பட்டைய கெளப்பணும் பாண்டியா - சினிமா விமர்சனம்

06-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1996-ம் ஆண்டு வெளி வந்தது ‘Ee puzhayum kadannu’என்றொரு மலையாளத் திரைப்படம். இயக்குநரின் கமலின் படம். திலீப், மஞ்சுவாரியாரின் காதலுக்கு உறுதுணையாக இருந்த படம் இது.
படத்தில் மஞ்சுவாரியார் வீட்டில் 3-வது பெண். இவருக்கு முன்பாக மோகினியும், சிப்பியும் வீட்டில் இருக்கும் அக்காள்கள். இதில் மோகினி காது கேட்காத, பேச முடியாதவர். பெற்றோர்கள் இல்லை. பாட்டி மட்டுமே. வீட்டில் ஆண் துணையில்லாததால் இவர்கள் வாங்கியிருக்கும் வீட்டை திரும்பவும் ஒப்படைக்கும்படி வீட்டை கொடுத்தவனே வந்து மிரட்டிவிட்டுச் செல்வான். கடன்காரர்களின் தொல்லையும் உண்டு. போதாக்குறைக்கு இவர்களது அண்ணன் முறையானவனும் வந்து அவ்வப்போது பணம் கேட்டும், வீட்டில் பங்கு கேட்டும் மிரட்டுவான்.. இந்தச் சூழலில் மஞ்சு வாரியார் டீச்சர் வேலைக்குச் செல்வார். இவரது சம்பாத்தியத்தில்தான் குடும்பமே ஓடுகிறது..
அப்போது இவர்களது பக்கத்து வீட்டில் இருக்கும் தனது அண்ணனின் வீட்டில் வந்து குடியேறுவார் திலீப். ஊரில் கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருப்பார். மஞ்சுவை பார்த்தவுடன் காதல் கொள்வார்.. மஞ்சு அதை ஏற்க மறுப்பார்.. விடாப்பிடியாக மஞ்சுவுடன் தனது காதலுக்காக மல்லுக் கட்டும்போது மஞ்சுவின் வீட்டில் இருக்கும் இரண்டு அக்காள்கள் இவர்களது திருமணத்திற்கு இடைஞ்சலாக இருப்பது திலீப்பிற்கு தெரிய வரும்..
திலீப்பின் நெருங்கிய நண்பரான பிஜூ மேனன் மோகினியை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்வார். மஞ்சுவின் இன்னொரு அக்காவான சிப்பியும் இன்னொரு வாலிபரை விரும்ப இவர்கள் திருமணத்தை மஞ்சுவும், திலீப்பும் சேர்ந்து ஏற்பாடு செய்வார்கள். அதற்கு முதல் நாள் மஞ்சுவின் அண்ணன் அந்த வீட்டிற்குள் நுழைந்து நகைகளை திருடப் போக.. அப்போது நடக்கும் திலீப்புடன் நடக்கும் சண்டையில் மஞ்சுவின் அண்ணன் இறந்துவிடுவார்.
அப்போதைக்கு அதனை மறைத்துவிட்டு திருமண ஏற்பாடுகளை செய்வார்கள்.. மறுநாள் சடலம் கிடந்த இடத்தில் இருக்கும் ஒரு சின்ன துப்பை வைத்து திலீப்பை கல்யாண மேடையிலேயே போலீஸ் கைது செய்யும்.. சிறைக்குச் சென்று ஐந்தாண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு திரும்ப வரும் திலீப்பிற்காக மஞ்சு காத்திருப்பார்.. இதுதான் படம்..
மலையாளத்தில் இயக்குநர் சிபிமலயிலுக்கு பின்பு உருக வைக்கும் படங்களை எடுப்பதில் வல்லவர் இயக்குநர் கமல்தான்.. சூப்பர்ஹிட்டான படம் இது.. சங்கம் தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்தபோது அப்படியொரு பரவசமாக இருந்தது எனக்கு.
இதே கதையை கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து நகைச்சுவை படமாக எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார்.

பழனி டூ பாப்பம்பட்டி ரூட்டில் செல்லும் ஒரு மினி பஸ்ஸில் டிரைவராக இருப்பவர் விதார்த். இவரின் உடன் பிறந்த தம்பி சூரி. இதே பஸ்ஸின் கண்டக்டர். பஸ்ஸின் ஓனர் இமான் அண்ணாச்சி. இந்த மினி பஸ்ஸில் வரும் வருமானத்தை வைத்து ஒரு ஆம்னி பஸ் வாங்கிவிட வேண்டும் என்ற கனவில் மிதப்பவர். தினமும் நாலு டிரிப் அடித்து நாலாயிரத்து சொச்சம் வசூலாகும் கணக்கில் அதே நாலாயிரத்து சொச்சத்தையே செலவாகவும் காட்டி காலத்தை ஓட்டுகிறார்கள் அண்ணன் தம்பிகள்..
பழனியில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்யும் மனீஷா யாதவ் அதே பஸ்ஸில்தான் தினமும் சென்று வருகிறார். விதார்த்துக்கு மனீஷா மீது ஒரு தலை காதல். மனீஷா அதை ஏற்க மறுத்து விதார்த்தை கேவலமாகக்கூட பேசி பார்க்கிறார். விதார்த்தின் மனம் மாறவில்லை. விஷயம் போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் செல்கிறது. அங்கே தனது தெய்வீக காதலை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி விளக்குகிறார். இப்போதும் மனீஷா ஏற்கவில்லை.
மனீஷாவின் பெற்றோரிடம் சென்று  பெண் கேட்கலாமென்று நினைத்து விதார்த் அவர்களது வீடி தேடி போக.. அங்கே மனீஷாவின் வீட்டு நிலைமை தெரிகிறது.. மனீஷாவுக்கு ஒரேயொரு அக்கா. ஸ்வேதா. கண் பார்வையில்லாதவர். அவருக்கே இன்னமும் திருமணமாகவில்லை. தன்னுடைய சம்பாத்தியத்தில்தான் தனது குடும்பமே ஓடுவதால் தனக்கு திருமணம் பற்றிய எண்ணமே இல்லை என்கிறார் மனீஷா.
ஆனால் அடுத்த பத்து நிமிடத்தில் தன்னை பார்க்க கூடாது என்பதற்காகவே டிரைவர் வேலையை விட்டுவிட்ட விதார்த்தை நினைத்து மனீஷா உருக.. காதல் பிறந்துவிடுகிறது.. இப்போது மனீஷாவின் கண் பார்வையில்லாத அக்காவான ஸ்வேதாவின் திருமணத்திற்காக விதார்த்தே மாப்பிள்ளை தேடுகிறார்.
அவருடைய நண்பரான இன்னொரு டிரைவர் ஸ்வேதாவை பார்த்துவிட்டு ஆசைப்பட.. அவருக்கே திருமணம செய்ய முடிவெடுக்கிறார்கள். கல்யாணத்திற்கு முதல் நாள் நடக்கும் ஒரு அசம்பாவிதம் விதார்த்தின் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கும் லெவலுக்கு செல்கிறது.. அதில் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதும், கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா என்பதுதான் கடைசி 2 ரீல் கதை..!
படம் முழுக்க ஆக்கிரமித்திருப்பவர் சூரிதான்.. சந்தானம் போல் நீட்டி, முழக்கியில்லாமல் ரத்தினச் சுருக்கமாக கமெண்ட் அடித்து காமெடியை வரவழைக்கிறார்.. பாராட்டுக்கள்.. இவர்களின் பெற்றோர்களான இளவரசு-கோவை சரளாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் சூப்பர். வீட்டில் கோவை சரளா பேசும் பேச்சும், இளவரவசுவிடம் பெத்த பிள்ளைகள் மறைமுகமாக பேசும் பேச்சும் நகைச்சுவை தர்பார்தான்.. அதிலும் தண்ணி பாட்டிலை காணாமல் இளவரசு கொடுக்கும் அலப்பறையும், புருஷனுக்காக டம்ளரில் சரக்கு கேட்கும் கோவை சரளாவும் அக்மார்க் நகைச்சுவை திலகங்கள்..!
ஒரேயொரு காட்சியில் வந்தாலும் லட்சுமணன் பட்டையக் கெளப்பியிருக்கிறார். “உட்டாலக்கிடி கிரிகிரி சைதாப்பேட்டை வடகிரி என்று சும்மாவா பாரதியார் சொல்லிட்டுப் போயிருக்காரு…” என்ற இவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் காது கிழிகிறது.. இமான் அண்ணாச்சியை இந்தப் படத்தில் மோல்டு செய்து பேச வைத்திருக்கிறார் போலும்.. கச்சிதமாக இருக்கிறது.. அதிலும் செல்போனில் பேசிக் கொண்டே சாப்பிடும்போது, அவரது மனைவி சாம்பாரை அவரது தலையில் கொட்ட சிரித்த சிரிப்பில் வயிற்று வலியே வந்துவிட்டது..! இது போன்று ‘முண்டாசுப்பட்டி’யில்தான் கடைசியாக சிரித்ததாக ஞாபகம்..!
விதார்த்துக்கு பொருத்தமான கேரக்டர்.. ரொம்ப அலட்டலில்லாத நடிப்பு.. இன்னமும் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்தால்தான் நீண்ட நாட்கள் இந்த பீல்டில் ஹீரோவாக நிலைக்க முடியும்.. அடுத்த வாரம் ‘ஆள்’ வருகிறது. பார்க்கலாம்..
மனீஷா யாதவ் நடிப்புக்கும், கவர்ச்சிக்கும் ஒற்றுமையான எல்லைக்கோடு.. கொஞ்சம் நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியையும் கூட்டியிருக்கிறார். சின்னச் சின்ன முக பாவனைகளில் முந்தைய படங்களைவிடவும் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பது தெரிகிறது..!
கோவை சரளாவுக்கும், இளவரசுவுக்கும் தனியாக போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும்.. நகைச்சுவையில் டைமிங்சென்ஸ்தான் மிக முக்கியம் என்பார்கள். இதில் கச்சிதமாக இருக்கிறது இந்த ஜோடி..
இப்படி நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும் படத்தில் இயக்கத்தை குறைவில்லாமல் கொண்டு சென்ற இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமாருக்கு பாராட்டுக்கள். இன்றைக்கும் பல டிவிக்களில் அன்றாடம் ஓடும் பல நகைச்சுவை காட்சிகளுக்குச் சொந்தக்காரர் இவர்தான்.. இந்தப் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் நிச்சயமாக அமோகமாக வாங்கப்படும் என்றே தெரிகிறது.. சமீபமாக எந்தவொரு நகைச்சுவை படமும் இந்த அளவுக்கு தனித்தனி காட்சிகளாக தொகுக்கும் அளவுக்கு இல்லை. எந்த டிவி சுடப் போகிறதோ தெரியலை..! அண்ணன் தம்பிகளையும், விதார்த்தின் காதலையும் அறிமுகப்படுத்தும் காட்சியில் இயக்குநரே தலையைக் காட்டியிருக்கிறார். செம ஐடியா..
பாடல்களும், பாடல் காட்சிகளும் குளுமைதான்.. ஒளிப்பதிவாளர் மூவேந்தர் பழனி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை அழகாக படம் பிடித்திருக்கிறார்.
கிளைமாக்ஸில் நல்ல போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயபிரகாஷ் சொல்வது போலவோ, செய்வது போலவோ அனைத்து இன்ஸ்பெக்டர்களும் இருந்துவிட்டால் என்னாவது..? தவறான, நடக்கக் கூடாத ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதுவொன்றுதான் படத்தில் இடிக்கிறது..
மற்றபடி கமர்ஷியல் படங்களுக்கேற்ற வகையில் திரைக்கதையும், காட்சியமைப்புகளும் ஒருங்கே அமைந்திருப்பதால் இந்த வாரம் வெளிவந்த படங்களில் மக்களை சிரிக்க வைத்திருப்பது இது ஒன்றுதான்..!
அவசியம் பாருங்கள் மக்களே.. நகைச்சுவைக்கு கியாரண்டி..!

0 comments: