காதல் சொல்ல ஆசை - சினிமா விமர்சனம்

18-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



பரம்பரையே போலீஸ் பரம்பரையாக இருந்தும், தனக்கு போலீஸ் வேலை மீது ஆர்வம் இல்லை என்பதால் அப்பாவுடன் சண்டையிட்டு அதே ஊரில் தனியாக அறை எடுத்து நண்பனுடன் தங்கியிருக்கிறார் ஹீரோ. ஹீரோயினின் செல்போன் ஹீரோவின் கைக்கு எதிர்பாராமல் வருகிறது. அதனைத் திருப்பிக் கொடுக்க முயன்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு பெரும் கோடீஸ்வரரின் உயிரைக் காப்பாற்றுகிறார் ஹீரோ.  பலனாக அந்த கோடீஸ்வரரின் அலுவலகத்தில் பார்த்தவுடன் காதலியாகத் தெரிபவரும் வேலை செய்ய.. அங்கேயே வேலையை வாங்கிக் கொள்கிறார் ஹீரோ. தன் கையில் வைத்திருக்கும் செல்போனும் அதே ஹீரோயினுடையது என்றவுடன் ஹீரோவுக்கு காதல் உண்டாகிறது. ஆனால் ஹீரோயினிடம் சொல்லவில்லை. கோடீஸ்வரருக்கும் இன்னொரு லோக்கல் தாதாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட.. இதனால் ஹீரோவின் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு.. வில்லங்கமாகிறது. இடையில் கோடீஸ்வரரின் மகனும் கம்பெனியில் என்ட்ரியாகி ஹீரோயினை ஒன் சைடாக காதலிக்கத் துவங்க.. கடைசியாக ஹீரோயின் யாருக்குக் கிடைத்தாள்.. வில்லன் என்ன ஆனான் என்பதுதான் மீதமுள்ள கதை..!

இதற்கு முன்னர் நடிகர் முரளியை வைத்து கடைசி ரீலுக்கு முந்தைய ரீல்வரையிலும் காதலைச் சொல்லாமலேயே கதையை நகர்த்தி காதலை சாகடிக்கும் படங்களை நிறையவே எடுத்தார்கள்.! அந்த வரிசையில் இதுவும் ஒன்று..!

ஹீரோ அசோக். கோழி கூவுது உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இதில் நடிப்புக்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை. காதலை முன்னிலைப்படுத்தி காதலை தெரியப்படுத்தவே தடுமாறுவது போன்ற திரைக்கதை என்பதால் அசோக்கின் நண்பரை வைத்தும் கொஞ்சம் கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.

ஹீரோயினை பார்த்துவிட்டு அவளுக்காக வேலை கேட்கச் செல்வதும்.. ஹீரோயினுக்கு ஒரு லெட்டரை எழுதி வைத்துவிட்டு அது காணாமல் போய் எம்டியின் கையில் சிக்கியிருப்பதை அறிந்து நான்கு நண்பர்களும் திணறுவதும்.. இது போன்ற சில காட்சிகள் மட்டுமே ரசிக்கும்வகையில் இருந்த்து.

காமெடியன் இல்லாத குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார் வில்லன் நான் கடவுள் ராஜேந்திரன். இப்படியொரு மொக்கைத்தனமான வில்லத்தனத்தை எப்படித்தான் கிரியேட் செய்தார்களோ தெரியவில்லை.. அதிசூர மொக்கை வில்லத்தனமான திரைக்கதை.. செஸ் விளையாடுகிறார். அதில் விளையாடி ஜெயித்தால் ஹீரோயினை கூட்டிக் கொண்டு செல்லலாம் என்கிறார். மொதல்ல இந்த வில்லனுக்கு செக் எப்படி வைப்பது என்பதே தெரியாதாம்.. ஆனாலும் செஸ்ஸில் ரொம்ப ஆர்வமாம். இதையும்கூட சரிவர செய்யாமல் விட்டு ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது..

இண்டோர் டெக்ரேஷன் துறையில் யாருக்காவது 20 கோடி ரூபாய்க்கு டெண்டர் கிடைக்குமா..? ஆச்சரியம்தான்.. அந்த அளவுக்கு என்ன கூகிள் கம்பெனிக்கா இவர்கள் வேலை செய்தார்கள். பிளாட் வீடுகள்தான். அதுக்கே இத்தனை கோடி டெண்டராம்.. இதை எதுக்கு நீ எடுத்த..? நான் சொல்ற ஆளுக்குத்தான் அதை விட்டுக்கொடுன்னு வில்லன் கோஷ்டி மிரட்டுது..! கொஞ்சமும் லாஜிக் இல்லாத திரைக்கதை..

ரொம்ப நாள் கழிச்சு ரவி ராகவேந்தர்.. சீரியஸ் டைப் கதைகள் இவருக்கு ஒத்து வராது என்பது தெரிந்ததுதான்.. மகனுக்கு அட்வைஸ் செய்து தனது செகரட்டரியிடம் லவ்வை பிரபோஸ் செய்யும்படி சொல்லும் காட்சிகள் வெகு இயல்பு. இவர் ஒருவரே படத்தின் அட்ராக்சனான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.. பொருத்தமான தேர்வு..

ஹீரோயின் வாஷ்னா அஹமத்.. புதுமுகம்.. தமிழ் உச்சரிப்பு சிறிது தள்ளுபடி செய்யப்பட்டு நடிப்பு மட்டும் கொஞ்சம் வந்துள்ளது. நடிப்புக்காக தமிழ் உச்சரிப்பை விட்டுவிடலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ரசிகர்கள்.. படத்துக்கு படம் புதுமுக ஹீரோயின்கள் வந்தவண்ணமே இருப்பதால் ஏதாவது ஸ்பெஷலாக இருந்தால் மட்டுமே இவர் அடுத்த சில படங்களில் நடிக்க இயலும் என்பதால் காத்திருப்போம்.

மது ரகுராம் இரண்டாவது ஹீரோவாக முதலாளியின் மகனாக நடித்திருக்கிறார். சப்பைக் கதையில்.. சொதப்பல் திரைக்கதையில் என்னதான் நடிப்பைக் காட்டினாலும் அது எடுபடாது என்பது தெரிந்ததுதான்.. ஆனாலும் இவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு லெவலுக்கு உயரலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.. பெஸ்ட் ஆஃப் லக் ஸார்..

எம்.லேகாவின் இசையில் பாடல்கள் வந்தன.. போயின.. வேறொன்றும் சொல்வதற்கில்லை.  கே.எஸ்.தமிழ் சீனு எழுதி, இயக்கியிருக்கிறார்.  காதல் கதைகளை நிறைய பேர் இங்கே கொத்து புரோட்டா போட்டுவிட்டதால் அதன் திரைக்கதை இப்படித்தான் இருக்கும் என்பது தியேட்டர்களில் டீ விற்பனுக்குக்கூட தெரியும். அந்த அளவுக்கு சாதாரணமாக திரைக்கதையை எழுதி, மெதுவாக நகரும்விதமாக இயக்கி.. ரொம்பச் சாதாரணமான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

திரைக்கதைக்கு வேலை கொடுப்பது போன்ற கதை என்றாலும், அதனை எழுத்து வடிவில் கொடுக்காதது இயக்குநரின் தவறே.. அடுத்தப் படத்தில் சரி செய்து கொள்வார் என்று நம்புகிறோம்..!

1 comments:

குரங்குபெடல் said...

"தியேட்டர்களில் டீ விற்பனுக்குக்கூட தெரியும்."


. . . . . .?