டமால் டுமீல் - சினிமா விமர்சனம்

21-04-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இத்திரைப்படம் 1999-ல் தாய்லாந்து நாட்டில் அந்நாட்டு மொழியான ‘தாய்’ மொழியில் வெளியான A Funny Story About 6 and 9 என்ற படத்தின் தமிழ் ரீமேக்..!

ஒருவன் மிக அவசியமான பணத் தேவையில் சிக்கித் தவிக்கும்போது இன்னொருவருக்குப் போய்ச் சேர வேண்டிய பணம் அவனிடத்தில் வந்து சேர்ந்தால் அவன் என்ன செய்வான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை..!
சராசரி மனிதன் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பானோ அதைத்தான் ஹீரோவும் செய்கிறான். ஆனால் அதனை செய்ய ஆரம்பித்து அடுக்கடுக்காய் வரும் சம்பவங்களும், அதன் பின் விளைவுகளும் அவனுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடுகின்றன. பின் ஏன் இந்த ஆசை என்கிறீர்களா..? அதனால்தான் ஆசை பயமறியாத்து.. வெட்கமும் அறியாத்து என்கிறார்கள்.
ஹீரோ வைபவ் ஒரு ஐடி கம்பெனியில் பிராஜெக்ட் மேனேஜராகப் பணியாற்றுகிறார். அவருக்கு ஒரு காதலியும் உண்டு. அவருடைய தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒரு வாரத்தில் நிச்சயத்தார்த்தம்.. 50 பவுன் நகையும், ஒரு பைக்கும் வரதட்சணையாக்க் கேட்கிறார்கள். ஒரே தங்கச்சி. நான் செய்ய மாட்டேனாம்மா என்று தன் அம்மாவிடம் போனிலேயே உறுதிமொழி தருகிறார் ஹீரோ.
அன்றைக்கு அவருக்கு மோசமான நாள். அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடக்கிறது. இவரையும் தூக்கிவிடுகிறார்கள். சோகத்துடன் வீடு திரும்பிய அவருக்கு மறுநாள் ஒரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. போலி மருந்து கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளியான சாயாஜி ஷிண்டே ஹீரோ குடியிருக்கும் குடியிருப்பில் மேல் மாடியில் வசித்து வருகிறார். அவருக்கு போக வேண்டிய 5 கோடி ரூபாய் பணத்தை இன்னொரு ரவுடியான  கோட்டா சீனிவாசராவின் ஆட்கள் முகவரி மாறியிருப்பதன் குழப்பத்தின் காரணமாய் ஹீரோவின் வீட்டு வாசலில் வைத்துவிடுகிறார்கள்.
பணம் ஆண்டவனா பார்த்து தனக்குக் கொடுத்திருக்கிறார் என்று நினைத்து அதனை தனதாக்கிக் கொள்ள நினைக்கிறார் ஹீரோ. பணம் வராத நிலையில் சாயாஜி, கோட்டாவை வறுக்கியெடுக்க.. அவர் பணம் கொண்டு வந்து வைத்தவர்களை திரும்பவும் அனுப்பி வைக்கிறார். அவர்கள் வந்து ஹீரோவிடம் பணம் கேட்கத் துவங்கியவுடன் ஆண்டவனின் ஆட்டமும் துவங்கிவிடுகிறது.. இறுதிவரையில் செம ஆட்டம்..!
மிகக் குறைந்த நேரத்தில் மிகக் குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமாக சென்டிமெண்ட்ஸ் சேர்த்து இப்படியும் நடக்கலாமோ என்கிற ஐயத்தை நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள் அவருக்கு..!
ஒரே நாளில் நடக்கும் கதை என்பதாலும் அடுத்தடுத்து நடப்பதெல்லாம் விறுவிறுப்பாகச் செல்கிறது. சுவையான திரைக்கதை. அனைத்து நிகழ்வுகளுக்கும் கச்சிதமாக முடிச்சுப் போட்டிருக்கிறார் இயக்குநர். சில, பல லாஜிக் மீறல்கள் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இதைவிட பெரிய அளவு ஓட்டைகளை வைத்துக் கொண்டெல்லாம் சில குப்பை படங்கள் வெற்றியாகியிருக்கின்றன. ஆகவே இந்தப் படத்தின் தவறுகளை நாம் பொறுத்தருள்வோம்..
வைபவ்.. இப்போதுதான் முதல் முறையாக தனித்து ஹீரோவாகியிருக்கிறார். இன்னமும் நடிக்க ஸ்கோப் கிடைக்கும் படங்களில் நடித்து வெற்றி பெறட்டும்.. பரபரப்பான திரைக்கதையில் ஆக்சனான காட்சிகளில் நடிப்பு கொஞ்சமே காட்டினாலும் அதனை திரைக்கதையினால் ரசிக்க முடிகிறது. இதேதான் ஹீரோயின் ரம்யா நம்பீசனுக்கும்..! அழகாகத்தான் தெரிகிறார்.. அழகாகத்தான் நடிக்கிறார். அழகாகவே பாடியிருக்கிறார். அப்படியிருந்தும் ஏன் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.
கோட்டா சீனிவாசராவும், சாயாஜி ஷிண்டேவும் ஒருவரையொருவர் மாற்றி சந்தேகப்படும் காட்சிகளில்தான் படத்தில் இயல்பான நகைச்சுவை காட்சிகள். இதற்காக இவர்களின் அருகிலேயே இருக்கும் முட்டாள் அல்லக்கைகள் ஆளுக்கொரு கதையை அள்ளிவிட.. இதை நம்பி இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் போட்டுத் தள்ள ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வருவது ஏக கலகலப்பு. மணி என்கிற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு விதம்விதமான டயலாக் டெலிவரிகளில் நடிப்பைக் காட்டும் கோட்டா சீனிவாசராவை மிஞ்ச ஆளில்லை.. மனிதர் எத்தனை அழுத்தமாக நடிக்கிறார்..? ஹாட்ஸ் ஆஃப் ஸார்..!
படத்தில் டென்ஷனை கூட்டிவிடும் காட்சிகளில் இயக்குநரின் வேலைத்திறன் அமர்க்களமாக இருக்கிறது.. அடியாட்கள் உள்ளே பிணமாக இருக்க.. அவர்களைத் தேடி இரண்டு பேர்.. இப்போது இவர்களுடன் ஒரு சப்-இன்ஸ்பெக்டர்.. இவர்களுக்காக 5 அலமாரிகளை வாங்க வேண்டிய நிலைமை என்று அடுத்தடுத்து வரும் காட்சிகளில் ஐயோடா என்பதற்குப் பதிலாக சிரிக்கத்தான் முடிந்தது..! இதனாலேயே இவர் நல்லவர் என்று பெயரெடுக்கும் அளவுக்கு கிளைமாக்ஸ் காட்சிகள் இருந்தாலும் இதனால் நம் மனதில் எந்தப் பாரமும் ஏறவில்லை. மாறாக இரண்டு மணி நேர பொழுது போக்குப் படமாக அமைந்தது என்ற பெயர் மட்டுமே..!
எஸ்.எஸ்.தமனின் இசையமைப்பில் உஷா உதூப், ஆண்ட்ரியா, நாயகி ரம்யா நம்பீசன் ஆகிய மூவருமே பாடியிருக்கிறார்கள். ஆனால் படத்தில் எதுவும் தேறவில்லை. பின்னணி இசையில் மட்டுமே இசை என்பது இருந்த நினைவு..! இது போன்ற படங்களில் இதெல்லாம் தேவையே இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
தவறுகளைச் செய்யத் துவங்கினால் அது சங்கிலித் தொடர் போல நம்மை நரகத்திற்குள் இழுத்துவிடும் என்பதை சீரியஸாக சொல்ல ஆரம்பித்து ஆனால் முழுமையாகச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான் படத்தின் குறை. மற்றபடி இரண்டு மணி நேர பொழுது போக்கிற்கு படம் நிச்சயமாக கியாரண்டியைத் தருகிறது..!

0 comments: