுகள்தான்.. குடும்பம் பெரிதானால்கூட வேறொரு குடியிருப்பில் இதே போல வீடு வாங்கியோ அல்லது வாடகைக்கோ குடியிருக்கிறார்கள்.. ஆனால் வடசென்னையை காலி செய்வதில்லை.

இது போன்ற வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருக்கும் ஒரு மிகப் பெரிய சுவர்தான் பிரச்சினைக்குரிய களம். இந்தச் சுவற்றை தற்போது தன் கையில் வைத்திருப்பவர் ஒரு அரசியல் கட்சி பிரமுகரான நந்தகுமார். இவர் இந்தச் சுவர் பிரச்சினையால் கொல்லப்பட்ட தனது தந்தை ஜெயபாலனின் உருவப் படத்தை அந்தச் சுவரில் இப்போது வரைந்து வைத்திருக்கிறார். எதிர்க்கட்சியினர் இந்தச் சுவரை கைப்பற்ற நினைத்திருப்பதை அறிந்து அந்தச் சுவரை தொட்டால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற மூட நம்பிக்கையை வளர்த்து அந்தச் சுவரின் அருகேயே வேல்கம்புகளை நட்டு ஒரு கோவில் ஸ்தலம் போலவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.. 

இந்தச் சுவர் பிரச்சினையால் தன்னுடைய தந்தையை இழந்த எதிரணியைச் சேர்ந்த மாரி, இந்தச் சுவரை கைப்பற்றும் எண்ணத்துடன் அந்த ஏரியாவில் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நெருங்கிய நண்பன், கட்சியின் தொண்டன் அன்பு. இந்த அன்புவின் மிக நெருங்கிய தோஸ்த்துதான் நமது ஹீரோ கார்த்தி என்ற காளி.

இந்த அன்புவுக்கு திருமணமாகி ஒரு சின்னப் பையனும் இருக்கிறான். ஆனால் வெறித்தனமான மாரியின் அடிமை. தேர்தல் வருகிறது.. அட்வான்ஸாக சுவரை இடம் பிடிக்கும் வேலையில் ஈடுபடுகிறான் அன்பு. அப்போது அவனுக்குள் உறுத்தலாக இருப்பது அந்த சுவர்தான். அதை எப்படியாவது கைப்பற்றி தனது கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறான்.. இதை மாரியும் ஆமோதித்து ஏற்றி விடுகிறான்..

அந்தச் சுவரை தனது கட்சியின் புக்கிங் லிஸ்ட்டில் சேர்த்து சுவரிலும் எழுதி விடுகிறான். எதிர்பார்த்ததுபோலவே பிரச்சினை வெடிக்கிறது.. அன்புவுக்கு உதவி செய்யப் போன காளி, தனது துடுக்குத்தனத்தால் அரசியலென்றால் என்னவென்று அறியாதவனாக இருப்பதால் கை நீட்டி விடுகிறான். இது கொலை முயற்சியாக போய் முடிய.. எதிரணி பட்டாக்கத்திகளை தூக்குகிறது.. இந்தத் தாக்குதலில் காளி ஒருவனை பொலி போட.. போலீஸ் தேடுகிறது..

அன்புவும், காளியும் கோர்ட்டில் சரணடைய வந்தபோது காளியின் பெயர் எஃப்.ஐ.ஆரில் இல்லாததால் அவனைத் தவிர்த்துவிட்டு அன்பு மட்டுமே சரண்டராகிறார். ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே வரும் எதிரிகளால் அவன் கொல்லப்பட.. காளி தனித்துவிடப்படுகிறான். இதுவரைக்கும் இந்த திட்டத்தில் காளியும் இருக்கிறான் என்பதை ஊகிக்காத எதிரணியினரை சமாளித்து இறந்து தனது உயிர் நண்பனின் சபதத்தை நிறைவேற்றுகிறான் காளி. அது எப்படி என்பதுதான் இடைவேளைக்கு பிந்தைய கதை..

நிச்சயம் கார்த்தி இந்தப் படத்தை ஒத்துக் கொண்டதற்கு இப்போது சந்தோஷப்பட்டுக் கொள்வாரென்று நினைக்கிறேன்.. முழுக்க முழுக்க பக்கா லோக்கல் பையனாக இயல்பு மாறி நடிப்பதென்பது மிகச் சிரமமான விஷயம்.. ஏற்கெனவே கார்த்தி ஐடி பையனை போலவே இருக்கிறார். இந்தப் படத்திலும் வேலை அதுதான்.. ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் லோக்கலாகிறார்.

ஆனால் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் சில இடங்களில் நமக்கே வெறுப்பேற்றுகிறது.. தேவையே இல்லாமல் அடிக்கடி கோப்ப்படுவதும்.. “பாரு மச்சான் பேசிக்கிட்டேயிருக்கான்...”  என்றெல்லாம் அடிக்கடி சொல்லி இவர் அடிக்கப் பாய்வதும், அடிப்பதும், இதனால் விளையும் பிரச்சினைகளுமாய் கதை செல்ல.. கார்த்தி கேரக்டர் மீதே ஒருவித எரிச்சல் வருவதை தவிர்க்க முடியவில்லை.. ஏன் இந்தக் காரணமில்லாத கோபம்..? யாராவது எதிர்த்து பேசினால் கோபம் வந்துவிடுமா..? ஏன் வரணும்..? அப்படியென்ன அவங்க அப்பாடக்கரா..? கொஞ்சம் யோசித்தால் இயக்குநர் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தியிருப்பது புரியும்..!

ஒரு ஐடி துறையில் வேலை பார்க்கும் பையன்.. இப்படியா சிச்சுவேஷன் புரியாதவராக இருப்பார்..? “நான்தான் கொலை செய்தேன்.. ஆகவே நான்தான் சரண்டராவேன்..” என்று அடம் பிடிக்கும் கார்த்தியை நினைத்து இப்படித்தான் கேட்க தோன்றுகிறது.. சட்டென்று விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாமே என்று நினைத்தால் அது நட்புக்காக என்று அந்தக் காட்சியில் மட்டுமே சொல்கிறார். இதற்கு பின்புதான் அன்பு மீதான அவரது ஆழமான நட்பை அடிக்கடி வசனங்களில் சொல்லிக் கொண்டே வருகிறார்.. ஏற்கத்தான் முடியவில்லை..

கார்த்தியின் கேரியரில் நிச்சயம் இது முக்கியமான படம்தான்.. காதலிப்பதா வேண்டாமா என்கிற முதல் பாதி குழப்பம் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் நான் முக்கியமா.. அன்பு முக்கியமா என்று ஹீரோயின் எழுப்பும் கேள்வி ஒரு பக்கம்.. இரண்டுக்குமிடையில் அல்லல்படும் அந்த இளவயது காளியை அனைவருக்கும் பிடிக்கிறது..  ஆனாலும் காதலித்த பெண்ணை கரம் பிடிக்கத் தயாராக இருக்கும் சூழலிலும் அவருக்குள் ஏன் அந்த கொலை வெறி திரும்பத் திரும்ப வருகிறது..? தேவைதானா அது..?

பாடல் காட்சிகள்.. கேத்தரினை லுக் விட்டு பின்னாலேயே அலையும் காட்சிகள்.. அரசியல் களத்தில் கோப்ப்படும் காட்சிகள்.. தன் வீட்டில் அம்மாவுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் என்று அனைத்திலும் அண்ணன் கார்த்தி புதிதாகவே நடித்திருக்கிறார்.. வாழ்க..!

அன்பு, ரித்விகா இரண்டு ஜோடிகளையும் பிடிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.. காதலித்து கல்யாணம் செய்தவர்களின் ஊடலில் இருக்கும் கோபமும், வருத்தமும் ரசிகர்களை நிச்சயம் ஏங்க வைத்திருக்கும்.. ரித்விகாவின் ஒவ்வொரு ஆக்சனும் கவனித்து பதிவாக்கப்பட்டிருக்கிறது. இதுதான் அந்த கேரக்டரின் வெற்றி. கடைசியில் மாரியின் முகத்தில் பெயிண்ட்டை ஊற்றுகின்ற காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல்களே கிடைக்கிறது என்றால் அது ரித்விகாவால்தான்..!

கேத்தரின் தெரசா.. முகத்தில் பேபியாகவே இருக்கிறார்.. கவனிக்கவில்லை என்று நினைத்தால் சட்டென்று “என்னை கல்யாணம் செஞ்சுக்குறியா?” என்று வழக்கமான ஹீரோயின்போலவே கேட்கிறார்.. இதனாலேயே இந்தக் காதல் ஒட்டவில்லை.. ஆனால் அந்த ரொமான்ஸ் துரத்தல்களை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்.. 

“யாருய்யா அந்த ஜானி...?” என்று கேட்க வைத்திருக்கிறார் இந்த நபர்.. இவர் பேசும் பாதி வசனங்கள் சத்தியமாக யாருக்குமே புரிந்திருக்காது.. ஆனால் அந்த டயலாக் மாடுலேஷனே ரசிக்க வைக்கிறது.. யதார்த்தமான பேச்சு.. “ஒரே குத்துல சொருகிருவான்.. அப்படியே ரெண்டு திருப்பு.. அவ்ளோதான்.. எடுத்துக்கின்னு போயிக்கின்னே இருப்பான்.. உசுரு இருக்க சான்ஸே இல்லை...” என்கிறார்கள் இவரது கத்திக்குத்து பராக்கிரமத்தை பற்றி.. போலீஸ் அடியில் இப்படி கிராக்காகிவிட்டதாக போகிற போக்கில் சொல்வதால் அவர் மீதான அனுதாபம் ஏதும் வரவில்லை. ஆனால் காமெடி மட்டுமே வந்தது.. போலீஸ் அடி எப்படியிருக்கும் என்பதை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்..

நந்தகுமார், மாரி, ஜெயபாலன் என்று அரசியல் களம் புகுந்த நடிகர்கள் அளவுக்கேற்றாற்போல் நடித்திருக்கிறார்கள். இதில் நந்தகுமாரைவிடவும் மாரிதான் ரசிக்க வைத்திருக்கிறார். தேன் தடவிய பேச்சு.. தட்டிக் கொடுக்கும் பாணி.. எதிரியை ஊடுறுவி பார்க்கும் பார்வை.. என்று அனைத்திலும் பத்து விரல்களிலும் விஷம் தடவி கட்டியணைக்கும் வில்லத்தனத்தை கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார். 

கடுகடு அம்மாவாக சற்றும் எதிர்பார்க்காத கேரக்டரில் ‘என்னுயிர்த் தோழன்’ ரமா. மகனுக்கு பார்த்த பெண்களையெல்லாம் ஏதாவது சொல்லி தட்டிவிடும் அவர் என்னதான் கடைசியாக சொல்ல வருகிறார் என்பதை சொல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். கார்த்தியின் பாட்டி அவ்வப்போது காசுக்கு அடிபோட்டு பேசும் காட்சிகள் மிக யதார்த்தம்.  

“நெரிசலான ஹவுஸிங் போர்டு குடியிருப்புகள்.. எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் வாசல்கள்.. தெருவுக்குத் தெரு இருக்கும் கேரம் போர்டுகள்.. குழாயடி சண்டைகள்.. கால்பந்து பிரச்சினைகள்.. நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது.. அரசியல் கைத்தடிகளின் அலசல்கள்.. முரட்டு மக்களாய் தெரிந்தாலும் அவர்களுக்கிடையில் இருக்கும் ஒருவித பாசம்.. கானா பாடல்கள்.. மரணத்திலும் வாழ்க்கைத் த்த்துவத்தை ஒலிக்கும் பாடல்கள்.. ஒரு வீட்டு சாவு, அனைத்து வீட்டு சாவு போன்ற பிரமையை ஏற்படுத்துவது..” என்று இது போன்ற ஒரு சூழலை இதற்கு முன்பு பார்த்திராதவர்களுக்கு ஒரு புதிய படைப்பை செய்நேர்த்தியோடு பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது..

ஜி.முரளியின் ஒளிப்பதிவில் அந்தப் பகுதியையே கலர், கலராகக் காட்டியிருக்கிறார்.. அந்தச் சுவரை விதவிதமான கோணங்களில் காண்பித்து இந்தச் சின்ன, சாதாரண சுவத்துக்குத்தான் இத்தனை அக்கப்போரா என்று ஒரு நொடி நம்மை சிந்திக்கவும் வைத்திருக்கிறார். வெறுமனே இருக்கும் கால்பந்து மைதானத்தைக்கூட ஒரு அழகுணர்ச்சியோடு காட்டியிருக்கிறார். கேத்தரின் தெரசாவுக்கு பெரிய லக்.. முரளியின் ஒளிப்பதிவில் மிளிர்கிறார்.. பாடல் காட்சிகளிள் வழக்கம் போலவே.. கபிலனின் ‘ஆகாயம் தீப்பிடிச்சா…’ பாடலும், கானாபாலாவின் ‘காகிதக் கப்பல்…’, ‘இறந்திடவா…’ பாடல்களும் புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றன. பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார். சுவரை காட்டும்போதெல்லாம் ஒரு திகிலைக் கூட்டி இறக்கி.. ஒருவித பய உணர்வை கடைசிவரையிலும் கொண்டு போயிருக்கிறார்.

சண்டை காட்சிகள் தத்ரூபம்.. இதற்காக எத்தனை மெனக்கெட்டிருக்கிறார்கள்..? கிளைமாக்ஸ் சண்டை இதில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. இது போன்ற படங்களில் எடிட்டரின் பணி மிக முக்கியமானது. பிரவீனின் எடிட்டிங் கத்திரிக்க வேண்டியதையெல்லாம் கத்தரித்திருக்கிறது.. இயக்குநர்தான் காட்சிப்படுத்தலில் நம்மை வயிறு கலங்க வைத்திருக்கிறார்.. நீளமான காட்சிகள் நிறையவே படத்தில் இருக்கின்றன.. வசனங்களின் வேகத்தில் சிலவைகள் அழுத்தமாக பதிவாகாமல் போனது வருந்தத்தக்கதே..

இது போன்ற அடிதடி, கமர்ஷியல் படங்களை உண்மைத்தனத்துடன் எடுப்பதுதான் மிக ஆபத்தானது.. ஏனெனில் வருகின்ற பார்வையாளரை அது கட்டிப்போட்டு அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தைத் தூண்டிவிட்டுவிடும். இந்தப் படம் அந்த ஆபத்தைச் செய்யக் கூடிய படமாகவும் இருப்பதுதான் நமக்குக் கவலையைத் தருகிறது.. இறுதியில் செய்த கொலைகள் பற்றிய குற்றவுணர்வுகூட இல்லாமல் படத்தின் ஹீரோ இருப்பது அவரது ரசிகர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் படத்தின் கதைக்கு அது பொருத்தமாக இல்லை.. இதேபோல எதற்காகவும் கொலைகள் செய்யலாம் என்று ஆதரிக்கும் படங்கள் வந்து கொண்டேயிருப்பதும் தமிழ்த் திரையுலகத்திற்கு நல்லதல்ல.

இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.. இத்திரைப்படம் ஒரு தலித்திய திரைப்படம் என்று சிலர் குறிப்பிட்டதை படத்தின் இயக்குநர் ரஞ்சித்தும் ஆமோதித்திருப்பது வருந்தத்தக்கது. மதம், ஜாதி, மொழி, இனம் இவற்றுக்கு அப்பாற்றப்பட்டது சினிமா துறை. இப்போதுவரையிலும் இப்படித்தான்..!

இந்தக் கதை அரசியல் களம் சார்ந்ததுதான் என்றாலும் இது தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய கதை என்றெல்லாம் முகமூடி போடுவது எதிர்கால தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லதல்ல. படத்தில் பாடல்களை எழுதிய அனைவருமே தலித்துகள் என்கிறார்கள். இதனால் சினிமா துறைக்கு என்ன பயன்..? யார் எழுதினால்தான் என்ன..? தலித்தோ, கவுண்டர்களோ.. அனைவரும் இங்கே கலைஞர்கள் மட்டுமே.. இப்படி கலைஞர்களை இன ரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ பிரித்துப் பார்க்கும் பழக்கம் உருவானால் வரும் காலத்தில் மாதத்திற்கு ஒரு ஜாதிக்கார படம் வந்து தமிழ்த் திரையையும் அழித்துவிடும். இதுவொரு அரசியல் பின்புலத்தைக் கொண்ட சிறப்பான இயக்கத்துடன் வந்திருக்கும் கமர்ஷியல் படம் என்று சொல்வதுதான் சாலச் சிறந்தது..! 

தமிழ்ச் சினிமாவில் அரசியல் தொடர்பான படங்களில் இந்த ‘மெட்ராஸும்’ ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘அட்டக்கத்தி’யுடன் நின்று  போகாத தனது தனித்துவமான இயக்கத்தை இந்த ‘மெட்ராஸிலும்’ செய்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். இவருக்கும் படத்தில் பணியாற்றிவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்..!


2 comments:

S said...

Nice, a thoroughly detailed review. Your concern about Tamil cinema is to be considered sincerely. An art to be presented and enjoyed without any prejudice.
Saravanakumar

-தோழன் மபா, தமிழன் வீதி said...

// இது தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய கதை என்றெல்லாம் முகமூடி போடுவது எதிர்கால தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லதல்ல//

இது தலித்திய திரைப்படம் என்று சொல்வதற்கு நாம் கூச்சப் பட்டாலும், எந்த கதையும் அதே பார்வையில் படமாக்கும் போதுதான் அதன் ரியாலிட்டி பதியப்படுகிறது. எத்தனை பிராமிணியப் படங்களைப் பார்த்திருக்கிறோம், எத்தனை தேவரினப் படங்களைப் பார்த்திருக்கிறோம், அவை அப்படியேதானே பதியப் படுகிறது. அத்தகைய படங்களில் சாதிய துதிப் பாடல்கள் இல்லாமலா போய்விட்டது?. இருக்கத்தனே செய்கிறது....?. இதையும் நாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.