நெடுஞ்சாலை - சினிமா விமர்சனம்

02-04-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தீச்சட்டி கோவிந்தன்’, ‘கரிமேடு கருவாயன்’ வரிசையில் மதுரை மாவட்டத்தில் அன்றைய நாளில் கலக்கிய கொள்ளைக்காரன் ‘தார்ப்பாய் முருகன்’. அன்றைய மதுரை மாவட்டத்தில் இருந்த தேனி, பெரியகுளம் பகுதிகளில் இரவு நேரத்தில் இந்த முருகன் பய செய்த சேட்டைகளுக்கு தனி நோட்டு போட்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து வைத்திருந்ததாக சொல்வார்கள்.. அந்தத் திருடனை ஹீரோவாக்கி கதையில் காதலைத் திணித்து இரண்டரை மணி நேரத்திற்கு நம்மை உட்கார வைத்து சாதித்துகாட்டிவிட்டார்கள்.. வெல்டன்..



தார்ப்பாய் முருகன் கொடி கட்டிப் பறக்கும் பெரியகுளம் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வரும் பிரசாந்த் நாராயணனுக்கு அங்கே ஹோட்டல் வைத்திருக்கும் ஹீரோயின் மங்கா மீது ஒரு தலை வெறி.. கூடவே தன்னை மீறி அந்த ஏரியாவில் எதுவும் நடக்கக் கூடாது என்கிற ஈகோ வேறு.. தார்ப்பாய் முருகனையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து பரேடு கொடுத்து அனுப்பி வைக்கிறார். ஆனாலும் முருகனால் தொழிலை நடத்தாமல் இருக்க முடியவில்லை.

மங்காவை நெருங்க முயல்கிறார் இன்ஸ்பெக்டர். மங்கா அவரை அவமானப்படுத்திவிட.. அவளை அவமானப்படுத்த பிரார்த்தல் கேஸ் போடுகிறார். சாட்சி சொல்ல முருகனை ஏற்பாடு செய்ய.. அவன் கோர்ட் கூண்டிலேறி ஏமாற்றிவிடுகிறான். உடனேயே மங்காவுக்கு முருகன் மீது காதல் பிறக்க. இங்கே இன்ஸ்பெக்டருக்கு கொலை வெறியே வந்துவிடுகிறது..

மங்காவின் தூண்டுதலால் திருட்டுத் தொழிலை நிறுத்துவதாக முருகன் சொல்ல.. இன்னொரு பக்கம் தனது வருவாய் குறைந்துவிட்டதால் முருகனை இழுக்கும் முயற்சியில் பாஸ் சலீம்குமார் இயங்க.. மங்கா, முருகன் இருவரையும் காலி செய்ய இன்ஸ்பெக்டர் முயற்சி செய்ய.. முடிவென்ன என்பதுதான் கதை..!

ஒரு திருட்டு என்றால் அது எப்படி நடக்கிறது என்பதைக் காட்டுவதற்கு இந்த ஒரு படத்தையே உதாரணமாகக் காட்டலாம். தபதபவென்று லாரியின் பின்னால் வெறும் காலோடு ஓடி வந்து ஜம்ப்பாகி எட்டிப் பிடிக்கும் காட்சியில் துவங்குகிறது பரபர திரைக்கதை.. பின்னாலேயே ஹெட்லைட்டை ஆஃப் செய்துவிட்டு வரும் சின்ன மினி லாரியும், உடன் இருக்கும் 3 நண்பர்களும்.. இவர்களோடு சேர்ந்து ஆட்டையை போடும் காட்சிகள் எல்லாம் பலீர் ரகம்.. இயக்குநரின் கடின உழைப்பை இந்தக் காட்சிகளில் பார்க்க முடிகிறது..!

ஹீரோவாக ஆரி. தாமிராவின் ரெட்டைச் சுழியில் அறிமுகமானவர். இது அவருக்கு மூன்றாவது படம். இந்தப் படத்திற்காக பல படங்களை நிராகரித்தும் இருக்கிறார். அந்த உழைப்புக்கேற்ற பெருமையும், பாராட்டும் இப்போது அவருக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது..

கொள்ளையடிக்கும் காட்சிகளின் இரவுப் பொழுதுகளில் இவருடைய ஸ்பீடு ஆக்சனுக்கேற்றாற் போன்ற இவருடைய உடல் மொழி அபாரம்.. வசனங்களை கீச்சுக் குரலில் பதிவு செய்து வைத்திருப்பதால் பல இடங்களில் அது புரியாமலேயே போய்விட ஆனாலும் தன் நடிப்பால் அசராமல் காட்சியை ரசிக்க வைத்திருக்கிறார் ஆரி.

சட்டென்று எழும் கோபம்… இன்ஸ்பெக்டருடன் மல்லுக் கட்டுவது.. மங்காவுடன் வம்பிழுப்பது.. சலீம்குமாருடன் மோதுவது.. கோபிப்பது.. பின் சட்டென பாசத்தைக் காட்டுவது.. லாக்கப்பிற்குள் நுழைந்து தெனாவெட்டாக பேசுவது.. இன்ஸ்பெக்டர் பரேடு கொடுத்தவுடன் அதே தோரணையுடன் மெதுவாகப் பேசுவது.. ஆந்திர கடத்தல்காரனிடம் சிக்கிய பின்பு அடி வாங்கி மயங்கிய நிலையில் மங்காவைப் பற்றி பேசும் அந்த உருக்கமான காட்சி.. என்று அனைத்திலும் மனிதர் வாழ்ந்திருக்கிறார்.. நல்ல இயக்குநர்கள் கிடைத்தால் சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு வரலாம் என்பதற்கு ஆரிக்கு இந்தப் படம் ஒரு மிகச் சிறந்த உதாரணம்..!

சிறந்த ஹீரோயின் அறிமுகம். அழகு முகம்.. ஷிவதா.. வழக்கம்போல கேரளத்து வரவு. படம் முழுக்க பாவாடை, சட்டையில் அழகு மிளிர.. எடுத்துக்காட்டாய் திமிறிக் கொண்டிருக்க.. கண்களை அலைபாய வைக்கிறார். கண்களில் இருந்து ஒரு வெள்ளியை பாய்ச்சியதுபோல பாடல் காட்சிகளில் ஜொலிக்கிறார். நடிப்பும் பண்பட்டதாகவே வந்திருக்கிறது..

இன்ஸ்பெக்டரை சாத்திவிட்டு வெளியே போகச் சொல்லும் காட்சியிலும், காசு கொடுக்காமல் செல்லும் ஆரியை விரட்டிச் சென்று காசு கேட்கும் காட்சியும்.. அனைவரையும் அண்ணன்.. அண்ணன் என்று பாசத்துடன் அழைத்து சாப்பிட அழைப்பது.. டபுள் மீனிங் டயலாக் என்பதை புரிந்து கொண்டு கண்டு கொள்ளாமல் செல்லும் அந்தப் பக்குவமும்.. இந்தப் பெண்ணின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார். இறுதியில் டெல்லியில் அதே படபட பேச்சோடு ஒரு ஹோட்டலுக்கு ஓனராகி வாழ்ந்து காட்டியிருக்கும் தன்னம்பிக்கை பெண்ணாக அவரைக் காட்டியிருப்பது மிகச் சிறப்பு..

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் புதுமுகம் பிரசாந்த் நாராயணன் அசப்பில் நடிகர் டேனியல் மாதிரியே இருக்கிறார். ஆனால் நடிப்பில் வெகுவாக ஸ்கோர் செய்திருக்கிறார். சலீமுடன் லாக்கப்பில் சிரிப்பு, கோபம்.. ஆத்திரமுமாக மாறி மாறி அவர் காட்டும் எக்ஸ்பிரஸன்ஸ் சூப்பர்.. எங்கேயிருந்து பிடித்தார்களோ தெரியவில்லை. நல்வரவு..

மலையாளப் படவுலகின் குணச்சித்திர நடிகர்.. காமெடியும் செய்வார்.. தேசிய விருது பெற்றவர் சலீம்குமார்.. மலையாளம் கலந்த தமிழுமாக பேசியே சமாளிக்கிறார். காமெடி கலந்து பேசியிருப்பதால் தப்பித்தார். மலையாளத்து நடிகர்களுக்கு அவர்களது குரல்தான் பெரிய எதிரி என்பார்கள். இதில் அதுவும் உண்மை.. இவரது திருமண நாளன்று அஸ்வின் அவரது உடையை பற்றி குறை சொல்ல… முக்கால் நிர்வாணத்துடன் நின்றுவிட்டு ஒரு நடை நடந்து காட்டுவார் பாருங்கள்.. தியேட்டர் முழுக்க அப்ளாஸ்.. வெல்டன் ஸாரே..

மங்காவின் கடையில் மாஸ்டராக இருக்கும் தம்பி ராமையா இணைப்புப் பாலமாக சில காட்சிகளில் நடித்திருக்கிறார். இதேபோல் ஏட்டுவாக நடித்திருக்கும் நடிகரும் பக்குவப்பட்ட நடிப்பைக் கொட்டியிருக்கிறார்..

ஒரு நல்ல திரில்லர் டைப் படமோ என்று நினைப்பதற்குள் இடைவேளை வந்துவிட்டது. ஆனால் அதன் பின்பு கதையின் தன்மையை மங்கா கேரக்டரே கொஞ்சம் சிதைத்துவிட்டதால் மிகச் சிறந்த படமாக இதனைச் சொல்ல முடியாமல் போன துரதிருஷ்டம் நமக்கு..!

மங்காவின் கேரக்டர் ஸ்கெட்ச் நம்பும்படியாக இல்லை என்பதுதான் உண்மை. அப்படியே அந்த ஹைவே ரோட்டில் கடை போட்டு வைத்திருந்தாலும் இந்த அளவுக்கு சில நேரங்களில் மெச்சூரிட்டியாகவும், பல நேரங்களில் அன் மெச்சூரிட்டியாகவும் இருப்பது லாஜிக் இடிப்பது போல தோன்றுகிறது.. எத்தனை கஸ்டமர்களை பார்த்திருப்பார்..? இன்ஸ்பெக்டரின் வழிசலை புரிந்து கொள்ள முடியாதா..?

அதுவரையிலும் எலியும், பூனையுமாய் பார்த்துக் கொண்டிருந்த முருகனை கோர்ட்டில் தனக்கு ஆதரவாக பேசிவிட்டார் என்பதை பார்த்தவுடன் காதல் பிறந்து காதலிக்க ஆரம்பித்தவுடனேயே கதையும், திரைக்கதையும் இயக்குநரின் கைகளில் இருந்து நழுவிவிட்டதாகவே தெரிகிறது..

முருகனை கடைசியான திருட்டு வேலைக்கு அனுப்பாமல் தடுக்க தான் நிர்வாணமாகி நிற்கும் அந்த ஒரு காட்சியிலேயே அந்த மங்கா கேரக்டரே செத்துவிட்டது.. முருகனை காதலிக்கத் துவங்கி அந்த இருட்டு ராத்திரியில் தேகத்தைத் தொட அனுமதித்து காமத்தை எதிர்நோக்கிச் செல்லும் மங்காவின் செயல்.. முற்பாதியில் நாம் பெரிதும் நம்பியிருந்த மங்காவை கற்பழித்தேவிட்டது.. ஸாரி இயக்குநர் ஸார்..!

ராஜவேலின் ஒளிப்பதிவுதான் படத்தின் மிகப் பெரிய பலம். நிலா வெளிச்சத்தில் காட்டும் கொள்ளைகள்.. லாரி சேஸிங்.. சண்டை காட்சிகள்.. குத்துப் பாடலின் ஸ்டைல்.. ஆந்திர கடத்தல்காரரின் இருப்பிடம்.. மங்காவின் வீடு.. சலீம்குமாரின் வீடு.. என்று அனைத்தையும் ஒரு கேரக்டராகவே நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல கேமிரா புகுந்து விளையாடியிருக்கிறது. வெல்டன் ராஜவேல் ஸார்.

அக்கால திருட்டுக்களின் விளக்கவுரை.. கதையை இழுத்தடிக்காத கேரக்டர்கள்.. பரபரப்பான திரைக்கதை.. படம் முழுக்க விரவியிருக்கும் நகைச்சுவை கலந்த வசனங்கள்.. அக்காலக்கட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம் எம்ஜிஆரின் மரணம் போன்ற காட்சிகளின் திணிப்பு.. அதிகம் மெனக்கெடாமல் அந்தக் கதைக்களத்திலேயே நின்று விளையாடியிருப்பது.. என்று பலவற்றாலும் இயக்குநர் கிருஷ்ணா பாராட்டுக்குரியவராகிறார்.  

பொதுவாக மணிரத்னம்தான் இது போன்று கீச்சுக் குரலில் ஒலிப்பதிவு செய்வார். இப்போது இவரும் செய்திருக்கிறார். சத்யாவின் பின்னணி இசை தேவையானதுதான் என்றாலும், அது வசனங்களை ஆழத்தில் தள்ளிவிட்டது. பல வசனங்களை புரிந்து கொள்வதற்குள் அடுத்த காட்சியும் வந்துவிடுகிறது.. இப்படியாக சில வசனங்களை புரிந்து கொண்டு சிரிக்க முடியவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இது ஓகே.. மற்ற தியேட்டர்களில் எப்படியோ..?

ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம் என்று மூன்றுமே சிறப்பாக இருந்தும் கதை, திரைக்கதையில் பின்னியிருக்க வேண்டிய விஷயத்தில் கோட்டைவிட்டுவிட்டதால் நாம் முன்பே சொன்னதுபோல டிரெயினிங் படம் என்று சொல்லும் ஒரு வாய்ப்பை இது இழந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.. ஆனாலும் என்றென்றும் இந்த மங்காவும், முருகனும் நம் மனதில் இருப்பார்கள். இருக்க வைத்த இயக்குநருக்கு நன்றிகள்..!

0 comments: