பனிவிழும் மலர்வனம் - சினிமா வி்மர்சனம்

03-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிக மிக வித்தியாசமான கதை.. இப்படியொரு கதையில் படத்தைத் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்களுக்குத்தான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும்..!


இணையத்தில் பழகிய ஒரு மாதத்திலேயே காதல் கொள்கிறார்கள் ஹீரோவும், ஹீரோயினும். காதல் பற்றி அறிந்த இருவரின் வீட்டிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள்.. அடி, உதை என்று நிகழ்வுகள் பரவ.. கோபமடையும் காதலர்கள் இருவரும் வீட்டில் இருந்து தப்பிக்கிறார்கள்.

எங்கேயாவது சென்று கல்யாணம் செய்து கொண்டு வாழ விருப்ப்ப்பட்டு செல்பவர்கள் கொடைக்கானல் சென்றடைகிறார்கள். அங்கே இவர்கள் இயற்கைக் காட்சிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் நிலையில் பேருந்தை தவற விடுகிறார்கள். அப்போது அங்கேயே இருக்கும் 3 ரவுடிகள் அவர்களை மிரட்ட.. அந்த ஊரில் இருக்கும் வர்ஷாவின் உதவியால் தப்பிக்கிறார்கள்.

வேறு வழியில்லாமல் வர்ஷாவின் வீட்டில் தங்கும் காதலர்களுக்கு அங்கேயிருந்த சூழல் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.. ஆனால் ஒரு எதிரி இருக்கிறார் என்பதும் தெரியாமல் போகிறது.. அந்த எதிரி திருவாளர் புலி.. ஊருக்குள் ஒரு புலி இருக்கிறது என்பதைத் தெரிந்தும் யாரும் அந்தப் பக்கம் போகாமல் இத்தனை நாட்கள் இருந்ததாகச் சொல்கிறார் வர்ஷா. இவர்கள் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி வரும் வேளையில் புலி இவர்களை எதிர்கொள்கிறது.. இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் கதை..!

இடைவேளைவரையிலும் வழக்கமான காதலர்களின் கதையாகவே போய்க் கொண்டிருக்கும் சூழலில் திடீரென்று என்ட்ரியாகும் புலியால் திரைக்கதை பெரும் சுவாரசியமாகிறது.. அந்த ஊரில் இருந்தாக வேண்டிய சூழல்.. வர்ஷாவின் பையனுக்கு மெடிக்கல் செலவு.. ஹீரோ செய்யும் உதவிகள்.. எப்படியும் காப்பாத்தியாகணும் என்று அவர்கள் துடிக்கின்ற துடிப்பு.. புலிக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்த்தும்வகையில் இருக்கும் காட்சியமைப்புகள்.. அதன் நியாயத்தை அதுவாக இருந்து பார்த்தால்தான் புரியும் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸ் யாருமே ஊகிக்க முடியாதது..

ஹீரோ அபிலாஷ்.. அந்த பருவ வயது இளைஞரை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.. சானியாதாராவும் அப்படியே.. இயக்குநரின் இயக்கத் திறமையினால் இருவரின் நடிப்பிலும் குறை காண முடியவில்லை.. அனுராதா கிருஷ்ணமூர்த்தியின் கொஞ்ச நேர நடிப்புகூட இப்படிப்பட்ட அம்மாக்களின் பதற்றத்தை கண் முன்னே கொண்டு வந்துவிட்டது.. அவருடைய கணவராக நடித்திருப்பவரின் கோபம்.. அந்த ஆவேசப் பேச்சு.. எல்லாமே காதலிக்கப்படுபவர்களின் வீடுகளில் நடப்பதையே காட்டியது..

சந்தேகமில்லாமல் வர்ஷாவை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிக இயல்பாக நடித்திருக்கிறார். கத்தியைக் காட்டி ரவுடிகளை மிரட்டுவதில் துவங்கி.. இவர்களை வீட்டில் வைத்து கவனிக்கவும் செய்யும் அந்த மென்மையையும் தனது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். தனது பிள்ளைக்காக அவர் படும் பதட்டம்.. அதே பிள்ளை திருடி கொண்டு வந்திருப்தை அறிந்து அதே கோபத்துடன் கண்டிப்பது.. இந்த வர்ஷாவுக்கு இன்னும் நிறைய வாய்ப்பு கொடுத்தால் அவருக்கும் நல்லது.. கோடம்பாக்கத்துக்கும் நல்லதுதான்..!

கிளைமாக்ஸ் காட்சியில் அவர் எடுக்கின்ற அந்த முடிவு ஏற்படுத்தும் பதட்டம் தியேட்டரை கொஞ்சம் ஆட வைக்கும் என்றே நம்புகிறேன்.. தாய்ப் பாசத்தை வெளிக்காட்ட இதைவிட சிறந்த சந்தர்ப்பம் இயக்குநருக்குக் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். நச் என்று முடித்திருக்கிறார்..

அதற்குப் பின்பு காதலர்கள் எடுக்கும் அந்த டிவிஸ்ட் பலே.. இதையும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. எதையும் அனுபவப்பூர்வமாக அறிந்தவர்கள் மட்டுமே உண்மையை உணர்வார்கள். இதில் அந்தக் காதலர்கள் அதனை உணர்ந்துவிட்டார்கள் என்பதை காட்டியிருப்பது நன்று..!

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு தனியாக ஒரு ஷொட்டு.. கொடைக்கானலின் அந்த இயற்கைக் காட்சிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயினைவிடவும் அழகு கேமிரா காட்டிய இயற்கைதான்..! அவ என்னவோ பாடல் என்னவோ செய்தது.. பாடலும், காட்சிகளும் ரசிக்க வைத்தன.. அம்மா அம்மா பாடலும், காடு பாடலும் அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை..!

அரசு இயந்திரங்கள் என்ன லட்சணத்தில் இருக்கிறார்கள் என்பதையும் கிடைத்த கேப்பில் மிகக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். துப்பாக்கியே இல்லாமல் புலி வேட்டைக்கு வந்திருக்கும் வனத்துறை.. காலம்காலமாக காட்டுக்குள் இருந்தாலும் இது தொடர்பான முன்னெச்சரிக்கையே இல்லாமல் இருந்து வரும் அரசு அதிகாரிகளை பளீச்சென அடையாளப்படுத்தியிருக்கிறார்.

நிஜ புலியைத்தான் சில காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்கள். புளூமேட்டில் எடுத்து பின்பு படத்தில் மேட்ச்சிங் செய்திருக்கிறார்கள். இப்படித்தான் செய்ய முடியும்.. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி சினிமாக்களுக்கு கடிவாளம் போட்டுவிட்டதால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதையும் மிக அழகாக கொஞ்சம் நம்பும்படியுமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் டேவிட். இதற்காக அவருக்கு எனது பாராட்டுக்கள்..

பார்த்தவுடன் காதலா..? பேசியவுடன் காதலா..? பெற்றவர்களின் பேச்சு கேட்கக் கூடாதா..? என்றெல்லாம் காதலின் எதிர்ப்பாளர்கள் பலரும் காலம் காலமாக கத்திக் கூப்பாடு போட்ட கதையை இந்த படத்தின் கிளைமாக்ஸில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். புரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்.. புத்திசாலிகள்.. புண்ணியம் பெறுவார்கள்..!

அவசியம் பார்க்க வேண்டிய படம் பனிவிழும் மலர்வனம்..!

2 comments:

Anonymous said...

மிகவும் அருமையான விமர்சனம், நல்ல படங்களை எப்போதும் பார்த்தாக வேண்டும், நான் என்னவோ தவறவிட்டு விட்டேன், கண்டிப்பாக பார்க்கத் தூண்டிவிட்டது தங்களின் விமர்சனம்.

puduvaisiva said...

பார்க்கத் தூண்டிவிட்டது தங்களின் விமர்சனம் me too :-)))))

& thanks for the post bro !