கோரிப்பாளையம் - திரை விமர்சனம்

10-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில நேரங்களில் சில திரைப்படங்களின் தாக்கத்தினாலோ, இயக்குநரின் மேல் இருக்கும் நம்பிக்கையினாலோ படத்திற்குப் போய்த் தொலைந்தால் பெரும் ஏமாற்றம் நம்மில் பலருக்கும் கிடைத்திருக்கும்..

அதேதான்.. மாயாண்டி குடும்பத்தார் படத்தினையும், இயக்குநர் ராசுமதுரவனையும் நம்பித்தான் இப்படத்திற்குச் சென்றேன்.. டிரவுசர் கிழிந்துவிட்டது.

கத்தியெடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பதை 501-வது முறையாக இதில் சொல்லியிருக்கிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது 1001-வது முறையாக நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.


 
நான்கு இளைஞர்கள். இந்த இளைஞர்களுடன் சேர்ந்து கஞ்சா, குடி, புகை, பொண்ணுகள் என்று கூத்தடித்து, மாமா வேலை பார்க்கும் இயக்குநர் சிங்கப்புலி. இடையில் பாசத்தைக் காட்டும் அல்லது கொட்டும் சென்டிமெண்ட்டுக்காக மயில்சாமி.. இதுதான் இந்த கோரிப்பாளையத்து கேங்கின் எண்ணிக்கை.

ஒவ்வொரு இளைஞர்களுக்கு பின்பும் சோகமயமான ஒரு பின்னணி கதை உண்டு. படிக்கின்ற வயதிலேயே அப்பன்காரன் சிகரெட், மதுவை வாங்கி வரச் சொல்லிப் பழக்கியதால் அதில் ஆர்வப்பட்டு திசை திரும்பிய ஹரீஷ், அம்மா தன்னைவிட வயது குறைந்த பக்கத்து வீட்டுப் பையனுடன் ஓடிப் போக.. இதனால் அவனது தந்தை தற்கொலை செய்து கொள்ள.. அனாதையான இளைஞன்.. பிறந்த உடனேயே குப்பைத்தொட்டிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட மற்றொரு இளைஞன், இவர்களுக்கு தண்ணிக்கும், தம்முக்கும், நிரோத் பாக்கெட்டுக்கும் காசு கொடுக்கும் துட்டுள்ள ஒரு நண்பன் என்ற இந்தக் கூத்தாடிகளின் கதையைத்தான் விலாவாரியாக எடுத்துத் துவைத்திருக்கிறார்கள்.

சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா, மாத்தியோசி என்று இதற்கு முந்தைய சமீபத்திய அடிதடி, வெட்டுக்குத்து திரைப்படங்களில் இருந்த அதே காரணங்கள்தான் இங்கேயும்.. வாழ்க்கையின் சுற்றுச்சூழல்தான் தங்களை கத்தியெடுக்க வைத்ததாக இந்த ரவுடிகளான இளைஞர்கள் திருப்பித் திருப்பி சினிமாக்காரர்கள் மூலம் முலாம் பூசி வருகிறார்கள்.

முதல் காட்சிக்கு அடித்துப் பிடித்து வந்து உட்கார்ந்து விசிலடித்து, ஹீரோ ஆடும்போது இவர்களும் எழுந்து ஆடி, காதலுக்கு ஆதரவாகப் பேசும்போது கை தட்டி ஆரவாரம் செய்து, காதலியைத் திட்டும்போது தங்களுக்கே நேர்ந்ததுபோல எண்ணி பீல் செய்து உருகுவது என்று சாதாரணப்பட்ட இளைஞர் கூட்டத்தையே குறி வைத்து எடுத்திருக்கிறார்கள்.

மதுரை வட்டார மொழி என்பது கொஞ்சம் சிக்கலானாது.. மானாமதுரையைத் தாண்டிவிட்டால் அங்கே கொஞ்சம் மாறுபடும்.. இந்தப் பக்கம் கோவில்பட்டியைத் தாண்டிவிட்டால் நெல்லைத் தமிழ் கலந்தடிக்கும்.. திண்டுக்கல் பகுதியைத் தொட்டுவிட்டால் சாயுபுக்கள் திரித்த தமிழ் கலங்கடிக்கும். ஆனாலும் மதுரைத் தமிழை விடாமல் கொத்து புரோட்டா போட்டு சலிக்கச் சலிக்கக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தில் மூன்று புரட்சிகள் உண்டு. ஒரு புதுமையான அறிமுகமும் உண்டு. காதலனும், காதலியும் சந்திப்பதை எத்தனையோ திரைப்படங்களில் பார்த்துத் தொலைந்திருக்கலாம். ஆனால் இதில் மாதிரி ஒரு வித்தியாசத்தை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்க முடியாது.. கதாநாயகிகளில் ஒருவரான பூங்கொடி பொண்ணு வளர்த்து வரும் நாய் வைகையாற்றுப் பாலத்தின் கீழ் படுத்துறங்கும் ராமகிருஷ்ணனின் அருகில் விடாப்பிடியாக ஓடி வந்து அவர் முகத்தில் சிறுநீர் கழிக்கிறது. இரண்டு முறைகள்.. இப்படித்தான் பூங்கொடிக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையே லவ் டிரேக் துவங்குகிறது.


 
புரட்சிகளில் முதல் புரட்சி.. திருமணம் செய்த அன்றைய இரவிலேயே மனைவி தனது குரூப்பில் இருக்கும் காசுள்ள பார்ட்டியைத்தான் விரும்பியிருப்பதை கேள்விப்பட்டதும். அந்த அர்த்தராத்திரியிலேயே நண்பர்களிடத்தில் மனைவியை இழுத்து வந்து, காலையில் தான் கட்டிய தாலியை டக்கென்று அறுத்தெறிந்து அதனை காதலனின் கையில் கொடுத்து “கட்டுறா தாலியை..” என்று தொண்டை புடைக்க கத்தி கட்ட வைத்து, அவர்களை அனுப்பி வைப்பது.. தாலில்ல ஒண்ணுமே இல்லைன்னு நினைக்குறவங்களுக்கு இது ஒண்ணுமே இல்லை. தாலிதான் எல்லாமேன்னு நினைக்குற சினிமாக்காரங்களுக்கு இது நிச்சயம் புரட்சிதான்..


 
காதலனின் உடலுக்கு வயிற்றில் கருவுடன் இருக்கும் பெண்ணே, தீ மூட்டி வைத்துவிட்டுக் கதறுவது இரண்டாவது புரட்சி..

மூன்றாவது புரட்சி தனக்கு ஒரு பாதையைக் காட்டிவிட்டு தங்களுக்காக உயிரைவிட்ட ஹரீஸின் உடலுக்கு குடும்பத்தோடு சேர்ந்து அதே பெண் தீ மூட்டுவது.. இப்படி படம் முழுக்க சாவுகளும், எழவுகளும் நிறையவே இருக்கின்றன.

கடன் கொடுத்த காசு வரவில்லையென்று வீட்டில் இருந்த கைக்குழந்தையை பிடுங்கிச் செல்ல முயலும் சின்ன தாதா நந்தா பெரியசாமியை இந்த நாலு பேரும் நாலு சாத்து சாத்தி அனுப்பி வைக்க.. அவர் தனது அண்ணான பெரிய தாதா ராஜ்கபூரிடம் போய் அழுகிறார். ராஜ்கபூர் பசங்கள் இருக்குமிடத்திற்கே வந்து அவர்களது செவிட்டில் நாலு அறைவிட.. கோபத்தில் ஹரீஸ் மயில்சாமி சும்மாவே தன் இடுப்பில் வைத்திருக்கும் கத்தியை எடுத்து நந்தாவின் வயிற்றில் ஒரு சொருகு சொருகும் காட்சியில் பின்னணி இசையே தேவையில்லை.. என் வயிற்றில் குத்தியது போல் இருந்தது..

இவர்களைச் சமாளிக்க ராஜ்கபூர் திட்டம்போடும்போது சினிமா திரைக்கதையால் பின்பு வசமாக மாட்டுகிறார்கள். இடையில் காதல் காட்சிகளும் வேணும்ல்ல.. அதுக்காக காலேஜுக்கு போகும் இன்னொரு ஹீரோயின் பூங்கொடி ராமகிருஷ்ணனுக்கு கண் சாடை காட்ட.. இந்தப் பக்கம் பத்திக் கொள்கிறது காதல்.. அதென்னமோ ரவுடி மாதிரி தோற்றத்தில் இருப்பவர்களைப் பார்த்தவுடனேயே இன்றைய பாவாடை, தாவணிகளுக்கு லவ் பொங்கிக் கொண்டு வருவதாக சினிமா சூத்திரம் சொல்கிறது.


 
ஹரீஸுக்கும் அவன் வீட்டுக்கும் இடையில் முட்டல் மோதல்.. அப்பாவுடன் சண்டை.. “நீ ஒழுங்கா வளர்த்திருந்தீன்னா நான் இந்த நிலைமைக்கு வந்திருப்பனா?” என்று அவ்வப்போது அப்பாவை திட்டுவது.. எதற்கெடுத்தாலும் உச்சஸ்தாயில் கத்தி, கத்தி காது கிழிந்துவிட்டது.. கோபக்காரனாக காட்டுவதற்கு கத்திக் கொண்டேதான் இருக்க வேண்டுமா..?

இடையிடையே சிங்கம்புலியின் காம நெடியான வர்ணனையுடன் கூடிய காட்சிகள் வேறு. இவர் பார்க்கின்ற பெண்கள் அனைவரின் முந்தானைகளும் விலகித்தான் இருக்கின்றன. இதற்காகவே இவர் பேசுகின்ற பேச்சுக்கள் டபிள், டிரபுள் எல்லாத்தையும் தாண்டி ஜெட் வேகத்தில் செல்கிறது. ‘ஆப்பக்காரி' பாடலுக்கு தியேட்டரில் சுதி ஏற்றிய ஒரு கோஷ்டியே எழுந்து ஆடியது..

 
கஞ்சா இழுப்பது, சாதா ‘தம்' அடிப்பது, ‘தம்' புகையை டிஸைன், டிஸைனாக வெளியில் விடுவது, சாதாரணமாக தண்ணியடிப்பது, தண்ணியை இளநீரில் மிக்ஸ் செய்து குடிப்பது, தண்ணீரை அளவாக கலந்து சரக்கடிப்பது, நரிக்குறவப் பெண்ணை பார்த்த மாத்திரத்தில் டூரிங் தியேட்டருக்கு தள்ளிக் கொண்டு போவது.. பான்பராக் பாக்கெட்டுகளைப் போல சரம், சரமாகத் தொங்கும் நிரோத் பாக்கெட்டுக்களைக் காட்டுவது.. என்று விதவிதமான ஸ்டைலில் இவர்களெல்லாம் ரவுடிகள் என்பதை நம் மனதில் பதிய வைத்திருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர்.

இதில் இன்னொரு பேமிலியும் இடையில் நுழைகிறது. கல்குவாரியை பார்த்துக் கொண்டே பெண் பித்தனாகத் தெரியும் ரவி மரியா, அவரது அண்ணன், அவர்களது அப்பா அலெக்ஸ்.. இந்தக் குடும்பத்தில் ஒரு தங்கை.. இந்தத் தங்கை யதேச்சையாக இந்த நாலு பசங்களின் அருகிலேயே நிற்பதுபோல் தெரிய வர.. ராஜ்கபூர் ரவி மரியாவை உசுப்பி விடுகிறார்.. அந்தப் பெண் இவர்களில் ஒருவரை காதலிப்பதாக அந்த வீட்டார் நினைக்க.. அந்தப் பெண்ணுக்கு வீடு சிறைவாசமாகிறது.

இடையில் ராமகிருஷ்ணன், பூங்கொடியை பார்க்க அவள் வீட்டிற்கு வருகிறான். எப்போதுமே தான் அனாதை என்றே நினைத்துக் கொண்டிருந்தவனை டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்து அமர வைத்து சாப்பிடச் சொன்னதில் உணர்ச்சி பொங்கி கண்களில் கண்ணீர் கரகரவென வடிகிறது.. பூங்கொடி உணர்ச்சிவசப்பட்டு காதலனை கட்டிப் பிடிக்க மன்மதன் தீயைப் பற்ற வைத்துவிடுகிறான். அவர்களிடையே உடலுறவும் நிகழ்ந்துவிடுகிறது.

தாங்கள் கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து வைக்க இந்த மசிராண்டிகள் பெரிய மனுஷனத்தனமா தாலியை அறுத்துப்புட்டு காதலனோட சேர்த்து வைச்சுட்டாங்களே என்ற கோபத்தில் ஹரீஸை வீட்டுக்கு வராதே என்று ஒட்டு மொத்தக் குடும்பமும் சொல்கிறார்கள். ஆனாலும் ஹரீஸ் வீட்டுக்குப் போய் இல்லாத ரகளையையெல்லாம் செய்து, ஒரு டிராமாவை செட்டப் செய்து தனது அண்ணனை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார்.

பின்பு அண்ணனின் புது வீட்டுக்குப் போய் அண்ணியின் காலில் விழுந்து தன்னைப் பார்த்து அவளுடைய பிள்ளைகளும் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவே தான் அவர்களை வெளியேற்றியதாக ஒரு கண்ணீர் மன்னிப்பை விட.. படத்தில் இது மாதிரியான பல ட்விஸ்ட்டுகள் நிஜமாகவே நன்றாகத்தான் இருக்கின்றன.

ரவி மரியாவின் வீட்டுக்குள் திருடப் போய் முடியாமல் தப்பிக்க.. தங்களது தங்கையை பார்க்கத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தவறாக நினைத்து ரவி, தங்கையை உடனேயே கொலை செய்ய.. மறுநாள் நடுரோட்டில் அலெக்ஸ் அவர்களை பார்த்து மிரட்ட.. பதிலுக்கு இவர்கள் அவரை தள்ளிவிட கல்லில் அடிபட்டு பொசுக்கென்று அலெக்ஸ் உயிரை விட்டுவிடுகிறார்.

இதைப் பார்க்கும் ஒரு மதுரைக்கார கருங்காலி ரவி மரியா குரூப்பிடம் இந்த கோரிப்பாளையம் ட்ரூப்பை போட்டுக் கொடுக்க.. பணத்தைக் கொடுத்தால் வேலையைக் கச்சிதமா செய்யும் பாண்டி என்னும் ஒரு குட்டி தாதாவின் கையில் இந்த வேலையை ஒப்படைக்கிறார்கள் ரவி மரியா குரூப். பாண்டி குரூப் ஒரு பக்கம்.. ரவி மரியா குரூப் ஒரு பக்கம் அரிவாளோடு இவர்களைத் தேடி அலைய தப்பிக்கிறார்களா இல்லையா என்பதுதான் மீதிக் கதையாம்.

பல வன்முறைகள், பல கொலைகள் என்று தூங்கா நகரமான மதுரை மாநகரத்தை இப்படி தொடர்ந்து அடையாளப்படுத்துவதில் யாருக்கு என்ன வெற்றி கிடைத்துவிடப் போகிறது என்று தெரியவில்லை. மருந்துக்குக்கூட போலீஸ் என்ற பார்ட்டி மதுரைக்குள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டவேயில்லை.

காசுக்காக கொலை செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் பாண்டி கோஷ்டி ஒரு கொலையை செய்துவிட்டு அவர்கள் தாங்களாகவே போலீஸிடம் மாட்டுவதாக ஒரு காட்சியை மட்டும் வைத்து காவல்துறையினர் மதுரையில் இருப்பதாகக் காட்டி முடித்துவிட்டார்கள். போதாக்குறைக்கு அஞ்சாநெஞ்சர் அழகிரியின் புகைப்படம் ஒட்டிய போஸ்டரைக் காட்டி டிவி சேனல் ரைட்ஸூக்கு அடிகோலியிருக்கிறார்கள். 

அலெக்ஸ் இவர்களை வீட்டில் பார்க்கவே இல்லை. ஆனாலும் இவர்களை ரோட்டில் பார்த்தவுடன் காரை நிறுத்தி பார்ப்பதுபோல் காட்சி வைத்திருக்கிறார்கள்.

ஜெகனின் கையை ரவி மரியாவின் ஆட்கள் துண்டித்துவிட அதன் பின் எத்தனை நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார்..? அந்த போலீஸ் கேஸ் என்னாச்சு..? கையே துண்டாகிப் போச்சுன்னாலும் ஏதாவது தனியார் கிளினிக்ல போய் வைத்தியம் செய்ய முடியுமான்னு இயக்குநர்கிட்ட யாராவது கேட்டுச் சொல்லுங்கப்பா..

கடைசியாக ரவி மரியாவை கொலை செய்ய குழி தோண்டச் சொல்லி ஹரீஸ் கத்த நிமிடத்தில் தனது ஒற்றைக் கையாலேயே குழியைத் தோண்டி பக்குமாக வைத்திருக்கும் ஜெகன்நாத்தின் சாமர்த்தியத்தை நாம் என்னவென்று சொல்ல..? ரவி மரியாவின் ஆறடி உயரத்தைவிட கம்மியான அந்தக் குழிக்குள் போட்டுத் தள்ளினால் தப்பிக்க முடியாது என்று இயக்குநர் அடித்துச் சொல்லிவிட்டார். நம்பிவிடுங்கள்..

ஆப்பக்காரியுடன் பேசும் போதெல்லாம் வார்த்தையாலேயே சல்லாபம்.. தான் பெண் பார்க்கப் போன இடத்தில் பெண்ணை விட்டுவிட்டு பெண்ணின் அம்மாவைக் கட்டிப் பிடித்து உம்மா கொடுத்த கதையை சிங்கப்புலி சொல்லும்போது அடடா.. மதுரைக்கார பயலுவ எத்தனை வெள்ளந்தியான மனஷனுங்கன்னு இப்பத்தான் தெரியுது..

இதுனால அந்தம்மாவை அவ புருஷன் துரத்திவிட.. அந்தம்மா மதுரை மாநகருக்கே டோட்டல் பிரார்த்தல் கிளப் தலைவியாக மாறிர்றாங்கன்னு ஒரு கதையைத் திருப்பிப் போட்டு சங்கு ஊதிருக்காரு சிங்கம்புலி.. துவக்கக் காட்சியில் கை, கால்களை தண்ணீரில் நனைத்துக் கொண்டேயிருக்கும் ஒரு கேரக்டரை பார்த்தவுடன் சரி காமெடி.. நல்லா இருக்கும்போல என்று நினைத்தேன். அது இவ்ளோ நல்லாயிருக்கும் என்று நினைக்கவில்லை..


“சிறுக்கி வாடி சிட்டு.. நீ சிரிச்சுப்புட்டா கழன்றிடுமே நட்டு” என்ற அபாரமான கவிதை வரிகளுடன் கூடிய பாடல் காட்சியும், “ஓட்டை ஒடிசல் ஈயம் பித்தளை பேரிச்சம்பழம், என் உசுர பிழியும் பொண்ணோ ஆரஞ்சு பழம்” என்ற தத்துவார்த்த முத்துக்களை உதிர்க்கும் பாடல் காட்சியும் பி அண்ட் சி ரசிகர்களைக் குறி வைத்தே எடுக்கப்பட்ட படம் என்பதைத்தான் காட்டுகிறது.

படத்தில் கொஞ்சம் மூச்சுவிட வேண்டிய விஷயம்.. ரொம்ப ரத்தம் சிந்தவில்லை.. அளவோட எடுத்திருக்காங்க..

கோரிப்பாளையம் மசூதி தெருவின் பெட்டிக் கடை வாசலில் கடைசியாக ஹரீஸ் கொல்லப்படும் காட்சி மட்டுமே மனதில் இறுக்கமாக அமர்ந்தது. தனது அம்மாவிற்கு இரண்டு நிமிடங்கள் அழுதுவிட்டு சாவுக்குத் தயாராகும் அந்த ஜோர் அபாரம்..

இந்தக் கொலையை செய்துவிட்டு வீடு திரும்பும் விக்ராந்திற்கு உடனடியாக கிடைக்கின்ற பிரதிபலனாக அவனது தம்பி விபத்தில் மரணமடைந்து கத்தியைத் தூக்கியெறியும் காட்சியையும் காட்டிவிட.. இதன் தாக்கம் அதிகமாக நிற்கவில்லை. இப்படி போதனைகளின் தாக்கமும் படத்தில் அதிகமாக இருக்க.. ஒரு பக்கச் சார்பாகவே படம் முடிந்துவிட்டது.

சுவையான சின்னச் சின்னக் கதைகள் படம் முழுவதும் விரவி கிடக்கின்றன. அதன் சுவாரஸ்யங்களை படத்தின் காமத்தனமான வசனங்களும், அர்த்தமில்லாத அளவில்லாத வசனங்களுடன் கூடிய நகைச்சுவைக் காட்சிகளும். விரசமான பாடல் காட்சிகளும் படத்திற்கு பிரேக்கடிப்பது போல எனக்குத் தோன்றுகிறது.

மதுரை ரயில்வே ஸ்டேஷன், தங்கரீகல் தியேட்டர், மாணிக்க விநாயகர் தியேட்டர், தமுக்கம் மைதானம், அரசரடி மைதானம், மதுரை மத்திய சிறைச்சாலை, கோரிப்பாளையம் வைகை ஆற்றுப் பாலம், ஊத்தங்குடி பாலம். யானைமலை ஒத்தக்கடை, மேலூர் கல்குவாரிகள், தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோவில், அழகர்மலை கோவில், பாண்டி கோவில் என்று மதுரையையும், அதன் சுற்றுப்புறத்தையும் ரொம்ப நாள் கழித்து பார்த்த திருப்தி மட்டுமே கிடைத்தது.

பார்க்க நேரமிருப்பவர்கள் செல்லலாம்.. ஆனால் தனியாக மட்டும்..

புகைப்படங்கள் உதவி : www.indiaglitz.com

21 comments:

தருமி said...

அப்பாடா ...முழுசா scroll பண்ணி முடிச்சாச்சி ...

Prasanna Rajan said...

அடங்கப்பா நீங்க அடங்க மாட்டேன்றீங்களே. இவ்ளோ, இவ்ளோ நீளமா? எப்புடியா உமக்கு நேரம் கெடைக்குது?

Unknown said...

அண்ணே படம் மட்டும் டவுசர கிழிக்கல, பதிவும்தான்.....

ஜெட்லி... said...

ஏற்கனவே மாத்தியோசி போய் பார்த்ததால் போலாமா
என்று யோசித்தேன்....ரைட்....நல்ல வேளை போகலை....
மிக்க நன்றி அண்ணே....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தருமி said...
அப்பாடா ...முழுசா scroll பண்ணி முடிச்சாச்சி//

அப்பாடா முடிச்சாச்சி

பிரபாகர் said...

ரொம்ப நீளமண்ணே!

பிரபாகர்...

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

அப்பாடா. முழுசா scroll பண்ணி முடிச்சாச்சி.]]]

ஸ்குரால் பண்ணினது சரிங்கய்யா.. படிச்சீங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[Prasanna Rajan said...
அடங்கப்பா நீங்க அடங்க மாட்டேன்றீங்களே. இவ்ளோ, இவ்ளோ நீளமா? எப்புடியா உமக்கு நேரம் கெடைக்குது?]]]

கிடைக்குற நேரத்துல எழுத வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே படம் மட்டும் டவுசர கிழிக்கல, பதிவும்தான்.]]]

அப்படியா..? சந்தோஷம்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி said...

ஏற்கனவே மாத்தியோசி போய் பார்த்ததால் போலாமா என்று யோசித்தேன்.... ரைட். நல்லவேளை போகலை....

மிக்க நன்றி அண்ணே....]]]

நேர்ல பார்க்கும்போது இதுக்குன்னே தனியா ட்ரீட் தரணும் ஜெட்லி..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.ராதாகிருஷ்ணன் said...

//தருமி said...
அப்பாடா ...முழுசா scroll பண்ணி முடிச்சாச்சி//

அப்பாடா முடிச்சாச்சி]]]

முருகா.. இந்தப் பெருசுங்க பிளான் பண்ணி நம்மளைக் கவுக்குறாங்கப்பா..! இவங்களை ஏதாச்சும் செய்யேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபாகர் said...

ரொம்ப நீளமண்ணே!

பிரபாகர்...]]]

படமும் நீளம்தான் பிரபாகர்..!

மின்னுது மின்னல் said...

::)))

Unknown said...

படத்தை விட விமர்சனம் ரொம்ப குழப்பம், இதுக்கு பதிலா படட்தை 2 தடவை பார்க்கலாம்.

தயவுசெய்து விமர்சனம் எழுதுங்க,நாவல் எழுதாதிங்க‌

இந்த விமர்சனத்தோட அடுத்த பாகம் எப்ப அண்ணா வரும்.

தருமி said...

//
ஸ்குரால் பண்ணினது சரிங்கய்யா.. படிச்சீங்களா..? //

அதான் என்ன பண்ணினோம்னு சொல்லிட்டோம்ல .. பொறவு என்ன இந்தக் கேள்வி ..!

உண்மைத்தமிழன் said...

[[[மின்னுது மின்னல் said...
::)))]]]

ஐயோ.. எவ்ளோ பெரிய பின்னூட்டம்..?

நன்றி மின்னலு..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

படத்தை விட விமர்சனம் ரொம்ப குழப்பம், இதுக்கு பதிலா படட்தை 2 தடவை பார்க்கலாம். தயவுசெய்து விமர்சனம் எழுதுங்க, நாவல் எழுதாதிங்க. இந்த விமர்சனத்தோட அடுத்த பாகம் எப்ப அண்ணா வரும்.]]]

சுத்தம்.. பதிவு நீளம்னுதான் புகார் வந்திட்டிருந்திருச்சு.. இப்போ புரியலைன்னு ஒண்ணா..?

புரியுற மாதிரி இனிமேதான் எழுதப் பழகணும் தம்பி..!

இதுக்கெல்லாம் இரண்டாம் பாகம் வெளியிட முடியாதுப்பா..! இதென்ன விஜய் படமா..?

மின்னுது மின்னல் said...

இதுகெல்லாம் விமர்சனம் எழுதிகிட்டு :)

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//ஸ்குரால் பண்ணினது சரிங்கய்யா.. படிச்சீங்களா..? //

அதான் என்ன பண்ணினோம்னு சொல்லிட்டோம்ல. பொறவு என்ன இந்தக் கேள்வி!]]]

ஓ.. அப்ப ஸ்குரால் பண்ணிட்டே வந்து படிச்சிட்டேன்றீங்க..? அப்படித்தான.. அப்ப சரிங்கய்யா..!

abeer ahmed said...

See who owns worldofstencils.com or any other website:
http://whois.domaintasks.com/worldofstencils.com

abeer ahmed said...

See who owns euinfobank.ro or any other website.