நிமிர்ந்து நில் சினிமா விமர்சனம்

13-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்றைய சமூகம் இருக்கின்ற நிலைமையைப் பார்த்து ஒரு சாமான்யனுக்குள் எழும் கோபத்தையும், அதனால் அவனுக்கு ஏற்படும் நிலைமையையும் இன்றைய அரசியல் சூழலுடன் பொருந்தி வரக்கூடிய அளவுக்கு ஒரு கதையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
ராமகிருஷ்ண மடம் மாதிரியான பள்ளிகளில் படித்து பள்ளியிறுதியில் மாநிலத்திலேயே முதலாவது மாணவனாக வந்த ஜெயம்ரவி கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு சந்தோஷமாகவே நாட்டிற்குள் வருகிறார். இதுவரையில் அவர் இருந்து வந்த உலகம் வேறு.. இப்போது இருக்கின்ற உலகம் வேறு என்பதை இயக்குநர் முதல் சில காட்சிகளியே புரிய வைத்துவிடுகிறார்..
சிக்னலில் காரில் அமர்ந்தபடியே திமிருடன் ஜெயம்ரவியின் டூவீலரை தள்ளிவிட்டு கதையை துவக்கி வைப்பதும் சாட்சாத் இயக்குநர் அண்ணன் சமுத்திரக்கனிதான்..! இங்கே துவங்கும் கதையின் போக்கு முதல் பாதியில் ஜெட் வேகத்திலும் பிற்பாதியில் சற்று குறைந்த வேகத்திலுமாகச் சென்று தனது இலக்கை அடைந்துள்ளது. ஆனால் பிற்பாதியில் பாதையும் மாறிவிட்டதால் கொஞ்சம் ரசிக்கவும் முடியவில்லை..
ஸ்பாட் பைனுக்கு கில்மா கொடுத்துவிட்டு சைடாக கட்டிங்கை கட்டத் தெரியாமல் ஹீரோயினிடம் பல்பு வாங்கிக் கொண்டு சட்டை கிழிந்த நிலையில் பரிதாபமாக நிற்கும் ஹீரோவை போல லட்சணக்கணக்கான ஹீரோக்கள் இன்னமும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் பயந்து போய் கொடுக்கின்ற அந்தச் சின்னத் தொகையில் ஆரம்பித்த்துதான் லஞ்சப் பேய். அது இப்போது 2ஜி லெவலில் போய் நிற்கிறது..
முதலில் நாம் மாற வேண்டும்.. மாற்றத்தை நம்மில் இருந்துதான் துவங்க வேண்டும் என்கிறார் இயக்குநர். நாம் யாருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்பதை மட்டும் பாலோ செய்தால் போதும் என்கிறார் இயக்குநர். ஆனால் இந்த இயந்திரமயமான வாழ்க்கையில் அது சாத்தியமில்லை என்பதுதான் நிசமானது..!
போலீஸ் ஸ்டேஷனில் அனைத்து செக்சன் பெயர்களையும் சொல்லி மிரட்டுவது.. அதுகூட தெரியாமல் அப்பாவியாய் ஜெயம் ரவி இருப்பது.. சூரி வந்து காப்பாற்றுவது.. கோர்ட்டில் அதையும்விட அப்பாவியாய் அனைத்தையும் வெளிப்படையாச் சொல்லி மாட்டிக் கொள்வது.. என்று இந்த பகுதி முழுவதிலும் தனது அப்பாவித்தனத்தை அப்பட்டமாய் காட்டியிருக்கிறார் ஜெயம்ரவி. நல்ல நடிப்பு.
ஆனால் இதற்கடுத்து சிறைக்குச் சென்று திரும்பி வந்தவுடன் திடீரென்று அனைத்து அதிகாரிகள் மீதும் சம்பந்தப்பட்ட துறையின் மேலதிகாரிகளுக்கு புகார் அனுப்புகிறார். இந்தத் திடீர் மனமாற்றம் எப்படி அவருக்குள் ஏற்பட்டது என்பதற்கான காரணம்தான் தெரியவில்லை.. இப்போதும் அவர் அப்பாவியாகத்தான் இருக்கிறார்.
அவருடைய அம்மா சொன்ன பொண்ணை வீட்டுக்கு வரவழைத்து தான் போலீஸிடம் சிக்கிய கதையை சுவாரசியமாகச் சொல்கிறார்.. அமலாபாலின் காதலை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்.. இத்தனையும் செய்பவர்.. திடீரென்று அவர்களுக்கெதிராக புகார்களைத் தட்டிவிடுகிறார் என்பதையும் அது ஏன் என்பதையும் சொல்லாமல் போனாலும்.. கதையோட்டத்தில் அது சுத்தமாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது..
இந்தப் புகாரின் காரணமாய் மீண்டும் ஒரு முறை போலீஸிடம் பிடிபட்டு ரத்தச் சகதியாய் மீட்கப்படுபவர் இப்போதும் தன்னை மருத்துவமனையில் வந்து பார்க்கும் அதே இன்ஸ்பெக்டரிடம் நீங்கதான் என்னை கூட்டிட்டு போனது என்று திரும்பவும் அப்பாவியாய் கேட்கிறார்.. இந்த அப்பாவித்தனம் வீட்டுக்கு வந்தவுடன் மனசு மாறி சட்டென்று புயலாய் மாறியவுடன் கதையின் போக்கும், திரைக்கதையின் வேகமும் சூடுபிடிக்கிறது.. ஆனால் இந்த லாஜிக்தான் உதைக்கிறது..!
இந்தக் கதைக்கு இரட்டை வேடம்கூட தேவையில்லாதது.. பிற்பாதியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் அந்த வழக்கை எப்படி எதிர்கொள்கிறார்கள்..? அதை உடைப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை வன்முறை கலந்துகூட கொடுத்திருக்கலாம்.. ஆனால் ஏன் அந்த இன்னொரு ஜெயம்ரவியை ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்தார்கள் என்று தெரியவில்லை. அந்த ஜெயம்ரவியின் கேரக்டர் ஸ்கெட்ச்.. பின்பு அவர் கோர்ட்டிற்கு வந்து சாட்சி சொல்லி.. பின்பு பல்டி அடித்து, நீதியையும், தர்மத்தையும் பற்றி இரு நபர் டிவிஷன் பெஞ்ச்சுக்கு கிளாஸ் எடுக்க படம் இப்போது மிகச் சாதாரணமான கமர்ஷியல் படமாக ஆகிவிட்டது.. அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டை இத்தனை நல்ல படத்தில் ஏற்க முடியாமல் போய்விட்டது..
படத்திற்கு மிகப் பெரிய பலம் வசனங்கள்தான்.. அத்தனையும் கூர்மை.. இப்போதைய இளைஞர்களை உசுப்பிவிடும்படியான குத்தீட்டிகள்.. பல காட்சிகளில் வசனங்களால்தான் படமே நகர்கிறது.. ஹீரோயின் அமலாபாலுக்கு இருக்கின்ற பொது அறிவுகூட ஹீரோவுக்கு இல்லை என்று சொல்வது கொஞ்சமும் பொருந்துவதாக இல்லை.. ஹாஸ்டலிலேயே தங்கிப் படித்தவர்.. வெளியிலேயே வந்த்தில்லை. ஆகவே அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று சொன்னாலும் புத்தகத்தில்கூடவா இதைப் படித்திருக்க மாட்டார்..? இது போன்ற ரொம்ப அப்பாவித்தனமே ஜெயம்ரவியின் கேரக்டரை நம்புவதற்கு மிகவும் தடையாகிவிட்டது.
கோர்ட்டில் பைன் கட்டி வண்டியை எடுத்துக் கொள்ளச் சொல்வது.. வண்டியின் என்ஜின் காணாமல் போயிருப்பது. போலீஸ்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினை.. அதிகாரப் பிரச்சினை.. லஞ்சம் எது, எதற்கெல்லாம் எப்படியெல்லாம் பயனாகிறது என்பதைக் காட்டுவது.. கோர்ட்டில் நீதிபதி சாமர்த்தியமாக லஞ்சம் வாங்குவது.. ஒரு ஆள் சைகை காட்டுவது.. இந்த 100 ரூபாயில் ஆரம்பித்து 1 லட்சத்தையும் தாண்டும் இந்தக் கூட்டணியின் ஆள், அம்பு, சேனைகளின் அதிரடியை வரிசையாகக் காட்டுவதில் இருந்த வேகம் பிற்பாதியில் புஸ்வாணமாகவும், கேலி, கிண்டலாகவும், காமெடியாகவும் போய்விட்டதால் முற்பாதியில் நம்மையறியாமலேயே உள்ளே இழுக்கப்பட்ட நாம்.. இடைவேளைக்கு பின்பு நம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய உணர்வுக்கு தள்ளப்பட்டோம்.
இன்னுமொரு எல்லை மீறல்.. சரத்குமார் கேரக்டர்.. சிபிஐயில் பணியாற்றும் அவரது பணித் தகுதி என்ன என்பதுகூட பதிவு செய்யப்படவில்லை.. ஆனால் அவரே  சேனலின் உரிமையாளரை அழைத்து மிரட்டுகிறார். அவரே டெல்லியில் இருந்து நொடிப் பொழுதில் பறந்து பெங்களூருக்கு வந்து சண்டையிடுகிறார். சேனலின் நேரலை ஒளிபரப்பில் தான் சிக்கியிருக்கிறேன் என்பது தெரிந்தும் மீடியாவிடம் பகிரங்கமாகச் சண்டையிடும் அந்தக் காட்சிகள் எல்லாம் ரொம்பவே ஓவர்.. ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகள்..
2-ஜி வழக்குகளில் ஜெயா டிவியையும், மற்ற இதர தனியார் தொலைக்காட்சிகளையும் யாரும், எதுவும் செய்துவிட முடியவில்லை.. அதேபோல் சொத்துக் குவிப்பு வழக்கு போன்ற கேஸ்களில் தி.மு.க. தரப்பு சேனல்களையும் அவர்களால் தடுக்க முடியவில்லை.. இதுவெல்லாம் நம்ப முடியாத விஷயம். இதனை சி.பி.ஐ.யை வைத்து உடனுக்குடன் முடிப்பதாக சொல்லியிருப்பது குழந்தைத்தனமான திரைக்கதையாக எனக்குப் படுகிறது.. திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை சரத்குமார் சம்பந்தப்பட்டதுதான்..!
லஞ்சப் பேயை கண்டறிய துவங்கி பிறப்புச் சான்றிதழில் துவங்கி இல்லாத ஒருவனுக்கு டெத் சர்பிடிகேட், பிடிவராண்டுவரையிலும் கொண்டு போய் காட்டியிருப்பது தமிழ்ச் சினிமாவுக்கு புதியதுதான்.. ஆனால் நாட்டுக்கு புதிதல்ல.. இந்த லஞ்ச பேரத்தில் சிக்கிக் கொண்டு தவித்த மோகன் என்றொரு கேரக்டர்தான் படத்தின் பிற்பாதியில் கொஞ்சமேனும் ஒரு உருக்கத்தை மனதில் ஏற்படுத்தியது. சஸ்பென்டான அனைவருமே கேலியும், கிண்டலுமாக இருக்க இவர் ஒருவரே அழுது கொண்டிருக்கிறார். லஞ்சம் வாங்கியதற்கான காரணத்தை அவர் எழுதி வைத்துவிட்டு தன் முடிவைத் தானே தேடிக் கொள்ளும் அந்தக் காட்சி உருக்கம்.. பிள்ளைகளை பள்ளியில் படிக்க வைக்க சம்பளம் போதவில்லை. லஞ்சம் தேவைப்பட்டது என்று அவர் சொல்வதே லஞ்சத்தை இன்னொரு பக்கம் நியாயப்படுத்தும் செயல்தான்.. இப்போது இதற்கு யார் காரணம்..? அரசுதானே..? அதையும் இந்தக் காட்சி சற்றே யோசிக்க வைத்தது. இவர் கேண்டிட் கேமிராவில் பிடிபடும் காட்சியின்போதே இவரது கேரக்டர் ஸ்கெட்ச் பிடிபட்டுவிட்டது. அந்த ஒரு நொடி காட்சியிலேயே மனதைத் தொட்டுவிட்டார் மோகன். கே.பி.மோகன் தன் கலையுலக வாழ்க்கையில் முதல்முறையாக மிகப் பெரிய காட்சியொன்றில் தனது பெயரை பொறித்து வைத்திருக்கிறார்.. வாழ்த்துகள் அண்ணனுக்கு..
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “இந்தப் படத்தின் கதையில் மாற்றம் செய்யும்படி ஜெயம்ரவியும், அவரது அப்பாவும் வற்புறுத்துவதாக சமுத்திரக்கனி என்னிடம் வந்து சொல்லி வருத்தப்பட்டார். நான்தான் அப்போது அவருக்கு அட்வைஸ் செய்து அதையும் செய்து கொள்ளுங்கள்.. என்று சமாதானம் செய்து இந்தப் படம் துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறேன்..” என்று பேசினார்.
இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஜெயம்ரவி அண்ட் கோ செய்த திருத்தம் இடைவேளைக்கு பின்பு வரும் இன்னொரு ஜெயம் ரவி காட்சிகளும், ஹீரோயிஸத்தை நிலை நிறுத்தும் சண்டை காட்சிகளுமாகத்தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.. ஒரு நல்ல படத்தின் கதையை இப்படி சிதைத்தது தவறு என்று சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் உணர்வார்கள்..
142 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு.. உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் நேரடி விசாரணையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எத்தனை, எத்தனை காட்சிகளை வைத்திருக்கலாம்.. சமுத்திரக்கனி நிச்சயம் யோசித்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனால் அத்தனையும் மாற்றப்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்..
இப்படத்தில் எனக்குப் பிடிக்காத.. கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.. ஓய்வு பெற்ற டிஜிபி வால்டர் தேவாரத்தை நினைவுபடுத்திய ஒரு கேரக்டர்தான்.. ரோஜா கம்பைன்ஸ் வி.ஞானவேலு இந்தக் கேரக்டரில் நடித்திருக்கிறார். முக்கியமான நேரத்தில் அமலாபாலை காப்பாற்றும் இந்த கேரக்டரை ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபியாக காட்டி மிகவும் நல்லவராக சித்தரித்திருக்கிறார். கதைக்குத் தேவைதான் என்றாலும் வால்டர் என்ற பெயர்தான் இடிக்கிறது..
வால்டர் தேவாரம் என்ற அந்த ஐ.பி.எஸ். அதிகாரி எந்த அளவுக்கு ஒரு கிரிமினல் குற்றவாளி என்பதை வீரப்பன் வேட்டையினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மலைவாழ் மக்கள் இன்றைக்கும் கூறுவார்கள். ஹிட்லரின் நாஜி வேட்டையை போல மக்களை சித்ரவதை செய்த குழுவுக்குத் தலைமை தாங்கிய ஒருவரை இப்படி நல்லவராக அடையாளம் காட்டித் தொலைத்திருக்க வேண்டாம்..!
ஜெயம் ரவியின் அப்பாவி நடிப்பும், இரண்டாம் பாதி ஜெயம்ரவியின் அலட்டல் நடிப்பும் ஓகே.. அப்பாவியைவிட வல்லவனே அசத்துகிறார்.. அந்த குதூகுலம்.. சந்தோஷம்.. துள்ளல்.. இதெல்லாம் நிறைய ஹீரோக்களுக்கு வராது.. அப்பாவியில் இருந்து வல்லவனுக்கு மாற நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது.. கேரக்டருக்காக இப்படி தங்களை உருமாற்றிக் கொண்டு உழைப்பதுதான் ஹீரோக்களுக்கு அழகு.. வெல்டன் ரவி ஸார்..
அமலாபால் முன்னைவிட இப்போது இன்னமும் அழகாக இருக்கிறார். இயக்கத் திறமையினால் நடிப்பும் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது.. இவருடைய அம்மாவுடன் சண்டையிடும் அந்த ஒரு காட்சியில் நடிப்பையும் நன்றாகவே கொட்டியிருக்கிறார். நடிகைக்கான ஸ்கோப் உள்ள படம் ஒன்று கிடைத்தால் போதும்.. இவர் போன்றவர்கள் மின்னுவார்கள்..! முற்பாதியில் சூரிதான் பாதி டயலாக்குளை வாரி வழங்கி நம்மை காப்பாற்றுகிறார்.. கடைசிவரையிலும் இருந்து குணச்சித்திர நடிகராக மாறியிருக்கிறார். டைட்டிலில் பட்டப் பெயர்கூட கிடைத்திருக்கிறது.. வாழ்த்துகள்..!
படத்தின் மிகப் பெரிய தடையே பாடல்கள்தான். இது மாதிரியான சென்சிட்டிவ் பிரச்சினைகளைச் சொல்கின்ற படங்களுக்கு பாடல்களே தேவையில்லை. அது இல்லாமலேயே ஏன்.. காதலும்தான் தேவையில்லை. சொல்லிவிடலாம்.. ஆனால் பெரிய ஹீரோக்கள்தான் தியாகம் செய்ய பயப்படுகிறார்கள்.. இதனாலேயே மிகச் சிறந்த படங்களைகூட நம்மால் பின்னாளில் அடையாளம் காட்ட முடியாமல் போய்விடும். இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல..!
இத்தனை போராட்டத்திற்கு பின்பும் கோர்ட் வாசலில் சண்டை காட்சிகளை வைத்து.. அதையும் சில நிமிடங்கள் கூட்டம் வேடிக்கை பார்த்து.. பின்பு திடீரென்று பொங்கி வந்து அடித்துத் துவைத்து.. ஒருவரை சாகடித்து.. இத்தனையும் செய்த பின்பு ஹீரோயிஸத்தை நிலை நிறுத்தி லஞ்சம் வாங்குவது, கொடுப்பதும் குற்றம் என்று சொல்லியிருப்பதே மிகப் பெரிய குற்றமாகத் தெரிகிறது..!
அதன் பின்பு வரும் டிவி செய்திகளில் வரும் சில தமாஷான செய்திகளைப் படிக்கின்றபோது சிரிப்புதான் வந்தது.. தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானவர்கள் விசாரணையே இல்லாமல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.. லஞ்சம் கொடுத்தவர்கள் கைது.. அரசு அதிகாரிகள் முறைகேடாகச் சொத்து வாங்கினால் நடவடிக்கை.. என்ற ரீதியில் அதிகாரிகளை குறி வைத்தே அனைத்தும் சொல்லி முடிக்கப்பட்டு ஒரு நல்ல ஜனநாயகமான தமிழகத்தை இயக்குநர் சமுத்திரக்கனி எதிர்பார்க்கிறார் என்பதை உணர்த்தியிருக்கிறார். அவருடைய ஆசை நிறைவேற வாழ்த்துகள்..
ஆனால் அதே சமயம்.. அதிகாரிகள்தான் அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கிறார்கள். அதிகாரிகள் சரியாக இருந்தாலே போதும்.. அரசியல்வாதிகள் அடங்கிவிடுவார்கள் என்றெல்லாம் இந்திய அரசியலை புரிந்து கொள்ளாதவர் போல சில இடங்களில் வசனம் எழுதியிருப்பதுதான் சங்கடமாக இருக்கிறது..! இந்த நாட்டின் இந்த அவலசட்சணமான நிலைமைக்கு முதல் காரணமே அரசியல்வியாதிகள்தான். உண்மையாக இந்தப் படம் தனது சாட்டையடி வசனங்களை அரசியல்வியாதிகளை நோக்கித்தான் பாய்ந்திருக்க வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கும்.. 2-ஜி வழக்கும்தான் இந்த லஞ்சப் பேய் வழக்குகளில் உச்சக்கட்ட வழக்குகள்.. இவைகளைப் பற்றி ஜாடைமாடையாகக்கூட குறிப்பிடாமல் 100 ரூபாய், 5000 ரூபாய் லஞ்சம் வாங்குபவர்களை கொலை குற்றவாளிகளை போல குறிப்பிடுவது எந்தவித்த்திலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.. இது நிச்சயமாக ஓரவஞ்சனை..! அரசியல்வியாதிகளுக்கு சினிமாக்காரர்களால் கொடுக்கப்படும் இது போன்ற சில சலுகைகள்கூட லஞ்சத்தில் ஒரு வகைதான் என்பது எனது தாழ்மையான கருத்து..!
படம் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனின் மனதில் நாம் கொடுக்கும் லஞ்சம் நியாயமானதுதானா என்ற சின்ன கேள்வியை எழுப்பியிருக்கும்வகையில் இந்தப் படம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம்தான்.. வேறு வழியில்லை.. ஒத்துக் கொள்வோம்..!
எடுத்தவரையிலும் நன்றி சமுத்திரக்கனிக்கு..!

6 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

இந்த உலகமே அசிங்கமா இருக்கு நான் மறுபடியும் ஆசிரமத்துக்கே வந்துடுறேன்னு ஹீரோ வசனமே பேசலையா?

காதல் கொண்டேன் ஹீரோ ,சைக்கோ ஆகாமல் , அநியாத்த தட்டிக்கேட்டால் அதான் நிமிர்ந்து நில் ஆ?

படம் பார்க்கலை,ஆனால் தகவல் அறியும் சட்டப்படியோ ,இல்லை இப்படி போலியா ஆவணத்தினால் ஒரு ஆளை உருவாக்கி சான்று வாங்கினது வச்சோ ,பெரிசா எதுவுமே செய்ய முடியாது, ஏற்கனவே ராகுல் காந்திக்கு ரேஷன் கார்டு, முஷரப்புக்கு டிரைவிங்க் லைசென்ஸ் எல்லாம் வாங்கி பத்திரிக்கைகள் வெளியிட்டு இருக்கு,அதுக்கு விசாரணை , அப்புறம் 15 சஸ்பெண்ஷன் அப்புறம் மீண்டும் வேலைனு வந்துடுவாங்க.

சத்யம் படத்தில இது ஒரு காமெடி டிராக்கா வரும்,அதை இழுத்து படமெடுத்தால் ,பெருசா எடுபடுமா?

இன்னும் சொல்லப்போனால் ஒரு அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்வதால் எல்லாம் ஒன்னுமே செய்துட முடியாது? சஸ்பெண்ட் ஆனால் புரோமோஷன் பாதிக்கும்னு தான் பயப்படுவாங்க, மற்றப்படி சஸ்பெண்ஷன் காலத்தில் 50% சதவீத சம்பளத்தினை எந்த வித பிடித்தமும் இல்லாமல் கொடுக்கணும்னு விதி இருக்கு,எனவே சோத்துக்கு லாட்டரி அடிப்பாங்கனுலாம் நினைச்சுடவே கூடாது.

ஆனால் பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளுக்குள் மாட்டக்கூடாது,அப்பொழுது வேலையை விட்டே தூக்கவும் வழி இருக்கு.

வவ்வால் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

ஏன் அமலா பால் "நிமிர்ந்து நிக்கிறா"ப்போல பெருசா ஒருப்படம் போட்டா குறைஞ்சாப்போயிடும் அவ்வ்!

ஹி...ஹி அமலாப்பால்" நிமிர்ந்து" நின்னா அழகா இருக்குமேனு தான் சொன்னேன்!

Unknown said...

சில நல்ல கருத்துகளை சொல்லியிருக்கும் படம் அதற்காகவாது பார்க்க வேண்டும்.

Muruganandan M.K. said...

விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்
ஒரு முறை பார்க்கத் தோணுது

Ranga said...

Sariyana kadi padam. I did not expect Samundra Gani direct movie like this.

Regards

Ranga