ஒரு மோதல் ஒரு காதல் - சினிமா விமர்சனம்

18-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



கதையே இல்லாமல் படமெடுப்பது எப்படி என்பதை இந்தப் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்..!

மருத்துவர்களான பெற்றோர்களுக்கு பிறந்து மருத்துவம் படிக்கப் பிடிக்காமல்.. பொறியியல் படித்துவிட்டு அந்த வேலைக்கும் போகப் பிடிக்காமல் சினிமா இயக்குநர் ஆசையில் இருப்பவர் ஹீரோ. ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவரும்தான். காதல் கைகூடாதோ என்ற நிலைமை வருகிறபோது.. பெண் வீட்டார் எதிர்க்கிறார்கள் என்னும்போது ரிஜிஸ்தர் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இடையில் புகும் பெண் வீட்டார் குழப்படி செய்ய.. கேஸ் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறது.. அங்கே அந்தப் பெண் ஹீரோவை யாரென்றே தெரியாது என்று சொல்லிவிட.. மனம் வெறுத்துப் போகிறார் ஹீரோ.

ஒரு ஏமாற்றத்தை இன்னொன்னு வந்துதானே பில்லப் செய்யும். ஒரு மாறுதலுக்காக பெங்களூரில் வேலை கிடைத்து அங்கே செல்கிறார். ஒரு கல்லூரியில் லெக்சரர் வேலைக்கு சேர்பவர் அங்கே படிக்க வரும் ஒரு மாணவியுடன் காதலில் விழுகிறார். இந்தக் காதலையாவது கல்யாணம்வரைக்கும் கொண்டு போகணுமே என்ற கவனத்தோடு செயல்பட்டு தானே கல்யாண ஏற்பாடுகளை முனைப்போடு செய்து இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி கல்யாணமும் செய்து கொள்கிறார். இவ்வளவுதான் இவர்கள் சொன்ன கதை.

ஒரு காதல் தோற்றுப் போய் அவமானப்பட்டுவிட்டதால், அடுத்த காதலை அந்த அளவுக்கு போகவிடாமல் தானே முயற்சி செய்து அதனை வெற்றிகரமாக்கிக் காட்டுவேன் என்ற ஹீரோவின் சபதம்தான் கதை என்றால்.. இதனை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

படத்தின் மிகப் பெரிய மைனஸே ஹீரோவின் ஆக்சன்தான்.. காமெடி காட்சிகளிலும், ரொம்ப சீரியஸான காட்சிகளிலும் ஒன்று போலவே நடிப்பை காட்டியிருப்பதால் நமக்குத்தான் பெரும் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது.. கடைசிவரையிலும் ஒரே மாதிரி நடித்துக் காண்பித்து சொதப்பிவிட்டார்.

முதல் ஹீரோயின் பரவாயில்லை ரகம். ஒரு டூயட் பாடிவிட்டு ஓய்ந்துவிட்டார். அடுத்தவர் மேகா பர்வீன். 2 டூயட்டுகளுடன் கடைசிவரையிலும் உடன் வருகிறார். இவரது நாவில் தமிழ் தகிறத்தாளம் போடுகிறது.. இவரது கூட்டுக் குடும்ப காட்சிகள் மட்டுமே ஒரே ஆறுதல்.. கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமாக காட்ட முயன்றிருக்கிறார்கள்.

படத்தின் சுவாரஸ்யத்தை இந்த முறை பெற்றோர்கள் காட்டியிருக்கிறார்கள். பிரமிட் நடராஜன் மற்றும் மீரா கிருஷ்ணன் இருவரது அக்கப்போர்களும், சண்டைகளும்.. மோதல்களும்தான் கொஞ்சம், கொஞ்சம் நகைக்க வைத்தன..

பிரியாணி மீது வெறி கொண்ட அண்ணி… அதனை வாங்கிக் கொடுத்தே கரெக்ட் செய்யும் அண்ணன்.. இவரது மக்கு ப்ளஸ் நான்கு நண்பர்கள்.. இப்படி கதையில் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து பிய்த்து கொடுத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

கே.ஆர்.கவின் இசை.. 2 பாடல்கள் மட்டுமே முணுமுணுக்க வைத்தன. மற்றபடி பெரிய அளவுக்கு நம்மை இம்ப்ரஸ் செய்யவில்லை.. கீர்த்திகுமார் எழுதி, இயக்கியிருக்கிறார். முதல் படமென்ற தடுமாற்றம் இருந்தாலும் கதையில் ரொம்பவே மெனக்கெட வேண்டிய விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார்..

மிகக் குறைந்த பட்ஜெட் என்றாலும்,  அனைவருக்கும் பிடித்தமான கதையுடன்.. சுவாரசியமான திரைக்கதையுடன் அமைத்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். இப்போது படம் முடிந்து வெளியில் வருபவர்கள் கேட்கின்ற கேள்வி “இந்தப் படத்துல என்ன ஸார் கதை..?” என்றுதான்..!

யார் பதில் சொல்வது..?

0 comments: