அரண்மனை - சினிமா விமர்சனம்

20-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அக்மார்க் சுந்தர் சி. படம்தான்.. பெரிய அளவுக்கு மனதைத் தொடும் கதையையோ, திரையுலகத்தை புரட்டிப் போடும் படைப்புகளையே திரையில் காட்ட வேண்டும் என்றில்லாமல், தியேட்டருக்கு வரும் ரசிகர்களை அவர்களது கவலை மறந்து சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதில் மட்டும் தீவிரமாக இருப்பவர் இயக்குநர் சுந்தர் சி.
இதுவரையிலான சுந்தர் சி.யின் படங்கள் அனைத்துமே இப்படித்தான். ‘அன்பே சிவம்’ தவிர. அது கமல்ஹாசனின் படம் என்பதால் இதில் சேர்க்க வேண்டாம். முன்பே பேசப்பட்ட கதை.. எழுதப்பட்ட கதை.. சொல்லப்பட்ட கதை என்றாலும் அதனை புதுவிதமாக இன்றைய ரசிகர்களும் பார்ப்பதுபோல தனது இயக்கத் திறமையால் வெற்றியாக்கிவிடுவார். இதுதான் சுந்தர் சி. இந்தப் படமும் அவரைப் பொறுத்தளவில் வெற்றி படம்தான்..!

‘ஆயிரம் ஜென்மங்கள்’ டைப் கதை இது.. பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் தங்களது அரண்மனை போன்ற பூர்வீக வீட்டை விற்பனை செய்வதற்காக அந்தக் குடும்பத்து வாரிசுகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அரண்மனைக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் ஒரு பெண் பேய் அந்த வீட்டில் இருப்பது தெரிய வருகிறது.. அந்த பேயினால் அந்த வீட்டுடன் தொடர்புடைய 3 பேர் இறந்துபோகிறார்கள்.
அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகளில் ஒருவரான வினய்யின் மனைவி ஆண்ட்ரியாவின் உடம்பில் புகுந்து கொள்ளும் ஆவி… அந்த உடலிலேயே நிரந்தரமாக தங்கிவிட முயற்சிக்க.. இதனைத் தெரிந்து கொண்ட ஆண்ட்ரியாவின் அண்ணன் சுந்தர் சி, அந்தப் பேயை எப்படி விரட்டுகிறார் என்பதுதான் சுருக்கப்பட்ட கதை..!
நிறைய நட்சத்திரப் பட்டாளங்கள்.. வரிசையாக வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இத்தனை பேரையும் கட்டி மேய்த்து.. ஒவ்வொருவருக்கும் சரியான அளவுக்கு வாய்ப்புகள் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் என்றால் அது சுந்தர் சி-யின் சிறப்பான இயக்கத்தினால்தான்..!
கவர்ச்சிக்கு ராய் லட்சுமி.. பாந்தமாக ஹன்ஸிகா மோத்வானி, பயமுறுத்த ஆண்ட்ரியா என்று மூன்று ஹீரோயின்களுக்கும் சம அளவில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதிக ஸ்கோர் செய்திருப்பது ஆண்ட்ரியாதான்.. அவரை பேயாக கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால் அதைத்தான் திரையில் வெற்றிகரமாக செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.
ராய் லட்சுமி உடற்பயிற்சி செய்யும் ஒரு காட்சியே அவரை படத்தில் கொண்டு வந்ததற்கான காரணத்தைச் சொல்லிவிட்டது.. இதேபோல் ஆண்ட்ரியா படுக்கையில் ஒன் சைடு போஸீல் படுத்தபடியே வினய்யை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காட்சியில் ராய் லட்சுமியைவிடவும் ஒருபடி மேலே போய்விட்டார். கமர்ஷியல் பட இயக்குநர்களுக்கு இந்தக் காட்சிகளில் ஒரு பாடமே எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.
சந்தானம் அண்ட் கோ-வின் அட்டகாசம் படம் முழுக்க நிரவி தொய்வு ஏற்படாமல் கலகலப்பை கூட்டியிருக்கிறது. சந்தானம் இன்னமும் கேரக்டர்களை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை போலும்.. என்னதான் கருத்து சுதந்திரம் என்றாலும் “சாப்பிட என்ன இருக்கு..?” என்ற சுந்தர் சி-யின் கேள்விக்கு “குஷ்பு இட்லி இருக்கு.. சாப்பிடுறீங்களா..?” என்று சந்தானம் சொல்வதெல்லாம், உங்களுக்கே ஓவரா தெரியலியா சுந்தர் ஸார்..? இதை வைச்சே இனிமே எல்லாரும் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்யப் போறாங்க..!
ராய் லட்சுமியின் படுக்கையறையில் சந்தானமும், சுந்தர் சி-யும் செய்யும் லூட்டிகளெல்லாம் அக்மார்க் அவருக்கே உரித்தானவை. ஏற்கெனவே அவருடைய படங்களிலேயே பல முறை பார்த்ததுதான். ஹீரோயின்கள்தான் மாறியிருந்தார்கள். இப்போது ராய் லட்சுமி என்றாலும், இது நிச்சயம் ‘உவ்வே’ ரகம்தான்..!
இந்த கலகலப்பு போதாதென்று கோவை சரளாவும், மனோபாலாவும் அடிக்கும் கூத்துகள்.. ஒரு சம்பவத்தில் தலையில் அடிபட்டு மண்டை குழம்பி போய் 25 வருஷத்துக்கு முந்திய காலத்திற்கு போய்விடும் மனோபாலா, தனது மனைவியை தனது காதலியென்றும், தான் இன்னமும் அந்த வீட்டு வேலைக்காரன் என்றும் நினைத்து கொடுக்கும் அளப்பறையில் வயிறு வலிக்கிறது.. இதற்கு கோவை சரளா கொடுக்கும் ரியாக்சன்கள்தான் அசத்தல்.. நிச்சயம் கோவை சரளாவுக்கு மாற்று ஆள் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்..!
ஹன்ஸிகாவின் கதை கச்சிதமாக மிகப் பொருத்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஹன்ஸிகாவின் அறிமுகக் காட்சியே எதிர்பாராதது.. விட்டுவிட்டு சொல்லப்பட்டிருந்தாலும் அதில் இருக்கும் உண்மைத்தன்மையினால் ஹன்ஸிகா என்னும் பேய் இருப்பதாக நம்மை நம்ப வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் சுந்தர் சி-யின் படங்களிலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் ஹன்ஸிகாவின் டயலாக் டெலிவரியும், டப்பிங் வாய்ஸும் ஒத்துப் போகவில்லை. பல இடங்களில் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் அழுத்தமாகப் பேசுகிறார். ஹன்ஸிகாவோ மிக சாதாரணமாக உதட்டை அசைக்கிறார்.. எங்கிட்டோ மிஸ்ஸாயிருச்சு போல..!
சித்ரா லட்சுமணன் மற்றும் கோவை சரளா, மனோபாலாவை முதலிலேயே பிளாஷ்பேக்கில் பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்டும் காட்சி ரசனையானது.. 25 வருடங்களில் எல்லாம் மறந்து ‘மாமா-மச்சான்’ என்று கொஞ்சுவதும்.. பின்பு மழை கழன்ற நிலையில் கோவை சரளாவை காதலிப்பதாகச் சொல்ல சித்ரா லட்சுமணன் அதை எதிர்த்து அடிக்கப் பாய்வதும் அந்த நேரத்தில் சூழலை மறந்து சிரிக்க வைக்கிறது.. “வேற ஏதாவது யோசிங்கப்பா..” என்று சித்ரா லட்சுமணன் சொல்ல.. “இப்படிச் சொன்னா நீங்க யோசிக்க வேணாம்ல்ல..” என்று திருப்பியடிப்பதுதான் இந்தப் படத்திலேயே சந்தானத்தின் டீஸண்ட்டான டயலாக்.
‘காதல்’ தண்டபாணி, சரவணன், இயக்குநர் சந்தானபாரதி, மேஜர் கெளதம், கோட்டா சீனிவாசராவ் என்று பெரிய புள்ளிகளும் வந்து வந்து செல்கிறார்கள். வினய்தான் ஹீரோ மாதிரியென்றாலும் டூயட்டுகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை..
கிராபிக்ஸ், அனிமேஷன் மற்றும் தொழில் நுட்பங்களின் உதவியுடன் பேய் தொடர்பான காட்சிகளும், சண்டை காட்சிகளும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளன. தெலுங்கு படங்களில்தான் இது போன்ற ஆக்ரோஷமான காட்சிகளை பார்த்திருக்கிறோம்.. மிதமிஞ்சிய செலவில்தான் படம் முடிந்திருக்கும்போல தெரிகிறது..!
2012-ம் ஆண்டு லட்சுமி மஞ்சு தயாரிப்பில் பாலகிருஷ்ணா, மனோஜ் மஞ்சு நடிப்பில் சேகர் ராஜா என்பவர் இயக்கிய ‘uu kodathara? Ulikki Padathara?’ என்ற தெலுங்கு படம் ரிலீஸானது. இந்தப் படமே தமிழில் ‘கந்தர்வ கோட்டை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது.
இந்தப் படத்திற்காக ஆந்திராவில் கோதாவரி ஆற்றங்கரையில் போடப்பட்ட பிரமாண்டமான அரண்மனை செட்டில்தான் இந்தப் படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.. கலை இயக்குநருக்கு நிறைய வேலைகள் கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கேற்றபடியே கலை பொருட்களை தேடி தேடி வைத்திருக்கிறார்கள் போலும். கலை இயக்குநருக்கு நமது வாழ்த்துகள்..!
பேய் படம் என்று வந்த பிறகு சமரசம் செய்து கொள்ளாமல் நிசமாகவே பயமறுத்தியிருக்கிறார் இயக்குநர். கோட்டா சீனிவாசராவ் டிரெயினில் இருந்து கீழே இறங்கும் அதே நேரத்தில் அரண்மனை திறக்கப்படுவதில் துவங்கி.. இறுதியில் ஆண்ட்ரியா வானத்தில் பறந்த நிலையில்.. அவரைவிட்டு ஹன்ஸிகா விடைபெற்றுச் செல்ல.. ஆண்ட்ரியா ஆற்றில் விழும் காட்சிவரையிலும் எதிலும் குறை வைக்கவில்லை இயக்குநர். நிறைவான இயக்கம்..! இதில் இருக்கும் சில சஸ்பென்ஸ்களே மேலும் படத்தைக் காப்பாற்றும் என்பதால் அதைச் சொல்லப் போவதில்லை..
ஆஸ்தான ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமாருடன் கூட்டணி அமைத்து காட்சிக்கு காட்சி பிரமாதப்படுத்தியிருக்கிறார். அரண்மனை முழுவதும் சிவப்பு வெளிச்சம்தான்.. ஆண்ட்ரியாவை அடிக்கடி குளோஸப்பில் காட்டி பயமுறுத்தியதில் பளீச்சென்று தெரிகிறது தரமான ஒளிப்பதிவு..! திகில் படங்களுக்கு இதுதானே முதல் தேவை..!
பரத்வாஜின் இசையில் ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’ என்ற பாடலும் ‘சொன்னது சொன்னது’ பாடலும் முணுமுணுக்க வைக்கிறது..  ‘பலே பாண்டியா’ ஸ்டைல் பாடலின் மேக்கிங் திரும்பத் திரும்ப எத்தனையோ படங்களில் வந்தாலும் ரசிக்கும்படியாக வந்தால் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்வார்கள்.. முதல் பாடலில் பின்னணியில் ஆடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால் இதுக்கே காசு காலியாகியிருக்கும்போல தெரிகிறது. அத்தனை ரிச்னெஸ்..! இறுதியில் வரும் அம்மன் பாடல் சிச்சுவேஷனுக்கு ஏற்ற பாடல். பி அண்ட் சி பெண் ரசிகர்களை நிச்சயம் இந்தப் பாடல் உசுப்பிவிடத்தான் போகிறது..!
சந்தானத்தின் பாட்டி கதை.. அந்தச் சின்னக் குழந்தைக்கு மட்டும் தெரியும்படியான பேய் கதை.. 3 பேரின் மரணத்தில் இருக்கும் மர்மம்.. ஆண்ட்ரியாவுக்குள் ஹன்ஸிகா புகுந்த பின்பு நடக்கும் சம்பவங்கள். வீட்டுக்குள் பேயினால் நடக்கும் திகில் சம்பவங்கள்.. இடைவேளைக்கு பின்பு திரைக்கதையின் வேகத்தினால் கூடும் பரபரப்பு.. காமெடி கலாட்டாக்கள் என்று எல்லாமும் சேர்ந்து படத்தை பார்க்க வைத்திருக்கிறது. நிச்சயம் ஓடவும் வைக்கும் என்று நம்புகிறோம்..!
இது சாதா பேய் இல்லை.. அரண்மனை பேய் என்பதால் அதிகமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து வரலாம்..! எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும்..!

2 comments:

Nondavan said...

super annaachi....

SANKAR said...

குஷ்பு இட்லி போல் சந்தானம் லட்சுமிராயிடம் "தோணி " கூட தோசை சாப்பிடலாமா ன்னு சொல்ற டயலாக்கையும் சேத்துகோங்க