நான் சிகப்பு மனிதன் - சினிமா விமர்சனம்

13-04-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


எத்தனையோ பழி வாங்கும் கதைகளைப் பார்த்திருப்போம். படித்திருப்போம். அதில் இதுவொரு வித்தியாசமான கதை.. முற்பாதி முழுவதுமே தெரியாத ஒரு உலகத்தில் பயணிக்கிறோம். பிற்பாதியில் தெரிந்த உலகம்தான்.. ஆனால் தெரிந்த திரைக்கதைதான்.. ஆனால் வேகத்தில் பயணிக்கிறது.
நார்கோலெப்ஸி. இந்த வார்த்தையை அநேகமாக இப்போதுதான் அதிகத் தமிழர்கள் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறோம். ஒரு சிறிய அதிர்ச்சியைக்கூட தாங்க முடியாமல் பொத்தென்று விழுந்து அரை மயக்கமாகும் நிலை. இதற்கு தூக்கம் என்பதுதான் மருத்துவ ரீதியான வார்த்தையாக இருந்தாலும், அந்த நிலையிலும் சுற்றியிருப்பவர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் மூளையில் பதிவாகுமாம்.. லட்சத்தில் ஒருவருக்கு இப்படியொரு பிரச்சினைகள் இருக்கின்றது என்கிறார்கள் மருத்துவர்கள். எல்லாம் அவன் செயல்..
விஷாலுக்கு இந்த வியாதிதான்.. இந்தப் பிரச்சினைகளுடனேயே படித்து, வேலைக்கு முயற்சி செய்து கிடைக்காமல்.. சொந்தமாக தன்னையே கண்காட்சியாக வைத்து சம்பாதிக்கும் லெவலுக்கு வந்த பின்பு அவர் நினைக்காத காதல் அவர் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. கண்ணில்லாத காதலாக இது மாறி அவரை காதலுக்குள் இழுத்துவிட்ட வேளையில் அந்த பயங்கரம் அவர் கண் முன்னே நடக்கிறது. அப்போது அவர் அரை மயக்கத்தில் இருப்பதால் காதலியைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் பிறகு உண்மை தெரிந்து அந்தக் கயவர்களை பழி வாங்கப் புறப்படுகிறார். அந்த வியாதி ஒரு பக்கம் இருக்க.. துணைக்கு ஆள் இல்லாமல் வீட்டில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் இருக்கும் இவரால் எப்படி அது முடியும்..? அதுதான் மிச்சக் கதை..!
‘பாண்டிய நாடு’ தந்த வெற்றியினால் கதையை நம்பியும், இயக்குநரை நம்பியும் துணிந்து களமிறங்கியிருக்கிறார் விஷால். முதல் காட்சியில் இருந்து பரபரப்பாக திறக்கப்படும் கதையின் வாசல்கள்.. துவக்கக் காட்சிக்கே திரும்பவும் வந்து நிற்கும்வரையிலும் செம விறுவிறுப்பு..!
அந்தத் தூக்க வியாதியினால் விஷால்படும் அவஸ்தைகளை மிகுந்த இயல்பான நகைச்சுவையோடும், குழந்தைகளுக்கும் பிடிக்கும்வகையில்தான் எடுத்திருக்கிறார். ஆனால் குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்க்க முடியாதபடிக்கு இவர்களே செய்துவிட்டதால், குழந்தைகள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..
இவருடைய தூக்கத்தை வைத்து பொணம் என்று நடிக்க வைத்து மயில்சாமி காசை அள்ளிக் கொண்டு போகும் காட்சியும், மறுநாள் எக்ஸ்பிரஸ் மாலில் இவரை பார்த்து லட்சுமி மேனன் மயங்கி விழுவதும் ஏக கலகலப்பு.. இந்தத் தூக்க வியாதியை வைத்து என்னமோ பிரமாண்டமாக செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து அதே நகைச்சுவையை எதிர்பார்த்து ஒரு கூட்டம் காத்திருந்தது. ஆனால் இடைவேளைக்கு பின்பு அவர்களுக்குக் கிடைத்த்து பக்கா கமர்ஷியல் டிவிஸ்ட்டுகள்..!
இனியாவின் கேரக்டர் ஸ்கெட்ச் வெரி போல்டு. மலையாளப் படவுலகில்தான் இது போன்று கேரக்டர்கள் கிடைக்கும். இப்படியொரு கேரக்டரை காட்டிய திருவின் தைரியத்திற்கு நமது பாராட்டுக்கள். பொதுவாக இது போன்ற கேரக்டர்களை நம்ம தாய்க்குலங்கள் தியேட்டரில் மட்டும் ரசிக்க மாட்டார்கள். ஆனால் வீட்டில் டிவி சீரியல்களில் பார்த்து, பார்த்து ரசிப்பார்கள். அப்படியொரு லாஜிக் பார்க்கும் வெறியர்கள் அவர்கள். அவர்களையே கவிழ்த்திருக்கிறது இனியாவின் கேரக்டர்..
கருணாவும், இனியாவும் தெளிவாகவே இருக்கிறார்கள் அவர்களுடைய செய்கையில். அதில் தவறில்லை என்று இனியா சொல்லும் இரண்டு வரி டயலாக்கிலேயே இது போன்ற கதைகளின் அடித்தளம் புரிந்து விடுகிறது. கருணா வீட்டுக்குள் இருப்பதை புரிந்து கொண்டு.. அவனும் இதற்கு உடந்தைதான் என்பதை விஷால் புரிந்து கொள்ளும் அந்தக் காட்சிய மிக அழகாக படமாக்கியிருக்கிறார் திரு. அந்த ஒரு காட்சியில் ஏதேனும் தவறுகள் நேர்ந்திருந்தால் திரைக்கதையில் குழப்பம் வந்திருக்கும். பட்.. நீட் அண்ட் போல்ட்.
இடைவேளைக்கு பின்பு அடுத்தடுத்து வரும் டிவிஸ்ட்டுகள்தான் படத்தைக் காப்பாற்றியிருக்கின்றன. இப்படியொரு பையனை காப்பாத்தணுமே..? எவன்தான் செஞ்சிருப்பான்? என்ற இரண்டு கேள்வியை மட்டும் ரசிகர்களிடத்தில் விட்டுவிட்டு விஷாலை ஸ்கிரீனில் அலைய விட்டிருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸில் இருந்த மிகச் சாதாரணமான சண்டை காட்சி எதிர்பாராதது. இதைவிட அதிகமான ஆக்ரோஷத்தை எதிர்பார்திருந்தோம். தெய்வம் குறுக்கே வந்ததுபோல அந்த தண்ணி பைப்பை அடியாள் ஒருவர் உருவி தண்ணீரை வரவழைப்பதை திரைக்கதையின் பழைய யுக்தி. பட் இட்ஸ் ஓகே.. இடைவேளைக்கு பின்பு 10 நிமிடங்களுக்காச்சும் கத்திரி போட்டிருக்கலாம்..
விஷாலின் நடிப்பு எப்போதும் போலத்தான்.. ஜெயபிரகாஷிடம் அவர் பேசுகின்ற டயலாக்குகளை இவரே பேசி விடைபெற்றுப் போகும் காட்சியிலும், லட்சுமி மேனன் வீட்டிற்கு வந்து பொறுமியுடன் பொறுமையாக அட்வைஸ் செய்யும் காட்சியிலும் கொஞ்சம் கூடுதலாகவே நடித்திருக்கிறார். அம்மா மீதான பாசம்.. லட்சுமியின் மீதான காதல்.. இண்டர்வியூவிற்கு சென்றிருக்கும்போது தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடிக் கொண்டே டென்ஷனில் இருப்பது.. செலக்ட்டட் என்ற வார்த்தையைக் கேட்டதும் தொப்பென்று விழுவது.. என்று பலவற்றிலும் ரசிக்க முடிகிறது..
லட்சுமி மேனன் நம்பவே முடியாத அளவுக்கு நடிகையாக மாறிவிட்டார். இந்தப் பொண்ணுதான் ஸ்கூல்ல படிக்கிற பொண்ணுன்னா யாரும் நம்ப மாட்டார்கள். கெத்தான நடிப்பைக் காட்டியிருக்கிறார். மாப்பிள்ளையிடம் கேள்வி கேட்டு அதில் அதிருப்தியாகி “நம்ம ரெண்டு பேருக்கும் ஷூட் ஆகாது..” என்று ஸ்டைலாக தலையைச் சாய்த்து சொல்லும் அந்தக் காட்சியில் லட்சுமியை ரொம்பவே பிடிக்கிறது.. வெல்டன்.. மிகத் துணிச்சலுடன் முத்தக் காட்சி.. நீச்சல் குளக் காட்சி.. கற்பழிப்பு காட்சி என்று மூன்றையும் ஒரே படத்தில் வைத்திருந்தும் அதில் நடித்திருக்கும் இவரது துணிச்சலுக்குள் இவரது நடிப்பார்வம் இருக்கிறது என்பது புரிகிறது.. வெல்டன் மேடம் என்றே சொல்லலாம்..
சரண்யாவும், ஜெயபிரகாஷும் அந்தக் கேரக்டர்களுக்காகவே வாழ்பவர்கள்.. அப்படியே கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். லட்சுமி வந்தவுடன் மொட்டை மாடிக்கு ஓடிப் போய் பரவசமாகும் சரண்யா.. உறவுக்காரப் பெண் விஷாலை வேண்டாம் என்று சொல்லவிட்டுப் போனவுடன் மகனைச் சமாளிக்க இன்னொரு பெண் இருப்பதாகச் சொல்லி பீலா விடும் அழகு.. சரண்யா தமிழ்ச் சினிமாவில் தவிர்க்க முடியாத அம்மாவாகிவிட்டார்.
முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு அமர்க்களம்தான்.. டிரெயின் காட்சியில் அபாரம் என்றால் ‘இதயம் உன்னைத் தேடுதே’ பாடல் காட்சி அபாரம். இந்தப் பாடல் காட்சியில் டிரெஸ்ஸிங் செலக்ஷனும் சூப்பர் என்றே சொல்ல வேண்டும்..  ‘ஏலேலோ’வும், ‘இதயம் உன்னைத் தேடுதே’வும் கேட்க வைக்கின்றன.
திருவின் திரைக்கதையும், இயக்கமும்தான் படத்தின் மிகப் பெரிய பலம். வரி விலக்குகூட வேண்டாம். அந்த முத்தக் காட்சிதான் வேண்டும் என்று அடம்பிடித்து வைத்திருப்பதன் காரணம் இப்போது புரிகிறது. அது இல்லாமல் என்னது அது திரைக்கதை..? மிகப் பொருத்தமாகத்தான் உள்ளது..
ஆனால் சில குறைகளும் நம் பார்வையில் இருக்கத்தான் செய்கின்றன.. இந்தப் படத்தை மருத்துவம் சார்ந்த ஒரு நகைச்சுவை படமாக கொண்டு போயிருந்தால் இதன் வீச்சு இன்னும் அதிகம் பேரை சென்று சேர்ந்திருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடிக்கும்வகையில் அந்த மயங்கி, மயங்கி விழுவதை வைத்து வேறு மாதிரியான திரைக்கதையை யோசித்திருந்தால் இதைவிடவும் அதிகம் பார்வையாளர்கள் படத்திற்குக் கிடைத்திருப்பார்கள். இப்போது மருத்துவம் சார்ந்த என்பதே பின்னால்போல் இதுவும் விஷாலின் வழக்கமான கமர்ஷியல் படங்களில் ஒன்று என்றே பெயரெடுத்துவிட்டது
ஒரு மாஸ் ஹிட் படம் என்ற பட்டத்தைப் பெறும் வாய்ப்பிருந்தும் கமர்ஷியல் திரைக்கதையால் கமர்ஷியல் கம்மர் கட் என்ற பட்டத்தைப் பெற்றுவிட்டது..! எப்படியிருந்தாலும் விஷாலுக்கு இதுவொரு முக்கியமான படம்தான்.
நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்..!

1 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

இக்கடச்சூடுங்க,

http://en.wikipedia.org/wiki/Narco_(film)

இந்தப்படத்தை உருவி பழி வாங்கும் படமாக்கியாச்சு, இந்தப்படத்துல ஹீரோயினே கள்ளக்காதல் செய்றாங்க , விஷால் படத்தில் இனியா ,அவ்வ்!