காதல்தான் எத்தனை வலிமையானது..?

14-02-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நீங்கள் காதல் கொண்டிருக்கிறீர்களா..?

பருவத்தால் எய்யப்பட்ட காதல் அல்ல..

வாழ்க்கை என்னும் பாதையில் உங்களால் விரும்பப்பட்ட காதல் உங்களுக்கு கிடைத்திருந்தால் அதை எவ்வளவு ஆனந்தமாக கொண்டாடியிருப்பீர்கள்..?


அக்காதலை இழக்க வேண்டிய தருணம் வந்தால் அப்போது என்ன செய்வீர்கள்?

அதுவும் இயற்கையின் கையில் உங்களை ஒப்படைக்கப் போகும் முதுமை, உங்களைச் சூழ்ந்திருக்கும் நேரத்தில், அந்தக் காதல் உங்களுக்குள் பொய்த்துப் போயிருக்குமா?

காதலை வெல்லும் சக்தி எது..?

மரணத்தைத் தவிர வேறு எதற்கும் அந்த சக்தியில்லை என்பதை ஒரு மனிதனின் முதுமைப் பருவத்தை வைத்து படமெடுத்துக் காட்டியிருக்கிறது இந்த “KONYEC” என்கின்ற ஹங்கேரி நாட்டுத் திரைப்படம்.

து உலகை உய்விக்க வந்ததாகச் சொல்லப்பட்ட கம்யூனிஸம், தனது ஆக்டோபஸ் கரங்களால் ஹங்கேரியை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த காலம்.

ஒரு வீட்டில் சோதனையிட அரசின் ரகசியப் பிரிவு போலீஸார் வருகிறார்கள். அக்குழுவில் இருப்பவர்களிலேயே மிக இளையவனான எமில் வீட்டின் மேல் பகுதியைச் சோதனையிடத் தனியாகச் செல்கிறான்.

அவன் அங்கே துழாவிக் கொண்டிருக்கும்போது திடீரென்று மேல் தளத்தை உடைத்துக் கொண்டு ஒரு இளம்பெண் கீழே விழுந்து பதட்டத்துடனும், பயத்துடனும் எழுந்து நிற்கிறாள்.

அவள் பார்வையிலேயே ‘நான் குற்றமற்றவள்.. என்னை நம்பு.. என்னை விட்டு விடு..’ என்று கெஞ்சுவதைப் போல் இருக்க.. இளைஞன் எமில் தன்னை மறக்கிறான். இள வயது கெமிக்கல் ரியாக்ஷனில் அவன் தவிக்க..

சட்டென்று அப்பெண் தனது காதுகளில் இருக்கும் தோடுகளைக் கழட்டி அவன் கையில் திணித்து ‘டைமண்ட்ஸ்’ என்கிறாள். கம்யூனிஸத்தால் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த உடனடி பலன் இதுதானே.. தோடை தன் பாக்கெட்டில் போட்டுவிட்டு கீழேயிருந்து “என்ன சப்தம்..?” என்று கேட்ட தன் கேப்டனிடம் “ஒன்றுமில்லை..” என்கிறான் எமில்.

அதற்குள் நான்கைந்து காவலர்கள் மேல்மாடியைச் சோதனையிட வர.. வேகவேகமாக அந்த இளம்பெண்ணை இழுத்து ஒரு ஜன்னல் வழியாக வெளியேற்றி வீட்டின் ஓடு உள்ள பகுதியில் மறைத்துவைத்து அவளைக் காப்பாற்றுகிறான்.

காவலர்கள் தேடிப் பார்த்து வெறும் கையுடன் வெளியேறியவுடன் அந்த வீட்டின் உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் அப்பெண்ணைத் தேடிச் செல்லும் எமில், அப்பெண்ணின் கைகளில் அத்தோடை வைத்து அவளது கைகளை இறுக்கமாகப் பிடிக்க.. அங்கே நிகழ்த்தப்பட்ட ஒரு கவிதைப் படைப்புடன், கதை நிகழ்காலத்திற்கு வருகிறது.

எமில் இப்போது 81 வயது முதியவர். அவருடைய அன்பு மனைவி ஹீடிக்கு வயது 70. அரசு தரும் பென்ஷன் தொகையை வைத்துக் கொண்டு புடாபெஸ்ட்டில் ஒரு அபார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார். வாழ்க்கைச் சூழலுக்கேற்ப எப்போதோ வாங்கிய கடன்கள் இப்போது அவர்களது கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கின்றன.

கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து மிரட்ட வீட்டின் உள்ளே இருந்து கொண்டே ‘இல்லை’ என்று சொல்ல வைக்கும் பரிதாபமான வேலையையெல்லாம் இந்த வயதிலும் செய்கிறார் எமில். கடன் கொடுத்தவர்களைச் சமாளிப்பதற்காக மனைவி ஹீடியே, பக்கத்து வீட்டு பெண் போல நடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

இதனால் ஏற்படும் மன உளைச்சல் எமிலை அலைக்கழிக்கிறது. அந்தச் சூழலிலும் அவர்களுடைய காதலுக்கு உறுதுணையாக இப்போதும் மனைவி ஹீடியின் காதில் தொங்கிக் கொண்டிருக்கும் வைரத்தோடுகள் சர்ச்சையைக் கிளப்புகிறது.

“எந்தக் காலத்திலும் அதனை விற்கவிட மாட்டேன்..” என்கிறார் கணவன் எமில். “எப்போது பார்த்தாலும் அதே பேச்சுத்தானா..?” என்கிறாள் மனைவி.

சில நாட்கள் கழித்து கடன்காரர்கள் ஜப்தி செய்வோரோடு வீட்டுக்குள் வந்துவிட.. இப்போது தப்பிக்க முடியாத நிலைமை எமிலுக்கு.. தூக்கிச் செல்லக்கூடிய வகையில் இருப்பவை எந்தப் பொருட்கள் என்று அவர்கள் பார்க்க.. கடைசியில் எமிலுக்கு என்றும் துணையாய் இருக்கிற புத்தகங்கள்தான் அவர்களது கண்களுக்குத் தெரிகிறது.

வந்தவர்கள் புத்தகங்களைத் தொடப் போக, “வேண்டாம்.. இதை வைத்துக் கொண்டு போய்த் தொலையுங்கள்..” என்று சொல்லி தன் காதில் இருக்கும் இரண்டு வைர தோடுகளையும் கழட்டிக் கொடுக்கிறாள் மனைவி.

எமில் கிட்டத்தட்ட இந்த இடத்தில் இறந்து போகிறார். பின் அரை உயிராக உயிர்த்தெழுகிறார். 60 வருட திருமண வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்திலும் தான் செய்யாத ஒரு தவறை, தன் பொருட்டு மனைவி ஹீடி செய்து விட்டாரே என்கிற குற்றவுணர்வு அன்றைய இரவு முழுவதும் அவரைத் தூங்க விடாமல் செய்கிறது.

கதை இங்கிருந்துதான் துவங்குகிறது.

விடிந்தும், விடியாததுமாக பெட்ரோல் கேனுடன் கிளம்பும் எமில், பக்கத்து வீட்டுக்காரனின் காரில் இருந்து பெட்ரோலைத் திருடி தனது காரில் அதை ஊற்றிவிட்டு காரைக் கிளப்பிக் கொண்டு செல்கிறார். இதனை பக்கத்து வீட்டுக்காரர்கள் மட்டுமே பார்க்கிறார்கள்.

கிளம்பிச் செல்லும் கார் போஸ்ட் ஆபீஸில் வந்து நிற்கிறது. ஏதோ ஒரு தீர்மானத்துடன் செல்லும் எமில், தனது இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை கையில் எடுத்துப் பார்த்துக் கொள்கிறார்.

போஸ்ட் ஆபீஸில் “நெக்ஸ்ட்” என்ற குரலுக்கு தலைசாய்க்கும் எமில் கவுண்டருக்குள்ளே ஒரு பிளாஸ்டிக் பையை கொடுத்து “ப்ளீஸ் இதை fillup செய்யுங்கள்..” என்கிறார். கவுன்ட்டரில் இருந்த பெண் புரியாமல் விழிக்க..
கைக்குட்டையால் முழுவதும் மறைத்து குண்டு வெளிப்படும் வாய்ப்பகுதியை மட்டும் அந்தப் பெண்ணின் கண்ணில் காட்டும் எமில், “பிளாஸ்டிக் பை பணத்தால் நிரப்பப்படாவிட்டால், குண்டு உன் மீது நிச்சயம் பாயும்..” என்கிறார்.
புரிந்தும், புரியாமலும் அப்பெண் தவிக்க, “சீக்கிரம். நான் 30 வருஷம் கழித்து இப்போதுதான் முதன்முறையாக துப்பாக்கியைத் தூக்கியிருக்கிறேன்” என்கிறார் கலவரமாக.

அப்பெண் இவரெல்லாம் கொள்ளையடிக்க வருவாரா என்ற சந்தேகத்துடனேயே அந்தப் பிளாஸ்டிக் பை நிறைய பணத்தை நிரப்பிக் கொடுக்க.. சந்தேகமே வராத அளவிற்கு மின்னல் வேகத்தில் வெளியே வந்து காரைக் கிளப்புகிறார் எமில்.

போலீஸ் ஆபீஸர் ஆண்டர், தனது சக பெண் ஆபீஸரான அகியுடன் அன்னியோண்யமாக இருக்கும் காட்சி, இன்ட்டர்நெட்டில் ‘உலா வரும் ஒளிக்கதிராக’ வலம் வரும் காட்சியை ஆண்டரிடம் காட்டி அவனுக்கு பனிஷ்மெண்ட்டாக போக்குவரத்துத் துறைக்கு டிரான்ஸ்பர் செய்கிறார் அவனுடைய மேலதிகாரியான கேப்டன்.(எல்லா நாட்டிலும் போக்குவரத்துத் துறைதான் பனிஷ்மெண்ட் ஏரியா போலிருக்கு)

தான் எப்போது லெப்டினன்ட் ஆவோம் என்பதைக் கேட்பதற்காக வந்த ஆண்டர், இப்போது ரோட்டில் நிற்க வேண்டும் என்ற சோகத்துடன் செல்கிறான்.

இங்கே வீட்டில் ஹீடி கணவரைத் தேடுகிறாள். கணவர் வீட்டில் இல்லை என்றதும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க அங்கே கார் இல்லை. பெட்ரோலுக்கு என்ன செய்தார் என்ற குழப்பத்தில் இருக்க, டிவியில் போஸ்ட் ஆபீஸ் கொள்ளை பற்றிய செய்தி ஒளிபரப்பாகிறது.. தன் கணவர்தான் அச்சம்பவத்தின் ஹீரோ என்பது தெரியாமல் போகிறது அவளுக்கு.

கேஸ் நிரப்பும் பங்கின் ஊழியர்கள் இருவர், ஓனர் இல்லை என்பதால் மகா சந்தோஷத்துடன் ஒரு பலான படத்தின் டிவிடியை வாங்கி அவசர அவசரமாகப் பிரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே நுழையும் நமது ஹீரோ எமில், அங்கேயும் தனது துப்பாக்கியைக் காட்டி தனது காருக்கு கேஸை முழுவதும் நிரப்பிக் கொண்டு டாட்டா காட்டி விட்டுச் செல்கிறார்.

பலான படத்தை INCAMERA படம் பிடிக்கக்கூடாதே என்பதற்காக ஊழியர்கள் கேமிராவைக் கையால் திருப்பியபோது, மிகச் சரியாக எமில் உள்ளே வரவும் அவரது திருவுருவம் அக்கேமிராவில் பதிவாகிறது. போலீஸ் விசாரணையின்போது கடைப் பையன்கள் பலான மேட்டரை மட்டும் மறைத்துவிட்டு, மீதி அத்தனையையும் சொல்லிவிடுகிறார்கள்.

இங்கே ஆண்டர் கடும்சோகத்துடன் ROAD PATROL வண்டியில் அமர்ந்திருக்கிறான். உடன் அமர்ந்திருக்கும் நீண்ட வருடங்களாக இப்பிரிவில் இருக்கும் காவலன் சாலைகளில் செல்லும் கார்களின் மாடல்களை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி அவனை அசத்திக் கொண்டிருக்கிறான்.

இந்த நேரத்தில் இரண்டாவது கொள்ளை பற்றிய செய்தி போலீஸ் வயர்லெஸ்ஸில் வர.. இப்பொழுது இந்த நபரைப் பிடிக்க ஆண்டரின் காதலி ஆகி, சிறப்பு காவலராக நியமிக்கப்பட்டிருப்பது ஆண்டருக்குத் தெரிய வர.. உடனிருக்கும் காவலனை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு வேகவேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு கேப்டனைத் தேடிச் செல்கிறான் ஆண்டர்.

அங்கே கேப்டனிடம் ஆகியுடன் இணைந்து இந்த வழக்கைத் தான் விசாரிப்பதாகச் சொல்கிறான். கேப்டன் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்ள ஆகியுடன் விசாரணைக் களத்திற்குக் கிளம்புகிறான்.

தனது வீட்டில் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், எமில் Gas Bank-ல் துப்பாக்கியைக் காட்டும் வீரசாகசம் நியூஸாக வர.. மனைவி ஹீடி அதிர்ச்சியடைகிறாள். அவளால் நம்ப முடியவில்லை. கூடவே அதிர்ச்சியாகும் பக்கத்து வீட்டுப் பெண்கள் “இந்த ஆம்பளைங்களையே நம்ப முடியாது.. உன் புருஷன் என்னிக்காச்சும் ஒரு நாளாவது என்னைப் பார்த்து சிரிச்சிருப்பானா..” என்றெல்லாம் இதுதான் சாக்கு என்று போட்டுத் தாக்குகிறார்கள்.

ஹீடி இடிந்து போகிறாள். அவளுக்குள் ஒரு போராட்டம். தான் வைரத்தோடுகளைக் கழட்டிக் கொடுத்ததுதான் தனது காதல் கணவரின் இப்படியொரு முட்டாள்தனத்திற்குக் காரணம். தானும் இதற்கு ஒரு காரணமாகிவிட்டோமோ என்றெண்ணுகிறாள்.

இந்த நேரத்தில் Gas Bunk-காரன் எமில் ஓட்டி வந்தது ஒரு பழைய வகை கார் என்று சொல்ல.. ஆண்டருக்குப் பொறி தட்டுகிறது. உடனேயே நடுரோட்டில் விட்டுவிட்டு வந்த காவல் நண்பனுக்கு போன் போட்டு மறக்காமல் முதலிலேயே ‘ஸாரி’ கேட்டுவிட்டு அவன் சொன்ன கார்களின் வகைகளையும், நம்பரையும் கேட்க அவன் மனப்பாடமாகக் கொட்டுகிறான். AN 9725 என்கிற நம்பரை கண்டுபிடிக்கும் போலீஸ் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்குப் பாயத் துவங்க..

இங்கே எமில் ஊர் ஓரமாக காரை நிறுத்திவிட்டு ஹீடிக்கு போன் செய்கிறான். ஹீடி போனை எடுக்க வரும்போது போன் கட்டாகிவிட.. தூங்கியிருப்பாளோ என்ற நினைப்பில் போனை கட் செய்கிறார் எமில்.

ரொட்டியை வாங்கித் தின்றபடியே பின் சீட்டில் அமர்ந்திருப்பவரிடம் வருகிறாள் ஒரு பெண். “ஒன்றரை மணி நேரம்தான்.. 15 பிராங்க் கொடுத்தால் போதும்..” என்கிறாள். “எதற்கு..” என்று கேட்கிறார் எமில். “இப்படிக் கேட்ட முதல் ஆம்பளை நீங்கதான்..” என்று சொல்லிச் சிரிக்கிறாள் அவள்.
எமில் தனது துப்பாக்கியை எடுத்துக் காட்டி “எனக்கு காசு கொடுக்குறது பிடிக்காது. பரவாயில்லையா..?” என்று சொல்ல.. அடுத்த நொடி காரிலிருந்து இறங்கி ஓடுகிறாள். தப்பித்தோம் என்ற திருப்தியில் எமிலும் சிரிக்கிறார்.

இந்தப் பெண்ணும் மறுநாள் நல்ல பிள்ளையாக போலீஸ் ஸ்டேஷன் போய் “நான் டிவியில் காட்டிய ஆளை பார்த்தேன்..” என்கிறாள். அங்கே போலீஸ் செல்கிறது. எமில் இல்லை.

மறுநாள் எமிலியின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கே வருகிறார்கள் ஆண்டரும், ஆகியும். ஹீடியிடம் விசாரணை நடக்கிறது.. “தனது கணவர் என்றைக்கும் இப்படி நடந்து கொண்டதில்லை. அவர் சீரியஸ் திருடர் இல்லை.. கொள்ளைக்காரர் இல்லை.. ஒருவித மனவெறுப்பில் இதைச் செய்துவிட்டார்” என்கிறாள் ஹீடி.

கண்டிப்பாக எப்படியும் வீட்டைத் தொடர்பு கொள்வார் என்ற சந்தேகத்தில் இரண்டு போலீஸ் புலிகளும் வீட்டிலேயே இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. போன் செய்கிறார் எமில். அது டேப் செய்யப்பட ஹீடி அவருடன் பேசுகிறாள்.

அவளை ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறார் எமில். சூழ்நிலைக் கைதி என்ற நிலையில் ஹீடி சரி என்று தலையாட்ட.. போலீஸ் வலை விரிக்கிறது..

ஒரு சுண்ணாம்பு காளவாசல் போன்ற அமைப்பில் இருக்கும் இடம். மணல் கற்கள் கொட்டி வைக்கப்பட்டு இரு பெரும் பள்ளத்தாக்குகளுக்கு இடையில் கார்கள் அணிவகுத்து வருகின்றன. அதன் ஒரு மூலையில் அமைதியாக தனது காரில் அமர்ந்திருக்கிறார் எமில்.

ஹீடி தான் வந்த காரிலிருந்து இறங்கி எமிலை நோக்கிச் செல்கிறாள். யாரும் செய்யத் துணியாத சாகசச் செயலை செய்த திருப்தியில் இருக்கிறார் எமில். அங்கே அவர்கள் இருக்கும் இடையில் எழும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தில் போலீஸ¤ம் உடன் வந்திருக்கிறார்கள் என்பது எமிலுக்குப் புரிகிறது.

சட்டென கிளம்புகிறார்கள். போலீஸ் துரத்த.. அதிர்ஷ்டவசமாக எமிலின் கார் அவ்வளவு பெரிய மேட்டிலும் ஏறிச் செல்ல.. போலீஸ் கார் ஏற முடியாமல் சறுக்கிப் போக.. அவரை கோட்டை விடுகிறார்கள்.

இப்போது அமைதியாகப் போய்க் கொண்டிருக்கும் காரில் தனது காதல் கணவரின் தோளில் சாய்ந்து அமைதியாக இருக்கிறாள் ஹீடி. எமிலுக்கு தாங்க முடியாத சந்தோஷம். தன் மனைவிக்கு ஒரு அமைதியைக் கொடுத்திருக்கிறோமே என்று..

இங்கே மீடியாக்கள் கேப்டனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க.. விரைவில் பிடித்துவிடுவோம் என்று ஊர் மக்களுக்கு உறுதியளிக்கிறார் கேப்டன்.

“நான் வைரத் தோடுகளைக் கழட்டிக் கொடுத்ததுதான் இவ்வளவுக்கும் காரணமா..?” என்கிறாள் ஹீடி. எமில் மறைமுகமாக அதை ஒப்புக் கொள்கிறார். அதை மீட்பதுதான் அடுத்த வேலை என்கிறார்.

சொன்னது போலவே ஜப்தி செய்ய வந்த கடைக்கு மனைவியுடன் செல்கிறார். அந்தக் கடைக்காரனும் எமிலி வயதுக்காரன். முன்பே தெரிந்தவன்தான். எமிலியைப் பார்த்ததும் சந்தோஷமடைந்து, “இப்பத்தான் வர்றதுக்கு வழி தெரிஞ்சதா” என்று கேட்கத் துவங்க.. எமில் துப்பாக்கியைத் தூக்குகிறார். “மொதல்ல வைரத் தோடு..” என்கிறார்..

தோடுகள் இப்போது கை மாற.. காரில் ஏறியவுடன் தனது அன்பு மனைவியின் கைகளில் அத்தோடுகளை வைத்து கைகளை இறுக மூடி பற்றிக் கொள்ளும் எமிலியின் வயதான அந்தக் கண்களில்தான் எவ்வளவு நிம்மதி..

ஆனால் காவல்துறை நிம்மதியாக இல்லையே.. நம்ம ஊர் மாதிரியென்ன, ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறுகண்ணில் சுண்ணாம்பு மாதிரியானவர்களா அங்கேயுள்ளவர்கள்..

அனைத்து டிவிக்களிலும் வயதான இந்தத் தம்பதியினர்தான் வலம் வருகிறார்கள். ஒரு வயதானவர்களையே கண்டுபிடிக்க முடியாத காவல்துறை நமக்கெதுக்கு என்ற ரீதியில் கருத்துக்கள் எல்லாம் நேரடி ஒளிபரப்பாக வர.. கேப்டன் தனது படையை முடுக்கிவிடுகிறார்.
ஆனாலும் எமில் அசரவில்லை..

அடுத்த இலக்காக ஒரு வங்கியைக் குறி வைக்கிறார். அது மதிய நேரம். கையில் துப்பாக்கியுடன் கதவைத் தள்ளிக் கொண்டு ஹாலுக்குள் வரும் எமில், “யாரும் அசையாதீர்கள்.. சுட்டுவிடுவேன்..” என்று கத்த.. அங்கே யாருமே இல்லை. கவுன்ட்டரில்கூட யாருமில்லை. சிறிது நேரம், “யார் அங்கே..?” என்று கத்திவிட்டு யாரும் வராததால் “இன்றைக்கு இவர்களுக்கு நல்ல நேரம். தப்பித்துக் கொண்டார்கள். வா.. போகலாம்” என்று சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு பறக்கிறார் எமில்.

இதை பக்கத்து வீட்டு மாடியிலிருந்து பார்க்கும் ஒருவன் காவல்துறைக்கு போன் செய்ய பறந்தோடி வருகிறார்கள் ஆண்டரும், ஆகியும்.

நல்லவேளையாக இந்த வங்கியின் INCAMERA-வில் வயதான தம்பதிகள் தெரிய வர.. இருவரின் புகைப்படத்தை ஒட்டி நோட்டீஸ்கள் தயாராகின்றன. கார் ஓட்டிக் கொண்டிருக்கும் எமிலின் கண்களிலும் அந்த நோட்டீஸ்கள் படுகின்றன.

கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்து அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு மனைவியை அழைத்துச் செல்கிறார் எமில். தனது முந்தைய வாழ்க்கையில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத எக்ஸ்கியூட்டிவ் ஷ¥ட்டில் தங்குகிறார்கள்.

விருப்பப்படி ஹாயாக இருக்கிறார்கள். மனைவியின் எதிர்ப்பையும் மீறி ஒரு தாய்லாந்து பெண்ணிடம் மஸாஜ் செய்து கொள்கிறார். நீச்சல் குளத்தில் மனைவியுடன் ஆனந்தமாக நீந்துகிறார்.

அன்று இரவு ஹோட்டலில் டின்னர் சாப்பிடுகிறார்கள். மனைவி ஹீடிக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவ்வப்போது சுகர் செக் செய்ய வேண்டும். ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்பதால் ஸ்வீட்ஸ் நிறைய கொண்டு வரச் சொல்கிறார். ஹீடி ‘வேண்டாம்’ என்று மறுக்கிறாள். “நோ.. இன்னிக்கு நீ நான் கொடுக்கிறதையெல்லாம் சாப்பிட்டே ஆகணும்..” என்று கையைச் சொடுக்க “70” என்ற எழுதப்பட்டு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கும் கேக் அவர்களது டேபிளுக்கு வருகிறது.

ஹீடிக்கு இன்று தன்னுடைய பிறந்த நாள் என்பது அப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. கணவருடன் அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருந்ததில் தான் மறந்துவிட்டது புரிய.. கண்களில் பாசத்தைக் காட்டி கணவரை விழுங்குவதைப் போல் பார்க்கிறாள். எமிலின் குறும்புப் பார்வையும், எப்படி அசத்திவிட்டேன் பார்த்தாயா என்ற பெருமிதமும் அத்தம்பதிகளுக்குள் இருந்த காதலை வெளிப்படுத்துகிறது.

கேக்கை வெட்டியவுடன் ஹீடிக்குப் பிடித்தமான இசையை ஒலிக்க வைக்கிறார் எமில். ஹீடி நெகிழ்ந்து போகிறாள். அவருடைய கையைப் பிடித்து “என்னோட சின்ன வயசுலகூட இப்படியொரு பிறந்த நாள் கொண்டாடியதில்லை..” என்கிறாள்.

டிவிக்களில் இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு என்று அறிவிக்கிறது காவல்துறை. இதைத் தற்செயலாகப் பார்க்கும் ஹோட்டல் வரவேற்பாளர் பொறுப்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.

விஷயம் ஆண்டருக்குத் தெரிய வர தான் மட்டும் முன்னால் சென்று பிடித்துவிட நினைத்து வேகவேகமாக ஹோட்டலுக்கு வருகிறான். கையில் துப்பாக்கியுடன் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தவன் கண்களில் நிம்மதியாகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கும் ஹீடி தெரிகிறாள்.

எமிலைத் தேடி பாத்ரூமுக்குள் நுழைய பக்கத்து அறையில் இருந்து வெளியே வரும் எமில் சட்டென பாத்ரூம் கதவை இழுத்து மூடிவிட்டு ஹீடியை எழுந்து வரச் சொல்கிறார்.

இருவரும் பின்பக்கப் படிக்கட்டுக்குள் வழியாக வெளியேறத் துவங்க.. பாத்ரூமின் ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வருகிறான் ஆண்டர். அவனும் அவர்களைப் பின் தொடர.. அதற்குள் காரைக் கிளப்பிக் கொண்டு செல்கிறார் எமில்.

இந்த முறை எமிலைத் தப்ப விட்டதற்காக ஆண்டரை சஸ்பெண்ட் செய்கிறார் கேப்டன். ஆண்டர் சோர்வடைந்து போகிறான். அவனைவிட ஆகிதான் வெறுப்பாகிறாள். ஆகிக்கு இப்போது அவனது தேவை பெரிதாகிறது. காரணம் அவள் ஆண்டரின் உறவால் கர்ப்பமாக இருக்கிறாள். தாய்மையுணர்வு அவளுக்குள் எழும்பியிருக்க, வாழ்க்கையின் பாதுகாப்புக்கு அரண் தேடுகிறாள். தனது படம் வெளியான விவகாரத்தில் ஆண்டரின் மீது அப்ஸெட்டில் இருந்த ஆகிக்கு இப்போது அது ஒரு பொருட்டே அல்ல என்பதைப் போல் இருக்கிறாள்.

இம்முறை எமில் தனது காதல் மனைவிக்காக அலைச்சலை மேற்கொள்ளாமல் எங்காவது இடம் கிடைத்தால் பதுங்குவது என முடிவெடுக்கிறார். அதற்காக அவர் தனது போர்க்கால நண்பரை ஒருவரைத் தேடி செல்கிறார்.

அந்த நண்பரோ இரவோடு இரவாக தெருவையே அடைத்து காம்பவுண்ட் சுவர் எழுப்பும் அளவுக்கு வில்லாதி வில்லனாக இருக்கிறார். தனது பழைய நண்பனுக்கும், அவர் மனைவிக்கும் மனமுவந்து அடைக்கலம் தருகிறார் நண்பர். கூடவே “அவர்கள் செய்வதில் எந்தவொரு தவறுமில்லை. நம் கஷ்டத்தைத் துடைக்க, முன் வராத சட்டம் என்ன பெரிய சட்டம்..? நாம் துப்பாக்கி ஏந்தி போராடாமலா இந்த நாட்டிற்கு சுதந்திரம் வந்தது..?” என்று தத்துவமெல்லாம் பேசுகிறார்.

பாட்டில், பாட்டிலாக ‘சரக்கு’ ஏற்றியதில் போர்க்குணமும் கூடுகிறது நமது முதியவர்களுக்கு.. எதற்கு சிறிது சிறிதாக கொள்ளையடித்து மூட்டு வலிக்கு இடம் கொடுக்க வேண்டும்..? மொத்தமாக, லம்பமாக அடித்தால் என்ன என்று ஐடியா கொடுக்கிறார் நண்பர்.

அந்த ஊர் வங்கிக்கு தினமும் கலெக்ஷன் பணத்தைக் கொட்ட வரும் ஒரு பணக்காரரை பற்றியும், அவருடைய ஜாதகத்தையும் பிட்டு பிட்டு வைக்கிறார் நண்பர். எமில் சந்தோஷமாக ஒத்துக் கொள்ள.. மறுநாள் ‘போரு’க்குச் செல்லலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

தான் மிகவும் விரும்பிய லெப்டினென்ட் பதவி தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.. தனது காதலி ஆகியுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வெறுப்பில் இருந்த ஆண்டர் எமிலின் வீட்டை மறுபடியும் சோதனையிடுவோம். ஏதாவது கிடைக்கும் என்ற புலனாய்வு ஐடியாவில் செல்கிறான்.

அங்கே எதிர்பார்த்தாற்போல் அவனுக்கு எமிலின் சோக வாழ்க்கையின் ஒரு பகுதி கிடைக்கிறது. எமிலி-ஹீடி தம்பதிகளுக்கு ஒரு மகன் இருந்திருக்கிறான். அவன் பள்ளியில் படிக்கும்போதே சைக்கிள் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றவன் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டான். ஹீடிக்கு கர்ப்பப்பையில் சிக்கல் உண்டானதால் அதற்குப் பிறகு கருத்தரிக்க இயவில்லை. ஆகவே ஒரே மகனின் மீது பாசத்தைக் கொட்டி அவனைத் தவிர வேறு உலகமில்லை என்றே வாழ்ந்து வந்த அத்தம்பதிகளுக்கு மகனின் மரணம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

அவனது உடலை அவர்களது பண்ணை வீட்டில் அடக்கம் செய்து வருடந்தோறும் ஒரு முறை அங்கே சென்றுவருவதைப் பழக்கமாகவும் வைத்திருப்பதையும் அறிகிறான் ஆண்டர்.

எப்போதும் போல் வங்கிக்கு பணப் பெட்டியுடனும், துணைக்கு ஒரு ஆள் பாதுகாப்புடனும் அந்தப் பணக்காரர் வர.. சும்மா மிரட்டுவதைப் போல் துப்பாக்கியைக் காட்டும் எமில், சற்று உணர்ச்சிவசப்பட்டு சுட்டுவிட, குறி தவறாமல் குண்டு பணக்காரரின் காலில் பாய்கிறது. பெட்டி எமில் கைவசமாகிறது. வெற்றிகரமாக மிகப் பெரிய ஜாக்பாட் கொள்ளையுடன் சந்தோஷமாக தப்பி ஓடுகிறார்கள் எமிலும், நண்பனும்.

கேப்டனுக்கு வியர்த்துப் போய்விட்டது. அதைவிட ஊர் சனங்களுக்கு..!
அன்றைய ரொட்டிவிலை உயர்வைவிட எமிலின் சாகசம்தான் பெரிய விஷயமாகிவிட்டது.. ‘முதியவர்களை நாம்தான் வாட்டி வதைத்துவிட்டோம். அதுதான் ராபின்ஹ¥ட் ஸ்டைலில் இப்படி இறங்க வைத்துவிட்டது..’ என்று எமிலுக்கு ஆதரவாக நான்கு பேரும், “அது எப்படி? யார் எந்த வயதில் செய்தாலும் குற்றம் குற்றமே..” என்று எமிலுக்கு எதிர்த்தரப்பில் நான்கு பேரும் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க..

கேப்டன் போலீஸை முடுக்கிவிட.. யார் புதிதாக அந்தப் பக்கம் காரில் செல்வது.. வந்தது.. சென்றது.. என்றெல்லாம் நெடிய விசாரணையின் இறுதியில் நண்பனின் வீட்டை போலீஸ் சூழ்கிறது.

அந்த இரவில் எமிலும், ஹீடியும் ஒரு காரில் ஏறிக் கொள்ள.. நண்பன் தானே வடிவமைத்துக் கட்டிய கவசவாகனம் போன்ற டிரக்கில் ஏற்றி தானே கட்டிய காம்பவுண்ட் சுவரை இடித்துத் தள்ளிக் கொண்டு தப்பிக்க..

அந்த நேரம் வெளியே சுவர் ஏறிக் குதிக்கக் காத்துக் கொண்டிருந்த ஆகியின் மீது டிரக் மோத அவள் படுகாயமடைகிறாள். நண்பரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் எமிலும், அவர் மனைவியும் ஆகியைத் தூக்கித் தங்களது வண்டியில் வைத்துக் கொண்டு பறக்கிறார்கள்.

விடிந்துவிடுகிறது. இவர்களைப் பிடிக்க ஹெலிகாப்டரே வந்து விடுகிறது. நான்கு முனைச் சாலைகளிலும் காவல்துறை சுற்றி வளைத்திருக்க.. “எந்த இடத்தில் பார்த்தாலும் அவர்களைச் சுட்டுத் தள்ளு” என்கிறார் கேப்டன்.

ஆனாலும் அகாயசூரராக எமிலும், அவர் மனைவியும் ஆகியுடன் தப்பித்து விட, நண்பன் மட்டும் வேண்டுமென்றே வலுவில் வந்து மாட்டுகிறான்.

ஆகி தற்போது பிணைக் கைதியாக எமிலிடம் இருப்பது தொலைக்காட்சியில் தெரிய வர, ஆண்டர் அங்கே ஓடி வந்து எமில் தம்பதிகள் அந்தப் பண்ணை வீட்டுக்குத்தான் போயிருப்பார்கள் என்று கேப்டனிடம் சொல்லி அனைவரையும் கிளப்புகிறான்.

அங்கே பண்ணை வீட்டில் காயம்பட்டிருக்கும் ஆகியை அக்கறையாக, அனுசரணையாக ஹீடி கவனித்துக் கொள்கிறாள். அவளுடைய காயத்துக்கு மருந்து போட்டு அவளுக்கு உணவை ஊட்டிவிட்டவள், தாங்கள் செய்கின்ற செயலின் குற்றவுணர்வை ஒரு துளிகூட காட்டாமல் இருப்பது ஆகிக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது.

காவல்துறை பண்ணை வீட்டை முற்றுகையிட ஆகியை பணயக் கைதியாக வைத்து தப்பிக்கிறார் எமில். ஹீடி, ஆகியுடன் கூடவே மூன்றாவது விருந்தினராக ஒரு கேன் பெட்ரோலையும் காரில் தூக்கி வைத்துக் கொண்டு பறக்கிறார் எமில்.

ஹெலிகாப்டர் இப்பவும் அவரைப் பின் தொடர, அடர்ந்த காடுகளுக்குள் காரைச் செலுத்தி ரேடார் கண்களிலிருந்து மறையும் எமில் அக்காட்டுப் பகுதியில் ஆகியை இறக்கிவிட்டு “சென்றுவிடு” என்கிறார்.

ஹீடி ஆகியை, “பத்திரமா இருந்துக்கோ..” என்று அன்பாகச் சொல்லிவிட்டு தனது கணவருடன் செல்ல.. ஆகியின் பார்வையில் கார் செல்கிறது.

காரின் உள்ளே பரம திருப்தியோடு எமில் தனது கரங்களை தனது காதல் மனைவி ஹீடியின் கரத்தோடு சேர்த்துப் பிடித்துக் கொள்ள அது சமயம் கேமிரா பின் சீட்டில் இருந்து இக்காட்சியை எடுத்திருக்கும் விதமே படத்தின் முடிவைச் சொல்லி ஒரு இனம் புரியாத வலியை ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தியிருந்தது.

ஒரு நான்கு முனைச் சந்திப்பில் புல்டோஸரையே நிறுத்திவைத்து கேப்டன் காவல் படையோடு காத்திருக்க முதலில் கார் வருகிறது. ஆகியும் உள்ளேதான் இருப்பாள் என்று நினைத்து புல்டோஸரை விலக்கச் சொல்கிறார் கேப்டன். ஆனால் பின்னாலேயே காலை நொண்டியபடியே ஆகி நடந்து வர..

காவல்துறை பரபரப்பாக.. புல்டோஸரை மீண்டும் நடுரோட்டுக்கு கொண்டு வரச் சொல்கிறார் கேப்டன். ஆகி சந்தோஷமாக ஆண்டரை நோக்கி வர.. ஆண்டர் ஆகியை எதிர்நோக்கி காத்திருக்க.. கேப்டனோ இந்த முறை இவர்களைப் பிடித்தால்தான் தனது பணியில் எதிர்காலத்தை பார்க்க முடியும் என்ற ஆசையில் காத்திருக்க..

கார் வருகிறது.. திடீரென்று வேகமெடுக்க.. காத்திருந்த காவலர்களின் முகத்தில் ஒரு சந்தேகம் எழ.. அது ஆகி, ஆண்டர், கேப்டன் ஆகியோரின் முகத்திலும் பட்டவர்த்தனமாய் தெரிக்க.. என்னவொரு வேகம்.. அந்தக் காருக்கு..

அவர்கள் நினைத்ததைப் போலவே அனைவரும் கடைசி நிமிடத்தில் சிதறியோட, ஒருமித்தக் காதல் தம்பதிகள் சந்தோஷமாக சாவிலும் இணைவோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

அசுர வேகத்தில் வரும் கார் புல்டோஸரின் மீது மோதி வெடித்துச் சிதற.. அங்கே வெடித்துக் கிளம்பும் தீப்பிழம்புகளில் அக்காதலர்களின் உடலின் ஒரு பகுதியும் கிடைக்காது என்றாலும் அத்தீம்பிழம்புகள் கிளப்பிய ஒலியிலும், வெளிச்சத்திலும் அதை உண்டாக்கியது காதல் என்கிற ஜீவனுள்ள வார்த்தை என்பதை அந்த மேகக்கூட்டங்கள் அறிந்திருக்காது என்றே நினைக்கிறேன்.
முதுமை என்பது வரமா? சாபமா? என்றெல்லாம் நாம் பேசிக் கொண்டிருக்க நடிப்பில் மிகையில்லாமல் அதீத நடிப்பையும் கொட்டாமல் அளவோடு நடித்திருக்கிறார் எமில்.

தனது மனைவி வைரத்தோடுகளைக் கழட்டிக் கொடுக்கின்ற போது அவருடைய முகம் காட்டுகின்ற இயலாமை.. கோபம்.. வெறுப்பு. அந்த ஒரு நொடிதான் அவர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரப் போகும் கோலத்தின் முதல் புள்ளி என்பதை மிக ரம்மியமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

வெளியில் நிற்கும் கடன்கார அம்மாவுக்கு முகம் காட்டத் தயங்கி குனிந்தவர், நிமிர முடியாமல் தவிக்கின்ற தவிப்பு.. ஜப்தி செய்தவரிடம் தோடை பிடுங்கி ஹீடியின் கையில் கொடுக்கின்ற போது காட்டுகின்ற பெருமிதம்.. ஹீடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து ஹீடி ரசிப்பதையே இவர் ரசிக்கின்ற பாங்கு.. முதுமையினால் தெரிகின்ற சுருக்கங்கள்கூட அழகாகத்தான் இருக்கின்றன.

ஹீடியாக நடித்தவரும் தன் பங்களிப்பை திறம்படவே செய்திருக்கிறார். பின்னல் செய்து கொண்டிருக்கையில் டிவியில் கொள்ளையடித்தவர் எமில்தான் என்பது காட்டப்பட அவர் முகத்தில் அறை வாங்கிய அதிர்ச்சியைக் காட்டி.. தொடர்ந்து தன்னால் அவருக்கு அப்படியொரு நிலைமை என்பதை ஆண்டரிடமும், ஆகியிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்ற தவிப்பு.. ஒரு காதல் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது..

தன் மகன் இறந்த சோகத்தையும், பின்பு தான் கருத்தரிக்க முடியாமல் போனதையும் மனதில் வைத்து ஆகியின் வயிற்றைத் தொட்டுப் பார்த்து, “எப்பவும் பெண்களுக்கு வயிறுதான் முக்கியம்.. அதை பத்திரமா வைச்சுக்கணும்.. இல்லேன்னா எல்லாருக்குமே கஷ்டம்தான்..” என்று ஏக்கத்துடன் சொல்லும்போது தெரிகின்ற பெண்மை சார்ந்த பேச்சில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

60 வருட குடும்ப வாழ்க்கையில் தன் மனைவியின் கடைசி பெருமையான வைரத் தோடுகளை இழக்க வைத்த வாழ்க்கைச் சூழலை எப்பாடுபட்டாவது எதிர்த்தாக வேண்டும் என்கின்ற எமிலின் எதிர்ப்புத் திறனை எச்சட்டத்தாலும் அடக்க முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மைதான்.

ஒரு சிறு பொறிதான்.. உலகத்தையே புரட்டிப் போட்ட பொதுவுடமை என்னும் தத்துவத்தையே ஏமாற்றி கைப்பற்றிய தனது காதலை எவனோ ஒருவன் அடிமைப்படுத்திவிட்டானே என்ற எமிலின் கோபத்தின் மீதான உண்மையை நாம் உணரும்போது அவர் ஹீடி மீது கொண்டிருக்கும் காதலின் மீது நமக்கு ஒரு அரூபமான நட்பு ஏற்படுகிறது.

காதல்தான் எத்தனை சக்தி வாய்ந்தது..?

28 comments:

idlyvadai said...

நல்ல பதிவு. ஆனால் கொஞ்சம் நீளம் அதிகம்.

Anonymous said...

அருமையான பதிவு உண்மைத்தமிழன் அவர்களே...

ரொம்ப நாளைக்கப்புறம் போட்டிருக்கீங்க போலிருக்கு....

பதிவு கொஞ்சம் நீளம்தான்...ம்ம்ம் ஓக்கே பரவால்ல...

ஆமாம்...எதைப்பத்தின பதிவு இது ???? :))))))))))

இம்சை said...

ஆகா ஜூப்பரு, இருங்க பதிவு படிச்சிமுடிச்சிட்டி அடுத்த வாரம் வரேன்

Subbiah Veerappan said...

நன்றாக இருக்கிறது உண்மைத்தமிழரே!
படத்தை முழுவதும் உள்வாங்கிக் கொண்ட நீங்கள் உங்கள் நடையில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!

Thamiz Priyan said...

மிக அருமையான காதல் கதை! நன்றாக எழுதியுள்ளீர்கள்.

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
அருமையான பதிவு உண்மைத்தமிழன் அவர்களே... ரொம்ப நாளைக்கப்புறம் போட்டிருக்கீங்க போலிருக்கு.... பதிவு கொஞ்சம் நீளம்தான்...ம்ம்ம் ஓக்கே பரவால்ல... ஆமாம்...எதைப ்பத்தின பதிவு இது ???? ))))))))//

தம்பீ, படிக்காமயே கமெண்ட்டா..? இது நீளமா..? பாவி.. just 14 pages only.. இது அதிகமா..? எனக்கு கம்மிடா ராசா..

அப்புறம் படிச்சுப் பார்த்துட்டு மருவாதையா உன் கருத்தைச் சொல்லு.. அருமையான படம் இது..

சென்ஷி said...

அண்ணா, இது உங்களுக்கே நியாயமா?!

ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழ்மணத்துல மத்த பதிவயும் படிக்கலாம்ம்னு வந்தா இப்படி ஒரு பதிவுலயே உக்கார வச்சுட்டீங்களே :((

ம்ஹ்ம்... பதிவ பத்தி என்னத்த சொல்ல.. என்னைய மட்டும் லவ்வு பண்ணாதேடான்னு திட்டுங்க. பதிவுல காதல தெய்வாமாக்கி பூஜை செய்யுங்க :))

ரொம்ப நல்ல படமா தெரியுது. சமயம் கிடைச்சா பார்த்துடவேண்டியதுதாம் :))

சென்ஷி said...

..இம்சை said...
ஆகா ஜூப்பரு, இருங்க பதிவு படிச்சிமுடிச்சிட்டி அடுத்த வாரம் வரேன்..//

அட என்ன தலைவா, ஒரு வாரத்துல அண்ணாத்த பதிவ படிச்சு புரிஞ்சு உள்வாங்கி மனச தொட்டு பின்னூட்டத்த பிழிஞ்சுட முடியும்ன்னு நம்புறீங்களா :))

சென்ஷி said...

//SP.VR. SUBBIAH said...
நன்றாக இருக்கிறது உண்மைத்தமிழரே!
படத்தை முழுவதும் உள்வாங்கிக் கொண்ட நீங்கள் உங்கள் நடையில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!//


அய்யய்யோ :)))

முரளிகண்ணன் said...

super super super

அமர பாரதி said...

அய்யா,

படத்த பாக்கற நேரத்த விட உங்க விமர்சனத்த படிக்கறதுக்கு நேரம் அதிகம் வேணும் போலிருக்கே.

சின்னப் பையன் said...

அண்ணே,
படமும் இவ்ளோ பெரிய படமா? ஒரு நாளிலேயே பார்த்து விட முடியுமா?

துளசி கோபால் said...

film festival ஆரம்பிச்சுருச்சா?

நல்லாத்தான் கதை சொல்லி இருக்கீங்க.

வைரத்தோடு என்ன டிஸைன்னு சொல்லவே இல்லை?

Nilofer Anbarasu said...

Nice to see u back in form....after a long time came back with a excellent post...

உண்மைத்தமிழன் said...

//இம்சை said...
ஆகா ஜூப்பரு, இருங்க பதிவு படிச்சி முடிச்சிட்டி அடுத்த வாரம் வரேன்//

இம்சை எழுதினதே ஒரு வரி.. அதுலேயே உள் குத்தா.. பஞ்ச் டயலாக் எழுதறவங்கள்லாம் உங்ககிட்ட பிச்சை வாங்கணும்ப்பூ..

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
நன்றாக இருக்கிறது உண்மைத்தமிழரே! படத்தை முழுவதும் உள்வாங்கிக் கொண்ட நீங்கள் உங்கள் நடையில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!//

வாத்தியாரே.. என் ஸ்டைல் இதுதான்னு நான் நினைச்சிட்டு எழுதியிருக்கேன்.. எனக்குன்னு நீங்க நினைக்கிற மாதிரி 'தனி நடை' ஒண்ணு இருக்கா..? முருகா..

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...
மிக அருமையான காதல் கதை! நன்றாக எழுதியுள்ளீர்கள்.//

தமிழ் பிரியன்.. நன்றி.. கடைசிவரை படித்தமைக்கும் இன்னொரு ஸ்பெஷல் நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//சென்ஷி said...
அண்ணா, இது உங்களுக்கே நியாயமா?! ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழ்மணத்துல மத்த பதிவயும் படிக்கலாம்ம்னு வந்தா இப்படி ஒரு பதிவுலயே உக்கார வச்சுட்டீங்களே :(( ம்ஹ்ம்... பதிவ பத்தி என்னத்த சொல்ல.. என்னைய மட்டும் லவ்வு பண்ணாதேடான்னு திட்டுங்க. பதிவுல காதல தெய்வாமாக்கி பூஜை செய்யுங்க :)) ரொம்ப நல்ல படமா தெரியுது. சமயம் கிடைச்சா பார்த்துடவேண்டியதுதாம் :))//

தம்பி இது எனக்கு நியாயம்தான்.. ரொம்ப நாள் கழிச்சுத்தான என்னைப் பார்க்க வந்த.. அப்புறமென்ன அரை நாள் இருந்து கரியும், சோறும் சாப்பிடறதுல என்ன தப்புன்றேன்..?

நீ பச்சைப் புள்ளைடா.. அதான் பார்த்து, சூதானமா லவ் பண்ணுன்னுதான் சொன்னேன்..

உண்மைத்தமிழன் said...

///சென்ஷி said...
..இம்சை said... ஆகா ஜூப்பரு, இருங்க பதிவு படிச்சிமுடிச்சிட்டி அடுத்த வாரம் வரேன்..//
அட என்ன தலைவா, ஒரு வாரத்துல அண்ணாத்த பதிவ படிச்சு புரிஞ்சு உள்வாங்கி மனச தொட்டு பின்னூட்டத்த பிழிஞ்சுட முடியும்ன்னு நம்புறீங்களா :))///

அடப்பாவி சென்ஷி..

அப்படியென்ன நான் இலக்கியத் தமிழ்லேயாடா எழுதியிருக்கேன்..? அஞ்சாங்கிளாஸ் தமிழ்டா.. நீ ஒருத்தனே போதும் போலிருக்கே எனக்கு..

உண்மைத்தமிழன் said...

///சென்ஷி said...
//SP.VR. SUBBIAH said...
நன்றாக இருக்கிறது உண்மைத்தமிழரே! படத்தை முழுவதும் உள்வாங்கிக் கொண்ட நீங்கள் உங்கள் நடையில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!//
அய்யய்யோ :)))///

மூணாவது உள்குத்தா.. சென்ஷி தம்பி.. நீ இநல்லாயிரு.. இது மாதிரியே டெய்லி என் வீட்டுக்கு வந்து ஒரு மூணு கமெண்ட்ஸை குத்திட்டுப் போ.. புண்ணியமாவது போகும்..

அப்புறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. உனக்கும், எனக்கும் எதுக்கு போலியா ஒரு மரியாதை பாலம்.. வேணாமே.. இந்த ஸ்மைலி போடுறதை நிறுத்து ராசா..

எனக்குத் தேவையில்லை கண்ணா.. யார் என்ன எழுதினாலும் அதை நான் தப்பா நினைக்க மாட்டேன்.. என்னைப் பத்தி தெரியாதா உனக்கு..?

வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//முரளி கண்ணன் said...
super super super//

முரளிகண்ணன்.. வருக.. வருக.. முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், பொறுமையாக படித்தமைக்கும் மூன்று முத்தான நன்றிகள்..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//அமர பாரதி said...
அய்யா, படத்த பாக்கற நேரத்த விட உங்க விமர்சனத்த படிக்கறதுக்கு நேரம் அதிகம் வேணும் போலிருக்கே.//

அமரபாரதி அவர்களே.. முதலில் இந்த 'அய்யாவை' விடுங்கள்.. 'சரவணன்' அருமையான என் அப்பன் முருகனின் பெயர். அதைச் சொல்லியே விளிக்கலாம்.

படத்தின் சீன் பை சீனையும் சொல்லிவிட்டதால் நிறைய நேரமாகும் போல் இருக்கும். மற்றபடி எழுதாமல் விட்டது வெறும் ஐந்து நிமிட சீன்கள் மட்டுமே..

உண்மைத்தமிழன் said...

//ச்சின்னப் பையன் said...
அண்ணே, படமும் இவ்ளோ பெரிய படமா? ஒரு நாளிலேயே பார்த்து விட முடியுமா?//

தம்பீ.. சீன் பை சீனா எழுதிட்டேன்ப்பா.. அதான் கொஞ்சுண்டூ நீளமா போயிருச்சு.. இதையெல்லாம் துக்கம் விசாரிக்க மாதிரி கேக்குறீயேப்பா..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
film festival ஆரம்பிச்சுருச்சா? நல்லாத்தான் கதை சொல்லி இருக்கீங்க. வைரத்தோடு என்ன டிஸைன்னு சொல்லவே இல்லை?//

டீச்சரம்மா.. பிலிம் பெஸ்டிவல் முடிஞ்சிருச்சு.. இதை, மாதந்தோறும் காட்டப்படும் ரெகுலர் ஷோவில் பார்த்தேன்..

அந்தத் தோடு சின்ன சைஸில் வட்டமாக இருந்தது. அவ்வளவுதான்.. அதன் அழகை காட்டுவதைப் போல் காட்சிகள் எதுவும் இல்லை.. ஆனால் காட்சியமைப்பில் அது ஒரு கருவியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்..

எல்லாருக்கும் தோணாதது டீச்சருக்கு தோணிருக்கு பாருங்க.. 'தோடு என்ன டிஸைன்னு..?' இதைத்தான் சொல்லுவாங்க..

வேணாம்.. வம்பு வரும்.. நிறுத்திக்கிறேன்..

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,

ரொம்ப நாளாப்பதிவே காணோமே என்றுப்பார்த்தால் (உங்கள் விரலில் நகசுத்தி எதுவும் வந்துடுச்சா, காணோம் இத்தனை நாளா), திரும்ப வந்து ரொம்ப சின்னதா ஒரு திரைக்கட்டுரை போட்டு இருக்கிங்க!!??, ஹங்கேரிப்படம்லாம் பார்க்குறிங்க,என்ன பாஷை படம் அது? பார்த்தா புரியுமா, நானும் பார்க்கலாம்னு தான் கேட்கிறேன்(ரகசியமா சொல்லுங்க படத்துல "பிட்" உண்டா?).

உண்மைத்தமிழன் said...

//Raja said...
Nice to see u back in form....after a long time came back with a excellent post...//

இறுதி வரையிலும் படித்தமைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜா..

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
உண்மைத்தமிழர், ரொம்ப நாளாப ்பதிவே காணோமே என்றுப ்பார்த்தால் (உங்கள் விரலில் நகசுத்தி எதுவும் வந்துடுச்சா, காணோம் இத்தனை நாளா), திரும்ப வந்து ரொம்ப சின்னதா ஒரு திரைக்கட்டுரை போட்டு இருக்கிங்க!!??, ஹங்கேரிப ்படம்லாம் பார்க்குறிங்க, என்ன பாஷை படம் அது? பார்த்தா புரியுமா, நானும் பார்க்கலாம்னுதான் கேட்கிறேன் (ரகசியமா சொல்லுங்க படத்துல "பிட்" உண்டா?).//

தேவரீர்.. ஸ்ரீமான்.. வவ்வால்ஜி அவர்களுக்கு,

ரொம்ப நாள் பதிவு போடாததற்கு காரணம் இணையத்தை இணைப்பாக, இலவசமாக வழங்க ஆட்கள் கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறார்கள். இதுதான் உண்மை.

ரொம்பச் சின்னப் பதிவுதான்.. வெறும் 14 பக்கம்தான் இதையெல்லாம் குத்திக் காட்டினா எப்படி?

ஹங்கேரி படமெல்லாம்னு கேட்டுப்புட்டு அது என்ன பாஷைன்னு வேற கேக்குறியேளே.. இது நியாயமா? அடுக்குமா? உங்களுக்குத் தெரியாத பாஷையா ஸ்வாமி..

இந்த பாஷை படத்துல பிட் இருக்குமான்னுல்லாம் கேட்கத் தோணுது.. பார்த்தா புரியுமான்னு வேற கேக்குறியேள்..

என்னமோ போங்க.. எனக்குத்தான் உங்களைப் பத்தி ஒண்ணும் புரிய மாட்டேங்குது..

நல்லாயிருங்கோ..

abeer ahmed said...

See who owns 100ml.ru or any other website:
http://whois.domaintasks.com/100ml.ru