கிருஷ்ணவேணி பஞ்சாலை - சினிமா விமர்சனம்

08-06-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சினிமாவுக்கான இலக்கணத்தைத் தொடாமல் வித்தியாசமான களத்தில்,  முயற்சி செய்து பார்க்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது..!

உடுமலைப்பேட்டையில் 1950-களில் இருந்து இயங்கிவரும் கிருஷ்ணவேணி பஞ்சாலையின் வாழ்க்கைக் கதைதான் படம். ஒரு பஞ்சு மில்லின் வாழ்க்கை என்பது அதன் தொழிலாளர்களையும், அதனைச் சார்ந்த மக்களையும் உள்ளடக்கியதுதான்.. இந்த மூன்றையும் இப்படம் ஒரே தளத்தில் சொல்கிறது..!





மில்லின் நிர்வாகத்தில் மோசடி செய்ததற்காக தனது நெருங்கிய உறவினரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார் ஆலையின் முதலாளி. அவருக்குப் பின் அவரது மகன் ஆலையை பொறுப்பில் எடுத்து நடத்துகிறார். நன்றாகவே போகிறது..! கேட்கின்ற போனஸைவிடவும் அதிகமாகவே போனஸை கொடுத்து தொழிலாளர்களை சந்தோஷப்படுத்துகிறார். வீடு கட்டிக் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் அதே ஆலையில் வேலை செய்யும் ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்கள். ஹீரோயினின் அக்காள் வேற்று ஜாதிக்காரனை திருமணம் செய்து கொள்ள.. இதனால் குடும்ப மானம் கப்பலேறிவிட்டதாகச் சொல்லி அந்த மகள் கொல்லப்படுகிறாள். இதனால் ஹீரோ, ஹீரோயின் காதல் அந்தரத்தில் நிற்க.. இன்னொரு பக்கம் மில்லும், கூடுதல் போனஸ் கேட்டு ஸ்டிரைக்கினால் மூடப்படுகிறது. இந்த வாழ்வாதாரத்தை நம்பியிருந்த மக்களின் வாழ்க்கை திசை திரும்ப.. இறுதியில் அந்த ஆலைக்கு என்ன ஆகிறது என்பதுதான் கதை..!

முழுக்க, முழுக்க மில்லின் உள்ளேயும், அதனைச் சுற்றியுமே கதை பின்னப்பட்டிருக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மறுநாள் துவங்கும் கதை, 2007-ம் வருடம் முடிவடைகிறது.. இடையில் 1967, 75 என்று பயணித்து மெயின் கதை 1985-களில்தான் நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது. 

அந்தந்த வாழ்க்கைச் சூழலுக்கேற்ற கலை இயக்கம் சிறப்பாகவே செய்யப்பட்டுள்ளது. ஒளிப்பதிவும் அந்தந்த காலக்கட்டத்திற்கேற்பவே செய்யப்பட்டுள்ளதே மிகச் சிறப்பானது..! 85-களில் உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் குழந்தைவேலு, தி.மு.க.வின் சாதிக்பாட்சாவின் பெயர் முதற்கொண்டு அனைத்தையும் பார்த்து, பார்த்து செய்திருக்கிறார்கள்..!





ஹீரோ ஹேமச்சந்திரன் என்னும் புதுமுகம். அதிகமாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், இன்னும் 4, 5 படங்களுக்குப் பின்பு இவரைப் பற்றிப் பேசலாம். ஹீரோயின் நந்தனா.. ஒரு சாயலில் சினேகாவுக்கு தங்கை போல் இருக்கிறார். இதை நேரில் சொன்னபோது “நீங்க 10000-மாவது ஆள்..” என்றார். போட்டோஜெனிக் முகம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஸ்கிரீனில் அழகாகத் தெரிகிறார். அந்த அழகுக்காகவே பாடல் காட்சிகளில் அதிக ஷாட்டுகள் மான்ட்டேஜ்களாக எடுத்துத் தள்ளியிருக்கிறார் இயக்குநர்..!





தமிழ்ப் படங்களிலேயே முதல் முறையாக கேஸ்டிங் டைரக்டர் என்ற பெருமையுடன் படத்திலும் உலா வரும் சண்முகராஜின் கேரக்டர்தான் கொஞ்சம் இடிக்கிறது. பார்ப்போரிடத்தில் எல்லாம் சாக்லேட்டை நீட்டி வழிவதும், இறுதியில் ஹீரோயினுக்காக காத்திருப்பதாகச் சொல்லி நடிப்பதும் கொஞ்சம் ஓவராகவே தெரிந்தது..! 

இவருக்கான களம் இதுவல்ல என்பது போல இன்னொரு பண்பட்ட நடிகர் பாலாசிங்கும் வீணாக்கப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். மேக்கப்பில் ஹீரோவுக்கு அப்பாவான அவர் படத்தில் என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. எம்.எஸ்.பாஸ்கரை காமெடிக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம்.. கொஞ்சமேதான்.. சிரிப்பு வருகிறது. இறுதியில் முதலாளிக்கு காபி கொடுக்கும் காட்சியில்தான் நிற்கிறார் பாஸ்கரண்ணே..!

முதலாளியாக ஆஹா ராஜீவ்கிருஷ்ணா..! சில முதலாளிகளின் கெத்து எப்படியிருக்கும் என்பதை சில காட்சிகளில் காட்டியிருக்கிறார். கூப்பிடு தூரத்தில் இருப்பவரை உதவியாளரைவிட்டு அழைப்பதும், பின்பு ஒரே வரியில் நலம் விசாரித்துவிட்டு சரி போ என்பதுமாக தன்னுடைய ஆளுமையை நிலை நிறுத்துவதாகச் சொல்லியிருப்பது எத்தனை பேருக்கு புரிகிறதோ தெரியவில்லை..!

முதலாளி நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்கும் அளவுக்கு காட்சிகளை வைத்துவிட்டு இறுதியில் செட்டில்மெண்ட் காட்சியில் “நல்லாயிருங்க..” ஒன்று ஒற்றை சொல்லில் சொல்லிவிட்டுப் போவதிலும், அப்போது பாலாசிங் உருகுவதிலும் ஒரு உருக்கம் இல்லாமல் இருப்பது ஏதோவொரு மிஸ்ஸிங் போல தோன்றுகிறது..!

இன்னொரு பக்கம் ஹீரோயினின் அக்கா மற்றும் அவரது குடும்பம். அவரது அம்மா ரேணுகாவின் வழக்கமான நடிப்பும், ஜாதிப் பிடிப்புள்ள வார்த்தைகளும் நம்மையும் படபட வைக்கின்றன..! இப்போதும் நாட்டில் இது போன்ற கவுரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. ஆனாலும் இவரது சோக முடிவு எதிர்பாராதது..!

படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் அண்ணன் அஜயன்பாலா சித்தார். கிட்டு என்ற பெயரில் மார்க்சிய சிந்தனையாளராக உருவெடுத்து, அதன் தாக்கத்தில் எங்கோ மே.வங்கத்தில் இருந்து ஒரு அமைச்சரை வரவழைத்து அவரும் ஏதோ பேச, இவர்களும் ஏதோ புரிந்தது போல கை தட்டி, கொடியேற்றி புதிய தொழிற்சங்கத்தைத் துவக்குகிறார்களே அந்த ஒரு காட்சியிலும் நிஜம் நிழலாடுகிறது..!

மார்க்ஸூம், ஏங்கெல்ஸூம் கற்றுக் கொடுக்காததை காலம் கிட்டுவுக்கு கற்றுக் கொடுத்துவிடுகிறது.. ஊதிய உயர்வுக்காக மில்லை இழுத்து மூட வைத்து, வங்கிக் கடனுக்காக சீல் வைக்கப்பட்டு திறக்கவே முடியாது என்ற நிலையில் இந்த மார்க்சிய தோழர் மட்டும் தடம் புரண்டு சோலி குலுக்கிப் போட்டு ஜோசியம் சொல்லும் புரட்டுக்காரனாக உருமாறுவது காலத்தின் கட்டாயம் போல.. தியேட்டரே அதிர்கிறது இக்காட்சியில்..! இதேபோல் “நமது கட்சி வரலாற்றுத் தவறுகளைக்கூட மிக நாகரிகமாக ஒத்துக் கொண்ட கட்சி..” என்ற இடத்திலும் கை தட்டல் பலே..!

தொழிற்சங்கங்கள் எந்த இடத்தில் தவறுகின்றன..? தொழிலாளர்கள் எப்படியெல்லாம் மெஸ்மரிஸத்தில் மயங்குகிறார்கள் என்பதையும், தேன் தடவிய வார்த்தைகளால் அவர்களது வாழ்க்கை முடக்கப்படுகிறது என்பதையும் இயக்குநர் நாசூக்காக இதில் காட்டியிருக்கிறார். முடி வெட்டும் கடையில் கடனுக்கு இனிமேல் வெட்ட முடியாது என்பறு சொல்வதும், மளிகைக் கடையில் பணத்திற்காக அஜயனின் சட்டையைப் பிடிக்கும் காட்சியும் தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்தான்..! ஆனால் இதில் ஜாதியும் வர்க்கமும் காணாமல் போய், பணமே பிரதானமாக இருப்பதை இயக்குநர் சுட்டிக் காட்டியிருப்பதை நாம் உணர வேண்டும். 

பக்கவாத நோயாளியான அப்பாவைக் காப்பாற்றத் துடிக்கும் மாரியம்மாள்.. அவளை டீஸ் செய்து அல்ப சந்தோஷத்தில் திளைக்கும் வாட்ச்மேன்.. லீவு கொடுக்க மறுத்து சண்டித்தனம் செய்யும் மேனேஜர்.. பால்காரனிடமே என்ன ஜாதி என்று கேட்கும் ரேணுகா.. ராஜீவ்விடம் போனஸ் விவகாரத்தில் கறாராக இருக்கும்படி சொல்லும் புதிய நிர்வாகி.. கவுரவம் போச்சு என்பதை ரிக்கார்டு பிளேயராக திருப்பித் திருப்பிச் சொல்லி ரேணுகாவின் மனதைக் கரைக்கும் அவரது தம்பி என்று சின்னச் சின்ன கேரக்டர்களையும் மனதில் பதிய வைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ரகுந்தனின் தேனான இசையில் ஆத்தாடியும், ஆலைக்காரியும் சக்ஸஸ் ஆகியிருக்கின்றன.. இதில் மான்டேஜ் காட்சிகளை பாடல்கள் ஒலிபரப்படாமலேயே ஷூட் செய்திருக்கிறார் இயக்குநர்.. புதுமைதான்..! ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் ஒரு பீரியட் பிலிமிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படமும் உணர்த்தியிருக்கிறது..! துவக்கத்தில், செவர்லெட் கார் வயல்காட்டின் நடுவே பயணிக்கும் அந்த லாங் ஷாட்டிலேயே கவர்ந்துவிட்டார் ஒளிப்பதிவாளர்..! எடிட்டிங் காட்சியில் அண்ணன் காசிவிஸ்வநாதனின் கச்சித்ததில் பல இடர்பாடுகள்கூட நறுக்கப்பட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.. பாராட்டுக்கள்..!

தொடர்ச்சியாக மில், காதல், போனஸ், ஷண்முகராஜ் என்று சுற்றிச் சுற்றியே வருவதால் சில இடங்களில் அயர்ச்சி ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் சினிமாத்தனம் எதிலும் தென்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இயக்குநர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்பதும் புரிகிறது. இதனாலேயே பல காட்சிகள் நாடகத்தனமாக படமாக்கப்பட்டிருக்கிறதோ என்ற பீலிங் வருவதையும் தவிர்க்க முடியவில்லை..!  முழுக்க, முழுக்க சினிமாத்தனங்களையே பார்த்து பார்த்து மூளை மழுங்கடிக்கப்பட்டிருக்கும் சூழலில், இது போன்ற திரைப்படங்களும் தேவையாகத்தான் உள்ளன..! 

மிகக் குறைந்த பட்ஜெட்டில், டிஜிட்டல் கேமிராவில், அறிமுக ஹீரோ, ஹீரோயின்களோடு நல்ல அழுத்தமான, வித்தியாசமான கதையைச் சொல்ல முன் வந்திருக்கும் இயக்குநர் தனபால் பத்மநாபனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்..! இதனை வரவேற்க வேண்டியது ரசிகர்களின் கடமையும்கூட..!


21 comments:

ராம்ஜி_யாஹூ said...

இந்தப் பதிவில் உள்ள முதல் புகைப் படத்தில்
கதாநாயகி சினேகாவின் சகோதரி போன்று இருக்கிறார்.
இரண்டவது படத்தில் அவ்வாறு இல்லை.
இரண்டாவது படத்தில் வேறு நடிகையா.

ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி அருகிலேயே அதிக அளவில் வாழ்ந்தவன் என்பதால்
எனக்கு சற்று அலுக்கவே செய்யும் இந்தப் படம் என எண்ணுகிறேன்

Caricaturist Sugumarje said...

விமர்சனம் அருமை... சினேகாவுக்கு தங்கையா என்று மனுஷ் கூட சொல்லியிருக்கிறார்... பார்த்தால் கொஞ்சம் அப்படித்தான் இருக்கிறது...

வாய்ப்பிருந்தால் திரைப்படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்

Sivakumar said...

//இதனை வரவேற்க வேண்டியது ரசிகர்களின் கடமையும்கூட..!//

கடமையா? லோ பட்ஜெட் படங்களுக்கு ஓவராக வக்காலத்து வாங்குகிறீர்கள். அவற்றில் பல மிக சுமாராக இருப்பினும்..

CS. Mohan Kumar said...

// இதை நேரில் சொன்னபோது “நீங்க 10000-மாவது ஆள்..” என்றார். //

நற நற

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே, ஹீரோ அறிமுகமோ,புதுமுகமோ இல்லைண்ணே, புழல் படத்தில் ஆல்ரெடி ஆக்டு குடுத்தவரே:)

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

இந்தப் பதிவில் உள்ள முதல் புகைப்படத்தில் கதாநாயகி சினேகாவின் சகோதரி போன்று இருக்கிறார். இரண்டவது படத்தில் அவ்வாறு இல்லை. இரண்டாவது படத்தில் வேறு நடிகையா.]]]

அதே பொண்ணுதாண்ணே.. இரண்டாவது படத்தில் கேரக்டருக்கான மேக்கப்போடு இருக்கிறார்..!

[[[ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி அருகிலேயே அதிக அளவில் வாழ்ந்தவன் என்பதால் எனக்கு சற்று அலுக்கவே செய்யும் இந்தப் படம் என எண்ணுகிறேன்.]]]

நீங்கள் பார்த்து சலித்த காட்சிகளே திரும்பத் திரும்ப வரும் என்பதால் நிச்சயம் அலுப்பு இருக்கத்தான் செய்யும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Caricaturist Sugumarje said...

விமர்சனம் அருமை... சினேகாவுக்கு தங்கையா என்று மனுஷ் கூட சொல்லியிருக்கிறார்... பார்த்தால் கொஞ்சம் அப்படித்தான் இருக்கிறது...
வாய்ப்பிருந்தால் திரைப்படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்.]]]

அவசியம் பாருங்கள் தம்பி.. நேரமும், காசும் வீணாகாது..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

//இதனை வரவேற்க வேண்டியது ரசிகர்களின் கடமையும்கூட..!//

கடமையா? லோ பட்ஜெட் படங்களுக்கு ஓவராக வக்காலத்து வாங்குகிறீர்கள். அவற்றில் பல மிக சுமாராக இருப்பினும்..]]]

இதனை வரவேற்க வேண்டியது சினிமா ரசிகன் என்ற முறையில் எனது கடமை..! இல்லாவிடில் பெரும் படங்கள் என்னும் திமிங்கலத்திடம் காலம் முழுக்க மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

//இதை நேரில் சொன்னபோது “நீங்க 10000-மாவது ஆள்..” என்றார். //

நற நற..]]]

நானே 10000-மாவது ஆள்ன்னா என்னை மட்டும் ஏண்ணே..?

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே, ஹீரோ அறிமுகமோ, புதுமுகமோ இல்லைண்ணே, புழல் படத்தில் ஆல்ரெடி ஆக்டு குடுத்தவரே:)]]]

மறந்து போச்சே பிரதர்.. தகவலுக்கு மிக்க நன்றிகள்..!

எல் கே said...

//எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஸ்கிரீனில் அழகாகத் தெரிகிறார்.//

pleae visit vasan eye care immediately

kavi said...

இதற்கும் முன்னால் 2004ல் வெளிவந்த கவிதை என்ற படத்தில் வம்சி என்ற பெயரில் அறிமுகமானவர் ஹேமச்சந்திரன். கிச்சா இயக்கி, சாயாசிங் நாயகியாக நடித்த படம்.

kavi said...

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த நந்தா நந்திதா படத்திலும் இவர்தான் ஹீரோ....

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

//எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஸ்கிரீனில் அழகாகத் தெரிகிறார்.//

pleae visit vasan eye care immediately.]]]

முதல்ல போக வேண்டியது நீங்கதான் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[kavi said...

இதற்கும் முன்னால் 2004ல் வெளிவந்த கவிதை என்ற படத்தில் வம்சி என்ற பெயரில் அறிமுகமானவர் ஹேமச்சந்திரன். கிச்சா இயக்கி, சாயாசிங் நாயகியாக நடித்த படம்.]]]

ம்.. தகவலுக்கு நன்றி கவி..!

உண்மைத்தமிழன் said...

[[[kavi said...

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த நந்தா நந்திதா படத்திலும் இவர்தான் ஹீரோ....]]]

எப்படி மறந்தேன் இதை..? மன்னிக்கணும் கவி..!

மாதேவி said...

படவிமர்சனத்துக்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

[[[மாதேவி said...

பட விமர்சனத்துக்கு நன்றி.]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்..!

ghi said...
This comment has been removed by the author.
ghi said...

1985-இல் நடக்கும் கதை... போனஸ் பணமாக காந்தி படம் உள்ள பணத்தை காட்டுகிறார்களே!! அப்போதே காந்தி படம் போட்ட பணம் புழக்கத்துக்கு வந்துவிட்டதா??

#டவுட்டு

உண்மைத்தமிழன் said...

[[['யாவரும் நலம்' வெங்கட் said...

1985-இல் நடக்கும் கதை... போனஸ் பணமாக காந்தி படம் உள்ள பணத்தை காட்டுகிறார்களே!! அப்போதே காந்தி படம் போட்ட பணம் புழக்கத்துக்கு வந்துவிட்டதா??

#டவுட்டு]]]

ஹி.. ஹி.. யானைக்கும் அடி சறுக்குமே..! மறந்திருப்பாங்க..!